குறளின் கதிர்களாய்…(397)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(397)
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.
– திருக்குறள் -195 (பயனில சொல்லாமைட)
புதுக் கவிதையில்…
சிறந்த குணமுடையோர்
சிந்திக்காது
சொல்வாராயின் பயனிலாச் சொற்களை,
சேர்த்திருந்த அவரது பெருமை
சிறப்புடன் சேர்ந்தே விட்டுச்
சென்றிடும் விலகியே…!
குறும்பாவில்…
உயர்குணமுடையோர் பயனிலாச் சொற்களை
உரைத்தால், அவர்தம் சிறப்பெல்லாம் நீங்கி
பெருமையெல்லாம் போய்விடுமே…!
மரபுக் கவிதையில்…
பண்பி லுயர்ந்த பெரியோரும்
பலரின் முன்னே பேசுகையில்
அண்டை அயலார்க் குதவாத
அற்பச் சொற்கள் பேசிநின்றால்,
திண்ண மாக அன்னாரின்
திறமை தந்த பெருமையெலாம்
மண்ணி லவர்தம் சிறப்புடனே
மறைந்தே போகும் பாரீரே…!
லிமரைக்கூ…
பண்பாளர்க்கும் பேச்சிலுண்டு எல்லை,
பெருமையோடு சிறப்லொம் அவர்க்குப் போய்விடுமே
பேசினாலவர் பயனிலாச் சொல்லை…!
கிராமிய பாணியில்…
பேசாத பேசாத
பயனில்லாத சொல்லப் பேசாத,
ஒருநாளும் பேசாத
ஒருத்தருக்கும் ஒதவாத பேச்ச..
கொணத்தில ஒசந்த
பெரிய மனுசருங் கூட
பேசும்போது ஒருத்தருக்கும்
பயனே இல்லாத பேச்ச
பேசிட்டிருந்தா,
அதுனால
அவரோட பெரும
செறப்பெல்லாம் சேந்து
அவரவுட்டுப் போயிடுமே..
அதால
பேசாத பேசாத
பயனில்லாத சொல்லப் பேசாத,
ஒருநாளும் பேசாத
ஒருத்தருக்கும் ஒதவாத பேச்ச…!