Blog

  • பிரபோ கணபதே | கிருஷ்ணகுமார்

    பிரபோ கணபதே | கிருஷ்ணகுமார்

    விநாயகர் சதுர்த்தி சிறப்பு வெளியீடு – 1

    ‘பிரபோ கணபதே’ என்ற புகழ்பெற்ற பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். வினைதீர்க்கும் விநாயகப் பெருமான் அருளைப் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கடன் அட்டை கணக்கை முடிப்பது எப்படி?

    கடன் அட்டை கணக்கை முடிப்பது எப்படி?

    கடன் அட்டை பெறுவது எளிது. ஆனால், அந்தக் கணக்கை முடிப்பது அவ்வளவு எளிதில்லை. கடனை அடைத்தாலும் ஏதாவது காரணத்தைச் சொல்லி, நீட்டித்துக்கொண்டே இருக்கிறார்கள் என்பது பலரது அனுபவம். முறையாகக் கணக்கை முடிப்பது எப்படி? கடன் பாக்கியில்லை (No Due certificate) என்ற சான்றிதழைப் பெறுவது எப்படி? சிபில் (CIBIL) அமைப்புக்கு இதைத் தெரிவிப்பது எப்படி? கணக்கை முடிக்காவிட்டால் புகார் தெரிவிப்பது எப்படி? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் இங்கே வழிகாட்டுகிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கடன் கட்டாவிட்டால் என்ன ஆகும்? | ராமகிருஷ்ணன் நாயக்

    கடன் கட்டாவிட்டால் என்ன ஆகும்? | ராமகிருஷ்ணன் நாயக்

    கடன் அட்டையைத் தேடித் தேடி வந்து கொடுப்பார்கள். கடனில் பொருள் வாங்குவதற்குச் சலுகைகளை வாரி வழங்குவார்கள். ஆனால், கடன் கட்டாவிட்டால் என்ன ஆகும்? குண்டர்களை அனுப்பி வசூலிப்பது உண்டா? இதில் வாடிக்கையாளர்களின் உரிமைகள் என்னென்ன? அவர்கள் எங்கே முறையிட வேண்டும்? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் இங்கே வழிகாட்டுகிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 144

    சேக்கிழார் பாடல் நயம் – 144

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    கருப்பு வில்லோனைக் கூற்றைக் காய்ந்தவர் கடவூர் மன்னி,
    விருப்பு உறும் அன்பு மேல் மேல் மிக்கு எழும் வேட்கை கூர,
    ஒருப்படும் உள்ளத் தன்மை உண்மையால் தமக்கு நேர்ந்த
    திருப்பணி பலவும் செய்து, சிவ பத நிழலில் சேர்ந்தார்.

    வரலாறு

    திருப்பனந்தாள் என்ற தலத்தில் தாடகை என்னும் மங்கை குழந்தை வரம் வேண்டி நாள் தோறும் மாலை தொடுத்து ஈசனுக்கு அணிவித்தாள். ஒரு நாள் மாலையை அணிவிக்க சிரமம் எற்பட்டபோது இறைவனே குனிந்து மாலையை ஏற்றார். அன்று முதல் தலைசாய்ந்த நிலையிலேயே இருந்தது. அதனைக் கண்ட அப்பகுதியின் மன்னன் மணிமுடி சோழன் (நாயன்மார்களில் ஒருவரான மங்கையர்க்கரசியின் தந்தை) யானை, குதிரை கொண்டு கட்டி இழுத்தும் பலன் தரவில்லை. அரசன் இரவும் பகலும் கவலையுற்று வருந்தினான். . மழுவேந்திய சிவந்த கையினையுடைய சிவபெருமான் எழுந்தருளிய அம்மருங்குள்ள திருக்கோயில்களுக்கும் சென்று, தொழுது, மேற்போந்து, எல்லா வுலகங்களையும் காக்கும் பொருட்டு வேதவிதி வழுவாமல் ஆகவனீயம் முதலியமுத்தீக்களையும் வளர்த்துக் காத்துவருகின்ற மறையோர் வாழ்கின்ற செழிப்புடைய பூஞ்சோலைகள் சூழ்ந்த திருப்பனந்தாளிற் சேர்ந்தனர்.

    திருக்கடையூர் குங்கிலியக்கலய நாயனார்  இவ்வாலயம் வந்தபோது ஈசனின் தலையை நிமிர்த்த எண்ணி ஒரு கயிற்றை தன் கழுத்தில் சுருக்கிட்டு மறுமுனையை ஈசன் கழுத்தில் கட்டி ஒன்று உன் தலை நிமிர வேண்டும் இல்லையேல் நான் இங்கேயே உயிர் விடல் வேண்டும் என இழுத்தார்.

    ஒருமை பொருந்திய அன்பாகிய நாரினால் இயன்ற கயிற்றினாலே; திண்மையுடைய தொண்டர் பூட்டி இளைப்படைந்த பின்னரும் அக்கருத்துக்கு மாறுபட்டு முன்போலச் சாய்ந்து நிற்க இறைவர்க்கு முடியுமோ?  கலயனாரது மனத்தில் எழுந்த ஒருமைப்பாட்டினைக் கண்ட அப்பொழுதே பெருமையுடைய பிரானார் நேரே நின்றனர்; தேவர்களும் ஆகாயத்தில் மகிழ்ச்சியினால் ஆரவாரித் தனராகிப் பூமாரி பொழிந்தார். மன்னவன்  சேனைகளும் களிறுகளும் மகிழ்ந்தன; அரசன் அடியார்முன் சென்று அவர் திருவடியைத்  தலைமேல் வைத்து வணங்கினான்.

    விண்ணிற் பறக்கின்ற முப்புரங்களும் வேகும்படி வேதப்புரவி பூண்ட தேரில் மேரு மலையை வலிய வில்லாக வளைத்து நின்ற செஞ்சடையப்பருடைய நேர் நிற்கும் நிலையினை அடியேன் தரிசிக்கும்படி செய்தருளினீர்! மண்ணைப் பிளந்து சென்ற திருமாலும் தேடிக் காணமுடியாத (சிவபெருமானது) மலர் போன்ற திருவடிக ளிரண்டினையும் பண்பு மிக்க அடியவர்களல்லது வேறு யாவரே அன்பினால் நேர் காண வல்லவர்?” என்று போற்றி அங்கே ஆலயத்திறைவனுக்கு உரிய திருப்பணிகள் செய்து புறப்பட்டான்!

    கலயனார் திருப்பனந்தாள்  இறைவன் கழலடி வாழ்த்திச் சிலநாள் அங்கே இருந்தார்.சில நாள்கள் கழிந்த பின்பு,  திருக்கடவூரிற் சேர்ந்து நிலைபெற்ற தமது திருப்பணியில் ஒழுகி வருகின்ற நாட்களிலே ஒப்பற்ற சீர்காழித் தலைவராகிய ஆளுடைய பிள்ளையாரும் தாண்டக வேந்தராகிய மிக்குப் பெருகும் புகழுடைய ஆளுடைய அரசுகளும் ஒன்றாக அங்கு எழுந்தருளக் கண்டு  நிகரில்லாத மகிழ்ச்சி பொங்க அவர்களை எதிர் கொண்டு சென்று அழைத்து வந்து, தமது திருமனையில் எய்தி, எல்லையில்லாத அன்பின் மிக்க ஆறு சுவைகளும் பொருந்த அமைத்து ஊட்டி, அவர்களது திருவருளினைப் பெற்றதேயன்றி, மணமுடைய அழகிய கொன்றைமல ரணிந்த இறைவருடைய திருவருளினையும் பெற்றார்.

    கரும்பை வில்லாகவுடைய மன்மதனையும் இயமனையும் தண்டித்த சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கடவூரிலே (கலயனார்) நிலையாக வாழ்ந்து விருப்பம் பொருந்திய அன்பு மேன்மேலும் மிகுந்து எழுகின்ற ஆசை அதிகப்படவே, ஒருப்படுகின்ற மனநிலை உண்டாயினமையினால் தமக்கு நேர்பட்ட திருப்பணிகள் பலவற்றையும் செய்து சிவனது திருவடி நீழலிற் சேர்ந்தனர்.

    குங்கிலியக்  கலைய நாயனாரின் அரிய  சிவத்தொண்டுக்குக்  காரணம் அவர் செய்த குங்கிலிய தூபப்பணியே என்பதை,

    ‘’பெரும்புலர்  காலை மூழ்கி பித்தர்க்கு பத்தர் ஆகி
    அரும்பொடு  மலர்கள் கொண்டு அங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து
    விரும்பிநல்  விளக்கு  தூபம்  விதியினால் இடவல்லார்க்குக்
    கரும்பினில் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனாரே!

    பொள்ளத்த  காயமாயப்  பொருளினைப்  போக மாதர்
    வெள்ளத்தைக்  கழிக்க வேண்டில் விரும்புமின்  விளக்குத் தூபம்
    உள்ளத்த  திரியொன்றேற்றி உணருமா றுணர வல்லார்
    கள்ளத்தைக்  கழிப்பர் போலுங் கடவூர் வீரட்டனாரே!

    மருதங்களா மொழிவர் மங்கையோடு வானவரும்
    மால் அயனும் கூடி தங்கள்
    சுருதங்களால் துதித்து தூ நீர் ஆட்டி
    தோத்திரங்கள் பல சொல்லி தூபம் காட்டி
    கருதும்-கொல் எம்பிரான் செய் குற்றேவல்
    என்பார்க்கு வேண்டும் வரம் கொடுத்து
    விகிர்தங்களா நடப்பர் வெள் ஏறு ஏறி
    வெண்காடு மேவிய விகிர்தனாரே

    என்ற  திருமுறைப் பாடல்கள் விளக்குகின்றன. ஆகவே இப்பாடல் கலயனாரின்  தனித்த சிறப்பைக் காட்டுகிறது!

    Share
  • காட் ப்ளஸ் யூ

    காட் ப்ளஸ் யூ

    பாஸ்கர்

    சார். மன்னிக்கணும் ஒரு முப்பது ரூபாய் கொடுக்க முடியுமா?

    யார் நீங்க, உங்களை எனக்குத் தெரியாதே?

    எனக்கும் உங்களைத் தெரியாது, நான் தாம்பரம் போகணும். எனக்கு ஒர்த்தர் மூவாயிரம் ருபாய் தரணும். பஸ்ல போகக் காசில்லை. இந்தப் பக்கம் நீங்க திரும்ப வரும்போது நான் பார்த்துக் கொடுத்துடறேன்.

    சார் உங்க வயசுக்கு நான் வச்சிண்டு இல்லன்னு சொல்றது தப்பு. இந்த அம்பது ரூபாயை வச்சுக்குங்க.

    எதுக்கு சார். நான் பாபா கோவில்ல சாப்டாச்சு. முப்பது போதும்.

    இல்லை சார். உங்களுக்குத் தர வேண்டியவர் இல்லேன்னா உங்களுக்கு பஸ்ல வர காசு. வேண்டாமா?

    ஏன் சார் இப்படி அபசகுனமாய்ச் சொல்றீங்க என் பணம். என் உழைப்பு .எனக்கு உங்க பணம் வேணாம்.

    அய்யா, நான் நல்ல எண்ணத்துல சொன்னதை நீங்க தப்பாப் புரிஞ்சுகிட்டீங்க இந்தாங்க.

    கொஞ்சம் வேகமாக வாங்கிக்கொண்டு காட் ப்ளஸ் யு என்றார்.

    சிரித்தேன்.

    என்ன சார்.

    இல்லை சொல்லுங்க.

    உங்களை அந்த காட் ப்ளஸ் பண்ணலையே என்றேன்.

    கொஞ்சம் முறைத்துவிட்டு, என் பஸ் வருகிறது என்று புறப்பட்டார்.

    உள்ளே அமர்ந்து என்னைப் பார்த்து விட்டு அம்பது ரூபாய் நோட்டோடு கையாட்டினார்.

    நான் கை கூப்பினேன்.

    மாலை என் மகன் என்னிடம் வந்து, ஒரு குட் நியூஸ் என்றான்.

    என்ன எனக் கேட்டேன்.

    இல்லை. நீ எப்ப பார்த்தாலும் தானம் பண்ணு, தர்மம் பண்ணுன்னு சொல்வ இல்ல.

    ஆமாம். அதுக்கென்ன இப்ப?

    இல்லை. இன்னிக்கு ஒருத்தர் குளத்துக்கிட்ட என்கிட்டே பத்து ரூபாய் கேட்டார். பாவமா இருந்தது பா.

    என்ன சொன்ன.

    என்கிட்டே இருபது ரூபாய் இருந்தது .அப்பிடியே கொடுத்துட்டேன்.

    குட்.

    என்னப்பா என்னைப் பாராட்டுவேன்னு நினச்சேன்.

    அவர் உன்கிட்ட பணம் வாங்கிண்டு காட் ப்ளஸ் யூன்னு சொன்னாரா?

    காட். கரெக்ட். எப்படிப்பா உனக்குத் தெரியும்.

    கொஞ்சம் கெஸ் பண்ணேன்.

    அவருக்குத் தரக்கூடாதாபா?

    இல்லை. அடுத்த வாட்டி பார்த்தா, அவர் கேட்காவிட்டாலும் கொடு என்றேன்.

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 4

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 4

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    பாவலர் தமிழாளன் கவிதைகளில் படைப்பாளுமை

    முன்னுரை

    படைப்பாற்றல் எவ்வாறு தனித்துவம் மிக்கதோ அதுபோன்றதே சுவையுணர் திறனும் தனித்துவம் மிக்கது. சுவையுணர் திறனின்றித் திறனாய்வு அமையாது, காலத்துக்கும்  கதிரவனையே  மீண்டும் மீண்டும் அறிமுகம் செய்து களைத்துப் போனவர்கள் நாம். குடிசைக்குள் கண்சிமிட்டும் சில அகல்விளக்குகளை அறிமுகம் செய்தால் என்ன என்னும் என் எண்ணத்தின் மொழி வெளிப்பாடே இந்தக் கடடுரைத் தொடர். .’வல்லாரக்கும் மாட்டார்க்கும் வரமளித்து’ வாய்ப்பளிக்கும் ‘வல்லமை’ இப்பணியைச் செய்ய எனக்கும் வாய்ப்பளித்தமைக்கு நன்றி.  சிறு குறு இதழ்களிலும் முகநூல் பதிவுகளிலும் தனிப்பட்ட முறையிலும் தங்களது படைப்பாளுமைக்கான ஓர் அங்கீகாரத்தைத் தேடும் அந்த துடிப்பான கவியுள்ளங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அந்தத் தவிப்பினைப் போக்கித் தாகத்தைத் தணிப்பதற்கும் தமிழுக்கு ஏதேனும உருப்படியாகச் செய்யலாமே என்னும் இந்த முதியவனின் துடிப்புக்கும் இக்கட்டுரைத் தொடர் ஒரு வடிகால் ஆகலாம். அந்த வகையில் நிறைதமிழ் ஆய்ந்தார் — கறையில் கவிஞர், — மொழியின உணர்வாளர் — பழிதீர் பாவலர் பழ தமிழாளன் அவர்களின் கவிதைகளில் இழையும் படைப்பாளுமையை இந்தக் கட்டுரை சுருக்கமாகச் சொல்ல முயல்கிறது. .

    படைப்பாளுமை – ஒரு விளக்கம்

    படைப்பின் அனைத்துக் கூறுகளின் மேல் படைப்பாளன் செலுத்துகின்ற மேலாதிக்கத்தையே நாம் படைப்பாளுமை என்று கூறுகிறோம். உள்ளம், புலமை ஆகியவற்றின் அடிப்படையில் உருவாவது படைப்பு கம்பன் இராமனையும படைக்கிறான். இராவணனையும் படைக்கிறான். நீலமாலையையும் படைக்கிறான். திரிசடையையும் படைக்கின்றான் என்றால் அத்தனைப் பாத்திரங்களாகவும் ;அவன் உருவெடுக்கிறான். இதுதான் அவன் உள்ளத்தின் அளுமை. பாத்திரப் படைப்புக்களின செய்நேர்த்தி குறையாமல் எந்தப் புள்ளியிலும் முரண் ஏற்படா வண்ணம் காத்து அவர்களின் பண்பாட்டு உருவகம் சிதையாமல் பாரத்துக் கொள்வதற்குத்தான் உள்ளத்தின் ஆளுமை என்று பெயர். கலிவிருத்தம் என்னும் ஒரு சாதாரண யாப்பிலும் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களிலும் அவன் செய்து காட்டியிருக்கிற சித்துவிளையாட்டுக்கள் வடிவத்தின் மீது அவன் செலுத்திய ஆளுமை எனலாம். காப்பிய நிகழ்விடச் சித்திரிப்புக்கள் இயற்கை மேல் கொண்ட அவனுடைய ஆளுமையை உணரமுடியும்.  இததகைய ஆளுமை எல்லாப் படைப்பிலக்கியக் கரத்தாக்களுக்கும் உரியனவே எனினும் கவிதைப் படைப்பாளர்களுக்குக் கூடுதல் சிறப்பாகக் கருதப்படும் கருத்து, வடிவம், உணர்ச்சி, கற்பனை என்னும் கவிதைக் கூறுகளின் மேல் கவிஞன் ஒருவன் செலுத்துகிற படைப்பாளுமையையே மேலே கம்பன் வழி நின்று கண்டோம். சுருங்கச் சொன்னால் ‘இந்தப் பாடடை இவர்தான் எழுதியிருப்பார்’ என்னும் முத்திரைக்கு மறுபெயரே’ படைப்பாளுமை. அத்தகைய படைப்பாளுமையைப் பெற்றவர்களால் படைக்கப்படும் கவிதைகளே காலத்தை வென்று நிற்கின்றன .மற்றவை காலச் சூறாவளியில் தாக்குப் பிடிக்க இயலாத பதர்களாகப் பறந்துவிடுகின்றன.

    பாவலர் தமிழாளன் ஓர் அறிமுகம்

    நத்தம் பள்ளத்தாக்கில் பிறந்து முத்தமிழ் கற்று முப்பத்தைந்து ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றிய முதுகலைத் தமிழாசிரியர். எதனையும் த்மிழாலேயே சிந்திக்கும் தனித்தன்மை பெற்றவர். மரபுவழி வந்த பண்பாட்டுக்குப் பட்டா போட்டுக் கொணடவர்.  ‘பழகுதற்கு இனியவர்’ என்னும் பாசாங்கு மொழி அறியாத இவர் உள்ளம் சிரிப்பதை உதடு ரசிக்கும். தெள்ளிய நீர்போலக் கள்ளமில்லாக் உள்ளத்துக்குக் காப்புரிமை பெற்றவர். அதனால் கவிஞரானவர்.  மெய் வருத்தம் நோக்காது கைப்பொருள் இழந்தும் மொழி, இனம், நாடு முன்னேற வேண்டும் எனக் கஞ்சத்தனம் இல்லாமல் கவலைப்படுபவர்.  தமது தனித்தமிழ்க் கவிதைகளால் முகநூல் பக்கங்களையெல்லாம் தமிழ்மணம் கமழச் செய்தவர். செய்கிறவர்.  ‘தமிழமுது’ என்னும்  கவிதைத் தொகுப்புக்கு உடைமையாளர்.  உழைப்பதற்காகவே ஓய்வு பெற்றவர்.

    தமிழாளன் கவிதைகளில் பாடுபொருள்

    அகம், புறம் என்னும் இருபெரும் பாடுபொருளை மட்டும் பாடிய சங்கச் சான்றோர்கள் கவிஞர்களாக ஒளிர, பலசரக்குக் கடையான தனிப்பாடல் திரட்டுக் கவிஞர்கள் தனிமைப்பட்டுக் கிடப்பதற்குக் காரணம் என்ன? வேறுபட்ட பாடுபொருளைப் பாடுவதனாலேயே கவிஞர் ஆகிவிட முடியாது. கவிதையில் வேடிக்கை செய்வதும் வித்தை காடடுவதும் வேறு. மக்கள் நலம் சார்ந்த எண்ணங்களைக் உணர்வுப் பூர்வமான கவிதைகளால் வெளிப்படுத்துவது வேறு. தமிழையும் தமிழ்நாட்டையும் தமிழினத்தையும் வரையறுத்த பாடுபொருளாகக் கொண்ட கவிஞருள் தமிழாளனும் ஒருவர். ஆனால் சில நேர்வுகளில் அந்த எல்லையை இவரைத் தாண்ட வைத்தது சமுதாயத்தின் அவல நிலை. எனவே சில புதுமையான பாடுபொருளைத் தேடிப் பாடியிருக்கிறார்.

    முதியோர் காதலும் முதியோர் காப்பகமும்

    பாவேந்தரின் முதியோர் காதல் தமிழ்க்கவிதை மரபு அதுவரைக் காணாதது. அவரால் கண்டெடுக்கப்பட்டது. முதியோர் காதல் என்பது ‘குடும்ப விளக்கின்’ இறுதிப்பகுதியான அதனுள் முதியோரின் பக்குவக் காதலும் பண்பாட்டு முதிர்ச்சியும் இல்லறப் பயனும், சமுதாயக் கடனும் வெல்லத் தமிழில் பாவேந்தரால் பாடப்பட்டிருந்தன.  காலச் சக்கரச் சுழற்சிக்குச் சமுதாயமும் விதிவிலக்கன்று. இன்று நிலை தலைகீழ். ‘தான் கட்டிய வீட்டுக்கு ‘அன்னை இல்லம்’ என்று பெயர்வைத்து. திறப்பு விழா செய்ய மகன், அம்மாவை அழைப்பதற்கு முதியோர் இல்லம் செல்கிற நாகரிகத்தின் உச்சத்தை நாடு பார்க்கிறது நல்லவர்கள் பார்க்கிறார்கள். தமிழாளனும் பார்க்கிறார். அதனால் குமுறுகிறார். எழுதுகிறார்.

    “பெற்றெடுத்த பிள்ளைதனைப் பேணியுமே ஊணளித்துக்
    கற்கவைத்துப் பணியேற்கக் கண்துஞ்சாப் –பெற்றவரைக்
    கண்கலங்க இல்லமதில் கையற்றே ஏங்கவைப்போன்
    மண்ணகத்து மாண்பில்லான் மன்!”

    என்னும் வெண்பாவில்  ஆஸ்திக்குப் பெற்ற மகனிருந்தும் முதியோர் இல்லத்தில் அனாதையாகிப் போன முதியோர்படும் துன்பத்தைப பாடி

    ஈன்றெடுத்தார் படுப்பதற்கும் உண்ப தற்கும்
    இழிபாயும் பழந்தட்டும் மகனே ஈந்தான்!
    வான்மதிபோல் தம் மகனை வளர்த்த பெற்றோர்
    வற்றல்மரம் சாய்ந்தாற்போல் சாய்ந்தார்! கொம்புத்
    தேன்,பேரன் பாய், தட்டைப் பாது  காத்தான்!
    திகைத்திட்ட பெற்றோரோ ‘எதற்கே?’ என்றார்!
    பான்மழலை,  “நீங்கள் உண்ண. படுக்க என்றான்!”
    பாலகனால் தெளிவுபெற்றார்!  தலைகுனிந்தார்!

    என்று உலக வழக்கில் உள்ளதொரு அங்கதச் சொல்லாடல் ஒன்றினைக் கவிதையாக்கிறார்.  இனி உலகமயப் பேராபத்தில் சிக்கியிருப்பவைகளுள் சுற்றுப்புறக் கேடும் ஒன்றாகும். உலகம் முழுவதும் கடல் மட்டம் அடுத்த சில ஆண்டுகளில் இரண்டடி உயரும் என்கிறார்கள். இமயமலை உருகிவருகிறது என்கிறார்கள். சுற்றுப்புறத் தூய்மை பெருங்கவனம் பெறவேண்டியது இன்றியமையாதது என அரசும் அறிவாளிகளும் அவசரப்படுகிறார்கள். இப்பொருண்மை பற்றிய தமிழாளன் கவிதைப் பங்களிப்பு இப்படி அமைகிறது. .

    “உடல்வளரக்கும் தூய்மையுறும் உண்பொருட்கள் தன்னில்
    உடல்நோயைப் போக்கிநலம் காக்கின்ற மருந்தில்
    திடமோடும் உடல்நிற்க அருந்துகின்ற பாலில்
    சிந்திக்கும் அறிவின்றிக் கலப்படத்தைச் செய்து
    வடமலைபோல் செல்வத்தைக் குவிக்காது நாளும்
    வற்றாது அறவழியில் தேடியநம் தேட்டைக்
    கடனென்று வறுமையிலே வாடுகின்றோர்க் கீதல்
    கற்றவர்கள் போற்றுகின்ற வாணிகத்தின் தூய்மை!”

    என்னும் பாட்டால் சமுதாயத் தூய்மையையும்

    ‘தொடர்வண்டி பேருந்து நிலையம் மற்றும்
    தொடர்கின்ற பொதுவிடங்கள் தோறும் குப்பை
    அடங்கிடவே தொட்டிகளும் அடுக்கடுக்காய்
    அமைத்து அவற்றில் போடுகின்ற எண்ணந் தன்னைக்
    கடன் எனவே மக்களுக்குக் கற்றோர் எல்லாம்
    கற்பித்தால் நகரமுதல் சிற்றூர் மட்டும்
    உடனடியாய்த் தூய்மையெனும் அழகு கொஞ்சும்
    உலகத்தார் கண்டுவக்கும் சொல்லும விஞ்சும்!

    என்னும் பாட்டால் சுற்றுப் புறத்தூய்மையையும் பாடுபோருளாக்கிய பாவலர் இறங்குமுகத்தில் இருக்கின்ற பொருளாதாரப் பாதிப்பிலிருந்து மீளவும் எதிர்காலத்தை உறுதி செய்யவுமான தனிமனிதச் சிறு சேமிப்பையும் வலியுறுத்தி எழுதியிருக்கிறார்.

    “நிலமகளும் தன்வயிற்றில் வைரம். பொன்னை
    நிலையாகப் பிறபொருளை வைத்தி ருப்பாள்!
    மலர்தேடி வண்டுகளும் நாளும் சென்று
    மதுவைத்தன் அடைதனிலே சேரத்து வைக்கும்
    அலைகடலும் தன்மடியில் பவளம் முத்து
    அரியபல செல்த்தைச் சோத்து வைக்கும்
    நிலையில்லா வாழ்வுக்குச் சொந்த மானோன்
    நீர்நிலம்போல் சேமித்து வாழ வேண்டும்!”

    என்னும் பாடலில் உவம அளவையால் சிறுசேமிப்பை வற்புறுத்துகிறார். ‘கஞ்சி குடிப்பதற்கில்லார்’ என்பதும் கவிதைதான். ‘அதன் காரணங்கள் இவையெனும் அறிவுமில்லார்’ என்பதும் கவிதைதான். வறுமைச் சித்திரிப்பு மட்டுமே கவிதையாகிவிடாது. ஒரு காலக்கட்டத்தில் வறுமையை ஒழிப்பதற்கான வழியைக் காட்டுபவரும் கவிஞரே என்பதற்குத் தமிழாளன் ஓரு சான்று.

    “வான்மழையும விரிவெளியும் எதிரும் மண்ணும்
    வளமைமிகு தம்பணியை ஆற்றும் போது
    தான்வேண்டிக் கையூட்டுக் கேட்டதுண்டா?
    தான் அரசுப் பணியமர்ந்த காலத் திற்கும்
    தான்செய்யும் பணிக்கான ஊதி யத்தை
    தவறாதே நாட்டரசு அளிக்கும் போது
    மான்போல மானத்தைக் காகக் வேண்டி
    மதிமயக்கும் கையூட்டை மறுத்தல் வேண்டும்!

    என இன்று மகப்பேறு மருத்துவமனைகளிலிருந்து இருந்து சுடுகாடு வரை புரையோடிப் போயிருக்கும் இலஞ்சத்தைக் கண்டித்துப் பாடியிருப்பதைக் காணலாம். தமிழைப் பாடியிருக்கிறார். தமிழின் இனிமையைப் பாடியிருக்கிறார். இனத்தைப் பாடியிருக்கிறார். அது இழந்த ஏற்றத்தைப் பாடியிருக்கிறார். இன்றைய இழிநிலையைப் பாடியிருக்கிறார். பெண்மையைப் பாடியிருக்கிறார். அதன் பெருமையைப் பாடியிருக்கிறார். இன்னும் என்னென்னவோ பாடியிருக்கிறார். ஆனால் பிறரால் அவ்வளவாகச் சீண்டப்படாத சமுதாயத்திற்குத் தேவையான இத்தகைய அரிய சிலவற்றையும பாடுபொருளாக்கியிருக்கிறார். அதன்வழி பாடுபொருளில் தனக்கான தனிமுத்திரையை அவர் பதிவு செய்திருக்கிறார்.

    தமிழாளன் கவிதைக் கட்டுமானத்தில் மரபு

    கட்டுமானச் சிறப்பு என்பதை உத்திச் சிறப்பு என்றும் சொல்லலாம். கவிதை உத்திகளால் சிறக்கிறது. அது கவிதையின் பாடுபொருளாலும் கவிஞனின் அப்பொழுதைய மனநிலைக்கும் ஏற்ப நிர்ணயிக்கப்படுகிறது.‘  ‘கவிதையில். ‘வடிவம்’என்பது ‘சீர், தளைகளால் அமைந்த யாப்பை மட்டும் சுட்டாது, சொல்லாட்சி, பன்முக உத்திகள், வெளிப்பாட்டுமுறை முதலியவற்றையும் சுட்டும் ஒரு குறியீடாகவே கருதப்படும். பாவலர் தமிழாளன் கவிதைகளில் இவை அமைந்திருக்கும் பாங்கினைச் சுருக்கமாகக் காணலாம்.

    மரபு என்பது திட்டமிட்டுத் திணிப்பதன்று. படைப்புக்களில் தானாகவே வந்து அமைது. படிவது. “வீடு அமைய வேண்டும்,. மனைவி அமைய வேண்டும், மனத்துள் படிய வேண்டும் என்பனபோல. பாரதி உள்ளிட்ட தமிழ்க் கவிஞர்களில் தமிழைப்பாடாத கவிஞர்களே இல்லை. அவருள்ளும் ஒப்பாரும் மிக்காரும் இன்றித் திகழ்பவர் பாவேந்தர். அதனால்தான் மொழியை வாழ்த்துகிறபோதோ அவையடக்கம் கூறுகிறபோதோ அவருடைய தாக்கம் அல்து பாதிப்பு இல்லாத எந்தத் தமிழ்க்கவிஞரும் கவிதையைத் தொடங்க முடிவதில்லை.

    “பயிலுறு அண்ணன் தம்பி — அக்கம்
    பக்கத்து உறவின முறையார்
    தயை மிக உடையாள் அன்னை — என்னைச்
    சந்ததம் மறவாத் தந்தை
    குயில்போல் பேசிடும் மனையாள் — அன்பைக்
    கொட்டி வளர்க்கும் பிள்ளை
    அயலவர் ஆகும் வண்ணம் — தமிழ் என்
    அறிவினில் உறைவது கண்டீர்!”

    என உறவுகளை உதறித்தள்ளும் உணர்வாகத் தமிழைக் காண்கிறார் பாவேந்தர். சிந்தில் சிந்திய பாவேந்தர் உள்ளத்தை அப்படியே விருத்தத்தில் பதிவு செய்கிறார் தமிழாளன்.

    தீதில்லா மனையாளின் செங்கண் பார்வை,
    தீஞ்சுவையாய்க் கனிகின்ற செவ்வாய முத்தம்
    ஓதி கோதி முகர்கின்ற மலரின் நாற்றம்
    ஒளிமிகுந்த நிலவனைய முகத்தின் தோற்றம்
    பாதிவிழி இதழ்மூடப பருகும் கூடல்
    பருகுகையல் காற்றோடாது அணைக்கும் பார்வை
    ஓதிடினும் இன்பமென்றே உயர்ந்து வானின்
    ஒப்பில்லாத் தமிழுக்கே ஈடும் ஆமோ?

    பாரதிதாசன் அத்தனை உறவுகளையும் அயலனவாக்க இந்தப் பாட்டில் ;மனைவியை மட்டும் பிரிததுப் பாடியதும் ஓர் மரபே! எவ்வாறு எனின் பாவேந்தரே அவ்வாறு பாடியிருக்கிறார்.

    “மங்கை ஒருத்திதரும் சுகமும் – எங்கள்
    மாத்தமிழ்க்கு ஈடில்லை என்றுரைப்போம்!”

    என்று பாவேந்தர் பாடியது குறள் என்றால் தமிழாளன் பாடியது பரிமேலழகர் உரை எனலாம். ‘தருசுகம்’ என்னும் வினைத்தொகையைப் பாவலர் பொருட்தொகையாக்கியிருக்கிறார்.

    “ஒளிநிறைநத பகலவனும் இருண்ட துண்டோ?
    உலவி வரும் காற்றினுக்கே ஓய்வும் உண்டோ?
    நளிநீரின் தண்மைக்கும் மாற்றமுணடோ?
    நறுமலர்கள் மணக்காது மாய்தல் உண்டோ?
    வெளிநிலவின் குளிர்ச்சிக்கே குறைவுமுண்டோ?
    வளமளிக்கும் மாரி, கையை  மடக்கல் உண்டோ?
    களிப்போடு பிறர் வாழத் துன்பமின்றிக்
    கைகொடுக்கும்  தமிழனுக்கே தாழ்ச்சி உண்டோ?

    என்று தமிழனுக்குத் தாழ்ச்சியில்லை என்பதற்கு அவனுடைய பக்குவப் பண்பாட்டைக் காரணமாக்குகிறார். பகலவன், காற்று, நீர், மலர், நிலவு, மழை, என்னும் உவமங்களால் தன்னலமற்ற பணிக்கான தமிழ்மரபுக்கு எந்த நாளும் வீழ்ச்சியில்லை என்பது ஓர் புதிய பார்வை.

    மணிவாசகப் பெருமானும் தமிழாளனும்

    மணிவாசகப் பெருமானைத் தமிழாளனோடு  ஒப்பிடுவதாக எண்ணிவிடக் கூடாது. தலைப்புக்காக வைக்கப்பட்டது. அவையிரண்டுமே அவர்கள் எழுதிய நூலுக்கு வந்த ஆகுபெயர்கள். மணிவாசகப் பெருமான் திருவாசகத்தில் திருச்சாழல் என்ற பகுதியை மகளிர் இருவர் பங்கு கொள்ளும வினா விடை பாங்கில் எழுதியுள்ளார். அது ஓர் உத்தி.

    “தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச் சிற்றம்பலவன்
    நான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ?”

    “தில்லைச சிற்றம்பலத்துப பெருமான் திருவாலங்காட்டுக்குச் சென்று நடனம பயின்றது ஏன்?’ என்பது ஒருத்தியின் வினா.

    “நான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம்
    ஊன்புக்க வேற்காளிக் கூட்டங்காண் சாழலோ?”

    “அவ்வாறு அவன் திருவாலங்காட்டுக்குச் சென்று நடனமாடியிருக்காவிடின், இவ்வுலகத்தையே காளி விழுங்கியிருப்பாள்’  என்பது மற்றொருத்தியின் விடை இரத்தபீசன் என்னும் அரக்கனைக் கொன்ற ஆவேசத்தில் உலகத்தையே அழிக்க எண்ணும் காளியை அடக்கிய தொன்மம் இது.  பாவலர் தமிழாளன் இந்த உத்தியைத் தெரிந்தோ தெரியாமலோ பயன்படுத்தியிருக்கிறார். அல்லது இந்த உத்தி அவருடை படைப்பில் அமைந்திருக்கிறது. குணங்கள் மூன்றும் மாறி மாறி வருவதால் சொல்வார் நோக்காது சொற்பொருள் நோக்கி மெய்ப்பொருள் காண்பதே அறிவு என்பது வள்ளுவம். இநதக் கருத்தியலைத் தமிழுக்கு ஏற்றி

    “எப்பொருளே யார்யார்வாய்க கேட்டாலும் அதனின்
    மெய்ப்பொருளே அறிவென்று பகர்ந்த மொழி எதுவாம்?”

    என்று பாடுகிறார். மொழியைக் கருவியாக வள்ளுவர் பயன்படுத்த, தமிழாளனோ அதனைக் கருத்தாவாகவே கருதி,

    “இப்புலத்தார் இறைஞ்சுகின்ற நெற்றிக்கண் காட்டும்
    இறையெனினும் குற்றமென்ற நக்கீரன் தமிழே!”

    என்றும் அந்த  வினாவிற்கு விடையிறுக்கிறார். வள்ளுவர் தமிழை நக்கீரன் தமிழாகக் காணும் அழகியல் சுவைக்கலாம். தொடர்ந்து

    “செப்புகின்ற ஐம்புலத்தை அடக்குகின்ற வாழ்வே
    சீர்மிகுந்த துறவென்று செப்புமொழி  யாதாம்?”

    என உண்மையான  துறவினை அடையாளப்படுத்துகிற மொழி எது ஒருவர் வினவ,

    “இப்புவியில் சான்றோர்க்குப் பொய்யாமை விளக்கே
    ஈடில்லா அறவிளக்கென் றுரைத்ததுவும் தமிழே!”

    இலக்கியத்திற்கு வடிவங்கள். பல. ஒவ்வொரு வடிவத்திற்குள்ளும் உத்திகளும் பல. உரைநடை இலக்கியத்தில் நாவல், சிறுகதை, கடிதம், நாடகம், ஓரங்க நாடகம் என்னுமாறு அமைந்த படைப்புக்கள் பலவாயினும் அவற்றுள் ஊடிழையாக ஓழும உத்திகளில் படைப்பாளனின் ஆளுமையைக் காணலாம். கவிதையிலும் இத்தகைய உத்திகள் உண்டு. வினாவிடை  என்பதும் அவற்றுள் ஒன்று. அதனைத் தமிழாளன் தமிழின் பெருமை சேர்க்கக் கையாணடிருக்கிறார்.

    கவிதையில் வடிவத்தின் ஆளுமை

    செய்யுளிலக்கணத்தில் ‘யாப்பு’ என்பது, தற்காலத் திறனாய்வுப் பார்வையில் ‘உருவம்’ அல்லது ‘வடிவம்’ என்று அழைக்கப்படுகிறது. உணர்ச்சியின் வெளிப்பாடே கவிதையென்பது உண்மையாயினும் அழகான கற்பனையும் பொருத்தமான வடிவமும் அமையாவிடின் கவிதையின் நோக்கம் நொறுங்கும். ஆக்கம் சிறக்காது. படைப்பவனின் உணர்ச்சியனுபவத்தை நுகர்வோனுக்குக் கொண்டு சேர்க்கும் தனித்ததொரு ஊடகமாகச் செயல்படுவது வடிவமே.

    “கவிஞர்; தம் எண்ணத்தையும் உணா;ச்சியையும் சுவைஞருக்கு உணர்த்த முற்படும் ஆழ்ந்த முயற்சிகளே இலக்கிய வடிவமாகும்……..இலக்கியம் அழகு பெறுவது வடிவத்தால்”

    உணர்ச்சிக்கும் கருத்துக்கும் பொருத்தமான வடிவம் அமையாவிட்டால், அல்லது  அவை தம்முள் மாறுபட அமைந்துவிட்டால் கருச்சிதைவைப்போல ‘படைப்புச்சிதைவையும்  தடுக்க இயலாது. இலக்கியத்தின் வெற்றியும் பெருமளவுக்குப் பாதிப்புக்குள்ளாகும். ‘ஓரு இலக்கியம் சிறந்ததா? இல்லையா? என்பது  அதனுள் அமைந்த உணர்ச்சியின் விழுப்பத்தைப் பொருத்தது. ஓர்  இலக்கிய நூல் நன்கு அமைந்ததா? இல்லையா? என்பது உணர்ச்சிக்குத் தரப்பட்ட வடிவத்தைப் பொருத்தது.’

    யாப்பின் மந்தணம் ஓசை ஒழுங்கே

    யாப்பில் நுட்பமாக அமைந்துள்ள ஓசை ஒழுங்கே அதன் கொடுமுடியாகும். ‘இன்ன சீர்கள் இன்னவாறு அமைந்தால் இன்ன தளைகள் தோன்றும்., தோன்றவே இன்ன ஓசை புலப்படும்’ என்பது யாப்பறி கல்வியின் பள்ளத்தாக்கு.  குறிப்பிட்ட ஒரே யாப்பில் அமைந்த பாடல்கள் பலவற்றைப் பலகாலும் பயின்று, அவற்றுள் இழையோடும் ஓசை நுட்பத்தை மனத்தில் உள்வாங்கிக்கொண்டு, அவ்வோசை ஒழுங்கின் அடிப்படையில் பாடல்கள் படைக்கப்படின் அப்பாடல்களில் முறையான தளையும் வரவேண்டிய சீரும் தாமாகவே அமையும்’ என்பது யாப்பறி கல்வியின் கொடுமுடி.

    “யாப்பில் வந்தடங்கும் வார்த்தைகளே கவிதை யாகும்”

    என்னும் கவிஞா; சுரதாவின் வரிகள் காட்டும் கவிதை அரிச்சுவடி இதுதான். இனிப்பில் செய்யப்பட்ட தின்பண்டங்களைப் பலவகை உருவங்களில் கொடுப்பதைப் போன்றது இது. கிண்ணங்கள் மாறுபடுவதனால் தேனின் சுவை மாறுபடுவதில்லை.

    தமிழாளன் கவிதைகளில் யாப்பின் ஆளுமை

    கட்டுப்பாடுகள் மிகுந்த வெண்பாவையும் கட்டளைக் கலித்துறையையும் கட்டுப்பாடுகள் குறைந்த விருத்தத்தையும் தம் ‘கவிதைக் குழந்தைகள்’ எனக் கருதிக் கையாளும் அவருடைய கவிப்பண்பாடும் கவியாற்றலும் வியப்புடன் நோக்கப்படுகின்றன. ‘எல்லாப் பாக்களும் இதற்குள் அடக்கம்’ என்னும் சிறப்புரிமை கொண்ட ஆசிரியப்பாவையும் இவர் மிக இலாவகமாகக் கையாண்டிருக்கிறார்.

    விளையாட்டுத் திடலான விருத்தங்கள்

    கேட்காதவரே இல்லை என்று சொல்லும் படியான சில் பாடல்கள் தமிழில் உண்டு. அவற்றுள் ‘கைவீசம்மா கைவீசு! கடைக்குப் போகலாம் கைவீசு’ என்ற பாட்டும் அடங்கும். பாசமலர் திரைப்படத்தில் உரையாடல் எழுதிய ஆரூர்தாஸ் நடிகர் திலகத்தின் உரையாடலோடு சேர்க்க, அவர் பேச, திரைப்பட அரங்கத்தின் அஸ்திவாரமும் அழுத கதை நாடறியும். நடைபாதை அறியும். . உண்மையில் அந்தப் பாட்டு மரபு சார்ந்த அதாவது ஒலி சார்ந்த அறுசீர் விருத்தம்!

    “கைவீ சம்மா கைவீசு!” தேமா   தேமா தேமாங்காய்

    “கடைக்குப் போகலாம் கைவீசு!”       புளிமா கூவிளம் தேமாங்காய்!

    இந்த வாய்பாடு அடியவர்களையும் ஆற்றல் மிக்க கவிஞர்களையும் வர்ந்திருக்கிறது. மணிவாசகப் பெருமான் பாடுகிறார்

    “அன்றே  என்றன் ஆவியும்
    உடலும் உடைமை எல்லாமும்
    குன்றே அனையாய்  என்னைஆட்
    கொண்ட போதே கொண்டிலையோ?
    இன்றோர் இடையூ றெனக்குண்டோ
    எண்தோள் முக்கண் எம்மானே
    நன்றே செய்வாய் பிழைசெய்வாய்
    நானோ இதற்கு நாயகமே?

    ‘கைவீசம்மா’வின் பாட்டின் சந்தம் எங்கேயிருக்கிறது பார்த்தீர்களா? திருவாசகத்தில் இருக்கிறது. இந்த ஒலியில் தமிழாளன் செய்திருக்கும் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் இப்படி அமைந்திருக்கிறது.

    ‘இன்ப வாழ்வு ஒளிர்ந்திடவும்
    எல்லா வளமும் துலங்கிடவும்
    துன்பம் ஓடித் தொலைந்திடவும்
    தூய்மை எங்கும் துலங்கிடவும்
    மன்னும் செயல்கள் மாண்புறவும்
    மாறா அறமே மலர்ந்திடவும்
    என்றும் இயற்கை பின்செல்வோம்!
    இன்ப ஆழி நீந்திடுவோம்!

    அறுசீர் விருத்தத்தைக் கம்பன் உள்ளிட்ட விருத்த வேந்தர்கள் எழுதிய மற்றொரு வாய்பாட்டில் தமிழாளனும எழுதியிருக்கிறார்.

    மண்ணுக்கு மழையே  காதல்
    மரததிற்குப் பசுமை காதல்
    பண்ணுக்கு இசையே காதல்
    பைந்தமிழ்க்கு அறமே  காதல்
    பெண்ணுக்குத் திண்மை காதல் ;
    பெற்றோர்க்குப் பிள்ளை காதல்!
    கண்ணுக்கு  ஒளிதான காதல்!
    கற்றோர்க்கே அறிவு காதல்!

    அறுசீர் விருத்தத்தில் அரிதான இன்னொரு  வித்தையையும்   செய்து காட்டியிருக்கிறார் தமிழாளன்.

    “கண்ணை  இமைகள் காக்கா விடினே காடசியைக் காண்போமா?
    மண்ணில் வேர்கள் நில்லா தொழியின் மரங்களும் நிற்றலுண்டோ?
    விண்ணில் பறந்தே காகா என்றே விளம்புதல் காகத்தின்
    தண்ணார் தமிழைக் காக்கத் தமிழரைத் தூண்டிடும் அழைப்பன்றோ?

    முதல் ஐந்து சீர்கள் ஈரசைச்சீர்களாக நிற்க இறுதிச சீர் மட்டும் காய்ச்சீராக நின்று அமையும் இந்த அறுசீர் விருத்தம் இப்படி அமைந்திருக்கிறது என்றால்

    “வான்மழையே  வையகத்தல்
    பொய்யாதே பொய்ப்பாயேல்
    புல்லுந் தோன்றா!
    கோன் தீயன் குடியழிக்கும்
    கொடுங்கோலன் எனநாட்டார்
    குறையும் சொல்வார்
    கான்வெட்டிக் கழனிகளைக்
    கடும்உழைப்பின் உழவரெல்லாம்
    கழனி செல்லார்!
    தான்துறந்தே வாழ்துறவி
    தக்கபடி நின்றிடவே
    மழையே  வாழி!”

    என்ற இந்த அறுசீர் விருத்தம் இப்படி அமைந்திருக்கிறது. கம்பனின் யுத்தகாண்டம் அழகு பெற்றது இந்த யாப்பில்தான். இருபத்தேழு வகையான சீர்களை மாற்றியமைத்தன் மூலம் கலிவிருத்தத்தைக்  காப்பிய விருத்தமாக்கினான் கம்பன். யுத்தகாண்டத்தின் அவலக் குரலைக் கம்பன் இந்த யாப்பில்தான் பதிவு செய்திருக்கிறான். அது மட்டுமன்று. ‘விசும்பின் துளிவீழின் அல்லால் பசும்புல் தலைகாண்பதரிது ‘வானம் வறக்குமேல், தானம் தவமிரண்டும் தங்கா’  என்னும் குறட்பாக் கருத்துக்களையும் ‘மழைவளம் கரப்பின் வான்பேரச்சம்’ என்னும் சேரன் செங்குட்டுவனின் அச்சத்தையும் நினைவுபடுத்தி எழுதுகிறார்.

    எடுப்பார் கைப்பிள்ளையான எண்சீர் விருத்தம்

    ‘மரபுக்கவிஞர்’ என்று சொலலிக் கொண்டு தமிழ்க்கவிதை உலகத்தை எப்போதும் நடுங்கச் செய்து வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் கையாள்கிற யாப்பு இந்த எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம். வெற்றசைகளால் வீணாகிப்போன விருத்தங்கள் குற்றிய உமியினும கோடியாம். எல்லாரும் வள்ளலார் ஆகிவிட முடியாது. பாவேந்தர் ஆகிவிட முடியாது சிந்தனையடர்த்தியே இல்லாமல் பாட்டெழுதியதன் விளைவு இது. அந்த எண்சீர்விருத்தம் பெரும்பாலும் இப்படி அமையும்

    ‘தேமாங்காய் தேமாங்காய் தேமா தேமா’

    என்னும் அரையடி இலக்கணம் பெற்று அமைந்த அந்தப் பாட்டு காலப்போக்கில் பல மாற்றங்களைக் கண்டது. இறுதியாகக் காய் காய் மா மா என்று தங்கள் வசதிக்காகப் பலர் சுருக்கிக் கொண்டனர்.

    “தமிழ்த்தாயே ‘தமிழாளன்’ என்ற என்னைத்
    தமிழ்நிலத்தே மகனாகப் பெற்றுவிட்டாள்!
    தமிழ்க்கதிராம் ஒளிவெள்ளம் துறைகள் தோறும்
    தடையின்றித் தரணியெங்கும் பாயச் செய்து
    தமிழ்மறையின் மணியோசை ஒலிமு ழக்கம்
    தக்காங்கு பரவும் வகை செய்யேனாயின்
    தமிழ்த்தாயும்  என்றனுக்கு அன்னையாகாள்

    “தமிழ்த்தாய்க்கு நானும்சேய் ஆவ துண்டோ?

    என்றெழுதிக் காட்டிய வல்லாளர் தமிழாளன் ‘ஏறுமயில் ஏறிவிளையாடும் முகம் ஒன்று’ என்ற ‘அருணகிரியின் விருத்தச்சிந்திலும்’ தன் வித்தகைத்தைக் காட்டியிருக்கிறார்.

    ‘காட்டுவளம் மலரவேண்டின் வான்மலர வேண்டும்!
    கட்டாகும் உடல்மலரக் கழனிமலர் வேண்டும்!
    நாட்டுவளம் மலரநல்ல ஆட்சிமலர் வேண்டும்!
    நட்புமலர் மலரநல்ல பண்புமலர் வேண்டும்!
    ஏட்டதனில் இலக்கியமும் மலர்ந்திடவே வேண்டின்
    ஈடில்லாப் புலமைநலம் மலர்ந்திடவே வேண்டும்!
    வாட்டுகின்ற துன்பமலர் அண்டாதே வேண்டின்!
    வையகத்தில் உழைப்புமலர் வளர்ந்தோங்க வேண்டும் !

    ‘காய் காய் காய் மா’ என்னும் இந்த யாப்பு, ‘கலையுரைத்த கற்பனையே நலையெனக் கொணடாடும்’ ‘கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த’ என்னும் வள்ளலார் பாடல்களால் பெருமை பெற்ற இப்பாட்டு பின்னாளில் ‘அன்றந்த இலங்கையினை ஆண்டமற வேந்தன்’ என்னும் பாவேநதரால் பெருமை பெற்றது. இன்றைக்குத் தமிழாளனால் பெருமை பெறுகிறது.

    கைக்குழந்தையான கட்டளைக் கலித்துறை

    ‘துறை’  என்றால் ஐந்து, அடிக்கு ஐந்து சீர்கள். எனவே நான்கு சீர் இடைவெளிகளில் வெண்டளைப் பந்தம் வேண்டும். நேரசையில் தொடங்கினால் ஒற்றெழுத்து நீங்க பதினாறு எழுத்துக்கள். நிரையசையில் தொடங்கினால் ஒற்றெழுத்துக்கள் நீங்க பதினேழு எழுத்துக்கள். அடியின் ஐந்தாவது சீர் மூவசைச்சீர்களுள் கருவிளங்காய் கூவிளங்காய் என்றே அமைதல் வேண்டும் ஓரடிக்கு இலக்கணமாகிய இந்தக் ‘கட்டளை’யை ஏற்று நான்கடியாய் எழுதினால் அது கட்டளைக் கலித்துறை. இது நான்கு வகைப்பாக்களிலோ அவற்றின் எந்தத் துறையிலுமோ சேராது இணையாது. தனித்துவமிக்கது. தரமிக்கது ஆனால் படைப்பாளர்களுக்குத் தலைச்சுற்றலை ஏற்படுததுவது. ஆனால் இதனையும் மிக மிக இலாவகமாகக் கையாண்டவர்க்ள இருக்கிறார்கள்.

    “நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச
    சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு
    வாயகி, மாலினி, வராகி, சூலினி, மாதங்கி, என்று
    ஆய கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே’

    என்னும் அபிராமி அந்தாதியுள் பன்னிரண்டு பெயர்ச்சொற்களை நிரலாக அடுக்கி  வந்த பாட்டில் கட்டளைக் கலித்துறையின் இலக்கணம் கைகட்டி ஊழியம் செய்வதைக் காணலாம். எளிமைக்குப் பெயர் போன கவிமணி மிகக் கடினமான இநத யாப்பில் எழுதிய

    நாடிப்  புலங்கள்  உழுவார்  கரமும்  நயவுரைகள்
    தேடிக்  கொழிக்குங் கவிவாணர்  நாவும் செழுங்கருணை
    ஓடிப்  பெருகும்  அறிவாளர்  நெஞ்சும்  உவந்துநடம்
    ஆடிக் களிக்கும்  மயிலே உன்பாதம்  அடைக்கலமே

    என்னும் பாடல் அவருடைய யாப்பியல் புலமைக்கும் எளிமைக்கும் கவிதைக் கட்டுமானத்திற்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

    “இஞ்சியும்  மஞ்சளும் நெல்லும் கரும்பொடு வாழையுமே
    கொஞ்சிடும் நஞ்சை  விளைச்சலைக் கண்டு குதூகளிக்கும்
    வஞசனை  இல்லாத  வண்டமிழ்ச சான்றோர் வடிவழகைப்
    பஞ்சடி வைத்துமே பார்க்கும் சுறவத்தின் பொங்கலுமே!”

    ‘இருள்களைந் தெங்கும் இயல்பாய் ஒளியும் இமிழ்ந்திடவம்
    அருள் மனம் கெர்ணடோர் அறவழி மக்கள் அடிதொழவும்
    இரும்புடை நெஞ்சம் இருநீலம் எங்கும் இரிந்திடவும்
    வருந்தமி ழாண்டின் வளமார் சுறவத்தை வாழ்த்துவமே!’

    என்னும் கட்டளைக் கலித்துறைகளை அவற்றின் குகையிலேயே சந்தித்திருக்கிறார் தமிழாளன். நேரசையில் தொடங்கியும் எழுதுகிறார். நிரையசையில் தொடங்கியும் எழுதுகிறார். இஞ்சியும்  மஞ்சளும் நெல்லும் கரும்பொடு வாழையுமே எனப் பெயர்ச்சொற்களை அடுக்கியும் எழுதுகிறார். இமிழ்ந்திடவும் அடிதொழவும், இரிந்திடவும் என்னும் வினையெச்சங்களை அடுக்கியும் கவிதைத் தொழில் செய்கிறார்.

    வெண்பா ஓரு விளையாட்டுத்திடல்

    தமிழ் யாப்பியல் மரபில் வெண்பாவும் கட்டளைக் கலித்துறையும் புலவர் பெருமக்களுக்கு இன்றியமையாத ஒன்றாகும். சீர், தளை முதலியவற்றின் கட்டுப்பாடுகள் மிகக் கடுமையானதாக இருக்கும். ஆனால் இவற்றைத் தம் ஆளுகைக்கு உட்படுத்திய புலவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். வெண்பாமாலை பாடிய ஐயனாரிதனாரும் நளவெண்பா பாடிய புகழேந்தியும் மணிமேகலை வெண்பா பாடிய பாவேந்தரும் கோவை மற்றும் அந்தாதி இலக்கியம் பாடிய சான்றோர்களும் இவற்றுக்கு எடுத்துக்காட்டாகிறார்கள்.

    ஐவகை வெண்பாக்களுள் நேரிசை வெண்பாவும் ஒன்று. பதினைந்து சீர்களைக் கொண்ட இந்த வெண்பாவில் பதினான்கு தளைகள் இடைநிற்கும் பாங்குடையது. இப்பதினான்கு சீர்களும் இயற்சீர்வெண்டளையாகவும் வெண்சீர் வெண்டளையாகவும் பெரும்பாலும் கலந்து நிற்குமேயன்றி இயற்சீர் வெண்டளையாகவோ வெண்சீர் வெண்டளையாகவோ அமையாது. அவற்றுள்ளும் வெண்சீர் வெண்டளையாகவே பதினான்கு தளைகளையும் அமைத்துப் பாடுவது அரிய திறன்.

    “யாதானும் நாடாமல் ஊராமால் என்னெருவன்
    சாந்துணையும் கல்லாத வாறு”

    என்னும் குறட்பாவில் மட்டுந்தான் ஆறு சீர்களில் இத்தளை  மட்டுமே வந்துள்ளது. எஞ்சிய 1329 குறட்பாக்களிலும் இது அமையவில்லை என்பதிலிருந்தே இதன் அருமைப்பாட்டை உணர முடியும். ஏழு சீர்களுக்கே இந்த நிலை என்றால் பதினான்கு சீர்களுக்குச் சொல்ல வேண்டுவதில்லை. பாரதிதாசனுக்குப் பின்வந்த கவிஞர்களில் நிறைவான யாப்பறி பாவலரான வைரமுத்து,

    “தத்திவரும் முத்தமொழி தத்தையென முத்தமிடும்
    சித்திரம்போல் பூஞ்சிவப்பு சிந்திநின்ற – அத்தைமகள்
    பூப்பெய்தி விட்டாளாம் பூமகளின காலடியில்
    பூப்பெய்தேன் என்ன வியப்பு?

    “தேனளந்து வைத்திருக்கும் செவ்விதழால் என்னெஞ்ச
    வானளந்த வண்ணநிலா வந்துநின்றாள் – நானழைத்து
    கிள்ளாமல் கிள்ளிமிகக் கேலிசெய்வேன் என்றிளைத்துச்
    சொல்லாமல் போகும் சுடர்”

    என்னும் இரண்டு வெண்பாக்களில் இந்த வித்தையில் இயன்றவரை வென்று காட்டியிருக்கிறார். காரணம் பதினான்கு தளைகளில்  அவரால் பதிமூன்று சீர்களில்தாம் வெண்சீர் வெண்டளையை விரவ முடிந்திருக்கிறது. தமிழாளன் எழுதியிருக்கும்

    “கட்டுகிற கந்தைக்கும் கால்வயிற்றுக் கஞ்சிக்கும்
    ஒட்டியநல் மெய்யோடும் ஓடியுமே — நட்டமரம்
    பல்லோரும் உண்டிடவே பாரெங்கும் காய்த்துநிற்கும்
    இல்லாத ஏழைக்கே தூண் ?

    “தன்னலமே ஊற்றெடுக்கத் தானேறிக் கொற்றத்தில் /
    மன்னுசெயல் அத்தனையும் தான்மறந்து– மன்னுவசை
    பூக்கவைத்து மாநிலத்தில் பூரியரை வாழவைப்போன்
    தீக்கனலாம் என்றென்றும் தேர்!“

    என்னும் வெண்பாக்களில் பதினான்கு தளைகளை வெகு இலாவகமாகக் கையாண்டுள்ளதைக் காணலாம். இதனால் கவிதைச் சுவை கூடிவிடும் என்பதல்ல கருத்து. அரியவகை யாப்பினையும் முழுமையாகக் கையாளும் ஆளுமையை எடுத்துக்காடடுவதே இங்கு நோக்கம்.

    நிறைவுரை

    நல்ல கவிஞனுக்குக் கவிதையின் அனைத்துப் பரிமாணங்களிலும் ஆளுகை செய்யும் திறன் வேண்டும். யாப்புப் பற்றிய தெளிந்த அறிவும், பொருளுக்கும் உணாச்சிக்கும் ஏற்ற பொருத்தமான வடிவத்தைத் தேர்ந்தெடுப்பதில் எச்சரிக்கை உணர்வும் பெரிதும் தேவைப்படுகிறது. நிதானம், பொறுமை, தெளிவான சிந்தனை, தொடர் கல்வி, நிறைந்த பயிற்சி முதலியவை ஒருங்கமைந்தால் அன்றி இக்கவிதை வித்தையில் வெற்றி பெறுதல் கடினம். அந்த வெற்றியை வெகு எளிதாகப் பெற்றிருக்கிறார் தமிழாளன். அவர் எளிய உள்ளம் பெற்றவர். அதனால் கவிதைப் பேறு கைவரப்பெற்றிருக்கிறார்.  ‘உழுமகன் கைகள் சிவப்பதைப் போன்ற ஒளிரும் கதிரவனே!’ என்பது போன்ற உவமங்கள் தனி ஆய்வுக்குரியன. கவிதைப் பந்தியில் அவர் பரிமாறியனவற்றில் பதம் பார்த்துச் சுவைத்தவற்றைச் சொல்லியனவே இவை. ‘நல்லாரைக் காண்பதும் அவர் சொல் கேட்பதும் அவரோடு இணங்கியிருப்பதும் நல்லவை எனபர் சான்றோர். நெஞ்சில் கரவில்லா ஒரு கவிதை வல்லாளரை அறிமுகம் செய்வதும் நன’மையே! வெல்க தமிழாளன் விரல்கள்!

    Share
  • குருப்பெயர்ச்சி பலன்கள் | 2021-23 | வேதா கோபாலன்

    குருப்பெயர்ச்சி பலன்கள் | 2021-23 | வேதா கோபாலன்

    2021-23ஆம் ஆண்டுகளுக்கான, 12 ராசிகளுக்கும் உரிய குருப்பெயர்ச்சி பலன்கள் இதோ. ஜோதிடத் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கடன் அட்டை சூட்சுமங்கள் | ராமகிருஷ்ணன் நாயக்

    கடன் அட்டை சூட்சுமங்கள் | ராமகிருஷ்ணன் நாயக்

    கிரெடிட் கார்டு எனப்படும் கடன் அட்டை வழங்கும் நிறுவனங்களின் நோக்கம், வணிக உத்திகள், வாடிக்கையாளர்களின் உளவியல், டிஸ்கவுன்ட் என்ற பெயரில் வழங்கப்படும் தள்ளுபடிகளின் பின்னணி, சில வங்கிகள் மட்டும் அடிக்கடி தள்ளுபடி வழங்குவது எப்படி, இந்தத தள்ளுபடியால் லாபம் அடைவோர் யார் யார்… என இதில் நாம் அறியாத விஷயங்கள் பல உண்டு. இந்த சூட்சுமங்கள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக், அழகாக விளக்குகிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஓர் எளிய யோசனை – 10

    ஓர் எளிய யோசனை – 10

    தாம்பரத்தில் உள்ள அன்னை அருள் மருத்துவமனையில், ஒரு புதுமையான தோட்டம். பார்த்து மகிழுங்கள். நீங்களும் செய்து பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அசுரப் பேய்மழைச் சூறாவளி ‘ஐடா’ வட கிழக்கு அமெரிக்காவில் விளைத்த பேரழிவுகள்

    அசுரப் பேய்மழைச் சூறாவளி ‘ஐடா’ வட கிழக்கு அமெரிக்காவில் விளைத்த பேரழிவுகள்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    A homeless couple with a sign asking for help after Hurricane Ida in Homa.

    Category 4 Mighty Hurricane IDA

    flooded NYC street filled with people, cabs, and buses

    மழை வெள்ளத்தில் நியூயார்க் நகரம்

    https://nypost.com/2021/08/30/photos-show-hurricane-idas-destruction-across-louisiana/

    New Orleans Firefighters assess damages as they look through debris after a building collapsed from the effects of Hurricane Ida.

    லூசியானாவில் ஹர்ரிக்கேன் ஐடா விளைத்த பேரழிவுகள்

    New york Flooding

    FLOOD IN NEWYORK

    ஹர்ரிக்கேன் ‘ஐடா’ அதிவிரைவில் எப்படி அசுர வலுப்பெற்றது ?

    2021 ஆகஸ்டு 31 இல் உருவாகி, லூசியானா மாநிலத்தைப் பேரளவில் சீரழித்து, பெருமழையில் நியூயார்க், நியூஜெர்சி, பென்சில்வேனியா, மேரிலாண்டு நகரங்களை வெள்ளத்தில் மூழ்க்கிய ஹர்ரிக்கேன் ஐடா, எப்படி மூர்க்கத்தில் முதல் நிலையில் இருந்தது, அதிவிரைவில் நான்காம் நிலைக்கு [Storm Category 1 to Category 4] மாறியது என்பது வியப்பாக உள்ளது ! சூறாவளி ஐடாவின் வேகம் 85 mph லிருந்து 150 mph ஆக ஒரே நாளில் விரைவு திரட்சி பெற்று ஏறியது எப்படி ? 24 மணி நேரத்தில் சூறாவளி வேகம் 30 knots [35 mph] மாறுவதற்கு ஆற்றல் எப்படி வந்தது ?

    வேனிற் பரப்புத் தளங்களைத் தாக்கும் புயல்கள் நடுவண் அழுத்தம், 24 மணி நேரத்தில் 42 millibars [0.61 psi] குன்றினால், அவை “விரைவு ஆழ்வு நுழைவு” [Rapid Deepening] ஆற்றல் அடைவதாய்க் கூறப்படும். சூறாவளி ஐடாவின் மைய அழுத்தம், 24 மணி நேரத்தில் 56 millibar [0.81 psi] குன்றி உள்ளது. அதாவது உச்ச ஆற்றல் பெற்றுள்ளது.

    இதுவரை 49 பேர் [2021 செப்டம்பர் 5] உயிரிழந்ததாக அறியப்படுகிறது.

    வேனிற் கால வட அமெரிக்க மழைச் சூறாவளிகள் அசுர வலு எப்படிப் பெறுகின்றன ?

    1. முதலில் கடல் மூலம் பேரளவு ஆற்றல் சேமிப்பு மேற்தள அடுக்கு வெப்ப நீர் வெள்ளம் மிஞ்சிய சேமிப்பாய்ச் சேர்கிறது.
    2. இரண்டாவது தேவை கடலின் மேற்தள வெப்ப நீர்மை ஆவி [Water Vapour, Accumulated over Several Decades in the Oceans] . சூடாகும் நீர் வெள்ளம் பேரளவு நீர்மை ஆவியைக் காற்றில் ஏற்றுகிறது. மேலும் சூடான காற்று பேரளவு நீர்மை ஆவியைச் சேமித்துக் கொள்ள ஏதுவாகிறது. 1990 ஆண்டிலிருந்து, சூழ்வெளிக் காற்றில் சுமார் 4% நீர்மை ஆவி மிகையாகி உள்ளது.
    3. மெக்சிகோ வளைகுடா பேய்மழைச் சூறாவளிகள் உருவாகி, அதிவிரைவில் திரட்சி பெற வெப்ப நீர்மையும், ஆவியும் நிரம்பிய சேமிப்புக் களஞ்சியமாக உள்ளது.
    4. கடல் நீர் ஹிரீன்ஹௌஸ் வாயுக்கள் பெருக்கும் 90% சூடேற்றத்தை உறிஞ்சு கிறது. 500 அடி உயரக் கடல் நீரில் உள்ள வெப்பமே, ஹர்ரிக்கேன் அசுர வலு பெற ஆற்றல் அளிக்கிறது.

    பூதவலு ஹர்ரிக்கேன் தாக்குவதற்கும் பூகோளக் கடல்நீர்ச் சூடேற்றத்துக்கும் தொடர்புள்ளதா?

    +++++++++++++++

    http://www.cnn.com/2016/10/06/us/hurricane-matthew-live-updates/index.html

    http://video.nationalgeographic.com/video/101-videos/hurricanes-101

    Image result for hurricanes in historyImage result for hurricanes in history

    அழுதாலும் பயனில்லை!
    தொழுதாலும் பயனில்லை!
    கரைமதில் உடைந்து விட்டால்,
    காத தூரம் ஓட வேண்டும் அம்மா !
    குடியிருக்க இடம் ஏதம்மா ,
    கடல் தடுப்பு முறிந்து போனால் !
    உடைந்து போகும் பழைய மதில்
    ஓலமிட்டு மக்கள்
    துயர்ப்படவே  வைக்குதம்மா !
    ஒருநாட் பொழுதில் அடித்த
    சூறாவளிப் பேய்மழை
    நியூ ஆர்லீன்ஸ்  கீழ்த்தளப்
    பெரு நகரை
    வெறு நரக மாக்கிய தம்மா!

    +++++++++++++++

    லெட் ஸெப்பெளின் இசைப்பாடல் [Led Zeppelin Lyrics (1929)]

    hurricale-buildup-1

    பூகோளச் சூடேற்றத்தைக் கணிக்க உதவும் புவிச் சூழ்வெளி அறிகுறிகள்.

    பூகோளச் சூழ்வெளியில் கரியமில வாயுவின் திணிவு மிகை ஆவதால் வாயு மண்டலமும், கடல் நீரும் சூடாகி, கிரீன்லாந்தின் பனிக்குன்றுகள், ஆர்டிக் பனி மதில்கள்  உருகிக் கடலில் சேர்ந்து கடல்நீர் மட்டம் உயர்கிறது. பூகோளம் சூடேற்றத்தை அளக்க, முக்கியமாக புவிச் சூழ்வெளியில்  வாயுவின் உஷ்ண ஏற்றம், கடல்நீர் மட்ட உயர்வு, கடல்நீர் வெப்பக் கொள்ளளவு ஆகிய மூன்று விளைவுகளின் அளவுகள் தேவைப்படும்.  கடல்நீர் மட்ட அளவு உயரும்போது, கடலின் வெப்பக் கொள்ளவு [Heat Content] மிகையாகிறது.  அத்துடன் நீராவி எழும் கடல் பரப்பளவும் அதிக மாகி சூழ்வெளி வாயுவில் நீர்மைத் திணிவு [Moisture Density] சேர்கிறது.  வேனிற் காலத்தில் பேரளவு நீராவி விரைவாகக் கடலில் உருவாகி முகிலில்  கூடுகிறது.


    கரியமில வாயுவையும், மற்ற கிரீன்ஹௌஸ் வாயுக்களையும், எரிமலை வெடிப்புகள், மின்னல் தூண்டும் காட்டுத் தீக்கள் போன்ற இயற்கை நிகழ்ச்சிகளும், மனிதனின் செயற்கை முறைகளும் தொடர்ந்து வெளியாக்கிச் சூரியக் கதிர்கள் சூழ்வெளியைச் சூடாக்கி வருகின்றன. 19 ஆம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி ஏற்பட்டு, 21 ஆம்  நூற்றாண்டில்  பன்மடங்கு பெருகி புகை மூட்டம் உலகை இருண்ட கண்ட மாக்கி வருகிறது. எத்தனை விரைவில் சூடேற்றம் மிகையாகிறது என்பதை தொழில் நிபுணரும், விஞ்ஞானிகளும், பொது நபரும் கணித்துத் தீர்மானிக்க வேண்டியது.  இப்போது சராசரிக் கடல்நீர்த் தள உஷ்ணக் கணிப்பே பூகோளச் சூடேற்றத்தைக் காண உதவுகிறது.  புது முறைப்படி இன்னும் உயரிய வழிப்படிப் பூகோளச் சூடேற்றம் அறிய கடநீர் மட்ட உயர்வும், கடல்நீர் வெப்பக் கொள்ளளவு மாற்றமும் தெரிய வேண்டும். நவீன உலகில்  இவற்றின் அளவுகளைத் தொடர்ந்து கண்காணித்து வருபவை :1. சைனா  2.  அமெரிக்கா  3. பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகள்.

    மனித செயற்கை நிகழ்ச்சிகளால் உண்டாகும்,  கரியமில வாயுவால்  எழும் வெப்ப சேமிப்பில் 90% அளவு கடல்நீர் வெப்பம் ஏறச் சேர்கிறது.  கிரீன்லாந்தின் பனிநீர்க் குன்றுகள் மட்டும் உருகி ஆண்டு தோறும் 250 கிகாடன் [250 பில்லியன் டன்] நீர் வெள்ளம் கடலில் சேர்கிறது.  அப்போது கடல் மட்டம் உயர்ந்து கடற்கரை நகரங்கள் மூழ்கும்.  அசுரப் புயல் & பெருமழை ஹர்ரிகேன்கள் உருவாகி, கடற்கரை நகரங்கள் நீரில் மூழ்கும். 2005 ஆண்டில் நியூ ஆர்லின்ஸ் மூழ்க்கிய கேட்ரீனா ஹர்ரிக்கேன், 2012 ஆண்டில் நியூ யார்க்கை மூழ்க்கிய பூதப்புயல் ஸாண்டி, 2017 ஆண்டில் ஹூஸ்டன், டெக்ஸஸ்  மூழ்க்கிய ஹர்ரிக்கேன் ஹார்வி குறிப்பிடத் தக்கவை.

    பூகோளச் சூடேற்றத்துக்கும் சூறாவளிப் பெரு மழைக்கும் தொடர்பு உள்ளதா ?

    2017 செப்டம்பரில் அமெரிக்காவைத் தாக்கிய ஹர்ரிக்கேன்கள் ஹார்வி, இர்மா, மரியா போன்றவை பேரளவு வலுமிக்க அசுரச் சூறாவளிப் பெருமழையாகக் கருதப் படுகின்றன.  வேனிற் கால ஹர்ரிக்கேன்களின் வலுவும், வேகமும் தற்போது மிகுந்துள்ள தாக அறியப் படுகிறது.  அவற்றின் கணிப்பு :  சுமார் ஒரு டிகிரி செல்சியஸ் கடல் நீர் உஷ்ண உயர்வுக்கு & வினாடிக்கு 8 மீடர்  [25 அடி] வேக அதிகரிப்பு  [மணிக்கு 30 கி.மீ] உண்டாகுகிறது !

    மேலும் கடற்தள உஷ்ண ஏற்றத்தால், நீர் ஆவியாகிச் சூழ்வெளி வாயுவில் நீர்மைத் திணிவு [Moisture Density] ஒவ்வோர் டிகிரி செல்சியஸ் ஏறும் போது 7% அதிகரிக்கிறது. சமீபத்தில் டெக்ஸசைத் தாக்கிய ஹர்ரிக்கேன் ஹார்வி இவ்விதமே அசுர வலுப் பெற்றுள்ளது.

    ஆண்டுதோறும் அமெரிக்காவில் அடிக்கும் சூறாவளிப் பேய்மழைகள். 

    ஹர்ரிக்கேன் எனப்படும் அசுரச் சூறாவளி பேய்மழை அடிப்புகள் பருவக் காலம் தவறாது, ஆண்டுதோறும் அமெரிக்கத் தென்னக மாநில நகரங்களைத் தாக்கி, நரகப் புழுதியாக்கி பேரளவு நிதிச் செலவை உண்டாக்கி வருகின்றன. அவற்றுக்கு விஞ்ஞானப் பின்புலமாய் உள்ள காரணங்கள் என்ன?  ஒவ்வோர் ஆண்டிலும் அவற்றின் தாக்குதல்கள் தவிர்க்க முடியாததாய், எதிர்பார்க்க முடியாததாய், தடுக்க இயலாததாய் மக்களுக்குத் துயர் அளிப்பதாய்த் தெரிகின்றன. மானிடர் வல்லவராய், அறிவுள்ளவராய், பொறிநுணுக்கத் திறமையாளராய் இருப்பினும், 21 ஆம் நூற்றாண்டில், சிறியவராய், அவற்றின் முன்னே ஆற்றலின்றிப் பின்வாங்கிப் போகும் மனித இயலாமை தெளிவாய்ப் புரிகின்றது.  சரி நமக்குப் பருவக் காலப் பேரிடர்களான சூறாவளிப் பேய்மழைத் தடுப்புகள் பற்றி என்ன தெரியும் ?

    hurricane-flooding

    seawater-surging

    2004 அக்டோபரில் கூடிய அமெரிக்க விஞ்ஞானிகள் ஹர்ரிக்கேன் இடர்களை எப்படித் தவிர்ப்பது, தடுப்பது என்று ஆய்வுகள் செய்ய முயன்ற போதிலும், 2017 இல் இதுவரை அந்தக் குறிக்கோள் நெருங்க முடியாதபடித் தூரமாய்ப் போய் விட்டது!  அடுத்த கேள்வி, எங்கே இருந்து இந்த ஹர்ரிக்கேன்கள் உருவாகின்றன?  1851 ஆண்டுமுதல் 2012 வரைப் பதிவு செய்தவை ஆக்டபஸ்போல் சுழிவடிவில் உருவானவையே. 2016 ஜூன் வரை அறிந்த விளைவுகளின்படி அவற்றைத் தவிர்க்க முடியாது, தடுக்கவும் முடியாது, திசை மாற்றவும் இயலாது என்பதே!  2016 அக்டோபரில் உருவான பூதச் சூறாவளிப் பேய்மழை “மாத்தியூ” அமெரிக்கத் தென்னக மாநிலங்களைத் [பிளாரிடா, அட்லாண்டா, தென் கரோலினா] தாக்கிப் பல நகரங்கள் நீரோடத்தில் மூழ்கின.  ஐந்தாம் தகுதியில் [Category : 5] அடித்து ஹெய்தித் தீவில் பேரளவு சேதாரம் விளைவித்தது, மாத்தியூ ஹர்ரிக்கேன்.

    +++++++++++++

    ‘ஹரிக்கேன் கேட்ரினா நியூ ஆர்லியன்ஸ் நகர்ப் புறங்களில் பேரளவு சூழ்நிலைச் சீர்கேட்டை விளைவிக்கப் போகிறது. நகர்ப் பாதுகாப்புக் கரைமதில் ஏற்பாடுகளைத் [The City Levee System] தகர்த்துக் கொண்டு நீர் வெள்ளம் கடல் கீழ்மட்டப் பகுதிகளை நிரப்பி, தெருக்களில் நீர்க்குளங்களை உண்டாகிக் குப்பை, நரகல் கழிவுகளுடன் சேர்ந்து, அபாய இரசாயனத் திரவங்களுடன் கலந்து மக்கள் தப்பி வெளியேற முடியாதபடி அடைத்து விடலாம். ‘

    இவார் வான் ஹீர்டென் [Ivor Van Heerden, Marine Scientist, Louisiana State University]

    hurricane-flooding-4

    ‘பொஞ்சாட்ர்டிரைன் ஏரியுடன் [Lake Pontchartrain] இணைக்கப்பட்ட கால்வாய் கரை மதில்களில் ஏற்பட்டுள்ள இரண்டு உடைப்புகளைச் செம்மைப் படுத்த முயல்கிறோம். அதற்காக வேண்டிய கல், பாறைகள், மணல் போன்றவையும், கட்டுவதற்குத் தேவையான மணல் மூட்டைகள், தூக்கி யந்திரங்கள், டிரக்குகள், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றையும் தயாரித்து வருகிறோம். ‘

    வால்டர் பெளமி [Walter Baumy, Manager, Army Corps of Engineers (Aug 31, 2005)]

    ‘தேசீயப் பாதுகாப்பாளர் எண்ணற்ற மணற் சாக்குகளை இட்டு மதில் உடைப்பை மூட முயன்றார்கள். ஆனால் அவை யாவும் இருட்குழியில் விழுந்து மறைவன போல் காணாமல் போகின்றன. ‘

    காதிலீன் பிளான்கோ [Louisiana Governor (Aug 31, 2005)]

    hurricane-flooding-1

    உலகிலே நீளமான ஹரிக்கேன் பாதுகாப்புக் கரைமதில்கள்

    2300 ஆண்டுகளுக்கு முன்பு மலைப் பாம்புபோல் கற்களால் கட்டப்பட்ட, உலக விந்தைகளில் ஒன்றான சைனாவின் பெரும் நெட்டை மதில்சுவர் [The Great Wall of China] 1500 மைல் தூரம் நீண்டு செல்பவை. ஆனால் அமெரிக்காவின் மெக்ஸிகோ வளைகுடாக் கரையில் இருக்கும் நியூ ஆர்லியன்ஸ் நகரைச் சுற்றிலும் எழுப்பியுள்ள குட்டைக் கரை மதில்கள் [Levees] 340 மைல் [560 மி.மீ] தூரம் கட்டப்பட்டு, கடல் மட்டத்துக்குத் கீழாக இருக்கும் பெரும்பான்மையான பகுதிகளை நீர் பாய்ந்து நிரப்பாமல் பாதுகாத்து வருகின்றன. நீளத்திலே சைனாவின் பெரு மதிலுக்கு குறைந்த தாயினும், உலகிலே குட்டை மதில்களில் மிக நீண்டதாக இந்த கரை மதில்களைக் கூறலாம். நியூ ஆர்லியன்ஸ் நகரத்தின் வடக்கே பொஞ்சார்ட்டிரைன் ஏரி [Lake Pontchartrain], கிழக்கே போர்ன் ஏரி [Lake Borgne], தெற்கில் ஊடே செல்லும் மிஸ்ஸிஸிப்பி நதி, பிறகு சிதறிக் கிடக்கும் மெக்ஸிகோ வளைகுடாப் பகுதிகளால் சூழப்பட்டது! கால மாறுபாட்டாலும், எப்போதும் ஹரிக்கேன் சூறாவளிகள் படையெடுக்கும் பாதையில் இருப்பதாலும், அந்த பகுதிகளின் நீர் மட்டம் அடிக்கடி உயர்ந்து நகரின் கீழ்த்தளப் பரப்புகளில் பாய்ந்து நிரப்பா வண்ணம் பாதுகாப்பு மதில்கள் கட்டப் பட்டிருக்கின்றன.

    hurricane-flooding-2

    சென்ற நூற்றாண்டில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு 1965 செப்டம்பரில் தீவிரம்: 3-4 [Category: 3-4] கொண்ட ஹரிக்கேன் பெட்ஸி [Hurricane Betsy] கடைசியாக அடித்த சூறாவளிப் பேய்மழையில் நியூ ஆர்லியன்ஸ் நகரம் அதிர்ஷ்ட வசமாகப் பெருஞ் சேதத்திலிருந்து தப்பியது. ஆனால் பாதுகாப்பு மதில் தடுப்புகளிலும், சில உள்ளக நகராட்சிப் பகுதிகளிலும் [St. Charles, St. Bernard, Plaquemines Parishes] நீர் மட்டம் 23 அடி வரை உயர்ந்து விட்டது. மிகக் கடுமையான தீவிரம்: (4-5) கொண்டு நியூ ஆர்லியன்ஸ் நகரை மோதப் போகும் ஹரிக்கேன் கேட்ரினாவைப் பாதுகாப்பு மதில்கள் தாங்கிக் கொள்ள மாட்டா வென்று கேட்ரினா தாக்குவதற்கு முன்பே பல நிபுணர்கள் மீண்டும், மீண்டும் தமது எச்சரிக்கையை வெளிட்டனர். மதில்கள் சில மண் மேட்டாலும், சில இரும்புத் தட்டுகளாலும், சில காங்கிரீட் சுவர்களாலும் கட்டப் பட்டவை. ஆனால் அவை யாவும் தீவிரம்: 3 தாக்குதலுக்கே கட்டப் பட்டதால், கேட்ரினாவின் வேங்கை அடியைத் தடுத்துக் கொள்ள ஆற்றல் இல்லாதவை என்று முன்னெச்சரிக்கை செய்தது மெய்யாகவே இம்முறை நிகழ்ந்து விட்டது! புகழ் பெற்ற நியூ ஆர்லியன்ஸ் நகரைக் கடல் வெள்ளமும், புயலும் அடித்துக் கடல் நீரால் மூழ்க்கிப் பேரளவு நாசத்தை விளைவித்து விட்டது!

    hurricane-flooding-3

    நியூ ஆர்லியன்ஸ் கரைமதில்கள் சொல்லும் கதை

    சூறாவளிக் காற்று அடித்த ஒருநாள் கழித்து, 2005 ஆகஸ்டு 30 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை அன்று இரண்டு மதில் அணைகள் உடைக்கப்பட்டு, நகரின் 80% கடல் மட்டம் தாழ்ந்த பகுதிகளில், கடல் வெள்ளம் நிரம்பியது. முதலில் பேய்க்காற்று மணிக்கு 150 மைல் உச்ச வேகத்தில் தாக்கிக் கடல் வெள்ளத்தால் அடித்து, கரைமதிலில் 200 அடி அகலத்தைப் பெயர்த்து கடலே நகருக்குள் நுழைந்தது! அடுத்து காற்றின் வேகம் மணிக்கு 100 மைலாகத் தணிந்தாலும், கடல் நீரின் வலுவில் மதில் உடைப்பு 500 அடியாக அகன்று கடல்நீர் திமுதிமுவென நகருக்குள் அலை அலையாய் நுழைந்து தெருவெல்லாம் 20 அடி உயரத்துக்கு மேலாக நீர் நிரம்பியது. நாகரீகப் புராண நகரமான நியூ ஆர்லியன்ஸில் உள்ள மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், வாணிபக் கட்டடங்கள், வீடுகள், குடில்கள் யாவும் ஒருநாளில் மூழ்கிப் போயின!

    hurricane-matthew-mapping

    ஹரிக்கேன் மாத்தியூவின் போக்கு

    2003 ஆண்டு முதல் ஈராக் போருக்குப் பிறகு கரைமதில் புதுப்பிப்பு பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட அரசாங்க நிதித்தொகை [Federal Fund] குறைந்து கொண்டே வந்தது. அரசாங்க நிதிவளம் ஈராக் போரைத் தொடரவும், உள்நாட்டுப் பாதுகாப்புக்கும், வரிக் குறைப்பு ஈடுக்கும் பங்கிடவே பற்றாமல் குழி விழுந்தது. 2004 ஆம் ஆண்டில் பொஞ்சார்டிரைன் ஏரிக் கரைமதில்களை மேம்படுத்த புஷ் அதிகார வர்க்கம் 20% குறைந்த அளவு தொகையைத் தருவதாகச் சொன்னது.

    1. 2004 ஆண்டில் பொஞ்சார்டிரைன் ஏரிப் பகுதி ஹரிக்கேன் பாதுகாப்புக்கு ஒதுக்கிய நிதி யில்லாமையால் 20% [750 மில்லியன் டாலர்] மதிப்பளவே புஷ் அதிகார வர்க்கம் அளிப்பதாய் வாக்களித்தது.

    2. 2005 ஆண்டில் மேற்கண்ட திட்டத்துக்கு 20 மில்லியன் டாலர் தேவைப்பட்ட போது, புஷ் அரசாங்கம், பட்ஜெட்டில் 3.9 மில்லியன் டாலரே ஒதுக்க முன்வந்தது.

    3. காத்திருக்கும் காலம் நீடிக்க நீடிக்க, பிரச்சனைகள் பெருகி நிதிச் செலவை மிகையாக்கும். சில கரைமதில் செப்பனிடும் திட்டங்களை முடித்த கான்டிராக்டருக்கு, இன்னும் 5 மில்லியன் டாலர் தொகை கொடுக்கப் படாமலே இருக்கிறது.

    sheltered-people

    நிரம்பிய வெள்ளத்தை வெளியேற்றுவதில் பிரச்சனைகள்

    அமெரிக்க இராணுவப் படையினர் கரைமதில்களில் உடைபட்ட பகுதிகளைச் செப்பனிட அரும்பாடு பட்டனர். இரட்டைச் சுழலிகள் சுழலும் CH-53 ஹெலிகாப்டர்களில் பறந்து கொண்டு 1360 கிலோ கிராம் சாக்கு மண் பைகளைத் தொப்பென இறக்கி உடைப்பை அடைக்க முயன்றார்கள். அது பலன் அளிக்க வில்லை! அடுத்து பெரும் இரும்புத் தொட்டிகளில் கற்களை நிரப்பி இடைவெளியை மூட முற்பட்டார்கள். அம்முறையும் பலன் தரவில்லை! நகரின் கடல்மட்டத் தணிவுப் பகுதிகளின் தேக்கு வெள்ளத்தை வெளியேற்ற ஆற்றல் மிக்க 22 பூத பம்பு நிலையங்கள் இருந்தாலும், அவை யாவும் நீரில் மூழ்கிப் போனதால் அவற்றை நீர்ப் பாதிப்பிலிருந்து முதலில் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தற்போது மூன்று பம்பு நிலையங்கள் செம்மை யாக்கப்பட்டு நீரை வெளியேற்றி வருகின்றன. அத்துடன் அபாய கால தற்காலிய பம்புகளை நிறுவி, நீர் நீக்கம் செய்யப்பட்டு வருகிறது. கடல் மட்டத்துக்குத் தணிவான பூதத் தொட்டி போல் நீர் கட்டிக் கிடக்கும் நியூ ஆர்லியன்ஸ் வெள்ளத்தையும், மற்றுமுள்ள சுற்றுப்புறப் பகுதிகளின் தேக்க நீரையும் வெளியேற்ற 24 முதல் 80 நாட்கள் ஆகலாம் என்று ஊகிப்படுகிறது.

    katrina-flooding

    கரைமதில்களைச் செப்பனிடும் பணிகள்

    நியூ ஆர்லியன்ஸ் நகரின் பெரும்பகுதிகள் கடல் மட்டத்திற்குச் சராசரி 6 அடித் தணிவாக உள்ளன. எல்லாவற்றிலும் கீழான தளம் 20 அடி தணிவாகவும், மேலான தளம் ஓரடி தணிவாகவும் இருப்பதாக அறியப்படுகிறது. ஏறக்குறைய நகரின் பாதிப்பகுதி [907 சதுர கி.மீடர்] நீர் மயமாகவும், மீதிப் பாகம் மட்டுமே நில மயமாகவும் இருக்கின்றது. இயற்கையாகவே உண்டாகும் நீர் வெள்ளத் தாக்குதலை நியூ ஆர்லியன்ஸ் தவிர்க்க முடியாததால், எஞ்சினியர்கள், கால்வாய்கள், கரை மதில்கள், நீர் வெளியேற்றுப் பம்புகள் கொண்ட மிகவும் சிக்கலான சில முறைகளை அமைத்து, நகரின் வெள்ளத் தேக்கங்களைக் கையாள கட்டி யுள்ளனர். குறைந்த அளவு [2.5 செ.மீ] மழைகூட சில பகுதிகளில் சிறிது நீர்த் தேக்கத்தை உண்டாக்கித் தொல்லை கொடுத்து விடும். நகரின் சராசரி ஆண்டு மழைப் பொழிவு 90 செ.மீ.

    new-orleans-1

    நியூ ஆர்லியன்ஸ் நகரை உருவாக்கிய பிரெஞ்ச் நிபுணர்கள் 1718 ஆம் ஆண்டு முதல் கரை மதில்களைக் கட்டி நகரின் கடல் மட்டத் தணிவுப் பகுதிகளைப் பாதுகாத்தனர். அதுமுதல் பிற்காலச் சந்ததிகளும் நகரின் கரை மதில்களைச் செம்மைப் படுத்தி அவற்றின் நீளம், உயரம், வலு போன்றவற்றைத் தொடர்ந்து விருத்தி செய்து வந்துள்ளனர். 1965 இல் ஹரிக்கேன் பெட்ஸி நியூ ஆர்லியன்ஸ் கடற்கரைப் பகுதியைத் தாக்கி நீர் வெள்ளம் தேங்கிப் பாதகம் விளைந்த போது, கரைமதில்களின் உயரம் பல மீடர்கள் அதிகமாக்கப் பட்டன. ஆயினும் தீவிரம்: (4-5) கொண்ட ஹரிக்கேன்களின் அடியைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றல் அம்மதில்களுக்கு அறவே இல்லை. நியூ ஆர்லியன்ஸ் நகரைச் சுற்றியுள்ள குட்டைக் கரைமதிகள், நாளுக்கு நாள் புதைந்து போய் அவற்றின் உயரங்கள் குன்றி வருகின்றன. அவற்றைத் தொடர்ந்து கண்காணித்து எஞ்சினியர்கள் செம்மைப் படுத்தினாலும், எடுத்த பணிகள் முழுவதும் இதுவரை முடிவடைய வில்லை.

    new-orleans-city-1

    பெருநகரைப் பெருநரக மாக்கிய ஹரிக்கேன் கேட்ரினா

    நியூ ஆர்லியன்ஸ் நகரம் சுமார் 480,000 பேர் வாழ்வதற்குரிய இல்லங்களைக் கொண்டது. ஆனால் அதன் வாணிபத் தொழில் துறைகளுக்கு வந்து போகும் மக்கள் தொகையையும் சேர்த்தால் 1.3 மில்லியனுக்கு மேற்பட்டது என்று யூகிக்கப் படுகிறது. இப்போது ( செப் 7, 2005) அடித்த கேட்ரினாவில் 10,000 பேருக்கு மேலாக இறந்திருக்கலாம் என்று அறியப் படுகிறது. ஆரம்பத்தில் 80% பரப்பாக இருந்து ஒரு வாரம் கழித்து நீர் மட்டம் குறைந்து தற்போது நகரின் 60% பரப்பில் மாசுகள் படிந்த வெள்ளம் சூழ்ந்து, விஷப் பண்டங்கள் கலந்து, பாக்டாரியா பெருகிப் பாதுகாப்புக்குப் மேல் 45,000 மடங்கு கூடி விட்டது என்று அறிவிக்கப் படுகிறது. நீர் வெளியேற்றிப் பம்புகள் நகரின் அசுத்த வெள்ளத்தை நீக்க இன்னும் பல வாரங்கள் ஆகலாம் என்று எஞ்சினியர்கள் கூறுகிறார்கள்.

    new-orleans-3

    நியூ ஆர்லியன்ஸ் நகர் முழுவதும் நாசமாகிப் பெரும்பான்மையான நகர மக்கள் வெளியேறி விட்டதால், 400,000 பேர்கள் உழைப்பும், ஊதியமும் இழந்து, மாநில அரசாங்கத்தின் வருமானம் பெருத்த அளவில் சிறுத்து விட்டது. நீர்த் தேக்கங்களை வெளியேற்றி, கழிவு நீர் ஏற்பாடுகளைச் சீராக்கி, நகரத்தைச் சுத்தீகரித்துப் புத்துயிர் உண்டாக்கவும் குடிநீர், மின்சாரம், எரிவாயு, போக்குவரத்து, தகவல், வசதிகளைச் செப்பனிடவும் நிதித்தொகை (50-60) பில்லியன் டாலர் ஆகலாம் என்று தற்போது எதிர்பார்க்கப் படுகிறது. இனிவரும் அடுத்த 10 ஆண்டுகளில் எஞ்சினியர்கள் [Army Corps of Engineers] ஸேலா நீர் தேக்கக் கட்டுப்பாடுத் [Southeast Louisiana Urban Flood Control Unit (SELA)] திட்டத்தில் 430 மில்லியன் டாலர் செலவு செய்து, கரைமதில்களின் உயரம், ஆற்றலை அதிகரிக்கவும், புது பம்பு நிலையங்கள் கட்டவும் நகராட்சியில் வழிகள் வகுக்கப் பட்டுள்ளன. ஆயினும் உயிரில்லாத நியூ ஆர்லியன்ஸ் நகரம், நகர நடப்பு உள்ளமைப்புகளை [Infrastructure] மீண்டும் உருவாக்கி ஓரளவு இயங்க மூன்று அல்லது ஐந்தாண்டுகள் கூட ஆகலாம்.

    sheltered-people

    1. https://youtu.be/FY86NrdqoQ4
    2. https://youtu.be/hxRWe58BZHA
    3. https://youtu.be/-Kou0HBpX4A
    4. https://youtu.be/7qym7b-qvkE
    5. https://youtu.be/-Kou0HBpX4A
    6. https://youtu.be/bafyc-hkArw

    +++++++++++++++++++++++++++++++++

    தகவல்:
    1. New Orleans Levees No Match for Katrina By: David Crary [AP National Writer (Aug 31, 2005)]
    2. Why the Levee Broke By: Will Bunch, Attytood [www.alternet.org/story/24871/] (Sep 1, 2005)
    3. New Orleans Levees Patched, Army Starts Pumping Water, [Update: 2 & 6] (Sep 6, 2005)
    4. Law Enforcement May Forcibly Remove New Orleans Residents By: Scott Gold & Lianne Hart [www.Newsday.com] [Times Staff Reporters (September 7, 2005)]
    5. When the Levee Breaks By: Bill Diskoch, CTV.ca News Writer (Sep 5, 2005)
    6. Mayor of New Orleans Orders Forced Evaquations By: CTV.ca News Staff (Sep 7, 2005)
    7. An American Tragedy, Time Magazine Special Report (Sep 2, 2005) Picture Courtesy: Time.
    8.  http://www.nhc.noaa.gov/  [USA Hurricane Center]
    9.  http://environment.nationalgeographic.com/environment/natural-disasters/hurricane-profile/
    10.  https://en.wikipedia.org/wiki/Tropical_cyclone [October 13, 2016]
    11. https://en.wikipedia.org/wiki/Effects_of_Hurricane_Katrina_in_New_Orleans   [October 14, 2016]
    12. https://en.wikipedia.org/wiki/Hurricane_Matthew  [October 15, 2016]
    13. https://blogs.scientificamerican.com/sa-visual/visualizing-hurricanes/?print=true  [September 1, 2016]
    14.  https://blogs.scientificamerican.com/observations/what-we-know-about-the-climate-change-hurricane-connection/  [September 8, 2017]
    15. http://www.dailygalaxy.com/my_weblog/2017/09/our-planets-vital-signs-china-measures-ocean-warming-a-warning-to-the-world.html? [September 13, 2017]
    16. http://www.dailygalaxy.com/my_weblog/2017/06/ecoalert-greenlands-great-melt-nasa-monitoring-the-massive-ice-sheet-thats-adding-250-gigatonnes-of-.html  [June 27, 2017]
    17.  http://www.dailygalaxy.com/my_weblog/2017/09/ecoalert-nasa-sees-marias-hot-towers-intensify-into-yet-another-epic-hurricane.html [September 19, 2017]
    18. http://www.dailygalaxy.com/my_weblog/2017/09/ecoalert-mathematics-predicts-earths-mass-extinction-threshold-reached-in-2100-after-oceans-add-300-.html  [September 20, 2017]
    19.https://www.bbc.com/news/world-us-canada-58429853?xtor=AL-72-%5Bpartner%5D-%5Bgnl.newsletters%5D-%5Bheadline%5D-%5Bnews%5D-%5Bbizdev%5D-%5Bisapi%5D&xtor=ES-213-%5BBBC%20News%20Newsletter%5D-2021September3-%5Btop+news+stories%5D
    20.https://www.thestar.com/news/world/us/2021/09/02/at-least-8-deaths-as-hurricane-ida-hits-new-york-city-and-new-jersey.html
    21.https://ca.images.search.yahoo.com/yhs/search;_ylt=AwrC_DM4NzJhs2MAlgkXFwx.;_ylu=Y29sbwNiZjEEcG9zAzEEdnRpZAMEc2VjA3BpdnM-?p=hurricane+ida+created+big+disaster&ei=UTF-8&type=fc_A30C76C6185_s58_g_e_d070121_n1234_c24&param1=7&param2=eJw1i80OgkAMBl%2BlR0xMafcHJDyGJ2M8rLDChoUliMH49JYYT52ZL%2B1Ce61v5wsTaW309XibxFlpI7hPVBIrFmlE1F7DLFSUqBiZ5Jg9dj5JbZzgywmN6RNidLlFgmwLU5u2J0wrMCHVIKEwNbwLcwA3z9Fv%2Fj6ENbe6RF1ANvTrGI8Qw%2BCh882QDtD0Sxp9XikkNJYtsq3g6R5uCf8333a%2FvSKF5ekLgHs%2FPg%3D%3D&hsimp=yhs-2212&hspart=fc&fr=yhs-fc-2212#id=214&iurl=http%3A%2F%2Fimage.slidesharecdn.com%2Fdisastersitsmgt-150615105849-lva1-app6892%2F95%2Fdisasters-its-management-10-638.jpg%3Fcb%3D1434366050&action=click

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 31

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 31

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உவமங்களான ஓவியங்கள்

    முன்னுரை

    ‘சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கி’ என்பார் பவணந்தி. ‘பாவையின்’ என்பதிலுள்ள இன் என்னும் வேற்றுமை உருபு ஒப்புப் பொருளில் வந்து ஓவியத்தின் அமைதியை நல்ல மாணவனுக்கு உவமமாக்கியது. ஓவம், ஓவியம் சித்திரம், பட்டம், படாம், வட்டிகைச் செய்தி என்று ஓவியத்திற்குப் பல பெயர்கள் உண்டு. ஓவியத்தை எழுதுகிறவர்கள் ஓவியர், ஓவியப்புலவன், கண்ணுள் வினைஞன், சித்திரகாரர், வித்தக வினைஞன், வித்தகர்,  வித்தகர் கிளவி, வல்லோன் என்னும் பல பெயர்களால் அழைக்கப்பட்டனர். சித்தன்ன வாசல் ஓவியங்கள் நமக்குத் தெரியும். தஞ்சை பெருவுடையார் கோயில் ஓவியங்கள் சிறப்பானவை. அஜந்தா ஓவியங்களையும் அறிவோம். இத்தகைய ஓவியங்கள் தமிழ்க்கவிதைகளில் உவமங்களாக இடம்பெற்றிருக்கின்றன. ஓவியத்தைப் பற்றிய ஆய்வு பண்பாடு மற்றும் கலையோடு தொடர்புடையதாகக் கருதப்படுவதால் இலக்கியம் பற்றிய ஆய்வில் இது அவ்வளவாக இடம்பெறாது போயிருக்கக்கூடும். இயற்கையோடு இயைந்து கலைவாழ்வு வாழ்ந்த அக்காலச் சான்றோர் எழுதிய இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் சில உவம ஓவியங்களை இக்கட்டுரை ஆராய்கிறது. அறிமுகம் செய்கிறது

    உவமங்களான ஓவியப் பதிவுகள்

    ‘ஓவச்செய்தி’ என்பது சங்க இலக்கியச் சிறப்பான தொடர்களில் ஒன்று. ‘ஓவியச் செந்நூல் உரைநூற் கிடக்கையும் கற்றுத் துறைபோகிய பொற்கொடி’ மடந்தையான மாதவியைச் சிலப்பதிகாரம் காட்டுகிறது. ‘புனையா ஓவியம்போல’ நின்று மணிமேகலை இரந்தாள்’ என்று மணிமேகலை பேசுகிறது. ‘உடுக்கும் புவனம் கடந்து நின்ற ஒருவன் திருவுளத்தில் அழகொழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிர் ஓவியமே!’ என்று பரவசப்படுகிறார் குமரகுருபரர். ’உன்னுடைய பொருள்தான் பெரிதும் ஓவியமோ?” என்பது உலகியலில் பெருவழக்கு. இவ்வழக்கில் ஓவியம் என்பது உயர்ந்தது (ஒசத்தி) என்னும் பொருளது என்பது அறிக.

    ஓவியமான பொய்கை

    ‘புண்ணிய நறுமலர் ஆடைபோர்த்துக் கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிப் புனல்யாறு அன்று இது பூம்புனல் ஆறென” சென்றதாக வைகையைப் பற்றி இளங்கோவடிகள் எழுதுகிறார். அவர் ஆற்றுக்குச் சொன்னதைப் ‘பொய்கையெனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்’ என்று பொய்கைக்குப் புனைந்துரைப்பார் புலவர் புலமைப்பித்தன். இவர்களுக்கு எல்லாம் முன்பாக,

    “நறுநீர்ப் பொய்கை அடைகரை நிவந்த
    துறுநீர்க் கடம்பின் துணை ஆர்கோதை,
    ஓவத்து அன்ன உண்துறை மருங்கில்” (சிறுபாண்.68-70)

    என்று சிறுபாணாற்றுப்படையில் ஒரு ஓவியக்காட்சி இயற்கையையொத்த நீர்நிலை போல் இருந்தது என்று உவமிக்கப்பட்டுள்ளது. ‘செறிவுடைய கடம்ப மரங்கள் சூழ நிற்கும் நறுநீர்ப் பொய்கை. கடம்பினுடைய மாலை போன்ற மலர்கள் இந்திரகோபம் போன்ற தாதினை உதிர்த்ததால் ஓவியத்தை ஒத்து விளங்குகிறது’ என்று சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளதைக் காணலாம்.

    ஓவியத்தைப் போன்ற போர்க்களம்

    பொய்கை ஒவியத்தைப்போலப் பொலிந்தது எனப் பாடியவர்களே  போர்க்களமும் ஓவியம் போல் இருந்தது என்றும் பாடியிருக்கிறார்கள்.

    “நீலத்து அன்ன பைம்பயிர் மிசை தொறும்
    வெள்ளி அன்ன ஒள்வீ உதிர்ந்து,
    சுரி முகிழ் முசுண்டையொடு முல்லை, தாஅய்,
    மணிமருள் நெய்தல், உறழ, காமர்
    துணிநீர் மெல் அவல், தொய்யிலொடு மலர
    வல்லான் தைஇய வெறிக்களம் கடுப்ப” (மதுரை.279-284)

    என்ற அடிகள் பல வண்ணக் கலவைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட துணியில் எழுதிய ஓவியம் போல வெறிக்களம் தோற்றமளித்ததாகக் கூறுகிறது. புலவர் தான் கண்ட துணி ஓவியத்தைப் போல வெறிக்களம் இருந்தது என்று தான் கண்ட காட்சிகளை ஒப்புமைப்படுத்திக் கூறியுள்ளதன் மூலம் அன்றைய கால துணி ஓவியத்தின் இயல்பினைப் பற்றி அறியமுடிகிறது.

    வீடுகளுக்கு உவமமான ஓவியம்

    ‘அரண்மனை மாதிரி வீடு’ ‘பங்களா மாதிரி வீடு’, ‘கோட்டை மாதிரி வீடு’ ‘கோயில் மாதிரி வீடு’ என்றெல்லாம் பிறர் சொல்லக் கேட்டதுண்டு. ஆனால் ‘ஓவியம் போல் வீடு’ எனக் கேட்டதுண்டா? அந்தப் பேறு நமக்கில்லை. நம் முன்னோர்களுக்கு இருந்திருக்கிறது. அவர்கள் வீட்டைச் சொல்கிறபோது அதன் அகப்புற அமைதியை ஓவியத்தோடு ஒப்புமைப்படுத்தியிருக்கிறார்கள்.

    “ஓவத்தன்ன இடனுடை வரைப்பில்
    பாவையன்ன நப்புறம் காக்கும்” (நற்.182)

    “ஓவுக் கண்டன்ன இல்வரை” (நற். 268)

    “ஓவத்தன்ன வினைபுனை நல்லில்
    பாவை அன்ன நல்லோள் கணவன்” (பதி. 61)

    “ஓவத்தன்ன வினைபுனை நல்லில்
    பாவை அன்ன பலரல் மாண்கவின்” (அகம். 98)

    “ஓவத்தன்ன உருகெழு நெடுநகர்” (பதி. 88 – 28)

    என்ற பகுதிகளில் வீடுகளுக்கு ஓவியம் உவமமாக்கப்பட்டுள்ளது, ஓவியத்தோடு சிற்பமும் உவமமாக்கப்பட்டுள்ளது, நகரத்திற்கும் உவமமாக்கப்பட்டுள்ளது. ஓவியத்தைப் போன்ற இல்லத்தில் பாவை சிற்பம் போன்ற மனைவி என்னும் சித்திரிப்பு சிந்திக்கத்தக்கதாய் உள்ளது.

    இயற்கையும் ஓவியமும்

    பழந்தமிழ் மக்கள் நாளும் துய்த்து மகிழ்ந்த கலைகளில் முன்னிற்பது ஓவியம் என்பது இலக்கியங்களால் அறியப்படும் சேதியாகும். அழகிய காட்சிகளை ஓவியமாகவும் சிற்பமாகவும் கண்டு மகிழ்ந்த மக்களை அக்காலம் பெற்றிருந்தது.  இயற்கையின் அழகை ஓவியத்தின் அழகோடு ஒப்பிடும் போக்கு இருந்திருக்கிறது. அதாவது இயற்கையைச் செயற்கையோடு ஒப்பிடும் அளவுக்குச் செயற்கை சிறப்புற்றிருந்திருக்கிறது.

    “…………………………………………………………வல்லோன்
    எழுதியன்ன காண்தகு வனப்பின்
    ஐயள் மாயோள் அணங்கிய
    மையல் நெஞ்சம் என்மொழிக் கொளினே” (நற். 146)

    நெஞ்சம் மயங்கியதாம். எதனால்? தலைவியின் அழகால். அந்த அழகுக் கூறுகள் என்னென்ன? அவளுடைய தலைமைப் பண்பு மற்றும் மாமை நிறம். இவற்றுக்கு மயங்கியதாம் இவன் நெஞ்சு. தான் மயங்கியதைத் தன் நெஞ்சு மயங்கியதாக இவன் மயங்குகிறான். இவளுடைய இந்தப் பேரழகு எதனைப் போன்று இருந்தது என்பதில்  தான் ஓவியம் உவமமாகிறது. ‘வல்லோன் எழுதியன்ன காண்தகு வனப்பு’ என்னுந் தொடரில் தலைமகளின் அழகுக்கு ஓவியம் உவமமாக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இனிப்,

    “புனைதார்ப் பொலிந்த வண்டுபடு மார்பின்
    வனைபுனை எழில் முலை வாங்கமை திரள் தோள்
    மலர்போல் மழைக்கண் மங்கையர் கணவன்” (மலைபடு. 56-58)

    என்னும் மலைபடுகடாஅத்துள் நன்னனின் சிறப்புக்களாகக் கூறும் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் இயற்கையாக வளர்ந்தோங்கும் மகளிர் மார்பிற்கு வல்லோன் புனைந்த செயற்கை ஓவியத்தை உவமமாக்குவதை அறியலாம்.

    பரத்தையர் மறக்காத பரங்குன்றக்  காட்சி

    பரங்குன்றத்தில் பரத்தை தன்னை மறந்து இறைவனை வாழ்த்தி நடனமாடுகிறாள். அவள் அழகு கண்டு தலைவி தன்னழகு தாழ்ந்துவிடுமோ என அஞ்சுகிறாள். மற்றொரு தலைவி ஆடியின் முன்னின்று இருக்கின்ற தன்னழகை இன்னும் திருத்திப் பெருக்க முனைகிறாள். மற்றொருத்தியோ தன் கணவன் அவள்மாட்டுச் சென்றுவிடக் கூடாது என்பதற்காகத் தன் மார்பின் மீது மணமிக்க சந்தனத்தைத் தடவிக் கொள்கிறாள். இந்தக் காட்சி எப்படி இருந்தது என்பதுதான்,

    “பல்லூழ்  இவையிவை நினைப்பின் வல்லோன்
    ஓவியத்து எழுது எழில் போலும்” (பரி. 21)

    என்னும் இவ்வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு அந்த ஆடரங்கில் நடந்த மகளிர் செயலை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருங்கால் அவையெல்லாம் கைவல்லான் தீட்டிய ஓவியக் காட்சிபோல அகக்கண்முன்னே தோன்றுகின்றனவாம். “நெனச்சுப்பாத்தா நெஞ்சில் படம் மாதிரி ஓடுது” என்பது வழக்கியல். “உள்ளுங்காலை உயர்ந்ததன் மேற்றே யாதலின்” உவமமாகிய ஓவியம் உயர்ந்து நிற்றல் காண்க.

    கம்பனைக் கவர்ந்த ஓவியம்

    இலக்கியத்தை ஓவியமாக்கியவன் கம்பன். அவன் உண்மையில் ஓவியத்தில் மனம் பறிகொடுத்தவன் என்பதற்கு அவனுடைய பாடல்களே அகச்சான்றுகளாக நிற்கின்றன. ஓவியப் புலமையும் ஓவிய ரசனையும் உடைய அக்காலப் புலவர்கள் ஓவியத்தின் உட்பொருளையும் நுண்ணியத்தையும் உணர்ந்த வல்லாளர்களாகவே இருந்திருக்கிறார்கள். இராமன் பிறந்த  மகிழ்ச்சியைச் சித்திரிக்கும் சூழல். அவனுடைய தோற்றம் பற்றிய பாட்டு இப்படி அமைந்திருக்கிறது.

    “காவியும் ஒளிர்தரு கமலமும் எனவே,
    ஓவிய எழிலுடை ஒருவனை அலது, ஓர்
    ஆவியும் உடலமும் இலது’ என, அருளின்
    மேவினன் – உலகுடை வேந்தர்தம் வேந்தன்.” (கம்ப. பால. 120)

    ஒளிவீசுகிற கமலத்தைப் போல் தோன்றிய ஓவிய அழகன் இராமனே தனக்கு உயிரும் உடலுமாகக் கொண்டான் தசரதன்.   இராமன் சிவதனுசை முரிக்கிறான். அதிசயித்த தேவர்கள் எல்லாம் அசைவற்ற ஓவியம் போல நின்றனர் என்கிறார் கம்பர்.

    “வயிரியர் மதுர கீதம்
    மங்கையர் அமுத கீதம்
    செயிரியர் மகர யாழின்
    தேம்பிழி தெய்வ கீதம்
    பயிர் கிளை வேயின் கீதம்
    என்றிவை பருகி விண்ணோர்
    உயிருடை உடம்பும் எல்லாம்
    ஓவியம் ஒப்ப நின்றார்” (கம்ப.705)

    பாலகாண்டத்தில் இவ்வாறு இராமனுக்கு ஓவியத்தை உவமமாக்கிய கம்பன் சுந்தர காண்டத்திலும் மறக்காமல் அசோகவனத்துச் சீதை தன் கணவன் இராமனைப் பற்றிய சிந்தனையில் இருந்தாள். அவள் சிந்தனையில் வந்ததாகக் கம்பன் எழுதுகிறான். ‘இளவரசுப் பட்டம் சூட்டிக் கொள்க’ என்று தந்தை தசரதன் ஆசி வழங்கியபோதும் ‘பரதன் நாடாளவும் பதினான்கு ஆண்டுகள் நீ காடாளவும் வேண்டும்’ எனக் கைகேயி அதிர்ச்சியளித்தபோதும் ‘சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரையினை ஒத்திருந்த இராமனுடைய முகத்தினை’ எண்ணி மறுகினாளாம்.

    “மெய்த்திருப்பதம் மேவு என்ற போதிலும்
    இத்திரு துறந்து ஏகு என்ற போதிலும்
    சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
    ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்” (கம்ப. சுந்தர. 5088)

    கம்பராமாயண நிகழ்வுகளில் சொற்பொழிவாளர்கள் பெரும்பாலும் மறக்காமல் கூறும் உவமம் இது. சீதை அசோகவனத்தில் இருந்த காட்சி ‘ஓவியம் புகையுண்டதை’ ஒத்திருந்ததையும் இராமனால் வதம் செய்யப்பட்ட வாலி ‘ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தோய்’ என்று இராமனுடைய முகத்தை ஓவியத்துள் அடக்க முடியாது வியந்து நின்ற விந்தையையும் அவர்கள் சொல்வார்கள். இப்படியெல்லாம் அயோத்தியர் இறையை ஓவியமாகப் போற்றிய கம்பன் இதே உவமத்தை அவனால் அழியப் போகும் அதாவது அனுமனால் தீக்கிரையான இலங்கைக்கும் ஒப்பிடுகிறான்.

    ‘ஓவியம் அமைந்த நகர் தீ உண, உளைந்தாய்,
    “கோ-இயல் அழிந்தது” என; வேறு ஒரு குலத்தோன்
    தேவியை நயந்து, சிறை வைத்த செயல் நன்றோ?
    பாவியர் உறும் பழி இதின் பழியும் உண்டோ?” (கம்ப. யு.கா. 6119)

    என்னும் பாட்டில் இலங்கை மாநகரத்தை ஓவியத்தோடு ஒப்பிட்டு அத்தகைய  நகரம் தீக்கு இரையாவதற்கு இராவணன் காரணமானான். அதனால் ‘உயிர்கொடுத்தும் பழிகொண்ட பித்தனானான்’ என்று பாடுகிறார். கட்டுரையின் அளவு கருதிக் கம்பராமாயணம் உட்பட்ட தமிழ்க்கவிதைகளிலிருந்து ஒருசில எடுத்துக்காட்டுக்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. உவமம் என்பது இலக்கியப் பகுதி. ஓவியக்கலை என்பது வரலாறு மற்றும் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று. ஓவியம் இலக்கியச் சிந்தனைகளுக்கும் வண்ணனைகளுக்கும் உவமமாகப் பயன்பட்டுள்ளது என்பதே இந்தக் கட்டுரையின் சாரமாகும்.

    நிறைவுரை

    சிற்பம் என்பது கழித்தலின் எச்சம். ஓவியம் என்பது கூட்டலின் தொகுப்பு.  முன்னது செதுக்கப்படுவது. பின்னது வரையப்படுவது. நிற்றல், இருத்தல், கிடத்தல், நடத்தல் ஆகிய மனித இயல்புகளையும் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்னும் மெய்ப்பாடுகளையும் வண்ணம் கொண்டும் தூரிகைகொண்டும் வட்டிகை கொண்டும் செயற்கையாக வரைந்தவர்களே யாரும் வரையாத இயற்கையோடு ஒப்பிட்டு இலக்கியம் செய்கிறார்கள் என்பதை எந்தக்  கவிதைக் கோட்பாட்டு ஆய்வாளரும் சிந்தித்துப் பார்க்க முடியாத ஒன்றாகும். கற்றளியில் இறைவன் நடனமிடும் இடத்தினைச் சித்திரசபை என்றுதான் சொன்னார்கள். சிற்பச் சாலை என்றாரில்லை. படைப்புக்காலந்தொட்டு மேம்பட்டு வருகிற மூவேந்தர்களால் கவனிக்கப்படாத இந்தக் கலையைப் பல்லவர்கள் கவனித்தார்கள். அதனால் அவர்கள் சித்திரகாரப் புலி எனவும் போற்றப்பட்டார்கள். இவ்வாறு நோக்கி, இன்னும் நோக்கி முழுமையாக ஆராயாது, உவமத்தில் வெறும் ஒப்புமை ஒன்றினையே நோக்கி ஆராய்வதால் தமிழ்க்கவிதைகளின் உவமம் பற்றிய நுண்ணிய மிக்க இலக்கியக் கோட்பாட்டைக் காண மறுத்துவர்களாவோம்!.

    (தொடரும்…)

    Share
  • பாமரன் பார்வையில் பாரதி – நூல் வெளியீட்டு விழா

    பாமரன் பார்வையில் பாரதி – நூல் வெளியீட்டு விழா

    அன்பர்களே!

    வணக்கம்.

    முதன்முதலாக நான் பாரதியைப் பற்றி எழுதிய நூல் “பாமரன் பார்வையில் பாரதி.” இதை ‘தினமலர்’ நாளிதழைச் சேர்ந்த தாமரை நிறுவனம் வெளியிடுவதும், அது பாரதியின் நினைவு நூற்றாண்டில் வெளியாவதும் சிறப்பு.

    நண்பர்கள் சேவாலயா முரளியும், ராமகிருஷ்ணனின் மதுரத்வனியும் இணைந்து வழங்கும் ‘மாதம் தோறும் மகாகவி’ சொற்பொழிவுத் தொடருக்காக நான் எழுதிய குறிப்புகளே இந்த நூலுக்கு மூல காரணம்.

    இந்த நூலுக்கு தமிழறிஞர் திரு. ம.வே.பசுபதி ஐயா அவர்கள் ஆசியுரை வழங்கியிருப்பது எனக்குப் பெரும் பெருமை.

    செப்டம்பர் 8 புதன் கிழமை மாலை 6 மணிக்கு, சென்னை மயிலாப்பூரில், லஸ் கார்னர் அருகிலுள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில், நூலை வெளியிடுபவர் என் நலம் விரும்பியும், புலவரும், சிறந்த எழுத்தாளரும் பேச்சாளருமான திருச்சி புலவர் திரு. இரா. இராமமூர்த்தி ஐயா அவர்கள்.

     

    நூல் வெளியீட்டைத் தொடர்ந்து என்னுடைய ‘மாதம் தோறும் மகாகவி’ சொற்பொழிவு நடைபெறும்.

    YouTube

    அரங்கில் உங்களைச் சந்திக்க அன்புடன் அழைக்கிறேன்!

    அன்புடன்,
    ரமணன்

     

    Share
  • நீயும் நானும்

    நீயும் நானும்

    சரவிபி ரோசிசந்திரா

    நீயும் நானும் மழைநீரா!
    நீந்தும் விழியில் உவர்நீரா!
    உணவில் கலந்த உமிழ்நீரா!
    உணர்வில் உறைந்த செந்நீரா!

    யாரிடம் சொல்ல நம் கதையை
    யாருக்கும் ‌யாரும் இங்குமில்லை
    எங்கே செல்ல, தெரியவில்லை!
    எனினும் வாழவா வழியில்லை?

    கடந்தது எல்லாம் போகட்டும்
    கடப்பதில் மனம் மகிழட்டும்
    வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்
    வாழ்ந்திட நினைவுகள் உயிரூட்டும்

    உதவ நமக்கு யாருமில்லை
    உயர்ந்திட உதவி தேவையில்லை
    உழைப்பைப் போன்ற நண்பனில்லை
    உன்னை அறிந்தால் தோல்வியில்லை

    சிரிப்பைச் சிக்கனம் செய்யாதே!
    சிந்திக்க நீயும் மறக்காதே!
    உலகம் பெரியது மறவாதே!
    உன்னைக் குறைவாய் நினைக்காதே!

    நடந்தால் பாதை உருவாகும்
    நலமிருந்தால் வாழ்க்கை வரமாகும்
    வருந்திப் பயனில்லையெனில் வருந்தாதே!
    வருங்காலத்தை நினைத்துக் கலங்காதே!

    Share
  • குறளின் கதிர்களாய்…(366)

    குறளின் கதிர்களாய்…(366)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(366)

    இலனென்று தீயவை செய்யற்க செய்யி
    னிலனாகும் மற்றும் பெயர்த்து.

    – திருக்குறள் – 205(தீவினையச்சம்)

    புதுக் கவிதையில்…

    வறியன் தானென்றெண்ணி
    வறுமையைப் போக்கிடும்
    வழியதாய்ப் பிறர்க்குத்
    தீமை செய்யாதே..

    செய்தால்,
    வறுமை விலகாமல்
    மேலும் ஏழையாக்கி
    இன்னலுறவே வைத்திடும்…!

    குறும்பாவில்…

    வறுமையை வாழ்வில் போக்கிடப்
    பிறர்க்குத் தீங்கு செய்பவனை அதுவே
    மேலும் ஏழையாக்கி வருந்தவைக்கும்…!

    மரபுக் கவிதையில்…

    வறியன் தானென வருந்தியேதான்
    வறுமை நிலையினைப் போக்கிடவே
    நெறியை மறந்தவன் மற்றவர்கள்
    நெஞ்சம் நொந்திடத் தீங்குசெய்தால்,
    சிறிது வறுமையும் தீர்வதில்லை
    சேர்த்து வந்திடும் இன்னலதே
    அறிய வைத்திடும் வறுமையதை
    அதிக அளவினில் தந்துதானே…!

    லிமரைக்கூ…

    வறுமையை ஓட்டிடும் வழியாய்
    பிறர்க்குத் தீங்குசெய்பவன் வாட மேலும்
    வவறுமையே நிலைக்கும் பழியாய்…!

    கிராமிய பாணியில்…

    செய்யாத செய்யத
    தீங்கு செய்யாத,
    அடுத்தவனக் கெடுத்து
    தீங்கு செய்யாத..

    தனக்கு வந்த
    வறுமயப் போக்கிற
    வழிமொறயா
    அடுத்தவனக் கெடுக்கத்
    தீங்கு செய்யிறவனுக்கு
    வறும ஒருநாளும் போகாது,
    மேலும் மேலும் வறுமயே
    வந்து சேருமே..

    அதால
    செய்யாத செய்யத
    தீங்கு செய்யாத,
    அடுத்தவனக் கெடுத்து
    தீங்கு செய்யாத…!

    Share