-மேகலா இராமமூர்த்தி

முன்னுரை:

புவிக்கு வரமாய்க் கிடைத்த தாவரங்களுள் ஒன்று வாழை. ”என்ன…வாழை தாவரமா? அது மரமன்றோ!” எனும் வியப்பு பலருக்கும் எழலாம். வாழையின் தோற்றம் பார்ப்பதற்கு மரம்போலக் காட்சியளித்தாலும் அஃது மரமன்று; நெடிது வளரும் தாவரமே!

மரமெனில் அதன் தண்டுப்பகுதி தடித்து உறுதியாய் இருக்கவேண்டும்; ஆனால் வாழையில் அப்படியில்லை; வெளியில் தண்டுபோல் நம் பார்வைக்குத் தெரிவது வாழையின் போலித்தண்டே (Pseudostem) ஆகும்; அதன் உண்மைத்தண்டு பூமிக்கடியில் காணப்படும்; அதனை வேர்க்கிழங்கு என்பர். வாழையில் இலையடி உறைகள் ஒன்றைச் சுற்றி ஒன்று உருவாகின்றன; வாழை வளர்கின்றபோது முதிர்ந்த இலை உறைகள், வளர்கின்ற இளம் இலைகளால் அதனுள்ளே தள்ளப்படுவதால் வழவழப்பான – வாளிப்பான பொய்த்தண்டு உருவாகின்றது.

மூலிகை வகையைச் சேர்ந்த பூக்கும் தாவரம் (herbaceous flowering plant) என்றுதான் வாழையை அறிவியல் அடையாளப்படுத்துகின்றது. வாழையின் தாவரவியல் பெயர் மூசா அகுமினாடா (Musa acuminata) என்பதாகும். தென்கிழக்காசிய நாடுகளான மலேசியா, இந்தோசீனா ஆகியவற்றைத் தாயகமாகக் கொண்டது வாழை.

வாழைக்குக் கதலி என்ற பெயருமுண்டு!

”உறுதியான கருங்காலிக் கட்டையைப் பிளக்கக்கூடிய கோடரி, வலுவற்ற கதலித்தண்டை (வாழைத்தண்டு) வெட்டும்போது சறுக்கும்” என்கிறார் பிற்கால ஔவையார் தம் தனிப்பாடலொன்றில். ஈண்டு வாழையைக் குறிக்கக் கதலி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.

கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாலி
இருங்கதலித் தண்டுக்கு நாணும்… (ஔவையார் தனிப்பாடல்)

வாழையின் பயன்கள்:

வாழையைப் பொறுத்தவரை அதில் மக்களுக்குப் பயன்படாத பகுதியே இல்லை எனலாம். அவை ஒவ்வொன்றின் பயன்பாடு குறித்தும் சிறிது ஆராய்வோம்.

வாழையிலை:

வாழையிலையை உண்கலமாக/பரிகலமாக (plate) பயன்படுத்தும் மரபு தமிழரிடையே நெடுங்காலமாய் இருந்துவருகின்றது என்பதற்கு இலக்கியச் சான்றுகள் உள.

”மான்தடி புழுக்கப்பட்ட புலால் நாற்றம் வீசும் பானையிலே புதிதாய் விளைந்த, பெரிய தோகையை உடைய, சிறுதினையை இட்டு அதிலே காட்டுப்பசுவின் பாலைப் பெய்து, சந்தன விறகால் அவித்து உருவாக்கப்பட்ட பொங்கற் சோற்றை வாழையின் அகன்ற இலையிலே படைத்து, கூதளமும் மலைமல்லிகையும் கவினோடு காட்சிதருகின்ற முன்றிலில் பலரோடு பகுத்துண்பவன் குதிரைமலைத் தலைவனாகிய பிட்டங்கொற்றன்” என்று அவனுடைய விருந்தோம்பலைப் புகழ்கின்றார் கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனார் எனும் புலவர்.

… பரூஉக்குரற் சிறுதினை
முந்துவிளை யாணர் நாள்புதிது உண்மார்
மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்
மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி
வான்கேழ் இரும்புடை கழாஅது ஏற்றிச்
சாந்த விறகின் உவித்த புன்கம்
கூதளங் கவினிய குளவி முன்றில்
செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்
ஊராக் குதிரைக் கிழவ! (புறம்: 168)

சிலப்பதிகாரக் காப்பியத்தில் மதுரைக்குக் கோவலனோடு சென்ற கண்ணகி ஆங்கே மாதரி என்ற இடைக்குல முதுமகள் அளித்த காய்கனிகளைக் கொண்டு கோவலனுக்கு அடிசில் ஆக்கினாள். அவ்வுணவைக் குமரி வாழையிலையில் படைத்து அவனை உண்பித்தாள் என்கின்றார் இளங்கோ.

குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு
அமுதம் உண்க அடிகள் ஈங்கென…(சிலம்பு: கொலைக்களக்காதை – 42-43)

குலையீனாத வாழையைக் குமரி வாழை என்பர்.

வாழைப்பூ:

உலகில் எல்லாப் பூக்களும் மேல்நோக்கிப் பூக்கும்; வாழைப்பூ மட்டுமே கீழ்நோக்கிப் பூக்கும். வாழைப்பூவானது மூலரத்தம், பிரமேகம், வெள்ளைப்படுதல், பித்தம், கோழை (கபம்), வயிற்றுக் கடுப்பு, கொல்லும் நோயான காசம், ஆழியனல் எனும் கைகால் எரிச்சல் ஆகியவற்றை நீக்கி உடலை அழியாமல் நன்முறையில் வைத்திருக்கும் என்கின்றது ’அகத்தியர் குணவாகடம்’ எனும் நோய்கள் அவற்றுக்கான சிகிச்சைகள் ஆகியவற்றை விளக்கும் மருத்துவ நூல்.

வாழைப்பூ மூலரத்தம் மாபிரமி வெட்டைபித்தம்
கோழைவயிற் றுக்கடுப்பு கொல்காசம் – ஆழியனல்
என்னஎரி கைகால் எரிவுந் தொலைத்துடலில்
மன்னவளர்க் குந்தாது வை. (அகத்தியர் குணவாகடம்)

வாழைப்பூவை நன்கு ஆய்ந்துவிட்டு அதன் உட்புறமுள்ள மென்மையான பகுதியைப் பயன்படுத்த வேண்டும். இப்பூவை வைத்துச் சூப்பு, பொரியல், வடை எனப் பலவும் செய்யலாம்.

இலக்கியங்களில் வாழைப்பூவானது மகளிரின் கூம்புபோன்ற கூந்தல் முடிப்புக்கு உவமையாகக் காட்டப்பட்டுள்ளது.

வாழை யீன்ற வையேந்து கொழுமுகை
மெல்லியல் மகளிர் ஓதி யன்ன… (நற்:225)

’ஓதி’ என்பது பெண்களின் கூந்தலையும் ’ஓரி’ என்பது ஆண்களின் தலைமயிரையும் குறிக்கும் சொற்களாகப் பண்டைக்காலத்தில் வழக்கிலிருந்தன.

வாழைத்தண்டு:

வாழைத்தண்டு சாற்றுக்குச் சிறுநீரைப் பெருக்கும் பண்பு உண்டு. இச்சாற்றை நீர்ச்சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்திவரலாம். தேவையற்ற உடல்பருமனைக் குறைக்க வாழைத்தண்டு சாறு பயன்படும். சிறுநீரகக் கற்களைக் கரைக்கவும், சிறுநீரகப் பாதையில் ஏற்படும் தொற்றை நீக்கவும், நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைக்கவும் வாழைத்தண்டு சாறு உதவும்.

வாழைக்காய்:

வாழைக்காயில் மாவுச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, பி6, மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற உடலுக்குத் தேவையான சத்துக்கள் பலவும் உள்ளன.

மலச்சிக்கல், வயிற்றுப்புண் போன்றவற்றை நீக்கும் குணம் வாழைக்காய்க்கு உண்டு. பொட்டாசியம் இருப்பதால் இதய நலத்துக்கு நல்லது. பெருங்குடல் மற்றும் சீரண உறுப்புக்களில் தங்கும் கழிவுகளையும் நச்சுக்களையும் வாழைக்காய் வெளியேற்றுகின்றது. எனவே, வயிற்றில் புற்றுநோய் ஏற்படாமல் இருக்க வாழைக்காய் உதவிபுரியும். இதில் உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் (Antioxidants) அதிகமிருப்பதால் உடலின் நோயெதிர்ப்பாற்றலைக் கூட்டவும், முதுமையைத் தள்ளிப்போடவும் பயன்படும்.

கருவிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் வாழைக்காயில் இருப்பதால் கருவுற்றிருக்கும் பெண்கள் இதனை உணவில் எடுத்துக்கொள்ளலாம்.  வாழைக்காயின் குறையாகச் சுட்டப்படுவது அது வாயுத் தொல்லையை ஏற்படுத்தும் என்பது. வாழைக்காயைச் சமைக்கும்போது பெருங்காயம், இஞ்சி, மிளகு, சீரகம் போன்றவற்றைச் சேர்ப்பதன் வாயிலாக இக்குறையைத் தவிர்க்கலாம்.

வாழைப்பழம்:

வாழைக்காயில் இருக்கின்ற அனைத்துச் சத்துக்களும் வாழைப்பழத்திலும் உள்ளன. கூடுதலான நன்மை யாதெனின் வாழைக்காயைச் சமைத்துத்தான் சாப்பிட முடியும்; பச்சையாய்ச் சாப்பிட முடியாது. ஆனால், வாழைப்பழத்தை அப்படியே சாப்பிடலாம். உண்ட உணவைச் செரிக்கச் செய்யும் நற்பணியையும் வாழைப்பழம் பார்த்துக்கொள்ளும்.

வாழைப்பழத்தை வைத்துப் பல்வேறு விதமான உணவு வகைகள் இந்நாளில் செய்யப்படுகின்றன. ஓட்ஸ் தானியத்தோடு (oatmeal) வாழைப்பழத் துண்டுகளைச் சேர்த்துச் சாப்பிடும் வழக்கம் மேனாட்டார்க்கு உண்டு. மென்மையாக்கிய வாழைப்பழ பானம் (Banana Smoothie) செய்து சாப்பிடுவது இப்போதைய நயப்புப் போக்கு (fashion). அடுமனைகளில் உரொட்டி தயாரிப்பிலும் இப்பழத்தின் பங்களிப்பைக் காணலாம்.

வாழைப்பழத்தில் செவ்வாழை, மொந்தன், பேயன், கற்பூரம், பூவன், மலை வாழைப்பழம், இரசுத்தாளி, ஏலரிசி, நேந்திரம்பழம், பச்சை வாழைப்பழம், மட்டி வாழைப்பழம் எனப் பலவகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் தனிச்சுவையோடு மக்களைக் கவர்பவை.

வாழைப்பழங்கள் மனிதர்களுக்கு மட்டுமல்லாது குரங்குகளுக்கும் பிடித்தமானவை. ”பெரிய மலையிடத்து உண்டாகிய வாழையின் கொழுத்த அழகிய கனியை மந்தி (பெண் குரங்கு) கவரும்” என்கிற செய்தியை நற்றிணை பதிவு செய்கின்றது.

…பெருங்கல் வாழைக்
கொழுமுதல் ஆய்கனி மந்தி கவரும்… (நற்: 251)

வாழைநார்:

வாழைநார் சணல்போலப் பயன்படுத்தப்படுகின்றது. வாழைநாரிலிருந்து சாக்குப் பைகள், அலங்காரப் பைகள், மிதியடிகள், தரைவிரிப்புகள் எனப் பல்வேறு பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. பூத்தொடுக்க இன்றும் அதிக அளவில் பயன்படுத்தப்படுவது வாழைநாரே. தரத்தில் சிறந்த காகிதம் தயாரிக்கவும் வாழைநார் பயன்படுத்தப்படுகின்றது. இக்காலத்தில் வாழைநாரில் சேலைகள்கூடத் தயாரிக்கின்றனர் என்பது வியப்பளிக்கும் செய்தியாகும்.

வாழைத் தார் என்பது சரியா?

வாழைக்காயின்/பழத்தின் குலையைத் ’தார்’ என்றழைக்கும் வழக்கம் நம்மிடம் இருக்கின்றது. அது சரியா என்றுகேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் தார் என்பது பூமாலை, பூங்கொத்து, தார்க்குச்சு, கொடிப்படை போன்றவற்றைக் குறிக்கும் சொல்லாகும்.

வாழை, கமுகு (பாக்கு) ஆகியவற்றின் குலையைக் குறிக்க நாம் ’தாறு’ என்ற சொல்லையே பயன்படுத்தவேண்டும். தறுதல் என்றால் கூட்டாகச் சேர்ந்திருத்தல் என்று பொருள். வாழை, கமுகு போன்றவற்றின் காய்கள் கூட்டாக இணைந்திருத்தலால் வாழைத் தாறு, கமுகந் தாறு எனப் பெயர்பெற்றன.

தாறு நாறுவ வாழைகள் தாழையின்
சோறு நாறுவ தூம்புகள் மாங்கனி
நாறு நாறுவ நாறு வளர்க்குறும்
சேறு நாறுவ செங்கழுநீர் அரோ. (கம்ப: 4643)

என்ற கம்பநாடனின் பாடல் இதற்குச் சான்றாய் அமைதல் காண்க.

வாழையடி வாழை:

வாழையானது அதன் நிழலிலேயே கன்றுகளை ஈனக்கூடியது; அதனால்தான் ’வாழையடி வாழை’ எனும் மரபுத்தொடர் ஏற்பட்டது. தம் பரம்பரையும் வாழைபோல் தழைக்க வேண்டும் எனும் கருத்திலேயே திருமணங்கள் மற்றும் பிற மங்கல நிகழ்வுகளில் பூவும் குலையுமாக உள்ள வாழைமரத்தைக் கட்டும் வழக்கம் நம் மக்களிடையே ஏற்பட்டது.

இராமலிங்க வள்ளலாரும் இத்தொடரைத் தம் திருவருட்பாவில் பயன்படுத்துகின்றார். தம்மைப் பற்றி இறைவனிடம் குறிப்பிடும்போது,

வாழையடி வாழையென வந்ததிருக் கூட்ட
          மரபினில்யான் ஒருவனன்றோ வகையறியேன் இந்த
 ஏழைபடும் பாடுனக்குத் திருவுளச்சம் மதமோ
          இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ… (திருவருட்பா – 3803)  என்கிறார்.

”பெருமானே! வாழையடி வாழைபோல உன்னுடைய அடியார்களின் திருக்கூட்டத் தொகுதியுள் யானும் ஒருவன் ஆவேனன்றோ? அவர் வகையுள் யான் எவ்வகையைச் சேர்ந்தவனோ அறிகிலேன்; ஏழையாகிய நான் படும் துன்பம் உன்னுடைய அருள்நிறைந்த திருவுள்ளத்திற்கு இசைந்தது தானோ? இது உனக்குத் தக்கதோ? முறையோ? இதனை நீ பார்த்துக்கொண்டிருப்பது தருமமோ?” என்று கேட்கிறார்.

கனியீந்த வாழை மடியவும், அதன் அடியில் கிளைத்துத் தோன்றுகின்ற வாழை வளர்ந்து கனி நல்குவதும், அதன்பின் அதனடியில் கன்று தோன்றி முன்னையது போலக் கனி தருவதும் இயல்பாகும். அதுபோல, அடியார்களும் வழிவழியாகத் தோன்றுவது மரபு. அவ்வடியார்களைப் போல யானும் தோன்றியுள்ளேன் என்பதனைக் குறிக்க “வாழையடி வாழை என வந்த திருக்கூட்ட மரபினில் யான் ஒருவன் அன்றோ” என உரைக்கின்றார் வள்ளலார்.

ஞானமும் வாழைக்கனியும்:

திருமூலர் தம் நூலான திருமந்திரத்தில் இடம்பெற்றுள்ள ஒன்பதாம் தந்திரத்தில், மறைபொருளுடைய (சூனிய சம்பாடணை) பாடல்களைப் படைத்திருக்கின்றார். அவற்றுள் ஒன்றில்,

வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது
தொழுதுகொண் டோடினார் தோட்டக் குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே. (திருமந்திரம்: 2829) என்கிறார்.

இறையருளால் வழுதலங் கத்தரிக்காயை விதைத்தேன். அஃதாவது அகத்தவமாகிய யோகப்பயிற்சியினை மேற்கொண்டேன். அவ்வித்தின் விளைவாக வைராக்கியம் வளர்ந்தது. பற்றறுக்கும் இவ் வைராக்கியத்தைப் பாகல் என்று ஓதினர். தத்துவங்களாகிய மெய்யினை ஆராயத் தொடங்கினேன். ஈண்டுப் புழுதியைத் தோண்டினேன் என்பது தத்துவ ஆராய்ச்சி செய்தேன் என்பதாம். இவ் வாராய்வின் பயனாகப் பூசணியாகிய சிவம் பூத்தது. தோட்டக் குடிகளாகிய ஐவரும் (ஐம்புலன்கள்) அதனைக் கண்டு தொழுதுகொண்டோடினர். திருவடிப் பேறாகிய வாழைக்கனி முழுதும் பழுத்துப் பயன்நல்கியது (ஆன்ம லாபம்) என்பது இப்பாடலுக்கு வழங்கப்படும் நுட்பமான உரையாகும்.

ஆக, ஆன்மாவுக்குக் கிடைக்கும் நற்பலனைக் குறிக்க ஈண்டு வாழைக்கனி குறியீடாய்ப் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கின்றோம்.

முடிவுரை:

தன் உச்சிமுதல் அடிவரை பயன் நல்கக்கூடிய அற்புதத் தாவரம் வாழை என்பதைச் சான்றுகளோடு கண்டோம். வாழைக்கனியானது முக்கனிகளுள் ஒன்று எனும் சிறப்பினைப் பெற்றது; அத்தோடு ஏழைகளும் வாங்கும் மலிவு விலையில் அது கிடைப்பதால் ’ஏழைகளின் கனி’ எனும் பெருமைக்குரியதாயும் திகழ்கின்றது. உலகிலேயே இந்தியாதான் அதிக அளவில் வாழையை உற்பத்தி செய்கின்றது என்பது நாம் பெருமைகொள்ளத்தக்க செய்தியாகும்.

மருத்துவப் பயன்கள் மிகுந்ததாகவும் உடல்நலத்திற்கு உகந்த சத்துக்கள் செறிந்ததாகவும் திகழும் மூலிகைத் தாவரமான வாழையை நாம் தக்கமுறையில் நம் உணவில் பயன்படுத்தினால் நோயின்றி வாழலாம்.

*****

கட்டுரைக்கு உதவியவை:

https://agritech.tnau.ac.in/ta/expert_system/banana/botany.html

https://www.healthline.com/health/food-nutrition/plantain-nutrition-benefits

https://en.wikipedia.org/wiki/Banana

https://www.bbc.com/tamil/india-55007425

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *