குறளின் கதிர்களாய்…(442)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(442)
இன்மையி னின்னாத தியாதெனி னின்மையி
னின்மையே யின்னா தது.
-திருக்குறள் – 1041 (நல்குரவு)
புதுக் கவிதையில்…
வாழ்வில் ஒருவனுக்கு
வறுமையைப் போலத் துன்பம்தர
வல்லது எதுவெனக்
கேட்டால்,
வறுமைபோல் துன்பமானது
வறுமை
ஒன்றே ஆகும்…!
குறும்பாவில்…
இல்லாமையை விடவும் கொடியது
இவ்வுலகில் எதுவெனக் கேட்டால் இல்லாமையே
எப்போதும் இல்லாமையினும் கொடிது…!
மரபுக் கவிதையில்…
இல்லை யென்னும் வறுமையதே
என்றும் கொடிது வாழ்வினிலே,
பொல்லா வறுமை இதனைப்போல்
பொறுக்க வியலா இடர்தரவே
வல்ல தெதென வினவிடிலோ
வறுமை போலே வருத்திடவே
எல்லா நாளும் கொடிதான
இல்லா நிலையாம் வறுமையதே…!
லிமரைக்கூ…
வறுமையில் வாழ்தல் அரிதே,
வேறிதுபோல் துன்பந் தருவ துண்டோவெனில்
வறுமைதான் அதிலும் பெரிதே…!
கிராமிய பாணியில்…
கொடும கொடும பெருங்கொடும
வாழ்க்கயில பெருங்கொடும,
வறுமதான் பெருங்கொடும
கொடும கொடும பெருங்கொடும..
வாழ்க்கயில ஒருத்தனுக்கு
வறுமயப்போல
துன்பம் தருற கொடும
எதுண்ணு கேட்டா
வறுமயப் போல
வாழ்க்கயில துன்பமானது
வறுமயேதான்..
தெரிஞ்சிக்கோ
கொடும கொடும பெருங்கொடும
வாழ்க்கயில பெருங்கொடும,
வறுமதான் பெருங்கொடும
கொடும கொடும பெருங்கொடும…!