என் ஆசான்களுக்கு எனது நமஸ்காரங்கள்

பாஸ்கர்
எனது தொன்னைக் காது .அதைப் பிடித்துக் கிள்ளும் லாகவம், சிவமணி சாரை விட்டால் பள்ளியில் யாருக்கும் இல்லை. சைமன் சார் அடித்த பிரம்படி அதுவும் உள்ளங்கையில் இன்னும் வலிக்கிறது. முட்டி போடச் சொன்ன மாணிக்க ரத்னம் சார். பொய் சொல்லி விடுப்புக் கேட்டுப் போன போது படவா ராஸ்கல் எனச் சொன்ன ஏ வீ எஸ் சார், இன்னும் சைக்கிளில் வருவது போலத் தோன்றும் காட்சி கண்களில் இருக்கிறது.
நூறு வயதைக் கடக்க இருந்த நிலையில் பார்த்த பீ எஸ் சார், கண்களின் நீர் இன்னும் நெஞ்சை வருடுகிறது. கண் பார்வை இழந்த சிவமணி ஆசிரியரைக் கோவிலில் பார்த்த நெகிழ்ச்சி மறையவில்லை. போய்ப் புளியோதரை பிடி எனச் சொன்ன வாத்தியை நெஞ்சம் இன்னும் மறக்கவில்லை. கல்லூரியில் அய்யங்கார் என அன்பாய்க் கூப்பிட்ட லூதர் சாரும், காப்பி அடித்த போது பிடித்து மன்னித்த பார்த்தசாரதி சாரும் நெஞ்சில் நிற்பவர்கள்.
அந்தக் காலத்தில் மிரட்டு உடையில் இருந்த நடேசன் சார், மைதானத்தில் ஓட விட்ட மோகனகிருஷ்ணன் சார் எல்லோரும் இந்த வறண்ட குளத்தில் கல் எறிந்தவர்கள்தாம். மேலே குறிப்பட்ட பெரும்பாலோர் மறைந்துவிட்டனர். உடன் படித்த மாணவர்கள் எல்லோரும் அறுபது வயதைக் கடந்துவிட்டனர். ஆரம்பப் பள்ளியில் படித்த சரோஜாவும், பாச்சாவும் என்னை மறந்துபோய் இருக்கலாம். ஆஷாவும் அப்படித்தான். நான் கல்லூரிக் காலத்தில் துரத்திய பெண்கள் எல்லோரும் பாட்டியாகி இருக்கலாம்.
என் நினைவுகள் இனிமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் மண்டிக் கிடக்கும் பசுமை, என் கடைசி மூச்சு வரை இருக்கும். என்றாவது ஒரு நாள் இவர்களில் யாராவது ஒருவரைச் சந்திப்பேன் என நினைக்கிறேன். இப்பொழுதும் இந்தப் பள்ளிகளை, கல்லூரியைக் கடக்கும் போது கொஞ்சம் வயிறு பிசைகிறது. ஓர் அழுத்தம் பரவுகிறது. மறதி ஒரு வியாதி போல பசுமரத்து ஆணியாய்க் கிடக்கும் நினைவுகளும் ஒரு வியாதி தான். நினைவுகள் எனது வாழ்வை நடத்துகின்றன.
என் ஆசான்கள் எல்லோருக்கும் எனது உள்ளார்ந்த வணக்கம். என்னை ஒரு சுமாரான மனிதனாக மாற்றியது இவர்கள்தாம். கெட்டு கீரை, விதையாகப் போயிருக்க வேண்டியவனைத் தடுத்து ஆட்கொண்டவர்கள் இவர்கள் அனைவருமே.
இவர்கள் எல்லோருக்கும் எப்படி நான் நன்றியைச் சொல்வேன்? என் நெகிழ்ச்சிதான் எனக்குச் சமாதானம் சொல்லும். வேறு வழியில்லை. என்னை மன்னித்து விடுங்கள் சார், இனிமேல் நன்றாகப் படிக்கிறேன் எனச் சொல்ல முடியுமா? அல்லது படிக்கத்தான் முடியுமா?