முனைவர் நா. தீபா சரவணன்
உதவிப்பேராசிரியர்
குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

“ஹலோ………     ஹலோ………….”

“ஹலோ………………….. சொல்லு காயத்ரி”

“ஏய், இந்து நேரமாச்சு. இன்னும் வரலயா. நீ”

“வந்திட்டு இருக்கேன். நீ கிளம்பிக்கோ.”

“ஏன் லேட்டாகுமா. நா  எப்பவும் போல வடகோவ டர்னிங்க்ல தா நிக்கறே. ஓண்ணாத்தானே போவோம்.  வா வெயிட் பண்றேன்.”

”இல்ல வேண்டாம். நீ போ. நா இப்போதா அக்ரி காலேஜ் வர்றே. கொஞ்சம் லேட் ஆகும். எனக்கு First ஹவர் Free தா இந்த மாச பர்மிஷன் இருக்கு லேட் ஆனா பர்மிஷன் போட்டுக்கறேன்.”

“ஏ வண்டி ஏதும் பஞ்சர் ஆயிடுச்சா?”

“இல்ல காயத்ரி. ஒரு ஸ்வாரஸ்யமான சம்பவம். ஒரு வாரமா நெனச்சிட்டு இருந்தேன். இன்னக்குதா நடக்குது. நா வந்து சொல்லறே. நீ கிளம்பு. இன்னக்கு உங்க டிப்பார்ட்மென்ட் ஈவன்ட் வேற இருக்குல்ல. பிரின்ஸிகிட்ட ரெஜிஸ்டர் போயிடப்போகுது. நா வந்தர்றே. ”

’என்ன இவ ரொம்ப உற்சாகமாப் பேசறா. பர்மிஷன் போடறேங்கறா. வீட்லயும் இல்ல. அக்ரி வந்திட்டேங்கறா. ரெண்டு பேரும் வெயிட் பண்ணி ஒண்ணாதானே பீளமேடு வரப் போவோம். இந்த காலேஜில வேலக்கு சேர்ந்ததிலிருந்து இப்படித்தானே போய்கிட்டு இருக்கோம். அவ தைர்யத்திலதா நானே வண்டில போகவே ஆரம்பிச்சே. சரி வரட்டும் வந்து என்னானு கேட்டுக்கலாம். ’

’ச்சே ஒரு போட்டோ கூட சரியா விழமாட்டேங்குது. விடக்கூடாது. மறுபடியும் கொஞ்சதூரம் வண்டிய ஓட்டிட்டு போய் நின்னு எடுக்கலாம். ஒரு வாரமா நா அவுங்கள கவனிச்சுட்டு வர்றது அவங்களுக்குத் தெரிய வாய்ப்பில்ல. அவங்களுக்குத் தெரியாமத்தா வீடியோ எடுக்கணும். தெரிஞ்சா என்ன நினைப்பாங்க. தினமும் அவங்க  நேரமும் நா போற நேரமும் ஒண்ணாதா இருக்கு. அவங்களுக்குள்ள என்ன ஒரு புரிதல். என்ன ஒரு முயற்சி. என்ன ஒரு பாசம். விட்டுக்கொடுக்கறது. இருந்தா இப்படி இருக்கணும். அவங்களுக்குப்பின்னாலிருந்து போட்டா எடுத்தாச்சு. வண்டியைக் கொஞ்சம் பாஸ்டா ஓட்டிட்டுப்போயி முன்னாடி தெரியாத மாதிரி நின்னு அவங்க ரெண்டுபேரும்  வற அழக வீடியோ எடுக்கலாம். நம்ம வீட்டுக்காரர் குமாருக்கு இத காமிக்கணும். அப்போதாவது குமாருக்கு புரியட்டும். ஊரு உலகத்தில எப்படி எல்லாம் இருக்காங்கணு.

நா  ஒருவாரமா பாக்கற இவங்க மட்டும் வீட்டில சும்மாவா இருப்பாங்க. கண்டிப்பா ஏதோ ஒரு வேலக்குப் போயிட்டு தா இருப்பாங்க. இருந்தாலும் தினமும் எப்படி டைம் ஒதுக்கறாரு. காலைல அத ஒரு கடமையா செய்றாரு. வேலக்குப்போற பெண்களுக்கு வீட்டில நிறைய வேல இருக்கும்னு அட்ஜஸ்ட் பண்ணிட்டுதானே இவரு இதப்பண்றாரு. அப்போ குழந்தைக்கும் சந்தோஷமா இருக்கும். காலைல குளிரு, பனி இதெல்லாம் பார்க்காம குடும்பம்னு நெனச்சு எப்படி நடந்துக்கறாரு. பலதடவ சொல்லி பார்த்தாச்சு. குமாருகிட்ட குழந்த முன்னாடி அந்த மாதிரி  பேசாதீங்கணு. எப்போ பார்த்தாலும் குமாருக்கு விஷ்ணுவ திட்டறதே வேல. அஞ்சாவது போறான். ஆனா அப்பா பாசம்னா  என்னானே  தெரியாது. பாட்டி தாத்தா கூடவே இருந்திருந்தாக் கூட அவெ ஏங்கமாட்டா ரெண்டு பேரோட பெத்தவங்களும் ஊர்ல தோட்டத்த விட்டுட்டு வர்ற எண்ணமே கிடையாது. ஏதாவது விசேஷத்துக்கு நாங்கதா அங்க போகணும். நா மாசமா இருக்கும்போது குமாரு பெண்குழந்தை வேணும்னு ரொம்ப ஆசப்பட்டாரு. இல்லனு சொல்லல. வீடு முழுக்க அழகான பெண்குழந்தைங்க போட்டாவா மாட்டி வெச்சாரு. ரொம்ப ரொம்ப எதிர்பார்ப்பு. அவரு ஒரே பையனா வீட்ல வளர்ந்தாரா அதனாலயோ என்னமோ பெண் குழந்தைங்க மேல அப்படி ஒரு விருப்பம். அந்த கனவக் கலைச்ச மாதிரி விஷ்ணு வந்து பொறந்தது அவருக்கு ஏனோ பிடிக்கல. ஆண் குழந்தனா என்ன பெண் குழந்தைனா என்ன? கடவுள் தந்தது சந்தோஷமா வளக்க வேண்டியது தானே. அவரு வேல விட்டு வரும்போது  விஷ்ணு ப்ரன்ஸோட விளையாடப் போயிட்டா போதும். ‘கழுத ஊரு மேய போயிடுச்சா. இதுக்குதா சொல்றது. இதே பொட்டப் புள்ளயா இருந்தா ஓடி வந்து என்ன வரவேற்கும்னு  புலம்பவாரு. எதுக்கெடுத்தாலும் அவரு வாயில வர்ற வார்த்த

’ஒண்ணக் கொண்டு போயி ஹாஸ்டல்ல சேத்தணும். அவங்க போடற போட்டிலதா நீ உருப்புடுவ.’

சொல்லி சொல்லியே விஷ்ணுவுக்கு ஹாஸ்டல்னாலே பயமாயிடுச்சு. பைய நைட் தூக்கத்தில எல்லாம் கூட ஹாஸ்டல்ல விடாதீங்க விடாதீங்கணு புலம்பறா. ஏங்க குழந்தய அப்படி சொல்லி பயமுறுத்தாதீங்கணு பலமுறை சொல்லிப் பார்த்தாச்சு. அவன் நண்பர்களெல்லாம் சைக்கிள் வெச்சிருக்காங்க எனக்கும் ஒரு சைக்கிள் வாங்கி குடுங்கணு பலதடவ அழுது அழுது கேட்டிருக்கான்.

அப்போதெல்லாம் குமாரின் பதில்

’எதுக்கு இன்னும் ஓவரா ஊர் மேயவா. எனக்கே ஓட்டத்தெரியாது. உன்ன உட்காரவெச்சு  நா வேற சைக்கிள் ஓட்ட சொல்லித்தரணுமா. வேல விட்டு நா வர்ற அலுப்புக்கு ஒனக்கு இது ஒரு கொரச்சல். போய் படிக்கற வேலயப்பாரு. ஹாஸ்டல்ல கொண்டு போயி விட்டனா அப்பறம் சரியாயிடும் அங்க சைக்கிள வெச்சிட்டு என்ன பண்ணுவே. ’

குமார மீறி என்னால சைக்கிள வாங்கிக்கொடுக்கவும் முடியாது. அழுதிட்டே ஓடி வந்து மடில படுத்துக்குவா அவன் அப்பாவ பத்தி அவனுக்கும் நெறைய எதிர்பார்ப்புதா. ஆனா எங்கிட்ட சொல்லமாட்டான்.

ஒரு வாரமா நானும் வேலக்குப்போகும்போது அக்ரிகாலேஜ்கிட்ட பார்க்கறே இந்த அப்பா எவ்வளவு அழகா ஸ்கேட்டிங் ஹெல்மெட், கைமுட்டிக்கு அடிபடாம இருக்க கவர். கால்முட்டிக்கு ஸ்கேட்டிங்க் க்னீ கேப். எல்லாம் போட்டுட்டு. மகனுக்கு சைக்கிள் ஓட்ட ட்ரெயினிங் கொடுக்கறாரு. மகன ரோட்டோரமா லெஃப்ட்ல ஒதுக்கி அப்பா அவன் பக்கத்திலேயே எப்படி மெதுவா ஓட்டிட்டு வர்றாரு. இவருக்கு ஆபீஸ்ல பிரஷர் இருக்காதா? அதயும் தாண்டி மகனுக்காக தினமும் எவ்வளவு நேரத்த செலவு பண்றாரு. இவரு என்ன ஹாஸ்டல்ல விட்டிருவேனு மிரட்டறாரா. பார்த்தா விஷ்ணு மாதிரிதா இருக்கா.   தினமும் பார்க்கறே மெய்மறந்து ஆசயோட பார்க்கறே. எதிர்பார்ப்பைக் கனவாக்கி நின்னு ரசிக்கறே. ஆள நின்னு கவனிக்க நேரமிருக்காது. இன்னக்கு எப்படியாவது வீடியோ எடுத்து குமாருகிட்ட காமிச்சாவது சொல்லிப்பார்க்கலாம். மனசு  மாறி ஒரு வேள சைக்கிள் வாங்கிக்கொடுக்க முடிவு பண்ணீட்டார்னா. பர்மிஷன் போடறதுனு ஆயிடுச்சு. குமாருகிட்ட பர்மிஷன் போட்டு . இந்த போட்டோ எடுக்கற வேலய செஞ்சேனு சொல்லக்கூடாது. வீட்டிலேயே கொஞ்சம் வேல இருந்துச்சு. சப்பாத்திக்கு மாவு பெசஞ்சு  ஃப்ரிட்ஜில வெச்சிட்டு வந்தேனு ஏதாவது சொல்லணும். என்ன வேணும்னாலும்  சொல்லலாம் ஏனா எனக்கு முன்னாடியே குமாரும், விஷ்ணுவும் கிளம்பிப் போயிடுவாங்க. காலைல மெதுவா கிளம்பினாலேப் போதும். ஆனா நான் கிளம்பறதுக்கு முன்னாடியே அவசரமா கிளம்பிடுவாங்க.

அவர்களின் சைக்கிளுக்கு  முன்னால் சென்று சில போட்டோக்களை எடுத்து மீண்டும் வண்டியை ஒட்டிச்சென்று முன்னால் சென்று நிறுத்தி வீடியோ எடுத்தேன்.

’எனக்கும்  இப்படித்தானே அப்பா ஒரு சைக்கிள் வாங்கித்தர அவ்வளவு யோசித்தார். டைப்பிங் க்ளாஸுக்கும் வீட்டிற்கும் ஒன்றரை கிலோமீட்டர் தினமும் நடந்தே போகணும். கேட்டா ’ 2 கி.மீ தூரம் இருக்கற ஸ்கூலுக்கே நடந்து போயி பத்தாவது முடிச்சாச்சு. இனி எதுக்கும்பார்.’ அப்போ எல்லாம் நடக்கறது சிரமமே இல்ல. கூடப்பேசிட்டு வற இரண்டு தோழிகளும், ஒரு அஞ்சு அம்பலங்கா எலயும் அஞ்சாறு தொவரையும் இருந்தா போதும். அம்பலங்கா எல என்ன வியாதிக்கு திங்கறதா? சாப்பிடலாமா? இல்லையானு கூடத்தெரியாது. கொஞ்சம் புளிப்பா இருக்கும். வாயில போட்டு மென்னுகிட்டே வீடு வந்திருவோம்.

தொண்ணூறுகளில் பெண்கள் சைக்கிள் ஓட்டறதே ஆச்சர்யமான விஷயமாக இருந்த கிராமம் அது. விஷுவிற்கு சொந்தக்காரங்க வீட்டுக்கு ஒவ்வொருத்தர் வீட்டுக்கா போயி கைநீட்டம் வாங்குவோம். அப்போ மட்டும் அப்பா அப்பாவோட சைக்கிள ஓட்டத்தருவாரு. அது காலு எட்டவும் எட்டாது. ஏறி உட்கார்ந்து கொஞ்ச தூரத்துக்கு யாராவது சைக்கிளப் புடிச்சிட்டு கூடவே வரணும். அதுக்கப்பறந்தா கைவிடணும். பாவம் கொஞ்ச தூரம் ஓடறதுக்குள்ள அப்பாவுக்கு மூச்சு வாங்கும். அதனால  எறங்கிடுவேன். வயசு 75 ஆச்சு இன்னும் அப்பாகிட்ட அதே சைக்கிள்தா. அப்பாவைப்போலவே அதுவும் ஒரு சுமைதாங்கி. என் கல்யாண வேலை அத்தனையும் சைக்கிள்ல போயி தானே அப்பா செஞ்சாரு. பஸ்ஸை விட்டு கல்யாணத்துக்காக இறக்கும் ஒவ்வொரு காய்கறி மூட்டையையும் மூட்ட தூக்கறவன கூப்பிட்டா பத்து  ரூபா, ஆட்டோக்கு 20 ரூபானு பஸ்ஸ விட்டு இறங்கி மூட்டைய பஸ்ஸடாப்ல வெச்சிட்டு வீட்டுக்கு வந்து சைக்கிள் எடுத்திட்டுப்போய் ஒவ்வொரு மூட்டையாக வீட்டிற்குக்கொண்டு வருவார். பஸ்ஸடாப்பிற்கும் வீட்டிற்கும் ஒரு கிலோ மீட்டர் இருக்கும்.. பைப் ஒடைந்து தண்ணி வராத நாட்களில் கொடத்தக் கட்டி நாலு கிலோமீட்டர் தூரத்திலிருந்து தண்ணி எடுத்துட்டு வர்றதும் அந்த சைக்கிள்லதா. அடுப்பெறிக்க  விறகு வாங்க. ரேஷன் பொருட்கள் வாங்க, மாவு பொடிக்க, சொசைட்டில போயி பாலு வாங்க. காய்கறி வாங்கனு இப்படி ஒரு நாளைக்கு எத்தன தடவ அந்த சைக்கிள எடுத்திட்டுப் போவாருனு தெரியாது. அப்பாகூட போகும்போது நா எப்போதும் சைக்கிள் கேரியலில்தான் உட்காருவேன். தங்கச்சிக்கு சைக்கிளின் முன்னால கம்பியில. ஸ்பெஷல் குட்டி சீட். கால் வைக்கறதுக்கு அதிலேயே செட் பண்ணியிருந்தார். அக்காவும் தம்பிக ரெண்டு பேரும் வரமாட்டாங்க. இத்தன வேலக்கும் பயன்படுத்தற சைக்கிள்ல அம்மாவ உட்கார வைக்க முடியலயேனு வருத்தம் அப்பாகிட்ட இருக்கதா செய்யும் போல. அம்மா அதுக்கல்லா வரவேமாட்டாங்க. எங்க வீட்ட விட்டு வெளிய எறங்கறதே அபூர்வம்தா.

இத்தனக்கும் சித்தப்பா சைக்கிள் கடதான் வெச்சிருந்தாரு. சைக்கிள வாடகைக்கு விடற கட. சைக்கிள்ல பின்னாடி நம்பர் போட்டிருக்கும். ஒரு நோட்ல பேரு எழுதி சைக்கிள் நம்பர் போட்டுட்டு டைம் எழுதி வெச்சிட்டு கொடுக்கணும். 2 ரூபா முன் கூட்டியே கொடுத்திட்டு சைக்கிள  எடுத்திட்டு போலாம். ஒருமணி நேரத்துக்குள்ள வந்துட்டா ஒரு ரூபாயை திரும்ப வாங்கிக்கலாம். சித்தப்பா என்னை அடிக்கடி கடைல உட்கார வைப்பாரு. எனக்கும் நோட்ல எழுதிட்டு காசு வாங்கறது ரொம்பப்புடிக்கும். சித்தப்பாகிட்டயும் சொல்லிபார்த்திட்டே

“சித்தப்பா எனக்கு லேடி சைக்கிள் வாங்கி குடுங்க. இல்ல கடைக்காவது வாங்குங்க. நானும் வாடகைக்கொடுத்து எடுத்துக்கறே எங்கிட்ட கைநீட்ட காசு நெறைய இருக்கு.”

”சொல்லிவெசச்சிருக்கே கிடச்சா கொண்டு வர்றேனு சொல்றாரு. பார்ப்போம்னு சொல்லுவாரு.  அது நடக்கவும் இல்ல.

அப்போ ஒன்பதாவது படிக்கறேனு நெனக்கறே. வீட்டில ஏதோ மராமத்து வேல நடந்திட்டு  இருந்துச்சு. ஒரு மேஸ்திரியும் ரெண்டு கையாளும் வேல செஞ்சிட்டு இருந்தாங்க. பின்னாடிப்பக்கம் அடுக்களையிலிருந்து வெளியிலிறங்கற திட்டு ஒடஞ்சிருச்சு. சரிசெய்யணும். கொஞ்சம் அல்லற சில்லற வேலயும் இருந்துச்சு.  வேலைக்காக வாங்கின அளவான சிமெண்ட் தீர்ந்ததும் மேஸ்திரி சிமெண்டு வேணும்னுட்டார். அப்பா இருந்தா சைக்கிள்ல கொண்டுவருவார். அப்பா வேலக்கிப் போயிட்டாரு. கடைல போயி சொன்னா மூட்டை தூக்கறவங்க கொண்டு வந்து தருவாங்க. ஃபோன் இல்லாத காலம் லேண்ட்லைன் ஃபோன் இருந்தவர்களை பெரிய பணக்காரர்களாக நினைத்து ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்ட காலம். ஒரு கிலோ சாப்பாட்டு அரிசியே எட்டு ரூபாதா.. மூட்ட தூக்கறவங்களுக்கு 10ரூபா கொடுத்தா அப்பா திட்டுவார். மேஸ்திரி சிமெண்ட் இல்லேனா மீதி வேலய நாளக்கி வந்து பண்ணிக்கலாங்கறாரு. நா வேகமா அம்மாவ கூப்பிட்டேன்.

’ம்மா எங்கூட வர்றீங்களா. சிமெண்ட நானே சைக்கிள்ல வெச்சு கொண்டு வர்றேன். புள்ளய பையனமாதிரி வளர்த்திருக்கோம்னு அம்மாவுக்குப் பெரும வேற. சைக்கிள எடக்கால் போட்டுக்கூட ஓட்டத்தெரியாது. உருட்டிக்கொண்டே கடைவர போயாச்சு. காசு கொடுத்ததும் போர்ட்டர் ஒரு மூட்டையை கொண்டுவந்து சைக்கிளில் வைக்க வந்தாரு. என்னை சைக்கிளை நன்றாகப் பிடிக்கச்சொன்னார். ”பரவால்லண்ணா வையிங்கனு” சொன்னதும் அவரு பின்னாடி கேரியல் கம்பியை  இழுக்காமல் அப்படியே வைக்கப்போனார். ’அண்ணா கேரியல் கம்பியை இழுத்திட்டு வையிங்க.’

’வேண்டாம்மா சிமெண்ட் 50 கிலோ வெயிட் அப்படியே நின்னுரும்.’ என்று சொன்னதும்  பொத்துனு  சைக்கிள் பின்னாடி மூட்டய வெச்சாரு. முன்னாடி லேசா உருட்டிட்டுப்போக  சௌகர்யமா ஸ்டேண்டை எடுத்துவிட்டுட்டு புடிச்சிட்டு இருந்தேன். பின்னாடி வெயிட்டை வெச்சதும் சைக்கிள் அப்படியே முன்னாடி பாகம் மேலே தூக்கிருச்சு. எனக்கு இது தெரியவே தெரியாது. எப்படி கீழே கொண்டு வர்றதுணு வேற பதட்டமா போச்சு. பஸ்ஸடாப்பிற்கு பக்கம்தா சிமெண்ட் கட வேற. . எல்லோரும் பாத்து சிரிப்பாங்களேணு அவமானம் வேற. அப்போ அங்கே பஸ்ஸடாப்பில் உட்கார்ந்து கத பேசிட்டு இருந்த முத்து அண்ணன்தா ஓடி வந்தாரு. ”கொண்டா நா கொண்டுபோய் வீட்ல விடறேனு” சொன்னாரு.

அப்பவும் இயலாமையை ஒத்துக்காம ”இல்ல வேண்டாம்னா ஸ்டேண்ட் போட்டு நிறுத்திக்குடுங்க நா மெதுவா தள்ளிட்டு போய்க்கறே. அம்மா பின்னாடி புடிச்சுப்பாங்க.” மறுபடியும் ஸ்டேண்ட் தள்ளிவிட்டதும் சைக்கிள் தள்ளாடத்தொடங்கியது. அந்த அண்ணன் ”தள்ளும்மா நீ” என்று அவரே ஓட்டிட்டு வந்து வீட்டில சிமெண்ட எறக்கிவெச்சிட்டு நடந்து போனாரு. அன்னக்குப் பட்ட அவமானமோ என்னமோ இப்போ டூவீலர்ல இப்படி பறக்கறே.

பத்தாவது முடிந்து டைப்பிங் க்ளாஸ் லோவர் முடிஞ்சு இப்போ ப்ரி டிகிரி வேற. அப்போதெல்லாம் பத்தாவது முடிச்சதும் காலேஜ். ப்ளஸ் ஒன் ப்ளஸ் டூ கிடையாது. காலேஜுக்கு பஸ்ல போயிடுவேன். கடைக்குப்போக, டைப்பிங் க்ளாஸ் போகத்தான் ஒரு சைக்கிள் கேட்டிட்டே இருந்தேன்.

புலம்பி புலம்பி கேட்டு கேட்டு அழுது அழுதுகடைசியா அப்பா எனக்கு ஒரு சைக்கிள் வாங்கித்தந்தாரு. ப்ளஸ் டூ படிக்கும்போது நாலாவது அஞ்சாவது படிக்கற புள்ளக ஓட்டற கால்வண்டி. நா அப்பவே நல்ல ஒயரம் . என் ப்ரண்ஸலேயே நான் தா கொஞ்சம் ஒயரம் ஜாஸ்தி. அந்த கால்வண்டியே எனக்கு மாருதி கார் கிடச்சமாதிரி இருந்துச்சு. சைக்கிள் கிடச்சது மட்டும்தா என்னால பார்க்க முடிஞ்சுது. பல வருடமா போராடிக்கேட்டு, அழுது புலம்பி எனக்குனு தனியா கிடச்ச ஒரு வண்டி. அது சின்னதா? பெரிசா? என் உயரத்துக்கு அது எப்படி இருக்கும் நா ஓட்டிட்டுப்போனா சர்க்கஸில கோமாளி சின்ன சைக்கிள ஓட்டுவாரே அது மாதிரி இருக்குமா என்றெல்லாம் நினக்கத் தோணல. அதில பைய மாட்டிட்டு கடைக்குப் போயிட்டு போயிட்டு வற ரொம்பப் புடிக்கும். இப்போ இருக்கற புள்ளக எவ்வளவு மெச்சூடா இருக்காங்க. எனக்கெல்லா அப்போ  ஒண்ணுமே தெரியாது. பத்தாவது படிக்கும்போது எங்க கணக்கு வாத்தியாரு அதுக்குத்தானே திட்டிட்டே இருப்பாரு. ’கழுதகளாட்ட வளர்ந்திருக்கீங்க. புள்ளக பையனுக இப்படியா சேந்து ஆடறதுனு’ ஒட்டுமொத்த க்ளாஸையும் திட்டுவாரு.  நாங்க வகுப்பு பசங்க புள்ளக வேறுபாடு பாக்காம ஒண்ணா சாப்பிடுவோம். லஞ்ச் பிரேக்கில ஒண்ணா விளையாடுவோம். ஓண்ணா திட்டு வாங்குவோம். கால மாற்றத்தை நினைச்சா ஆச்சர்யமா இருக்கு. டி.வி ல வர ஒவ்வொரு நிகழ்ச்சிய பாத்தா ‘ஏழாவது படிக்கும்போதிருந்து லவ் பண்ணிட்டு இருக்கோம். எட்டாவது படிக்கும்போதிலிருந்து லவ் பண்ணிட்டு இருக்குமோனு. இப்போ வளர்ற புள்ளகள மீடியா எதஎதயோ யோசிக்க வைக்குது. நாங்க படிக்கும்போதெல்லா லவ்வுனா என்னானே தெரியாதே. திட்டு வாங்க மட்டும்தா தெரியும்.

காலேஜ் முடிச்சு மத்தியானம் 3 மணிக்கு வந்திருவேன். வந்ததும் ஏதாவது வாங்க வேணுமானு கேட்டு பைய மாட்டிட்டு கடைக்குப் போயிடுவே. கடைக்கு சைக்கிள்ல போயிட்டு போயிட்டு வற ரொம்பப்பிடிக்கும். அதுவும் அம்மா ரெண்டு பொருள் சொன்னா ரெண்டையும் ஒண்ணா வாங்கிட்டு வரமாட்டேன். ஒண்ணு ஒண்ணாதா வாங்கிட்டு வருவே. ரெண்டு தடவ சைக்கிள்ல கடைக்குப் போறதுக்காக. சைக்கிள கொண்டு போயி கடைக்கு முன்னாடி ஸ்டேண்டு போட்டு  நிறுத்தும்போது  எல்லாரும் என்ன பாப்பாங்க. நான் நெனச்சே என்ன பெருமையா பாக்கறாங்கணு. ஆனா இப்போ நெனச்சுபாத்தா தெரியுது எப்படி நக்கலா பாத்திருப்பாங்கணு ஒரு வேள சைக்கிளிலிருந்து கீழே விழுந்தாலும் அடி பெரிசா பட்டறக்கூடாதுனு அப்பா யோசிச்சிருப்பாரோ. இல்ல அவரு பட்ஜெட்டிற்கு இதுதா ஒத்து வந்திருக்குமோ. இல்ல சின்னதா வாங்கி குடுத்தா வீட்டுக்குள்ளேயே வாசல்ல ஓட்டிட்டு இருப்பே வெளில போகமாட்டானு சிந்திச்சிருப்பாரோ. எப்படியோ எனக்கு அப்படியாவது ஒரு சைக்கிள் கிடச்சது. ஆனா என் பையனுக்கு அதுவும் கிடைக்க மாட்டேங்குது.

அவங்க ரெண்டுபேரும் ரொம்பதூரம் போகற வர  வீடியோ எடுத்தபிறகு பின்னால இருந்து இரண்டு மூன்று போட்டோ எடுத்தேன். சரி. இனியும் ஒரே ஒரு போட்டோ அவங்க ரெண்டு போரோட முகமும் நன்கு தெரியற மாதிரி ஒரு போட்டா எடுத்தா நல்லா இருக்கும். ஹெல்மெட் போட்டிருக்கறதனால சரியா முகமும் தெரியமாட்டேங்குது. ஒரு வேள நமக்குத் தெரிஞ்சவங்களா இருப்பாங்களோ. பின்னாடி பாத்தா எங்கேயோ பாத்த மாதிரியும் இருக்கு. தினமும் பாக்கறதனால அப்படி தோன்றியிருக்கலாம்.  எதுக்கும் பக்கத்தில போயி பாக்கலாம். வண்டிய வேகமா ஸ்டாட் செய்தேன். அவங்க ரொம்ப தூரம் போயிட்டாங்க நானும் வேகமாக ஓட்டினேன் அவர்கள் அருகில் வந்ததும் மெதுவாக அவங்களோட சேரந்து பயணிப்பது போலவே ஓட்டினேன். அப்பா மகனின் உரையாடல் காதுகளில் விழுந்தது.

”அப்பா முடியலப்பா….. ப்ளீஸ் காலு வலிக்குது”

அப்பா பையனோட முதுகு பக்கம் பிடித்து அப்படியே தூக்கறத பாத்தே. பையன் சீட்டிலிருந்து சற்று இருக்கையை தூக்கினான்.

“நோஞ்சா எதுக்கும் கையாலாகாத உதவாக்கர ஏதாவது தெரிஞ்சக்கணும்னு தோணுதா.”

”இல்லப்பா  நேத்து  ஃபுட்பால்  க்ளாஸில  விழுந்துட்டேன். நைட்டு ஹிந்தி டியூஷன் முடிச்சு வர்ற  லேட்டானதால ஹோம்வர்க் பண்ணல. மிஸ் வெளியயே நிக்க வெச்சிட்டாங்க. காலு வலிக்குதப்பா.”

”மூணாவது  படிக்கும்போதே  ஒனக்கு இவ்வளவு சோம்பேறித்தனம். திங்கறயில்ல மூணு வேள வக்கனயா. வலிச்சா பரவால்ல ஓட்டு. வீட்டில இருக்கவே  விடக்கூடாது. உன்ன கொண்டு போயி ஏதாவது ஹாஸ்டல்ல தள்ளி விடணும். அப்பதா  நீ எல்லா உருப்படுவே. என்னோட  ஒரு  கனவையும் உங்கிட்ட நிறவேத்த முடியாது. ஃபுட்பாலுக்கு க்ளாஸ், ஹிந்தி டியூசன், பாட்டு க்ளாஸ், கராத்தே, சைக்கிள் எல்லாமே சேத்துவிடறே இல்ல அப்போ நீ இப்படிதா பிஹேவ் பண்ணுவ.. அழுகாம ஓட்டு.”

என் வண்டியோட வேகத்தக் கூட்டினேன் கொஞ்ச தூரம் போனதும் எனக்குத்தெரியாம ஏதோ ஒரு நெருடல் ஓரமா வண்டிய நிறுத்திட்டு என் மொபைலைக் கையிலெடுத்தேன்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சைக்கிள் (சிறுகதை)

  1. எதார்த்தமான எடுத்துரைப்பு. அனுபவத்தின் பகிர்வென்று எண்ணுகிறேன். பொதுவாகவே தந்தைகளின் இயல்பு சற்று முரட்டுத் தனத்தோடு கலந்ததுதான். அதில் பெரும் அக்கறையொன்று நிறைந்திருக்கும் என்று ஒரு தந்தையாக நான் கருதுகிறேன். நானும் எனது மகனின் அடம் பொறாது அவனை விடுதியில் சேர்த்திவிடுவதாக சொன்னதுண்டு. அவனை அங்கு அனுப்புவதாக பாவனைக்காட்டி அவனது உடைமைகளை தயாரித்தபோது மட்டும்தான் அவனது அடம் குறைவதை கண்டிருக்கிறேன். அது ஒருவகையில் உத்தியென்றே கருதுகிறேன். நான் சைக்கிள் ஓட்ட விரும்பியபோதும், இருசக்கர வாகனம் ஓட்ட முனைந்தபோதும் எனது தந்தை என்னை அனுமதித்ததே இல்லை. நான் நன்கு நான்கு சக்கர வண்டி ஓட்டுவேன் என்று தெரிந்தும் ஓட்டுநர் இல்லாத நாட்களில் என்னை அனுமதிக்காமல் பழகிக்கொன்டிருந்த எனது நண்பர்களை கூட்டிச் சென்றதுண்டு. ஒருசில நுணுக்கங்களை நான் கற்றுக்கொடுத்த என் நண்பனே எனது அருகில் அமர்ந்து எங்கள் வண்டியை ஓட்டியபோது நான் பெரிதும் கோபமுற்றுள்ளேன். ஆனால் ஒரு தந்தையாக இன்று உணரும்போது என் தந்தையின் அக்கறையும், பேணலும் எனக்கு நன்கு புரிகின்றது. நினைவு, உணர்வை தூண்டிய இந்தச் சிறுகதையை அளித்தமைக்கு படைப்பாளருக்கு நன்றிகள். வசனங்களும், எடுத்துரைப்பும் மிகவும் நெருக்கமாக அமைந்திருந்தது பாராட்டுதற்குரியது. எனது மகன் அவனுக்கு சைக்கில் வேண்டும் என்று கேட்கும்போது நிச்சம் இந்தக் கதையை நினைத்துப் பார்ப்பேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.