Blog

  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 47

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 47

    -மேகலா இராமமூர்த்தி

    தன் அண்ணன் இராவணனால் துரத்தப்பட்ட வீடணன், தன் அமைச்சர்களோடு அண்ணல் இராமனிடம் அடைக்கலம் வேண்டி வந்தபோது, ”அண்ணனுக்குப் பகைவரால் ஆபத்து ஏற்படும் வேளையில் அவனைப் பிரிந்துவருபவனை நம்பக்கூடாது; ஆதலால், வீடணனை ஏற்பது ஆபத்து” என்று ஆலோசனை சொன்னான் அண்ணனை இராமனின் துணையோடு வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றிய சுக்கிரீவன்.

    சுக்கிரீவனின் கருத்தையறிந்த இராமன் அடுத்து சாம்பனின் கருத்தைக் கேட்கின்றான். சாம்பனும், ”வீடணனின் வரவு பொன்மானாக வந்த மாரீசனின் வரவைப் போல் தீமைபயக்கக் கூடியதே; எனவே, அவனைச் சேர்த்துக்கொள்வது நன்றன்று” என்ற தன் கருத்தைத் தெரிவித்தான்.

    சாம்பனைத் தொடர்ந்து நீலனும், ஏனைய அமைச்சர்களும் வீடணனை நம்மவனாகப் பற்றிக் கொள்ளுதல் பழுது (தவறு) எனும் கருத்தையே வழிமொழிந்தனர்.

    இறுதியில் அனுமனின் கருத்தை வினவினான் இராமன். ”உத்தமர்கள் அனைவரும் உரைத்தபின்னர் நானும் விளம்ப வேண்டுமா?” என்று பணிவோடு கேட்டுவிட்டு, ”தூயவர்களாகிய இவர்கள் வீடணனைப் பற்றிக் கூறிய கருத்துக்கள் தூயவையே; எனினும், நான் வீடணனைத் தீயவன் என்று ஐயுறமாட்டேன்; அதற்கான காரணங்களை இப்போது உரைக்கின்றேன்” என்று தன் கருத்துக்களை எடுத்தியம்பத் தொடங்கினான் அனுமன்.

    ஐய! உள்ளத்திலுள்ளதைப் பேச்சில் வெளிப்படுத்துவதற்கு முன்பாக மெள்ளத் தம் முகங்களே கூறிவிடும்; வஞ்சகத்தின் விளைவுகள் எல்லாம் நல்ல கருத்தில்லாத, அறியாமையாகிய இருள்நிறைந்த பள்ளம்போன்ற முகத்தில் அல்லாது, (அறிவொளி வீசுகின்ற) வெட்டவெளி போன்ற முகத்தில் வெளிப்பட்டுத் தோன்றுமோ?” என்றான்.

    உள்ளத்தின் உள்ளதை உரையின் முந்துற
    மெள்ளத் தம் முகங்களே விளம்பும் ஆதலால்
    கள்ளத்தின் விளைவுஎலாம் கருத்துஇலா இருள்
    பள்ளத்தின் அன்றியே வெளியில் பல்குமோ. 
    (கம்ப: வீடணன் அடைக்கலப் படலம் – 6452)

    வீடணனின் முகத்தில் கள்ளமில்லை; அறிவின் மாட்சி தெரிகின்றது. ஆதலால், அவன் தீயவனாக இருக்க வாய்ப்பில்லை என்பதே ஈண்டு அனுமன் வெளிப்படுத்தும் கருத்து.

    அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
    கடுத்தது காட்டும் முகம்”
    (706) என்ற வள்ளுவரின் குறட்கருத்தைக் கம்பர் இப்பாடலில் எடுத்தாண்டிருக்கக் காண்கின்றோம்.

    வீடணன் நம்மிடம் வந்துசேர்ந்திருக்கும் காலம் சரியானதன்று என்று இராமனுக்குச் சுட்டிக்காட்டி அவனை ஏற்றுக்கொள்ள மறுதலிக்குமாறு வற்புறுத்திய நண்பர்களுக்குப் பதிலளிக்க விரும்பிய மாருதி,

    ”வலிமை மிக்கதான வாலியின் பகையைக் கடந்து நின்றது நின்னுடைய வலிமை; இனி, இலங்கை அரக்கர்கட்கும் அதனால் அழிவு உறுதியாயிற்று என்பதால், தனக்கு மூலம் எனப்படும் துணைவர்களான இராவண கும்பகருணர்களைப் பிரிந்து வருவதை நிறைவேற்றினான் வீடணன். எனவே, அவன் இங்கு வந்துசேர்ந்திருக்கும் காலமும் பொருத்தமானதே” என்றான் அஞ்சனை மைந்தன்.

    காலம்அன்று இவன் வருகாலம் என்பரேல்
    வாலிதன் உறுபகை வலி தொலைத்தலால்
    ஏலும் இங்குஇவர்க்கு இனிஇறுதி என்றலால்
    மூலம்என் துணைவரைப் பிரிவு முற்றினான்.
    (கம்ப: வீடணன் அடைக்கலப் படலம் – 6455)

    தன்னை இராவணன் கொல்லச் சொன்னபோது அதனைத் தடுத்தவன் இந்த வீடணன்தான் என்பது அனுமனின் நினைவுக்கு வருகின்றது. அதைப்பற்றி இராமன் உள்ளிட்ட அனைவர்க்கும் தெரிவிக்க விரும்பிய அவன்,

    இராவணன் அவையில் கொண்டு நிறுத்தப்பட்ட என்னைக் கொல்லச்சொல்லி இராவணன் ஆணையிட்டபோது இடைமறித்து, “அபலைகளான பெண்களைக் கொல்வதும், வீரமற்ற அறிவிலிகளைக் கொல்வதும், நமது அழிவுக்குரிய செயல்களைச் செய்தார்களெனினும் தூது வந்தவர்களைக் கொல்வதும் தூய செயல் ஆகாது என்று சிறந்த காரணங்களை எடுத்துக்காட்டி என்னைக் காத்தவன் இந்த வீடணன்” என்றான் அனுமன்.    

    மாதரைக் கோறலும் மறத்து நீங்கிய
    ஆதரைக் கோறலும் அழிவு செய்யினும்
    தூதரைக் கோறலும் தூய்து அன்றாம் என
    ஏதுவில் சிறந்தன எடுத்துக் காட்டினான்.
    (கம்ப: வீடணன் அடைக்கலப் படலம் – 6459)

    தொடர்ந்து இராமனிடம் தன் கருத்துக்களை முன்வைத்த சொல்லின் செல்வனான அனுமன்,  

    ”வெற்றி வேந்தனே! தேவர்க்கும் அசுரர்க்கும் பிரமன் முதலாய தேவர்களுக்கும் மேலான மும்மூர்த்திகட்கும் செய்துமுடித்தற்கு அரிய காரியத்தை முடிப்பதற்கு நீ முனைந்து நிற்கின்றாய். தனக்கு ஆபத்து வந்த காலத்தில் அடைக்கலம் என்று உன்னை நாடிவந்த வீடணனை ஐயுற்று நீ ஏற்றுக்கொள்ளாது புறஞ்செல்ல விடுவாயானால், கிணற்றின் சிறிய அளவு தண்ணீரைக் கண்டு கடல் ஐயுற்றதற்கு ஒப்பாகாதோ? என்று வினவினான்.

    கடல்போன்றவனான உன்னைச் சிறு புனலொத்த இந்த வீடணனால் என்ன செய்துவிட முடியும்? இவனைக் கண்டு சந்தேகம் கொள்வது எதற்கு? நற்குணங்களும் நீதியும் வழுவாத இவனைத் தாராளமாக நம்மோடு இணைத்துக்கொள்ளலாம் என்பது வீடணன் குறித்த அனுமனின் நிலைப்பாடு.

    மாருதியின் வார்த்தைகள் இராமனுக்குத் தன் காதுகளில் அமுதம் பாய்ந்தது போன்ற இன்பத்தை நல்கின. ”பேரறிவாளனே! நீ சொன்ன வார்த்தைகள் மிக நன்று!” என அவனைப் பாராட்டிவிட்டு, அனைவரையும் நோக்கி, ”மாருதி சொன்ன கருத்துக்களே சிறந்தவை” என்றுரைத்தான் அழுத்தமாக.

    அதனைத் தொடர்ந்து, அடைக்கலமாக வந்தவனை விடலாகாது என்பதற்குச் சான்றுகாட்டும் விதத்தில், புறாவுக்கு அடைக்கலம் தந்த சிபி மன்னனின் கதை, ஆலகால விடத்தை உண்டு சிவனார் தேவர்களைக் காத்த கதை, அடைக்கலம் எனச் சரணடைந்த யானையை முதலையின் வாயிலிருந்து திருமால் காத்த கதை எனப் பலவற்றை எடுத்துரைத்துத் தன்னை நம்பி வந்தவரை ஒருவன் காக்கவில்லையாயின் அறத்தால் என்ன பயன்? அவன் ஆண்மையால்தான் என்ன பயன்? ஆதலால், வீடணனை ஏற்றுக்கொள்வதால் நன்மையோ தீமையோ எதுவந்தாலும் சரி; அவனை ஏற்றுக்கொள்வது என்று நான் முடிவுசெய்துவிட்டேன் எனக்கூறி, கதிரோன் மைந்தனான சுக்கிரீவனைக் கூப்பிட்டு, ”நீ சென்று வீடணனை என்பால் அழைத்து வா!” என்றான் இராமன்.

    வீடணனை சேர்த்துக்கொள்ள வேண்டாம் என்று யோசனை சொன்ன சுக்கிரீவனையே வீடணனை அழைத்துவர இராமன் அனுப்பியது நமக்கு வியப்பளிப்பதாய் உள்ளது. பின்னாளில் தன்னை நிராகரிக்கச் சொன்னவன் இந்தச் சுக்கிரீவன் என்பதை வீடணன் அறியும்போது அவனுக்கு சுக்கிரீவன்பால் கோபமும் வெறுப்பும் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. அதனைத் தவிர்த்துத் தொடக்கம் முதலே இருவரும் நட்பாகப் பழகும் சூழலை ஏற்படுத்திவிட வேண்டும் எனும் நோக்கத்தோடு இராமன் வீடணனை அழைத்துவரச் சுக்கிரீவனைத் தேர்ந்தெடுத்தான் என்று நாம் எண்ணுவதில் தவறில்லை.

    இராமனின் கட்டளையை ஏற்றுச்சென்ற சுக்கிரீவன் வீடணனைக் கண்டான்; இருவரும் ஒருவரையொருவர் அன்புறத் தழுவிக்கொண்டனர். கருநிறத்தவனான வீடணனும் வெண்ணிறத்தவனான சுக்கிரீவனும் தழுவிக்கொண்ட காட்சியானது, இரவும் பகலும் தழுவிக்கொண்டதுபோல் இருந்தது என்கிறார் கற்பனையில் விற்பன்னரான கம்பர்.

    இராமன் வீடணனுக்கு அடைக்கலம் தர விரும்புவதை அவனிடம் தெரிவித்த சுக்கிரீவன், ”என்னுடன் வா நாம் இராமனைப் பணிவோம்” என்றான்.

    உவகையால் கண்கள் பொங்க, உடல் புல்லரித்து நின்ற வீடணன், ”செம்பஞ்சு ஊட்டாமலேயே சிவக்கின்ற மென்மையான பாதங்களை உடைய சீதாதேவியை இராமனிடமிருந்து பிரித்த பாவியும், வஞ்சகனுமான இராவணனுக்கு இளைய தம்பியாகிய என்னை வருக என்றுகூறி அருள்புரிந்தானோ? என்னையும் அடைக்கலம் என்று கருதினானோ? அடியவனாகிய நான் இராமனின் அருளால் தாழ்சடைக் கடவுளாகிய சிவபெருமான் உண்ட நஞ்சானது எவ்வாறு அவர் உண்டதால் சிறந்ததாயிற்றோ அதுபோலச் சிறந்தேன்” என்றான்.

    பஞ்சுஎனச் சிவக்கும் மென்கால் தேவியைப் பிரித்த பாவி
    வஞ்சனுக்கு இளைய என்னை வருகஎன்று அருள் செய்தானோ
    தஞ்சுஎனக் கருதினானோ தாழ்சடைக் கடவுள்உண்ட
    நஞ்சுஎனச் சிறந்தேன் அன்றோ நாயகன் அருளின் நாயேன். (கம்ப: வீடணன் அடைக்கலப் படலம் – 6487)


    சுக்கிரீவனின் யோசனைப்படி விரைந்துசென்று இராமனைக் கண்டு வணங்கினான் வீடணன். இராமனும் மகிழ்ந்து அருகிலுள்ள ஆசனத்தில் அவனை அமர்த்தி, ”கடல்சூழ்ந்த இலங்கைச் செல்வத்தை உனக்கே தந்தேன்” என்று கூறிவிட்டு இலக்குவனை அழைத்துத் ”தம்பி இவனுக்கு மகுடம் சூட்டுக” என்றான்.

    ஏன் இலக்குவனை இராமன் முடிசூட்டப் பணித்தான் எனில், சுக்கிரீவன், சாம்பன், மற்றுமுள்ளோரைப் போல் இலக்குவன் வாய்திறந்து வீடணனை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று சொல்லவில்லையே தவிர அவனுக்கும் அதில் உடன்பாடில்லை என்பதை உணர்ந்துகொண்டான் இராமன். அந்த மனநிலையை மாற்றவேண்டும் என்று கருதியே அவனிடம் வீடணனுக்கு இலங்கை வேந்தனாய் முடிசூட்டும் பொறுப்பை அளித்தான் என்கின்றனர் கம்பனில் தோய்ந்தோர்.

    அப்போது வீடணன், ”ஐயனே! அழிவற்ற செல்வமாகிய நின் திருவருளை எனக்கு அளித்தனை; களவுத்தன்மை உடைய அரக்கனாகிய இராவணனுக்கு இளையவனாய்ப் பிறந்த அந்தத் தொடர்பு தீரும்படி, நின் தம்பியாகிய பரதனுக்களித்த திருவடி நிலைகளான (காலணிகள்) மகுடத்தை எனக்கும் சூட்டுக” என்று பணிந்து வேண்டினான்.

    வீடணனின் விநயத்தில் மகிழ்ந்த இராமன், ”குகனோடு சேர்த்து நாங்கள் ஐவர் சகோதரர்கள் ஆனோம்; இது முன்பு நிகழ்ந்தது; பின்பு மேருமலையைச் சுற்றிவரும் சூரியனின் மகனான சுக்கிரீவனுடன் சேர்த்துச் சகோதரர் ஆறுபேர் ஆயினோம். எங்களிடம் உள்ளன்புகொண்டு எம்பால் வந்தவனே! உன்னுடன் சேர்த்து இப்போது சகோதரர்கள் ஏழுபேர் ஆயினோம். புகுதற்கரிய கானக வாழ்வை எனக்குத் தந்து புதல்வர்களால் நிறைந்திருக்கின்றான் உன் தந்தை தயரதன்” என்றான்.

    தயரதனை எந்தை என்றுரைக்காமல் நுந்தை என்று வீடணனிடம் இராமன் உரைப்பது, உண்மையிலேயே அவன் வீடணனைத் தன் உடன்பிறப்பாக ஏற்றுக்கொண்டுவிட்டான் என்பதன் வெளிப்பாடே.

    குகனொடும் ஐவர்ஆனேம் முன்பு பின் குன்றுசூழ்வான்
    மகனொடும் அறுவர் ஆனேம் எம்முழை அன்பின் வந்த
    அகனமர் காதல்ஐய நின்னொடும் எழுவர் ஆனேம்
    புகலருங் கானம்தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை.
    (கம்ப: வீடணன் அடைக்கலப் படலம் – 6507)

    குல, இன வேறுபாடின்றி அனைவரையும் சோதரர்களாக இராமன் ஏற்றுப்போற்றும் பாங்கு, அவனின் பண்பட்ட மனநிலைக்குச் சான்றாவதோடு, “யாவரும் கேளிர்” எனும் கணியன் பூங்குன்றனின் பொன்னடிகளைப் பின்பற்றும் உயர்ந்தவனாகவும் அவனை அடையாளப்படுத்துகின்றது எனலாம்.

    அதன்பின்னர், கடல்சூழ்ந்த இலங்கையின் மதில் முதலிய பாதுகாப்புப் பற்றியும், இராவணன் உள்ளிட்ட அரக்கர்களின் வலிமை பற்றியும், இலங்கையின் படையளவு பற்றியும் வீடணனிடம் முற்றாய்க் கேட்டறிந்தான் இராமன்.

    இலங்கையின் நிலவரம் உரைத்த கையோடு இலங்கை நகரத்தை அனுமன் ஒருவனாகவே எரித்தழித்த திறலையும் அண்ணல் இராமனுக்கு அறியத் தந்தான் இராவணனின் இளவல். அதுகேட்டுப் பூரித்த இராமன், ”இத்துணை வீரச்செயல்கள் நிகழ்த்திய நீ, சீதையைக் கண்டும் அவளை மீட்டுவராமல் அங்கேயே விட்டுவந்தது என் வில்லாற்றலை நான் காட்டவேண்டும் என்பதற்காகவா வீரனே?” என்று கேட்டு அனுமனைப் பாராட்டினான். தன் வீரப் பிரதாபங்களைத் தன் வாயால் சொல்லிக்கொள்வதையோ பிறர் வாயால் கேட்பதையோ விரும்பாத அனுமன் நாணத்தோடு தலைகுனிந்தான்.

    அடுத்து, கடலைக் கடந்து இலங்கை செல்வதற்கான வழியென்ன என்று இராமன் வீடணனைக் கேட்டபோது, கடல்வேந்தனான வருணனை வேண்டி வழி கேட்போம் என்று யோசனை சொன்னான் அவன். அதனையேற்ற இராமன், ”இளமைப் பருவத்தினளான சீதையை இராவணனின் சிறையினின்று மீட்டுவருவதற்குரிய வழியைத் தருக” என வருணனை வேண்டி, வேதநெறிப்படி அடுக்கப்பட்ட தருப்பைப் புல்லில் கருங்கடலைப் பார்த்தபடி அமர்ந்து வருண மந்திரத்தைத் தியானிக்கத் தொடங்கினான்.

    நாட்கள் ஏழு கடந்தும் வருணன் வரவில்லை. இராமனின் தாமரைக் கண்கள் சினத்தால் சிவந்தன.

    ”ஒருவர் எவரிடமும் எதனையும் வேண்டாதவர் என்றாலும், ஒருவர்பால் சென்று ஒன்றை வேண்டுவாராயின் அவ்வாறு வேண்டியவர் சிறுமையிலிருந்து நீங்கமாட்டார். இன்று நான் இலங்கைக்குச் செல்லும் வழியைத் தர வருணனை வேண்டியதை கடல்வேந்தன் மறுத்துவிட்டான்; இது நன்று நன்று!” எனக் கோபத்தால் புகைதோன்ற நகைத்தான் இராமன்.

    ஒன்றும் வேண்டலர் ஆயினும் ஒருவர்பால் ஒருவர்
    சென்று வேண்டுவரேல் அவர் சிறுமையின் தீரார்
    இன்று வேண்டியது எறிகடல் நெறிதனை மறுத்தான்
    நன்று நன்றுஎன நகையொடும் புகைஉக நக்கான்.
    (கம்ப: வருணனை வழிவேண்டு படலம் – 6597)

    நாம் எத்துணை உயர்ந்தவராயினும் ஒருவரிடம் சென்று உதவிவேண்டி நின்றால் அவர் முன்பு தாழ்ந்துதான் போகின்றோம் என்று இராமன் உரைத்த கருத்து எல்லாக் காலத்துக்கும் பொருந்தக் கூடியதே.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • தனியுடைமை

    தனியுடைமை

    பாஸ்கர்

    எல்லாவற்றையும் இனி துறக்க வேண்டும்
    புதுப்பொருள் ஏதும் இனி தேவையில்லை
    இருப்பவற்றை இழந்தால் மிக மிக இனிது
    தேவைகளற்று இருப்பின் ரொம்ப சுகம்
    போட்டி கலச்சாரம் இனி கிஞ்சித்தும் கிடையாது
    தோற்றுப்போவது இனிமேல் பெரும் சுமையில்லை
    வெற்றி காணும் ஆசையுமில்லை வெறியுமில்லை
    கருத்துச் சொல்ல ஆள் எங்கே எனத் தேடவேண்டாம்
    எவர் செய்கையும் எனக்கு இனிமேல் சரிதான்
    எந்தத் தவறும் என்னை உள்ளே சீண்டுவதில்லை
    உண்மையாய் இருக்கப் பிரயத்தனம் இனியில்லை
    கவிதை எழுதி யார் பாராட்டுக்கும் காக்கப் போவதில்லை
    நீ செய்தது தவறென சொன்னால் நகர்ந்து விடுகிறேன்
    அற்புதம் எனச் சொல்லும் முன் காணாமல் போகிறேன்
    பேச்சு குறைந்து போய், எனக்குள் வாழ்ந்துகொள்கிறேன்
    ஆள் அடையாளம் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைகிறது
    எனக்குள் இருக்கும் உலகில் யாருக்கும் இடமில்லை
    காற்று பட்டு கரையும் பஞ்சு மிட்டாய் வாழ்க்கை இது
    கரைந்துகொண்டே விரைவில் காணாமல் போகிறேன்
    தத்துவமான வாழ்க்கை எனத் தள்ளியே இருந்து விட்டேன்
    நிஜம் வேறெனத் தெளிகையில் மனமூப்பில் மறைகிறேன்.

    Share
  • தங்கத் தமிழ்நாடு – இசைப்பாடல்

    தங்கத் தமிழ்நாடு – இசைப்பாடல்

    பாடல் : சி. ஜெயபாரதன், கனடா
    இசைப்பாடகி : வே.ரா. புவனா
    காட்சி அமைப்பு : பவளசங்கரி

    Share
  • மதுரையில் ஒரு ஸ்மார்ட் ஓட்டல், மாஸ்க்வா

    மதுரையில் ஒரு ஸ்மார்ட் ஓட்டல், மாஸ்க்வா

    மதுரையில் மீனாட்சியம்மன் கோவிலுக்கு அருகில் விடுதி அறைகளைத் தேடியபோது, ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு வகையில் குறைகள் இருந்தன. சில இடங்களில் வண்டிகளை நிறுத்த இடம் இல்லை. சில இடங்களில் அறை மட்டும் இருந்தது, உணவகம் இல்லை. இன்னும் சில, கோவிலுக்குப் பக்கத்தில் இல்லை. இவை எல்லாம் உள்ள இடங்களில் அறை வாடகை அதிகமாக இருந்தது.

    ஆனால், இவை எல்லாவற்றுடன், ஓரளவு குறைவான வாடகையில் மாஸ்க்வா விடுதியில் அறை கிடைத்தது. அதிலும் இன்னோர் ஆச்சர்யம், ஸ்மார்ட் பூட்டு, ஸ்மார்ட் திரை, ஸ்மார்ட் சுவிட்சுகள், ஸ்மார்ட் ஏ.சி… என நவீன நுட்பங்களுடன் அறை அமைந்திருந்தது. மாஸ்க்வா என்பது, ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ என்பதன் ஒலிபெயர்ப்பு. ரஷ்யாவில் ஓடும் நதி ஒன்றுக்கும் மாஸ்க்வா என்று பெயர். வைகை பாயும் மதுரையில் மாஸ்க்வா தனி முத்திரை பதிக்கிறது. இதோ மாஸ்க்வா விடுதியில் நாங்கள் தங்கியிருந்த அறைக்குள் ஓர் உலா. எதிர்காலத்தில் நம் ஸ்மார்ட் இல்லங்கள், இப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கின்னிக் கோழி

    கின்னிக் கோழி

    கின்னிக் கோழி, ஜீன் கோழி என அழைக்கப்பெறும் கீனியா (Guinea Fowl) பறவைகளை இன்று பார்த்தேன். துருதுருவென விளையாடிய அவற்றின் அழகைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இசையோடு, காட்சியோடு பாடல்: ஆடும் அழகே அழகு

    இசையோடு, காட்சியோடு பாடல்: ஆடும் அழகே அழகு

    பாடல்: சி. ஜெயபாரதன், கனடா
    இசைப்பாடகி : வேங்கடலஷ்மி
    காட்சியமைப்பு : பவள சங்கரி

    Share
  • கொத்துமல்லி பச்சடி செய்வது எப்படி?

    கொத்துமல்லி பச்சடி செய்வது எப்படி?

    மீண்டும் மீண்டும் உண்ணத் தூண்டும் சுவையும் சத்தும் மணமும் நிறைந்த கொத்துமல்லி பச்சடி செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • எமிலி டிக்கின்சன் கவிதைகள் – 32

    எமிலி டிக்கின்சன் கவிதைகள் – 32

    மூலம்: எமிலி டிக்கின்சன்
    தமிழாக்கம்:  சி. ஜெயபாரதன், கனடா

    எமிலி டிக்கின்சன் கவிதைகள்-32: வாலாட்டும் நாய்க் குட்டி

    வாலாட்டும் ஒரு நாய்க்குட்டி.
    வேறாட்டம் எதுவும் அறியாது.
    அதுபோல் நானும் ஒரு நாய்க்குட்டி
    நினைவுக்கு வருவது  ஒரு பையன்.

    A little Dog that wags his tail
    And knows no other joy
    Of such a little Dog am I
    Reminded by a Boy

    நாள் முழுதும் விளையாட்டு
    ஏதோர் காரணமும் இருக்காது
    ஏனெனின், விளையாட்டுப் பிள்ளை
    எனக்கு உறுதி எண்ணம் அப்படி

    Who gambols all the living Day
    Without an earthly cause
    Because he is a little Boy
    I honestly suppose —

    பூனை மூலையில் கிடக்குது, அது
    போராடும் நாள் மறந்து போச்சு
    எலி இல்லை வாடிக்கைப் பிடிப்பில்
    இப்போ விருப்பில்லா அணி வரிசையில்.

    The Cat that in the Corner dwells
    Her martial Day forgot
    The Mouse but a Tradition now
    Of her desireless Lot

    Share
  • Water bowls for animals

    Water bowls for animals

    Baskar Seshadri

    If it is summer season you can be sure of some action by Blue cross of India. Last year they donated good number of water bowls to the residents so that they can fill it every day to enable to animals mainly dogs and goats.

    A young boy in Thiruvengadam Street even spent his little money to erect a cement water booth that can hold few litres of water. This year they are on the job of providing such water bowls and had completed certain areas. Last week they had provided one such water bowl near Mandaveli railway station on an arrangement with the local auto drivers to fill up the water every day on a roto. This works successfully where the purpose gets solved and a awareness is created among the residents who live nearby.

    The photo shown here (cover photo) is one such water bowl installed by the BC near the Railway station. Kudos.

    Share
  • குறளின் கதிர்களாய்…(397)

    குறளின் கதிர்களாய்…(397)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(397)

    சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
    நீர்மை யுடையார் சொலின்.

    – திருக்குறள் -195 (பயனில சொல்லாமைட)

    புதுக் கவிதையில்…

    சிறந்த குணமுடையோர்
    சிந்திக்காது
    சொல்வாராயின் பயனிலாச் சொற்களை,
    சேர்த்திருந்த அவரது பெருமை
    சிறப்புடன் சேர்ந்தே விட்டுச்
    சென்றிடும் விலகியே…!

    குறும்பாவில்…

    உயர்குணமுடையோர் பயனிலாச் சொற்களை
    உரைத்தால், அவர்தம் சிறப்பெல்லாம் நீங்கி
    பெருமையெல்லாம் போய்விடுமே…!

    மரபுக் கவிதையில்…

    பண்பி லுயர்ந்த பெரியோரும்
    பலரின் முன்னே பேசுகையில்
    அண்டை அயலார்க் குதவாத
    அற்பச் சொற்கள் பேசிநின்றால்,
    திண்ண மாக அன்னாரின்
    திறமை தந்த பெருமையெலாம்
    மண்ணி லவர்தம் சிறப்புடனே
    மறைந்தே போகும் பாரீரே…!

    லிமரைக்கூ…

    பண்பாளர்க்கும் பேச்சிலுண்டு எல்லை,
    பெருமையோடு சிறப்லொம் அவர்க்குப் போய்விடுமே
    பேசினாலவர் பயனிலாச் சொல்லை…!

    கிராமிய பாணியில்…

    பேசாத பேசாத
    பயனில்லாத சொல்லப் பேசாத,
    ஒருநாளும் பேசாத
    ஒருத்தருக்கும் ஒதவாத பேச்ச..

    கொணத்தில ஒசந்த
    பெரிய மனுசருங் கூட
    பேசும்போது ஒருத்தருக்கும்
    பயனே இல்லாத பேச்ச
    பேசிட்டிருந்தா,
    அதுனால
    அவரோட பெரும
    செறப்பெல்லாம் சேந்து
    அவரவுட்டுப் போயிடுமே..

    அதால
    பேசாத பேசாத
    பயனில்லாத சொல்லப் பேசாத,
    ஒருநாளும் பேசாத
    ஒருத்தருக்கும் ஒதவாத பேச்ச…!

    Share
  • பேப்பர்காரர் லூர்துசாமி நேர்காணல்

    பேப்பர்காரர் லூர்துசாமி நேர்காணல்

    பழைய பேப்பர், பிளாஸ்டிக், எவர்சில்வர், பித்தளை, இரும்பு, செப்பு, ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், பேட்டரி போன்ற பலவற்றையும் வாங்கி விற்கும் லூர்துசாமியுடன் ஒரு சந்திப்பு. இந்தப் பொருள்கள் கிலோ என்ன விலை தெரியுமா? நாம் குப்பை எனத் தூக்கி எறியும் பொருள்களுக்கு உள்ள சந்தை மதிப்பு எவ்வளவு? அவரே சொல்கிறார், கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்

    மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அண்மையில் சென்று வந்தோம். இதோ சில காட்சிகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அதிசார குருப்பெயர்ச்சிப் பலன்கள் 2022

    அதிசார குருப்பெயர்ச்சிப் பலன்கள் 2022

    2022 ஏப்ரல் 14 அன்று நடைபெற்ற அதிசார குருப்பெயர்ச்சி, உங்களுக்கு எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கும் விரிவான பலன்களை ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிறகடிக்கும் கற்பனைகள்!

    சிறகடிக்கும் கற்பனைகள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா. 

    சித்திரையைக் கொண்டாடச்  சிறகடிக்கும் கற்பனைகள்
    எத்தனையே எல்லோரின் மனத்தினிலும் இருக்கிறது
    அத்தனையும் நிறைவேற அமைந்திடுமா உலகநிலை
    அனைவரது அகங்களிலும் அதுகேள்வி ஆகிருக்கு

    தைபிறந்த பின்னாலே சந்தோஷம் தருவதாய்
    சீரான சித்திரை சிறப்பாக வந்தமையும்
    ஊரெல்லாம் கொண்டாட்டம் உறவெல்லாம் கூடிடுவர்
    தேரோடும் கோவில்களில் திருவிழா சிறந்துவிடும்

    புத்தாடை எடுத்திடுவோம் புத்துணர்வும் பெற்றிடுவோம்
    மொத்தமுள்ள உறவுகளை முகமலர்ச்சி ஆக்கிடுவோம்
    கற்றாரைக் கண்டிடுவோம் கைதொட்டு வணங்கிடுவோம்
    பெற்றவரின் ஆசியினைப் பெற்றுமே மகிழ்ந்திடுவோம்

    இனிப்புச் சுவையோடு இங்கிதமாய் பட்சணங்கள்
    காரமும் சேர்த்து களிப்பாகச் செய்திடுவோம்
    கொடுத்து மகிழ்ந்திடுவோம் குதூகலத்தில் மிதந்திடுவோம்
    வீடெங்கும் பட்சணங்கள் விதம்விதமாய் வீற்றிருக்கும்

    வாசலிலே மாக்கோலம் மங்களமாய் வரவேற்கும்
    வீடெங்கும் மகிழ்ச்சியது தென்றலாய் பரவிநிற்கும்
    பூஜையறை பக்தியினை வெளிச்சமாய் காட்டிநிற்கும்
    பொங்கலுடன் அம்மாவும் உள்நுழைவார் அப்பாவுடன்

    மாமாவும் மாமியுடன் வந்திருப்பார் மகிழ்வுடனே
    சித்திரைக்குப் புத்துடுப்பும் சீராகத் தந்திடுவார்
    அவர்காலைத் தொட்டுவிட்டால் அகநிறைவார் மாமாவும்
    ஆசியினை எமக்கீந்து அவரளிப்பார் பணப்பரிசும்

    மாமாவின் பிள்ளைகள் மகத்தான பரிசாகும்
    மலர்ச்சியுடன் ஓடிவந்து வாரியே அணைத்திடுவார்
    ஊஞ்சல்கட்டி ஆடிடுவோம் ஒன்றாகப் படுத்திடுவோம்
    உணர்வுடனே ஒன்றாக உட்கார்ந்து உண்டிடுவோம்

    பட்டாசு மத்தாப்பு பெட்டிகளாய் வாங்கிடுவோம்
    பக்கத்து வீட்டாரும் எங்களுடன் இணைந்திடுவார்
    வெள்ளிக் கம்பிகளாய் மத்தாப்பு விரிந்தேயெழும்
    வெடிவெடிக்கும் சத்தத்தால் தெருவே கலகலக்கும்

    பட்டிமன்றமோடு  பாங்கான இசை நிகழ்ச்சி
    வெட்டவெளி மேடைகளில் விமரிசையாய் நடக்கும்
    பாடிடுவார் ஆடிடுவார் பரவசமாய் ஆகிடுவார்
    சித்திரைக் கொண்டாட்டம் முத்திரையாய் ஜொலித்துவிடும்

    இத்தனையும் நடந்தது எல்லோர்க்கும் நெஞ்சிருக்கும்
    காத்திருப்பு என்பது களிப்பான எதிர்பார்ப்பே
    நாடுபோகும் போக்கினிலே நமக்குச் சித்திரைவாய்த்திடுமா
    ஏக்கமுடன் இருக்கின்ற நிலையிப்போ வந்திருக்கு

    போர்மேகம் ஓர்பக்கம் புதுக்கொரனா மறுபக்கம்
    எரிபொருளால் எல்லாமே ஏறியேறிப் போகிறது
    நாளைக்கு எதுநடக்கும் யாருக்கும் தெரியாது
    என்றாலும் சித்திரையும் வரவேதான் போகிறது

    துன்பங்கள் வாராமல் துணையிருப்பாய் ஆண்டவனே
    இன்பங்கள் துன்பங்கள் எல்லாமே உன்கையில்
    சித்திரையில் நல்வெளிச்சம் வருவதற்கு வழிசமைப்பாய்
    நித்தமுமே பணிகின்றோம் நின்பாதம் அடைக்கலமே

    Share