முகில் தினகரன்

சிவகிரியை அடைந்து ராசாக்கவுண்டர் தோட்டத்தை நெருங்கிய சின்னான் அசந்து போனான்.

‘அடேங்கப்பா…ஒரு சாவுக்கு இத்தனை கூட்டமா?’

சைக்கிளை மாட்டுத் தொழுவத்தின் பின்புறம் நிறுத்திப் பூட்டி விட்டு பெரிய பந்தலினுள் நுழைந்தான். பந்தலின் முன்புறம் கிடத்தப் பட்டிருந்த கவுண்டரின் உடலைப் பார்த்ததும் ‘ஓ’வெனக் கதறி அதன் காலடியில் சென்றமர்ந்து அந்தக் கால்களைத் தன் முகத்தில் பதித்துக் கொண்டு எல்லோரின் கவனத்தையம் ஈர்க்கும் விதமாய் பெரிய குரலில் அழுதான்.

ஒரு வருஷம்..ரெண்டு வருஷமல்ல..கிட்டத்தட்ட இருபத்தஞ்சு வருஷம் கவுண்டர் வீட்டு உப்பைத் தின்று வளர்ந்தவனாயிற்றே. சாதாரண பண்ணையாள்தான்…கீழ்சாதிக்காரன்தான்…ஆனாலும் சின்னானுக்கு கவுண்டர் தோட்டத்தில் நல்ல செல்வாக்கும்..அதிகப்படியான சலுகைகளும் உண்டு. பத்து வயதுச் சிறுவனாக அவன் அங்கு வந்து சேர்ந்த காலம் ராசாக்கவுண்டர் வாலிப முறுக்கில் வனப்போடிருந்த காலம். பார்த்துப் பார்த்துப் பிரமிப்பான் கவுண்டரின் கம்பீரமான அழகை. அப்ப நடந்த கவுண்டரின் கல்யாண கோலாகலத்தை இப்ப நெனச்சாலும் சின்னான் மனசு சந்தோஷத்துல கூத்தாடும். ஊரில் வருஷத்துக்கொரு தரம் வரும் திருவிழா கூட அத்தனை கோலாகலமா இருக்காது. பண்ணை வேலையாட்கள் அத்தனை பேருக்கும் வேட்டி துண்டு, சேலை. அது பத்தாதுன்னு ஆளுக்கு நூறு ரூபா இனாம். அந்தக் காலத்துல நூறு ரூபாங்கறது பெரிய தொகை.

யார் யாரோ வந்து கவுண்டர் சவத்துக்கு மாலை அணிவித்து விட்டுச் செல்ல கண்ணீருடன் அதைப் பார்த்தபடி தலை மாட்டிலேயே அமர்ந்திருந்தான் சின்னான்.

ராசாக்கவுண்டர் பொண்ணு கட்டுன எடமும் சாதாரண எடமில்லை. வந்த கவுண்டச்சியம்மாவும் ஏக சொத்துபத்தோட வந்திறங்கியதில் ஊர்ல கவுண்டர் செல்வாக்கு உச்சாணிக்கே போனது.

‘டேய்..சின்னா..இன்னிக்கு ராத்திரியே சவம் எடுத்தாகனும்..அதனால எங்கியும் போயிடாம இங்கியே இரு..என்ன?’ கவுண்டரோட பெரிய மச்சினன் சத்தமாய்ச் சொல்ல சுரத்தேயில்லாமல் தலையாட்டினான்.

சின்னானின் திருமணத்தைக் கூட கவுண்டர்தான் நடத்தி வெச்சாரு. செலவு மொத்தத்தையும் தானே ஏத்துக்கிட்டு தாலியையும் தன் செலவிலேயெ பண்ணிப் போட்டாரு. புதுப் பொண்டாட்டிகிட்டக்கூட சின்னான் ‘ஏ..புள்ள..கவுண்டருக்கும்..கவுண்டச்சியம்மாவுக்கும் நான் மவன் மாதிரி புள்ள’ என்று பெருமையோடு சொல்லிக் கொள்வான்.

மாலை நேரம் நெருங்க நெருங்க சவத்தைத் தூக்குவதற்கான ஏற்பாடுகள் துரிதமாக்கப் பட்டன.

ஏழு மணி வாக்கில் சொர்க்க ரதம் போல் ஜோடிக்கப்பட்ட பாடை ரதத்தில் ராசாக் கவுண்டரின் உடல் பயணம் புறப்பட்டது.

பாடைக்குப் பின்னால் நாலணா..எட்டணா..சில்லறைக் காசுகள் கலக்கப்பட்ட பொரியை பாடையின் மேல் வீசிக் கொண்டே தள்ளாட்டமாய் நடந்தான் சின்னான்.

‘ஹூம்..கிழச்சிங்கமாட்டமல்ல இருந்தாரு மனுஷன்…இந்தக் கட்டைகிட்ட எமன் நெருங்கவே முடியாதுன்னு அடிச்சு சொல்லுவாங்களே..இப்படி பொசுக்குன்னு போயிட்டாரே’ கூட்டத்தில் யாரோ சொல்ல யாரோ அதுக்கு ‘அதானே..?’ என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க,

கீழத்தெரு மைனர் வீட்டை நெருங்கியது சவ ஊர்வலம்.

திடீரென்று கூட்டத்தில் ஒருவித சலசலப்பு. பலர் மைனர் வீட்டுக்குப் பின்புறம் போய்ப் போய் வர சின்னானுக்கு ஆவலாயிருந்தது. அவனும் போய்ப் பார்த்தான். அங்கெ ஆளாளுக்கு சீமைச் சாராயத்தை கணக்கு வழக்கில்லாமல் உள்ளே தள்ளிக் கொண்டிருந்தனர். நாக்கில் ஜலம் ஊற சின்னானும் ரெண்டு மூணு பாட்டிலை எடுத்து உள்ளே கவிழ்த்துக் கொண்டான். போதை ‘ஜிவ்’வென்று தலைக்கேறியது. வேகவேகமாக நடந்து வந்து மீண்டும் பாடைக்குப் பின்னால் செல்லும் கூட்டத்தோடு இணைந்து கொண்டான்.

சுடுகாட்டில் ஏகப்பட்ட சாத்திர சடங்குகளுக்குப் பிறகு ராசாக் கவுண்டரின் பிணத்திற்கு அவருடைய தம்பி மகன் சுருளிக் கவுண்டன் கொள்ளி வைக்க ‘திகு…திகு..’வென்று எரிய ஆரம்பித்தது நெருப்பு.

அந்தச் சிதை நெருப்பை போதை விழிகளுடன் வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்த சின்னானின் அடிமனதில் குப்புறக் கிடந்த அந்த ஆவேசம் ‘குபக்’கென்று நிமிர்ந்தெழுந்தது. பற்களை ‘நற..நற’வென்று கடித்தபடி ராசாக் கவண்டர் உடல் பொசுங்கும் வாடையை ஒருவித குரூர திருப்தியோடு ஆழ உறிஞ்சி ரசித்தான்.

‘டேய்..சின்னா..நீ காலம்பறந்தானே ஊருக்குப் போவப் போறே,…ஒண்ணு செய்யி… ராத்திரி பூராவும் இங்கியே இருந்து சவம் எரியறதைக் கவனிச்சுக்க! டேய…சூட்டுல..நரம்பெல்லாம் இறுக்கி கையி..காலெல்லாம் ‘விருட்..விருட்’ன்னு நீட்டிக்கும்டா..சமயத்துல சவமே எந்திரிச்சு உட்காரும்..அப்ப..இதா..இந்தக் கம்பால நாலு சாத்து சாத்திப் படுக்க வையி..என்ன? பயந்துக்க மாட்டியல்ல?’ கவுண்டர் மச்சினன் சீமைச் சாராய குழறலோடு சொல்ல,

‘சரி’யெனத் தலையாட்டினான் சின்னான்.

எல்லோரும் சென்ற பின் சிதையருகே அமர்ந்து குறுஞ்சிரிப்புடன் ரசிக்க ஆரம்பித்தான். உள்ளுக்குள் ராசாக்கவுண்டரின் உடல் வெந்து கொண்டிருக்கின்றதென்ற எண்ணமே அவனுக்கு சந்தோஷமாயிருந்தது. வாய் விட்டுச் சிரித்தான். அவன் சிரிப்பொலி பக்கத்து மரங்களிலிருந்த பறவைகளை பயமுறுத்த அவைகள் ‘சட..சட’வென இறக்கையடித்துக் கொண்டு இருட்டில் திக்குத் தெரியாமல் அங்குமிங்குமாய் பறக்க ஆரம்பித்தன.

‘பணத்திமிரு பிடிச்ச பிசாசுப்பயலே.. ‘மேல்சாதிக்காரன்..மேல்சாதிக்காரன்’ன்னு மாரு தட்டிக்கிட்டுத் திரிஞ்சியே…இன்னிக்குத்தாண்டா நீ நெசமா மேல்சாதிக்காரன்…இல்ல..இல்ல..மேலோக சாதிக்காரன்! சொந்த செலவுல தாலி செஞ்சு கல்யாணம் பண்ணி வெச்ச உன்னைய எஞ்சம்சாரம் அப்பா ஸ்தானத்துல வெச்சிருந்தாளே.. அவளைப் போயிக் கெடுத்தியேடா பாவி’

‘படீ’ரென்ற சத்தத்தோடு கொள்ளிக் கட்டைகள் தெறித்து விழ ராசாக்கவுண்டரின் கால்களிரண்டும் விறைத்துத் தூக்கின.

ஆக்ரோஷத்தோடு கம்பை எடுத்து வருடக்கணக்கில் அடைகாத்து வைத்திருந்த ஆத்திரம் தீர ஓங்கி ஓங்கிச் சாத்தினான் சின்னான். ‘கிழட்டு நாயே.. நீ கெடுத்துட்டதால தூக்குல தொங்கின எம்பொண்டாட்டி மேல இல்லாத களங்கங்களைச் சுமத்தி.. என்னையும் மெரட்டி..என் வாயாலேயே ‘ஆமாம்’ன்னு சொல்ல வெச்சியேடா பாவீ’

கை ஓய்ந்ததும் தள்ளாட்டமாய் நடந்து பக்கத்திலிருந்த புங்க மரத்தினடியில் அமர்ந்து தலையை மரத்தில் சாய்த்துக் கொண்டு மூச்சு வாங்கினான் சின்னான்..

மீண்டும் கொள்ளிக் கட்டைகள் தெறிக்க திரும்பினான். ராசாக்கவுண்டரின் உடல் எழுந்து நெருப்பின் நடுவில் அமர்ந்திருந்தது. ‘ஏங் கண்மணியக் கெடுத்துக் கொன்ன பாவீ..உன்னச் சும்மா விட மாட்டேண்டா’ அடித் தொண்டையில் கத்தியபடி எழுந்தோடி பித்துப் பிடித்தவனைப் போல் உட்கார்ந்திருந்த ராசாக்கவண்டர் சவத்தை கம்பால் விளாசித் தள்ளினான்.

அவனது ஆவேசத் தாக்குதலில் நெருப்புக் கங்குகள் நாலாப்புறமும் சிதற ஒன்றிரண்டு அவன் மேலேயும் பட்டுத் தெறித்தன.

மறுநாள்.

அஸ்தி அள்ள வந்த கும்பல் ‘ஆஹா..பிரேதம் அபாரமா எரிஞ்சிருக்கப்பா…எலும்புக கூட சுத்தமா எரிஞ்சு சாம்பலாயிருக்கப்பா..எல்லாம் கவண்டரய்யாவொட மனசு பொலத்தான்..புண்ணியாத்மாவாச்செ..குத்தங்கொறை வருமா’, கொள்ளியிட்ட ராசாக்கவண்டரின் தம்பி மகன் சொல்ல,

‘அதுல துளிக்கூட சந்தேகமேயில்லீங்கய்யா!…எத்தனை பேர்த்துக்கு எத்தனை உபகாரஞ்செஞ்சிருப்பாரு’ சுத்தமாய் போதை தெளிந்திருந்த சின்னான் சாம்பலைக் கூட்டிக் கொண்டே பதில் சொன்னான்.

(முற்றும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *