முகில் தினகரன்

“டேய் ரகு…பாவம்டா அந்தப் பொண்ணு…குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாகி…தூக்கித் தூக்கிப் போடுதாம்..ஆம்பளை இல்லாத வீடு..ஆஸ்பத்திரி வரைக்கும் துணைக்குப் போயிட்டு வாடா..”

“போம்மா…ஃபுட் பால் மேட்சுக்கு டிக்கெட் வாங்கியிருக்கேன்…என் நண்பர்களெல்லாம் எனக்காக காத்திட்டிருப்பாங்க…நான் போயே ஆகணும்..என்னால் முடியாது..தயவு செய்து வற்புறுத்தாதே!”

“டேய்..அந்த குழந்தை உயிரை விட உனக்கு புட் பால் மேட்சுதான் முக்கியமாக்; போச்சா?” அம்மா கத்தினாள்.

எவ்வளவோ மறுத்தும் அம்மா பிடிவாதமாய் நின்று என்னை விரட்டிட, மேட்ச் ஆசையை ஒரங்கட்டி விட்டு, அரை மனதுடன் முணுமுணுத்துக் கொண்டே கால் டாக்ஸி பிடித்து, அந்தப் பெண்ணையும் அவள் குழந்தையையும் அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு பறந்தேன்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை மாலை வரை இழுத்தது.

“நல்லவேளை  சரியான நேரத்துல கொண்டு  வந்தீங்க… அதனால குழந்தை பிழைச்சது… இல்லாட்டி நீங்க  உங்க குழந்தையை இழந்திருப்பீங்க!”

டாக்டர்…சொல்லிக்  கொண்டிருக்கும் போது… வரவேற்பறையில் இருந்த டி.வி.யில் அந்த  ஃப்ளாஷ் நியூஸ் ஒடியது.

“சற்று முன் வந்த செய்தி….நேரு  ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஃபுட்பால் மேட்சின் போது காலரி இடிந்து விழுந்து ஸ்தலத்திலேயே 12 பேர் உயிரிழந்தனர்.”

தொடர்ந்து காட்டப்பட்ட வீடியோ காட்சியில் என் நண்பர்கள் மூவரும் பிணமாய்….

என் குழந்தை உசுரு போக இருந்தது….நீங்க தெய்வம் தம்பி” பக்கத்து வீட்டுப் பெண் கையெடுத்துக் கும்பிட்டாள்.

“இல்லம்மா….உங்க குழந்தைதான்  என் உசுரைக் காப்பாத்தியிருக்கு”

அப்பெண் எதுவும் புரியாமல்  என்னை ஊடுருவிப் பார்க்க,

நான் குழந்தையைப் பார்க்க  வார்டுக்குள் ஓடினேன்.

(முற்றும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *