நீயும் நானும்

சரவிபி ரோசிசந்திரா

நீயும் நானும் மழைநீரா!
நீந்தும் விழியில் உவர்நீரா!
உணவில் கலந்த உமிழ்நீரா!
உணர்வில் உறைந்த செந்நீரா!

யாரிடம் சொல்ல நம் கதையை
யாருக்கும் ‌யாரும் இங்குமில்லை
எங்கே செல்ல, தெரியவில்லை!
எனினும் வாழவா வழியில்லை?

கடந்தது எல்லாம் போகட்டும்
கடப்பதில் மனம் மகிழட்டும்
வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்
வாழ்ந்திட நினைவுகள் உயிரூட்டும்

உதவ நமக்கு யாருமில்லை
உயர்ந்திட உதவி தேவையில்லை
உழைப்பைப் போன்ற நண்பனில்லை
உன்னை அறிந்தால் தோல்வியில்லை

சிரிப்பைச் சிக்கனம் செய்யாதே!
சிந்திக்க நீயும் மறக்காதே!
உலகம் பெரியது மறவாதே!
உன்னைக் குறைவாய் நினைக்காதே!

நடந்தால் பாதை உருவாகும்
நலமிருந்தால் வாழ்க்கை வரமாகும்
வருந்திப் பயனில்லையெனில் வருந்தாதே!
வருங்காலத்தை நினைத்துக் கலங்காதே!

2 thoughts on “நீயும் நானும்

  1. வணக்கம்! எளிய பாடல்! கைவீசம்மா கைவீசு என்னும் சந்தத்தில் அமைந்த தாழிசை போன்றதொரு அமைப்பு.. படைப்பாளருக்கு வாழ்த்துகள். பாட்டை எழுதி முடித்தபின் உடனடியாக அனுப்புவதைத் தவிர்த்து இரண்டு, மூன்று முறை வாய்விடடுச் சொல்லிப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்திருந்தால் பாட்டின் மற்ற சீர்களோடு ஒடடாத ஒரு மனம் என்னும் ஓரசைச் சீர்கள் இடைவந்து பாட்டை இப்படிச் சிதைத்திருக்காது. மேலும் இறுதிப் பாட்டில் நடந்தால் பாதை உருவாகும்’ என்னும் (புளிமா, தேமா புளிமாங்காய்) என்னும் சந்தம் அதன் மற்ற மூன்று வரிகளில் அமையவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். ‘நலமே வாழ்க்கை வரமாகும்! வருந்திப் பயனிலை வருந்தாதே! வருவதை எண்ணிக் கலங்காதே! என்பது போல அமைந்திருக்க வேண்டும்;. படைப்பாளரின் உரிமை (POETIC JUSTICE) என்பது வேறு. பொறுமை இல்லாதது என்பது வேறு. படைப்பாளரின் எளிய உள்ளம் வெளிப்படும் இன்னும் கவிதைகளை வல்லமை எதிர்பார்க்கிறது! நன்றி.

  2. இனிய வணக்கம் ஐயா. தங்கள் பின்னூட்டம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கட்டாயம் பின்வரும் படைப்புகளில் பின்பற்றுகிறேன் ஐயா.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க