Blog

  • இன்றைய பொருளாதாரமும், காந்தியமும்!

     

    பவள சங்கரி

    தலையங்கம்

    ஒவ்வொரு ஆண்டும் போலவே இந்த முறையும் காந்தியடிகள் பிறந்தநாளில் அவருடைய கொளகைகளையும், தத்துவங்களையும் நினைவில் கொண்டு அதைப்பற்றி வானளாவ புகழ்ந்து பேசுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டியதுதான். நம்முடைய பண்டமாற்றுக்காக உபயோகிக்கும், ரூபாய்த் தாள்களில் மகாத்மாவின் உருவத்தைப் பதித்தால் மட்டும் போதுமா? ஆங்கிலேயர்களை வெளியேற்றுவதற்காக அண்ணல் எடுத்த முதல் ஆயுதமே அந்நிய பொருளக்ளின் புறக்கணிப்புதான். ஆனால் இன்றைய சூழ்நிலை என்ன.. அனைத்துப் பொருட்களும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதில் தவறில்லை, அன்னிய முதலீடுகளை ஏற்றுக்கொள்வதற்காக எந்த அளவிற்கும் வளைந்து கொடுக்கலாம் என்ற கருத்தில் இருக்கும்போது காந்தியடிகளை நினைவுகூர்வதில் என்ன பலன் வந்துவிடப்போகிறது. அவருடைய பிறந்த நாளை நூற்றாண்டு விழா மற்றும் அதற்கு மேலும் என்று கொண்டாடுகிறோமே தவிர அவருடைய கருத்துக்களை வாழ்க்கையில் ஏற்றுகொண்டுள்ளோமா என்றால் இல்லை என்பதுதான் நிதர்சனம். அன்னிய பொருட்களை வாங்கிக் கொண்டே செல்லச்செல்ல நம்முடைய பொருளாதாரம் கீழே இறங்கிக்கொண்டே அல்லவா இருக்கிறது. ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அன்று வரிகொடாமை இயக்கம் நடத்தி அன்னிய அரசாங்கத்திற்கு தன்னுடைய ஒத்துழையாமையை காட்டினார் அண்ணல். ஆனால் இன்று வரி இல்லை. அதற்குப் பதிலாக அவர்களுக்கு இலாபமாக வரியை கொட்டிக் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளாகிய இத்தருணத்திலாவது அவரு்டைய கருத்திற்கு ஏற்ப பொருளாதாரக் கொள்கைகளையும், மற்ற தத்துவங்களையும் கடைபிடித்து அதன்வழி நடப்பதே அவருக்கு நாம் செய்யும் சிறந்த அஞ்சலியாகும்.   

     

    வாழ்க காந்தியம்
    வளரட்டும் நம் பொருளாதாரம்.

    படத்திற்கு நன்றி:

    http://www.encyclopedia.com/topic/Mohandas_Karamchand_Gandhi.aspx

     

    Share
  • செப்டம்பர் மாத சிறுகதைப் போட்டி முடிவு

     

    வெங்கட் சாமிநாதன்

    செப்டம்பர் மாதம் போட்டிக்காக வந்துள்ள சிறுகதைகளுள் பழமைபேசி எழுதியுள்ள செவ்வந்தி என்ற கதை தான் முன்னிற்கிறது.  கிராமத்து எதிர்பார்ப்புகள், ஆசைகள். தன் மருமகள் பெற்ற இரண்டும் பொட்டைப் பிள்ளைகளாக பிறந்தது அவளுக்கு ஒரு ஆற்றாமை. அடிக்கடி சொல்லித் தீர்க்கவேண்டியிருக்கிறது. ஆனால் சினை கண்டிருக்கும் வீட்டுமாடு மட்டும் என்ன கிடரிக்கன்னாவா போடும், அதுவும் காளைக்கன்னைத் தான் போடும், தன் அவதியைப் பெருக்கும் என்று வேதனைப் படுகிறாள். இது ஒரு முரணாக அவளுக்குப் படுவதில்லை.  வெகு இயல்பான சாதாரண எதிர்பார்ப்பு என்று தான் தோன்றுகிறது. கடைசியில் அதுகிடாரி என்றும் செவ்வந்தி என்று  ஆசையாக வளர்க்கலாம்.  இந்த மாறிய முரணான வாழ்க்கை மதிப்பீடுகள் உறுத்துவதில்லை. பொருளாதாரம், மாறும் வாழ்க்கைச் சூழல் எல்லாம் காரணமாகின்றன்.

    இந்த முரண் வாழ்க்கையில் இயல்புதான். எதுவும் வலிய புகுத்தப்படவில்லை. ஆனால் அந்த முரணை பழமை பேசி கொஞ்சம் அழுத்திச் சொல்கிறார். தான் சொல்ல வந்தது அந்த முரணைப் பற்றி என்று தெரியா வண்ணம், ஒரு நிகழ்ச்சியை இயல்பாக, வேதனைக் குரல் அதிகம் பீறிடாமல் வெளியிட்டிருந்தால் நன்றாக் இருந்திருக்கும்.

    ஆனாலும்  வந்திருக்கும் கதைகளில் இது தான் இயல்பான ஒரு சித்திரத்தைத் தருகிறது. சம்பவங்கள், பாத்திரங்கள், பேச்சுக்கள் எதுவும் செயற்கையாக உருவாக்கப்படவில்லை.  பெரும்பாலான கதைகள், “இதை வச்சு ஒரு கதை ஒண்ணு எழுதிட்டாப் போச்சு” என்கிற தோரணையிலேயே இருக்கின்றன. கதை எழுதப்படுவதுதான். ஆனால் அது எழுதப்பட்டதாக தோன்றாதிருக்க எழுதுவது தான் எழுத்துத் திறன்.

    இந்த மாதப்  போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிறுகதைகள்:

    தலைவா…தலைவா….

    காக்கா ஃபார்முலா

    வண்ணமற்ற எண்ணங்கள்

    ஆத்மாவின் கோலங்கள்

    தண்டனைக் காலம்

    இந்த அப்பா வேண்டாம்

    பிரம்மாவின் தலையெழுத்து

    குயில் சத்தம்

    புரிதல்கள்

    ஒரு ஊஞ்சல் பேசுகிறது

    உறைந்த புன்னகை

    மணல் கயிறு

    செவ்வந்தி

    பாட்டிக்கு உடம்பு சரியில்லை

    லட்சியக் கணவன்

    கரையாத மெழுகுவத்தி

    .பெயர் சொல்லும் பிள்ளைகள்

     

    போட்டியில் பரிசு பெற்ற  பழமைபேசி அவர்களுக்கு பாராட்டுகள்.  பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  தொடர்ந்து முயற்சி செய்யவும் வாழ்த்துக்கள்.

    அன்புடன்

    பவள சங்கரி

    Share
  • Anna Kodiyum Kodi Veeranum New Posters

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான அரச இலக்கிய சாகித்திய விருது

     

    வணக்கம்.

    இவ்வருடத்துக்கான அரச இலக்கிய சாகித்திய விருது விழா நேற்று 30.09.2012 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு இலங்கை, வெயங்கொட, பத்தலகெதர, சியனே தேசிய கல்வியியல் கல்லூரி மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. 2011ம் ஆண்டு வெளிவந்த சிறந்த நூல்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றுக்கான விருதுகளும், சான்றிதழ்களும், பணப் பரிசுகளும் இந்நிகழ்வின் போது வழங்கப்பட்டன.

    இந் நிகழ்வில், கடந்த வருடம் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட எனது மொழிபெயர்ப்பு நாவலான ‘அம்மாவின் ரகசியம்’ நாவலுக்கு ‘சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான அரச இலக்கிய சாகித்திய விருதும், சான்றிதழும், பணப்பரிசும்’ கிடைக்கப்பெற்றது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்.

    என்றும் அன்புடன்,
    எம்.ரிஷான் ஷெரீப்

     வல்லமை குழுவினரின் சார்பாக திரு ரிஷான் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

    அன்புடன்

    பவள சங்கரி

     

    Share
  • துபாய்ப் பயணம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    எனக்கு வெகு நாட்களாக அரேபிய தீபகற்பத்திலுள்ள ஏதாவது ஒரு நாட்டைப் பார்க்க வேண்டும் என்று ஆசை. இந்த நாடுகள் 1970 வரை பாலைவனமாக இருந்தவை. எழுபதுகளில் எரிபொருள் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இவை எல்லாம் இப்போது செல்வம் கொழிக்கும் நாடுகளாக மாறியிருக்கின்றன. வெளிநாடுகளிலிருந்து பலரை வரவழைத்துத் தங்கள் நாடுகளை நவீன நாடுகளாக ஆக்கிக்கொண்டிருக்கின்றன. துபாயும் இதில் ஒன்று. லிஸ்பனிற்குப் போனபோது வரும் வழியில் துபாயையும் பார்த்து வரலாம் என்று திட்டமிட்டோம்.

    லிஸ்பனிலிருந்து துபாய்க்கு எட்டு மணி நேரப் பயணம். பயணக் களைப்போடு துபாய் விமான நிலையத்தில் இறங்கிக் குடிபுகல் பகுதிக்குச் சென்றோம். எல்லா விமான நிலையக் குடிபுகல் பகுதிகளில் போல் அலுவலர்கள் கறாராக இருந்தனர். துபாய்க்குள் நுழைவதற்கு வேண்டிய விசாவை மின்னஞ்சல் மூலம் பெறலாம். இருப்பினும், விமானநிலையத்தில் உள்ள குடிபுகல் பகுதியில் அங்கிருக்கும் அலுவலரைப் பார்க்கும் முன்பு நாம் படி எடுத்துக்கொண்டு வந்த மின்விசாவை இன்னொரு அலுவலரிடம் போய் சரிபார்த்துக்கொண்டு வர வேண்டும். குடிபுகல் பகுதியில் உள்ள ஆபீஸர் நம் கண்களைப் படம் எடுத்துக்கொண்டு மற்ற ஆவணங்களைச் சரிபார்த்து விட்டு அனுப்புகிறார். இங்கு வேலை பார்க்கும் அத்தனை பேரும் அவர்களுடைய பாரம்பரிய உடைகளில் இருந்தனர். இதை விட்டால் வேறு எங்கும் இம்மாதிரி பாரம்பரிய உடைகளில் யாரையும் பார்க்கவில்லை. கடைகள், மால்கள், காட்சியகங்கள், ஓட்டல்கள் என்று எங்கு பார்த்தாலும் வெளிநாட்டவர்கள்தான் சீருடை அணிந்து வேலை பார்க்கிறார்கள். துபாய் குடிமக்கள் என்ன செய்கிறார்கள் என்ற வியப்பு எங்களுக்கு ஏற்பட்டது.

    துபாய் விமான நிலையம் மிகப் பெரியது. நிலையத்திற்குள் நிறைய நடக்க வைக்கிறார்கள். இப்போது எமிரேட்ஸ் விமானக் கம்பெனிக்கு இந்த விமான நிலையம்தான் விமானப் போக்குவரத்து மையம். கம்பெனி விமானங்கள் வந்த வண்ணமும் அங்கிருந்து கிளம்பும் வண்ணமுமாக இருக்கின்றன. விமான நிலையத்திற்கு வெளியே வந்தால் வரிசையாக டாக்சிகள் சீருடை போட்டுக்கொண்டு வந்தது போல் ஒரே மாதிரிக் கலரில் நிற்கின்றன. டாக்சிகள் மட்டுமல்ல டாக்சி ஓட்டுநர்களும் சீருடை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் ஒரு அழகாகத்தான் இருக்கிறது.

    நாங்கள் டாக்சிக்குள் ஏறி உட்கார்ந்ததும் டாக்சி டிரைவரிடம் நாங்கள் போக வேண்டிய ஓட்டல் முகவரியைக் கூறினோம். அதை அவர் காதில் வாங்கினாரா என்று சரியாகத் தெரியவில்லை. அதனால் மறுபடி கூறினோம். இந்த முறை தனக்கு அந்த இடம் என்னவென்று தெரியும் போல் தலையை ஆட்டிக்கொண்டார். வேறு எதுவும் பேசவில்லை. அவர் இந்தியாவிலிருந்து வந்து அங்கு டாக்சி ஓட்டுநர் வேலை பார்க்கிறார். அதிலும் தமிழர் போலத் தெரிந்தது. அவர் வாயைத் திறந்தால் அல்லவா ஓரளவாவது அவர் எந்தப் பகுதியிலிருந்து வந்திருக்கிறார் என்று தெரிந்து கொள்ள முடியும்? மேலும் அவர் எங்கள் பக்கம் திரும்பவே இல்லை. எங்களை ஓட்டலில் எவ்வளவு சீக்கிரம் கொண்டு போய் விட்டு விட்டு எங்கள் பார்வையிலிருந்து மறைய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போய் விடுவதிலேயே குறியாக இருந்தார்.

    விமானநிலையம் முழுவதும் ஏர்கண்டிஷன் செய்யப்பட்டு இதமாக இருந்தது. ஆனால் வெளியே வந்ததுமே அந்த விடிகாலை நேரத்திலும் – காலை எட்டு மணிக்கு 35 டிகிரி செல்சியஸ் இருந்தது – வெக்கை தாக்கியது. ஓட்டலை அடைந்து டாக்சியிலிருந்து இறங்கியதும் முதல் முதலாக துபாய் வெப்பத்தை அனுபவித்தோம். மறுபடி ஓட்டலுக்குள் நுழைந்ததும் குளுகுளுவென்றிருந்தது.

    துபாயில் இரண்டே நாட்கள் தான் தங்கினோம். அதனால் துபாயின் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய நேரம் இருக்கவில்லை. பல முறை டாக்சியில் சென்றோம். ஒவ்வொரு முறையும் எங்களை ஏற்றிச் சென்ற டிரைவர் இந்தியாவிலிருந்தோ, பாகிஸ்தானிலிருந்தோ அல்லது பங்களாதேஷிலிருந்தோ வந்தவராக இருந்தார். அதில் தமிழர்களும் இருந்தனர். எங்களை விமான நிலையத்திலிருந்து கூட்டிவந்த ஓட்டுநரைப் போல் அல்லாது இவர்கள் எங்களிடம் சரளமாகப் பேசினர். துபாயில் டாக்சி ஓட்டுநர்கள் எல்லோரும் மேலே குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வந்தவர்கள்தான் என்று பின்னால் தெரிந்தது. பாகிஸ்தானிலிருந்து வந்த ஒருவர் எங்களுக்கு இந்தி புரியும் என்று அவராக நினைத்துக்கொண்டு பிரயாணம் முழுவதும் இந்தியிலேயே பேசினார். இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து வந்தவர்கள் அவர்களுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் பேசினார்கள். இவர்கள் எல்லோரும் தங்கள் டாக்சிகளில் இந்தி சினிமாப் பாட்டுக்களைப் போட்டுக் கேட்டுக்கொண்டு ரசித்துக்கொண்டிருந்தார்கள். துபாயில் நிறைய டாக்சிகள் இருக்கின்றன. எந்த இடத்திலிருந்து வேண்டுமானாலும் டாக்சிகள் கிடைக்கும். டாக்சி வாடகையும் குறைவு.

    துபாயின் ஜனத்தொகையில் 70 சதவிகிதம் வெளிநாட்டுக்காரர்கள். இவர்கள் அங்கு பல விதமான வேலைகள் செய்கிறார்கள். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள் டாக்சி ஓட்டுநர்களாக, காட்சியகங்களில் கண்காணிப்பாளர்களாக, செக்யூரிட்டி ஆட்களாக வேலை பார்க்கிறார்கள். அந்தந்த நாடுகளிலிருந்து தரகர்கள் மூலம் வேலை தேடித் தரும் கம்பெனிகளுக்குப் பணம் கொடுத்து இங்கு வந்திருக்கிறார்கள். இவர்களுக்குத் தொடர்ந்து பன்னிரெண்டு மணி நேர வேலை. இடையில் விடுப்பு எதுவும் கிடையாது. அதன் பிறகு பன்னிரெண்டு மணி நேர ஓய்வு. விடுமுறை நாட்கள் எதுவும் கிடையாது. துபாய்க்கு வந்து தொடர்ந்து இரண்டு வருடங்கள் வேலை பார்த்தால் இரண்டு மாதங்களுக்கு சம்பளத்தோடு விடுமுறை கொடுக்கிறார்கள். ஒரு வருடத்திலேயே போக விரும்பினால் ஒரு மாத சம்பளமும் ஒரு மாத விடுமுறையும் உண்டு. தாய்நாட்டிற்குப் போய்வர டிக்கெட் செலவும் கம்பெனி கொடுக்கிறது.

    துபாய் இன்று செல்வம் கொழிக்கும் நாடாக விளங்குகிறது. மூவாயிரம் வருஷங்களுக்கு முன்பே இப்பகுதியில் மனித இனம் வாழ்ந்ததற்கு அடையாளங்கள் இருப்பதாகக் கருதப்பட்டாலும் 18-ஆம் நூற்றாண்டிலிருந்துதான் இதன் சரித்திரம் கிடைக்கிறது. 1799-இல் அபுதாபியின் கீழ் இது ஒரு பகுதியாக விளங்கியது. 1833-இல் அபுதாபியை ஆண்ட அமீர் பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் 800 ஆட்களுடன் இப்போது துபாய் இருக்கும் இடத்திற்கு வந்து துபாயை தனி நாடாகப் பிரகடனம் செய்து ஆளத் தொடங்கினார். இன்று வரை இவருடைய பரம்பரைதான் துபாயை ஆண்டு வருகிறது.

    அந்தப் பகுதியில் இருந்த சிறிய நாடுகள் எல்லாம் பிரிட்டிஷ் அரசோடு தங்களைக் கடற்கொள்ளைக்காரர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டன. 1841-இல் துபாயில் அம்மை நோய் பரவி பல மக்கள் இறந்து போயினர். பின் 1892-இல் பெரிய தீ விபத்து ஏற்பட்டு பல கட்டடங்கள் நாசமாயின. அதே ஆண்டில் துபாய் பிரிட்டிஷ் அரசோடு இன்னொரு ஒப்பந்தம் செய்துகொண்டது. இப்படி பிரிட்டிஷ் அரசின் பாதுகாப்பில் துபாய் இருந்து வந்தாலும் தனி நாடாகவே இருந்து வந்தது. அப்போது துபாய் முத்துக்களுக்கு உலகம் பூராவும் மவுசு இருந்தது. ஆயிரத்தித் தொளாயிரத்தி இருபதுகளில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவும் ஜப்பான் துரித முறையில் முத்துக்களை உருவாக்கி உலக அரங்கில் இடம் பிடித்ததும் துபாய் முத்துக்களுக்கு மவுசு குறைந்தது. நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த அப்போதைய அமீர் துபாய் வழியாக வர்த்தகம் செய்த எல்லா வர்த்தகக் குழுக்களுக்கும் வரி விதிப்பை நீக்கினார். அது மட்டுமல்ல, துபாய்க்கும் அபுதாபிக்கும் இடையே நடந்த எல்லைப் பிரச்சினையில் பிரிட்டிஷ் அரசு மத்தியஸ்தம் செய்து ஜெபெல் அலி போர்ட் என்னும் அரசின் கட்டுப்பாடுகளற்ற ஒரு பகுதியை ஏற்படுத்திக் கொடுத்தது. இதனால் வெளியிலிருந்து தொழிலாளர்கள் எந்த விதத் தடையுமின்றி இந்நாடுகளுக்குள் வரவும் தேவையான பணத்தை வெளியே எடுத்துச் செல்லவும் வழி ஏற்பட்டது. அதனால் துபாயின் பொருளாதாரம் முன்னேறியது. ஆயிரத்தித் தொளாயிரத்தி ஐம்பதுகளில் முதல் வங்கி, மருத்துவமனை தொடங்கப்பட்டன. எண்ணெய் வளம் கிடைப்பது பற்றி ஆராய்ச்சியைத் தொடங்கப் பல கம்பெனிகளுக்கு துபாய் அனுமதி கொடுத்தது.

    1966-இல் துபாயில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு துபாயின் பொருளாதாரம் வேகமாக முன்னேறியது. வெளிநாடுகளிலிருந்து எல்லா வகையான வேலைகளுக்கும் ஆட்கள் தேவைப்பட்டது. இப்படிக் கீழ்மட்ட வேலைகளுக்கு மட்டுமல்ல பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று மேல் நிலையில் உள்ள வேலைகளுக்கும் துபாய்க்கு ஆட்கள் தேவைப்பட்டனர்.

    1971-இல் பிரிட்டிஷ் அரசு இந்த நாடுகளின் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டதும் அந்தப் பகுதியில் உள்ள அபு தாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம் அல் குவான், ராஸ் அல் கைமா, ஃபுஜைரா ஆகிய ஏழு எமிரேட்டுகள் ஒன்று சேர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்டுகள் என்ற நாட்டை உருவாக்கின. இதன் தலைநகரம் அபுதாபி. ஐக்கிய அரபு எமிரேட்டிற்கு ஒரு ஜனாதிபதியும் துணைஜனாதிபதியும் இருக்கிறார். அதன் அங்கங்களான ஒவ்வொரு நாட்டிற்கும் தனி அமீர் ஒருவர் இருக்கிறார் சட்டம், பொருளாதாரம், ராணுவம் ஆகியவற்றைப் பொறுத்த வரை எல்லா நாடுகளுக்கும் பொதுவான அரசியல் சாசனம் உண்டு. ஆனால் உள்நாட்டு விவகாரங்களைப் பொறுத்தவரை தனித் தனி சட்டங்கள் இயற்றிக்கொள்ளலாம்.

    அமெரிக்காவில் மாநிலங்கள் உருவான பிறகு அவை ஒன்று சேர்ந்து ஒரு கூ.ட்டாட்சி (Federation) அமைப்பை உருவாக்கிக்கொண்டன. ஐரோப்பிய யூனியன் பல தனி நாடுகள் சேர்ந்த கூட்டமைப்பு. தங்கள் பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்ள பொருளாதார முறையில் கூட்டாகச் செயல்பட்டால் நன்மை ஏற்படும் என்று ஐரோப்பிய நாடுகள் எண்ணி அந்தக் கூட்டமைப்பை ஏற்படுத்திக்கொண்டன. இந்தியா சுதந்திரத்திற்குப் பின் ஒரு நாடாக உருவாகிப் பிறகு மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரித்துக்கொண்டது. இது ஒரு வகைக் கூட்டமைப்பு. ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் சில மிகச் சிறியவை. கூட்டாகச் சேர்ந்து செயல்பட்டால் தங்கள் பாதுகாப்பிற்கும் பொருளாதாரத்திற்கும் நலம் என்று கருதி ஒரு கூட்டமைப்பை உருவாக்கிக்கொண்டன. இந்தக் கூட்டணியில் இருக்கும் நாடுகள் நம் இந்திய மாநிலங்களைப் போன்றவை. ஆனால் ஒரு பெரிய வித்தியாசம். இந்திய மாநிலங்கள் மீது மத்திய அரசுக்கு உள்ள அதிகாரம் ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் தலைமையான அபு தாபிக்கு இல்லை.

    இந்தக் கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் அபுதாபி நிலப்பரப்பைப் பொறுத்த வரையில் பெரியது. துபாய் மக்கள் தொகையில் பெரியது. துபாயின் அமிர்தான் ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் உதவி ஜனாதிபதி. ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் சுப்ரீம் கவுன்சிலில் நாற்பது அங்கத்தினர்கள். துபாய் எட்டு அங்கத்தினர்களை அந்தக் கவுன்சிலுக்கு அனுப்புகிறது. அபு தாபி, துபாய் ஆகிய இரண்டு நாடுகளைத் தவிர சுப்ரீம் கவுன்சிலில் எடுக்கும் எந்த முடிவையும் எதிர்க்கும் அதிகாரம் மற்ற நாடுகளுக்கு இல்லை.

    துபாய் எண்ணெய் வளத்தால் செழிக்கத் தொடங்கினாலும் இப்போது எண்ணெயிலிருந்து வரும் வருமானம் 6 சதவிகிதம் மட்டுமே. மற்றதெல்லாம் சுற்றுலாப் பயணிகள் வருகை, நிதி சேவை, கேளிக்கை அரங்கங்கள், ஓட்டல்கள், விளையாட்டுக்கள் ஆகியவற்றிலிருந்து வருவது. துபாய் கடலின் கரையில் இருப்பதால் பல நீர் விளையாட்டுக்கள் அங்கு நடக்கின்றன. பாலைவனப் பகுதியில் ஒட்டகப் பந்தயம் போன்ற விளையாட்டுக்களை நடத்துகிறார்கள். போலோ விளையாட்டு துபாயில் பிரசித்தம்.

    துபாயை shopper’s paradise என்கிறார்கள். வருடத்திற்கு இரு முறை பொருள்கள் வாங்கும் திருவிழாவை (shopping festival) நடத்துகிறார்கள். சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து இழுக்க இங்கு அமெரிக்கப் பாணியில் நிறைய மால்கள். எந்தச் சாமானை எடுத்துகொண்டாலும் – எலெக்ட்ரானிக் சாமான்கள், சாக்லேட்டுகள், ஆடை வகைகள், உணவு வகைகள் – அமெரிக்க பிராண்டுகள் கிடைக்கின்றன. உள்ளே நுழைந்தால் அமெரிக்க மால் ஒன்றிற்குள் நுழைந்துவிட்ட மாதிரி தோன்றுகிறது. வண்ண விளக்குகள். எலிவேட்டர்கள், எக்ஸ்கலேட்டர்கள் என்று அமெரிக்க மால்கள் போலவே அமைக்கப்பட்டிருக்கின்றன. வெளியில் அடிக்கும் வெயில் தெரியாதவாறு எல்லா மால்களும் ஏர்கண்டிஷன் செய்யப்பட்டிருக்கின்றன.

    துபாயில் வசதிகள் மிகுந்த ஓட்டல்கள் நிறைய இருக்கின்றன. எல்லா வகையான பயணிகளின் வசதிகளுக்குத் தக்கவாறு அவை அமைந்திருக்கின்றன. நாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் காலை உணவு –அதற்குரிய கட்டணத்தைப் பெற்றுக்கொண்டுதான் – பரிமாறுகிறார்கள். அதில் தமிழ்நாட்டு உணவு வகைகளான இட்லி, தோசை, சாம்பார், சட்னி போன்ற அயிட்டங்களும் இருந்தன. இரவுக் கேளிக்கைகள் உள்ள பல இடங்கள் துபாயில் உண்டு.

    துபாயை கடல் உள்ளே புகுந்து இரண்டாகப் பிரிக்கிறது. இதை ஆங்கிலத்தில் க்ரீக் (creek) என்கிறார்கள். துபாயின் இரண்டு பகுதிகளையும் பர் துபாய், டெய்ரா துபாய் என்று அழைக்கிறார்கள். இவற்றை இணைக்க 1962-லும் 1972-லும் கட்டிய பாலங்களும் 1975-இல் கட்டிய சுரங்கப்பாதையும் இருக்கின்றன. துபாயில் முதல் முதலாக 1972-ல் தான் பொதுமக்களுக்கான மருத்துவமனை கட்டப்பட்டது.

    துபாயில் போக்குவரத்து வழக்குகளை விசாரிக்க ஒரு நீதிமன்றம், குடும்ப வழக்குகளை விசாரிக்க குடும்ப நீதிமன்றம், மற்ற வழக்குகளை விசாரிக்கப் பொது நீதிமன்றம் என்று மூன்று நீதிமன்றங்கள் இருக்கின்றன. விவாகரத்து போன்ற வழக்குகள் குடும்ப நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். ஆனால் அங்கு துபாய் குடிமக்களின் வழக்குகள் மட்டும்தான் விசாரிக்கப்படும். துபாயில் குற்றங்கள் குறைவு என்கிறார்கள். துபாய் ஒரு பாதுகாப்பான நகரம் என்ற பெயரையும் பெற்றிருக்கிறது.

    துபாயில் நிறைய காட்சியகங்கள் இருக்கின்றன. இப்போது துபாயில் உள்ள பல நவீன கட்டடங்களைப் பார்த்து பிரமிப்பவர்கள் துபாய் சரித்திரத்தை விளக்கும் துபாய் காட்சியகத்தை பார்த்தால் துபாய் மிகச் சமீப காலம் வரை வளர்ச்சி இல்லாமல் இருந்தது புரியும். முதல் மருத்துவமனை 1943-இல் கட்டப்பட்டது. முதல் வங்கி 1946-இல். ஆயிரத்தித் தொளாயிரத்தி ஐம்பதுகளில் தங்க வியாபாரம் ஆரம்பிக்கப்பட்டது. (இப்போது தங்கம் விற்பனை செய்யும் கடைகள் எக்கச்சக்கமாக இருக்கின்றன. சுவிட்சர்லாந்திலிருந்து நேரடியாகத் தங்கத்தைத் தருவித்து விற்கிறார்கள்.) அறுபதுகளின் கடைசியில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு துபாய் மிகத் துரித கதியில் வளரத் தொடங்கியது.

    துபாயின் அதிகாரபூர்வ மதம் இஸ்லாம். குடிமக்கள் எல்லோரும் இஸ்லாமியர்கள். அரசு இஸ்லாமிய மதக் கொள்கைகளை எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. நாங்கள் துபாய்க்குச் சென்ற சமயம் ரம்ஜான். அப்போது எல்லோரும் விரதம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால் உணவகங்கள் எல்லாம் மூடியிருந்தன. யாரும் பொது இடங்களில் உணவருந்தக் கூடாது. அவரவர் வீடுகளில் வேண்டுமானால் உணவருந்தலாம். இந்த விதி உல்லாசப் பயணிகளுக்கும் உண்டு. காலையில் ஓட்டலில் உணவருந்திவிட்டு வெளியே போனால் எங்கும் உணவு கிடைக்காது. கையில் உணவை எடுத்துச் சென்றாலும் அதைப் பொது இடங்களில் உண்ண முடியாது. சரவண பவன் போன்ற இந்திய உணவகங்களும் காலை ஆறு மணியிலிருந்து இரவு ஏழு மணி வரை (இந்த நேரம் சூரிய அஸ்தமனத்தைப் பொறுத்து தள்ளிக்கொண்டே போகும்.) மூடியே இருக்க வேண்டும். யாராவது ஓட்டலை போனில் அழைத்து உணவு வேண்டும் என்றால் கேட்டவர் இருப்பிடத்திற்கு அதைக் கொண்டு போய்க் கொடுப்பார்கள். யாருக்கும் ஓட்டலில் பகல் நேரத்தில் உணவு பரிமாறக் கூடாது.

    துபாயின் ஒரு வருட மழை அளவு 122 மில்லிமீட்டர்தான். மேலும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் போன்ற கோடை மாதங்களில் வெயில் மிகக் கடுமையாக அடிக்கிறது. இந்த மாதங்களில் வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸ் வரை போகுமாம். இருந்தாலும் சாலைகளின் ஓரங்களில் பூச்செடிகள் வளர்க்கிறார்கள். எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேல் என்று அந்தக் கோடைவெயிலிலும் புற்கள் காணப்பட்டன. நிறையப் பணம் செலவழித்து இந்தச் செடிகளுக்கும் புற்களுக்கும் தண்ணீர் பாய்ச்சுகிறார்கள். கடல்நீரை நல்ல தண்ணீராக மாற்றிப் பயன்படுத்துகிறார்கள். துபாய்க்குச் செல்ல விரும்புபவர்கள் நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் சென்றால் சீதோஷ்ணநிலை ரம்மியமாக இருக்கும்.

    துபாயும் சிங்கப்பூரும் கிட்டத்தட்டஒரே காலத்தில் வளர்ச்சி காண ஆரம்பித்தன. பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து 1963-இல் விடுபட்ட சிங்கப்பூர் அறுபதுகளில் தீவிரமாக வளரத் தொடங்கியது. பல நாட்டுக் கப்பல்கள் கூடும் வியாபார கேந்திரமாக விளங்கிய சிங்கப்பூருக்கு அதுவே முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது. துபாய் எப்போதும் பல இடங்களை இணைக்கும் வியாபார ஸ்தலமாக இருந்திருக்கிறது. இப்போதைய ஈராக்கோடும் ஈரானோடும் தென் ஆப்பிரிக்காவோடும் வியாபாரத் தொடர்பு இருந்திருக்கிறது. அறுபதுகளில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. எண்ணெய் வளம் எப்போதும் இருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்த அரசு மற்ற வழிகளில் பொருளாதாரத்தை நிலைப்படுத்திக்கொள்ள முயன்று வருகிறது. துபாயில் தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு இலவசமாக நிலம் வழங்குகிறது. வரிச் சலுகை கொடுக்கிறது. உலகிலேயே பணக்கார நாடான அமெரிக்காவோடு நல்ல உறவு வைத்துக்கொண்டிருக்கிறது. உல்லாசப்பயணத் துறையை எப்படி வளர்க்கலாம் என்று ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறது.

    உலகின் பல ஊர்களில் இருப்பது போல் துபாயிலும் hop on, hop off என்ற உல்லாசப் பயணிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட பேருந்துகள் உண்டு. இவை துபாயின் பல பகுதிகளுக்கும் பயணிகளை அழைத்துச் செல்லும். ஊரைச் சுற்றிக்கொண்டே இருக்கும் இவற்றில் பயணம் செய்யும் போது எந்த நிறுத்தத்தில் வேண்டுமானாலும் இறங்கிக்கொள்ளலாம், ஏறிக்கொள்ளலாம். நாம் ஒரு முறை வாங்கிய டிக்கெட் 24 மணி நேரத்துக்குச் செல்லுபடியாகும்.

    நாங்கள் ஒரு காட்சியகத்திலிருந்து வெளியே வந்ததும் அந்தத் துறையைச் சேர்ந்த ஒரு பெண் (இவரும் வெளிநாட்டுக்காரர்தான்) எங்களைப் பேட்டி கண்டார். நாங்கள் துபாயிக்கு ஏன் வந்தோம், எத்தனை நாட்கள் தங்கியிருக்கிறோம், எந்த ஒட்டலில் தங்கியிருக்கிறோம், அங்கு நாங்கள் பார்த்த இடங்கள், எங்களைக் கவர்ந்த இடங்கள், கவர்ந்த விஷயங்கள், துபாயில் நாங்கள் இதற்கு மேல் வேண்டுவது என்ன என்று சரமாரியாகக் கேள்விகள்.

    பணம் சம்பாதிக்கத் துபாய்க்குப் போகிறவர்களைப் போன்று பணத்தைச் செலவழிக்க வழி தேடுபவர்களும் துபாய்க்குப் போகலாம்!

     

    படத்திற்கு நன்றி:

    Share
  • வல்லமையாளர்!

     

    திவாகர்

    வாள்முனைக் குளே இருந்து நூல் முனைக்கு
    வித்தெடுத்த மன்னந்தனைப் பாடு மனமே
    கோகுலத்தில் லீலை செய்து போர்முகத்தில்
    கீதை சொன்ன கோகுலனைப் பாடு மனமே
    வேத ஞான மாம்பழத்தில் கீதை என்ற சாறு
    பெய்த வித்தகத்தைப் பாடு உள்ளமே
    விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் பண்ணளந்து
    கீதை சொன்ன வித்தகனைப்பாடு மனமே
    ஆதிமூலம் வேதமூலம் நாதமூலம்
    கீதமூலம் அந்தமூலம் பாடு உள்ளமே!

    கண்ணதாசனின் வைரவரிகள் இத்தனையும்.

     பஜகோவிந்தம் தமிழாக்கத்தில் தன் மனதில் கீதை பற்றி தோன்றியபோதெல்லாம் அந்தப் பாடலுக்கு தோதாக கீதையைத்தான் முன்வைப்பான் இந்த தமிழ்த்தாயின் தவப்புதல்வன்.

    கீதை உலகத் தத்துவத்துக்கெல்லாம் மூல தத்துவம்தான். எந்த மதத்தின் தத்துவத்துள்ளும் கீதையின் ஆதாரத்தைப் பெறலாம். அதுதான் கீதையின் தனித்துவம். கீதையில் இல்லாதது இவ்வுலகில் இல்லை. இவ்வுலகில் இருப்பதெல்லாம் இருந்ததெல்லாம் இருக்கப்போவதெல்லாம் கூட கீதையில் ஏற்கனவே கொடுக்கப்பட்டதுதான்.

    கண்ணன் இந்த உலகில் அவதாரம் செய்ததற்கு எத்தனையோ காரணங்கள நம் பெரியவர்கள் சொல்லிக்கொண்டிருந்தாலும் முக்கியமான காரணம் இவ்வுலகுக்கு நல்வாழ்வு கொடுக்க கீதை எனும் கொடை கொடுக்கவேண்டும் என்பதற்காகத்தான் அவன் அவதாரம் செய்தான் என்றும் சொல்லலாம்.

    அப்படிப்பட்ட கீதையை எல்லோருக்கும் புரியும் வண்ணம் சொல்லிவரும் சிரிப்பானந்தாவான ஹாஹோ எனும் திரு சம்பத் அவர்கள் பாராட்டப்படவேண்டியவர். கீதை நகைச்சுவையாக சொல்லக்கூட நம் பயன்பாட்டுக்கு வருகிறது என்பதே கீதையின் பெருமை என்பதற்கு சம்பத் அவர்கள் எழுத்துக்களே உதாரணம்..
    http://www.vallamai.com/paragraphs/26798/

    ”அட! கீதையானது போர் ஆரம்பமான அன்றே அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்டு விட்டது. ஆனால் திருதராஷ்ட்டிரர் சஞ்சயனிடத்து கேட்பது பத்து நாள் போர் முடிவிலேதான். அதாவது பத்தாம் நாள் போரிலே பீஷ்மர் அர்ஜுனனால் அம்புப் படுக்கையில் கிடத்தப் படுகிறார். அது தீராத சோகத்தைத் திருதராஷ்ட்டிரருக்கு ஏற்படுத்தி விடுகிறது. ‘போர் ஆரம்பம் முதல் என்ன நடந்தது என்பதை உனது விசேஷ சக்தியைப் பயன்படுத்தி எனக்குச் சொல்’, என சஞ்சயனிடத்தில் கேட்கிறார் . அதனால்தான் திருதராஷ்டிரர், ‘தர்மபூமியாகிய குருசேத்திரத்தில் கூடி நின்ற என்னவர்களும், பாண்டவர்களும் (பத்து நாட்கள் முன்பு) என்ன செய்தார்கள் சஞ்சயா?’, எனக் கேட்கிறார். இப்போது புரிகிறதா சாதாரணீ?”, என்று கேட்டார் ஹாஹோ.

    “நல்ல வேளை, அவர் அப்படித் திரும்பக் கேட்காமல் போயிருந்தால் நமக்கு இந்தஅற்புதக் கீதையே கிடைக்காமல் போயிருக்கும் அல்லவா?”, என்றார் சமூகன்.

    “ஆமாம் .. ஆமாம்..கிடைக்காமலே போயிருக்கும்!”, என்றார் ஆமாம்பிரபு.

    “அதான் கெடைச்சுடிச்சில்ல, சட்டுனு அடுத்த ஸ்லோகத்துக்கு போங்களேன்!”, என்று அவசரப் படுத்தினார் அவசரகுமார்.

    “பாண்டவர்களுடைய படையைப் பார்த்து விட்டு படைத்தளபதி துரோணாச்சாரியாரிடம் ராஜா துரியோதனன் இப்படிக் கூறலானான், இது இரண்டாவது ஸ்லோகம். துரியோதனனின் குரு துரோணர், ஆனால் இப்போது அவர்கள் குரு சிஷ்யராக இருக்கவில்லை. துரியோதனன் ராஜா, துரோணர் படைத் தளபதி அவ்வளவே! அதாவது இங்கு படையை நடத்திச் செல்ல, போர்த்திட்டங்கள் வகுக்க அதைச் செயல்படுத்த துரோணனருக்கு அதிகாரம் உண்டே தவிர இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் துரியோதனனுக்கே, என்று வலியுறுத்தவே ராஜா துரியோதனன் என்கிறார்”, இப்படிச் சொன்னார் ஹாஹோ.

    “அப்புடின்னா சிஷ்யனா இருந்தப்ப எடுத்த ட்ரில்லுக்கெல்லாம், வட்டியும் முதலுமாச் சேர்த்து துரோணரை இப்போ ட்ரில் எடுக்கலாம் துரியோதனன்!”, என்று சொல்லிவிட்டு உரத்த குரலில் சிரித்தது தமாசு.

    “துரோணர் தன்னோட பெரிய தாடியோட போர்க்களத்துல தோப்புக் கரணம் போட்டா தமாஷா இருக்குமில்ல?”, என்றான் மக்கான்.

    “நம்ம ஹாஹோ கூட பெரிய தாடியோட இருகார், உனக்கு ஆசையா இருந்தா அவரை தோப்புக் கரணம் போடச்சொல்லேன்”, என்றது தமாசு மக்கானைப் பார்த்து.

    பாமரரும் புரியும் வண்ணம் கீதை எடுத்துச் சொல்லப்படவேண்டும், சிரிக்க சிரிக்கச் சொன்னாலும் கடைசியில் கீதை பற்றிய சிந்தனை மட்டுமே அங்கே மூளையில் பதிவாகும் வண்ணம் எழுதிவரும் ‘சிரிப்பானந்தா’ என்கிற ஹாஹோ சம்பத் அவர்களை இவ்வார வல்லமையாளராக தேர்ந்தெடுப்பதில் வல்லமை குழு பெருமையடைகிறது. அவருக்கு நம் நல்வாழ்த்துகள்.”

    கடைசி பாரா:

    இவ்வாரக் கடைசி பாராவில் வருபவர் திரு தி.ந. இளங்கோவன். மனதில் தேடி வந்து தைத்து விட்டுப் போன கவிதை இது. திரு இளங்கோவுக்கு நம் வாழ்த்துகள்.

    காதலில் அலையும் மனம் போல்
    உன்னுடன் எங்கும் திரிந்தேன் நான்.
    பிறிதொரு நாள் எனக்கென்று ஒரு பார்வை, ரசனை.
    வேறுபட்டதாய், உன்னில் முற்றிலும் மாறுபட்டதாய்…
    உன்னில் ஒரு அங்கமாய் நானிருந்த நாட்கள் போய்
    நான் என்னைப் பெற்ற வலி மிகுந்த காலமது…

    Share
  • நாணயம்

    சந்தர் சுப்ரமணியன்
     

    “முத்து, வண்டியை வேகமா ஓட்டுடா” என்றே விரைவுபடுத்தினான் ராஜா. பல நாள்கள் கழித்து அம்பத்தூர் தொழிற்சாலை ஒன்றில் அவனை வேலைக்கு அமர்த்துவதாக அவனுடைய மாமாவின் சிபாரிசின் பேரில் இன்று அவனை வரச்சொல்லி தகவல் வந்தது. வீட்டிலிருந்து புகைவண்டி நிலையம் சற்று தூரம் இருப்பதால் முத்துவை புகைவண்டி நிலையத்தில் விட்டுவிட்டு வரும்படி அவன் மிதிவண்டியின் பின்புறம் அமர்ந்து ராஜா சென்று கொண்டிருந்தான்.

    “என்ன வேலை ராஜா? ஏதாச்சும் மெஷீன் சுத்தணுமா?”

    “இல்லப்பா, ஏதோ பேக்கிங் செய்யணும் தான் மாமா சொல்லிச்சு”

    “வைக்கோல் எல்லாம் வச்சி அடைப்பாங்களே அப்படியா? முந்தி நான் பேரீஸ்லே இருந்தப்போ அப்படித்தான். சாமானை வைக்கோல்லே சுத்தி அதை அட்டை டப்பாக்குள்ளே வச்சு பிளாஸ்டிக் கயித்தாலே இழுத்து கட்டணும்”

    “இருக்கலாம்பா. போய்ப் பார்த்தாத்தான் தெரியும்”

    “என்ன 2000 ருபா தருவாங்களா? சம்பளம் பத்தி ஏதாச்சும் சொன்னாங்களா?” என்று ஆவலுடன் முத்து விசாரித்தவாறே மிதிவண்டியின் ஓட்டத்தை விரைவு படுத்தினான். “போனாத்தான் தெரியும் போல. மாமா ஒண்ணும் அதைப் பத்தி சொல்லலே” என்று ராஜா, வாயளவில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாலும், அவன் மனத்தில் இந்த வேலை எப்படியாவது கிடைத்துவிட வேண்டும் என்று வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டிருந்தான்.

    “ஸ்டேஷன் தெருவுலே அந்த புள்ளையார் கோவிலாண்ட நிறுத்திக்க முத்து. நம்ப வேலுவை கொஞ்சம் காசு எடுத்தாரச் சொல்லி இருக்கேன். வாங்கிட்டு போயிடலாம்” என்றான் ராஜா.

    “வேலு இங்கே என்னா பண்றான்? ரெட் இல்ஸ் மில்லே வேலை பார்த்துட்டு இருந்தான் இல்லே?” என முத்து வினவ, “இங்கே ஏதோ வேலையா வர்ரானான். இங்கத்தான் நிக்கச் சொன்னான்” என்று ராஜா தெருவில் வருவோர் போவோர்களில் வேலுவைத் தேடத் தொடங்கினான்.

    அன்று வெள்ளிக்கிழமை ஆனதால் கோவிலில் கூட்டம் அதிகம். வழக்கமாக, அலுவலகம் செல்பவர்கள் கூட, வண்டி ஏறும்/இறங்கும் அவசரத்திலும் ஹலோ சொல்லிவிட்டுப் போகும் அளவிற்கு இந்தப் பிள்ளையாருக்கு மகிமை. இதில் வெள்ளியும் சேர்ந்து கொண்டதால் ஒரே கூட்டம். சிதறு தேங்காயின் சில்லுத்தெறிப்பில் இருந்து தப்பிக்க, கூட்டம் படாத பாடு பட்டுக் கொண்டிருந்தது.

    சனங்களின் தீராத தேவைகள் குறைவதாகத் தெரியவில்லை. சமுதாயத்தின் பல்வேறு நிலை மனிதர்களும் தத்தம் தேவைகளைப் பூர்த்தி செய்யுமாறு அந்த யானைச் செவியானின் காதோரமாகச் சொல்லிக் கொண்டிருந்தனர்.

    அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருக்கும் தலைகளில் தன் பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்த ராஜாவிற்கு, கோவில் எதிரே நின்றிருந்த வேலுவைக் கண்டபின் தான் மூச்சே வந்தது.

    கையசைத்து வேலுவை அருகில் வரவழைத்தான். “என்ன வேலு, எவ்ளோ நேரம் ஆச்சி தெரியுமா?” என்று வேலுவை ராஜா கேட்க, “வழியிலே லேட்டயிடுச்சி! இந்தா பணம்” என்று ராஜாவின் கையில் பதினைந்து ரூபாயைத் திணித்துவிட்டு. “அப்பால பாக்கலாம் ராஜா, நான் ஆபீஸ் போவணும் இப்போ” என்று கூறிவிட்டு வேலு சென்றுவிட்டான்.

    “வண்டியை எடு முத்து” என்று ராஜாவின் பேச்சைக் கேட்ட முத்து, அந்தத் தெருவின் அடுத்த முனையில் இருக்கும் புகைவண்டி நிலையத்திற்கு வண்டியைச் செலுத்தினான்.

    நிலையத்தில் வழக்கம் போல் கூட்டம் அதிகமாக இருக்க ராஜா, முத்துவை திருப்பப் போகச் சொல்லிவிட்டு தான் வரிசையில் நின்றான். ‘ஏங்க, இங்கிருந்து அம்பத்தூர் போக ஒரு அரை மணி ஆகுமா?” என்று பக்கத்தில் நிற்பவரை விசாரித்து விட்டு, சீட்டு வாங்கக் காசெடுக்கத் தன் சட்டைப் பையைத் தூழாவினான்.

    அங்கிருந்து அம்பத்தூர் சென்று திரும்பிவர பதினைந்து ரூபாய் ஆகும். அதனால் தான் வேலுவிடம் பதினைந்து ரூபாய் கேட்டிருந்தான் ராஜா. “இங்கேயே ரிட்டன் டிக்கிட் வாங்கணும்” என்று எண்ணியவாறே, சட்டைப்பையில் இருக்கும் ஒரு பத்து ரூபாய் நோட்டையும் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தையும் தேடினான். பத்து ரூபாய் மட்டும் அகப்பட்டதே ஒழிய ஐந்து ரூபாய் நாணயத்தைக் காணவில்லை. துழாவிப் பார்த்ததில் சட்டைப் பையின் புதிய ஓட்டை அவன் விரல்களுக்குப் புலப்பட்டது.

    “பத்து ரூபாயில் அம்பத்தூர் சென்றுவர முடியாதே” என்று நினைத்த ராஜா, “முத்துவைப் பிடிச்சா ஐந்து ரூபாய் வாங்கலாம்” என்று நினைத்தவாறே, வரிசையை விட்டு வெளியே ஓடினான். ஆனால் அவன் வருவதற்குள் முத்து அங்கிருந்து சென்றுவிட்டிருக்க வேண்டும். முத்துவைக் காணாது திகைத்து நின்ற ராஜா என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தான். “ஒருவேளை, காசை பையிலே போடும்போதே விழுந்திருக்குமோ? கோவில் கிட்டே போயி தேடிப் பார்ப்போம்” என்று எண்ணிய வண்ணம் கோவிலை நோக்கி நடந்தான்.

    கோவிலின் அருகே ஏதோ கூட்டமும் குழப்பமுமாக இருந்தது. ராஜாவுக்கு அதில் மனம் செல்லவில்லை. தன்னுடைய ஐந்து ரூபாய் நாணயம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்ததால், வழியெங்கும் அதைத் தேடிக் கொண்டே கோவிலை நெருங்கினான். “இவ்ளோ பெரிய தெருலே, அஞ்சி ரூபா எப்படி கெடைக்கப் போகுது?” என்று நொந்து கொண்டான்.

    கோவில் பக்கம் நெருங்கும் போது, அங்குக் கூடியிருந்த கும்பல் போடும் கூச்சலும் குழப்பமும் அதிகமாகியது. “அஞ்சி நிமிஷத்துக்கு முன்னே தான் பழம் வாங்கிட்டு பர்ஸை சட்டையிலே வச்சேன் சார். நல்ல நினைவு இருக்கு. அதுக்குள்ளே எவனோ அடிச்சிட்டான் சார்” ஒரு முதியவர் தன் பர்ஸ் தொலைந்தது குறித்து அங்கு நின்றிருந்த காவலரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். “ஏங்க, கோவில்லே இது மாறி நடக்குமுன்னு உங்களுக்கு தெரியாதா? கொஞ்சம் கவனமா இருக்கக் கூடாதா? பர்ஸை சட்டைப் பைலே தான் போட்டிங்களா இல்லே கீழே எங்கேயாவது தொலைச்சிட்டிங்களா? நல்ல யோசிச்சி சொல்லுங்க” என்று காவலர் அவர் திருப்பிக் கேட்டுக் கொண்டிருந்தார்.

    “பர்ஸ்லே எவ்ளோ வச்சிருந்தீங்க? என்ன கலர் பர்ஸ்?” என்ற காவலரின் கேள்விக்கு அந்தப் பெரியவர், “ஒரு 500 ரூபா இருக்கும் சார். சிவப்பும் நீலமும் சேர்ந்த கலர் சார்.” என்றார். “எவனோ எடுத்திருக்கான் சார்” என்று மீண்டும் அடித்துச் சொல்லிக் கொண்டிருந்தார் அவர்.

    ‘நம்ம அஞ்சி ரூபாவை தேடறோம், இங்கே இவரு 500 ரூபாவைத் தேடிக்கிட்டு இருக்காரு” என்று நினைத்த ராஜா தன் தேடலைத் தொடர்ந்தான்.

    இதற்கிடையில் ராஜா தரையில் தேடுவதை கவனித்த காவலர், ‘யார்பா அது? அங்கே என்ன தேடிட்டு இருக்கே?” என்று அதட்டிய வண்ணம் ராஜாவை அருகில் அழைத்தார்.

    “சார் என் அஞ்சி ரூபா காயின் காணாம போச்சி சார். அதை தேடிட்டு இருக்கேன்”

    “என்னையா விளையாடறியா? இவ்ளோ பெரிய தெருலே அஞ்சி ரூபாய தேடறையா?”

    “ஆமாம் சார், சட்டைபை கிழிஞ்சி இருக்கு பார்க்காம போட்டிருக்கேன். இங்கேத்தான் எங்கேயாவது விழுந்திருக்கனும்”

    அதற்குள் எங்கிருந்தோ ஒருவர் காவலரின் அருகே வந்து, “சார் இந்த ஆள அஞ்சி நிமிஷம் முன்னாடி இங்கே பார்த்தேன் சார். இன்னும் ரெண்டு பேரு கூட இருந்தாங்க சார். எனக்கு என்னவோ இந்த ஆள்தான் எடுத்திருக்கணும் போல இருக்கு” என்றார்.

    ராஜாவிற்கு திக்கென்றது. ‘இல்லே சார். எனக்கு ஒன்னும் தெரியாது நான் பாட்டுக்கு ரெயில்வே ஸ்டேஷன் போய்க்கினு இருந்தேன். பைசா கீழ விழுந்திருச்சி, அதை தேடக்கிட்டு இருக்கேன்” என்றான்.

    “பாருங்க சார் பொய் சொல்றான். அவன் இப்பதான் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்திலிருந்து வர்ரான், ஆனா போறதா சொல்றான்” என்று ஒருவர் கூட்டத்தை உசுப்பி விட்டார்.

    “இந்த மாறி ஆளுங்கள நம்ப முடியாது சார். மூனு பேர்லே இவன் ஒருத்தன் தான் இங்கே இருக்கான். பர்ஸ் கை மாறிடிச்சி சார். இவனை பெண்டு எடுத்தா எல்லாத்தையும் கக்கிடுவான் சார்” என்று உன்னதமான ஒரு உபாயத்தை கூறியபடி ஒருவர் அந்த கூட்டத்திலிருந்து விலகிச் சென்றார். ஏதோ பர்ஸே கிடைத்து விட்ட மாதிரி கூட்டமும் கொஞ்சம் கொஞ்சமாக பர்ஸ் கதையை விட்டுவிட்டு தத்தம் பயணத்தின் அவசரத்துக்கு தன்னை தயாராக்கிக் கொண்டது.

    “ஏங்க ஸ்டேஷன் வந்து ஒரு ரிப்போர்ட் எழுதி கொடுங்க சார், பர்ஸ் காணாம போயிடிச்சின்னு” என்று காவலர் அந்த முதியவரிடம் கேட்க, அவர் “சார் நான் ஒரு கல்யாணத்திற்கு அவசரமா போறேன் சார். விடுங்கா போகட்டும். இந்த பையந்தான் எடுத்திருப்பான்னு எனக்குத் தோணலை” என்ற படி கிளம்பி விட்டார்.

    “இவனுங்களா இப்படி விடக்கூடாது சார். ஸ்டேஷன் கொண்டுபோய் ரெண்டு தட்டு தட்டி அனுப்புங்க சார்” என்று தன்னாலான ஒரு கருத்தை உதிற்த்து விட்டு மற்றொருவர் விலகினார்.

    “சார் எனக்கு ஒன்னுமே தெரியாது சார். ஸ்டேஷன் போயி டிகிட் எடுக்க காசு தேடுறேன் அப்பத்தான் என் பாக்கெட் ஓட்டைன்னு எனக்கே தெரிஞ்சுது சார். இங்கே நின்னு பேசிக்கிட்டு இருந்ததாலே இங்கே விழிந்திருக்குமுன்னு வந்து பார்த்தேன் சார். நம்புங்க சார்” என்று அழாக்குறையாக ராஜா காவலரிடம் சொன்னாலும் அவர் கேட்பதாக இல்லை.

    “சரி சரி வண்டிலே ஏறு, ஸ்டேஷன் போய் பேசிக்கலாம்” என்று தன் இரு சக்கர வண்டியில் ராஜாவை அமரச் சொல்லி வண்டியை ஸ்டேஷ்னுக்கு ஓட்டினார் காவலர்.

    “சார் ஒரு வேலை தேடி அம்பத்தூர் போறேன் சார் இப்போ. லேட்டானா அந்த வேலை கூட கெடைக்காது சார். நம்புங்க சார். நான் எடுக்கல்ல சார்” என்று மீண்டும் ராஜா கெஞ்சிப் பார்த்தான்.

    “உன்னை எப்படி நம்பறது?” வண்டியை நிறுத்தி விட்டு காவலர் கேட்டார்.

    “இதோ பாருங்க சார் எங்கிட்டே பத்து ரூபா நோட்டு இருக்கு. இந்த ஓட்டை இப்பத்தான் சார் பார்க்கிறேன். அஞ்சி ரூபா காயின் இதிலே தான் விழுந்திருக்கணும்” என்று தன் சட்டைப் பையின் ஓட்டையில் விரலை விட்டுக் காட்டினான்.

    “இப்போ பத்து ரூபாய்லே நான் அம்பத்தூர் போக கூட முடியாது சார்”

    “உன் வீடு எங்கே இருக்கு?”

    “அந்த தண்ணி டாங்க் பின்னாலே சார். ராஜான்னு கேட்டா எல்லார்க்கும் தெரியும் சார்”

    “நிஜமாத்தான் சொல்லறயா? பொய்யினு தெரிஞ்சதுனா பொளந்துடுவேன்”

    “இல்லே சார் மெய்யாலுமே தான் சார். இங்கே தான் சார் இருக்கேன்”

    “சரி சரி. கூப்ட்டு அனுப்பிச்சா வந்துரணும். இப்ப இந்த அஞ்சி ரூபாயை வாங்கிக்க, அம்பத்தூர் போக வச்சுக்க” என்ற படியே காவலர் தன் சட்டைப் பையில் இருந்து சிவப்பு நீலமும் சேர்ந்த கலர் பர்ஸை எடுத்து அதிலிருந்து ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை ராஜாவிடம் கொடுத்தார்.

     

    Share
  • நீறு பூத்த நெருப்புகள்

    முகில் தினகரன்

    சிவகிரியை அடைந்து ராசாக்கவுண்டர் தோட்டத்தை நெருங்கிய சின்னான் அசந்து போனான்.

    ‘அடேங்கப்பா…ஒரு சாவுக்கு இத்தனை கூட்டமா?’

    சைக்கிளை மாட்டுத் தொழுவத்தின் பின்புறம் நிறுத்திப் பூட்டி விட்டு பெரிய பந்தலினுள் நுழைந்தான். பந்தலின் முன்புறம் கிடத்தப் பட்டிருந்த கவுண்டரின் உடலைப் பார்த்ததும் ‘ஓ’வெனக் கதறி அதன் காலடியில் சென்றமர்ந்து அந்தக் கால்களைத் தன் முகத்தில் பதித்துக் கொண்டு எல்லோரின் கவனத்தையம் ஈர்க்கும் விதமாய் பெரிய குரலில் அழுதான்.

    ஒரு வருஷம்..ரெண்டு வருஷமல்ல..கிட்டத்தட்ட இருபத்தஞ்சு வருஷம் கவுண்டர் வீட்டு உப்பைத் தின்று வளர்ந்தவனாயிற்றே. சாதாரண பண்ணையாள்தான்…கீழ்சாதிக்காரன்தான்…ஆனாலும் சின்னானுக்கு கவுண்டர் தோட்டத்தில் நல்ல செல்வாக்கும்..அதிகப்படியான சலுகைகளும் உண்டு. பத்து வயதுச் சிறுவனாக அவன் அங்கு வந்து சேர்ந்த காலம் ராசாக்கவுண்டர் வாலிப முறுக்கில் வனப்போடிருந்த காலம். பார்த்துப் பார்த்துப் பிரமிப்பான் கவுண்டரின் கம்பீரமான அழகை. அப்ப நடந்த கவுண்டரின் கல்யாண கோலாகலத்தை இப்ப நெனச்சாலும் சின்னான் மனசு சந்தோஷத்துல கூத்தாடும். ஊரில் வருஷத்துக்கொரு தரம் வரும் திருவிழா கூட அத்தனை கோலாகலமா இருக்காது. பண்ணை வேலையாட்கள் அத்தனை பேருக்கும் வேட்டி துண்டு, சேலை. அது பத்தாதுன்னு ஆளுக்கு நூறு ரூபா இனாம். அந்தக் காலத்துல நூறு ரூபாங்கறது பெரிய தொகை.

    யார் யாரோ வந்து கவுண்டர் சவத்துக்கு மாலை அணிவித்து விட்டுச் செல்ல கண்ணீருடன் அதைப் பார்த்தபடி தலை மாட்டிலேயே அமர்ந்திருந்தான் சின்னான்.

    ராசாக்கவுண்டர் பொண்ணு கட்டுன எடமும் சாதாரண எடமில்லை. வந்த கவுண்டச்சியம்மாவும் ஏக சொத்துபத்தோட வந்திறங்கியதில் ஊர்ல கவுண்டர் செல்வாக்கு உச்சாணிக்கே போனது.

    ‘டேய்..சின்னா..இன்னிக்கு ராத்திரியே சவம் எடுத்தாகனும்..அதனால எங்கியும் போயிடாம இங்கியே இரு..என்ன?’ கவுண்டரோட பெரிய மச்சினன் சத்தமாய்ச் சொல்ல சுரத்தேயில்லாமல் தலையாட்டினான்.

    சின்னானின் திருமணத்தைக் கூட கவுண்டர்தான் நடத்தி வெச்சாரு. செலவு மொத்தத்தையும் தானே ஏத்துக்கிட்டு தாலியையும் தன் செலவிலேயெ பண்ணிப் போட்டாரு. புதுப் பொண்டாட்டிகிட்டக்கூட சின்னான் ‘ஏ..புள்ள..கவுண்டருக்கும்..கவுண்டச்சியம்மாவுக்கும் நான் மவன் மாதிரி புள்ள’ என்று பெருமையோடு சொல்லிக் கொள்வான்.

    மாலை நேரம் நெருங்க நெருங்க சவத்தைத் தூக்குவதற்கான ஏற்பாடுகள் துரிதமாக்கப் பட்டன.

    ஏழு மணி வாக்கில் சொர்க்க ரதம் போல் ஜோடிக்கப்பட்ட பாடை ரதத்தில் ராசாக் கவுண்டரின் உடல் பயணம் புறப்பட்டது.

    பாடைக்குப் பின்னால் நாலணா..எட்டணா..சில்லறைக் காசுகள் கலக்கப்பட்ட பொரியை பாடையின் மேல் வீசிக் கொண்டே தள்ளாட்டமாய் நடந்தான் சின்னான்.

    ‘ஹூம்..கிழச்சிங்கமாட்டமல்ல இருந்தாரு மனுஷன்…இந்தக் கட்டைகிட்ட எமன் நெருங்கவே முடியாதுன்னு அடிச்சு சொல்லுவாங்களே..இப்படி பொசுக்குன்னு போயிட்டாரே’ கூட்டத்தில் யாரோ சொல்ல யாரோ அதுக்கு ‘அதானே..?’ என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க,

    கீழத்தெரு மைனர் வீட்டை நெருங்கியது சவ ஊர்வலம்.

    திடீரென்று கூட்டத்தில் ஒருவித சலசலப்பு. பலர் மைனர் வீட்டுக்குப் பின்புறம் போய்ப் போய் வர சின்னானுக்கு ஆவலாயிருந்தது. அவனும் போய்ப் பார்த்தான். அங்கெ ஆளாளுக்கு சீமைச் சாராயத்தை கணக்கு வழக்கில்லாமல் உள்ளே தள்ளிக் கொண்டிருந்தனர். நாக்கில் ஜலம் ஊற சின்னானும் ரெண்டு மூணு பாட்டிலை எடுத்து உள்ளே கவிழ்த்துக் கொண்டான். போதை ‘ஜிவ்’வென்று தலைக்கேறியது. வேகவேகமாக நடந்து வந்து மீண்டும் பாடைக்குப் பின்னால் செல்லும் கூட்டத்தோடு இணைந்து கொண்டான்.

    சுடுகாட்டில் ஏகப்பட்ட சாத்திர சடங்குகளுக்குப் பிறகு ராசாக் கவுண்டரின் பிணத்திற்கு அவருடைய தம்பி மகன் சுருளிக் கவுண்டன் கொள்ளி வைக்க ‘திகு…திகு..’வென்று எரிய ஆரம்பித்தது நெருப்பு.

    அந்தச் சிதை நெருப்பை போதை விழிகளுடன் வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்த சின்னானின் அடிமனதில் குப்புறக் கிடந்த அந்த ஆவேசம் ‘குபக்’கென்று நிமிர்ந்தெழுந்தது. பற்களை ‘நற..நற’வென்று கடித்தபடி ராசாக் கவண்டர் உடல் பொசுங்கும் வாடையை ஒருவித குரூர திருப்தியோடு ஆழ உறிஞ்சி ரசித்தான்.

    ‘டேய்..சின்னா..நீ காலம்பறந்தானே ஊருக்குப் போவப் போறே,…ஒண்ணு செய்யி… ராத்திரி பூராவும் இங்கியே இருந்து சவம் எரியறதைக் கவனிச்சுக்க! டேய…சூட்டுல..நரம்பெல்லாம் இறுக்கி கையி..காலெல்லாம் ‘விருட்..விருட்’ன்னு நீட்டிக்கும்டா..சமயத்துல சவமே எந்திரிச்சு உட்காரும்..அப்ப..இதா..இந்தக் கம்பால நாலு சாத்து சாத்திப் படுக்க வையி..என்ன? பயந்துக்க மாட்டியல்ல?’ கவுண்டர் மச்சினன் சீமைச் சாராய குழறலோடு சொல்ல,

    ‘சரி’யெனத் தலையாட்டினான் சின்னான்.

    எல்லோரும் சென்ற பின் சிதையருகே அமர்ந்து குறுஞ்சிரிப்புடன் ரசிக்க ஆரம்பித்தான். உள்ளுக்குள் ராசாக்கவுண்டரின் உடல் வெந்து கொண்டிருக்கின்றதென்ற எண்ணமே அவனுக்கு சந்தோஷமாயிருந்தது. வாய் விட்டுச் சிரித்தான். அவன் சிரிப்பொலி பக்கத்து மரங்களிலிருந்த பறவைகளை பயமுறுத்த அவைகள் ‘சட..சட’வென இறக்கையடித்துக் கொண்டு இருட்டில் திக்குத் தெரியாமல் அங்குமிங்குமாய் பறக்க ஆரம்பித்தன.

    ‘பணத்திமிரு பிடிச்ச பிசாசுப்பயலே.. ‘மேல்சாதிக்காரன்..மேல்சாதிக்காரன்’ன்னு மாரு தட்டிக்கிட்டுத் திரிஞ்சியே…இன்னிக்குத்தாண்டா நீ நெசமா மேல்சாதிக்காரன்…இல்ல..இல்ல..மேலோக சாதிக்காரன்! சொந்த செலவுல தாலி செஞ்சு கல்யாணம் பண்ணி வெச்ச உன்னைய எஞ்சம்சாரம் அப்பா ஸ்தானத்துல வெச்சிருந்தாளே.. அவளைப் போயிக் கெடுத்தியேடா பாவி’

    ‘படீ’ரென்ற சத்தத்தோடு கொள்ளிக் கட்டைகள் தெறித்து விழ ராசாக்கவுண்டரின் கால்களிரண்டும் விறைத்துத் தூக்கின.

    ஆக்ரோஷத்தோடு கம்பை எடுத்து வருடக்கணக்கில் அடைகாத்து வைத்திருந்த ஆத்திரம் தீர ஓங்கி ஓங்கிச் சாத்தினான் சின்னான். ‘கிழட்டு நாயே.. நீ கெடுத்துட்டதால தூக்குல தொங்கின எம்பொண்டாட்டி மேல இல்லாத களங்கங்களைச் சுமத்தி.. என்னையும் மெரட்டி..என் வாயாலேயே ‘ஆமாம்’ன்னு சொல்ல வெச்சியேடா பாவீ’

    கை ஓய்ந்ததும் தள்ளாட்டமாய் நடந்து பக்கத்திலிருந்த புங்க மரத்தினடியில் அமர்ந்து தலையை மரத்தில் சாய்த்துக் கொண்டு மூச்சு வாங்கினான் சின்னான்..

    மீண்டும் கொள்ளிக் கட்டைகள் தெறிக்க திரும்பினான். ராசாக்கவுண்டரின் உடல் எழுந்து நெருப்பின் நடுவில் அமர்ந்திருந்தது. ‘ஏங் கண்மணியக் கெடுத்துக் கொன்ன பாவீ..உன்னச் சும்மா விட மாட்டேண்டா’ அடித் தொண்டையில் கத்தியபடி எழுந்தோடி பித்துப் பிடித்தவனைப் போல் உட்கார்ந்திருந்த ராசாக்கவண்டர் சவத்தை கம்பால் விளாசித் தள்ளினான்.

    அவனது ஆவேசத் தாக்குதலில் நெருப்புக் கங்குகள் நாலாப்புறமும் சிதற ஒன்றிரண்டு அவன் மேலேயும் பட்டுத் தெறித்தன.

    மறுநாள்.

    அஸ்தி அள்ள வந்த கும்பல் ‘ஆஹா..பிரேதம் அபாரமா எரிஞ்சிருக்கப்பா…எலும்புக கூட சுத்தமா எரிஞ்சு சாம்பலாயிருக்கப்பா..எல்லாம் கவண்டரய்யாவொட மனசு பொலத்தான்..புண்ணியாத்மாவாச்செ..குத்தங்கொறை வருமா’, கொள்ளியிட்ட ராசாக்கவண்டரின் தம்பி மகன் சொல்ல,

    ‘அதுல துளிக்கூட சந்தேகமேயில்லீங்கய்யா!…எத்தனை பேர்த்துக்கு எத்தனை உபகாரஞ்செஞ்சிருப்பாரு’ சுத்தமாய் போதை தெளிந்திருந்த சின்னான் சாம்பலைக் கூட்டிக் கொண்டே பதில் சொன்னான்.

    (முற்றும்)

    Share
  • தமிழர் பண்பாடு

    முகில் தினகரன்

    ஆன்மிகத்தில்  மேன்மைகண்ட  அருங்குணத்தார் – தம்
    அகத்திலென்றும்  அன்புநிறை  நல்மனத்தார்
    நானென்ற  நச்சகந்தை  நாளுமின்றி  –  என்றும்
    நாடுயர  நலம்தேடும்  நல்இனத்தார்

    வள்ளுவனார்  வகுத்தளித்த  வாழ்நெறியில்   –  இவ்
    வையகமே  வாழ்த்திநிற்கும்  வான்குணத்தார்!
    அள்ளத்தான்  குறையாதஅருங்;  கவியால் – பல
    கள்ளத்தனம்  கரைத்திட்ட  கண்ணியத்தார்!

    வந்தோரை  வாழவைக்கும்  செந்தமிழர் – இவர்
    விருந்தோம்பல்  பண்பினுக்கோர்  உதாரணத்தார்!
    நொந்தோரும்  நிமிர்ந்திடவே  நேயங்காட்டி – தினம்;
    இல்லார்க்கு  ஈந்துதவும்  இரக்கத்தார்!

    நாகரீகத்  தொட்டில்களின்  நாற்றமுணர்ந்து  – அதை
    நாடாதுநல்  லறங்காக்கும்  நற்பண்பாளர்!
    மோகத்  தேடல்களில்  மூழ்கிக்கிடக்கும்  – மேலைக்
    கலாச்சாரந்  தனைவெறுக்கும்  கனிமனத்தார்!

    பக்தியிலக்கியப்  பரவசங்களில்  பண்பாடுகண்டு  – அதைப்
    பாரெங்கனும்  பறைசாற்றும்  பாரம்பரியத்தார்!
    முக்திகண்ட  மூத்தோர் வழிநடந்து   –   பல
    வித்தைகளை  வெளிக்கொணர்ந்த  சித்தரினத்தார்!

    ஓங்குதமிழர் பண்பாட்டுக்கோர்  ஒப்பீடேது  – இதை
    உணர்வுள்ளோர் மறுத்திடவே  இயலுமாகூறு!
    ஈங்கிதனை  உணர்ந்திடணும்  இத்தலைமுறையும்  –  அவர்
    இயன்றவரை  காத்திடனும்  இன்னுயிரீந்து!

    படத்திற்கு நன்றி               

    http://www.pariharam.com/     

    Share
  • வருவானா..

     

    செண்பக ஜெகதீசன்

    இனம்பிரித்துப் படைக்கவில்லை
    இறைவன்..

    மனிதன்தான்
    முகமூடிகள் பலவாய்
    மாட்டிக்கொண்டே
    மாற்றிவிட்டான் தன்னைத்தானே-
    மதமாய்..சாதியாய்..
    மனிதரில் உயர்வு தாழ்வாய்..

    சுயநலம்தான்,
    சுயமாய்ச் சிந்திக்கவிடாமல்
    சீரழிக்கிறது இவனை..

    சமப்படுத்துதல் என்பது
    சாத்தியமா…!

    ஏப்போதும் சந்தேகம் மனிதனுக்கு,
    இருக்கிறானா
    இறைவன் என்று..

    இப்போது,
    சரிப்படுத்த அவன்தான்
    வரவேண்டும்..
    வருவானா அவன்தான்…!    

    படத்துக்கு நன்றி

                 

    http://www.dreamstime.com/royalty-free-stock-image-dark-face-mask-image5516246 

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 39

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை

    வீதியில் உலாவும் பரத்தையரை ஆடவர் புகழ்தல்

    அகன்ற அழகிய வானில்
    இராகு கேது பாம்புகளுக்கஞ்சிக்
    கருமுகில் சுமந்து
    முயற்கரை* ஒழித்துத்
    திரியும் நிலவது போல்

    (முயற்கரை – நிலவிலுள்ள கறை)

    கருங்கூந்தல் சுமந்து
    கயல்மீனான இருவிழிகளிடைக்
    குமிழ்மலர் போன்ற மூக்கினையும் கொண்ட
    அழகுப் பரத்தையர்
    புகார் வீதிகளில் உலவுகின்றனரோ
    என்றெண்ணியே
    பரத்தையர் முகம் கண்டு
    காமுற்று மயங்கினர் இளைஞர் சிலர்.

    முன்பொருமுறை
    சிவனால் எரிக்கப்பட்ட
    மகரக் கொடி தாங்கிய மன்மதன்
    தன் உடம்பினை மீண்டும் பெறுதல் பொருட்டு
    ஈரம் நிறைந்த திங்களாகி
    பெரிய நிலத்தே உள்ள
    அமுதக் கலையின்
    சீர்மை பொருந்திய துவலையுடைய
    நீரைப் பருகி வளரும்படி
    வளர்த்த மின்னல் கொடி ஒன்று
    இந்நிலத்தே வந்ததோ…
    என்றெண்ணியே
    பரத்தையர் இடையழகில்
    மயங்கிப் பிதற்றினர்
    இன்னும் சில இளைஞர்.

    பெருநிலம் ஆள்கின்ற மன்னர்க்குத்
    தம் பெருவளம் காட்ட விரும்பிய
    திருமகள் இங்குதான் வந்து புகுந்திருப்பாள்
    என்றே கருதியது தாமரை மலர்.

    அத்தாமரை மலர் எத்தன்மைத்து?!
    அழகு நங்கையின்
    செந்நிற முகம் ஒத்தது.

    எரிதழல் நிறமுடை இலவ மலர்
    போன்ற அதரங்களையும்
    வெள்ளை நிறமுடை முல்லை அரும்புகள்
    போன்ற பற்களையும்
    கருமை நிறமுடை நீள்குவளை மலர்
    போன்ற கண்களையும்
    குமிழ்மலர்
    போன்ற மூக்கையும்
    தன்னுள் அடக்கிக் கொண்டு
    வேற்று உருவம் தாங்கியே
    திருமகளைச் சேரவென்று
    அவளைத் தேடியே திரிந்த
    கள்ளத் தாமரை
    போன்றவள் இவ்வழகுப் பெண்.

    ஒரே ஒரு தாமரை மலருக்குப்
    பல மலர்களின் குணம் வாய்த்தது போல்
    ஒரே ஒரு பெண்ணிடம்
    பல்வகைப்பட்ட அழகும் அமைந்திருந்தது
    கண்டு மயங்கித் திரிந்தனர்
    இன்னும் சில இளைஞர்.

    பல உயிர்களையும்
    கவர்ந்து செல்லும்
    எமன் அவனும்
    ஆண் இயல்போடு உருவத்தோடு
    தாம் திரிந்தால்
    அச்செயல் மன்னனவன்
    செங்கோல் மறுத்ததாகும்
    பழி நேரும் என்றஞ்சியே

    தன் உருவம் மாற்றிக்கொண்டு
    நாணமுடைய தோற்றமும்
    நகையுடைய முகமும்
    திவவினையுடைய*
    பண்ணிசைக்கும் யாழின் மொழியையும்
    தன்னகத்தே கொண்டு
    பெண்ணுருவம் தாங்கி
    இவ்வீதியில் திரிகின்றான் போலும்
    என்றெண்ணியே
    அப்பரத்தையர் அழகில்
    தம்முயிர் பறிபோவது போல்
    பிதற்றி நின்றனர் இளைஞர் சிலர்.

    (திவவு – யாழின் கோட்டிலுள்ள நரம்புக்கட்டு)

    உருவம் ஏதுமில்லாக் காமனவன்
    ஒப்பற்ற பெருஞ்சேனையெனத்
    திகழ்ந்தது பரத்தையர் கூட்டம்.

    அப்பொதுமகளிருடன் ஊடி
    அவர்களைப் புகழ்ந்து
    முன்போலவே ஊடல் வென்று
    அவர்களை வேறெங்கும் போகவிடாது
    தடுத்து நிறுத்திப் புணர்ந்தனர்.

    அத்தருணத்தில்
    அம்மகளிர் தோள்களில்
    மார்புகளில் எழுதிய
    தொய்யில் எனும் வரிக்கோலம்
    ஆடவரின் மார்பிலும் தோளிலும்
    எழுதப்பட்டது.

    புதிதாய்ப் பதிந்திட்ட
    இம்முத்திரை குறித்து
    மனைவியர் தம்மோடு ஊடுவர்
    என்றஞ்சியே
    விருந்தினர் சிலருடன்
    தம் வீடு சென்றனர் ஆடவர்.

    அடிப்படையாய் அமைந்த சிலம்பின் வரிகள் இங்கே..204 – 210
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram13.html

    அடிப்படையாய் அமைந்த சிலம்பின் வரிகள் இங்கே..211 – 227
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram14.html

    படத்துக்கு நன்றி: http://www.indiaplaza.com/raja-ravi-varma-painting-shakuntala-looks-of-love-paintings-pant29122011sgf16-10.htm

    Share
  • தீக்கொழுந்தில் பனித்துளி (அத்தியாயம்-13)

    முகில் தினகரன்

    அவன் இதய வானில் மின்னி விட்டுப் போன மைதிலியென்னும் தேவ மின்னல் ஏற்படுத்திச் சென்ற காதல் ரணங்களை, யதார்த்த வாழ்க்கையின் ஓட்ட கணங்களில் ஓரளவுக்குத் தொலைத்து விட்டிருந்தான் சுந்தர்.

    பல நேரங்களில் அந்த ரணங்கள் கந்தகமாய் இருந்த போதிலும், சில நேரங்களில் அவை சுகந்தமாகவும் தெரிந்தன.

    நைட் ஷிப்ட் தறி ஓட்டி விட்டு வந்து படுத்திருந்த சுந்தர் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான்.

    அம்மாவையும், அண்ணனையும் பார்த்து விட்டுப் போக வந்திருந்த தேவி சமையலறையில் அம்மாவுடன் எதையோ சத்தமாக விவாதித்துக் கொண்டிருந்தாள்.

    திடீரென்று அங்கிருந்து விசும்பல் ஒலி கேட்க, படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்தான்.

    “இதென்ன தேவி அழறா போலிருக்கே!” யோசனையுடன் எழுந்து சமையலறையை நோக்கி நடந்தான்.

    தேவி சுவரோரமாய் அமர்ந்து கண்ணைக் கசக்கிக் கொண்டிருந்தாள்.

    “என்னம்மா?.. எதுக்கு தேவி அழறா?.. நீ என்ன சொன்னே அவளை?” தாயைக் கடிந்தான்.

    “நான் ஒண்ணும் சொல்லலைப்பா.. அவதான் என்னமோ கேட்கிறா!”

    “என்ன?.. என்ன கேட்கறா?”

    “ம்.. அவளையே கேளு!”

    தேவியின் அருகே சென்றமர்ந்து, அவள் தலையை அன்பாய் வருடியபடி கேட்டான். “என்ன தேவி.. என்ன பிரச்சினை உனக்கு?”

    “அண்ணா.. அவரு உன்கிட்ட ஒண்ணு கேட்டுட்டு வரச் சொன்னாரு!.. ஆனா.. அதை உன்கிட்டக் கேட்கறதுக்கு தயக்கமாய் இருந்திச்சு!.. அதான் அம்மாகிட்டச் சொல்லிக் கேட்கச் சொன்னேன்!.. அவ என்னடான்னா என்னையே திட்டுறா!”

    அவன் தாயைத் திரும்பிப் பார்த்து முறைக்க,

    “க்கும்.. என்னை முறைக்காதே!.. மொதல்ல அவ என்ன கேட்கறான்னு தெரிஞ்சுட்டு முறை!” என்றாள் லட்சுமி கடுகடுப்பான முகத்துடன்.

    “அட.. அப்படியென்ன கேட்டுட்டா அவ?”

    “ம்ம்ம்.. அவ புருஷனோட தங்கச்சிக்காரியை.. அதான் அந்தக் கிறுக்குப் பொண்ணை.. நீ கல்யாணம் கட்டிக்கணுமாம்!”

    அதிர்ந்து போனான் சுந்தர்.

    தன் மாப்பிள்ளையின் ஒரே தங்கையான ரேணுகா இருபது வயது உடல் வளர்ச்சியுடனும், இரண்டு வயது முளை வளர்ச்சியுடனும் அந்த வீட்டையே ரணகளப் படுத்திக் கொண்டிருக்கும் ஒரு மூளை வளர்ச்சியற்ற பெண் என்பது அவனுக்கும் தெரியும்தான்! “அந்தப் பெண்ணைப் போய்.. நான்.. எப்படி?”

    “என்னம்மா சொல்றே?.. நிஜமா மாப்பிள்ளையா கேட்டுட்டு வரச் சொன்னார்?” நம்ப முடியாமல் கேட்டான்.

    “ஆமாண்ணே!.. கல்யாணம் பண்ணி வெச்சா.. அவ நார்மலுக்கு வந்துடுவா!ன்னு யாரோ டாக்டர் சொன்னாங்களாம்!.. ஆனா.. அந்தச் சோதனைக்கு எந்த மாப்பிள்ளையுமே..ஒத்துக்காததால.. உங்ககிட்டக் கேட்டுப் பார்த்திட்டு வரச் சொல்லி.. என்னை அனுப்பியிருக்காங்க!..”

    அவள் சொல்லும் தொணியிலிருந்தே அங்கு அவளை அவர்கள் எந்த அளவுக்கு கட்டாயப்படுத்துகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்ட சுந்தர் மிகவும் மனம் நொந்து போனான். “என் காதல் தோல்வி என்னை இவ்வளவு கேவலமாக்கி விட்டதே!” என மனதிற்குள் சொல்லிக் கொண்டவன்,

    “அதுக்கு நீ என்னம்மா சொன்னே?”

    “நானும்.. கேட்டுச் சொல்றேன்!.. கேட்டுச் சொல்றேன்!.. னு சொல்லிக்கிட்டே கிட்டத்தட்ட ரெண்டு மாசம் காலந் தள்ளிட்டேன்..! நேத்திக்கு என்னைய “போ.. போய்க் கேட்டுட்டு ஒரே முடிவோட வந்து சேரு”ன்னு சொல்லித் துரத்தியே விட்டுட்டாரண்ணே!..” அழ ஆரம்பித்தாள். “எப்படி?.. எப்படியண்ணே..நான் உன்கிட்ட இதைக் கேட்பேன்?”

    “ஆண்டவா!.. உனக்கு விளையாடிப் பார்க்கறதுக்கு.. என்னோட வாழ்க்கைதானா கெடைச்சது?.. இவளோட வாழ்க்கைக்காக ஒரு கிட்னியையே இழந்தேன்!.. அதை இழந்த காரணத்தாலேயே உயிருக்குயிரான என்னோட காதலியையும் இழந்தேன்!.. இப்படி எல்லாத்தையும் இழந்திட்டு ஒரு சோக வாழ்க்கைய நிம்மதியே இல்லாம ஓட்டிக்கிட்டிருக்கேன்!.. இப்ப இவ வந்து, “மிஞ்சியிருக்கற அந்த வாழ்க்கையையும் எனக்காகப் பலி கொடு”ன்னு கேட்கிறாளே.. நான் என்ன பண்ணுவேன்?”

    “அண்ணா.. யோசிக்காதண்ணா!.. நீ அவளை வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்னா.. அடுத்த நிமிடமே அவர் என்னைய வேண்டாம்ன்னுடுவார்!.. என்.. என்.. வாழ்க்கையே இப்ப உன் கைலதாண்ணா இருக்கு”

    பேசிக் கொண்டேயிருந்தவள் “திடு.. திப்” பென்று அவன் கால்களில் விழுந்து கெஞ்ச ஆரம்பித்தாள்.

    நெஞ்சு பாறாங்கல்லாய் கனக்க, அம்மாவைப் பார்த்தான்.

    அவள் கண்களில் கண்ணீர் வெள்ளம்.

    சில நிமிடங்கள் அங்கு அவஸ்தையான அமைதி நங்கூரம் பாய்ச்சியது.

    அந்த அமைதியை தன் நீண்ட பெரு மூச்சால் கலைத்த தேவி, “பரவாயில்லைண்ணா!.. நான் போயி அவருகிட்ட “எங்கண்ணனுக்கு இஷ்டமில்லை”ன்னு சொல்லிடறேன்!.. அவர் என்ன செய்வாரோ செய்யட்டும்!.. என்னை வெச்சுக்கிட்டா வெச்சுக்கிடட்டும்!.. இல்லை துரத்தி விட்டா துரத்தட்டும்!.. ஊர்ல எத்தனை குளம் குட்டையிருக்கு ஏதாவதொண்ணு எனக்குக் கிடைக்காமலா போய்டும்?”

    மூக்கை உறிஞ்சிக் கொண்டு வாசல் கதவை நோக்கி நடந்தாள்.

    “தே.. வீ!”

    அண்ணன் கூப்பிட, திரும்பிப் பார்த்தாள்.

    “நில்லும்மா!” என்றபடியே அவளருகில் சென்றவன், அவள் தோளைத் தொட்டு, “உம் புருஷன்கிட்டப் போயி.. எங்கண்ணன் சம்மதிச்சிட்டாரு!”ன்னு சொல்லும்மா!” என்றான் கரகரத்த குரலில்.

    “அண்ணா.. நெஜம்மாவா சொல்றே?” நம்ப முடியாமல் அவன் கைகளைப் பற்றினாள்.

    “எனக்கு என்னோட வாழ்க்கைய விட உன்னோட வாழ்க்கைதாம்மா முக்கியம்!.. அதுக்காக எதையும்.. எதையும்.. இழக்க நான் தயாராயிருக்கேம்மா!”

    அவள் சந்தோஷமாய்ச் சென்றாள்.

    (தொடரும்) 

    படத்திற்கு நன்றி: http://mytumblingthoughts.blogspot.in/2012/03/dear-girl-nursing-broken-heart.html

    Share
  • வார ராசிபலன் 30.09.2012 முதல் 06.10.2012 வரை

    காயத்ரி பாலசுப்ரமணியன்
    மேஷம்: நெடுநாளாக மகப்பேறை எதிர்பார்த்திருந்த பெண்கள் தாயாகும் பாக்கியம் பெறுவதால், இல்லத்தில் இருக்கும் மகிழ்ச்சி, உள்ளத்திலும் நிறைந்திருக்கும்.பணியில் உள்ளவர்கள், கவனமாகவும், பொறுமையாகவும் இருந்தால், குழம்பிக் கொண்டிருந்த விவகாரங்களில் நல்லதொரு தீர்வு கிடைக்கும். பொது வாழ்வில் உள்ளவர்கள், பிறர் உங்கள் குடும்ப விஷயங்களில் தேவையற்ற உரிமை எடுத்துக் கொள்ள இடம் தர வேண்டாம். மனதில் இருந்த குழப்பம் தானே விலகி விடும். கலைஞர்கள், வரவுக்கு மீறிய செலவு வைப்பவர்களை உங்கள் பக்கம் நெருங்க விடாதீர்கள். பணப்பற்றாக்குறை என்பதிராது. மாணவ மாணவியர் கிடைத்த சந்தர்ப்பத்தைத் தகுந்த முறையில் பயன்படுத்திக் கொண்டால், உங்களின் மேதாவிலாசம் மேலும் பெருகும். வியாபாரிகள் அரசுக்குச் சமர்ப்பிக்க வேண்டிய கணக்கு வழக்குகளில் குளறுபடி இல்லாமல் பார்த்துக் கொண்டால், வீண் தண்டம் கட்டுவதைத் தவிர்த்து விடலாம்.

    ரிஷபம்: சரளமான பண வரவால் பெண்களின் மனதில் சந்தோஷம் தங்கும். மாணவர்கள் நம்பிக்கையுடன் தங்கள் பணிகளில் ஈடுபட்டால் எதிலும் வெற்றி பெறலாம். கலைஞர்கள், எண்ணங்களுக்குத் தகுந்த செயல் வடிவம் கொடுப்பதால், வெற்றி வாய்ப்புக்கள் பல வந்து சேரும். பணியில் இருப்பவர்களுக்கு, மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்குமென்றாலும் அவர்களிடம் பழகுவதில் ஒரு எல்லைக் கோடு இருப்பது அவசியம். பொது வாழ்வில் இருப்பவர்கள், உடனிருப்பவர்களிடம், வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். இந்த வாரம், வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டால் நிலைமையை ஓரளவு கட்டுக்குள் வைக்கலாம்.

    மிதுனம்: பொதுச் சேவை ஆற்றுபவர்கள் அலட்சியப் போக்கைத் தவிர்த்தால், வெற்றிப் படியில் எளிதாக ஏறலாம். மாணவர்கள், கல்விக்கான செய்முறைப் பயிற்சிகளில் தகுந்த விதிகளைக் கடைப்பிடிப்பது அவசியம். இந்த வாரம் கடன் தொல்லையால் சில நிகழ்ச்சிகள் தள்ளிப் போக வாய்ப்பிருக்கிறது. பெண்கள் தாங்கள் எடுத்துக் கொண்ட வேலையில் கண்ணும் கருத்தாக இருந்தால், நல்ல பெயரைப் பெற இயலும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் எதிலும் கவனமாக இருந்தால், வருகின்ற லாபம் குறையாமல் இருக்கும். கலைஞர்கள் சின்ன விஷயங்களுக்குச் சுள்ளென்று கோபப்படுவதைத் தவிர்த்தல் அவசியம்.

    கடகம்: வெளிடங்களில் வேலைக்காகவும் படிப்பிற்காகவும் தங்கியிருப்பவர்கள் அதிகமாக ஆசைப்படுதலையும், வீண் செலவுகளையும் சுருக்கிக் கொண்டால், பற்றாக் குறையை ஓரளவு சமாளித்துவிட முடியும். யாரையும் குற்றம் சாட்டிப் பேசாமலிருந்தால், கலைஞர்களின் குடும்பத்திலும், தொழிலிலும் குழப்பம் இராது. பணியில் இருப்பவர்கள் கடனில் வண்டி வாங்குவதைச் சற்று ஆறப் போடவும். மாணவர்கள் திறமையோடு பொறுமையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நினைத்த காரியத்தைச் சாதிக்கலாம். வீடு, மனை ஆகியவற்றை வாங்கி விற்பவர்கள் அதிக லாபத்திற்கு ஆசைப்படாமலிருந்தால், தங்கள் பெயரை நிலை நிறுத்திக் கொள்ளலாம்.

    சிம்மம்: பணியில் இருப்பவர்கள் பிறருக்கு வழங்கும் பணம், ஆலோசனை இரண்டிலும் கவனமாய் இருப்பது அவசியம். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்களுக்கென்று ஒரு வரையறை வைத்துக் கொண்டு செயல்படுவது புத்திசாலித்தனமாகும். உறவுகளின் வருகையால் பெண்கள் இல்லத்தில் சில இடையூறுகளை எதிர்கொண்டு சமாளிக்க வேண்டியிருக்கும். தொழிலாளர்கள் தங்களின் சலுகைகளை முறையாகப் பயன்படுத்துவது நல்லது. முதியவர்கள் எலும்பு சம்பந்தமான உபாதைகளை உடனுக்குடன் கவனித்து விடுவது நலம். இந்த வாரம் வியாபாரிகள் எதிர்பார்த்த வரவுகள் சற்றே தாமதமாகலாம். பிள்ளைகளின் நட்பு வட்டத்தின் மீது பெற்றோரின் கவனம் தேவை.

    கன்னி: பெண்கள் சொல்லும் வார்த்தை, செலவழிக்கும் பணம் இரண்டிலும் நிதானமாக இருங்கள். உறவுகள் கசக்காமலிருக்கும். வியாபாரிகள் புதியவரை நம்பிப் பொறுப்புக்களைத் தருவதைக் காட்டிலும் நேரடியாக நீங்களே கவனம் செலுத்தி வர, லாபம் தடையின்றி வரும். வேலை செய்யும் இடங்களில் தோன்றும் சிறு பிரச்னைகளைப் பொறுமையாகக் கையாண்டால், பணியில் இருப்பவர்கள் உயரதிகாரிகளின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வது சுலபமாகும். சுய தொழில் புரிபவர்கள். தொழிலில் இருந்த பின்னடைவு, நெருக்கடி ஆகியவை நீங்கி, புதுத் தெம்புடன் செயல் படுவார்கள். கலைஞர்களுக்கு, எளிதில் முடியக் கூடிய வேலைகள் சில சமயம் வளர்ந்து கொண்டே போகும்.

    துலாம்: வாகனங்களைப் புதிதாக ஓட்டுபவர்கள், அதிக வேகத்தில் செல்வதை இயன்றவரை தவிர்ப்பது நலம். விளையாட்டுப் போட்டிகளை மாணவர்கள் நேர் வழியில் எதிர்கொண்டால் வெற்றி உறுதி! வியாபாரிகள் பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்கள் சக ஊழியர்களினால் உருவாகும் பிரச்னைகளைச் சமாளிக்க நேரிடும். வயதான நோயாளிகள் தேவையான பரிசோதனைகளைத் தள்ளிப் போட வேண்டாம். கலைஞர்கள் தவறான வழிக்கு மாறாமலிருந்தால், உங்கள் பெயர், புகழ் இரண்டும் குறையாமலிருக்கும். பங்குத்துறையில் உள்ளவர்கள் அளவான முதலீடு என்பதில் உறுதியாக இருப்பது நலம்.

    விருச்சிகம்: கலைஞர்கள் தன்னுடைய பணியில் மட்டும் கவனம் செலுத்தி வந்தால், புதிய கதைகளைத் திரிப்பவர்களின் வாயைக் கட்டி விடலாம். பெண்கள் உறவுகளின் போக்கறிந்து பக்குவமாக நடந்தால், இல்லத்தில் அமைதி நிலவும். சுய தொழில் புரிபவர்கள் தொழில் வகையில் எந்த ஒரு முயற்சியையும் தக்க ஆலோசனையின் பேரில் செயல்படுத்தினால், நினைத்தவாறு லாபம் பெறலாம். கவலைகள் முன்னேற்றத்தின் வேகத்தைக் குறைக்காதவாறு மாணவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும். பணியில் இருப்பவர்கள் நிர்வாகம் மற்றும் உயர் அதிகாரிகளின் செயல் பாடுகள் பற்றிய அலசல்கள். விமர்சனங்கள் ஆகியவற்றில் ஈடுபடாமலிருப்பதே நலம்.

    தனுசு: நெருங்கிப் பழகிய பங்குதாரர்கள் கருத்து வேறுபாடால் உங்களை விட்டுப் பிரியலாம். எனவே வியாபாரிகள் எதிலும் நிதானமாய் இருப்பது நல்லது. பணி புரிபவர்கள் எந்த விஷயத்திலும் விடாப்பிடியாய் இருப்பதைக் குறைத்துக் கொண்டால் வாக்குவாதங்களும், வேதனைகளும் இராமல் வேலைகளை செய்ய முடியும். மாணவர்கள் விரும்பிய உணவு வகைகளை உண்பதிலும் ஒரு வரையறை வைத்துக் கொண்டால், ஆரோக்கியம் குன்றாமலிருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் செல்வாக்கைச் சிதறச் செய்யும் காரியங்களுக்கு ஆதரவு தருவதை அறவே தவிர்ப்பது புத்திசாலித்தனமாகும். முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் கலைஞர்கள் எச்சரிக்கையாய் செயல்படுவது அவசியம்.

    மகரம்: பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொள்ளாமல் விலகிச் செல்லும் நிலை நிலவினாலும், பெண்கள் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு, பிரச்னைகளைத் தீர்த்தால் உறவுகள் இதமாகத் திகழும். இந்த வாரம் பங்குதாரர்கள் இடையே வீண் சர்ச்சை, வேண்டாத சந்தேகம் ஆகியவை நுழைந்து மன அமைதியைக் கெடுக்கலாம். மாணவர்கள் படிப்பில் உள்ள கவனத்தைச் சிதறடிக்கும் விஷயங்களுக்குத் தலையசைக்காமலிருப்பது அவசியம். முயன்றால் முடியாதது இல்லை என்பதை உணர்ந்து, கலைஞர்கள் முழு மூச்சாகச் செயல்பட்டால் எடுத்த காரியங்களில் வெற்றி அடைவீர்கள். பணி புரிபவர்கள் வாக்கில் நிதானம், செயல்களில் பணி ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தால், சங்கடம் ஏதும் வரமல் சமாளித்து விடலாம்.

    கும்பம்: வியாபாரிகள் புதியவர்களை நம்பிப் பணம் கொடுக்காமலிருந்தால், நஷ்டங்களும், கஷ்டங்களும் உங்கள் அருகே வராது. பொது வாழ்வில் உள்ளவர்கள் மன உளைச்சல், சந்தேகம், குழப்பம் ஆகியவை வராதவாறு, பொறுமையுடனும், திறமையுடனும் செயல்பட்டு வந்தால், உங்கள் திறமைக்குரிய திறமைக்குரிய பாராட்டு கிடைக்கும். வேண்டாத தொல்லைகளால் சுறுசுறுப்பாக நடந்த சில பணிகளில் தேக்க நிலை உருவாகும். பொறுப்பான பதவி வகிப்பவர்கள் பணியாளர்களிடம் நயமாக நடந்து கொள்ளுங்கள். உங்களிடம் விசுவாசமாய் இருப்பார்கள். பெண்கள் உடல்நலம் பாதிப்பு ஏற்படாதவாறு, பணியில் தகுந்த மாற்றங்களை மேற்கொள்ளுங்கள். எல்லா வேலைகளும் சீராக நடக்கும்.

    மீனம்: முதியோர்களுக்கு, உடலில் சில அசௌகரியங்கள் தோன்றி மறையலாம். தகுந்த மருந்துகளை உட்கொண்டால், ஆரோக்கியம் ஓரளவுக்கு நன்றாக இருக்கும். பெண்கள் கோப தாபங்களைக் குறைத்துப் பொறுமையாய் இருங்கள். குடும்பத்தில் பல பிரச்னைகள் தீர்ந்து விடும். இந்த வாரம் கவனத் தடுமாற்றம், மறதி ஆகியவை பொது வாழ்வில் உள்ளவர்களை அலைக்கழிக்கும். மாணவர்கள் இனிய அனுபவங்களைப் பெற்று மகிழ்வதோடு நெருக்கமானவர்கள் காட்டும் பாசமும் உங்களை உற்சாகப்படுத்தும். நம்பிக்கை வைத்தவர்களில் சிலர் ஏமாற்றங்களைத் தருவார்கள். எனவே பொறுப்பில் இருப்பவர்கள் முக்கியமான ஆவணங்கள், சாவிகள் ஆகியவற்றைப் பத்திரமாக வைப்பது அவசியம்.

    Share