சிறகடிக்கும் கற்பனைகள்!
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா.
சித்திரையைக் கொண்டாடச் சிறகடிக்கும் கற்பனைகள்
எத்தனையே எல்லோரின் மனத்தினிலும் இருக்கிறது
அத்தனையும் நிறைவேற அமைந்திடுமா உலகநிலை
அனைவரது அகங்களிலும் அதுகேள்வி ஆகிருக்கு
தைபிறந்த பின்னாலே சந்தோஷம் தருவதாய்
சீரான சித்திரை சிறப்பாக வந்தமையும்
ஊரெல்லாம் கொண்டாட்டம் உறவெல்லாம் கூடிடுவர்
தேரோடும் கோவில்களில் திருவிழா சிறந்துவிடும்
புத்தாடை எடுத்திடுவோம் புத்துணர்வும் பெற்றிடுவோம்
மொத்தமுள்ள உறவுகளை முகமலர்ச்சி ஆக்கிடுவோம்
கற்றாரைக் கண்டிடுவோம் கைதொட்டு வணங்கிடுவோம்
பெற்றவரின் ஆசியினைப் பெற்றுமே மகிழ்ந்திடுவோம்
இனிப்புச் சுவையோடு இங்கிதமாய் பட்சணங்கள்
காரமும் சேர்த்து களிப்பாகச் செய்திடுவோம்
கொடுத்து மகிழ்ந்திடுவோம் குதூகலத்தில் மிதந்திடுவோம்
வீடெங்கும் பட்சணங்கள் விதம்விதமாய் வீற்றிருக்கும்
வாசலிலே மாக்கோலம் மங்களமாய் வரவேற்கும்
வீடெங்கும் மகிழ்ச்சியது தென்றலாய் பரவிநிற்கும்
பூஜையறை பக்தியினை வெளிச்சமாய் காட்டிநிற்கும்
பொங்கலுடன் அம்மாவும் உள்நுழைவார் அப்பாவுடன்
மாமாவும் மாமியுடன் வந்திருப்பார் மகிழ்வுடனே
சித்திரைக்குப் புத்துடுப்பும் சீராகத் தந்திடுவார்
அவர்காலைத் தொட்டுவிட்டால் அகநிறைவார் மாமாவும்
ஆசியினை எமக்கீந்து அவரளிப்பார் பணப்பரிசும்
மாமாவின் பிள்ளைகள் மகத்தான பரிசாகும்
மலர்ச்சியுடன் ஓடிவந்து வாரியே அணைத்திடுவார்
ஊஞ்சல்கட்டி ஆடிடுவோம் ஒன்றாகப் படுத்திடுவோம்
உணர்வுடனே ஒன்றாக உட்கார்ந்து உண்டிடுவோம்
பட்டாசு மத்தாப்பு பெட்டிகளாய் வாங்கிடுவோம்
பக்கத்து வீட்டாரும் எங்களுடன் இணைந்திடுவார்
வெள்ளிக் கம்பிகளாய் மத்தாப்பு விரிந்தேயெழும்
வெடிவெடிக்கும் சத்தத்தால் தெருவே கலகலக்கும்
பட்டிமன்றமோடு பாங்கான இசை நிகழ்ச்சி
வெட்டவெளி மேடைகளில் விமரிசையாய் நடக்கும்
பாடிடுவார் ஆடிடுவார் பரவசமாய் ஆகிடுவார்
சித்திரைக் கொண்டாட்டம் முத்திரையாய் ஜொலித்துவிடும்
இத்தனையும் நடந்தது எல்லோர்க்கும் நெஞ்சிருக்கும்
காத்திருப்பு என்பது களிப்பான எதிர்பார்ப்பே
நாடுபோகும் போக்கினிலே நமக்குச் சித்திரைவாய்த்திடுமா
ஏக்கமுடன் இருக்கின்ற நிலையிப்போ வந்திருக்கு
போர்மேகம் ஓர்பக்கம் புதுக்கொரனா மறுபக்கம்
எரிபொருளால் எல்லாமே ஏறியேறிப் போகிறது
நாளைக்கு எதுநடக்கும் யாருக்கும் தெரியாது
என்றாலும் சித்திரையும் வரவேதான் போகிறது
துன்பங்கள் வாராமல் துணையிருப்பாய் ஆண்டவனே
இன்பங்கள் துன்பங்கள் எல்லாமே உன்கையில்
சித்திரையில் நல்வெளிச்சம் வருவதற்கு வழிசமைப்பாய்
நித்தமுமே பணிகின்றோம் நின்பாதம் அடைக்கலமே