காட் ப்ளஸ் யூ

பாஸ்கர்
சார். மன்னிக்கணும் ஒரு முப்பது ரூபாய் கொடுக்க முடியுமா?
யார் நீங்க, உங்களை எனக்குத் தெரியாதே?
எனக்கும் உங்களைத் தெரியாது, நான் தாம்பரம் போகணும். எனக்கு ஒர்த்தர் மூவாயிரம் ருபாய் தரணும். பஸ்ல போகக் காசில்லை. இந்தப் பக்கம் நீங்க திரும்ப வரும்போது நான் பார்த்துக் கொடுத்துடறேன்.
சார் உங்க வயசுக்கு நான் வச்சிண்டு இல்லன்னு சொல்றது தப்பு. இந்த அம்பது ரூபாயை வச்சுக்குங்க.
எதுக்கு சார். நான் பாபா கோவில்ல சாப்டாச்சு. முப்பது போதும்.
இல்லை சார். உங்களுக்குத் தர வேண்டியவர் இல்லேன்னா உங்களுக்கு பஸ்ல வர காசு. வேண்டாமா?
ஏன் சார் இப்படி அபசகுனமாய்ச் சொல்றீங்க என் பணம். என் உழைப்பு .எனக்கு உங்க பணம் வேணாம்.
அய்யா, நான் நல்ல எண்ணத்துல சொன்னதை நீங்க தப்பாப் புரிஞ்சுகிட்டீங்க இந்தாங்க.
கொஞ்சம் வேகமாக வாங்கிக்கொண்டு காட் ப்ளஸ் யு என்றார்.
சிரித்தேன்.
என்ன சார்.
இல்லை சொல்லுங்க.
உங்களை அந்த காட் ப்ளஸ் பண்ணலையே என்றேன்.
கொஞ்சம் முறைத்துவிட்டு, என் பஸ் வருகிறது என்று புறப்பட்டார்.
உள்ளே அமர்ந்து என்னைப் பார்த்து விட்டு அம்பது ரூபாய் நோட்டோடு கையாட்டினார்.
நான் கை கூப்பினேன்.
மாலை என் மகன் என்னிடம் வந்து, ஒரு குட் நியூஸ் என்றான்.
என்ன எனக் கேட்டேன்.
இல்லை. நீ எப்ப பார்த்தாலும் தானம் பண்ணு, தர்மம் பண்ணுன்னு சொல்வ இல்ல.
ஆமாம். அதுக்கென்ன இப்ப?
இல்லை. இன்னிக்கு ஒருத்தர் குளத்துக்கிட்ட என்கிட்டே பத்து ரூபாய் கேட்டார். பாவமா இருந்தது பா.
என்ன சொன்ன.
என்கிட்டே இருபது ரூபாய் இருந்தது .அப்பிடியே கொடுத்துட்டேன்.
குட்.
என்னப்பா என்னைப் பாராட்டுவேன்னு நினச்சேன்.
அவர் உன்கிட்ட பணம் வாங்கிண்டு காட் ப்ளஸ் யூன்னு சொன்னாரா?
காட். கரெக்ட். எப்படிப்பா உனக்குத் தெரியும்.
கொஞ்சம் கெஸ் பண்ணேன்.
அவருக்குத் தரக்கூடாதாபா?
இல்லை. அடுத்த வாட்டி பார்த்தா, அவர் கேட்காவிட்டாலும் கொடு என்றேன்.