தீக்கொழுந்தில் பனித்துளி (அத்தியாயம்-13)
முகில் தினகரன்
அவன் இதய வானில் மின்னி விட்டுப் போன மைதிலியென்னும் தேவ மின்னல் ஏற்படுத்திச் சென்ற காதல் ரணங்களை, யதார்த்த வாழ்க்கையின் ஓட்ட கணங்களில் ஓரளவுக்குத் தொலைத்து விட்டிருந்தான் சுந்தர்.
பல நேரங்களில் அந்த ரணங்கள் கந்தகமாய் இருந்த போதிலும், சில நேரங்களில் அவை சுகந்தமாகவும் தெரிந்தன.
நைட் ஷிப்ட் தறி ஓட்டி விட்டு வந்து படுத்திருந்த சுந்தர் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான்.
அம்மாவையும், அண்ணனையும் பார்த்து விட்டுப் போக வந்திருந்த தேவி சமையலறையில் அம்மாவுடன் எதையோ சத்தமாக விவாதித்துக் கொண்டிருந்தாள்.
திடீரென்று அங்கிருந்து விசும்பல் ஒலி கேட்க, படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்தான்.
“இதென்ன தேவி அழறா போலிருக்கே!” யோசனையுடன் எழுந்து சமையலறையை நோக்கி நடந்தான்.
தேவி சுவரோரமாய் அமர்ந்து கண்ணைக் கசக்கிக் கொண்டிருந்தாள்.
“என்னம்மா?.. எதுக்கு தேவி அழறா?.. நீ என்ன சொன்னே அவளை?” தாயைக் கடிந்தான்.
“நான் ஒண்ணும் சொல்லலைப்பா.. அவதான் என்னமோ கேட்கிறா!”
“என்ன?.. என்ன கேட்கறா?”
“ம்.. அவளையே கேளு!”
தேவியின் அருகே சென்றமர்ந்து, அவள் தலையை அன்பாய் வருடியபடி கேட்டான். “என்ன தேவி.. என்ன பிரச்சினை உனக்கு?”
“அண்ணா.. அவரு உன்கிட்ட ஒண்ணு கேட்டுட்டு வரச் சொன்னாரு!.. ஆனா.. அதை உன்கிட்டக் கேட்கறதுக்கு தயக்கமாய் இருந்திச்சு!.. அதான் அம்மாகிட்டச் சொல்லிக் கேட்கச் சொன்னேன்!.. அவ என்னடான்னா என்னையே திட்டுறா!”
அவன் தாயைத் திரும்பிப் பார்த்து முறைக்க,
“க்கும்.. என்னை முறைக்காதே!.. மொதல்ல அவ என்ன கேட்கறான்னு தெரிஞ்சுட்டு முறை!” என்றாள் லட்சுமி கடுகடுப்பான முகத்துடன்.
“அட.. அப்படியென்ன கேட்டுட்டா அவ?”
“ம்ம்ம்.. அவ புருஷனோட தங்கச்சிக்காரியை.. அதான் அந்தக் கிறுக்குப் பொண்ணை.. நீ கல்யாணம் கட்டிக்கணுமாம்!”
அதிர்ந்து போனான் சுந்தர்.
தன் மாப்பிள்ளையின் ஒரே தங்கையான ரேணுகா இருபது வயது உடல் வளர்ச்சியுடனும், இரண்டு வயது முளை வளர்ச்சியுடனும் அந்த வீட்டையே ரணகளப் படுத்திக் கொண்டிருக்கும் ஒரு மூளை வளர்ச்சியற்ற பெண் என்பது அவனுக்கும் தெரியும்தான்! “அந்தப் பெண்ணைப் போய்.. நான்.. எப்படி?”
“என்னம்மா சொல்றே?.. நிஜமா மாப்பிள்ளையா கேட்டுட்டு வரச் சொன்னார்?” நம்ப முடியாமல் கேட்டான்.
“ஆமாண்ணே!.. கல்யாணம் பண்ணி வெச்சா.. அவ நார்மலுக்கு வந்துடுவா!ன்னு யாரோ டாக்டர் சொன்னாங்களாம்!.. ஆனா.. அந்தச் சோதனைக்கு எந்த மாப்பிள்ளையுமே..ஒத்துக்காததால.. உங்ககிட்டக் கேட்டுப் பார்த்திட்டு வரச் சொல்லி.. என்னை அனுப்பியிருக்காங்க!..”
அவள் சொல்லும் தொணியிலிருந்தே அங்கு அவளை அவர்கள் எந்த அளவுக்கு கட்டாயப்படுத்துகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்ட சுந்தர் மிகவும் மனம் நொந்து போனான். “என் காதல் தோல்வி என்னை இவ்வளவு கேவலமாக்கி விட்டதே!” என மனதிற்குள் சொல்லிக் கொண்டவன்,
“அதுக்கு நீ என்னம்மா சொன்னே?”
“நானும்.. கேட்டுச் சொல்றேன்!.. கேட்டுச் சொல்றேன்!.. னு சொல்லிக்கிட்டே கிட்டத்தட்ட ரெண்டு மாசம் காலந் தள்ளிட்டேன்..! நேத்திக்கு என்னைய “போ.. போய்க் கேட்டுட்டு ஒரே முடிவோட வந்து சேரு”ன்னு சொல்லித் துரத்தியே விட்டுட்டாரண்ணே!..” அழ ஆரம்பித்தாள். “எப்படி?.. எப்படியண்ணே..நான் உன்கிட்ட இதைக் கேட்பேன்?”
“ஆண்டவா!.. உனக்கு விளையாடிப் பார்க்கறதுக்கு.. என்னோட வாழ்க்கைதானா கெடைச்சது?.. இவளோட வாழ்க்கைக்காக ஒரு கிட்னியையே இழந்தேன்!.. அதை இழந்த காரணத்தாலேயே உயிருக்குயிரான என்னோட காதலியையும் இழந்தேன்!.. இப்படி எல்லாத்தையும் இழந்திட்டு ஒரு சோக வாழ்க்கைய நிம்மதியே இல்லாம ஓட்டிக்கிட்டிருக்கேன்!.. இப்ப இவ வந்து, “மிஞ்சியிருக்கற அந்த வாழ்க்கையையும் எனக்காகப் பலி கொடு”ன்னு கேட்கிறாளே.. நான் என்ன பண்ணுவேன்?”
“அண்ணா.. யோசிக்காதண்ணா!.. நீ அவளை வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்னா.. அடுத்த நிமிடமே அவர் என்னைய வேண்டாம்ன்னுடுவார்!.. என்.. என்.. வாழ்க்கையே இப்ப உன் கைலதாண்ணா இருக்கு”
பேசிக் கொண்டேயிருந்தவள் “திடு.. திப்” பென்று அவன் கால்களில் விழுந்து கெஞ்ச ஆரம்பித்தாள்.
நெஞ்சு பாறாங்கல்லாய் கனக்க, அம்மாவைப் பார்த்தான்.
அவள் கண்களில் கண்ணீர் வெள்ளம்.
சில நிமிடங்கள் அங்கு அவஸ்தையான அமைதி நங்கூரம் பாய்ச்சியது.
அந்த அமைதியை தன் நீண்ட பெரு மூச்சால் கலைத்த தேவி, “பரவாயில்லைண்ணா!.. நான் போயி அவருகிட்ட “எங்கண்ணனுக்கு இஷ்டமில்லை”ன்னு சொல்லிடறேன்!.. அவர் என்ன செய்வாரோ செய்யட்டும்!.. என்னை வெச்சுக்கிட்டா வெச்சுக்கிடட்டும்!.. இல்லை துரத்தி விட்டா துரத்தட்டும்!.. ஊர்ல எத்தனை குளம் குட்டையிருக்கு ஏதாவதொண்ணு எனக்குக் கிடைக்காமலா போய்டும்?”
மூக்கை உறிஞ்சிக் கொண்டு வாசல் கதவை நோக்கி நடந்தாள்.
“தே.. வீ!”
அண்ணன் கூப்பிட, திரும்பிப் பார்த்தாள்.
“நில்லும்மா!” என்றபடியே அவளருகில் சென்றவன், அவள் தோளைத் தொட்டு, “உம் புருஷன்கிட்டப் போயி.. எங்கண்ணன் சம்மதிச்சிட்டாரு!”ன்னு சொல்லும்மா!” என்றான் கரகரத்த குரலில்.
“அண்ணா.. நெஜம்மாவா சொல்றே?” நம்ப முடியாமல் அவன் கைகளைப் பற்றினாள்.
“எனக்கு என்னோட வாழ்க்கைய விட உன்னோட வாழ்க்கைதாம்மா முக்கியம்!.. அதுக்காக எதையும்.. எதையும்.. இழக்க நான் தயாராயிருக்கேம்மா!”
அவள் சந்தோஷமாய்ச் சென்றாள்.
(தொடரும்)
படத்திற்கு நன்றி: http://mytumblingthoughts.blogspot.in/2012/03/dear-girl-nursing-broken-heart.html