சந்தர் சுப்ரமணியன்
 

“முத்து, வண்டியை வேகமா ஓட்டுடா” என்றே விரைவுபடுத்தினான் ராஜா. பல நாள்கள் கழித்து அம்பத்தூர் தொழிற்சாலை ஒன்றில் அவனை வேலைக்கு அமர்த்துவதாக அவனுடைய மாமாவின் சிபாரிசின் பேரில் இன்று அவனை வரச்சொல்லி தகவல் வந்தது. வீட்டிலிருந்து புகைவண்டி நிலையம் சற்று தூரம் இருப்பதால் முத்துவை புகைவண்டி நிலையத்தில் விட்டுவிட்டு வரும்படி அவன் மிதிவண்டியின் பின்புறம் அமர்ந்து ராஜா சென்று கொண்டிருந்தான்.

“என்ன வேலை ராஜா? ஏதாச்சும் மெஷீன் சுத்தணுமா?”

“இல்லப்பா, ஏதோ பேக்கிங் செய்யணும் தான் மாமா சொல்லிச்சு”

“வைக்கோல் எல்லாம் வச்சி அடைப்பாங்களே அப்படியா? முந்தி நான் பேரீஸ்லே இருந்தப்போ அப்படித்தான். சாமானை வைக்கோல்லே சுத்தி அதை அட்டை டப்பாக்குள்ளே வச்சு பிளாஸ்டிக் கயித்தாலே இழுத்து கட்டணும்”

“இருக்கலாம்பா. போய்ப் பார்த்தாத்தான் தெரியும்”

“என்ன 2000 ருபா தருவாங்களா? சம்பளம் பத்தி ஏதாச்சும் சொன்னாங்களா?” என்று ஆவலுடன் முத்து விசாரித்தவாறே மிதிவண்டியின் ஓட்டத்தை விரைவு படுத்தினான். “போனாத்தான் தெரியும் போல. மாமா ஒண்ணும் அதைப் பத்தி சொல்லலே” என்று ராஜா, வாயளவில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாலும், அவன் மனத்தில் இந்த வேலை எப்படியாவது கிடைத்துவிட வேண்டும் என்று வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டிருந்தான்.

“ஸ்டேஷன் தெருவுலே அந்த புள்ளையார் கோவிலாண்ட நிறுத்திக்க முத்து. நம்ப வேலுவை கொஞ்சம் காசு எடுத்தாரச் சொல்லி இருக்கேன். வாங்கிட்டு போயிடலாம்” என்றான் ராஜா.

“வேலு இங்கே என்னா பண்றான்? ரெட் இல்ஸ் மில்லே வேலை பார்த்துட்டு இருந்தான் இல்லே?” என முத்து வினவ, “இங்கே ஏதோ வேலையா வர்ரானான். இங்கத்தான் நிக்கச் சொன்னான்” என்று ராஜா தெருவில் வருவோர் போவோர்களில் வேலுவைத் தேடத் தொடங்கினான்.

அன்று வெள்ளிக்கிழமை ஆனதால் கோவிலில் கூட்டம் அதிகம். வழக்கமாக, அலுவலகம் செல்பவர்கள் கூட, வண்டி ஏறும்/இறங்கும் அவசரத்திலும் ஹலோ சொல்லிவிட்டுப் போகும் அளவிற்கு இந்தப் பிள்ளையாருக்கு மகிமை. இதில் வெள்ளியும் சேர்ந்து கொண்டதால் ஒரே கூட்டம். சிதறு தேங்காயின் சில்லுத்தெறிப்பில் இருந்து தப்பிக்க, கூட்டம் படாத பாடு பட்டுக் கொண்டிருந்தது.

சனங்களின் தீராத தேவைகள் குறைவதாகத் தெரியவில்லை. சமுதாயத்தின் பல்வேறு நிலை மனிதர்களும் தத்தம் தேவைகளைப் பூர்த்தி செய்யுமாறு அந்த யானைச் செவியானின் காதோரமாகச் சொல்லிக் கொண்டிருந்தனர்.

அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருக்கும் தலைகளில் தன் பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்த ராஜாவிற்கு, கோவில் எதிரே நின்றிருந்த வேலுவைக் கண்டபின் தான் மூச்சே வந்தது.

கையசைத்து வேலுவை அருகில் வரவழைத்தான். “என்ன வேலு, எவ்ளோ நேரம் ஆச்சி தெரியுமா?” என்று வேலுவை ராஜா கேட்க, “வழியிலே லேட்டயிடுச்சி! இந்தா பணம்” என்று ராஜாவின் கையில் பதினைந்து ரூபாயைத் திணித்துவிட்டு. “அப்பால பாக்கலாம் ராஜா, நான் ஆபீஸ் போவணும் இப்போ” என்று கூறிவிட்டு வேலு சென்றுவிட்டான்.

“வண்டியை எடு முத்து” என்று ராஜாவின் பேச்சைக் கேட்ட முத்து, அந்தத் தெருவின் அடுத்த முனையில் இருக்கும் புகைவண்டி நிலையத்திற்கு வண்டியைச் செலுத்தினான்.

நிலையத்தில் வழக்கம் போல் கூட்டம் அதிகமாக இருக்க ராஜா, முத்துவை திருப்பப் போகச் சொல்லிவிட்டு தான் வரிசையில் நின்றான். ‘ஏங்க, இங்கிருந்து அம்பத்தூர் போக ஒரு அரை மணி ஆகுமா?” என்று பக்கத்தில் நிற்பவரை விசாரித்து விட்டு, சீட்டு வாங்கக் காசெடுக்கத் தன் சட்டைப் பையைத் தூழாவினான்.

அங்கிருந்து அம்பத்தூர் சென்று திரும்பிவர பதினைந்து ரூபாய் ஆகும். அதனால் தான் வேலுவிடம் பதினைந்து ரூபாய் கேட்டிருந்தான் ராஜா. “இங்கேயே ரிட்டன் டிக்கிட் வாங்கணும்” என்று எண்ணியவாறே, சட்டைப்பையில் இருக்கும் ஒரு பத்து ரூபாய் நோட்டையும் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தையும் தேடினான். பத்து ரூபாய் மட்டும் அகப்பட்டதே ஒழிய ஐந்து ரூபாய் நாணயத்தைக் காணவில்லை. துழாவிப் பார்த்ததில் சட்டைப் பையின் புதிய ஓட்டை அவன் விரல்களுக்குப் புலப்பட்டது.

“பத்து ரூபாயில் அம்பத்தூர் சென்றுவர முடியாதே” என்று நினைத்த ராஜா, “முத்துவைப் பிடிச்சா ஐந்து ரூபாய் வாங்கலாம்” என்று நினைத்தவாறே, வரிசையை விட்டு வெளியே ஓடினான். ஆனால் அவன் வருவதற்குள் முத்து அங்கிருந்து சென்றுவிட்டிருக்க வேண்டும். முத்துவைக் காணாது திகைத்து நின்ற ராஜா என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தான். “ஒருவேளை, காசை பையிலே போடும்போதே விழுந்திருக்குமோ? கோவில் கிட்டே போயி தேடிப் பார்ப்போம்” என்று எண்ணிய வண்ணம் கோவிலை நோக்கி நடந்தான்.

கோவிலின் அருகே ஏதோ கூட்டமும் குழப்பமுமாக இருந்தது. ராஜாவுக்கு அதில் மனம் செல்லவில்லை. தன்னுடைய ஐந்து ரூபாய் நாணயம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்ததால், வழியெங்கும் அதைத் தேடிக் கொண்டே கோவிலை நெருங்கினான். “இவ்ளோ பெரிய தெருலே, அஞ்சி ரூபா எப்படி கெடைக்கப் போகுது?” என்று நொந்து கொண்டான்.

கோவில் பக்கம் நெருங்கும் போது, அங்குக் கூடியிருந்த கும்பல் போடும் கூச்சலும் குழப்பமும் அதிகமாகியது. “அஞ்சி நிமிஷத்துக்கு முன்னே தான் பழம் வாங்கிட்டு பர்ஸை சட்டையிலே வச்சேன் சார். நல்ல நினைவு இருக்கு. அதுக்குள்ளே எவனோ அடிச்சிட்டான் சார்” ஒரு முதியவர் தன் பர்ஸ் தொலைந்தது குறித்து அங்கு நின்றிருந்த காவலரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். “ஏங்க, கோவில்லே இது மாறி நடக்குமுன்னு உங்களுக்கு தெரியாதா? கொஞ்சம் கவனமா இருக்கக் கூடாதா? பர்ஸை சட்டைப் பைலே தான் போட்டிங்களா இல்லே கீழே எங்கேயாவது தொலைச்சிட்டிங்களா? நல்ல யோசிச்சி சொல்லுங்க” என்று காவலர் அவர் திருப்பிக் கேட்டுக் கொண்டிருந்தார்.

“பர்ஸ்லே எவ்ளோ வச்சிருந்தீங்க? என்ன கலர் பர்ஸ்?” என்ற காவலரின் கேள்விக்கு அந்தப் பெரியவர், “ஒரு 500 ரூபா இருக்கும் சார். சிவப்பும் நீலமும் சேர்ந்த கலர் சார்.” என்றார். “எவனோ எடுத்திருக்கான் சார்” என்று மீண்டும் அடித்துச் சொல்லிக் கொண்டிருந்தார் அவர்.

‘நம்ம அஞ்சி ரூபாவை தேடறோம், இங்கே இவரு 500 ரூபாவைத் தேடிக்கிட்டு இருக்காரு” என்று நினைத்த ராஜா தன் தேடலைத் தொடர்ந்தான்.

இதற்கிடையில் ராஜா தரையில் தேடுவதை கவனித்த காவலர், ‘யார்பா அது? அங்கே என்ன தேடிட்டு இருக்கே?” என்று அதட்டிய வண்ணம் ராஜாவை அருகில் அழைத்தார்.

“சார் என் அஞ்சி ரூபா காயின் காணாம போச்சி சார். அதை தேடிட்டு இருக்கேன்”

“என்னையா விளையாடறியா? இவ்ளோ பெரிய தெருலே அஞ்சி ரூபாய தேடறையா?”

“ஆமாம் சார், சட்டைபை கிழிஞ்சி இருக்கு பார்க்காம போட்டிருக்கேன். இங்கேத்தான் எங்கேயாவது விழுந்திருக்கனும்”

அதற்குள் எங்கிருந்தோ ஒருவர் காவலரின் அருகே வந்து, “சார் இந்த ஆள அஞ்சி நிமிஷம் முன்னாடி இங்கே பார்த்தேன் சார். இன்னும் ரெண்டு பேரு கூட இருந்தாங்க சார். எனக்கு என்னவோ இந்த ஆள்தான் எடுத்திருக்கணும் போல இருக்கு” என்றார்.

ராஜாவிற்கு திக்கென்றது. ‘இல்லே சார். எனக்கு ஒன்னும் தெரியாது நான் பாட்டுக்கு ரெயில்வே ஸ்டேஷன் போய்க்கினு இருந்தேன். பைசா கீழ விழுந்திருச்சி, அதை தேடக்கிட்டு இருக்கேன்” என்றான்.

“பாருங்க சார் பொய் சொல்றான். அவன் இப்பதான் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்திலிருந்து வர்ரான், ஆனா போறதா சொல்றான்” என்று ஒருவர் கூட்டத்தை உசுப்பி விட்டார்.

“இந்த மாறி ஆளுங்கள நம்ப முடியாது சார். மூனு பேர்லே இவன் ஒருத்தன் தான் இங்கே இருக்கான். பர்ஸ் கை மாறிடிச்சி சார். இவனை பெண்டு எடுத்தா எல்லாத்தையும் கக்கிடுவான் சார்” என்று உன்னதமான ஒரு உபாயத்தை கூறியபடி ஒருவர் அந்த கூட்டத்திலிருந்து விலகிச் சென்றார். ஏதோ பர்ஸே கிடைத்து விட்ட மாதிரி கூட்டமும் கொஞ்சம் கொஞ்சமாக பர்ஸ் கதையை விட்டுவிட்டு தத்தம் பயணத்தின் அவசரத்துக்கு தன்னை தயாராக்கிக் கொண்டது.

“ஏங்க ஸ்டேஷன் வந்து ஒரு ரிப்போர்ட் எழுதி கொடுங்க சார், பர்ஸ் காணாம போயிடிச்சின்னு” என்று காவலர் அந்த முதியவரிடம் கேட்க, அவர் “சார் நான் ஒரு கல்யாணத்திற்கு அவசரமா போறேன் சார். விடுங்கா போகட்டும். இந்த பையந்தான் எடுத்திருப்பான்னு எனக்குத் தோணலை” என்ற படி கிளம்பி விட்டார்.

“இவனுங்களா இப்படி விடக்கூடாது சார். ஸ்டேஷன் கொண்டுபோய் ரெண்டு தட்டு தட்டி அனுப்புங்க சார்” என்று தன்னாலான ஒரு கருத்தை உதிற்த்து விட்டு மற்றொருவர் விலகினார்.

“சார் எனக்கு ஒன்னுமே தெரியாது சார். ஸ்டேஷன் போயி டிகிட் எடுக்க காசு தேடுறேன் அப்பத்தான் என் பாக்கெட் ஓட்டைன்னு எனக்கே தெரிஞ்சுது சார். இங்கே நின்னு பேசிக்கிட்டு இருந்ததாலே இங்கே விழிந்திருக்குமுன்னு வந்து பார்த்தேன் சார். நம்புங்க சார்” என்று அழாக்குறையாக ராஜா காவலரிடம் சொன்னாலும் அவர் கேட்பதாக இல்லை.

“சரி சரி வண்டிலே ஏறு, ஸ்டேஷன் போய் பேசிக்கலாம்” என்று தன் இரு சக்கர வண்டியில் ராஜாவை அமரச் சொல்லி வண்டியை ஸ்டேஷ்னுக்கு ஓட்டினார் காவலர்.

“சார் ஒரு வேலை தேடி அம்பத்தூர் போறேன் சார் இப்போ. லேட்டானா அந்த வேலை கூட கெடைக்காது சார். நம்புங்க சார். நான் எடுக்கல்ல சார்” என்று மீண்டும் ராஜா கெஞ்சிப் பார்த்தான்.

“உன்னை எப்படி நம்பறது?” வண்டியை நிறுத்தி விட்டு காவலர் கேட்டார்.

“இதோ பாருங்க சார் எங்கிட்டே பத்து ரூபா நோட்டு இருக்கு. இந்த ஓட்டை இப்பத்தான் சார் பார்க்கிறேன். அஞ்சி ரூபா காயின் இதிலே தான் விழுந்திருக்கணும்” என்று தன் சட்டைப் பையின் ஓட்டையில் விரலை விட்டுக் காட்டினான்.

“இப்போ பத்து ரூபாய்லே நான் அம்பத்தூர் போக கூட முடியாது சார்”

“உன் வீடு எங்கே இருக்கு?”

“அந்த தண்ணி டாங்க் பின்னாலே சார். ராஜான்னு கேட்டா எல்லார்க்கும் தெரியும் சார்”

“நிஜமாத்தான் சொல்லறயா? பொய்யினு தெரிஞ்சதுனா பொளந்துடுவேன்”

“இல்லே சார் மெய்யாலுமே தான் சார். இங்கே தான் சார் இருக்கேன்”

“சரி சரி. கூப்ட்டு அனுப்பிச்சா வந்துரணும். இப்ப இந்த அஞ்சி ரூபாயை வாங்கிக்க, அம்பத்தூர் போக வச்சுக்க” என்ற படியே காவலர் தன் சட்டைப் பையில் இருந்து சிவப்பு நீலமும் சேர்ந்த கலர் பர்ஸை எடுத்து அதிலிருந்து ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை ராஜாவிடம் கொடுத்தார்.

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “நாணயம்

  1. ஒரு கவிஞரை கதாசிரியராகப் பார்க்கிறேன். மிக நன்று.

    அ.ரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.