குறளின் கதிர்களாய்…(366)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(366)

இலனென்று தீயவை செய்யற்க செய்யி
னிலனாகும் மற்றும் பெயர்த்து.

– திருக்குறள் – 205(தீவினையச்சம்)

புதுக் கவிதையில்…

வறியன் தானென்றெண்ணி
வறுமையைப் போக்கிடும்
வழியதாய்ப் பிறர்க்குத்
தீமை செய்யாதே..

செய்தால்,
வறுமை விலகாமல்
மேலும் ஏழையாக்கி
இன்னலுறவே வைத்திடும்…!

குறும்பாவில்…

வறுமையை வாழ்வில் போக்கிடப்
பிறர்க்குத் தீங்கு செய்பவனை அதுவே
மேலும் ஏழையாக்கி வருந்தவைக்கும்…!

மரபுக் கவிதையில்…

வறியன் தானென வருந்தியேதான்
வறுமை நிலையினைப் போக்கிடவே
நெறியை மறந்தவன் மற்றவர்கள்
நெஞ்சம் நொந்திடத் தீங்குசெய்தால்,
சிறிது வறுமையும் தீர்வதில்லை
சேர்த்து வந்திடும் இன்னலதே
அறிய வைத்திடும் வறுமையதை
அதிக அளவினில் தந்துதானே…!

லிமரைக்கூ…

வறுமையை ஓட்டிடும் வழியாய்
பிறர்க்குத் தீங்குசெய்பவன் வாட மேலும்
வவறுமையே நிலைக்கும் பழியாய்…!

கிராமிய பாணியில்…

செய்யாத செய்யத
தீங்கு செய்யாத,
அடுத்தவனக் கெடுத்து
தீங்கு செய்யாத..

தனக்கு வந்த
வறுமயப் போக்கிற
வழிமொறயா
அடுத்தவனக் கெடுக்கத்
தீங்கு செய்யிறவனுக்கு
வறும ஒருநாளும் போகாது,
மேலும் மேலும் வறுமயே
வந்து சேருமே..

அதால
செய்யாத செய்யத
தீங்கு செய்யாத,
அடுத்தவனக் கெடுத்து
தீங்கு செய்யாத…!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க