Blog

  • வெங்காய போண்டா, மூலிகை தோசை, கேழ்வரகு வடை

    வெங்காய போண்டா, மூலிகை தோசை, கேழ்வரகு வடை

    சிறுதானியத்தில் சுவையான சிற்றுண்டிகளைச் செய்யலாம். தாம்பரத்தில் நடைபெற்ற சிறுதானியப் பெருவிழாவில் மகுடம் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த இராஜேஸ்வரி, வெங்காய போண்டா, மூலிகை தோசை, கேழ்வரகு வடை என அடுத்தடுத்துச் செய்து அசத்தினார். இதோ அவரது செய்முறை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வாழைப்பூ வடை செய்வது எப்படி?

    வாழைப்பூ வடை செய்வது எப்படி?

    வாழைப்பூ வடை செய்வது எப்படி? சென்னை, தாம்பரத்தில் நடைபெற்ற சிறுதானியப் பெருவிழாவில் மகளிர் சுய உதவிக் குழுவினரின் செய்முறை இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சி.ஜெயபாரதன் வாழ்க்கை அனுபவங்கள்

    இந்தியாவின் முதல் அணுமின் நிலையத்தில் பணியாற்றியவர், சி.ஜெயபாரதன். இந்தியாவிலும் கனடாவிலும் அணு உலை, பொறியியல் மேலாண்மை ஆகிய துறைகளில் 45 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அறிவியல் தமிழுக்குப் பங்களித்து வருகிறார். இப்போது கனடாவில் தமது 90ஆவது வயதிலும் துடிப்புடன் இயங்கி வருகிறார். தமது வாழ்க்கை அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அப்பப்பா, எத்தனை போராட்டங்களை இவர் கடந்து வந்திருக்கிறார்? மெய்சிலிர்க்கும் வகையிலான இந்த அனுபவங்களைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சைக்கிள் (சிறுகதை)

    சைக்கிள் (சிறுகதை)

    முனைவர் நா. தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    “ஹலோ………     ஹலோ………….”

    “ஹலோ………………….. சொல்லு காயத்ரி”

    “ஏய், இந்து நேரமாச்சு. இன்னும் வரலயா. நீ”

    “வந்திட்டு இருக்கேன். நீ கிளம்பிக்கோ.”

    “ஏன் லேட்டாகுமா. நா  எப்பவும் போல வடகோவ டர்னிங்க்ல தா நிக்கறே. ஓண்ணாத்தானே போவோம்.  வா வெயிட் பண்றேன்.”

    ”இல்ல வேண்டாம். நீ போ. நா இப்போதா அக்ரி காலேஜ் வர்றே. கொஞ்சம் லேட் ஆகும். எனக்கு First ஹவர் Free தா இந்த மாச பர்மிஷன் இருக்கு லேட் ஆனா பர்மிஷன் போட்டுக்கறேன்.”

    “ஏ வண்டி ஏதும் பஞ்சர் ஆயிடுச்சா?”

    “இல்ல காயத்ரி. ஒரு ஸ்வாரஸ்யமான சம்பவம். ஒரு வாரமா நெனச்சிட்டு இருந்தேன். இன்னக்குதா நடக்குது. நா வந்து சொல்லறே. நீ கிளம்பு. இன்னக்கு உங்க டிப்பார்ட்மென்ட் ஈவன்ட் வேற இருக்குல்ல. பிரின்ஸிகிட்ட ரெஜிஸ்டர் போயிடப்போகுது. நா வந்தர்றே. ”

    ’என்ன இவ ரொம்ப உற்சாகமாப் பேசறா. பர்மிஷன் போடறேங்கறா. வீட்லயும் இல்ல. அக்ரி வந்திட்டேங்கறா. ரெண்டு பேரும் வெயிட் பண்ணி ஒண்ணாதானே பீளமேடு வரப் போவோம். இந்த காலேஜில வேலக்கு சேர்ந்ததிலிருந்து இப்படித்தானே போய்கிட்டு இருக்கோம். அவ தைர்யத்திலதா நானே வண்டில போகவே ஆரம்பிச்சே. சரி வரட்டும் வந்து என்னானு கேட்டுக்கலாம். ’

    ’ச்சே ஒரு போட்டோ கூட சரியா விழமாட்டேங்குது. விடக்கூடாது. மறுபடியும் கொஞ்சதூரம் வண்டிய ஓட்டிட்டு போய் நின்னு எடுக்கலாம். ஒரு வாரமா நா அவுங்கள கவனிச்சுட்டு வர்றது அவங்களுக்குத் தெரிய வாய்ப்பில்ல. அவங்களுக்குத் தெரியாமத்தா வீடியோ எடுக்கணும். தெரிஞ்சா என்ன நினைப்பாங்க. தினமும் அவங்க  நேரமும் நா போற நேரமும் ஒண்ணாதா இருக்கு. அவங்களுக்குள்ள என்ன ஒரு புரிதல். என்ன ஒரு முயற்சி. என்ன ஒரு பாசம். விட்டுக்கொடுக்கறது. இருந்தா இப்படி இருக்கணும். அவங்களுக்குப்பின்னாலிருந்து போட்டா எடுத்தாச்சு. வண்டியைக் கொஞ்சம் பாஸ்டா ஓட்டிட்டுப்போயி முன்னாடி தெரியாத மாதிரி நின்னு அவங்க ரெண்டுபேரும்  வற அழக வீடியோ எடுக்கலாம். நம்ம வீட்டுக்காரர் குமாருக்கு இத காமிக்கணும். அப்போதாவது குமாருக்கு புரியட்டும். ஊரு உலகத்தில எப்படி எல்லாம் இருக்காங்கணு.

    நா  ஒருவாரமா பாக்கற இவங்க மட்டும் வீட்டில சும்மாவா இருப்பாங்க. கண்டிப்பா ஏதோ ஒரு வேலக்குப் போயிட்டு தா இருப்பாங்க. இருந்தாலும் தினமும் எப்படி டைம் ஒதுக்கறாரு. காலைல அத ஒரு கடமையா செய்றாரு. வேலக்குப்போற பெண்களுக்கு வீட்டில நிறைய வேல இருக்கும்னு அட்ஜஸ்ட் பண்ணிட்டுதானே இவரு இதப்பண்றாரு. அப்போ குழந்தைக்கும் சந்தோஷமா இருக்கும். காலைல குளிரு, பனி இதெல்லாம் பார்க்காம குடும்பம்னு நெனச்சு எப்படி நடந்துக்கறாரு. பலதடவ சொல்லி பார்த்தாச்சு. குமாருகிட்ட குழந்த முன்னாடி அந்த மாதிரி  பேசாதீங்கணு. எப்போ பார்த்தாலும் குமாருக்கு விஷ்ணுவ திட்டறதே வேல. அஞ்சாவது போறான். ஆனா அப்பா பாசம்னா  என்னானே  தெரியாது. பாட்டி தாத்தா கூடவே இருந்திருந்தாக் கூட அவெ ஏங்கமாட்டா ரெண்டு பேரோட பெத்தவங்களும் ஊர்ல தோட்டத்த விட்டுட்டு வர்ற எண்ணமே கிடையாது. ஏதாவது விசேஷத்துக்கு நாங்கதா அங்க போகணும். நா மாசமா இருக்கும்போது குமாரு பெண்குழந்தை வேணும்னு ரொம்ப ஆசப்பட்டாரு. இல்லனு சொல்லல. வீடு முழுக்க அழகான பெண்குழந்தைங்க போட்டாவா மாட்டி வெச்சாரு. ரொம்ப ரொம்ப எதிர்பார்ப்பு. அவரு ஒரே பையனா வீட்ல வளர்ந்தாரா அதனாலயோ என்னமோ பெண் குழந்தைங்க மேல அப்படி ஒரு விருப்பம். அந்த கனவக் கலைச்ச மாதிரி விஷ்ணு வந்து பொறந்தது அவருக்கு ஏனோ பிடிக்கல. ஆண் குழந்தனா என்ன பெண் குழந்தைனா என்ன? கடவுள் தந்தது சந்தோஷமா வளக்க வேண்டியது தானே. அவரு வேல விட்டு வரும்போது  விஷ்ணு ப்ரன்ஸோட விளையாடப் போயிட்டா போதும். ‘கழுத ஊரு மேய போயிடுச்சா. இதுக்குதா சொல்றது. இதே பொட்டப் புள்ளயா இருந்தா ஓடி வந்து என்ன வரவேற்கும்னு  புலம்பவாரு. எதுக்கெடுத்தாலும் அவரு வாயில வர்ற வார்த்த

    ’ஒண்ணக் கொண்டு போயி ஹாஸ்டல்ல சேத்தணும். அவங்க போடற போட்டிலதா நீ உருப்புடுவ.’

    சொல்லி சொல்லியே விஷ்ணுவுக்கு ஹாஸ்டல்னாலே பயமாயிடுச்சு. பைய நைட் தூக்கத்தில எல்லாம் கூட ஹாஸ்டல்ல விடாதீங்க விடாதீங்கணு புலம்பறா. ஏங்க குழந்தய அப்படி சொல்லி பயமுறுத்தாதீங்கணு பலமுறை சொல்லிப் பார்த்தாச்சு. அவன் நண்பர்களெல்லாம் சைக்கிள் வெச்சிருக்காங்க எனக்கும் ஒரு சைக்கிள் வாங்கி குடுங்கணு பலதடவ அழுது அழுது கேட்டிருக்கான்.

    அப்போதெல்லாம் குமாரின் பதில்

    ’எதுக்கு இன்னும் ஓவரா ஊர் மேயவா. எனக்கே ஓட்டத்தெரியாது. உன்ன உட்காரவெச்சு  நா வேற சைக்கிள் ஓட்ட சொல்லித்தரணுமா. வேல விட்டு நா வர்ற அலுப்புக்கு ஒனக்கு இது ஒரு கொரச்சல். போய் படிக்கற வேலயப்பாரு. ஹாஸ்டல்ல கொண்டு போயி விட்டனா அப்பறம் சரியாயிடும் அங்க சைக்கிள வெச்சிட்டு என்ன பண்ணுவே. ’

    குமார மீறி என்னால சைக்கிள வாங்கிக்கொடுக்கவும் முடியாது. அழுதிட்டே ஓடி வந்து மடில படுத்துக்குவா அவன் அப்பாவ பத்தி அவனுக்கும் நெறைய எதிர்பார்ப்புதா. ஆனா எங்கிட்ட சொல்லமாட்டான்.

    ஒரு வாரமா நானும் வேலக்குப்போகும்போது அக்ரிகாலேஜ்கிட்ட பார்க்கறே இந்த அப்பா எவ்வளவு அழகா ஸ்கேட்டிங் ஹெல்மெட், கைமுட்டிக்கு அடிபடாம இருக்க கவர். கால்முட்டிக்கு ஸ்கேட்டிங்க் க்னீ கேப். எல்லாம் போட்டுட்டு. மகனுக்கு சைக்கிள் ஓட்ட ட்ரெயினிங் கொடுக்கறாரு. மகன ரோட்டோரமா லெஃப்ட்ல ஒதுக்கி அப்பா அவன் பக்கத்திலேயே எப்படி மெதுவா ஓட்டிட்டு வர்றாரு. இவருக்கு ஆபீஸ்ல பிரஷர் இருக்காதா? அதயும் தாண்டி மகனுக்காக தினமும் எவ்வளவு நேரத்த செலவு பண்றாரு. இவரு என்ன ஹாஸ்டல்ல விட்டிருவேனு மிரட்டறாரா. பார்த்தா விஷ்ணு மாதிரிதா இருக்கா.   தினமும் பார்க்கறே மெய்மறந்து ஆசயோட பார்க்கறே. எதிர்பார்ப்பைக் கனவாக்கி நின்னு ரசிக்கறே. ஆள நின்னு கவனிக்க நேரமிருக்காது. இன்னக்கு எப்படியாவது வீடியோ எடுத்து குமாருகிட்ட காமிச்சாவது சொல்லிப்பார்க்கலாம். மனசு  மாறி ஒரு வேள சைக்கிள் வாங்கிக்கொடுக்க முடிவு பண்ணீட்டார்னா. பர்மிஷன் போடறதுனு ஆயிடுச்சு. குமாருகிட்ட பர்மிஷன் போட்டு . இந்த போட்டோ எடுக்கற வேலய செஞ்சேனு சொல்லக்கூடாது. வீட்டிலேயே கொஞ்சம் வேல இருந்துச்சு. சப்பாத்திக்கு மாவு பெசஞ்சு  ஃப்ரிட்ஜில வெச்சிட்டு வந்தேனு ஏதாவது சொல்லணும். என்ன வேணும்னாலும்  சொல்லலாம் ஏனா எனக்கு முன்னாடியே குமாரும், விஷ்ணுவும் கிளம்பிப் போயிடுவாங்க. காலைல மெதுவா கிளம்பினாலேப் போதும். ஆனா நான் கிளம்பறதுக்கு முன்னாடியே அவசரமா கிளம்பிடுவாங்க.

    அவர்களின் சைக்கிளுக்கு  முன்னால் சென்று சில போட்டோக்களை எடுத்து மீண்டும் வண்டியை ஒட்டிச்சென்று முன்னால் சென்று நிறுத்தி வீடியோ எடுத்தேன்.

    ’எனக்கும்  இப்படித்தானே அப்பா ஒரு சைக்கிள் வாங்கித்தர அவ்வளவு யோசித்தார். டைப்பிங் க்ளாஸுக்கும் வீட்டிற்கும் ஒன்றரை கிலோமீட்டர் தினமும் நடந்தே போகணும். கேட்டா ’ 2 கி.மீ தூரம் இருக்கற ஸ்கூலுக்கே நடந்து போயி பத்தாவது முடிச்சாச்சு. இனி எதுக்கும்பார்.’ அப்போ எல்லாம் நடக்கறது சிரமமே இல்ல. கூடப்பேசிட்டு வற இரண்டு தோழிகளும், ஒரு அஞ்சு அம்பலங்கா எலயும் அஞ்சாறு தொவரையும் இருந்தா போதும். அம்பலங்கா எல என்ன வியாதிக்கு திங்கறதா? சாப்பிடலாமா? இல்லையானு கூடத்தெரியாது. கொஞ்சம் புளிப்பா இருக்கும். வாயில போட்டு மென்னுகிட்டே வீடு வந்திருவோம்.

    தொண்ணூறுகளில் பெண்கள் சைக்கிள் ஓட்டறதே ஆச்சர்யமான விஷயமாக இருந்த கிராமம் அது. விஷுவிற்கு சொந்தக்காரங்க வீட்டுக்கு ஒவ்வொருத்தர் வீட்டுக்கா போயி கைநீட்டம் வாங்குவோம். அப்போ மட்டும் அப்பா அப்பாவோட சைக்கிள ஓட்டத்தருவாரு. அது காலு எட்டவும் எட்டாது. ஏறி உட்கார்ந்து கொஞ்ச தூரத்துக்கு யாராவது சைக்கிளப் புடிச்சிட்டு கூடவே வரணும். அதுக்கப்பறந்தா கைவிடணும். பாவம் கொஞ்ச தூரம் ஓடறதுக்குள்ள அப்பாவுக்கு மூச்சு வாங்கும். அதனால  எறங்கிடுவேன். வயசு 75 ஆச்சு இன்னும் அப்பாகிட்ட அதே சைக்கிள்தா. அப்பாவைப்போலவே அதுவும் ஒரு சுமைதாங்கி. என் கல்யாண வேலை அத்தனையும் சைக்கிள்ல போயி தானே அப்பா செஞ்சாரு. பஸ்ஸை விட்டு கல்யாணத்துக்காக இறக்கும் ஒவ்வொரு காய்கறி மூட்டையையும் மூட்ட தூக்கறவன கூப்பிட்டா பத்து  ரூபா, ஆட்டோக்கு 20 ரூபானு பஸ்ஸ விட்டு இறங்கி மூட்டைய பஸ்ஸடாப்ல வெச்சிட்டு வீட்டுக்கு வந்து சைக்கிள் எடுத்திட்டுப்போய் ஒவ்வொரு மூட்டையாக வீட்டிற்குக்கொண்டு வருவார். பஸ்ஸடாப்பிற்கும் வீட்டிற்கும் ஒரு கிலோ மீட்டர் இருக்கும்.. பைப் ஒடைந்து தண்ணி வராத நாட்களில் கொடத்தக் கட்டி நாலு கிலோமீட்டர் தூரத்திலிருந்து தண்ணி எடுத்துட்டு வர்றதும் அந்த சைக்கிள்லதா. அடுப்பெறிக்க  விறகு வாங்க. ரேஷன் பொருட்கள் வாங்க, மாவு பொடிக்க, சொசைட்டில போயி பாலு வாங்க. காய்கறி வாங்கனு இப்படி ஒரு நாளைக்கு எத்தன தடவ அந்த சைக்கிள எடுத்திட்டுப் போவாருனு தெரியாது. அப்பாகூட போகும்போது நா எப்போதும் சைக்கிள் கேரியலில்தான் உட்காருவேன். தங்கச்சிக்கு சைக்கிளின் முன்னால கம்பியில. ஸ்பெஷல் குட்டி சீட். கால் வைக்கறதுக்கு அதிலேயே செட் பண்ணியிருந்தார். அக்காவும் தம்பிக ரெண்டு பேரும் வரமாட்டாங்க. இத்தன வேலக்கும் பயன்படுத்தற சைக்கிள்ல அம்மாவ உட்கார வைக்க முடியலயேனு வருத்தம் அப்பாகிட்ட இருக்கதா செய்யும் போல. அம்மா அதுக்கல்லா வரவேமாட்டாங்க. எங்க வீட்ட விட்டு வெளிய எறங்கறதே அபூர்வம்தா.

    இத்தனக்கும் சித்தப்பா சைக்கிள் கடதான் வெச்சிருந்தாரு. சைக்கிள வாடகைக்கு விடற கட. சைக்கிள்ல பின்னாடி நம்பர் போட்டிருக்கும். ஒரு நோட்ல பேரு எழுதி சைக்கிள் நம்பர் போட்டுட்டு டைம் எழுதி வெச்சிட்டு கொடுக்கணும். 2 ரூபா முன் கூட்டியே கொடுத்திட்டு சைக்கிள  எடுத்திட்டு போலாம். ஒருமணி நேரத்துக்குள்ள வந்துட்டா ஒரு ரூபாயை திரும்ப வாங்கிக்கலாம். சித்தப்பா என்னை அடிக்கடி கடைல உட்கார வைப்பாரு. எனக்கும் நோட்ல எழுதிட்டு காசு வாங்கறது ரொம்பப்புடிக்கும். சித்தப்பாகிட்டயும் சொல்லிபார்த்திட்டே

    “சித்தப்பா எனக்கு லேடி சைக்கிள் வாங்கி குடுங்க. இல்ல கடைக்காவது வாங்குங்க. நானும் வாடகைக்கொடுத்து எடுத்துக்கறே எங்கிட்ட கைநீட்ட காசு நெறைய இருக்கு.”

    ”சொல்லிவெசச்சிருக்கே கிடச்சா கொண்டு வர்றேனு சொல்றாரு. பார்ப்போம்னு சொல்லுவாரு.  அது நடக்கவும் இல்ல.

    அப்போ ஒன்பதாவது படிக்கறேனு நெனக்கறே. வீட்டில ஏதோ மராமத்து வேல நடந்திட்டு  இருந்துச்சு. ஒரு மேஸ்திரியும் ரெண்டு கையாளும் வேல செஞ்சிட்டு இருந்தாங்க. பின்னாடிப்பக்கம் அடுக்களையிலிருந்து வெளியிலிறங்கற திட்டு ஒடஞ்சிருச்சு. சரிசெய்யணும். கொஞ்சம் அல்லற சில்லற வேலயும் இருந்துச்சு.  வேலைக்காக வாங்கின அளவான சிமெண்ட் தீர்ந்ததும் மேஸ்திரி சிமெண்டு வேணும்னுட்டார். அப்பா இருந்தா சைக்கிள்ல கொண்டுவருவார். அப்பா வேலக்கிப் போயிட்டாரு. கடைல போயி சொன்னா மூட்டை தூக்கறவங்க கொண்டு வந்து தருவாங்க. ஃபோன் இல்லாத காலம் லேண்ட்லைன் ஃபோன் இருந்தவர்களை பெரிய பணக்காரர்களாக நினைத்து ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்ட காலம். ஒரு கிலோ சாப்பாட்டு அரிசியே எட்டு ரூபாதா.. மூட்ட தூக்கறவங்களுக்கு 10ரூபா கொடுத்தா அப்பா திட்டுவார். மேஸ்திரி சிமெண்ட் இல்லேனா மீதி வேலய நாளக்கி வந்து பண்ணிக்கலாங்கறாரு. நா வேகமா அம்மாவ கூப்பிட்டேன்.

    ’ம்மா எங்கூட வர்றீங்களா. சிமெண்ட நானே சைக்கிள்ல வெச்சு கொண்டு வர்றேன். புள்ளய பையனமாதிரி வளர்த்திருக்கோம்னு அம்மாவுக்குப் பெரும வேற. சைக்கிள எடக்கால் போட்டுக்கூட ஓட்டத்தெரியாது. உருட்டிக்கொண்டே கடைவர போயாச்சு. காசு கொடுத்ததும் போர்ட்டர் ஒரு மூட்டையை கொண்டுவந்து சைக்கிளில் வைக்க வந்தாரு. என்னை சைக்கிளை நன்றாகப் பிடிக்கச்சொன்னார். ”பரவால்லண்ணா வையிங்கனு” சொன்னதும் அவரு பின்னாடி கேரியல் கம்பியை  இழுக்காமல் அப்படியே வைக்கப்போனார். ’அண்ணா கேரியல் கம்பியை இழுத்திட்டு வையிங்க.’

    ’வேண்டாம்மா சிமெண்ட் 50 கிலோ வெயிட் அப்படியே நின்னுரும்.’ என்று சொன்னதும்  பொத்துனு  சைக்கிள் பின்னாடி மூட்டய வெச்சாரு. முன்னாடி லேசா உருட்டிட்டுப்போக  சௌகர்யமா ஸ்டேண்டை எடுத்துவிட்டுட்டு புடிச்சிட்டு இருந்தேன். பின்னாடி வெயிட்டை வெச்சதும் சைக்கிள் அப்படியே முன்னாடி பாகம் மேலே தூக்கிருச்சு. எனக்கு இது தெரியவே தெரியாது. எப்படி கீழே கொண்டு வர்றதுணு வேற பதட்டமா போச்சு. பஸ்ஸடாப்பிற்கு பக்கம்தா சிமெண்ட் கட வேற. . எல்லோரும் பாத்து சிரிப்பாங்களேணு அவமானம் வேற. அப்போ அங்கே பஸ்ஸடாப்பில் உட்கார்ந்து கத பேசிட்டு இருந்த முத்து அண்ணன்தா ஓடி வந்தாரு. ”கொண்டா நா கொண்டுபோய் வீட்ல விடறேனு” சொன்னாரு.

    அப்பவும் இயலாமையை ஒத்துக்காம ”இல்ல வேண்டாம்னா ஸ்டேண்ட் போட்டு நிறுத்திக்குடுங்க நா மெதுவா தள்ளிட்டு போய்க்கறே. அம்மா பின்னாடி புடிச்சுப்பாங்க.” மறுபடியும் ஸ்டேண்ட் தள்ளிவிட்டதும் சைக்கிள் தள்ளாடத்தொடங்கியது. அந்த அண்ணன் ”தள்ளும்மா நீ” என்று அவரே ஓட்டிட்டு வந்து வீட்டில சிமெண்ட எறக்கிவெச்சிட்டு நடந்து போனாரு. அன்னக்குப் பட்ட அவமானமோ என்னமோ இப்போ டூவீலர்ல இப்படி பறக்கறே.

    பத்தாவது முடிந்து டைப்பிங் க்ளாஸ் லோவர் முடிஞ்சு இப்போ ப்ரி டிகிரி வேற. அப்போதெல்லாம் பத்தாவது முடிச்சதும் காலேஜ். ப்ளஸ் ஒன் ப்ளஸ் டூ கிடையாது. காலேஜுக்கு பஸ்ல போயிடுவேன். கடைக்குப்போக, டைப்பிங் க்ளாஸ் போகத்தான் ஒரு சைக்கிள் கேட்டிட்டே இருந்தேன்.

    புலம்பி புலம்பி கேட்டு கேட்டு அழுது அழுதுகடைசியா அப்பா எனக்கு ஒரு சைக்கிள் வாங்கித்தந்தாரு. ப்ளஸ் டூ படிக்கும்போது நாலாவது அஞ்சாவது படிக்கற புள்ளக ஓட்டற கால்வண்டி. நா அப்பவே நல்ல ஒயரம் . என் ப்ரண்ஸலேயே நான் தா கொஞ்சம் ஒயரம் ஜாஸ்தி. அந்த கால்வண்டியே எனக்கு மாருதி கார் கிடச்சமாதிரி இருந்துச்சு. சைக்கிள் கிடச்சது மட்டும்தா என்னால பார்க்க முடிஞ்சுது. பல வருடமா போராடிக்கேட்டு, அழுது புலம்பி எனக்குனு தனியா கிடச்ச ஒரு வண்டி. அது சின்னதா? பெரிசா? என் உயரத்துக்கு அது எப்படி இருக்கும் நா ஓட்டிட்டுப்போனா சர்க்கஸில கோமாளி சின்ன சைக்கிள ஓட்டுவாரே அது மாதிரி இருக்குமா என்றெல்லாம் நினக்கத் தோணல. அதில பைய மாட்டிட்டு கடைக்குப் போயிட்டு போயிட்டு வற ரொம்பப் புடிக்கும். இப்போ இருக்கற புள்ளக எவ்வளவு மெச்சூடா இருக்காங்க. எனக்கெல்லா அப்போ  ஒண்ணுமே தெரியாது. பத்தாவது படிக்கும்போது எங்க கணக்கு வாத்தியாரு அதுக்குத்தானே திட்டிட்டே இருப்பாரு. ’கழுதகளாட்ட வளர்ந்திருக்கீங்க. புள்ளக பையனுக இப்படியா சேந்து ஆடறதுனு’ ஒட்டுமொத்த க்ளாஸையும் திட்டுவாரு.  நாங்க வகுப்பு பசங்க புள்ளக வேறுபாடு பாக்காம ஒண்ணா சாப்பிடுவோம். லஞ்ச் பிரேக்கில ஒண்ணா விளையாடுவோம். ஓண்ணா திட்டு வாங்குவோம். கால மாற்றத்தை நினைச்சா ஆச்சர்யமா இருக்கு. டி.வி ல வர ஒவ்வொரு நிகழ்ச்சிய பாத்தா ‘ஏழாவது படிக்கும்போதிருந்து லவ் பண்ணிட்டு இருக்கோம். எட்டாவது படிக்கும்போதிலிருந்து லவ் பண்ணிட்டு இருக்குமோனு. இப்போ வளர்ற புள்ளகள மீடியா எதஎதயோ யோசிக்க வைக்குது. நாங்க படிக்கும்போதெல்லா லவ்வுனா என்னானே தெரியாதே. திட்டு வாங்க மட்டும்தா தெரியும்.

    காலேஜ் முடிச்சு மத்தியானம் 3 மணிக்கு வந்திருவேன். வந்ததும் ஏதாவது வாங்க வேணுமானு கேட்டு பைய மாட்டிட்டு கடைக்குப் போயிடுவே. கடைக்கு சைக்கிள்ல போயிட்டு போயிட்டு வற ரொம்பப்பிடிக்கும். அதுவும் அம்மா ரெண்டு பொருள் சொன்னா ரெண்டையும் ஒண்ணா வாங்கிட்டு வரமாட்டேன். ஒண்ணு ஒண்ணாதா வாங்கிட்டு வருவே. ரெண்டு தடவ சைக்கிள்ல கடைக்குப் போறதுக்காக. சைக்கிள கொண்டு போயி கடைக்கு முன்னாடி ஸ்டேண்டு போட்டு  நிறுத்தும்போது  எல்லாரும் என்ன பாப்பாங்க. நான் நெனச்சே என்ன பெருமையா பாக்கறாங்கணு. ஆனா இப்போ நெனச்சுபாத்தா தெரியுது எப்படி நக்கலா பாத்திருப்பாங்கணு ஒரு வேள சைக்கிளிலிருந்து கீழே விழுந்தாலும் அடி பெரிசா பட்டறக்கூடாதுனு அப்பா யோசிச்சிருப்பாரோ. இல்ல அவரு பட்ஜெட்டிற்கு இதுதா ஒத்து வந்திருக்குமோ. இல்ல சின்னதா வாங்கி குடுத்தா வீட்டுக்குள்ளேயே வாசல்ல ஓட்டிட்டு இருப்பே வெளில போகமாட்டானு சிந்திச்சிருப்பாரோ. எப்படியோ எனக்கு அப்படியாவது ஒரு சைக்கிள் கிடச்சது. ஆனா என் பையனுக்கு அதுவும் கிடைக்க மாட்டேங்குது.

    அவங்க ரெண்டுபேரும் ரொம்பதூரம் போகற வர  வீடியோ எடுத்தபிறகு பின்னால இருந்து இரண்டு மூன்று போட்டோ எடுத்தேன். சரி. இனியும் ஒரே ஒரு போட்டோ அவங்க ரெண்டு போரோட முகமும் நன்கு தெரியற மாதிரி ஒரு போட்டா எடுத்தா நல்லா இருக்கும். ஹெல்மெட் போட்டிருக்கறதனால சரியா முகமும் தெரியமாட்டேங்குது. ஒரு வேள நமக்குத் தெரிஞ்சவங்களா இருப்பாங்களோ. பின்னாடி பாத்தா எங்கேயோ பாத்த மாதிரியும் இருக்கு. தினமும் பாக்கறதனால அப்படி தோன்றியிருக்கலாம்.  எதுக்கும் பக்கத்தில போயி பாக்கலாம். வண்டிய வேகமா ஸ்டாட் செய்தேன். அவங்க ரொம்ப தூரம் போயிட்டாங்க நானும் வேகமாக ஓட்டினேன் அவர்கள் அருகில் வந்ததும் மெதுவாக அவங்களோட சேரந்து பயணிப்பது போலவே ஓட்டினேன். அப்பா மகனின் உரையாடல் காதுகளில் விழுந்தது.

    ”அப்பா முடியலப்பா….. ப்ளீஸ் காலு வலிக்குது”

    அப்பா பையனோட முதுகு பக்கம் பிடித்து அப்படியே தூக்கறத பாத்தே. பையன் சீட்டிலிருந்து சற்று இருக்கையை தூக்கினான்.

    “நோஞ்சா எதுக்கும் கையாலாகாத உதவாக்கர ஏதாவது தெரிஞ்சக்கணும்னு தோணுதா.”

    ”இல்லப்பா  நேத்து  ஃபுட்பால்  க்ளாஸில  விழுந்துட்டேன். நைட்டு ஹிந்தி டியூஷன் முடிச்சு வர்ற  லேட்டானதால ஹோம்வர்க் பண்ணல. மிஸ் வெளியயே நிக்க வெச்சிட்டாங்க. காலு வலிக்குதப்பா.”

    ”மூணாவது  படிக்கும்போதே  ஒனக்கு இவ்வளவு சோம்பேறித்தனம். திங்கறயில்ல மூணு வேள வக்கனயா. வலிச்சா பரவால்ல ஓட்டு. வீட்டில இருக்கவே  விடக்கூடாது. உன்ன கொண்டு போயி ஏதாவது ஹாஸ்டல்ல தள்ளி விடணும். அப்பதா  நீ எல்லா உருப்படுவே. என்னோட  ஒரு  கனவையும் உங்கிட்ட நிறவேத்த முடியாது. ஃபுட்பாலுக்கு க்ளாஸ், ஹிந்தி டியூசன், பாட்டு க்ளாஸ், கராத்தே, சைக்கிள் எல்லாமே சேத்துவிடறே இல்ல அப்போ நீ இப்படிதா பிஹேவ் பண்ணுவ.. அழுகாம ஓட்டு.”

    என் வண்டியோட வேகத்தக் கூட்டினேன் கொஞ்ச தூரம் போனதும் எனக்குத்தெரியாம ஏதோ ஒரு நெருடல் ஓரமா வண்டிய நிறுத்திட்டு என் மொபைலைக் கையிலெடுத்தேன்.

    Share
  • A wonderful tree on Ramakrishna Mutt Road

    A wonderful tree on Ramakrishna Mutt Road

    Baskar Seshadri

    This is such a wonderful tree on Ramakrishna Mutt Road. It was so wide, big and Gigantic.

    With its Beautiful leaves and long thin branches the appearance of the sky was amazing.

    Creation of nature is always beautiful, all over. It’s not a planned design or a custom cultivated one. Its Natural and free.

    The creation does not know its beauty and it does not know what it is all.

    Scientific explanation or naming of it with Minute details is all knowledge.

    Beauty and Creation is Beyond all these and its Immeasurable and of Beauty aplenty. Sky is a beauty, tree is a beauty, Vastness is a Beauty and the eyes that enjoyed is a beauty.

    The Translation of such beauty to the mind is another. Life is always not understandable everywhere. It’s beyond the spectrum of the capability of the Human Mind.

    Get struck at the beauty of these awesome wonders and Lose Yourself. This is the best one can do.

    Share
  • மாபெரும் சிறுதானிய உணவுப் பெருவிழா

    மாபெரும் சிறுதானிய உணவுப் பெருவிழா

    தமிழக அரசின் சார்பில் சென்னை, தாம்பரத்தில் மாபெரும் சிறுதானிய உணவுப் பெருவிழா 11.03.2023 அன்று நடைபெற்றது. இதில் வரகு, கம்பு, குதிரைவாலி, சோளம், தினை, சாமை, கேழ்வரகு உள்ளிட்ட பல்வேறு சிறுதானியங்களைப் படக்காட்சிகளாக விளக்கினார்கள். இவற்றை உணவுப் பொருள்களாகவும் உடனுக்குடன் சமைத்து அளித்தார்கள். பற்பல கடைகளும் அரங்குகளும் நிகழ்வுக்கு வலுச் சேர்த்தன.

    2023ஆம் ஆண்டினைச் சர்வதேச சிறுதானிய ஆண்டாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை இந்த நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சீரிய விழா குறித்து ஒரு சிறப்புப் பார்வை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஊட்டச்சத்து நிறைந்த 60 சிறுதானிய உணவுகள்

    ஊட்டச்சத்து நிறைந்த 60 சிறுதானிய உணவுகள்

    தமிழக அரசின் சார்பில் சென்னை, தாம்பரத்தில் மாபெரும் சிறுதானிய உணவுத் திருவிழா 11.03.2023 அன்று நடைபெற்றது. இதில் அங்கன்வாடி சார்பில், ஊட்டச்சத்து நிறைந்த 60 சிறுதானிய உணவுகளைக் காட்சிக்கு வைத்திருந்தார்கள். சத்தும் சுவையும் நிறைந்த, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடிய, புதுமையான இந்த உணவுகளைச் செய்வது எப்படி? இதோ அவர்களே விளக்குகிறார்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பறையாட்டம் & ஒயிலாட்டம் | புத்தர் கலைக் குழு

    பறையாட்டம் & ஒயிலாட்டம் | புத்தர் கலைக் குழு

    தமிழக அரசின் சார்பில் சென்னை, தாம்பரத்தில் மாபெரும் சிறுதானிய உணவுத் திருவிழா 11.03.2023 அன்று நடைபெற்றது. இதில் புத்தர் கலைக் குழு வழங்கிய வீறுமிகு பறையாட்டம் இதோ.

     புத்தர் கலைக் குழு வழங்கிய ஒய்யார ஒயிலாட்டம் இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(442)

    குறளின் கதிர்களாய்…(442)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(442)

    இன்மையி னின்னாத தியாதெனி னின்மையி
    னின்மையே யின்னா தது.

    -திருக்குறள் – 1041 (நல்குரவு)

    புதுக் கவிதையில்…

    வாழ்வில் ஒருவனுக்கு
    வறுமையைப் போலத் துன்பம்தர
    வல்லது எதுவெனக்
    கேட்டால்,
    வறுமைபோல் துன்பமானது
    வறுமை
    ஒன்றே ஆகும்…!

    குறும்பாவில்…

    இல்லாமையை விடவும் கொடியது
    இவ்வுலகில் எதுவெனக் கேட்டால் இல்லாமையே
    எப்போதும் இல்லாமையினும் கொடிது…!

    மரபுக் கவிதையில்…

    இல்லை யென்னும் வறுமையதே
    என்றும் கொடிது வாழ்வினிலே,
    பொல்லா வறுமை இதனைப்போல்
    பொறுக்க வியலா இடர்தரவே
    வல்ல தெதென வினவிடிலோ
    வறுமை போலே வருத்திடவே
    எல்லா நாளும் கொடிதான
    இல்லா நிலையாம் வறுமையதே…!

    லிமரைக்கூ…

    வறுமையில் வாழ்தல் அரிதே,
    வேறிதுபோல் துன்பந் தருவ துண்டோவெனில்
    வறுமைதான் அதிலும் பெரிதே…!

    கிராமிய பாணியில்…

    கொடும கொடும பெருங்கொடும
    வாழ்க்கயில பெருங்கொடும,
    வறுமதான் பெருங்கொடும
    கொடும கொடும பெருங்கொடும..

    வாழ்க்கயில ஒருத்தனுக்கு
    வறுமயப்போல
    துன்பம் தருற கொடும
    எதுண்ணு கேட்டா
    வறுமயப் போல
    வாழ்க்கயில துன்பமானது
    வறுமயேதான்..

    தெரிஞ்சிக்கோ
    கொடும கொடும பெருங்கொடும
    வாழ்க்கயில பெருங்கொடும,
    வறுமதான் பெருங்கொடும
    கொடும கொடும பெருங்கொடும…!

    Share
  • வரமாய் வந்த தாவரம்!

    வரமாய் வந்த தாவரம்!

    -மேகலா இராமமூர்த்தி

    முன்னுரை:

    புவிக்கு வரமாய்க் கிடைத்த தாவரங்களுள் ஒன்று வாழை. ”என்ன…வாழை தாவரமா? அது மரமன்றோ!” எனும் வியப்பு பலருக்கும் எழலாம். வாழையின் தோற்றம் பார்ப்பதற்கு மரம்போலக் காட்சியளித்தாலும் அஃது மரமன்று; நெடிது வளரும் தாவரமே!

    மரமெனில் அதன் தண்டுப்பகுதி தடித்து உறுதியாய் இருக்கவேண்டும்; ஆனால் வாழையில் அப்படியில்லை; வெளியில் தண்டுபோல் நம் பார்வைக்குத் தெரிவது வாழையின் போலித்தண்டே (Pseudostem) ஆகும்; அதன் உண்மைத்தண்டு பூமிக்கடியில் காணப்படும்; அதனை வேர்க்கிழங்கு என்பர். வாழையில் இலையடி உறைகள் ஒன்றைச் சுற்றி ஒன்று உருவாகின்றன; வாழை வளர்கின்றபோது முதிர்ந்த இலை உறைகள், வளர்கின்ற இளம் இலைகளால் அதனுள்ளே தள்ளப்படுவதால் வழவழப்பான – வாளிப்பான பொய்த்தண்டு உருவாகின்றது.

    மூலிகை வகையைச் சேர்ந்த பூக்கும் தாவரம் (herbaceous flowering plant) என்றுதான் வாழையை அறிவியல் அடையாளப்படுத்துகின்றது. வாழையின் தாவரவியல் பெயர் மூசா அகுமினாடா (Musa acuminata) என்பதாகும். தென்கிழக்காசிய நாடுகளான மலேசியா, இந்தோசீனா ஆகியவற்றைத் தாயகமாகக் கொண்டது வாழை.

    வாழைக்குக் கதலி என்ற பெயருமுண்டு!

    ”உறுதியான கருங்காலிக் கட்டையைப் பிளக்கக்கூடிய கோடரி, வலுவற்ற கதலித்தண்டை (வாழைத்தண்டு) வெட்டும்போது சறுக்கும்” என்கிறார் பிற்கால ஔவையார் தம் தனிப்பாடலொன்றில். ஈண்டு வாழையைக் குறிக்கக் கதலி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.

    கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாலி
    இருங்கதலித் தண்டுக்கு நாணும்… (ஔவையார் தனிப்பாடல்)

    வாழையின் பயன்கள்:

    வாழையைப் பொறுத்தவரை அதில் மக்களுக்குப் பயன்படாத பகுதியே இல்லை எனலாம். அவை ஒவ்வொன்றின் பயன்பாடு குறித்தும் சிறிது ஆராய்வோம்.

    வாழையிலை:

    வாழையிலையை உண்கலமாக/பரிகலமாக (plate) பயன்படுத்தும் மரபு தமிழரிடையே நெடுங்காலமாய் இருந்துவருகின்றது என்பதற்கு இலக்கியச் சான்றுகள் உள.

    ”மான்தடி புழுக்கப்பட்ட புலால் நாற்றம் வீசும் பானையிலே புதிதாய் விளைந்த, பெரிய தோகையை உடைய, சிறுதினையை இட்டு அதிலே காட்டுப்பசுவின் பாலைப் பெய்து, சந்தன விறகால் அவித்து உருவாக்கப்பட்ட பொங்கற் சோற்றை வாழையின் அகன்ற இலையிலே படைத்து, கூதளமும் மலைமல்லிகையும் கவினோடு காட்சிதருகின்ற முன்றிலில் பலரோடு பகுத்துண்பவன் குதிரைமலைத் தலைவனாகிய பிட்டங்கொற்றன்” என்று அவனுடைய விருந்தோம்பலைப் புகழ்கின்றார் கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனார் எனும் புலவர்.

    … பரூஉக்குரற் சிறுதினை
    முந்துவிளை யாணர் நாள்புதிது உண்மார்
    மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்
    மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி
    வான்கேழ் இரும்புடை கழாஅது ஏற்றிச்
    சாந்த விறகின் உவித்த புன்கம்
    கூதளங் கவினிய குளவி முன்றில்
    செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்
    ஊராக் குதிரைக் கிழவ! (புறம்: 168)

    சிலப்பதிகாரக் காப்பியத்தில் மதுரைக்குக் கோவலனோடு சென்ற கண்ணகி ஆங்கே மாதரி என்ற இடைக்குல முதுமகள் அளித்த காய்கனிகளைக் கொண்டு கோவலனுக்கு அடிசில் ஆக்கினாள். அவ்வுணவைக் குமரி வாழையிலையில் படைத்து அவனை உண்பித்தாள் என்கின்றார் இளங்கோ.

    குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு
    அமுதம் உண்க அடிகள் ஈங்கென…(சிலம்பு: கொலைக்களக்காதை – 42-43)

    குலையீனாத வாழையைக் குமரி வாழை என்பர்.

    வாழைப்பூ:

    உலகில் எல்லாப் பூக்களும் மேல்நோக்கிப் பூக்கும்; வாழைப்பூ மட்டுமே கீழ்நோக்கிப் பூக்கும். வாழைப்பூவானது மூலரத்தம், பிரமேகம், வெள்ளைப்படுதல், பித்தம், கோழை (கபம்), வயிற்றுக் கடுப்பு, கொல்லும் நோயான காசம், ஆழியனல் எனும் கைகால் எரிச்சல் ஆகியவற்றை நீக்கி உடலை அழியாமல் நன்முறையில் வைத்திருக்கும் என்கின்றது ’அகத்தியர் குணவாகடம்’ எனும் நோய்கள் அவற்றுக்கான சிகிச்சைகள் ஆகியவற்றை விளக்கும் மருத்துவ நூல்.

    வாழைப்பூ மூலரத்தம் மாபிரமி வெட்டைபித்தம்
    கோழைவயிற் றுக்கடுப்பு கொல்காசம் – ஆழியனல்
    என்னஎரி கைகால் எரிவுந் தொலைத்துடலில்
    மன்னவளர்க் குந்தாது வை. (அகத்தியர் குணவாகடம்)

    வாழைப்பூவை நன்கு ஆய்ந்துவிட்டு அதன் உட்புறமுள்ள மென்மையான பகுதியைப் பயன்படுத்த வேண்டும். இப்பூவை வைத்துச் சூப்பு, பொரியல், வடை எனப் பலவும் செய்யலாம்.

    இலக்கியங்களில் வாழைப்பூவானது மகளிரின் கூம்புபோன்ற கூந்தல் முடிப்புக்கு உவமையாகக் காட்டப்பட்டுள்ளது.

    வாழை யீன்ற வையேந்து கொழுமுகை
    மெல்லியல் மகளிர் ஓதி யன்ன… (நற்:225)

    ’ஓதி’ என்பது பெண்களின் கூந்தலையும் ’ஓரி’ என்பது ஆண்களின் தலைமயிரையும் குறிக்கும் சொற்களாகப் பண்டைக்காலத்தில் வழக்கிலிருந்தன.

    வாழைத்தண்டு:

    வாழைத்தண்டு சாற்றுக்குச் சிறுநீரைப் பெருக்கும் பண்பு உண்டு. இச்சாற்றை நீர்ச்சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்திவரலாம். தேவையற்ற உடல்பருமனைக் குறைக்க வாழைத்தண்டு சாறு பயன்படும். சிறுநீரகக் கற்களைக் கரைக்கவும், சிறுநீரகப் பாதையில் ஏற்படும் தொற்றை நீக்கவும், நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைக்கவும் வாழைத்தண்டு சாறு உதவும்.

    வாழைக்காய்:

    வாழைக்காயில் மாவுச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, பி6, மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற உடலுக்குத் தேவையான சத்துக்கள் பலவும் உள்ளன.

    மலச்சிக்கல், வயிற்றுப்புண் போன்றவற்றை நீக்கும் குணம் வாழைக்காய்க்கு உண்டு. பொட்டாசியம் இருப்பதால் இதய நலத்துக்கு நல்லது. பெருங்குடல் மற்றும் சீரண உறுப்புக்களில் தங்கும் கழிவுகளையும் நச்சுக்களையும் வாழைக்காய் வெளியேற்றுகின்றது. எனவே, வயிற்றில் புற்றுநோய் ஏற்படாமல் இருக்க வாழைக்காய் உதவிபுரியும். இதில் உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் (Antioxidants) அதிகமிருப்பதால் உடலின் நோயெதிர்ப்பாற்றலைக் கூட்டவும், முதுமையைத் தள்ளிப்போடவும் பயன்படும்.

    கருவிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் வாழைக்காயில் இருப்பதால் கருவுற்றிருக்கும் பெண்கள் இதனை உணவில் எடுத்துக்கொள்ளலாம்.  வாழைக்காயின் குறையாகச் சுட்டப்படுவது அது வாயுத் தொல்லையை ஏற்படுத்தும் என்பது. வாழைக்காயைச் சமைக்கும்போது பெருங்காயம், இஞ்சி, மிளகு, சீரகம் போன்றவற்றைச் சேர்ப்பதன் வாயிலாக இக்குறையைத் தவிர்க்கலாம்.

    வாழைப்பழம்:

    வாழைக்காயில் இருக்கின்ற அனைத்துச் சத்துக்களும் வாழைப்பழத்திலும் உள்ளன. கூடுதலான நன்மை யாதெனின் வாழைக்காயைச் சமைத்துத்தான் சாப்பிட முடியும்; பச்சையாய்ச் சாப்பிட முடியாது. ஆனால், வாழைப்பழத்தை அப்படியே சாப்பிடலாம். உண்ட உணவைச் செரிக்கச் செய்யும் நற்பணியையும் வாழைப்பழம் பார்த்துக்கொள்ளும்.

    வாழைப்பழத்தை வைத்துப் பல்வேறு விதமான உணவு வகைகள் இந்நாளில் செய்யப்படுகின்றன. ஓட்ஸ் தானியத்தோடு (oatmeal) வாழைப்பழத் துண்டுகளைச் சேர்த்துச் சாப்பிடும் வழக்கம் மேனாட்டார்க்கு உண்டு. மென்மையாக்கிய வாழைப்பழ பானம் (Banana Smoothie) செய்து சாப்பிடுவது இப்போதைய நயப்புப் போக்கு (fashion). அடுமனைகளில் உரொட்டி தயாரிப்பிலும் இப்பழத்தின் பங்களிப்பைக் காணலாம்.

    வாழைப்பழத்தில் செவ்வாழை, மொந்தன், பேயன், கற்பூரம், பூவன், மலை வாழைப்பழம், இரசுத்தாளி, ஏலரிசி, நேந்திரம்பழம், பச்சை வாழைப்பழம், மட்டி வாழைப்பழம் எனப் பலவகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் தனிச்சுவையோடு மக்களைக் கவர்பவை.

    வாழைப்பழங்கள் மனிதர்களுக்கு மட்டுமல்லாது குரங்குகளுக்கும் பிடித்தமானவை. ”பெரிய மலையிடத்து உண்டாகிய வாழையின் கொழுத்த அழகிய கனியை மந்தி (பெண் குரங்கு) கவரும்” என்கிற செய்தியை நற்றிணை பதிவு செய்கின்றது.

    …பெருங்கல் வாழைக்
    கொழுமுதல் ஆய்கனி மந்தி கவரும்… (நற்: 251)

    வாழைநார்:

    வாழைநார் சணல்போலப் பயன்படுத்தப்படுகின்றது. வாழைநாரிலிருந்து சாக்குப் பைகள், அலங்காரப் பைகள், மிதியடிகள், தரைவிரிப்புகள் எனப் பல்வேறு பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. பூத்தொடுக்க இன்றும் அதிக அளவில் பயன்படுத்தப்படுவது வாழைநாரே. தரத்தில் சிறந்த காகிதம் தயாரிக்கவும் வாழைநார் பயன்படுத்தப்படுகின்றது. இக்காலத்தில் வாழைநாரில் சேலைகள்கூடத் தயாரிக்கின்றனர் என்பது வியப்பளிக்கும் செய்தியாகும்.

    வாழைத் தார் என்பது சரியா?

    வாழைக்காயின்/பழத்தின் குலையைத் ’தார்’ என்றழைக்கும் வழக்கம் நம்மிடம் இருக்கின்றது. அது சரியா என்றுகேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் தார் என்பது பூமாலை, பூங்கொத்து, தார்க்குச்சு, கொடிப்படை போன்றவற்றைக் குறிக்கும் சொல்லாகும்.

    வாழை, கமுகு (பாக்கு) ஆகியவற்றின் குலையைக் குறிக்க நாம் ’தாறு’ என்ற சொல்லையே பயன்படுத்தவேண்டும். தறுதல் என்றால் கூட்டாகச் சேர்ந்திருத்தல் என்று பொருள். வாழை, கமுகு போன்றவற்றின் காய்கள் கூட்டாக இணைந்திருத்தலால் வாழைத் தாறு, கமுகந் தாறு எனப் பெயர்பெற்றன.

    தாறு நாறுவ வாழைகள் தாழையின்
    சோறு நாறுவ தூம்புகள் மாங்கனி
    நாறு நாறுவ நாறு வளர்க்குறும்
    சேறு நாறுவ செங்கழுநீர் அரோ. (கம்ப: 4643)

    என்ற கம்பநாடனின் பாடல் இதற்குச் சான்றாய் அமைதல் காண்க.

    வாழையடி வாழை:

    வாழையானது அதன் நிழலிலேயே கன்றுகளை ஈனக்கூடியது; அதனால்தான் ’வாழையடி வாழை’ எனும் மரபுத்தொடர் ஏற்பட்டது. தம் பரம்பரையும் வாழைபோல் தழைக்க வேண்டும் எனும் கருத்திலேயே திருமணங்கள் மற்றும் பிற மங்கல நிகழ்வுகளில் பூவும் குலையுமாக உள்ள வாழைமரத்தைக் கட்டும் வழக்கம் நம் மக்களிடையே ஏற்பட்டது.

    இராமலிங்க வள்ளலாரும் இத்தொடரைத் தம் திருவருட்பாவில் பயன்படுத்துகின்றார். தம்மைப் பற்றி இறைவனிடம் குறிப்பிடும்போது,

    வாழையடி வாழையென வந்ததிருக் கூட்ட
              மரபினில்யான் ஒருவனன்றோ வகையறியேன் இந்த
     ஏழைபடும் பாடுனக்குத் திருவுளச்சம் மதமோ
              இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ… (திருவருட்பா – 3803)  என்கிறார்.

    ”பெருமானே! வாழையடி வாழைபோல உன்னுடைய அடியார்களின் திருக்கூட்டத் தொகுதியுள் யானும் ஒருவன் ஆவேனன்றோ? அவர் வகையுள் யான் எவ்வகையைச் சேர்ந்தவனோ அறிகிலேன்; ஏழையாகிய நான் படும் துன்பம் உன்னுடைய அருள்நிறைந்த திருவுள்ளத்திற்கு இசைந்தது தானோ? இது உனக்குத் தக்கதோ? முறையோ? இதனை நீ பார்த்துக்கொண்டிருப்பது தருமமோ?” என்று கேட்கிறார்.

    கனியீந்த வாழை மடியவும், அதன் அடியில் கிளைத்துத் தோன்றுகின்ற வாழை வளர்ந்து கனி நல்குவதும், அதன்பின் அதனடியில் கன்று தோன்றி முன்னையது போலக் கனி தருவதும் இயல்பாகும். அதுபோல, அடியார்களும் வழிவழியாகத் தோன்றுவது மரபு. அவ்வடியார்களைப் போல யானும் தோன்றியுள்ளேன் என்பதனைக் குறிக்க “வாழையடி வாழை என வந்த திருக்கூட்ட மரபினில் யான் ஒருவன் அன்றோ” என உரைக்கின்றார் வள்ளலார்.

    ஞானமும் வாழைக்கனியும்:

    திருமூலர் தம் நூலான திருமந்திரத்தில் இடம்பெற்றுள்ள ஒன்பதாம் தந்திரத்தில், மறைபொருளுடைய (சூனிய சம்பாடணை) பாடல்களைப் படைத்திருக்கின்றார். அவற்றுள் ஒன்றில்,

    வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது
    புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது
    தொழுதுகொண் டோடினார் தோட்டக் குடிகள்
    முழுதும் பழுத்தது வாழைக் கனியே. (திருமந்திரம்: 2829) என்கிறார்.

    இறையருளால் வழுதலங் கத்தரிக்காயை விதைத்தேன். அஃதாவது அகத்தவமாகிய யோகப்பயிற்சியினை மேற்கொண்டேன். அவ்வித்தின் விளைவாக வைராக்கியம் வளர்ந்தது. பற்றறுக்கும் இவ் வைராக்கியத்தைப் பாகல் என்று ஓதினர். தத்துவங்களாகிய மெய்யினை ஆராயத் தொடங்கினேன். ஈண்டுப் புழுதியைத் தோண்டினேன் என்பது தத்துவ ஆராய்ச்சி செய்தேன் என்பதாம். இவ் வாராய்வின் பயனாகப் பூசணியாகிய சிவம் பூத்தது. தோட்டக் குடிகளாகிய ஐவரும் (ஐம்புலன்கள்) அதனைக் கண்டு தொழுதுகொண்டோடினர். திருவடிப் பேறாகிய வாழைக்கனி முழுதும் பழுத்துப் பயன்நல்கியது (ஆன்ம லாபம்) என்பது இப்பாடலுக்கு வழங்கப்படும் நுட்பமான உரையாகும்.

    ஆக, ஆன்மாவுக்குக் கிடைக்கும் நற்பலனைக் குறிக்க ஈண்டு வாழைக்கனி குறியீடாய்ப் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கின்றோம்.

    முடிவுரை:

    தன் உச்சிமுதல் அடிவரை பயன் நல்கக்கூடிய அற்புதத் தாவரம் வாழை என்பதைச் சான்றுகளோடு கண்டோம். வாழைக்கனியானது முக்கனிகளுள் ஒன்று எனும் சிறப்பினைப் பெற்றது; அத்தோடு ஏழைகளும் வாங்கும் மலிவு விலையில் அது கிடைப்பதால் ’ஏழைகளின் கனி’ எனும் பெருமைக்குரியதாயும் திகழ்கின்றது. உலகிலேயே இந்தியாதான் அதிக அளவில் வாழையை உற்பத்தி செய்கின்றது என்பது நாம் பெருமைகொள்ளத்தக்க செய்தியாகும்.

    மருத்துவப் பயன்கள் மிகுந்ததாகவும் உடல்நலத்திற்கு உகந்த சத்துக்கள் செறிந்ததாகவும் திகழும் மூலிகைத் தாவரமான வாழையை நாம் தக்கமுறையில் நம் உணவில் பயன்படுத்தினால் நோயின்றி வாழலாம்.

    *****

    கட்டுரைக்கு உதவியவை:

    https://agritech.tnau.ac.in/ta/expert_system/banana/botany.html

    https://www.healthline.com/health/food-nutrition/plantain-nutrition-benefits

    https://en.wikipedia.org/wiki/Banana

    https://www.bbc.com/tamil/india-55007425

    Share
  • ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I இரண்டாம் அங்கம் I பாகம் – 8

    ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I இரண்டாம் அங்கம் I பாகம் – 8

    ஆங்கில மூலம்: ஜார்ஜ் பெர்னாட் ஷா
    தமிழாக்கத் தழுவல்: சி. ஜெயபாரதன், கனடா


    Share
  • மலாய் குல்பி ஐஸ்கிரீம்

    மலாய் குல்பி ஐஸ்கிரீம்

    மலாய் குல்பி ஐஸ்கிரீம், சென்னையில் புதிதாக அறிமுகம் ஆகியிருக்கிறது. வெள்ளிக்கிழமை தோறும் நடக்கும் பல்லாவரம் சந்தையில் இந்தக் கடை இருக்கிறது. இந்தப் பனிக்கூழ், வெவ்வேறு சுவைகளில் கிடைக்கிறது. உருகும் ஐஸ்கிரீமையே நூடுல்ஸ் மாதிரி வழங்க முடியும் என்பது ஒரு புதுமை. தகிக்கும் கோடையைத் தணிக்கும் இதன் விலை ரூ.50.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பொழிச்சலூர் மயானக் கொள்ளை

    பொழிச்சலூர் மயானக் கொள்ளை

    சென்னை, பொழிச்சலூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சித்தர் பீடம் சார்பில், மயான சூறை கொள்ளை பிரம்மோற்சவமும் மாசிப் பெருவிழாவும் விமரிசையாக நடைபெற்றன. சகல பரிவாரங்களுடன் ஜகஜோதியாய் அம்மன் வீதியுலா நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து இரவு 10 மணிக்கு மேல் மயானக் கொள்ளை நடைபெற்றது. எழுச்சி மிகுந்த இந்தத் திருவிழாவிலிருந்து சில காட்சிகள் இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அதிவேகத் தப்பு இசை

    அதிவேகத் தப்பு இசை

    சென்னை, பொழிச்சலூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சித்தர் பீடம் சார்பில், மயான சூறை கொள்ளை பிரம்மோற்சவமும் மாசிப் பெருவிழாவும் விமரிசையாக நடைபெற்றன. இதில் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்த, அதிவேகத் தப்பு இசையைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share