கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 47

0

-மேகலா இராமமூர்த்தி

தன் அண்ணன் இராவணனால் துரத்தப்பட்ட வீடணன், தன் அமைச்சர்களோடு அண்ணல் இராமனிடம் அடைக்கலம் வேண்டி வந்தபோது, ”அண்ணனுக்குப் பகைவரால் ஆபத்து ஏற்படும் வேளையில் அவனைப் பிரிந்துவருபவனை நம்பக்கூடாது; ஆதலால், வீடணனை ஏற்பது ஆபத்து” என்று ஆலோசனை சொன்னான் அண்ணனை இராமனின் துணையோடு வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றிய சுக்கிரீவன்.

சுக்கிரீவனின் கருத்தையறிந்த இராமன் அடுத்து சாம்பனின் கருத்தைக் கேட்கின்றான். சாம்பனும், ”வீடணனின் வரவு பொன்மானாக வந்த மாரீசனின் வரவைப் போல் தீமைபயக்கக் கூடியதே; எனவே, அவனைச் சேர்த்துக்கொள்வது நன்றன்று” என்ற தன் கருத்தைத் தெரிவித்தான்.

சாம்பனைத் தொடர்ந்து நீலனும், ஏனைய அமைச்சர்களும் வீடணனை நம்மவனாகப் பற்றிக் கொள்ளுதல் பழுது (தவறு) எனும் கருத்தையே வழிமொழிந்தனர்.

இறுதியில் அனுமனின் கருத்தை வினவினான் இராமன். ”உத்தமர்கள் அனைவரும் உரைத்தபின்னர் நானும் விளம்ப வேண்டுமா?” என்று பணிவோடு கேட்டுவிட்டு, ”தூயவர்களாகிய இவர்கள் வீடணனைப் பற்றிக் கூறிய கருத்துக்கள் தூயவையே; எனினும், நான் வீடணனைத் தீயவன் என்று ஐயுறமாட்டேன்; அதற்கான காரணங்களை இப்போது உரைக்கின்றேன்” என்று தன் கருத்துக்களை எடுத்தியம்பத் தொடங்கினான் அனுமன்.

ஐய! உள்ளத்திலுள்ளதைப் பேச்சில் வெளிப்படுத்துவதற்கு முன்பாக மெள்ளத் தம் முகங்களே கூறிவிடும்; வஞ்சகத்தின் விளைவுகள் எல்லாம் நல்ல கருத்தில்லாத, அறியாமையாகிய இருள்நிறைந்த பள்ளம்போன்ற முகத்தில் அல்லாது, (அறிவொளி வீசுகின்ற) வெட்டவெளி போன்ற முகத்தில் வெளிப்பட்டுத் தோன்றுமோ?” என்றான்.

உள்ளத்தின் உள்ளதை உரையின் முந்துற
மெள்ளத் தம் முகங்களே விளம்பும் ஆதலால்
கள்ளத்தின் விளைவுஎலாம் கருத்துஇலா இருள்
பள்ளத்தின் அன்றியே வெளியில் பல்குமோ. 
(கம்ப: வீடணன் அடைக்கலப் படலம் – 6452)

வீடணனின் முகத்தில் கள்ளமில்லை; அறிவின் மாட்சி தெரிகின்றது. ஆதலால், அவன் தீயவனாக இருக்க வாய்ப்பில்லை என்பதே ஈண்டு அனுமன் வெளிப்படுத்தும் கருத்து.

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்”
(706) என்ற வள்ளுவரின் குறட்கருத்தைக் கம்பர் இப்பாடலில் எடுத்தாண்டிருக்கக் காண்கின்றோம்.

வீடணன் நம்மிடம் வந்துசேர்ந்திருக்கும் காலம் சரியானதன்று என்று இராமனுக்குச் சுட்டிக்காட்டி அவனை ஏற்றுக்கொள்ள மறுதலிக்குமாறு வற்புறுத்திய நண்பர்களுக்குப் பதிலளிக்க விரும்பிய மாருதி,

”வலிமை மிக்கதான வாலியின் பகையைக் கடந்து நின்றது நின்னுடைய வலிமை; இனி, இலங்கை அரக்கர்கட்கும் அதனால் அழிவு உறுதியாயிற்று என்பதால், தனக்கு மூலம் எனப்படும் துணைவர்களான இராவண கும்பகருணர்களைப் பிரிந்து வருவதை நிறைவேற்றினான் வீடணன். எனவே, அவன் இங்கு வந்துசேர்ந்திருக்கும் காலமும் பொருத்தமானதே” என்றான் அஞ்சனை மைந்தன்.

காலம்அன்று இவன் வருகாலம் என்பரேல்
வாலிதன் உறுபகை வலி தொலைத்தலால்
ஏலும் இங்குஇவர்க்கு இனிஇறுதி என்றலால்
மூலம்என் துணைவரைப் பிரிவு முற்றினான்.
(கம்ப: வீடணன் அடைக்கலப் படலம் – 6455)

தன்னை இராவணன் கொல்லச் சொன்னபோது அதனைத் தடுத்தவன் இந்த வீடணன்தான் என்பது அனுமனின் நினைவுக்கு வருகின்றது. அதைப்பற்றி இராமன் உள்ளிட்ட அனைவர்க்கும் தெரிவிக்க விரும்பிய அவன்,

இராவணன் அவையில் கொண்டு நிறுத்தப்பட்ட என்னைக் கொல்லச்சொல்லி இராவணன் ஆணையிட்டபோது இடைமறித்து, “அபலைகளான பெண்களைக் கொல்வதும், வீரமற்ற அறிவிலிகளைக் கொல்வதும், நமது அழிவுக்குரிய செயல்களைச் செய்தார்களெனினும் தூது வந்தவர்களைக் கொல்வதும் தூய செயல் ஆகாது என்று சிறந்த காரணங்களை எடுத்துக்காட்டி என்னைக் காத்தவன் இந்த வீடணன்” என்றான் அனுமன்.    

மாதரைக் கோறலும் மறத்து நீங்கிய
ஆதரைக் கோறலும் அழிவு செய்யினும்
தூதரைக் கோறலும் தூய்து அன்றாம் என
ஏதுவில் சிறந்தன எடுத்துக் காட்டினான்.
(கம்ப: வீடணன் அடைக்கலப் படலம் – 6459)

தொடர்ந்து இராமனிடம் தன் கருத்துக்களை முன்வைத்த சொல்லின் செல்வனான அனுமன்,  

”வெற்றி வேந்தனே! தேவர்க்கும் அசுரர்க்கும் பிரமன் முதலாய தேவர்களுக்கும் மேலான மும்மூர்த்திகட்கும் செய்துமுடித்தற்கு அரிய காரியத்தை முடிப்பதற்கு நீ முனைந்து நிற்கின்றாய். தனக்கு ஆபத்து வந்த காலத்தில் அடைக்கலம் என்று உன்னை நாடிவந்த வீடணனை ஐயுற்று நீ ஏற்றுக்கொள்ளாது புறஞ்செல்ல விடுவாயானால், கிணற்றின் சிறிய அளவு தண்ணீரைக் கண்டு கடல் ஐயுற்றதற்கு ஒப்பாகாதோ? என்று வினவினான்.

கடல்போன்றவனான உன்னைச் சிறு புனலொத்த இந்த வீடணனால் என்ன செய்துவிட முடியும்? இவனைக் கண்டு சந்தேகம் கொள்வது எதற்கு? நற்குணங்களும் நீதியும் வழுவாத இவனைத் தாராளமாக நம்மோடு இணைத்துக்கொள்ளலாம் என்பது வீடணன் குறித்த அனுமனின் நிலைப்பாடு.

மாருதியின் வார்த்தைகள் இராமனுக்குத் தன் காதுகளில் அமுதம் பாய்ந்தது போன்ற இன்பத்தை நல்கின. ”பேரறிவாளனே! நீ சொன்ன வார்த்தைகள் மிக நன்று!” என அவனைப் பாராட்டிவிட்டு, அனைவரையும் நோக்கி, ”மாருதி சொன்ன கருத்துக்களே சிறந்தவை” என்றுரைத்தான் அழுத்தமாக.

அதனைத் தொடர்ந்து, அடைக்கலமாக வந்தவனை விடலாகாது என்பதற்குச் சான்றுகாட்டும் விதத்தில், புறாவுக்கு அடைக்கலம் தந்த சிபி மன்னனின் கதை, ஆலகால விடத்தை உண்டு சிவனார் தேவர்களைக் காத்த கதை, அடைக்கலம் எனச் சரணடைந்த யானையை முதலையின் வாயிலிருந்து திருமால் காத்த கதை எனப் பலவற்றை எடுத்துரைத்துத் தன்னை நம்பி வந்தவரை ஒருவன் காக்கவில்லையாயின் அறத்தால் என்ன பயன்? அவன் ஆண்மையால்தான் என்ன பயன்? ஆதலால், வீடணனை ஏற்றுக்கொள்வதால் நன்மையோ தீமையோ எதுவந்தாலும் சரி; அவனை ஏற்றுக்கொள்வது என்று நான் முடிவுசெய்துவிட்டேன் எனக்கூறி, கதிரோன் மைந்தனான சுக்கிரீவனைக் கூப்பிட்டு, ”நீ சென்று வீடணனை என்பால் அழைத்து வா!” என்றான் இராமன்.

வீடணனை சேர்த்துக்கொள்ள வேண்டாம் என்று யோசனை சொன்ன சுக்கிரீவனையே வீடணனை அழைத்துவர இராமன் அனுப்பியது நமக்கு வியப்பளிப்பதாய் உள்ளது. பின்னாளில் தன்னை நிராகரிக்கச் சொன்னவன் இந்தச் சுக்கிரீவன் என்பதை வீடணன் அறியும்போது அவனுக்கு சுக்கிரீவன்பால் கோபமும் வெறுப்பும் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. அதனைத் தவிர்த்துத் தொடக்கம் முதலே இருவரும் நட்பாகப் பழகும் சூழலை ஏற்படுத்திவிட வேண்டும் எனும் நோக்கத்தோடு இராமன் வீடணனை அழைத்துவரச் சுக்கிரீவனைத் தேர்ந்தெடுத்தான் என்று நாம் எண்ணுவதில் தவறில்லை.

இராமனின் கட்டளையை ஏற்றுச்சென்ற சுக்கிரீவன் வீடணனைக் கண்டான்; இருவரும் ஒருவரையொருவர் அன்புறத் தழுவிக்கொண்டனர். கருநிறத்தவனான வீடணனும் வெண்ணிறத்தவனான சுக்கிரீவனும் தழுவிக்கொண்ட காட்சியானது, இரவும் பகலும் தழுவிக்கொண்டதுபோல் இருந்தது என்கிறார் கற்பனையில் விற்பன்னரான கம்பர்.

இராமன் வீடணனுக்கு அடைக்கலம் தர விரும்புவதை அவனிடம் தெரிவித்த சுக்கிரீவன், ”என்னுடன் வா நாம் இராமனைப் பணிவோம்” என்றான்.

உவகையால் கண்கள் பொங்க, உடல் புல்லரித்து நின்ற வீடணன், ”செம்பஞ்சு ஊட்டாமலேயே சிவக்கின்ற மென்மையான பாதங்களை உடைய சீதாதேவியை இராமனிடமிருந்து பிரித்த பாவியும், வஞ்சகனுமான இராவணனுக்கு இளைய தம்பியாகிய என்னை வருக என்றுகூறி அருள்புரிந்தானோ? என்னையும் அடைக்கலம் என்று கருதினானோ? அடியவனாகிய நான் இராமனின் அருளால் தாழ்சடைக் கடவுளாகிய சிவபெருமான் உண்ட நஞ்சானது எவ்வாறு அவர் உண்டதால் சிறந்ததாயிற்றோ அதுபோலச் சிறந்தேன்” என்றான்.

பஞ்சுஎனச் சிவக்கும் மென்கால் தேவியைப் பிரித்த பாவி
வஞ்சனுக்கு இளைய என்னை வருகஎன்று அருள் செய்தானோ
தஞ்சுஎனக் கருதினானோ தாழ்சடைக் கடவுள்உண்ட
நஞ்சுஎனச் சிறந்தேன் அன்றோ நாயகன் அருளின் நாயேன். (கம்ப: வீடணன் அடைக்கலப் படலம் – 6487)


சுக்கிரீவனின் யோசனைப்படி விரைந்துசென்று இராமனைக் கண்டு வணங்கினான் வீடணன். இராமனும் மகிழ்ந்து அருகிலுள்ள ஆசனத்தில் அவனை அமர்த்தி, ”கடல்சூழ்ந்த இலங்கைச் செல்வத்தை உனக்கே தந்தேன்” என்று கூறிவிட்டு இலக்குவனை அழைத்துத் ”தம்பி இவனுக்கு மகுடம் சூட்டுக” என்றான்.

ஏன் இலக்குவனை இராமன் முடிசூட்டப் பணித்தான் எனில், சுக்கிரீவன், சாம்பன், மற்றுமுள்ளோரைப் போல் இலக்குவன் வாய்திறந்து வீடணனை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று சொல்லவில்லையே தவிர அவனுக்கும் அதில் உடன்பாடில்லை என்பதை உணர்ந்துகொண்டான் இராமன். அந்த மனநிலையை மாற்றவேண்டும் என்று கருதியே அவனிடம் வீடணனுக்கு இலங்கை வேந்தனாய் முடிசூட்டும் பொறுப்பை அளித்தான் என்கின்றனர் கம்பனில் தோய்ந்தோர்.

அப்போது வீடணன், ”ஐயனே! அழிவற்ற செல்வமாகிய நின் திருவருளை எனக்கு அளித்தனை; களவுத்தன்மை உடைய அரக்கனாகிய இராவணனுக்கு இளையவனாய்ப் பிறந்த அந்தத் தொடர்பு தீரும்படி, நின் தம்பியாகிய பரதனுக்களித்த திருவடி நிலைகளான (காலணிகள்) மகுடத்தை எனக்கும் சூட்டுக” என்று பணிந்து வேண்டினான்.

வீடணனின் விநயத்தில் மகிழ்ந்த இராமன், ”குகனோடு சேர்த்து நாங்கள் ஐவர் சகோதரர்கள் ஆனோம்; இது முன்பு நிகழ்ந்தது; பின்பு மேருமலையைச் சுற்றிவரும் சூரியனின் மகனான சுக்கிரீவனுடன் சேர்த்துச் சகோதரர் ஆறுபேர் ஆயினோம். எங்களிடம் உள்ளன்புகொண்டு எம்பால் வந்தவனே! உன்னுடன் சேர்த்து இப்போது சகோதரர்கள் ஏழுபேர் ஆயினோம். புகுதற்கரிய கானக வாழ்வை எனக்குத் தந்து புதல்வர்களால் நிறைந்திருக்கின்றான் உன் தந்தை தயரதன்” என்றான்.

தயரதனை எந்தை என்றுரைக்காமல் நுந்தை என்று வீடணனிடம் இராமன் உரைப்பது, உண்மையிலேயே அவன் வீடணனைத் தன் உடன்பிறப்பாக ஏற்றுக்கொண்டுவிட்டான் என்பதன் வெளிப்பாடே.

குகனொடும் ஐவர்ஆனேம் முன்பு பின் குன்றுசூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனேம் எம்முழை அன்பின் வந்த
அகனமர் காதல்ஐய நின்னொடும் எழுவர் ஆனேம்
புகலருங் கானம்தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை.
(கம்ப: வீடணன் அடைக்கலப் படலம் – 6507)

குல, இன வேறுபாடின்றி அனைவரையும் சோதரர்களாக இராமன் ஏற்றுப்போற்றும் பாங்கு, அவனின் பண்பட்ட மனநிலைக்குச் சான்றாவதோடு, “யாவரும் கேளிர்” எனும் கணியன் பூங்குன்றனின் பொன்னடிகளைப் பின்பற்றும் உயர்ந்தவனாகவும் அவனை அடையாளப்படுத்துகின்றது எனலாம்.

அதன்பின்னர், கடல்சூழ்ந்த இலங்கையின் மதில் முதலிய பாதுகாப்புப் பற்றியும், இராவணன் உள்ளிட்ட அரக்கர்களின் வலிமை பற்றியும், இலங்கையின் படையளவு பற்றியும் வீடணனிடம் முற்றாய்க் கேட்டறிந்தான் இராமன்.

இலங்கையின் நிலவரம் உரைத்த கையோடு இலங்கை நகரத்தை அனுமன் ஒருவனாகவே எரித்தழித்த திறலையும் அண்ணல் இராமனுக்கு அறியத் தந்தான் இராவணனின் இளவல். அதுகேட்டுப் பூரித்த இராமன், ”இத்துணை வீரச்செயல்கள் நிகழ்த்திய நீ, சீதையைக் கண்டும் அவளை மீட்டுவராமல் அங்கேயே விட்டுவந்தது என் வில்லாற்றலை நான் காட்டவேண்டும் என்பதற்காகவா வீரனே?” என்று கேட்டு அனுமனைப் பாராட்டினான். தன் வீரப் பிரதாபங்களைத் தன் வாயால் சொல்லிக்கொள்வதையோ பிறர் வாயால் கேட்பதையோ விரும்பாத அனுமன் நாணத்தோடு தலைகுனிந்தான்.

அடுத்து, கடலைக் கடந்து இலங்கை செல்வதற்கான வழியென்ன என்று இராமன் வீடணனைக் கேட்டபோது, கடல்வேந்தனான வருணனை வேண்டி வழி கேட்போம் என்று யோசனை சொன்னான் அவன். அதனையேற்ற இராமன், ”இளமைப் பருவத்தினளான சீதையை இராவணனின் சிறையினின்று மீட்டுவருவதற்குரிய வழியைத் தருக” என வருணனை வேண்டி, வேதநெறிப்படி அடுக்கப்பட்ட தருப்பைப் புல்லில் கருங்கடலைப் பார்த்தபடி அமர்ந்து வருண மந்திரத்தைத் தியானிக்கத் தொடங்கினான்.

நாட்கள் ஏழு கடந்தும் வருணன் வரவில்லை. இராமனின் தாமரைக் கண்கள் சினத்தால் சிவந்தன.

”ஒருவர் எவரிடமும் எதனையும் வேண்டாதவர் என்றாலும், ஒருவர்பால் சென்று ஒன்றை வேண்டுவாராயின் அவ்வாறு வேண்டியவர் சிறுமையிலிருந்து நீங்கமாட்டார். இன்று நான் இலங்கைக்குச் செல்லும் வழியைத் தர வருணனை வேண்டியதை கடல்வேந்தன் மறுத்துவிட்டான்; இது நன்று நன்று!” எனக் கோபத்தால் புகைதோன்ற நகைத்தான் இராமன்.

ஒன்றும் வேண்டலர் ஆயினும் ஒருவர்பால் ஒருவர்
சென்று வேண்டுவரேல் அவர் சிறுமையின் தீரார்
இன்று வேண்டியது எறிகடல் நெறிதனை மறுத்தான்
நன்று நன்றுஎன நகையொடும் புகைஉக நக்கான்.
(கம்ப: வருணனை வழிவேண்டு படலம் – 6597)

நாம் எத்துணை உயர்ந்தவராயினும் ஒருவரிடம் சென்று உதவிவேண்டி நின்றால் அவர் முன்பு தாழ்ந்துதான் போகின்றோம் என்று இராமன் உரைத்த கருத்து எல்லாக் காலத்துக்கும் பொருந்தக் கூடியதே.

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *