தனியுடைமை
பாஸ்கர்
எல்லாவற்றையும் இனி துறக்க வேண்டும்
புதுப்பொருள் ஏதும் இனி தேவையில்லை
இருப்பவற்றை இழந்தால் மிக மிக இனிது
தேவைகளற்று இருப்பின் ரொம்ப சுகம்
போட்டி கலச்சாரம் இனி கிஞ்சித்தும் கிடையாது
தோற்றுப்போவது இனிமேல் பெரும் சுமையில்லை
வெற்றி காணும் ஆசையுமில்லை வெறியுமில்லை
கருத்துச் சொல்ல ஆள் எங்கே எனத் தேடவேண்டாம்
எவர் செய்கையும் எனக்கு இனிமேல் சரிதான்
எந்தத் தவறும் என்னை உள்ளே சீண்டுவதில்லை
உண்மையாய் இருக்கப் பிரயத்தனம் இனியில்லை
கவிதை எழுதி யார் பாராட்டுக்கும் காக்கப் போவதில்லை
நீ செய்தது தவறென சொன்னால் நகர்ந்து விடுகிறேன்
அற்புதம் எனச் சொல்லும் முன் காணாமல் போகிறேன்
பேச்சு குறைந்து போய், எனக்குள் வாழ்ந்துகொள்கிறேன்
ஆள் அடையாளம் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைகிறது
எனக்குள் இருக்கும் உலகில் யாருக்கும் இடமில்லை
காற்று பட்டு கரையும் பஞ்சு மிட்டாய் வாழ்க்கை இது
கரைந்துகொண்டே விரைவில் காணாமல் போகிறேன்
தத்துவமான வாழ்க்கை எனத் தள்ளியே இருந்து விட்டேன்
நிஜம் வேறெனத் தெளிகையில் மனமூப்பில் மறைகிறேன்.