Blog

  • கூவமும் கங்கைதான்

    தமிழ்த்தேனீ

     

    சாணக்கியரின் வாக்கு :–

    “நேர்மையான, அறிவாளியான  மக்கள்தான் ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும். மக்களின்றி நாடில்லை, நாடின்றி ராஜ்ஜியமில்லை. ஒரு இடத்தின் மதிப்பே அந்த இடத்தில் வசிக்கும் மக்களால் உருவாக்கப்படுவதே. நாட்டின் மேன்மையை விரும்பும் மன்னன் அந்த நாட்டு மக்களை  நல்ல முறையில் அறிவாளிகளாக உருவாக்கவேண்டும். பொருளாதாரத் தடைகள் ஏற்படாவண்ணம் தடுத்து  வருவாயைப் பெருக்க வேண்டும்”-   சாணக்கியர்

    ஒரு மனிதனின் மரியாதை, ஒரு மனதின் வலி, ஒரு வார்த்தையின் கனம், ஒரு அன்பின் அருமை, ஒரு பாசத்தின் பெருமை, ஒரு தியாகத்தின் விலை, ஒரு மண்ணின் பெருமை, ஒரு தேசத்தின் உயர்வு, ஒரு குடும்பத்தின் பாரம்பரியம், மக்களின் அருமை புரியாதவனுக்கு மனசாட்சியின் குரல் கேட்காது. அப்படிப்பட்டவன் நாட்டையாளத் தகுதி இல்லாதவன். –  தமிழ்த்தேனீ

     **************************

    ஐயா, நான் உள்ளே வரலாங்களா  என்று கேட்டபடியே வந்த அவனை ஏறிட்டுப் பார்த்த  கிருஷ்ணன் வாப்பா  தாராளமா வரலாம் என்றார்.

    தயங்கித் தயங்கி உள்ளே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி அவர் காலைப் பிடித்துக்கொண்டு  கொண்டு, “என்னை ஆசீர்வாதம் செய்யுங்க சார்” என்று கெஞ்சும் அவனை அவருக்கு அடையாளம் தெரியவில்லை.

    சரி யாரென்று பிறகு பார்த்துக்கொள்ளலாம், “நல்லா இருப்பா” என்று  அவனை வாழ்த்திவிட்டு, “எழுந்திருப்பா” என்று வாஞ்சையோடு தோள் தொட்டுத் தூக்கி அவன் தலையில் கை வைத்து ஆசி வழங்கினார் கிருஷ்ணன். நேருக்கு நேர் அவனைப் பார்த்த போது அவருக்கு அவனைப் பிடித்துப் போயிற்று.

    சில நேரங்களில் நம்மை விட நம் உள் மனதுக்கு  சக்தி அதிகம் என்று உணரும் தருணங்கள் வரும். நம்மைவிட நம் உள் மனது மிகச்சரியாக எடைபோடும் விந்தையை அனுபவித்திருக்கிறார் அவர்.

    நல்ல தீர்க்கமான நாசி, ஆண்பிள்ளைக்கு அடையாளமாக வாளிப்பான உடல்வாகு, பரந்து விரிந்த மார்பகம், திண்ணென்ற தோள்கள், நேருக்கு நேர் கண்களைப் பார்த்துப் பேசும் திடம், தீர்க்கம், அறிவு விசாலத்துக்கு அடையாளமாக ஒளிரும் கண்கள். அவரையறியாமல் அவன் மேல் ஒரு மதிப்பு வந்தது   கிருஷ்ணனுக்கு.

    “வாப்பா இங்கே உக்காரு” என்று எதிரில் இருந்த நாற்காலியைக் காட்டினார் கிருஷ்ணன். “இல்லே சார், பரவாயில்லை நான் நிக்கறேன்” என்றான் அவன்.

    “அனாவசியமான மரியாதையை நான் எதிர்பார்க்கறதில்லே, எப்போ என் கால்லே விழுந்து நீ வணங்கினியோ நீயும் என்னோட பையன் மாதிரிதான். பரவாயில்லே உக்காரு” என்றார் கிருஷ்ணன். தயங்கியபடியே உட்கார்ந்தான் அவன்.

    “அம்மா நல்லா இருக்காங்களா? அவங்க உள்ள இருக்காங்களா ?”.

    அவன் கண்கள் ஆவலுடன் காமாக்ஷியைத் தேடின.

    “இல்லேப்பா அவ கோயில் வரைக்கும் போயிருக்கா. இப்போ வர்ற நேரம்தான்”, சொல்லும்போதே வாயிலில் நிழலாடியது  காமாக்ஷி வந்துவிட்டாள்.

    “சொல்லுப்பா உன் பேரென்ன? நீ யாரு ,எதுக்கு என் கால்லே விழுந்து வணங்கறே?” என்றார் கிருஷ்ணன்.

    “சார்.. நான்..என்னை உங்களுக்கு ஞாபகம் இல்லையா? நான்தான் சார்  குமரன். என்னை என்னோட பத்து வயசிலே ஒரு ஹாஸ்டல்லே சேத்துட்டு, எனக்கு படிக்கறதுக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் செஞ்சு குடுத்து, நான் எவ்வளவு படிக்கணுமோ அவ்வளவு படிக்கலாம்ன்னு சொல்லி எல்லா ஏற்பாடும் செஞ்சு குடுத்தீங்க”. 

    அங்கே வந்த காமாக்ஷி “ஏங்க இவன் நம்ம குமரனுங்க, இவனை அடையாளம் தெரியலையா?”  என்றாள்.

    “அம்மா என்னை ஆசீர்வாதம் செய்யுங்க” என்றபடி அவள் காலிலும் விழுந்தான் குமரன். “நல்லா இருப்பா” என்று ஆசிகூறினாள் காமாக்ஷி. அதிர்ந்தார் கிருஷ்ணன். “நீ இவனை எப்பிடி நியாபகம் வெச்சிருக்கே ?” என்றார் ஆச்சரியத்துடன்.

    புன்னகைத்தாள் காமாக்ஷி. எத்தனை வருடம் கழித்துப் பார்த்தாலும் தாய் மனம் கொண்டவர்களுக்கு  குழந்தையை அடையாளம் தெரியும் என்று நிரூபிப்பது போல  புன்னகை புரிந்தாள் காமாக்ஷி.

    இன்னிக்கு நான் ஒரு கம்ப்யூட்டர் கம்பெனிலே  இஞ்சினீயரா இருக்கேன். உங்களைப் பாக்கணும்னு எவ்வளவோ நாள் நெனைச்சிருக்கேன். ஆனா படிப்பை முடிக்காமே உங்களை வந்து பாக்கக் கூடாதுன்னு சொல்லிட்டீங்க. அதுனாலே மனசைக் கட்டுப்படுத்திண்டு இவ்ளோ வருஷமா படிப்பே குறிக்கோளா இருந்து படிச்சிட்டேன் சார். என்னோட கனவு ஓரளவு நிறைவேறி இருக்குன்னா அதுக்கு நீங்கதான் சார் காரணம் என்றான் குமரன்.

    அவன் கண்களிலிருந்து நன்றிக் கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்துகொண்டிருந்தது. பரம திருப்தியுடன் அவனை உச்சி மோர்ந்தார் கிருஷ்ணன். இந்த மாதிரி உன்னைப் பாக்கணும்னு நானும் மனசைக் கல்லாக்கிகிட்டு  உன்னைப் பார்க்க வரல்லே, ஆனா எப்பவும் விசாரிச்சிகிட்டே இருந்தேன்  நீ நல்லாப் படிக்கிறியான்னு. ஒன்னோட வளர்ச்சியை அணு அணுவா ரசிச்சவன் நான். 

    “காலம் என்னோட தோற்றத்திலே பெரிய மாறுதலைச் செய்யலை, அதுனாலே நீ என்னை கண்டு பிடிச்சிட்டே. ஆனா உங்கிட்ட எவ்ளோ மாற்றம்! என்னாலே  கண்டு பிடிக்க முடியலை.  இங்கே இல்லைப்பா வெளிநாடு போயிட்டேன், இப்போதான் திரும்பி வந்தேன் ஆனா ரொம்ப சந்தோஷமா இருக்கு, உன்னைப் பாக்க” என்ற  கிருஷ்ணன், அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்.

    அவருக்கு பல வருடங்களுக்கு முன் நடந்த அந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.

    புதியதாக குடிபெயர்ந்திருந்த இடத்தில் என்னென்ன கடைகள் எங்கே இருக்கின்றன என்று பார்த்து வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம், அதன் காரணமாக ஒரு சின்ன நடைப்பயிற்சியும் மேற்கொண்டாற்போல் இருக்கும் என்று நினைத்து கடை வீதியில் வந்து கொண்டிருந்தார் கிருஷ்ணன்.

    அவர் மனைவி ஏங்க இங்கே பச்சைஅம்மன் மளிகைக் கடைன்னு ஒண்ணு இருக்காம், நாம வேண்டிய பொருட்களோட பட்டியலைக் குடுத்துட்டா வீட்டிற்கே வந்து குடுத்துடறாங்களாம் என்று கூறியது நினைவுக்கு வந்தது. எதிரே அந்த பச்சைஅம்மன் மளிகைக் கடை தென்பட்டது. அதன் உள்ளே நுழையலாம் என்று எண்ணிக் காலை வைத்தார். சேறும் சகதியுமாக இருந்த அந்த இடம் அவரை வழுக்கிவிட்டு கீழே தள்ளியது தலைகீழாய். நல்லவேளை கையில் கிடைத்த எதையோ பற்றிக்கொண்டு ஒருவாறு கீழே விழாமல் தப்பித்து நிமிர்ந்தார்.         

    பக்கத்தில் ஒரு பையன் அவரை பிடித்துக்கொண்டு  “என்னா பெரியவரே, பாத்து வரக் கூடாதா” என்றான். அவன் கண்களில் வெறுப்பு மண்டிக்கிடந்ததைக் கண்ட கிருஷ்ணன், “மன்னிச்சிக்கோப்பா பாக்காம காலை வெச்சிட்டேன், ரொம்ப நன்றிப்பா” என்றார்.

    “நன்றியெல்லாம் இருக்கட்டும், என் தோளை விடுங்க நான் போவணும், எனக்கு வேலை இருக்கு” என்று கூறியபடியே அவர் கையை தள்ளிவிட்டுவிட்டு நகர்ந்தான் அந்தப் பையன்.

    ஒருவாறு சமாளித்துக்கொண்டு கடைக்குச் சென்று  அங்கே இருந்தவரிடம், “நான் இந்த பகுதிக்கு புதுசா வந்திருக்கேன். மளிகை லிஸ்டைக் கொடுத்தா  வீட்டுக்கு பொருளை அனுப்புவீங்கன்னு கேள்விப்பட்டேன், அனுப்புவீங்களா?” என்றார்.

    கடைக்காரர், “ஆமாம் சார் அப்பிடிதான் அனுப்பிகிட்டு இருந்தேன், வரவர வேலை செய்ய சரியான ஆட்களே கிடைக்க மாட்டேங்கறாங்க, அப்பிடியே கிடைச்சாலும் நாலு நாளைக்கு வேலை செய்யறாங்க, அதுக்குப் பிறகு ஓடிப் போயிர்றாங்க என்னா செய்யிறது. எதுக்கும் நீங்க லிஸ்டைக் குடுத்துட்டுப் போங்க முடிஞ்சா அனுப்பறேன்” என்றார்.

    பேசிக்கொண்டே இருக்கும்போது கிருஷ்ணன் மேலே ஒரு கொத்துக் குப்பை வந்து விழுந்தது. கையால் அந்தக் குப்பையை தள்ளிவிட்டுவிட்டு  “என்னாப்பா கடையைப் பெருக்கும்போது யாராவது நிக்கிறாங்களான்னு கவனிச்சு பெருக்கக் கூடாதா” என்றார் ஆதங்கமான குரலில். ஒரு தலை நிமிர்ந்து “நான்தான் பெருக்கினேன், வேணும்னுட்டா உங்க மேலே போடுவாங்க? போவீங்களா! என்னாமோ பெரிசா குரல் விடுறீங்களே” என்று ஒரு குரலும்.

    அந்தக் குரலுக்கு சொந்தமான வெறுப்பு நிறைந்த கண்களும் கோவமான முகமும் தென்பட்டன.  இவரைத் தாங்கிப் பிடித்த அதே பையன்தான்.

    “என்னாங்க இது இப்பிடிப் பேசறான் இந்தப் பையன்” என்றார் கடைக்காரரிடம் கிருஷ்ணன்.

    “டேய் ஏண்டா இப்பிடி வர கஸ்டமரையெல்லாம் வெரட்டறதிலேயே இருக்கே, அவர்கிட்டே மன்னிப்பு கேளுடா முதல்லே” என்றார் கடைக்காரர்.

    “மன்னிப்பெல்லாம் கேக்க முடியாது. வேணும்னா வேலைக்கு வெச்சிக்கோங்க இல்லேன்னா நானு இப்பவே போறேன். எங்கூருக்கு, ரெயிலேத்தி அனுப்பிருங்க”  என்றான் பையன்.

    “எப்பிடிப் பேசறான் பாத்தீங்களா சார், இவங்க அம்மா கஷ்டப் படறாங்களேன்னு அவங்ககிட்ட எடுத்துச் சொல்லி  இவனை கூட்டி கிட்டு வந்து பத்திரமா பாத்துப்பாத்து வெச்சிக்கறேன். தொழில் சொல்லிக் குடுக்கறேன். இவன் சம்பாரிச்சா அந்த அம்மாவோட மத்த  புள்ளைங்கல்லாம் ஒருவேளை கஞ்சி குடிக்கும் அப்பிடீன்னு அந்த அம்மாகிட்ட கெஞ்சி, பணம் செலவழிச்சு ரெயில் டிக்கட்டு எடுத்து கூட்டிவந்து,  இங்கே வெச்சு சாப்பாடு போட்டு தங்க இடம் குடுத்து,  வெச்சிருக்கேன். கொஞ்சமாவது நன்னி இருக்கா பாருங்க, இவன் இப்பிடி நடந்துக்கறான்” என்று சலித்துக்கொண்டார் கடைக்காரர்.

    “இதோ பாருங்க முதலாளி,  நான் உங்களை ஒண்ணும் குறை சொல்லலையே! எனக்கு வேணாம், நான் போறேன்னு சொல்றேன். என்னைய அனுப்பிருங்கன்னு சொல்றேன், கேக்கமாட்டேங்கறீங்க. என்னைய விட்ருங்க, அனுப்பிருங்க” என்று தன் துணி மணிகளை எடுத்து வைத்துக்கொண்டு “நீங்க என்னா அனுப்பறது, நானே போயிக்கறேன்” என்றபடி வெளியே சென்று நடக்கத் தொடங்கினான்.

    இந்தச் சிறு வயதில் இவனுக்கு எங்கே இருந்து இவ்வளவு வெறுப்பும் ஆத்திரமும் வருகிறது  என்று யோசித்தார் கிருஷ்ணன். “சரி மளிகை பொருட்களை நானே வாங்கிட்டு போயிடறேன் நீங்க குடுங்க” என்று சொல்லிவிட்டு  நின்று வாங்கிக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினார்.  இரவு சப்பிட்டுவிட்டு படுத்தார். அவர் மனதில் ஏனோ மீண்டும் மீண்டும் அந்தப் பையனின் நியாபகமே வந்துகொண்டிருந்தது. நல்ல தூக்கத்தில் ஏதோ சப்தம் கேட்டு  எழுந்தார். 

    வாசலில் அக்கம்பக்கத்து வீடுகளில் இருப்போர் கூடியிருந்தனர். “ஒரு திருடன் வகையா மாட்டிகிட்டான், கட்டி வெச்சிட்டு  போலீசுக்கு சொல்லி இருக்கோம்” என்று ஒரே குரலில் சொன்னார்கள். அந்தத் திருடனை எழுப்பி  ஓங்கி ஒரு அறைவிட்டார் கீழே போய் விழுந்தான் அவன். இன்னமும் அவருக்கு ஆத்திரம் தாங்கவில்லை. இந்தச் சின்னஞ்சிறு வயசிலே திருட்டா  நினைக்க நினைக்க ஆத்திரமாய் வந்தது.

    மீண்டும் அவனை எழுப்பி அவர் பக்கமாகத் திருப்பி அவன் முகத்தைப் பார்த்து அதிர்ந்து போனார். ஆமாம் காலையில் சந்தித்த அதே கடைக்காரப் பையன். ஆத்திரமாக வந்தது அவருக்கு. “ஏண்டா நியாயமா வேலை செஞ்சு  சம்பாதிக்க முடியலே, இந்தச் சின்ன வயசிலே  திருட மட்டும் முடியுதா ?  உன்னையெல்லா கட்டி வெச்சு உதைக்கணும். தப்பே இல்லே”  என்றார் ஆக்ரோஷமான குரலில்.   

    கண்களில் கண்ணீருடன்  இவரைப் பார்த்து  “என்னை அடிங்க சார், எவ்ளோவேணா அடிங்க சார் ஆனா திருடன்னு மட்டும் சொல்லாதீங்க, சார் நான் திருட வரல்லெ சார், ஊருக்கு போக டிக்கட் எடுக்கப் பணம் இல்லே. பசிவேற குடலைப் புடுங்குது அப்பிடியே மயக்கத்திலே  இங்க படுத்திருந்தேன். அதோ அந்தப் பெரிய நாயி என் பையை எடுத்துகிட்டு ஓடிடிச்சு, அதைத் துரத்திகிட்டு வந்தேன். அந்தப் பையிலேதான் சார் எங்க அம்மாவோட  படம் வெச்சிருக்கேன். அதைத் துரத்திகிட்டுவந்தேன் சார். அந்தப் பையை வாங்கிக் குடுங்க சார்  எங்கம்மா படம் இருக்குது அதிலே என்று கதறினான். எங்க அம்மாவை படத்திலேதான் சார் தினோம் பாக்கறேன். அவங்களோட சேந்து இருக்க எனக்கு குடுத்து வைக்கலே. அந்தப் பையை வாங்கிக் குடுத்திருங்க சார்.”

    கிருஷ்ணனுக்கு  இவன் ஒரு புண்யாத்மா, திருடனில்லை என்று உள்மனம் சொல்லியது. அவர்களிடமிருந்து அந்தப்பையை வாங்கி இவனிடம் கொடுத்துவிட்டு, “சரி நீங்கள்ளாம் போங்க நான் இவனைப் பாத்துக்கறேன்” என்று  கூறிவிட்டு உடனடியாக காவல் நிலையத்துக்கு  போன் செய்து, “சார் தப்பா சொல்லிட்டாங்க. இங்கே திருட யாரும் வரலை, அந்தப் பையன் எங்க வீட்டுக்கு வந்திருக்கான். வழிதெரியாம தடுமாறும் போது திருடன்னு நெனைச்சிகிட்டாங்க. நீங்க கஷ்டப்படாதீங்க  அந்தப் பையனை நான் பாத்துக்கறேன்” என்று கூறிவிட்டு, “நீ வாப்பா போகலாம்”, என்று அவன் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்.

    “வாப்பா நீ இங்கே உக்காரு, காமாக்ஷி  இவனுக்கு வயித்துக்கு  ஏதாவது குடு” என்றார். காமாக்ஷி ஒரு தட்டில் உணவு எடுத்துவந்து அவனிடம் வைத்தாள். “சாப்புடுப்பா”  என்றார்.  அள்ளி அள்ளி விழுங்கிவிட்டு, “தட்டை எஙக சார் கழுவணும்”  என்றான். “அதோ அங்கே போயி வாஷ் பேசின்லே சுத்தம் செஞ்சு கொண்டு வா”  என்றார் கிருஷ்ணன்.

    அவனுக்கு துடைத்துக்கொள்ள ஒரு துண்டைக் கொடுத்துவிட்டு, கையை துடைத்துக்கொண்டு  வந்த அவனை தன் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு, “ஆமாம், உனக்கு ஏன் இவ்ளோ சின்ன வயசிலே இவ்வளவு ஆத்திரமும், கோவமும் வருது ?” என்றார்.

    “அந்த மளிகைக் கடைக்காரர்  உன்னை சரியா நடத்தலையா. கொடுமைப் படுத்தறாரா? என்கிட்ட சொல்லு  அவனை ஒரு வழி பண்றேன்”  என்றார்.

    “அவரு பாவம் சார், நல்ல மனுஷன்  அவருமேலே தப்பில்லே, துட்டுக்கு ஆசைப்பட்டு எங்க ஊர்லேருந்து நிறையா பேரு  படிக்கணும்னு ஆசைப்படுற  சின்னப் புள்ளைங்களையெல்லாம்  மெட்ராசுக்கு அனுப்பறாங்க. இவரு கூட்டியாந்து கடையிலே வேலைகுடுத்து  நல்லாத்தான் வெச்சிக்கறாரு.

    முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்ட கதை சார் என்னோடது.  என் அம்மா என்னைப் படிக்க வைக்க முடியாம ரொம்பக் கஷ்டப்படறாங்க. எங்க அப்பா தினோம் குடிச்சிட்டு வந்து அம்மாவைப் போட்டு அடிக்கறாரு, தம்பி தங்கையெல்லாம் கஷ்டப்படுது, ராத்திரி குடிச்சிட்டு வந்து எல்லாரையும் அடிக்கறாரு. காலையிலே  மன்னிப்பு கேக்கறாரு, மறுபடியும் ராவிக்கு  குடிச்சிட்டு வந்து நிக்கறாரு.

     சாப்பாட்டுக்கு கூட வழியில்லாம அம்மா கஷ்டப்படுது. எங்கம்மா என்னா செய்வாங்க? ஆனா  ஒரு நாளுகூட  எங்கப்பனை திட்டாது எங்கம்மா. இதமா அவரு வாயைத் துடைச்சு விட்டு படுக்க வெச்சு விசிறியாலே வீசறாங்க . அவரு தூங்கறாரு,  ஏம்மா ஒரு நாளைக்காவது  நீ கேள்வி கேட்டாதானே அவரு திருந்துவாரு அப்பிடீன்னு நான் கேட்டா, “அடப் போடா  அவரு நல்ல மனுஷன்டா. ஏதோ போறாத காலம் குடிக்க ஆரம்பிச்சிட்டாரு, நீ அவரு பெத்த மகன்டா  என் முன்னாலே அவரை எது சொன்னாலும் நான் ஒப்புக்க மாட்டேன்”னு எங்கிட்ட  சண்டை பிடிக்குது. இத்துப்போன கயிறாலே இறுக்கிக் கட்ட முடியாது, உறவு நல்லா இருக்கணும்னா  உண்மையான பாசமும் நேசமும், அன்பும், கருணையும், நடிப்பு கலக்காத நேர்மையும் அவங்கவங்களுக்கா  வரணும், சொல்லிக்குடுத்து வரவைக்க முடியாது,  அப்பிடீன்னு ஏதேதோ சொல்றாங்க.   எனக்கு புரியமாட்டேங்குது.

    உனக்கென்னா நான் கூலி வேலை செய்தாவது உன்னைப் படிக்க வைக்கிறேன் அப்பிடீங்குது. எனக்குன்னு ஒரு மனசு இருக்குதில்லே.  எனக்கு மனசு வரலே. அதுனாலே எங்க அம்மாவை நல்லபடியா வெச்சிக்க, நான் சம்பாரிக்கணும், என் குடும்பம் என்னாலே முன்னுக்கு வரணும், அதுக்காகத்தாங்க இந்த வேலைக்கு வந்தேன்.

    ஆனா இங்கே வேலைக்கு வந்தபெறகுதான் தெரியுது, எவ்ளோபேரு  படிக்க வழியில்லாமே எங்களை மாதிரி கஷ்டப்படறாங்கன்னு. நாங்கள்ளாம் குழந்தைங்க.  ஆனா விளையாடணும்னுகூடத் தோணலீங்க, பாடுபட்டு முன்னுக்கு வரணும்னு தோணுது. அது தப்பாங்க? ஆனா அதுக்குகூட வழியில்லையே ? காலம் காலமா  நாங்க இப்பிடி  கஷ்டப்பட்டுகிட்டேதான் இருக்கணுமா? எங்களோட எதிர்காலமே விணாகுதே நாங்க படிக்க முடியலையே. எங்களுக்கு விடிவுகாலமே இல்லையா ன்னு யோசிச்சேனுங்க, கோவம் கோவமா வருது.

    குழந்தைங்களை வேலைக்கு வெச்சுக்க கூடாதூன்னு சட்டம் மட்டும் போட்டுட்டா போதுமா சார்?  அந்தக் குழந்தைங்களோட வயித்துப் பசியையும்   அதுங்க எதிர்காலத்தையும் யாரு சார் பாக்கறாங்க? எங்களை மாதிரி சின்னப் பசங்களைப் படம்பிடிச்சு வருங்காலத் தூண்கள்னு போஸ்டர் அடிச்சு ஒட்றாங்க சார், ஓட்டு வாங்கறதுக்காக. 

    ஆனா என்னா சார் செய்யறாங்க எங்களுக்கு? எங்க அப்பனெல்லாம் குடிச்சு அழியறதுக்கு  நாட்டுலே நிறைய சாராயக் கடை திறக்கறாங்க, ஏன் சார் சாராயம் விக்காம நம்ம நாட்டை  முன்னுக்கு கொண்டு வரமுடியாதா  ?

    ஏன் சார் இந்த அரசியல்வாதிங்க  இப்பிடி செய்யறாங்க? அந்தக் கோவம்தான் சார். இவ்ளோ வெறுப்பை வெச்சுகிட்டு எப்பிடி சார் நான் சிரிக்க முடியும்? எப்பிடி கோவப்படாம இருக்க முடியும்? நான் எப்பிடிங்க வேலை செய்வேன்.” மூச்சு வாங்கியது குமரனுக்கு…..

    “தூங்க முடியலைங்க  பாடமெல்லாம் கனவா வருதுங்க திடுக்கிட்டு எழுந்துக்கறேன்.  மளிகைக் கடையிலே ஒவ்வொரு மூட்டையைப் பாக்கும்போதும்  ஒவ்வொரு பாடபுத்தகம் நினைவுக்கு வருதுங்க.

    எங்க வாழ்க்கை இப்பிடி சிதறிப் போனக் கடுகு மூட்டை மாதிரி ஆயிப்போச்சுங்க”, என்றபடியே குமுறிக் குமுறி  அழ ஆரம்பித்த குமரன் உணர்ச்சியின் வேகம் தாங்காமல் அப்படியே மயங்கினான்.

    காமாக்ஷி அவனை மடியில் கிடத்திக்கொண்டு  இதமாகத் தடவிக் கொடுத்துக்கொண்டிருந்தாள்.  கண்களைத் துடைத்துக்கொண்டு ஓடிப்போய்  ஒரு பாத்திரத்தில்  தண்ணீர் கொண்டு வந்தார் கிருஷ்ணன்.  அந்தத் தண்ணீரை வாங்கி குமரன் கண்களைத் துடைத்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அவன் வாயில் ஊற்றினாள் காமாக்ஷி.

    உணர்வுக்கு வந்த குமரன் திடுக்கிட்டு எழுந்தான்.

    “அம்மா அய்யா என்னை மன்னிச்சிருங்க. ஒழுங்கா படிக்கக் கூட வக்கில்லாத  ஏழைங்க நானு என்னைப் போயி  உங்க மடியிலே. என்னை மன்னிச்சிருங்க, தெரியாம நான் உங்க மடியிலே படுத்துகிட்டேன், என்று நடுங்கினான் குமரன். அவனை இழுத்து அணைத்து மீண்டும் தன் மடியில் கிடத்திக்கொண்டு   அவன் முதுகை இதமாகத் தடவிக் கொடுத்தபடியே,  நானும் உங்க அம்மா மாதிரிதான் படுத்துக்கோப்பா என்றாள். அவள் கைகள் அவனை தடவிக் கொடுத்துக்கொண்டிருந்தன.

    எங்கும் இருப்பான் நாராயணன் என்று கூறிய ப்ரகலாதனின், தன் பக்தனின்,  வாக்கைக் காப்பாற்ற ஜகமெங்கும் நிறைந்து, அணுவைச் சதகூறிட்ட அணுவிலும் உளன் என்று ஆழ்வார்கள் பாடும்படியாக  சர்வ வியாபியாக நிறைந்து  தூணிலிருந்து வெளிப்போந்து நரசிம்மமாக வந்து ஹிரணியனின்  வயிற்றைக் கிழித்து குடலை மாலையாகப் போட்டுக்கொண்ட நாராயணன், அதன் பிறகு  ஹிரணியனுடைய மார்பில் கையை விட்டுத்  துழாவி அவனுடைய ஹிருதயத்தை தன்னுடைய கைகளால் தடவிக் கொடுத்தானாம்.

    ஏனென்றால் அவன் சொன்னதைக் கேட்டுக் காவல் புரிந்து,  அதன் காரணமாக முனிவரால் சபிக்கப்பட்டு ஹிரணியனாகப் பிறந்து உள்ளே பக்தி இருந்தாலும் பிறப்பின் காரணமாக நாத்திகன் போல் நடித்து, மகனைக் கொடுமைப்படுத்தி எல்லோரிடமும் கெட்ட பெயரெடுத்து, அசுரன் என்று ஏசப்பட்டு, ஹிரணியன் தன்னை அடைய  எவ்வளவு கொடுமைகளை அனுபவித்தான் என்று உணர்ந்து மனம் இரங்கி அவனுடைய ஹிருதயத்தை இதமாகத் தடவிக் கொடுத்த நாராயணனைப் போல என்று பௌராணிகர்  சொன்னது நினைவுக்கு வந்தது. 

    இந்தச் சின்னஞ்சிறு வயதில்  எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கிறான்  குழந்தை,  என்றுணர்ந்து இதமாக தடவிக் கொடுத்துக்கொண்டிருந்தாள்  காமாக்ஷி . இந்தக் குழந்தைகளைக் கூட முறையாகக் காப்பாற்றாமல் இருக்கும் ஹிரண்யர்களை சம்ஹாரம் செய்ய எப்போது நாராயணுனுக்கு மனம் வருமோ என்ற எண்ணம் வந்தது காமாக்ஷிக்கு.

    சுதாரித்துக்கொண்டு எழுந்த குமரன், “அம்மா நான் போன ஜென்மத்திலே செஞ்ச புண்ணியம் உங்களை மாதிரி இன்னொரு அம்மா அப்பா கிடைச்சது.  ஐயா  உங்ககிட்டகூட மரியாதை இல்லாம நடந்துகிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க. நான் கிளம்பறேன் எப்பிடியாவது கஷ்டப்பட்டு முன்னுக்கு வருவேன் சார்  ஆனா உங்க ரெண்டு பேரையும் மறக்க மாட்டேன்.  நான் வரேன்”, என்று கிளம்பினான்.

    “கொஞ்சம் நில்லுப்பா.   நீ படிக்கறதுக்கு நான் உதவறேன், நல்லா படிச்சு முன்னுக்கு வருவியா ?” என்றார். கிருஷ்ணன். “சத்தியமா படிச்சு முன்னுக்கு வருவேனுங்க   இது எங்க அம்மா மேலே  சத்தியம்” என்றான் குமரன்.

    அத்தனையும் மனக்கண்ணில் படமாக ஓடியது  கிருஷ்ணனுக்கு.

    “ஐயா குப்பையை தூக்கி உங்க மேலே நான் போட்டேன், ஆனா நீங்க என்னைக் கோபுரத்தில் ஏத்தி வெக்கறீங்க. எத்தனை பிறவி எடுத்தாலும் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கேன் நானு.”, என்ற குமரன் நெடுஞ்சாண்கிடையாக காலில் விழுந்தான் .  

    சுதாரித்துக்கொண்டு  “குமரா நீ ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு வளந்துட்ட”, என்றவர் அவனைத் அணைத்துக்கொண்டு, “உன்னைய மாதிரி பசங்க இந்த நாட்டுக்கே வழிகாட்டிப்பா. உங்க அம்மா நல்லா இருக்காங்களா என்றார். கூச்சப்பட்டுக்கிட்டு   வெளியிலே நிக்கறாங்க சார்” என்றான் குமரன். 

    “அப்பா எங்கே இருக்காரு ?”  என்றார் கிருஷ்ணன்.

    “அப்பா இல்லீங்க  அவரு குடல் வெந்து  எங்களையெல்லாம் தவிக்க விட்டுட்டு  இறந்து போயிட்டாரு” என்றான் குமரன்.

    “வருத்தமா இருக்குப்பா  ஆனா எங்களை மாதிரி இருக்கறவங்க வருத்தப் படறதைத் தவிற வேறொண்ணும் செய்ய முடியலை.”

    “நீங்க உள்ளே வாங்கம்மா. பிள்ளையைப் படிக்கவைக்கணும்னு நெனைக்கிற உங்களை மாதிரி  அம்மாக்கள்தான்  இந்த நாட்டுக்கு தேவை. நீங்க இந்த மாதிரி பிள்ளையைப் பெத்ததுக்கு  தலைநிமிர்ந்து நடக்கணும். நீங்க கூச்சப்படக் கூடாது.

    இந்த நாட்டிலே  சுதந்திரம் வாங்கி 65 வருஷம் ஆகியும் உங்க நெலைமைய இதே மாதிரி வெச்சிட்டிருக்கோமே.  நாங்கதான் கூச்சப்படணும். கூவத்தையெல்லாம் கங்கையாக்கணும்னு நெனைக்காம கங்கையையுயும் கூவமாக்கிட்டு இருக்கோமே நாங்கதான் கூச்சப்படணும்”  என்றார் கிருஷ்ணன்.

    குமரனின் அம்மா கையைக் கூப்பிக்கொண்டு, “நீங்களும் அம்மாவும் நல்லா இருக்கணுங்க”  என்றாள் கண்ணில் நீருடன்.  

    எல்லாப் பெண்மணிகளிலும் உள்ளே அம்மா இருக்கிறாள். தாய்மை ப்ரபஞ்சத்தின் மூலைமுடுக்குகளில் கூட சர்வ வியாபியாய் இருக்கிறது என்று எண்ணம் ஓடியது கிருஷ்ணனுக்கு அவருடைய அம்மாவே அவரை  ஆசீர்வதித்தது போல் ஒரு உணர்வு வந்தது.  கிருஷ்ணனும் கையைக் கூப்பினார் தன் அம்மாவை நினைத்துக்கொண்டு.

                             சுபம்

    Share
  • நோ-பால் – No Ball

    மணி ராமலிங்கம்

     

    டிசம்பர் 27ந் தேதி. அந்த மேட்சில்தான் அம்பயர் – ரமணி சரியாக மாட்டிக்கொண்டு மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டான்.

    ரயில்வே அணிக்கு எதிரான மேட்சு அது.

    ஆறு அணிகள் விளையாடும் டோரணமெண்டில், இந்த மேட்சில் ஜெயித்தால் தான் அடுத்த கட்டம். எடுக்க வேண்டியது சொற்ப ரன்கள் என்றாலும் விக்கெட்டுகள் சரிந்தது பயத்தை ஏற்படுத்தியது. குமார் அன்று பந்தால் துவம்சம் செய்து கொண்டிருந்தான்.

    இருக்கிற ஓரே நல்ல விக்கெட் சீனிவாசன் அண்ணா. அவர் நின்று விளையாட வேண்டும். போன ஓவரில் ரன்னராய் வந்த போது கிளவுசை கழட்டினார் அண்ணா. நிறைய வேர்த்திருந்தது. கொஞ்சம் கை நடுக்கமாய் இருந்தது. பயந்திருக்கிறார்.

    பக்கத்து ரன்னரோடு பேசுவது போல சொன்னார் .. “ அடுத்த ஓவர் அவனுக்கு கடைசி பாத்துக்கடே.. நா வெளிய வந்து எல்லாத்தையும் கால்ல தான் வாஙக போறேன்.. நோ பால்ன்னு அழுத்திடுடே. “  ரமணிக்கு  மட்டும் கேட்குமாறு சொல்லிப் போனார்.

    அவுட்டானவுடன் நோபால் கொடுப்பது அம்பயரின் பொறுப்பு. நல்ல பாலை நோபாலாக காட்ட வேண்டும். நோபால் – பேட்ஸீமேனுக்கு புனர்ஜென்மம். இரண்டாம் வாய்ப்பு. அநுபவங்கள் மிகுந்த இரண்டாம் வாய்ப்பு. அடுத்த வாழ்க்கை.

    எதிர்முனையில் சுழலும் காலச்சக்கரம். உடலின் ஓவ்வொரு செல்லும், படிப்பினை கற்று கொண்டு விட்ட பின்பு, வரும் வாரணம் ஆயிரம் பலம்.  நோபால் அவுட்டில் தப்பிக்கிற பேட்ஸ்மேன், வாதம் வந்து பிழைத்த வயோதிகன் போல. அவ்வளவு எளிதாய் அடுத்த முறை சாவதில்லை. இறப்பை கடந்து வந்த முனிவன் மனநிலை.

    முதல் இரண்டு பந்துகள் குமார் வெளியே ஸ்விங் செய்தான். சீனிவாசன் அண்ணா, அதை அப்படியே விட, மூன்றாவது பந்து மிகச் சரியாக உள்ளே திரும்பி வந்த போது அண்ணா அதை சமாளிக்க பிட்சில் இறங்கினான். பந்து கால்வழியாய் நுழைந்து குச்சியை கழட்டியது. அண்ணா இறங்கிய கணமே ரமணிக்குத் தெரிந்தது விக்கெட் வீழப்போகிறதென்று.

    பந்து கால்வழியே நுழைந்த அந்த கணத்தில் கத்தினான்.

    “ நோ-பால் “

    கத்தினதெல்லாம் சரிதான். அந்த பதட்ட்த்தில் ’பொய்த்தடம்’ வைக்க மறந்ததுதான் துரதிர்ஸ்டம்.

    மைதானத்தின் ஓரத்தில் பசியோடு காத்திருந்த சண்டை யட்சி காற்றாய் உள்ளே வந்தது. ரமணிக்கு தன் தவறு புரிந்தது.

    “ யே உளத்துறாண்டா.. “ என்று கத்திய வார்த்தைக்கு பின்னான எதுவும் ரமணிக்கு செவி தாண்டவில்லை. அந்த காட்சிகள் வார்த்தையற்ற பிம்பமாய் கண் முன்னே ஓடிக்கொண்டிருந்தது. அடிவயிற்றில் எதுவோ சுரந்து சுரணையைத் தின்று கொண்டிருந்தது. ஒரு சிலந்தி உடம்பெல்லாம் தவழ்ந்து தனது பிரஞ்ஞையை உறிஞ்சிக்கொண்டிருந்தது போல தோன்றிற்று. தொண்டை கமிறி வரும் கண்ணீரை உள்ளே அனுப்ப வேண்டியிருந்தது. இருந்த இடத்திலே நின்று கொண்டு திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான்.

    “நோ- பால்னா, நோ-பால்தான், சொல்லியாச்சுல்ல.. நோ-பால் தான்.. காட்டெல்லாம் முடியாது.. ஒன்ஸ் டோல்டு நோ-பால்.. தட் இஸ்.. நோ-பால்.. நா பாத்தது.. நான் சொன்னது.. சொன்னது தான்.“ அவன் சொல், மனம், சில இந்திரியங்கள் அவன் முழுக்கட்டுப்பாட்டிலில்லை.

    செந்தில் உள்ளே குதித்து ஓடிவருவது சந்தோசமாய் இருந்தது. சண்டை ஒரு பத்து நிமிடங்கள் நீடித்தது. ரமணி அம்பயராக நிற்க கூடாது என்று சொல்லி வெளியேற்றி விடப்பட்டு அச்சுவை உள்ளே வர இருதரப்பினரும் சம்மதித்தனர்.

    மைதானத்திலிருந்து விளிம்பு வரை நடந்து வந்த போது, உலகத்தின் எந்த சத்தங்களும் மொன்னையாக்கப்பட்டு பெரிய அமைதி நிலவியது. வெளி மட்டுமல்ல, உள்ளுக்குள்ளும் அந்த மாபெரும் அமைதி சத்தம்.

    நோபால் – பிழைத்தலுக்கு பின், அதிகமான அநுபவத்தோடும், காற்றில்லாதவிட்த்தில் வைக்கப்பட்ட தீபம் போலவும் மனம் குவிய நம்பிக்கையோடு வருவதை எதிர்கொள்வது ஆயிரம் யானை பலம். நிகழ்கால அநுபவச் செறிவோடு இறந்தகால நிகழ்வுகளை எதிர்கொள்ளுதல், ஆபிஸில் வேலை பார்ப்பவனுக்கு ஐந்தாம் வகுப்பு தேர்வு போல்தானே.

    சீனி அண்ணாவுக்கு இரண்டாவது வாழ்க்கை. வாரண பலத்தோடு விளையாடினான். சீனி அண்ணா தனி ஆளாய் நின்று விளையாடி அந்த மேட்சு ஜெயித்தான்.

    இருட்டிய பின் வெளிச்சமற்ற அந்த தெருவில் வெற்றிவிழா. ஆட்டுக்கால் சூப்பு குடித்து அணி வெற்றியை கொண்டாடியது. ரமணிக்கு தனியாய் தனது ஈரமற்ற வெதுவெதுப்பான கைகோர்த்து அணைத்து நன்றி சொன்னான் சீனி அண்ணா.

    “ஸ்டார்டிங் ட்ரபிள்மா.. கொஞசம் பதட்டமா இருந்த டயத்தில காப்பாத்தினம்மா.. அந்த நோபால் மட்டும் இல்லைன்னா நம்ம கவிந்துருப்போம். தேங்க்ஸ்ம்மா. ”

    ரமணி அதற்குப் பின் அம்பயரிங்கிற்கும், மறைந்து குடிக்கும் ஆட்டுக்கால் சூப்பிற்கும் போவதேயில்லை. பொய்த்தடம் அவனிடமிருந்து குமாரின் கால்வழியே நுழைந்து கழன்ற குச்சி போல விழுந்து விட்டது.

    *

    அம்பயரிங் காலத்திற்கு முன்பான காலத்தில்,  சண்டையில்லாமல் முடியாத திருநெல்வேலி கல்யாணம் போல, மேட்சில் ஒரு சண்டையாவது  இருக்கும். தெருக் கிரிக்கெட்டுகள் கூட சண்டையோடுதான் நடந்திருக்கின்றன. அல்லது முடிந்திருக்கின்றன. சண்டைகள் அவசியம். கொஞ்சம் கிரிக்கெட். நிறைய சண்டை.

    பின்பு சண்டைகள் குறைய, பெரிய மேட்சுகளில் பேட்டிங் டீமிலிருந்து ஒரு அம்பயர் என்ற வழக்கம். அந்த நபர் எதிர் டீமால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். சில நபர்களை அம்பயராக்குவதற்கு எந்த டீமும் ஓத்துக் கொள்ளாது.

    அப்படிப்பட்ட ஒரு நபர்தான் எங்கள் அணியின் செந்தில்.

    கிரிக்கெட் ஒரு ஜெண்டில்மேன் கேம் என்பதில் கொஞ்சம் கூட நம்பிக்கையில்லாதவன் செந்தில். எங்களூர் ரயில்வே கிரவுண்டு, மேட்டுப்பாளையம் கிரவுண்டு, எம்ஸ்பி திடல், மேலத்தெரு, வடக்கு மற்றும் தேர்த்தெரு, மொட்டை மாடி, பாப்பாத்தி மைதானம், ஆகியவற்றில் – விளையாடப்படும் கிரிக்கெட் ஜெண்டில்மேன் கேமாக இருக்க முடியாது என்று ஆழமாக எண்ணுபவன். கால்பந்தோ, பம்பரமோ, நொண்டிசிங்கியோ எதுவும் அவன் விளையாடாத வரைக்கும் அது ஜெண்டில்மேன் கேமாகா இருப்பதில் அவனுக்கு எந்தப் பிரச்சனையுமில்லை.

    அம்பயர் பதவியின் பலத்தை அவன் உணர்ந்திருந்தான். உணரவைத்தான். அவனால் எத்தனையோ மேட்சுகளில் எங்களுக்கு ஜெயம்.

    கொட்டை, கொட்டையாய் நடுக்குச்சி கழன்று விழும் எத்தனையோ பந்துகளை கூட அவன் நோபால் கொடுத்திருக்கிறான். எப்போதும் இந்த அழுகூணித்தனம் தேவையில்லை. சில பந்துவீச்சாளர்களிடமிருந்து, சில முக்கியமான விக்கெட்டுகளை மட்டும் காப்பாற்றிவிட்டால் போதும், ஆட்ட்த்தின் போக்கு மாறிவிடும்.

    இடம், பொருள், ஏவல் அறிந்து தனது அம்பயர் அட்டூழியங்களை, சாம, தான பேதமின்றி, தண்டத்தோடு செய்து எங்களது வெற்றிக்கு அருள்பாலித்தான்.

    அவனது கருத்த திருமேனியையும், வாயில் வரும் வண்டை வண்டையான திருவாய் மொழியையும் நம்பியே நாங்கள் நிறைய மேட்சில் ஜெயித்திருக்கிறோம். சில பெட்டிங் மேட்சிலும் பணம் சம்பாதித்திருக்கிறோம். ஆட்டுக்கால் சூப்பு, முட்டை போண்டா, சைவர்களுக்கு மசாலா தோசா, ஒரு படம் என மிக அதிகமான சம்பாத்தியத்தை எங்களுக்கு கொடுத்திருக்கிறது.

    அவனது முடிவை எதிர்த்து கேட்க வருபவர்களிடம் ஒரு கட்டத்திற்கு மேல் செந்தில் சட்டை அவிழ்த்து விட்டான் என்றால் அவ்வளவுதான், எதிர்த்த டீம் நேச நாடுகளுக்கு தூது அனுப்பி தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டி வரும். அதற்கு மேலும் அதிகமாக பேசுபவர்களை நோக்கி கத்தியபடியே முதலில் ரன்னர் ஸ்டெம்பை பிடுங்குபவன் அவனாகத்தானிருக்கும். அவன் அழிச்சாட்டியத்திற்கு மெல்ல மெல்ல எதிர்ப்பு கிளம்பியது. அவனது அழுகுணி அம்பயரிங்கிற்கு எதிராக மெல்ல புகை கிளம்பியது. நிறைய புகார்கள் வந்தன.

    மற்றவர்களை விட எங்கள் டீமே அவனை கண்டு பயப்பட ஆரம்பித்தது. அவனுக்கு எதிராக சில சமயம் நியாயம் சொல்லி எங்கள் அணியிலேயே நிறைய பேர் மூக்குடைப்பட்டார்கள். விரிவாக சொன்னால், இரண்டு பேருக்கு மூக்கும், ஒருவனுக்கு முதுகில் கீறலும், கபீருக்கு நகமும் பெயர்ந்தது, கொஞ்ச பேருக்கு பரம்பரை திட்டும் விழுந்தது.

    யாராயிருந்தாலும் தன்னைப் பற்றி பேசியவர்களை செந்தில் மைதானத்திற்குள்ளாகவோ, வெளியிலோ – நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்கிக் கொண்டேயிருந்தான்.

    இலட்சுமணன் மைதானத்தில் விளையாடும் போதும் முதல் ஸ்லிப்பிங்கில் நின்றபடி செந்தில் சொன்னது.  ’வெங்காயம் வாடையடிக்குதேடே.. வெங்காய சோப்பு போட்டு குளிப்பாங்களாடா..  வெங்காய நாற வாயோட குத்தம் வேற சொல்லறாங்கப்பா..’ –  இலட்சுமணன் அப்பா வெங்காய தரகு மண்டி வச்சிருந்தார். மறைமுகம்.

    ’என்னடே.. நீ பேர்ல மட்டும் குஞ்சா மணி இல்லடே.. பேருக்கு ஏத்த மாதிரி டாண்டான்னு வத்தி வைக்கேல்ல.. ஊரெல்லாம் போயி செந்தில் கள்ளன்னு மணியடிச்சிட்டு வந்திருக்கியேடே.. சரியான குஞசா மணிதாண்டே.. இன்னும் நிறைய ஆட்டுடே..’ – நேர்முகம். செந்திலுக்கு எதிராக எல்லா அணியிடமும் ஆதரவு திரட்டிக் கொண்டிருந்த குஞ்சா மணி டென்சானாகி அந்த மேட்சில் பதினாலு வொயிடு பால்கள் போட்டான்.

    ‘அறுத்த பயல்கிட்ட என்னடே பேச்சு’ என்று அழூகுணி அம்பயரிங்கின் போது வார்த்தை சொல்லிவிட கிட்டதட்ட மேலைத்தெரு முழுவதும் குவிந்து செந்திலை கும்மத் தயாராகின. மேலைத்தெரு பெரும்பாலும் இஸ்லாமிய நண்பர்கள். எப்படியோ எதோ சொல்லி ச்மாதானமாகி வெளிவந்தாலும் செந்தில் மன்னிப்பு கேட்கவேயில்லை. ’அறுத்த பயன்னு சொன்ன என்னடே தப்பு’ன்னு சண்டையின்போதே ஒரு இருபது தடவை சொல்லிவிட்டான்.

    நிறைய முறை சொல்லிவிட்ட்தாலோ என்னவோ ஒரு கட்ட்த்திற்கு மேல், அவர்களது காதிற்கு அது பழகிப் போய்விட்ட்து. வார்த்தை அதன் அர்த்தம் அறுந்து போய் உருகிப் போயிற்று. ரொம்ப நாளைக்கு அது ’அறுத்த பயக’ டீமாகத்தானிருந்த்து.

    இவ்வாறான நிறைய திருவிளையாடல்களுக்கு பிறகு, எங்களது அணியோடு எந்த அணியும், செந்தில் நடுவராயிருந்தால் விளையாடமாட்டோம் என்று சொல்லுமளவிற்கு வந்தது. எப்படியோ செந்திலை சமாதானம் செய்து அம்பயரிங்கிலிருந்து வெளியேற்றுவதற்குள் நாக்கு வெளியே வந்துவிட்ட்து.

    சதா கொந்தளிப்பும், துடிப்பும் அதனடியில் ஓடும் ஒரு பதைபதைப்புமாய் அவன் உலவிக்கொண்டிருந்தது ஏதோ ஒரு மெகா கூண்டுக்குள் சுடப்பட்ட காயத்தோடு திரியும் கழுகு போலிருந்தது.

    *

    அப்படிப்பட்ட செந்திலின் காலியிடத்தை அச்சு பூர்த்தி செய்ததை இயற்கையின் வரப்பிரசாதமாகத்தான் எங்களின் கிரிக்கெட் புலம் நோக்கியது. மைக்கேல் சார் கொடுத்த வெங்கட்ராகவன் தொப்பியா, சரியாக வராத பேட்டிங்கா, போட்டியற்ற ஒரு நாற்காலியில் தான் பிணைந்ததால் வந்த அதிசயமா.. எதுவோ ஓன்று அவனை ஒரு சுயம்புவான அம்பயராய் பிரகாசிக்க செய்தது.

    அம்பயர் என்பது அற வெளிப்பாடு. எப்போதும் நம்மை பார்க்க்கும் நீதி தேவதை போல. கண்ணைக் கட்டிக்கொண்டு தராசு சுமக்கும் தேவதைக்கும் அம்பயருக்கும் அதிக வித்தியாசமில்லை. ’என்னா சொன்னாலும் பெரிசு ஓழுங்காத்தான் சொல்லும்’ என்று நடந்து போகும் ஒரு பெரியவரின் வெளியை ஊர் எப்படி பார்க்கிறதோ அப்படியானது தான் அம்பயரிங்க். – அச்சு அப்படித்தான் இருந்தான்.

    அச்சுவிடம் ஏதோ எழுத்தில் சொல்ல முடியாத அறம் இருந்தது போல. ஒரு சில நாட்களுக்குப்பின் அவன் தனக்கு இடப்பட்ட கட்டளையாய் அம்பயரிங்கை அரவணைத்துக் கொண்டான். ஏதாவது ஒரு தேவதையோ, யட்சியோ அவன் கனவில் வந்து காதில் சொல்லிவிட்டு போயிருக்கலாம். ‘ நீ அம்பயராக கடவது என்று ‘

    சோதனை, விரிந்த கண், களத்திலிருந்தாலும் விழிப்புடன் இருத்தல், முடிவுகள் தன்னை தொடாத தூரத்தில் செயல், பிரபஞ்ச ஓழுங்கு. அவனே மைதானத்தின், பிரபஞ்சத்தின் மையம். அவனே ஆக்கமும் அழித்தலும்

    அச்சு அவன் ஊரிலிருந்த இறுதி கால கட்டங்களில் ரொம்ப பிசியான அம்பயராகியிருந்தான். எப்போதும் ஹிண்டு பேப்பர் மற்றும் விளையாட்டு பத்திரிக்கைகளின் சில கட்டுரைகளோடு திரிந்தான். சில மேட்சுகளுக்கு முன்னால் இரண்டு டீமையும் கூப்பிட்டு புது ரூல் சொல்லி க்ளாஸ் எடுக்கும் அளவுக்கு அவனது மரியாதை வளர்ந்திருந்தது.

    விடுமுறைக்கு சென்னைக்கு போகும்போதெல்லாம் சேப்பாக்கம் வளாகத்தை பார்த்த கதையை ஓவ்வொரு டீமுக்கும் சொல்லிவருவான். ஸ்கோர் கார்டு புதுமாதிரி என்ன வந்திருக்கிறது என்பதை அவன் தான் எங்களுக்கு எல்லாம் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தான்.

    யானை, கடல், ரயில், கல்யாண மாமாவின் கர்ண மோட்சம் போல, அச்சுவின் கிரிக்கெட் கதையும் அலுப்பூட்டாதது. அடிவயிற்றில் அட்ரீனல் சுரக்க வைப்பது. எப்போதும் மனத்துள்ளல் அளிப்பது.  

    *

    அம்பயர் அச்சு அந்த ஊரிலிருந்து மாற்றாலாகி போனது எங்களூர் கிரிக்கெட் புலத்திற்கு ஈடுகட்ட் முடியாத இழப்பு.

    அச்சு போன சில தினங்களுக்கு – கூட்டணி காலத்தில் இடைப்பட்ட பிரதமர்கள் போல கொஞ்ச நாள் அம்பயரிங் செய்தார் நாராயணன். டீம் பெரிசுகள் அண்ணா என்றும், சிறுசுகள் மாம என்றும் அவரை அழைத்தனர்.  அது அவருக்கு முற்பெயர், அதாவது முன்னே சொல்வது, பிற்பெயர் [ பின்னால் சொல்வது]  ’தொடை சொறிஞ்சி  நானா ‘

    ’தொடை சொறிஞ்சி நாராயணன்’ பதவிக்காலம் அவ்வளவு பெரியதாக இல்லை. காதில் மர்பி ட்ரான்ஸ்பார்மரொடு திரியும் நாராயணன், எங்களூர் திவ்ய செளந்திர்ராச பெருமாள் போல அலங்காரமும்,  திரிநேகஸ்வர சிவன்போல தனிவாழ்க்கையும் வாழ்பவர்.

    தெருக்கடைசி திண்ணையில் உட்கார்ந்து வயதான கிழங்களோடு அவர்கள் கூட்ட்த்தில் இளைய பெருமாளாய் வீட்டிருந்து கிரிக்கெட் கேட்பதே (கிரிக்கெட் இல்லாத காலத்தில் ரேடியோ) நாராயணன் நம்பியின் முழுநேர வேலை.

    அரசு ஓய்வுபெற்ற அம்மா, அப்பா. ஊட்டி வளர்த்த பிள்ளைக்கு எப்போதும் ஓய்வு. உட்கார்ந்து திங்க வீடு, இலையில் நிரம்ப விழுமளவிற்கு ஒத்திகை நிலம்.

    வேலைக்கு போவது எவ்வளவு பெரிய பாபம், அதுவும் ஊர் தாண்டி வேலைக்கு போக்க் கூடாதென்று நிறைய சாஸ்திரங்களே சொல்லியிருக்கும்போது அதை உதாசீனப்படுத்துவது ஊருக்கே நல்லதல்ல என்கிற தத்துவத்தை சிரமேற்கொண்டு தன் கால அட்டவணையை தயார்படுத்திக் கொண்டவர்.

    திருப்பள்ளி எழுச்சி, காலைக்கடன்கள் ( நேரமிருந்தால் மட்டும்), காலைச்சாப்பாடு, திண்ணையடைதல், மதியச்சாப்பாடு, திண்ணையடைதல், அங்கயே பொன்னாமாமி கேண்டினிலிருந்து வரும் பஞ்சி மற்றும் சுக்கு காபி, சாயரட்சை கோவில் தரிசனம் (மாமிகளிடம் பேச்சு, குறை தீர்க்கும் படலம்) வீட்டைதல், இரவுச்சாப்பாடு, ரேடியோ கேட்டபடி தூங்கல், வாரமிரு முறை எண்ணெய் தேய்த்து குளித்தல், அதற்கு முன் துரிய ஸ்கலிதம், மாதமிரு முறை சினிமா, எப்போதும் ரேடியோ, அவ்வப்போது ஹிண்டு பேப்பர், எப்போதும் பேசத்தயாராயிருக்கும் கிரிக்கெட்.

    நேரத்தை கொல்வது எவ்வளவு பெரிய வேலை. அதை மிக இலகுவாய், எளிதாய் செய்து கொண்டிருந்த நாராயணன் நம்பியின் அம்ப்யர் காலம் – எங்களூர் கிரிக்கெட்டின் ஒரு கற்காலமாய் போனது துரதிருஸ்டம்தான்.

    தூக்கிக்கட்டிய கைலியோடு, தொடை சொறிஞ்சுகொண்டே நாராயணன் நம்பி செய்யும் அம்பயரிங் ஏன் பிரபலமாகவில்லை என்பது ஆராய்ச்சிக்குரிய விடயம். அவரால் ஒரு முழு மேட்சுக்கு நிற்க முடியாது. அவர் திடீரென்று கிளம்பி விட்டால் இன்னொரு அம்பயர் அமையும் வரை மேட்சு நிற்க வேண்டும். அவரால் பேசாமலும் நிற்க முடியாது.

    ரேடியோ கேட்டு கமெண்ட்ரி சொல்வது போல அவரே பேசிக்கொண்டிருப்பார்.

    அவர் அம்பயரிங் செய்த்தை விட வர்ணனையாளராகவே வாழ்ந்தார். ரேடியோ போல ஏதோ குரல் அவருக்கு கேட்டுக்கொண்டேயிருக்க வேண்டும். இல்லை அவர் பேசிக்கொண்டேயிருக்க வேண்டும். மேட்சு முழுக்க குத்தல் பேச்சு, கமெண்ட்ரி என்று பேசிக்கொண்டேயிருப்பார் நானா.

    ’ஏ சரவணா இந்த ஸ்பீடு போடறதுக்கு ஏண்டா இவ்வளவு தூரம் ஓடி வர்ற.. என் பின்னாடி நின்னே போடேண்டா.. இன்னிக்கு ஆத்தில பொங்கலா.. தூங்கி வழியறயேடா.. ஒரு ஜமக்காளம் போடவா.. ‘

    ‘ ஏலே ரமணி மட்டை போடலாம்.. கட்டை போடலாம்.. டீமுக்கு மொட்டை போடதலா..’

    ‘ கிரிக்கெட் ஆடச் சொன்னா டேன்ஸ் ஆடறயேடா..’ 

    அழகான ஓவல் வடிவத்தில் குவிந்து நல்ல கட்டாந்தரையும், சிலயிடங்களில் உட்கார்ந்து மக்கள் பார்க்கும் வசதியும் கொண்ட ரயில்வே மைதானத்தை லாட்ர்ஸ் மைதானம் என்பார். பச்சை பசேலென தென்னை மரங்களோடு கூடி எப்போதும் காற்று வீசிக் கொண்டிருக்கும் எம்ஸ்பி திடலை சிட்னி மைதானம் என்பார். தொலைக்காட்சிகளில் இப்போதெல்லாம் அதைப் பார்க்கும்போதே நாராயணன் நம்பியின் பெயர் பொருத்தம் மெய்சிலிரிக்க வைக்கிறது.

    சின்ன பசங்களை கண்டால் அவர் பேசும் மொழியே வித்தியாசமடைந்து விடும். பச்சை, பச்சையாய் பேசுவது. ரன்னருக்கு நிற்கிற பையன்களின் அக்கா, தங்கை, அம்மாக்களின் குசலம் விசாரிப்பது, வெள்ளையாய் கொழுக் மொழுக்கென்று நிற்கிற எல்லா பையன்களையும், அளவுக்கதிகமாய் அரவணைத்து ஊக்குவிப்பது போன்ற செயல்களால் ரன்னர்கள் அம்பயரை தாண்டி பாதுகாப்பான தூரத்திலே நிற்க வேண்டியிருந்த்து.

    எல்லாவற்றிற்கும் உச்சமாய் வில்லியம் விளையாட்டாய் கேட்ட கேள்வி வினையாய் முடிந்தது.

    “ஏந் அண்ணாத்த, இப்படி சாரம் போட்டு அவஸ்தைப்படறதுக்கு ஒரு பேண்டு மாட்டலாம்ல.. “

    “ ஆமாண்டே.. பேண்டுக்கு பதிலா ஒரு ஃபாதர் (பாதிரியார்) அங்கி வாங்கி கொடுத்திடுடே.. வாங்கி மாட்டிகிட்டா ஊரு உலகத்துக்கு தெரியுமா, அங்கிகுள்ள கைவிட்டு நோண்டிக்கலாம் பாரு.. இப்படி லோகமே பாக்கற மாதிரி தொடை தடவ வேண்டாம்ல.. “

    ஏற்கனவே தோற்றுப் போகும் நிலையிலிருந்த மேட்டுப்பட்டி அன்பர்கள், இதை சாக்காய் வைத்து துள்ளிக் குதித்து கெட்ட வார்த்தைகள் சொல்லி நானாவின் பரம்பரையையே நாறடித்துவிட்டார்கள். நானாவின் தகப்பனார் விடும் தில தர்ப்பணத்தில் மூன்று தலைமுறைகளும் மூக்கை பிடித்திருக்கும்.

    ”ஏல. நானா.. தா??. “ என்று ஆரம்பிக்கும் அந்த ஸகஸ்ரநாம அர்ச்சனையோடு தொடை சொறிஞ்சு நானாவின் உன்னதமான அம்பயரிங் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

    *

    எல்லோராலும் நிராகரிக்கப்பட்ட செந்தில், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அச்சு, துரத்தப்பட்ட நானாவிற்கு பின்பு ரமணிக்கு அந்த மூட்கீரிடம் வந்த்து. ஸ்பின்னிற்கு பதிலாக வெயிடாகவும், இரண்டு ரன்களை கப்பையின் வழியே நாலாகவும் மாற்றிக்கொண்டிருந்த ரமணிக்கு அந்த பொறுப்பை கொடுத்து, ஊக்கம் கொடுத்து அவன் பின்னால் செயல்பட்டான் செந்தில்.

    கழுகின் முகமாய் கோழி களத்தில்.

    ரமணிக்கு செந்தில் நிறைய டிப்ஸீகளை சொல்லிக் கொடுத்தான். அம்பயரின் முக்கியமான வேலை –  நல்ல பாலை நோபாலாக்குவது. செந்தில் ரமணிக்கு அதில் குரு தீட்சை அளித்தான்.

    ரயில்வே டீமில் குமார், ரமணன் பந்துகள் அதி பயங்கரமாய் சுழலும். அதை இறங்கி ஆடாவிட்டால் ரொம்ப ஆபத்து. இறங்கி ஆடினாலும் ஸ்டெம்பிங்கோ, எல்பிக்கோ கண்டிப்பான வாய்ப்புகள் உண்டு. மிக கவனமாய் ஆன் – டிரைவ் செய்ய வேண்டிய பந்துகள் அவை. அவன் பந்தின் வேகத்தையும், உயரத்தையும் மாற்றி மாற்றி போடுவான். பில்டர்களையும் லாவாகமாய் நிற்க வைத்து பேட்ஸ்மேன்களை பயமுறுத்தி விடுவான். புதுசாய் வந்த பேட்ஸ்மேன் ஒரு சில பந்துகளை தாக்கு பிடித்தபின்பு தான் ஓரளவு நிம்மதி பெருமூச்சு விடமுடியும்.

    மேலத்தெரு மஜீத்தின் பந்துகள் வெளியே போவது மாதிரி தலை காட்டிவிட்டு, டுபுக்கென பின் காலால் பாயும் நாய் போல ஸ்டெம்பை நோக்கி திரும்பும். கடைசி நிமிட்த்தில் வேகமாய் திரும்பும் பந்துகளை பதட்ட்த்தோடு தொடும் பேட்ஸ்மேனின் ஆயுட்காலம் அங்கே நிற்கிற அப்துலால் முடித்து வைக்கப்படும். விழுந்து, விழுந்து எப்படியாவது கேட்ச் பிடித்து விடுகிற அவனை திட்டுக்கொண்டே வரும் பேட்ஸ்மேன்கள் சொல்வது .. “ சரியான ரப்பர் தா..டே.. அம்மை இவனை குரங்குக்கு பெத்தாளொ.. “

    மேட்டுப்பட்டி கிற்ஸ்டோபரின் புல்டாஸ் பந்தை,  காற்றிலே சுழற்றி வீசப்படும் பந்தை, விக்கெட் கீப்பர் கைக்கு போகும் என்று நினைத்து பேட்ஸ்மேன் அதற்கு ஸ்டைலாய் வழிவிடும் போது, அது ஸ்டெம்பின் பைல்ஸை  கழற்றும். அந்த ஒரு நல்ல ப்ந்துக்காக அவன் நிறைய வொயிட் பால்கள் போடுவான். எந்த பந்து குச்சியை கழற்றும் என தெரியாது.

    இப்படியான நல்ல, அபாயமான பந்தின் தருணங்களில் ’நோ-பால் என்று கத்தியபடி ஒரு தட்த்தை காட்ட வேண்டும். அந்த தட்த்தை அவன் கேட்கும் முன்னரே யாருக்கும் தெரியாமலோ அல்லது அவன் கேட்கும் போது போட்டுக்காட்டியோ உருவாக்கிவிட வேண்டும். சொன்னதை எதாவது சொல்லி சாதித்துவிட வேண்டும். இடம், பொருள், ஏவல் முக்கியம். அந்த ’பொய்த்தடம்’ பற்றி கேள்விகள் சூழ எதிரிகள் வந்தால் உள்ளே குதிப்பான் செந்தில், சூர சம்காரத்திற்காக.

    ரமணியின் பொய்த்தடம் அந்த டிசம்பர் 7ம் தேதி மேட்சில் கழன்று விழுந்தது. அணிக்கு வெற்றிதான். அழிச்சாட்டியம் பண்ணி சாதித்த்திற்கு அணி நண்பர்கள் எல்லோரும் பாராட்ட்த்தான் செய்தார்கள். மதிப்பு கூட்த்தான் செய்த்து.

    சடக்கென்று ஏதோ ஒரு பூதம் தன் மீது ஏறி உட்கார்ந்து அழுத்தியதாய் மனக்கிலேசம்.

    எல்லோரும் தன்னை கையும், களவுமாய் பிடித்த்தால் வந்த அவமானமா. இது எல்லா அணிகளிலும் தெரிந்தே நடக்கிற உளத்தல்தான் எனினும், தன்னை ஏன் அதிகம் பாதித்த்து என்பதை பார்க்க, அதில் தனக்கு முன்பிருந்தே அந்த செயலில் அக ஓட்டுதல் இல்லை என்பது தெரிந்தது.

    ’நாம இல்லைன்னா இன்னொருத்தன் இருந்து இந்த நோபாலை கொடுத்திருப்பான், இதெல்லாம் சகஜம் ‘ என்று எத்தனையோ சாந்தி யஞ்ஞங்கள் செய்தாலும்  – ஓயாத மன அலையின் பேரிரைச்சல்.

    ‘ப்ச. செய்திருக்க வேண்டாம் தானே. வேறு யாரேனும் செய்யட்டுமே உனக்கென்ன.. வெற்றியை விட உனக்கு உன் அகம் முக்கியமல்லவா.. ’  அதே அலைவரிசையில் மனக்குரல் சலிக்காமல் அர்ச்சனை செய்து கொண்டிருந்தது.

    பொய்த்தடம் விழுந்த இட்த்தில் ஒரு பெரிய ஆலமரத்தின் குழி போல தனக்குள் அமைதி ஏற்பட்டிருந்தது. புயலின் மையத்தின் அமைதி போல, பொய்யின் மையத்தில் சுழலில் சுருண்டுவிடுவதுண்டு. ரமணியால் அந்த நோபாலுக்கு பிறகு எங்குமே பொய் சொல்ல முடியவில்லை.

    *

    சீனி அண்ணாவிற்கு நிறைய முடி கொட்டிருந்தது. எந்த உணர்ச்சியையும் மிகைப்படுத்தாத அண்ணா, என்னை சந்தித்ததில் ரொம்பவே மகிழ்ச்சியாகவேயிருந்தான். சொந்த ஊரிலே வாழ்க்கை அமைத்துக் கொண்ட பாக்கியவான்களில் அவனும் ஓருவன்.

    அதுவும் ரயில்வே கிரிக்கெட் மைதானத்திலே. ஆமாம். இப்போது அந்த மைதானத்தின் பெரும்பகுதியில் கான்கீரீட் கட்டிடங்கள் எழுந்து நிற்கின்றன. மெட்ரோ போல் இல்லாமல் வெறும் இரண்டு அடுக்கு கட்டிடங்களாகவே நின்றது கொஞ்சம் ஆசுவாசம். மைதானத்திற்கு பக்கத்திலிருந்த சுடுகாடும் இப்போது ரொம்பவே தள்ளிப்போயிருந்தது. மனித வாழ்க்கை பெருக்கும்போது பிணங்கள் எரிக்கும் நிலங்களின் மதிப்பும் கூட்த்தானே செய்யும்.

    அண்ணாவிற்கு ஏதோ அரசாங்க உத்தியோகம். ஒரு டூவீலர். சூ தேவையில்லாது  செருப்பு மட்டுமே கொண்டு நடத்தி முடித்துவிடுகிற ஒரு சிறு நகர வாழ்க்கை. ஆச்சிக்கு நிறையவே கூன் விழுந்திருந்தது.

    “ என்னது.. ரமாக்குட்டி பிள்ளையா.. பாத்து பல நாளாச்சுதேப்பா.. அம்மை நல்லாயிருக்காளா..“ ஆச்சி கேட்டுக்கொண்டே போனாள். நான் சொல்கிற பதில்கள் எதுவும் தேவையற்ற உலகத்தில் அவளிருந்தாள். அண்ணா அவளுக்கு மிசின் எடுத்து கொடுத்து காதில் வைத்துக் கொள்ள சைகையால் சொன்னான்.

    மறுபடியும் கேட்ட கேள்விகளையே கேட்டு பதில் வாங்கிக்கொண்டாள்.

    “ கல்யாணத்துக்கு கூட பத்திரிக்கை அனுப்பாம பண்ணிட்டேகளேப்பா.. “ குறை பட்டுக்கொண்டாள்.

    ” ஆச்சி.. சொல்ற நிலமையிலே கல்யாணமாகல பாத்துக்க.. வடக்கு பொண்ணு.. அம்மைக்கு முழுசா சம்மதிமில்லைல்லா.. சுருக்கமா.. பண்ணவேண்டி.. அண்ணமாருங்க செஞ்சு வைச்சது.. “

    ”என்னயிருந்தா.. என்னப்பா.. மனுசாளுக்குத்தானப்பா வாக்கபடுதோம்.. சீக்கிரம் குழந்தை ஓண்ண பெத்துக் கொடுப்பா.. உங்கம்மை பாவம்பா.. அதுக்கு பீ, மூத்திரமள்ள முத ஆளா நிப்பாப்பா.. கூறுகெட்ட குப்பச்சி.. வாய்தான் அதுக்கு பெரிசு.. குழந்தையை மடில எறிஞ்சா  சிரிச்சிட்டேல்ல நாங்க அழுவோம்.. “

    அதை சொல்லியபடியே ஆச்சி தனக்குள்ளே அழ் ஆரம்பித்தாள். சத்தம் வராத அழுகை. தாரை தாரையாய் கண்ணீர் வர ஆரம்பித்தது. சீனி அண்ணாவிற்கு ரொம்ப சங்கடமாயிருந்திருக்க வேண்டும்.

    “ யே.. அம்மா.. ரொம்ப நாள் கழிச்சு வந்தவண்ட்டயும் ஒப்பாரி ஆரம்பிசிட்டயா.. “ அவன் இயல்பை மீறிய சத்தம். கத்தல். பதட்டம். இயலாமை.. இருவருக்கும் ரொம்ப நாள் தொடர்ந்து கொண்டிருக்கிற ஆதங்கத்தில், உரையாடலின் தொடர்ச்சியான குரல்.

    சண்டை  யட்சி வீட்டிக்குள்ளே மூலையில் உட்கார்ந்திருப்பது போலயிருந்தது.

    ஆச்சியிடம் சொல்லிவிட்டு வெளியே வந்த போது, அண்ணா மனைவியின் குரல் மேல்மாடியிலிருந்து கேட்டுக்கொண்டிருந்தது. அண்ணா மனைவி மல்லிகா அக்கா டீச்சர். அரசாங்க பள்ளியில் டீச்சர். பெருத்த சரீரம். டியுசன் வகுப்பில் மட்டும் பெருத்த சாரீரம். கண்டிப்பான டீச்சர். இருபது வருட தாம்பத்தியம். மழலை சொல் கேளாத இல்லம். ஆச்சியின் கண்ணீராய்.

    “அண்ணே, அக்காகிட்ட சொல்லியிருங்க.. நான் இன்னிக்கு ராவே கிளம்பறேன்.. சென்னைல செந்தில, அச்சுவா பாத்துட்டு போலாம்னு ஒரு ஐடியா.. இருக்கு.. “

    அண்ணா பேசாமல் கூடவே நடந்து வந்தான். எல்லாயிடமும் கட்டிடங்களான அந்த பகுதியின் நடுவிலும் சின்னதாய் ஒரு கிரவுண்டு இருந்தது. சிறுவர்கள் சைக்கிள் ஓட்டிக்கொண்டு, சின்னதான கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தனர்.

    அண்ணா அந்த மைதானத்தின் நடுவில் நின்று மறுபடியும் சுத்தி பார்த்தான். அவன் தன்னை பின் நோக்கி சுழற்றிக் கொள்கிறானா, காலச்சக்கிரத்தில். அந்த இடம் பழைய மைதானத்தின் எந்த இடமாக இருந்திருக்கும் என்று என்னால் கணிக்க முடியவில்லை. அண்ணாவிற்கு அது தெரிந்திருக்கலாம்.

    ரமணியை பார்த்து சிரித்தான். ரமணியும் அவனைப் பார்த்து சிரித்தான். அந்தக் கேள்வி அவனுக்குள்ளே குதித்துக் கொண்டெயிருந்தது. கேட்கலாமா ? கூடாதா ? அவனை அறியாமலே கேள்வி ஒரு இன் – சுவிங்கர் பெளன்சர் போல எழும்பி வந்தது .

    “ ஏண்ணே, என்னன்னே பிரச்சனை ? “

    அண்ணாவிற்கு புரிந்தது. பதில் சொல்ல விருப்பமின்றி தன்னை காலச்சக்கரத்திற்குள் புகுத்திக் கொண்டான் போல. நான் கேட்டிருக்க கூடாதோ ?

    ஒரு சில தப்படிகள் மெளனமாக நகர்ந்தபின், தலையை உயர்த்தி அண்ணா சொன்னான்..

    “  நோ-பால் கொடுக்கறதுக்கு யாருமேயில்லடா.. “

    சொல்லிவிட்டு என் கைகளை இறுக்கி அணைத்து கொண்டார். நான் எதிர்பார்க்காத சிரிப்பை, அவனே இதுவரை சிரிக்காத சிரிப்பை சத்தமிட்டான்.

    கிளவுசில்லாமலே அவன் கை நிறைய வேர்த்திருந்தது.

    புகைப்படத்துக்கு நன்றி:

     http://www.leadersquest.org/cms/wp-content/uploads/Ruralvisit3.jpg#.UG1mHphhwqw

    Share
  • நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

    விசாகை மனோகரன்

    சென்னை வரும் லுப்தாஸா பிளைட் துபாயிலிருந்து புறப்பட்ட 10 நிமிடத்தில் நித்திராதேவியின் மடியில் தவழ ஆரம்பித்து விட்டான் அரவிந்த். ஆனால் நிம்மதியான தூக்கம் வரவில்லை. ஏதேதோ எண்ணங்கள் அவன் மனதிற்குள். அந்த எண்ண ஓட்டத்தை ‘ தாகத்திற்க்கு ஏதாவது வேண்டுமா’ என்று ஒயிலாக வந்த ஏர் ஹோஸ்டஸ் கேட்டு தடுத்துவிட்டாள்.

    இங்கு நான் கட்டாயம் அரவிந்த் பற்றி சொல்ல வேண்டும். நான் எதற்கு உங்கள் நடுவே. அவன் வாயாலேயே கேளுங்க அவன் கதையை.

    என் வயது இருபத்தேழு. பெத்தவங்களுக்கு ஒரே மகன். ஒரு சாதாரன கம்பெனியில் சாதாரண குமாஸ்தா எங்கப்பா. வீட்டைத் தவிர வேறு உலகம் தெரியாத அம்மா. மாதம் 3ம் தேதி சம்பளம். 5ம் தேதி தட்டுப்பாடு ஆரம்பம். கீழ் நடுத்தர வர்க்கம். படிப்பில கெட்டிக்காரன். விளையாட்டுகளிலும் அப்படியே. ஆனா நான் காரணமில்லாத ஒரு தப்பால வாழ்க்கையில அவதிப்பட்டவன். அந்த தப்பு நான் மேல்ஜாதின்னு சொல்லப்படற குலத்தைச் சேர்ந்தவன் என்பது தான். எந்த ஸ்காலர்ஷ்ப்பும் கிடைக்கல. ஆனா படிக்கணும்கிற வெறி மட்டும் இருந்தது. அந்த கஷ்டத்திலேயும் என்னை படிக்க வைச்சாங்க. 10ம் கிளாஸ் தேறினேன். +2வும் முடித்தவுடன் வீட்டின் நிலைமை புரிந்து எனது ஆசைகளை புதைத்து விட்டு படித்தது போதும் எங்காவது வேலைக்கு போகலாம் என்று முடிவு செய்தேன்.

    ஒரு நாள் ‘அம்மா! நான் படிச்சது போதும்மா. ஏதாவது வேலைக்கு போய் சம்பாதிச்சா கொஞ்சம் கஷ்டம் குறையும்’ அப்படின்னேன்.

    ‘டேய் அரவிந்தா! நீ நல்லா படிக்கற பிள்ள. ஏண்டா நிப்பாட்டனும். நல்லா படிச்சு பெரிய வேலைக்கு போடா. என் உயிரகொடுத்தாவது நான் படிக்கவெக்கறேண்டா.’

    ‘சரிம்மா. இனிமே என் லட்சியமே படிப்பு படிப்பு படிப்பு தான்மா.’

    அப்ப ஆரம்பிச்சு ஒவ்வொரு பொருளா அடமானம் வெச்சு அதத் திருப்ப முடியாம வித்து என் படிப்பு தொடர்ந்திச்சு. M.Tech கடைசி வருஷம். Project Work பண்ண எங்க அப்பாவோட பழைய ஸ்கூட்டரையும் வித்தாச்சு. கடைசியா பரிட்சைக்கு பணம் கட்டனும். வெக்கவும் ஒண்ணுமில்ல விக்கவும் ஒண்ணுமில்ல. பணம் கட்ட கடைசி நாள் அம்மா என் கையில பணத்த கொடுத்தாங்க. எனக்கு ஒன்னும் புரியல.

    ‘அம்மா! ஏதும்மா பணம்?’

    பதில் இல்ல.

    ‘அம்மா உன்னத்தான் கேட்டேன் ஏது பணம். சொல்லலேன்னா நான் அத தொடமாட்டேன்’. அப்பத்தான் அம்மா கண்ல நான் எந்த கஷ்டத்திலயும் பாக்காத கண்ணீர பாத்தேன்.

    டேய் போய் பணத்த கட்டிட்டு வாடா அப்பறமா பேசிக்கலாம்ன்னு சொன்ன அம்மாவ உத்துப் பார்த்தேன். ஏதோ வித்தியாசமா புதுசா தெரிஞ்சிச்சு. சட்னு பொறி தட்டிச்சு. புதுசா தெரிஞ்சது அம்மா கழுத்துல மஞ்ச கிழங்கு தாலிக்கு பதிலா. கட்டிபிடிச்சிட்டு அழுதேன்.

    அம்மா சொன்ன ஒரே வார்த்தை ‘சீக்கிரம் போய் பணத்த கட்டு’

    எனக்கு வேற வழி தெரியல. போய் கட்டிட்டு வந்து அசுரத்தனமா படிச்சு ஒரு அமேரிக்க சாப்ட்வேர் கன்பெனில வேலைக்கு சேர்ந்து இரண்டு வருஷம் கழிச்சு இப்ப வரேன் பெத்தவங்கள பாக்க. இதோ இன்னும் ஒருமணி நேரத்தில சிங்காரச் சென்னை. அங்கேந்து ரெண்டுமணி நேரப் பயணம்.

    சொன்னபடி 3மணி நேரத்தில் வீட்டில் இருந்தேன். அப்பா அம்மா ரெண்டு பேர் கண்லேயும் கண்ணீர். ஆனா இது ஆனந்தக் கண்ணீர். கட்டிபிடிச்சு கால்ல விழுந்து வணங்கியபின். ரெண்டு பேரையும் உட்காரவெச்சு அவங்க காலடில நான் வாங்கி வந்திருந்த ஒரு பெட்டிய வெச்சுட்டு ‘அம்மாஇ இதுல நீ எனக்காக கடைசியா கழட்டிக் கொடுத்தியே தாலி அதுவும் மிச்சம் நகையும் இருக்கும்மா. மொதல்ல அப்பாவ அந்த தாலிய கட்டச் சொல்லும்மா’

    அரவிந்த் நீ நல்லா இருந்தா போதும்பா. தங்கத் தாலி கட்டிக்கிட்டாத்தான் பொண்டாட்டியா? தங்கத்தவிட மஞ்சளுக்கு மகிமை ஜாஸ்திப்பா.

    அம்மா சும்மா சினிமா டைலாக் பேசாதம்மா. கட்டிக்கம்மா

    சரிடா நாளைக்கு வெள்ளிக்கிழமை நீயும் நல்லபடியா திரும்பி வந்திருக்கே. கோயிலுக்கு போய் சாமி முன்னாடி கட்டிக்கலாம்.

    ராத்திரி சூப்பர் விருந்து. சாப்டுட்டு 12மணி வரைக்கும் பேசிக்கிடிருந்துட்டு படுத்துட்டோம் காலேல சீக்கிரம் எழுந்திரிச்சு கோயிலுக்கு போகணும்னு சொல்லிட்டு.

    சூரியன் முகத்தில பட்டு எழுந்திரிச்சு உக்காந்தேன். அப்பத்தான் ஞாபகம் வந்துச்சு கோயிலுக்கு போகணுமேன்னு. அம்மா ஏன் எழுப்பல? இப்படியா தூங்க விடுவாங்கன்னு சொல்லிக்கிட்டே போய் கை கால் கழுவிட்டு உள்ள போய் அம்மான்னு கூப்பிட்டா பதில் இல்ல. எங்க போனாங்க? ஒரு வேள பிள்ள அசதியா தூங்குதுன்னு எழுப்பாம கோயிலுக்கு போய்ட்டாங்களா? நினச்சிக்கிட்டே அவங்க ரூம தாண்டும்போது அம்மா படுத்திருந்தது தெரிஞ்சிச்சு. அம்மா இந்நேரத்துல படுத்திருக்காங்கன்னா ஏதாதவது உடம்பு சரியில்லயான்னு யோசிச்சிக்கிட்டே கதவ தெறந்தேன்.

    அங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் படுத்திருக்க, நடுவில நான் வாங்கி வந்திருந்த நகைங்க கிடக்க, அந்த தாலிய மட்டும் கையில பிடிச்சிட்டு அம்மாவும் அம்மாவ பிடிச்சிட்டு அப்பாவும் அவங்க கடமை முடிஞ்சிருச்சின்னு நிம்மதியா நிரந்தரமா துங்கிட்டிருந்தாங்க.

    அந்த மஞ்சகிழங்கு அம்மா கழுத்தில தங்கத்தவிட அதிகமா ஜொலிக்குது.

    எந்த பிடிப்பும் இல்லாம நான் தனியா நிக்கிறேன். டாக்டர்லாம் வந்தாங்க. ஏதோதோ சொன்னாங்க ரெண்டு பேருக்குமே இதயம் வீக் ரொம்ப ரேர் இப்படி வர்ரது அது இதுன்னு. கொடுத்துவச்சவங்கன்னு சில பேர் சொன்னாங்க. ஆனந்த அதிர்ச்சில போய்ட்டாங்கன்னு சில பேர் சொன்னாங்க.

    ஆனா போனவங்க போனவங்க தானே.

    எந்த பிடிப்பும் இல்லாம நான் தனியா நிக்கிறேன்

    எங்கேயோ பாட்டு கேட்குது

    ‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை’. 

    Share
  • நாக்பூருக்குப் போ!

    முகில் தினகரன்

    பேராசிரியர் சிவஞானம் இறந்து விட்டார்.

    தகவல் கிடைத்த நிமிடத்தில் மனசு கனத்துப் போய் தாங்க முடியாத வேதனையுடன் தனிமை நாடி அமர்ந்தேன் பார்வை சூன்யத்தை பலவந்தமாய் வெறித்தது.

    ‘வாட் எ கிரேட் மேன்?அவரும்…அவரோட அந்த அறிவரையும்தானே இன்றைக்கும் நான் உயிரோட இருக்கக் காரணம்…அவர் மட்டும் அன்றைக்கு என் மனதை மாற்றி..இந்த நாக்பூருக்கு ரயிலேற்றி அனுப்பி இருக்காவிட்டால்…..’

    யோசித்துப் பார்த்ததில் உடல் சிலிர்த்தது.

    இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்….ஒரு மழை இரவில்…மந்திரி சண்முகநாதனின் அடியாட்கள் அவருடைய மகளை காதலிக்கிறேன்…என்கிற ஒரே காரணத்திற்காக என்னை துவம்சம் செய்ய என்னுடைய கல்லூரி ஹாஸ்டலுக்கு வந்த போது நண்பர்களின் உதவியோடு அங்கிருந்து தப்பி பேராசிரியர் சிவஞானத்திடம்தான் தஞ்சம் புகுந்தேன். காரணம்,? அவர்தான் எங்கள் அனைவருக்குமே வழிகாட்டி…அறிவு ஜீவி…இளம் ஜீனியஸ்.

    ‘நீ உயிரோட இருக்கணும்னு விரும்பினா….உடனே உன் காதலைத் தூக்கிப் போடு..கேவலம் அற்ப காதலுக்காக..அற்பத வாழ்க்கையை இழந்திடாதே…உன் கிட்ட படிப்பிருக்கு…திறமை இருக்கு…எதையும் சாதிச்சுக் காட்டற உத்வேகம் இருக்கு…அதை உழைப்புல காட்டு…என்னோட நண்பர் ஒருத்தரோட கம்பெனி நாக்பூர்ல இருக்கு…நான் போன்ல சொல்லிடறேன்…உடனே கிளம்பு…உனக்கான வெளிச்ச எதிர்காலம் அங்க இருக்கு…உயர்வு சிம்மாசனம் காத்திருக்கு….இங்கிருந்து மரணத்தைச் சுவைக்காதே…நாக்பூருக்குப் போ…விடியல் ரெடியா இருக்கு’

    ரயில் நிலையம் வரை எனக்குப் பாதுகாப்பாக வந்து டிக்கெட்டை என் கையில் திணித்து தடம் புரள இருந்த என் வாழ்க்கைக்கு உயர்வு திசை காட்டிய அந்த உத்தம பேராசிரியர் இன்று இறந்து விட்டார்.

    கடந்து போன இருபத்தியிரண்டு ஆண்டுகளில் ஒரு முறையேனும் ஊருக்குத் திரும்பிச் சென்று அவரைப் பார்த்திருக்கணும்….ப்ச்…தப்புப் பண்ணிட்டேன்…’உயரணும்..உயரணும்…’ன்னு உயிரைக் குடுத்து உழைத்து அவர் சொன்னபடி உயர்வுச் சிம்மாசனத்தில் அமர்ந்தாச்சு…ஆனா..ஊர்…உலகம்…உறவு…நட்பு…எல்லாத்தையும் மறந்து ஒரு எந்திர வாழ்க்கை வாழ்ந்து விட்டோமே…என்கிற ஆயாசம் இப்போது தெரிகின்றது. ஓரிரு முறை அவரிடம் கேட்டிருக்கின்றேன்…’ஊருக்கு ஒரு தரம் வந்திட்டுப் போறேனே சார்…பெத்தவங்களை…நண்பர்களை…உங்களையெல்லாம் பார்க்கணும்னு ரொம்ப ஆசையாயிருக்கு..சார்’

    கண்டிப்பான ஒரே பதில்தான் வரும் ‘வேண்டாம் தியாகு…அந்த மந்திரிக்கு இன்னும் உன் மேல் கோபம் தீரலை…எப்ப நீ வருவேன்னு காத்திட்டிருக்கான்…நீ வந்தே…அவ்வளவுதான்…இத்தனை நாள் நீ பட்ட கஷ்டமெல்லாம் வீணாப் போய்டும்….எங்கியோ கண் காணாத ஊர்ல நீ உயிரோட இருக்கறே..அதுவும் நல்லா இருக்கறே…அந்த சந்தோஷம் போதும் எங்களுக்கு அதைக் கெடுத்திடாதே’

    அவர் சொல்படியே நியூஸ் பேப்பரில் விளம்பரம் கொடுத்து ஒரு மும்பை வாழ் தமிழ்ப் பெண்ணை மணந்து இரண்டு மகன்களைப் பெற்று இன்று ஒரு பொறுப்பான தந்தை ஸ்தானத்தில் அமர்ந்திருக்கின்றேன்.

    தீர்மானித்து விட்டேன்.

    அவரது சாவக்குச் செல்வதென்று. விமான டிக்கெட்டுக்கு மின்னலாய் ஏற்பாடு செய்து புயலாய்க் கிளம்பினேன்.

    விமான நிலையத்திலிருந்து டாக்ஸி பிடித்து பேராசிரியரின் முகவரியை டிரைவரிடம் கொடுத்து விரட்டினேன். ‘எப்படியாவது பாடிய எடுக்கறதுக்கு முன்னாடி போயிடணும்’

    நல்லவேளையாக நான் போய்ச் சேர்ந்த போது பேராசிரியரின் உடல் சுடுகாடு நோக்கி பயணிக்காமல் இருந்தது. ‘கடைசியா ஒரு முறை அவர் முகத்தைப் பார்க்க இறைவன் கொடுத்த வாய்ப்பு’.

    முன் ஹாலில் கிடத்தப்பட்டிருந்த பேராசிரியரின் உடலை இறுகிய முகத்துடன் பார்த்து உள்ளுக்குள் குமுறினேன். ‘எப்பேர்ப்பட்ட மனிதர்….எப்படி முடிந்தது இவரால் மட்டும்….எப்போதும்….எல்லோருக்கும்…நல்லது மட்டுமே நினைக்க…நல்லது மட்டுமே செய்ய…,’

    அழும் பெண்கள் கூட்டத்தில் தேடினேன் பேராசிரியரின் மனைவியை. ‘இதில் பேராசிரியரின் மனைவி யார்?…துக்கம் விசாரிக்க வேண்டுமே…எப்படிக் கண்டுபிடிப்பது?’

    பக்கத்தில் நின்று கொண்டிருந்தவரிடம் நாசூக்காய் விசாரித்தேன்.

    ‘மிஸஸ் சிவஞானம் தானே?..அதோ அந்த….கறுப்பு ஸாரி…’

    அவர் காட்டிய திசையில் திரும்பிப் பார்த்த நான் ஒரு விநாடி அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று திரும்பினேன்.

    இது…இது…

    நான் காதலித்த….

    மந்திரி சண்முகநாதனின்…மகள்…அல்லவா?

    இவளா…பேராசிரியரின் மனைவி?

    எனக்கு எதுவுமே புரியவுமில்லை…தோணவுமில்லை. ‘எப்படி?.’

    என் மனம் ரீப்ளே பட்டனை அழுத்தி சோதித்தது.

    ‘சார்….உங்க கல்யாணத்திற்கு நான் வராமல் எப்படி சார்?…வருவேன் சார்…கண்டிப்பா ஊருக்கு வரத்தான் சார் போறேன்’

    ‘ப்ளீஸ்…தியாகு புரிஞ்சுக்கப்பா…உனக்கு எது நல்லது எது கெட்டதுன்னு எனக்குத் தெரியாதா?…உனக்கு நான் இன்விடெஷன் அனுப்பியதே ஒரு இன்ஃபர்மேஷனுக்காகத்தான்…நீ வரணும்’ என்பதற்;காக அல்ல…..நீ வரக்கூடாது…அங்கிருந்தே வாழ்த்து அது போதும்’

    (முற்றும்)

     

    Share
  • வல்லமையாளர்!

     

    திவாகர்

    நம் நாட்டில் ‘சிஸ்டம்’ சரியில்லை என்ற குற்றச்சாட்டு அடிக்கடி வருவதுண்டு. இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை ஏராளமாக உண்டு. இது மிகப் பெரிய குறைதான். பல மேலை நாடுகளில் ‘சிஸ்டம்’ சரிவரப் பயன்படுத்தப்படும்போது உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மட்டும் ஏன் இந்த ‘சிஸ்டம்’ சரிவரப் பயன்படுத்தப்படவில்லை என்றால் பொதுவான காரணமாக அரசியல்வாதிகளையும், ஆட்சி செய்யும் அதிகாரிகளையும் அவர்களை ஆதரித்து வ்ரும் சமூகக் கூட்டத்தையும் உதாரணமாகக் காட்டுவார்கள். நம்மால் இந்த ஒழுங்கான இந்த ‘வரைமுறைக்குள்’ செயல்படமுடியாதா என்ற பயம் அவ்வப்போது நடுநிலைப் பார்வையாளருக்கு எழத்தான் செய்யும்.

    இந்த சிஸ்டம் என்கிற வரைமுறை இந்தியாவில் முழுவதுமாக செயலழிந்து போனால் நாசம்தான் ஏற்படும். ஆனால் ஆண்டவன் கருணையால் இந்த நாசம் நம்மை நாசமாக்கும்போதெல்லால், இந்தியாவின் நீதித் துறை விழிப்போடு செயல்பட்டு நம்மை மறுபடியும் சமநிலைக்குக் கொண்டு வருகின்றது. இதற்கு எத்தனையோ உதாரணங்களைக் காண்பிக்கலாம்

    நீதிபதிகள் என வரும்போது சில கடமைகள் அவர்களைக் கட்டாயப்படுத்துகின்றன என்பதும் விருப்பு வெறுப்பு என்பது ஒவ்வாத விஷயம் என்பதும் நம் நாட்டு நீதிபதிகளுக்கு நன்றாகத் தெரியும். ஓ.. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.. நீதிபதிகள் எல்லோருமே ஒழுங்கானவர்கள்தானா என்ற கேள்விகள் கூட எழ்லாம். ஆனால் எங்கோ ஓரிரண்டு விஷயங்களை நாம் தவிர்த்துப் பார்க்கும்போதெல்லாம் நம் நாட்டு நீதிபதிகள் தங்கள் பணிக்ளைச் செவ்வனே செய்து வருகிறார்கள் என்றே சொல்லவேண்டும்.

    ஒரு கால கட்டத்தில் பல கொள்ளை கொலை செய்தவர்களுக்கு வாதாடி இருக்கும் வக்கீல்கள் எல்லாம் கூட நீதிபதியாக வந்தவுடன் அந்த நியாயஸ்தானத்தில் அமரும்போது தான் நீதிக்கு மட்டுமே தலை வணங்க வேண்டியவர்கள் என்பதை அறிவார்கள். ஒரு சினிமாவில் வசனம் கூட வந்தது. கிரிமினல் குற்றவாளிகளின் வக்கீல் காலப்போக்கில் நீதிபதியாகிறார். அவர் வாதம் செய்துகொண்டிருந்த காலத்தில் ஒரு பொய்யான வழக்கில் கதாநாயகன் ஜோடிக்கப்பட்டு சாட்சியாதாரத்தினால் சிறைக்குச் சென்று வருகிறான். வெளியில் வந்த பிறகு அவன் எதேச்சையாகப் பார்க்கும்போது தன்னை எதிர்த்து அநியாயமாக வாதாடிய வக்கீல் நீதிபதியாக நியமனம் ஆகிறார். இது என்ன நியாயம் என்பது அவன் கேள்வி, ஏனெனில் அந்த இருவருக்குமே தெரியும் நாயகன் அப்பாவி என்பது. அதனால் தைரியமாகக் கேட்கிறான் – அநியாயத்துக்குத் துணை போனவனிடம் நியாயத்துக்கான நீதி கிடைக்குமா?, அதற்கு அந்தப் புதிய நீதிபதி அவனைக் கருண்யோடு பார்த்துச் சொல்வார் – ‘நண்பா.. நான் வக்கீலாக இருக்கும்போது வெறும் கல்லாக இருந்தேன்.. கல் யார் கையில் கிடைத்தாலும் என்னைக் கையாளலாம். அது கல்லான வக்கீலின் தர்ம்ம கூட, ஆனால் இப்போது கல்லால் செதுக்கப்பட்ட சிலையாக, நீதிக்கு நாயகனாக எல்லோரும் மதிக்கும்படியான நிலையில் இருக்கிறேன். என்னிடம் நியாயம் கேட்டு வரும் எல்லோருக்கும் நியாயமான முறையில் நீதி கிடைக்கச் செய்ய வேண்டியதுதான் என்னுடைய தர்மம், என்பார் – (படம் – ரிக்‌ஷாக்காரன், எம்ஜீயார், மேஜர் சுந்தர்ராஜன்)

    உண்மைதான் தெய்வத்துக்கு சமானமாகத்தான் நீதிபதிகளை மக்களும் மதிக்கிறார்கள். இப்படிப்பட்ட நீதிபதியாக ஒருவரைத் தன் ‘முடிவின் மறுபக்கம்’எனும் கதையில் இந்த வாரம் கொண்டு வந்துள்ளார் ஸ்ரீமதி ஸ்ரீஜா வெங்கடேஷ். நீதிபதியானவர் எப்படி தன் வாழ்வை அமைத்துக் கொள்ளவேண்டும் என்றும் விளக்குகிறார். ஒரு ‘சிஸ்டம்’ வேலை செய்யாத இந்த ஜனநாயகத் திருநாட்டில் இப்படியெல்லாம் இந்தக் கால நீதிபதிகள் சிந்தனை செய்கிறார்களே என்ற ஒரு எண்ணமும், அந்தப் பாத்திரத்தைப் படைத்த ஸ்ரீஜா வெங்கடேஷ் அவர்களைப் பாராட்டியும் இந்த வார வல்லமை விருதினை அவர்களுக்கு வல்லமைக் குழு சார்பில் வழங்கப்படுகிறது. ஸ்ரீஜா அவர்களுக்கு நம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா::ஹ்ரிகி அவர்களின் பாஞ்சாலி சபதம் உரை வல்லமையாக வலம் வந்து கொண்டிருக்கும் வேளை இது. நம் பாண்டியன் பாரதத்தில் வரும் கட்டத்தை பாண்டியதேசத்தில் பிறந்த பாரதி நெஞ்சை நிமிர்த்தி உரைக்கும் வரிகள்.

    பொற்கொடி சேதியர் கோமகன் வந்துதொடுத்ததும்
    உற்றதோர் தம்பிக்குத் தென்னவன் மார்பணி தந்ததும் –

    சேதியர்கோன் (சேதிநாட்டு அரசன்) சிசுபாலன் கண்ணனுக்கு உறவு, தென்னவனோ நமக்கு உறவு,,
    தொடர்ந்து பாரதியின் அமுதத் துளிகளை அள்ளி வழங்கி வரும் ஹரிகி அவர்களுக்கு நன்றி!!

    Share
  • ஒய்யாரம்!

     பாகம்பிரியாள்
    வெளியே!
    கொட்டிலில் இருக்கும் மாட்டிற்கு
    இரு கையால் தவிட்டை அள்ளிப்போட்டு     
    அவசரமாய் போகிறான் மகன்.
    அனைத்தையும் மாடு அசை போடுகிறது!

    உள்ளே!
    நோயும், உணவு கட்டுப்பாடும்  இருப்பதால்,
    வாயைக்கட்டும் வழி வகையில்  தேடியதில்
    வந்து விழுந்தது ஓர் சிறு தட்டில்,
    வட்ட வடிவமான நாலு தவிட்டு பிஸ்கட்!

    அதை உண்ணும்  முன் நேரம் குறித்து,  
     எண்ணிக்கைகளையும்  ஓர் குறிப்பாக
    அழகாய் எழுதி வைத்ததுடன்,  கணியை
    அலசியதில் தெரிந்தது அதில் உள்ள சக்தியின் அளவு!

    ஓ!  இதுதான் தவிடு தின்பதில் ஒய்யாரமோ?
     
    படத்திற்கு நன்றி

    http://www.charlestoncitypaper.com/charleston/DishCasualFineDining/Page

    Share
  • நன்றி

        
    செழியன்

    என்
    புன்னகைக்காக   காதலித்தேன்
    என்றாய்  முதலில் .
    என்னிடத்தில் ……
    பொன் நகை
    இல்லை  என்றதும் ….என்னை
    கை விட்டாய் .
    கேட்டேன் ……..
    கஷ்டம்  என்றால்
    பொன் நகையை   அடகு வைக்கலாம்
    புன்னகையை  வைக்கமுடியாது ….என்றாய் .
    நன்றி…
    உன்னை  அடையாளம்  காட்டியதற்கு .
    நாளை ..
    நகையும்  தீர்ந்தால்
    என்னையே
    அடகு  வைக்க
    தயங்க  மாட்டாய்  என்பது
    என்ன  நிச்சயம் .
     
    படத்துக்கு நன்றி

    http://www.vectorjunky.com/praying-hands—realistic…/71175583.html

    Share
  • சங்கரா தொலைக்காட்சி – குலதெய்வங்கள்

     

    குலதெய்வங்கள்

    ஒரு கிராமத்து மக்களின் வாழ்வியலை  அறிய வேண்டுமானால், அக்க்ராமத்தில் உள்ள கோவில்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.  தம் வாழ்க்கை மேம்பாட்டுக்காக, வழிமுறைகள் சீர் குலையாமல் இருப்பதுற்காக அமைந்ததுதான் குல தெய்வம். 

     

    தம் முன்னோரை தெய்வமாக கொண்டு கல் நட்டு  போற்றிய மனிதனின் வழிபாட்டில் வளர்ச்சி ஏற்பட்டு, வீட்டுக்கு என்று, காட்டுக்கு என்று தெய்வ வழிபாடு பெருகி வீட்டுத் தெய்வமாய், உயிர்த தெய்வமாய் வளர்ந்த வரலாற்றை கூறும் நிகழ்ச்சியிது.

     

    நாட்டுபுற  தெயுவங்களின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய நிகழ்ச்சி.  கள ஆய்வு மேற்கொண்டு வழிபடும் ஆண் தெய்வங்கள், பெண் தெய்வங்கள், குல தெய்வங்கள் பற்றிய தொகுப்பு.  நாட்டுப்புறத் தெய்வங்களின் வழிபாட்டு சடங்குகள் குறித்தும், வழிபாட்டு பாடல்களையும், தெய்வங்களின் பெயர்களையும் இணைத்து வழங்கும் நிகழ்ச்சியிது.

     

    படித்தவரை விட பாமரர் இடத்துச் செல்வாக்கு பெற்றது  குல தெய்வங்கள்.  இது அவர்கள் தொழிலோடும், ஒழுக்கத்தோடும் நெருங்கிய தொடர்பு

    கொண்டது.

    குல தெய்வம் பற்றிய புதுமையான நிகழ்ச்சி சங்கரா தொலைகாட்சியில் ஒளிபரப்பவிருக்கிறது .

    இந்நிகழ்ச்சியில் உங்கள் குல தெய்வமும் இடம் பெற வேண்டுமானால் தொடர்பு கொள்ள வேண்டியது – mariappan@srisankaratv.net (o) 95000 52250. 

     

    Thanks & Regards

    S.Selvaragu-PRO (Film & Channel)
    9003024334
    9382209649
    8015765631
    selvaragu.s.pro@gmail.com
    tweet to @selvaragupro

    Share
  • பாரதத்தைத் தொடர்ந்து ராமாயணம் !

     

    மஹாபாரதத்தை அப்படியே மூலத்தில் உள்ளது உள்ளபடி இலட்சக்கணக்கான பாடல்கள், 18 பர்வங்கள் அப்படியே தமிழ் உரைநடையில் முதன்முறையாகத் தமிழில் கொண்டுவந்தவர் ஒரு பெரும் சாதனையாளர். 1906 ஆம் வருஷம் ஆரம்பித்துக் கிட்டத்தட்ட 25 வருஷ உழைப்பில் திரு ம வீ  ராமாநுஜாசாரியார் செய்த சாதனை அந்தத் தமிழாக்கத் தொகுதிகள்.

    இத்தனைக்கும் 1906ல் ஆரம்பிக்கும் போது ஜயம் என்னும் மஹாபாரதம் ஜயமாக நிறைவேறுமா என்று ப்ரசனம் பார்த்தார். ஜோஸியர் எழுதியே தந்துவிட்டார். ‘முடிவு வரை போகாது’ என்று. அந்தக் காகிதத்தை மடித்து ஓர் உறையில் இட்டார் ம வீ  ரா. அதை அவர் மீண்டும் பிரித்துப் படித்துக் காண்பித்தது நண்பர்களுக்கு 25 வருஷம் கடந்து முழு தொகுதிகளும் வெற்றிகரமாக வெளிக்கொணர்ந்த பின்னர்தான்.

    ஊழையும் உப்பக்கம் காண்பர் – என்னும் திருவள்ளுவர் வாக்கு பலித்தது.

    அதற்குப் பிறகு 1952ல் திரு சிவராமகிருஷ்ணய்யர் ம வீ ரா இடமிருந்து உரிமையை வாங்கி ஒரு அச்சு போட்டார். அதற்குப் பின் மறைந்துவிட்ட அந்தத் தமிழாக்கத் தொகுதிகளைத் திரு சிவராமிருஷ்ணய்யரின் பேரனான திரு S வெங்கடரமணன் என்பவர் 9 பகுதிகளாக முழு நூலையும் அப்படியே நம் காலத்தில் கொண்டு வந்து விட்டார். இதைப் பற்றி முன்னரே மின் தமிழில் எழுதியுள்ளேன் ’பாரதம் கொணர்ந்த பகீரதர்’ என்னும் தலைப்பில் — http://groups.google.com/group/mintamil/msg/c77d889a41f68c87

    சாதனை செய்தவர்களின் கை சும்மா இருக்காது என்பார்கள். மஹாபாரதம் 9 வால்யூம்கள் போட்டு அவையே இன்னும் முழுக்க விற்கவில்லை. அதற்கே உதவி தேவைப் படுகிறது. இதில் அடுத்து அடுத்துச் சாதனை புரிகிறார் திரு வெங்கடரமணன்.

    பாரதம் போட்டுவிட்டுச் சும்மா இருக்கலாமா? அதில் வரும் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமத்திற்கு அனைத்து மத ஆசாரியர்களும் உரை எழுதியுள்ளார்களே! அந்த ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமத்தை ஸ்ரீ சங்கர பாஷ்யம், ஸ்ரீ பராசர பட்டர் பாஷ்யம் என்னும் இரு சித்தாந்த உரைகளுடனும் எளிய தமிழில் மொழிபெயர்த்துப் படித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்து, அந்தக் காலத்தில் ம வீ ரா செய்து வைத்த தமிழாக்கம் சங்கர பாஷ்யம், பட்டர் பாஷ்யம் இரண்டு உரைகளுக்கும் தமிழாக்கம் – இவற்றையெல்லாம் அப்படியே ஒரு நூலாக இப்பொழுது கொண்டு வந்துவிட்டார் திரு வெங்கடரமணன். வடமொழி தெரியாது, நாங்க எப்படி அதையெல்லாம் படிப்பது என்ற கவலை இனி இல்லை.

    அதோடு விட்டாரா? ஸ்ரீவால்மீகி ராமாயணம் போடாமல் பாரத நாட்டு இதிகாசங்கள் நிறைவடையுமா? ராமாயணத்தையும் தமிழ் மொழிபெயர்ப்பு கொண்டு வர வேண்டும் என்று தேடி, 1900ல் பண்டிதர் ச. மகா. நடேச சாஸ்திரிகள் மிக எளிய தமிழில் மொழிபெயர்த்ததைக் கண்டு பிடித்து அதையும் ஆறு புத்தகங்களாகக் கொண்டு வந்துவிட்டார். திரு நடேச சாஸ்திரிகளின் நூலைக் கண்டு பிடிக்க அவர் அலைந்ததும், பின்னர் ஏனாத்தூர் பல்கலைக் கழகத்தில் தேடிய போது எதேச்சையாகக் கிடைத்ததும் பெரும் கதையாகும்.

    1900ல் முதலில் தமிழ் மொழிபெயர்ப்பு ஸ்ரீ வால்மீகி ராமாயணத்திற்கு எழுதும் போது திரு நடேச சாஸ்திரியார் எழுதுகிறார் —

    “ஸம்ஸ்க்ருத அப்யாசம் இல்லாதவர்கள் பிறர் உதவியைக் கொண்டே அறிய வேண்டியிருக்கிறது. எல்லாரும் பண்டிதர்களுக்குப் பொருள் கொடுத்துக் கேட்கச் சக்தி உள்ளவர்கள் அல்லர். போதுமான அவகாசமும் கிட்டுவது அரிது. ஆகையால் இதனை மொழிபெயர்த்தால் பலருக்கும் உபயோகமாயிருக்குமென்று கருதிப் பரோபகாரச் சிந்தையுடன் மொழி பெயர்க்கத் தொடங்கினோம். கூட்டியும் குறைத்தும் மொழிபெயர்க்காமல் கறந்த பால் கறந்தவண்ணம் வால்மீகி சொன்னவாறே தமிழில் எழுதியிருக்கின்றோம். “

    இப்பொழுது இந்த நூல் திரு வெங்கடரமணன் தயவினால் நம் கைக்கு வந்துவிட்டது.

    இந்த நூலையும் என் கையில் தந்துவிட்டு, ‘சார்! உங்க உதவி வேண்டும். இதைப் பற்றிப் பிறருக்கும் சொல்லவேண்டும்’ என்கிறார் திரு வெங்கடரமணன். எனக்கு வெட்கமாகப் போய்விட்டது. நான் அல்லவா ஐயா உமக்கு நன்றி சொல்ல வேண்டும்! மிகப்பெரும் உதவி செய்துவிட்டு நீரா கெஞ்சிக் கேட்பது? என்று.

    அவருடைய செல் நம்பர் — திரு S  வெங்கடரமணன், 9894661259.

    10 % தள்ளுபடி தருகிறேன் என்கிறார் முயற்சி எடுத்துத் தொடர்பு கொள்வோருக்கு.

    காந்தி ஜயந்தி அன்று இதை உங்களுக்குத் தெரிவிப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. பண்டித நடேச சாஸ்திரியாரின் எளிய தமிழ் நடை அருமை. மூலத்திற்கு ஒட்டிய மொழிபெயர்ப்பு என்பது மிகப்பெரும் உதவி. எளிமையான நடையில் அதை அவரால் சாதிக்க முடிந்தது வியப்பு.

    அதுவுமில்லாமல் பண்டித நடேச சாஸ்திரியாரே குமார சம்பவம், ரகுவம்சம் ஆகியவற்றையெல்லாம் தமிழில் மொழிபெயர்த்திருப்பதாகத் தெரிகிறது. அந்த நூல்களை வைத்திருப்போர், அல்லது ஆன்லைனில் இருந்தால் அதன் சுட்டிகள் அறிந்தோர் திரு வெங்கடரமணனுக்கு உதவலாம், நூலாக வெளிவரும்.

    பலரும் கேட்டதற்கிணங்க அவருடைய தற்சமயம் முகவரியைத் தருகிறேன். செல்லில் தொடர்பு கொண்டு நிச்சயித்துப் பின் போவது சிறந்தது —

    Sri S Venkataraman
    New No 9, Old No 135,
    Nammalavar Street
    East Tambaram 600059
    cell 9894661259

     

    மிக அரிய நூல்கள், தமிழில் செம்பதிப்புகளாக…

    ஸ்ரீ மஹாபாரதம் :

    மஹாபாரதத்தை அப்படியே மூலத்தில் உள்ளது உள்ளபடி லட்சக்கணக்கான பாடல்கள், 18 பர்வங்கள் அப்படியே தமிழ் உரைநடையில் முதன்முறையாகத் தமிழில் கொண்டு வந்தவர் ஒரு பெரும் சாதனையாளர். 1906 ஆம் வருஷம் ஆரம்பித்துக் கிட்டத்தட்ட  25 வருஷ உழைப்பில் திரு ம வீ  ராமாநுஜாசாரியார் செய்த சாதனை அந்தத் தமிழாக்கத் தொகுதிகள்.

    18 பர்வங்கள் 9 பகுதிகளாக , மொத்தம் 9,000 பக்கங்கள்.

    ஸ்ரீமத்வால்மீகி ராமாயணம் :

    தமிழாக்கம் : பண்டித ஸ்ரீ நடேச சாஸ்த்ரிகள்
    2,250 பக்கம் ரூ 900/-
    ஸுந்தர காண்டம் மட்டும் ரூ90/-

    ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யம் :
    ஆதி சங்கரர், ஸ்ரீ பட்டர் உரைகள்

    தமிழாக்கம் : ம. வீ . ராமாநுஜாசார்யர்
    விலை : ரூ 180/-

    கிடைக்குமிடம் :

    Sri S Venkataramanan
    New No 9, Old No 135,
    Nammalavar Street
    East Tambaram : 600059

    cell +91 9894661259

    Share
  • பேரா. ம. ரா. ப. குருசாமி காலமானார்

     

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    பேரா. ம. ரா. ப. குருசாமி அவர்கள் நேற்று 06.10.2012 கோயம்புத்தூரில் காலமானார் என்ற செய்தியால் உலுங்கினேன்.

    1963இல் கலைக்கதிர் இதழுக்கு அறிவியல் கட்டுரைகளை நான் எழுதிய காலங்களில் பேராசிரியர் ம.ரா.போ.குருசாமி அவர்கள் பதிப்பாசிரியராக இருந்து என்னை ஊக்குவித்தாராயினும் நேரில் காணும் வாய்ப்புப் பெற்றிலேன்.

    கோவைக் கம்பன் கழகம் பதிப்பித்த கம்பராமாயணம் தொகுதியை அச்சிடல் தயாரிக்கும் பணியை என்னிடம் தந்தனர். அப்பணி தொடங்கிய காலத்தில் பேரா. அ. ச. ஞா. அறிமுகம் செய்ய 1987இல் பேராசிரியர் ம.ரா.போ.குருசாமி அவர்களின் அன்புக்கு உரியவனானேன்.
     
    சென்னைக்கு வருவார். பேரா. அ. ச. ஞா. இல்லத்தில் சந்திப்பேன். என்னிடம் வண்டி இருந்த காலங்களில் சென்னைத் தொடர்வண்டி நிலையத்திலிருந்து அழைத்துவரும் பேறும் பெற்றிருக்கிறேன்.  

    1991-1993 ஆண்டுகளில் என் ஆண் மக்கள் கோவையில் கற்ற காலங்களில் அவரின் பாதுகாப்பு அவர்களுக்குக் கிடைத்தது.

    அவரின் தாமு நகர் இல்லத்துக்குப் பலமுறை போயிருக்கிறேன்.

    அந்தணர், அறவோர், செந்தண்மை பூண்டவர், செயல்வீரர் என்ற தகைமைகளைத் தேடுகையில் என் கண்முன் தோன்றுபவர்களுள் பேராசிரியர் ம.ரா.போ.குருசாமி அவர்களும் ஒருவர்.

    தன்மானம் மிக்கவர். புலமைக்கு மதிப்பளித்தவர். எவரையும் செல்வந்தர் என்றோ, அரசியல்வாதி என்றோ, அதிகாரி என்றோ கருதி அளவுக்கு அதிகமாகப் பணிவுகாட்டார். அதில் அவருக்கும் பேரா. அ. ச. ஞா.வுக்கும் ஒற்றுமை அதிகம்.

    என் மீது அளவற்ற பாசம் கொண்டிருந்தார். அவர் சொற்களுக்கு அச்சுப் பதிப்புச் செயல்வடிவம் தரும் ஆற்றல் எனக்குண்டு எனக் கருதியவர்.

    1990களில் நான் அச்சிடத் தயாரித்த முருகன் பாடல் தொகுதி முழுவதையும் 2011இல் என்னிடம் கேட்டார், என்னிடம் இருந்த படிகளைக் கொடுத்தேன். கௌமார மடத்தாரிடம் சேர்த்தார்.

    முருகன் பாடல் தொகுதி முழுவதையும் மீள அச்சிடவேண்டும் என்ற ஆர்வத்தை அருட்செல்வர் நா. மகாலிங்கத்துக்குப் பேரா. ம. ரா. பொ. குருசாமி அவர்கள் ஊட்டியதால் அந்தப் பணி இப்பொழுது முடுக்கிவிடப்பட்டுள்ளது.

    அவரது அண்ணர் திரு. ம. ரா. போ. பாலகணபதி அவர்களைப் பிஜி நாட்டில் 1971இல் சந்தித்தேன். அப்பொழுது அவர் அங்குள்ள விவேகானந்த தமிழ்ப் பள்ளியின் தலைமை ஆசிரியர். ஓய்வுக் காலத்தில் நியுசீலாந்தில் வாழ்ந்தார். ஒருமுறை சென்னை வந்தார். கந்தரனுபூதி ஆங்கில மொழிபெயர்ப்பைப் பதிப்பிக்குமாறு என்னிடம் கேட்டார். பதிப்பித்தேன்.

    2012 ஆனியில் பன்னிரு திருமுறைச் சொல்லடைவு தொடர்பாக அருட்செலவர் நா. மகாலிங்கம் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, பேராசிரியர் ம.ரா.போ.குருசாமி அவர்களின் வழிகாட்டலில் பேராசிரியர் பலருடன், கணிணி வல்லுநர் பலருடன், புலவர் மணியன் அவர்களுடன் மூன்று நாள்கள் கோவையில் தங்கிக் கலந்துரையாடினேன்.

    1963 தொடக்கம் 2012 வரை ஏதோ ஒரு வழியில் தொடர்பாக இருந்தோம். தமிழ் அமைத்த பாலத்தால் இணைந்திருந்தோம்.

    2012 ஆனியில் தாமு நகரில் அவர் இல்லம் சென்றிருந்தபொழுது பழுத்த பழமாக இருந்தார்.
    அவர் நூல்களுக்கு நான் கூறும் கருத்துரைகளால் ஈர்க்கப்பட்டவர்.

    காலனுக்கு ஏனிந்த அவசரம்?
    தமிழ் மொழிக்கு ஏனிந்த அவலம்?
    தமிழறிஞர் குழாமுக்கு ஏனிந்த இழப்பு?
    அறவோர் அணிக்கு ஏனிந்தக் குறைவு?
    அரற்றுவேனாயினேனுக்கு ஏனிந்த அழுகை?

    Share
  • முதன்முதல் பூமியிலிருந்து காணக் கிடைத்த காட்சி : கருந்துளை ஏவு பீடம் (World’s First Glimpse of Black Hole Launchpad)

     

                                                                         சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    கண்ணுக்குத் தெரியாத கருந்துளை
    கருவிக்குத் தெரியுது !
    கதிரலைகள் விளிம்பில்
    குதித்தெழும் போது
    கருவிகள் துருவிக் கண்டுவிடும் !
    அகிலவெளிக் கடலில்
    அசுரத் தீவுகளாய் மறைந்துள்ள
    பூதத் திமிங்கலங்கள் !
    உறங்கும் கருந்துளை உடும்புகள்
    விண்மீன் விழுங்கிகள் !
    பிண்டத்தைக் கைப்பற்றி முடங்கும்
    மரணக் கல்லறைகள் !
    பிரபஞ்சச் சிற்பியின்
    செங்கல் மண்
    சேமிக்கும் இருட் களஞ்சியம் !
    கருந்துளை சுழற்சி, செங்குத்து
    கதிர்வீச்சு எழுச்சி
    சுற்றும் ஆப்பத் தட்டு
    இவற்றின் தொடர் பென்ன ?
    இயற்கை அன்னையின்
    கைத்திறம் காண்பது
    மெய்ப்பா டுணர்வது,
    மர்மங்களை உளவிச் செல்வது
    மானுடர் மகத்துவம் !

    ++++++++++++++++++++

    முதலில் நாங்கள் கற்றுக் கொண்டது : கருந்துளை ஏவு அரங்கம் மிகச் சிறியது !    எழுந்திடும் ஒளிக்கதிர் வீச்சுகள் கருந்துளையின் விளைவுத் தொடுவானுக்கு [Black Hole’s Event Horizon ] மிக்க அருகிலிருந்து  பீறிட்டெழுகின்றன.    அந்த விளிம்பிலிருந்து எந்த அண்ட ஒளியும் தப்பிச் செல்ல முடியாது.   அப்படியே கருந்துளை உறிஞ்சி விழுங்கிவிடும்.   இந்த ஒளிக்கதிர் வீச்சுகள் பேரளவு சக்தி கொண்டவை.   இந்த சக்தி எங்கிருந்து வருகிறது ?   கருந்துளையே ஏராளமான அளவில் ஒளிந்துள்ள சக்திக் களஞ்சியம்.   அடுத்து கருந்துளை சுழற்சி [Black Hole Spin]  நிரம்ப அளவு வட்டச் சக்தி [Rotational Energy] கொண்டது.   மேலும் கருந்துளையைச் சுற்றி உருவாகும் ஆப்பத் தட்டு வடிவத்தில் [Pan Cake] தட்டாக்கும் ஈர்ப்பு  இயக்கத்தால் [Accretion Process] ஒளிக்கதிர் வீச்சசுக்கு பேரளவு சக்தி உண்டாகலாம்.   கருந்துளை சுழற்சி ஒளிக்கதிர் வீச்சு உற்பத்திக்கு ஒரு மூல காரணம் என்பதை நாங்கள் அறிய ஆரம்பித்திருக்கிறோம்.  மெய்யாகக் கருந்துளை ஒளிவீச்சு உண்டாக்கும் ஓர் அதிசய எஞ்சின்  !

    ஆவரி பிராடெரிக் [Avery Broderick, Event Horizon Telescope Team]

    “சமீபத்திய ஹப்பிள் தொலைநோக்கியின் கண்டுபிடிப்புகள் வானியல் விஞ்ஞானிகளுக்கு மாபெரும் பிரபஞ்சச் சவாலாகி விட்டன !  காரணம் அது ஒவ்வொரு காலாக்ஸியின் மையத்திலும் பூதகரமான கருந்துளை ஒன்று இருப்பைத் திறந்து காட்டி விட்டது !”

    ஸ்டீவ் நாடிஸ், (Astronomy Science Editor)

    “புதிய பொறிநுணுக்க முறை “விளைவுத் தொடுவானைத்” (Event Horizon) தெளிவாகக் காட்டுகிறது.  அதுவே கருந்துளை இருப்பை நேரிடைச் சான்றாக நிரூபிக்கிறது.”

    ஸ்டீவ் நாடிஸ், (Astronomy Science Editor)

    “கருந்துளைகள் மெய்யாகக் கருமை நிறம் கொண்டவை அல்ல !  அவை ஒளித்துகள் மினுக்கும் கனல் கதிர்களை (Quantum Glow of Thermal Radiation) வீசுபவை.

    ஸ்டீஃபென் ஹாக்கிங் (1970)

    விண்மீன் முந்திரிக் கொத்தில் (Star Cluster) இடைத்தரக் (Medium Size) கருந்துளை ஒன்று இருக்கு மானால், அது சிறிய கருந்துளையை விழுங்கும் அல்லது கொத்திலிருந்து விரட்டி அடிக்கும்.

    டேனியல் ஸ்டெர்ன் Jet Propulsion Lab (JPL), California

    பிரபஞ்சத்திலே கண்ணில் புலப்படாத கருந்துளைகள் அகிலத்தின் மர்மமான விசித்திரங்கள் !  அந்தக் கருந்துளைகள்தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பொருளாக நிரம்பியுள்ளன !  எளிதாகச் சொன்னால், ஒரு சுயவொளி விண்மீன் எரிசக்தி முழுவதும் தீர்ந்து போய் எஞ்சிய திணிவுப் பெருக்கால் எழும் பேரளவு ஈர்ப்பாற்றலில் அடர்த்தியாகி “ஒற்றை முடத்துவ” (Singularity) நிலை அடைவதுதான் கருந்துளை.  அந்தச் சமயத்தில் கருந்துளையின் அழுத்தம், திணிவு கணக்கற்று முடிவில்லாமல் மிகுந்து விடுகிறது (At the point of Singularity, the Pressure & Density of a Black Hole are Infinite) !

    விண்வெளி விடைக் கைநூல் (The Handy Space Answer Book)

    முதன்முதல் கருந்துளை ஏவு பீடம் காணக் கிடைத்தது

    சமீபத்தில் வெளியான விஞ்ஞான இதழின் [Science Express] வலை முன்பதிப்பில் விளைவுத் தொடுவான் விண்ணோக்கிக் குழு  [Event Horizon Telescope Team] உறுப்பினர் ஆவரி பிராடெரிக் [Avery Broderick] உட்பட எழுதிய ஒரு தகவலில் கருந்துளைகள் வெளியேற்றும் ஒளிமிக்க எழுச்சிகளின் [Bright Jets] மூலாதாரம் பற்றி முதன்முதல் அறிவிக்கப்பட்டுள்ளது.   வெகு தூரத்தில் உள்ள ஒரு கருந்துளையைக் கண்டு அந்தக் குழுவினர் அவ்வித ஒளிவீச்சு ஏவப்படும் தளத்தைத் தீர்மானிக்க முடிந்தது.   இதுவே ஓர் துவக்க நிலை நிரூபண முதற் சான்றாகும் [First Empirical Evidence].   இதன் மூலம் கருந்துளை சுழற்சிக்கும் [Black Hole Spin] கருந்துளை ஒளிவீச்சுக்கும் [Black Hole Jets] உள்ளை இணைப்பு நிரூபிக்கப் படுகிறது.   இதுவரை இந்த முடிவு வெறும் சித்தாந்த முறையில்தான் [Theoretical Grounds] தெரிவிக்கப் பட்டது.

    நமது பால்மய வீதி உட்பட பல காலக்ஸிகளின் மையத்தில் மிகப் பெரும் கருந்துளை ஒன்று ஒளிந்து கொண்டுள்ளது.    அவற்றில் 10% காலக்ஸிகள்  ஒளிவேகத்துக்கு ஒட்டிய வேகத்தில் எலெக்டிரான் போன்ற மின்துகள்கள் நிறைந்த மிக நீண்ட திரட்சி ஒளிக்கதிர் வீச்சுகளை வெளியேற்றுகின்றன.    ஒளிக்கதிர் வீச்சுகளின் நீளம்  பல்லாயிரம் ஒளியாண்டு தூரம் செல்பவை.   காலக்ஸி ஒளிமந்தையைக் காட்டிலும் ஒளிமயமானவை அந்த ஒளிவீச்சுகள்.    ஆயினும் அந்த ஒளிக்கதிர் வீச்சுகளைப் பற்றிய விபரம் எதுவும் இல்லை.    இப்போது அந்தப் பணியைத்தான் இந்த ஆய்வுக் குழு செய்ய முயல்கிறது.   பூமி முழுதும் கண்காணிக்கும் மூன்று ரேடியோ விண்ணோக்கிகளின் தகவலைத் திரட்டி ஒப்பிட்டு, அந்த ஒளிவீச்சின் அடிப்படை அதன் ஏவு பீடம் [Launchpad] என்று முதன்முதல் அறிவித்துள்ளது.   குழு உறுப்பினர்கள் குறிக்கோளாக 50 மில்லியன் ஒளியாண்டு தூரத்துக்கு அப்பால் உள்ள  M87 பூதவடிவ நீள்வட்ட ஒளிமந்தையை  [M87  Supergiant Elliptical Galaxy] எடுத்துக் கொண்டார்கள்.

    “முதலில் நாங்கள் கற்றுக் கொண்டது : கருந்துளை ஏவு அரங்கம் மிகச் சிறியது !    எழுந்திடும் ஒளிக்கதிர் வீச்சுகள் கருந்துளையின் விளைவுத் தொடுவானுக்கு [Black Hole’s Event Horizon ] மிக்க அருகிலிருந்து  பீறிட்டெழுகின்றன.    அந்த விளிம்பிலிருந்து எந்த அண்ட ஒளியும் தப்பிச் செல்ல முடியாது.   அப்படியே கருந்துளை உறிஞ்சி விழுங்கிவிடும்.   இந்த ஒளிக்கதிர் வீச்சுகள் பேரளவு சக்தி கொண்டவை.   இந்த சக்தி எங்கிருந்து வருகிறது ?   கருந்துளையே ஏராளமான அளவில் ஒளிந்துள்ள சக்திக் களஞ்சியம்.   அடுத்து கருந்துளை சுழற்சி [Black Hole Spin]  நிரம்ப அளவு வட்டச் சக்தி [Rotational Energy] கொண்டது.   மேலும் கருந்துளையைச் சுற்றி உருவாகும் ஆப்பத் தட்டு வடிவத்தில் [Pan Cake] தட்டாக்கும் ஈர்ப்பு  இயக்கத்தால் [Accretion Process] ஒளிக்கதிர் வீச்சசுக்கு பேரளவு சக்தி உண்டாகலாம்.   கருந்துளை சுழற்சி ஒளிக்கதிர் வீச்சு உற்பத்திக்கு ஒரு மூல காரணம் என்பதை நாங்கள் அறிய ஆரம்பித்திருக்கிறோம்.  மெய்யாகக் கருந்துளை ஒளிவீச்சு உண்டாக்கும் ஓர் அதிசய எஞ்சின்  !” என்று சொல்கிறார்  ஆவரி பிராடெரிக் [Avery Broderick, Event Horizon Telescope Team].   விளிம்பில் உண்டாகும் ஆப்பத் தட்டு, விளவு தொடுவானைப் போல் 5.5 மடங்கு விட்டமுள்ளது என்பது குழுவினரால் இப்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

    பூதக் கருந்துளைகள் தெரிவிக்கும் புதிய மர்மங்கள் !

    சமீபத்தில் வெளிவந்த “இயற்கை” விஞ்ஞான வெளியீட்டில் பாஸ்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அமெரிக்க ஆய்வாளர்கள், எப்படிக் கருந்துளைகள் ஒளிவேகத்தை ஒட்டிக் கதிர்த் துகள்களை வீசுகின்றன என்பதைக் கணித்து விட்டதாகக் கூறினர்.  அந்தக் கதிர்த் துகள்களின் உந்து எழுச்சி (Jet Streams of Particles) கருந்துளைகளின் விளிம்பில் உள்ள காந்த தளத்திலிருந்து உண்டாகிறது என்றும் கூறினர்.  அதாவது கருந்துளை விளிம்பு அரங்கிற்குள்ளே கதிர்த் துகள்கள் விரைவாக்கம் பெற்று குவிகின்றன என்று விளக்கினர்.

    நமது பால்வீதி மையத்தில் ஒரு கருந்துளை இருப்பதாகக் கருதினாலும் விஞ்ஞான நிபுணர் அருகில் வந்த எந்தப் பிண்டத்தையும் அண்டத்தையும், ஏன் ஒளியைக் கூட விழுங்கி விடும் அந்த விண்வெளிப் பூதங்களைப் பற்றி இன்னும் மிகக் குறைந்த அளவே அறிந்துள்ளார்.  பாஸ்டன் பல்கலைக் கழகப் பேராசிரியர் அலன் மார்ஸ்செர் கருந்துளை இதயத்தைத் துளைத்து அரிய தகவலை அறிந்து விட்டதாக வலுவுறுத்தினார் !  சக்தி வாய்ந்த பத்துத் தொலைநோக்கிகள் மூலம் ஒரு காலாக்ஸியை (Galaxy BL Lacertae) உற்று நோக்கி எங்கிருந்து, எப்படிக் கதிர்த்துகள்கள் உந்தி எழுகின்றன என்று உளவிக் கண்டுபிடித்து விட்டதாக பேராசியர் மார்ஸ்செர் உறுதியாக நம்புகிறார்.  மேலும் கருந்துளையில் உந்தி எழும் கதிர் ஊற்றின் உட்புறப் பகுதியைக் கூடத் தெளிவாகக் கண்டு விட்டதாகக் கூறினார்.

    பிரம்மாண்ட அளவுள்ள கருந்துளை கார்க் மூடிச் சுருளாணிபோல் (Winding Corkscrew) ஒளிப்பிழம்பு வெள்ளத்தை (Plasma Jets) உமிழ்கிறது என்று வானியல் விஞ்ஞானிகள் முதலில் ஐயுற்றுப் பிறகு அந்த உளவு நோக்குகள் மெய்யென உறுதிப்படுத்துவதாகக் கூறினர். அவ்விதம் கதிர் எழுச்சிகளின் உட்பகுதிகளைக் கண்டாலும் கருந்துளைக்குள் என்ன உள்ளது என்பதை இன்னும் விஞ்ஞானிகள் காண முடியவில்லை என்று பி.பி.சி. விஞ்ஞான வல்லுநர் நீல் பௌட்ளர் குறை கூறினார்.  கோட்பாட்டு பௌதிக விஞ்ஞானிகள் (Theoretical Physicists) கூறுவது மெய்யானால், அந்த மர்மமான கருந்துளையின் உட்பகுதியைக் காணவே முடியாது என்றும் பி.பி.சி. நிபுணர் கூறினார்.

    காலாக்ஸியில் சிறு கருந்துளைகள் & பெருங் கருந்துளைகள்

    சிறு கருந்துளைகள், பெருங் கருந்துளைக்கள் இரண்டுக்கு மிடையே இருக்கும் நடுத்தரக் கருந்துளையைக் காலாக்ஸிகளில் காண்பது அபூர்வம் என்று வானியல் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.  கருந்துளைகள் என்பவை எண்ண முடியாத அளவு அடர்த்தியைக் கொண்ட முனைப் பிண்டம் (Incredibly Dense Points of Matter).  அவற்றின் ஈர்ப்பாற்றல் ஒளிப் போக்கை வளைக்கும்.  அருகில் வந்தால் ஒளியையும் கருந்துளை இழுத்து உட்கொள்ளும் ! சிறிய கருந்துளை அருகில் இருந்தால் பெருங் கருந்துளை அதைக் கவ்வி விழுங்கி விடும். பூத விண்மீன்கள் சூப்பர்நோவாவாக வெடிக்கும் போது சிறு நிறையுடைய கருந்துளைகள் தோன்றுகின்றன !  அந்த மிகச் சிறிய கருந்துளை கூட நமது பரிதியைப் போல் 10 மடங்கு நிறையுள்ளது !  பேரளவு நிறையுடைய கருந்துளைகள் பரிதியைப் போல் பல பில்லியன் மடங்கு திணிவு உள்ளவை !  அத்தகைய பூதக் கருந்துளைகள் ஏறக்குறைய எல்லா காலாக்ஸி வயிற்றிலும் இருக்கின்றன !  ஆயினும் 1000-10,000 மடங்கு பரிதி நிறையுள்ள நடுத்தரக் கருந்துளைகள் விண்மீன் கொத்துக்களின் இடையே இருக்கலாம் என்று கோட்பாட்டுப் பௌதிக வாதிகள் கூறுகிறார்.  சென்ற ஆராய்ச்சி வெளியீட்டு ஒன்றில் டாக்டர் ஸெ·ப் (Dr. Zepf) குழுவினர் 50 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் ஓர் அண்டை காலாக்ஸியின் கருந்துளை (Black Hole : RZ-2109) இருப்புக்குச் சான்றுகள் தேடினார்.

    ஈரோப்பியன் விண்வெளி ஆணையகத்தின் நியூட்டன் தொலைநோக்கி (ESA’s XMM-Newton Telescope)

    1999 டிசம்பர் 10 இல் விண்வெளியில் ஏவப்பட்ட நியூட்டன் எக்ஸ்ரே விண்ணோக்கி உளவி பூமியிலிருந்து 4000 – 68000 மைல் உயரத்தில் நீள்வட்டப் பாதையில் சுற்றி வந்து காலாக்ஸிகளில் உள்ள கருந்துளைகளின் கதிர்த்துகள் எழுச்சிகளை உளவியது.  இரண்டு ஆண்டுப் பணிக்குத் திட்டமிட்ட அந்த விண்ணோக்கி இப்போது 2010 ஆண்டுகள் வரைப் பணிபுரிய நீடிக்கப் பட்டது.  அந்த எக்ஸ்ரே விண்ணோக்கி மூலம் தனித்துவ எக்ஸ்ரே முத்திரை கொண்ட ஓரியங்கும் கருந்துளையைக் கண்டுபிடித்தார்கள்.  அதன் ஒளிப்பட்டை மூலம் அறிந்தது அது பரிதியைப் போல் 10 மடங்கு நிறையுடைய ஒரு சிறிய கருந்துளை என்பது.  அத்தகைய சிறிய கருந்துளை கொண்ட ஒரு விண்மீன் கொத்து, நடுத்தரக் கருந்துளை ஒன்றைக் கொண்டிருக்காது என்று கருதப்படுகிறது.  அவ்விதம் ஓர் நடுத்தரக் கருந்துளை இருந்தால் அது சிறிய கருந்துளையை விழுங்கி விடும் அல்லது அங்கிருந்து விரட்டி விடும் என்று டாக்டர் ஸ்டெர்ன் கூறினார் !

    ஜப்பானிய வானியல் விஞ்ஞானிகள் நாசா விஞ்ஞானிகளோடு இணைந்து தமது எக்ஸ்ரே துணைக்கோளையும், ஈசாவின் நியூட்டன் எக்ஸ்ரே விண்ணோக்கியையும் பயன்படுத்தி நமது பால்வீதி காலாக்ஸியின் மையத்திலுள்ள கருந்துளை 300 ஆண்டுகளுக்கு முன்பே வெளிவிட்ட பேராற்றல் கொண்ட கதிர்வீச்சைக் கண்டார்கள் !  அந்த கருந்துளையின் பெயர் ஸாகிட்டேரியஸ் ஏ ஸ்டார் (Sagittarius A-Star) என்பது.  அது ஒரு பூதகரமான பெருங் கருந்துளை !  அதனுடைய நிறை பரிதியைப் போல் 4 மில்லியன் மடங்கு !  ஆனால் அதிலிருந்து வெளியாகும் கதிர்த்துகள் வீச்சுகள் மற்ற காலாக்ஸிக் கருந்துளைகளின் கதிர்வீச்சை விட பல மில்லியன் மடங்கு குறைந்தது !  காரணம் அது ஒரு பெரிய வெடிப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு முதிர்ந்து போய் ஓய்வாக இருக்கிறது !

    பிரபஞ்சத்தில் கண்ணுக்குப் புலப்படாத கருந்துளைகள்

    1916 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதியின் அடிப்படையில் ஜெர்மன் வானியல் விஞ்ஞானி கார்ல் சுவார்ஸ்சைல்டு (Karl Schwarzschild), பிரபஞ்சத்தில் முதன்முதல் கருந்துளைகள் இருப்பதாக ஓரரிய விளக்கவுரையை அறிவித்தார்.  ஆனால் கருந்துளைகளைப் பற்றிய கொள்கை, அவருக்கும் முன்னால் 1780 ஆண்டுகளில் ஜான் மிச்செல், பியர் சைமன் லாப்பிளாஸ் (John Michell & Pierre Simon Laplace) ஆகியோர் இருவரும் அசுர ஈர்ப்பாற்றல் கொண்ட “கரும் விண்மீன்கள்” (Dark Stars) இருப்பதை எடுத்துரைத்தார்கள்.  அவற்றின் கவர்ச்சிப் பேராற்றலிலிருந்து ஒளி கூடத் தப்பிச் செல்ல முடியாது என்றும் கண்டறிந்தார்கள் !  ஆயினும் கண்ணுக்குப் புலப்படாத கருந்துளைகள் மெய்யாக உள்ளன என்பதை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ள நூற்றி முப்பது ஆண்டுகள் கடந்தன !

     

    1970-1980 ஆண்டுகளில் பேராற்றல் படைத்த தொலைநோக்கிகள் மூலமாக வானியல் விஞ்ஞானிகள் நூற்றுக் கணக்கான காலாக்ஸிகளை நோக்கியதில், கருந்துளைகள் நிச்சயம் இருக்க வேண்டும் என்னும் கருத்து உறுதியானது.  கருந்துளை என்பது ஒரு காலவெளி அரங்கில் திரண்ட ஓர் திணிவான ஈர்ப்பாற்றல் தளம் (A Black Hole is a Region of Space-time affected by such a Dense Gravitational Field that nothing, not even Light, can escape it).  பூமியின் விடுதலை வேகம் விநாடிக்கு 7 மைல் (11 கி.மீ./விநாடி).  அதாவது ஓர் ஏவுகணை விநாடிக்கு 7 மைல் வீதத்தில் கிளம்பினால், அது புவியீர்ப்பை மீறி விண்வெளியில் ஏறிவிடும்..  அதுபோல் கருந்துளைக்கு விடுதலை வேகம் : ஒளிவேகம் (186000 மைல்/விநாடி).  ஆனால் ஒளிவேகத்துக்கு மிஞ்சிய வேகம் அகிலவெளியில் இல்லை யென்று ஐன்ஸ்டைனின் நியதி எடுத்துக் கூறுகிறது.  அதாவது அருகில்  ஒளிக்கு ஒட்டிய வேகத்திலும் வரும் அண்டங்களையோ, விண்மீன்களையோ கருந்துளைகள் கவ்வி இழுத்துக் கொண்டுபோய் விழுங்கிவிடும்.

    கண்ணுக்குத் தெரியாத அந்த அசுரக் கருந்துளைகளை விஞ்ஞானிகள் எவ்விதம் கண்டுபிடித்தார்கள் ?  நேரடியாகக் காணப்படாது, கருந்துளைகள் தனக்கு அருகில் உள்ள விண்மீன்கள், வாயுக்கள், தூசிகள் ஆகியவற்றின் மீது விளைவிக்கும் பாதிப்புகளை விஞ்ஞானிகள் கண்டு ஆராயும் போது அவற்றின் மறைவான இருப்பை அனுமானித்து மெய்ப்பிக்கிறார்கள். நமது சூரிய மண்டலம் சுற்றும் பால்மய வீதியில் பல விண்மீன் கருந்துளைகள் (Stellar Black Holes) குடியேறி உள்ளன !  அவற்றின் திணிவு நிறை (Mass) சூரியனைப் போன்று சுமார் 10 மடங்கு !  பெருத்த நிறையுடைய அவ்வித விண்மீன் ஒன்று வெடிக்கும் போது அது ஓர் சூப்பர்நோவாக (Supernova) மாறுகிறது !  ஆனால் வெடித்த விண்மீனின் உட்கரு ஒரு நியூட்ரான் விண்மீனாகவோ (Neutron Star) அல்லது திணிவு நிறை பெருத்திருந்தால் கருந்துளையாகவோ மாறிப் பின்தங்கி விடுகிறது.

    பிரபஞ்சத்திலே கண்ணில் புலப்படாத கருந்துளைகள் அகிலத்தின் மர்மமான விசித்திரங்கள் !  அந்தக் கருந்துளைகள்தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பொருளாக நிரம்பியுள்ளன !  எளிதாகச் சொன்னால், ஒரு சுயவொளி விண்மீன் எரிசக்தி முழுவதும் தீர்ந்து போய் எஞ்சிய திணிவுப் பெருக்கால் எழும் பேரளவு ஈர்ப்பாற்றலில் அடர்த்தியாகி “ஒற்றை முடத்துவ” (Singularity) நிலை அடைவதுதான் கருந்துளை.  அந்தச் சமயத்தில் கருந்துளையின் அழுத்தம், திணிவு கணக்கற்று முடிவில்லாமல் மிகுந்து விடுகிறது. (At the point of Singularity, the Pressure & Density of a Black Hole are Infinite) !

    அண்டவெளிக் கருந்துளைகள் பற்றி ஹாக்கிங் ஆராய்ச்சிகள்

    1965-1970 இவற்றுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில், பிரபஞ்சவியலைப் [Cosmology] பற்றி அறியப் புதியக் கணித முறைகளைக் கையாண்டு, ஹாக்கிங் பொது ஒப்பியல் நியதியில் [General Theory of Relativity] “ஒற்றை முடத்துவத்தை” [Singularities] ஆராய்ந்து வந்தார்.  அப்பணியில் அவருக்கு விஞ்ஞானி ராஜர் பென்ரோஸ் [Roger Penrose] கூட்டாளியாக வேலை செய்தார்.  1970 முதல் ஸ்டீஃபென் அண்டவெளிக் கருந்துளைகளைப் [Black Holes] பற்றி ஆய்வுகள் செய்ய ஆரம்பித்தார்.  அப்போது அவர் கருஙந்துளைகளின் ஓர் மகத்தான ஒழுக்கப்பாடைக் [Property] கண்டுபிடித்தார்!  ஒளி கருந்துளைக் கருகே செல்ல முடியாது!  ஒளித்துகளை அவை விழுங்கி விடும்!  ஆதலால் அங்கே காலம் முடிவடைகிறது!  கருந்துளையின் வெப்பத்தால் கதிர்வீச்சு எழுகிறது!  ஜெர்மன் விஞ்ஞானி வெர்னர் ஹைஸன்பர்க் ஆக்கிய கதிர்த்துகள் நியதி [Quantum Theory], ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் படைத்த பொது ஒப்பியல் நியதி இரண்டையும் பயன்படுத்திக் கருந்துளைகள் கதிர்வீச்சை [Radiation] வெளியேற்றுகின்றன என்று ஹாக்கிங் நிரூபித்துக் காட்டினார்!

    கருந்துளைகள் கருமைப் பிண்டம் சேமிப்புக் களஞ்சியம் !

    சக்தி அழியாதது போல் பிண்டமும் அழியாது !  வலுவற்ற சிறிய கருந்துளைகளை விழுங்கி விடுகின்றன பெருங் கருந்துளைகள் !  அண்டையில் வரும் விண்மீன்களைக் கவ்வி இழுத்துக் கொள்கிறது கருந்துளையின் ஈர்ப்பு விசை !  அது போல் அருகில் நெருங்கும் ஒளிச்சக்தியையும் உறிஞ்சி விடும் கருந்துளைகள் !  பூத வாயு முகிலை வைத்துப் கணனிப் போலி இயக்கம் செய்ததில் (Computer Simulation of Giant Gas Clouds) வாயு முகில் நீரைச் சுழலில் இழுக்கும் நீர்ச்சுழலி போல் கருந்துளை இழுத்துக் கொள்வது அறியப் பட்டது.  அந்தப் போலி இயக்கங்கள் காட்டுவது என்னவென்றால், பூதப் பெருங் கருந்துளைகளின் அருகே காலாக்ஸியிலிருந்து பேரளவு வாயு முகில் கிடைத்தால், புதிய விண்மீன்கள் உண்டாக வாய்ப்பு ஏற்படுகிறது என்று பிரிட்டனின் ஸெயின்ட் ஆன்டிரூஸ் பல்கலைக் கழகத்தின் இயான் பான்னெல் கூறுகிறார்.

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Comman are Black Holes ? & Can Light Escape from Black Holes ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20 Astronomy Magazine – What Secrets Lurk in the Brightest Galaxies ? By Bruce Dorminey (March 2007)
    21 National Geographic Magazine – Dicovering the First Galaxies By : Ron Cowen (Feb 2003)
    22 Astronomy Magazine Cosmos – The First Planet By : Ray Villard & Adolf Schaller & Searching for Other Earths By : Ray Jayawardhana [Jan 2007]
    23 Discover Magazine – Unseen Universe Solar System Confidential [Jan 2007]
    24 A Discover Special – Unseen Universe – Comets Captured By : Jack McClintock (Jan 31, 2007)
    25 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40711221&format=html (கருமைப் பிண்டம்) (Dark Matter)
    26 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40711291&format=html (கருமைச் சக்தி) (Dark Energy)
    27 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40712061&format=html (கருந்துளை) (Dark Hole)
    28 Scientific American – Does Dark Matter Really Exits ? By : Moredehai Milgrom
    29 Astronomy Magazine – Peering into Black Holes By : Steve Nadis (Feb 2001)
    30 Scientific American – Echoes of Black Holes By : Theodore Jacobson (Dec 2005)
    31 Astronomy Magazine – Black Holes Seeing Unseeable ! New Technology will Prove Black Holes Exit By : Seteve Nadis (April 2007)
    32 BBC News : Black Holes Reveal More Secrets [Aug 24, 2008]
    33 BBC News : Black Holes Dodge Middle ground [Aug 24, 2008]
    34 Milky Way’s Core Black Hole Beamed out Massive Flares 300 Years Ago [Aug 26, 2008]
    35 European Space Agency Report on XMM-Newton X-Ray Space Telescope Launch (Dec 10, 1999)
    36 BBC News : Huge Black Hole Tips the Scale By : Paul Rincon, Austin Texas.
    37 BBC News : Rapid Spin for Giant Black Holes By : Paul Rincon, Austin Texas

    38  http://en.wikipedia.org/wiki/Messier_87  [A Supergiant Elliptical Galaxy] [September 29, 2019]

    39 Time and Space : Measuring the Universe’s Exit door By Jennifer Chu  [MIT News, Boston, MA] [Oct 2, 2012]

    40  Time and Space : World’s First Glimpse of Black Hole Launchpad [Oct 3, 2012]

    ******************
    jayabarat@tnt21.com [October 5,  2012]

    Share
  • அம்மணி

    தலைக்கோழி கூப்பிட்ட சித்த நேரத்துக்கெல்லாம் பழநி போகும் அஞ்சு மணி ரயில் கூகூவென சங்கூதியபடி, அக்கம்பக்கத்து கிராமங்களை எழுப்பிக் கொண்டே போனது.  இயற்கை வளம் வாசு அய்யா வீட்டிலிருந்து கேட்கிறது உலக்கை போடும் சத்தம். இந்த நவீன காலத்திலும் கைக்குத்தல் அரிசிதான் வாசு அய்யா வீட்டில். ஒவ்வொரு வீட்டுப் புறக்கொல்லையிலும் ஏதாகிலும் வீட்டுவளர்ப்புச் செடிகள் பயிரிட வேண்டுமென்பதைச் செயல்படுத்துவதில் ஊரே அவருக்கு ஒத்தாசை செய்கிறது.

    கிழபுறத் தாழ்வாரத்தின் கீழ் எல்லுசாமி இன்னும் படுத்திருக்க, அம்மணி எழுந்து போய் விட்டிருந்தாள். அவள் இந்நேரம் கொல்லையிலிருக்கும் மாடுகளுக்குத் தீவனம் போட்டுக் கொண்டிருக்கலாம்; கட்டுத்தறியைத் துப்புரவாக்கிய கையோடு, சாணம் கரைத்து சாணவாயுத் தொட்டியில் ஊற்றிக் கொண்டுமிருக்கலாம். விலகியிருந்த சத்திரப்பட்டி துப்பட்டியை நன்கு போர்த்தியபடி புரண்டு ஒருக்களித்துப் படுத்தார் எல்லுசாமி. வாசல் தெளிக்கும் ஓசை கேட்டது.

    மாடு கன்னுகளுக்குத் தீவனம் போட வேண்டுமென்றால்,  கொல்லைக்குப் போய் வெளியில் நறுக்கி வைத்திருக்கும் தட்டுக் கத்தைகளைக் கொஞ்சம் அள்ளிப் போட வேண்டும். இதெல்லாம் எதுவும் எல்லுசாமி செய்ய மாட்டார். தட்டுப்போரிலிருந்து நான்கு கத்தைகளை உருவி, ஒவ்வொன்றையும் மூன்றாகக் கத்தரித்து மூலையில் அடுக்கி வைப்பதோடு முடிந்தது அவரது வேலை. இராத்திரிக்கு ரெண்டு தரம் எழுந்து தீவனம் போடுவது என்னவோ அம்மணிதான்!

    ரெண்டாங்கோழி கூப்பிட்டு வெகுநேரமாயிற்று. தமயந்தியம்மா வீட்டுக்குப் பால் கறக்க வரும் பால்காரன் சைக்கிள் மணியடித்துக் கொண்டு போகிறான். இன்னும் தூங்கிக் கொண்டிருந்தால் அம்மணி வந்து சத்தம் போட்டு ஊரைக் கூட்டுவாள். ‘விருக்’கென்று எழுந்து பால்கும்பாவோடு பால் கறக்கப் போனார் எல்லுசாமி.

    தவுட்டுத் தொட்டியிலிருக்கும் எஞ்சிய புழுதண்ணியை இறைத்துக் கீழே கொட்டிய பிறகு, ரெண்டு குடம் தண்ணீரைத் தவுட்டுத் தொட்டியில் ஊற்றினாள் அம்மணி. அதனுள் சாமைத் தவிட்டோடு எள்ளுப் புண்ணாக்கு கொஞ்சமும் போட்டுக் கரைத்து விட்டு, கறந்த பாலை எடுத்துக் கொண்டு சமையற்க் கொட்டத்திற்குப் போனாள். எல்லுசாமியும் பின்னாடியே போய் அடுப்படியின் அருகே உட்கார்ந்து கொண்டார். அடுப்புச்சூட்டின் கதகதப்பு இதமாக இருந்தது. பால்கும்பாவை அப்படியே பெரிய அடுப்பில் வைத்து விறகு தள்ளியபின், பால் இருந்த சுண்டாச்சட்டியை கண்ணடுப்பில் இருக்கும் காப்பிச்சட்டியின் மேல் வைத்தாள். ஓரிரு மணித்துளிகளில் கண்ணடுப்புப்பால் சட்டிக்குள்ளேயே பொங்கிக் கொதித்தது.

    கண்ணடுப்புக் காப்பியுடன் சற்றுப் பாலையும் சீனியையும் கலந்து ஆத்தி நல்ல பெரிய லோட்டா ஒன்றில் ஊற்றிக் கொடுத்தாள். குத்திட்டு உட்கார்ந்திருந்த எல்லுசாமி காப்பியை அனுபவித்துக் குடித்தார். ஒவ்வொரு வாய் குடித்துக் கொண்டே அதை எடுப்பதும் இதை எடுப்பதுமாக இருந்தாள் அம்மணி. ஏரித்தோட்டத்து மராமத்து வேலைகளைப் பற்றிச் சொல்லி, என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்பது குறித்து அம்மணியிடம் யோசனை கேட்டார் எல்லுசாமி.

    கொட்டாவி விட்டபடியே உள்கொட்டத்திலிருந்து எழுந்து வந்தான் பெரியவன் துரைசாமி. “அம்மா காப்பி ஆச்சா?!”

    “பெரிய தங்கம்! ஊர் சோலியெதுக்கும் போகாம நாலு வண்டி மண்ணாச்சும் இன்னிக்கு அடிச்சிப் போடோணும். வேசை இருக்குறப்பவே இந்த குப்பை மேட்டு மண்ணு முச்சூடும் தோட்டத்துக்குக் கடத்திப் போடோணுஞ் சரியா கண்ணூ?”

    “சரிம்மா! எத்தினிவாட்டிதான் இதையே சொல்லுவ? கொண்டா காப்பிய!”

    தோளில் இருந்த துண்டையெடுத்து உதறிய பின், தலைக்கு உருமாலையாகக் கட்டிக் கொண்டு கிளம்பினார் எல்லுசாமி. தூக்குப் போசியில் முதல் நாள் சோத்துடன் மோர் ஊற்றிக் கரைத்து, அதையே தோட்டத்து நாய் பேச்சிக்குக் கொடுத்தனுப்பினாள் அம்மணி.

    அடுப்படியில் விறகு தள்ளிவிட்டுக் கொண்டிருந்தவள், வேகமாகத் தண்ணிக் கொட்டத்துக்குப் போனாள். அங்கிருந்த தண்ணியடுப்பில் தென்னை மட்டை ரெண்டினை வைத்துப் பற்ற வைத்தாள். பெரியவன் குளிக்காமல் சாப்பிடமாட்டான். பெரியடுப்பில் உலை காய்ந்து விட்டிருந்தது. கழுவி அரித்த அரிசியை உலையில் போட்டு, அதன் மேல் தட்டத்தை வைத்து மூடினாள். கண்ணடுப்பில் இன்னும் காப்பிச்சட்டி சுண்டிக் கொண்டிருந்தது. பருப்புச்சட்டியைக் கண்ணடுப்பில் வைத்து, அதற்கு மேல் காப்பிச்சட்டியை இடம் மாற்றிக் கொண்டாள்.

    “நேராப் போயி ஒரு வண்டி மண்ணடிச்சுட்டு வந்துரு. அதுக்குள்ள சோறாக்கி, தெவரைப் பருப்பு கடைஞ்சி கத்தரிக்காக் குழம்பும் செய்து போடுறன் நானு!”

    “செரீம்மா”, கிளம்பிப் போனான் பெரிய மகன் துரைசாமி. போடிபட்டியில் இருக்கும் தன்னுடைய அண்ணன் வீட்டுக்குப் போன சின்னவன் மணியன் இன்னைக்காவது வருவானா மாட்டானா? யோசித்துக் கொண்டே தயிர் மொடாவைச் சிலுப்பு கொக்கிகளுக்குக் கீழே வைத்தாள் அம்மணி.

    கழுவிக் கொண்டு வந்த ஆளுயர தயிர்மத்தினை மொடாவில் நிறுத்தி, மேல்க்கொக்கிக்கும் கீழ்க்கொக்கிக்கும் உண்டான பனம்பட்டைகளைப் பூட்டினாள். பட்டைகளுக்கு இடையில் நின்று சுழலத் தயாரானது மத்துக்கோல். மத்துக்கோலில் சுருட்டிக் கட்டப்பட்டிருந்த கயிறினை அவிழ்த்து முன்னும் பின்னுமாக மத்தினை இழுத்தாடியபடி தயிர் சிலுப்பினாள். இடையிடையே அடுப்படியில் நடந்து கொண்டிருந்த சமையல் வேலைகளும் கவனிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

    வெண்ணெய் திரண்டு மிதக்கத் துவங்கியது. மத்துக்கீற்றிலும் நிறைய வெண்ணெய் திரண்டு அப்பிக்கொண்டிருந்தது. வெண்ணெய் திரண்டிருந்த மொடாவிலும், மத்துக் கீற்றிலும் இருந்த வெண்ணெய் முழுவதையும் ஒன்று திரட்டிப் பெரிய உருண்டையாக்கினாள். திருப்பதி இலட்டு அளவுக்குத் திரண்டு இருந்தது. மோர் வித்த காசும், வெண்ணெய் வித்த காசும் போதும் அவளுக்கு, வீட்டு செலவுகளைச் சரிக்கட்ட.

    பாத்திரங்கழுவுதல், மோர் சிலுப்புதல், பண்டங்கன்னுக்கு தீவனம் போடுதல், கொல்லையில் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுதல், பால் மோர் கேட்டு வருபவர்களுக்கு ஊற்றிக் காசு வாங்குதல், துணி துவைத்தல், சில்வானங்கேட்டு வந்தவர்களுக்கு நோட்டு முறித்துக்  கொடுத்தல், குறியாப்புக் கேட்டு வந்தவர்களிடம் குறியீடாக ஒன்றை வாங்கி வைத்துக் கொண்டு மற்றொன்றைக் கொடுத்தல் என பதினாறு கவனக வேலையாகப் பலதையும் ஒரே நேரத்தில் செய்து, காலைநேரப் பணிகளை முடித்தாள் அம்மணி.

    பெரியவன் துரைசாமி முதல் வண்டி மண்ணடித்து விட்டு வந்திருந்தான். “கைகால் மூஞ்சி கழுவீட்டு வந்து உக்காரு கண்ணு!”, அவனுக்கு வட்டல் வைத்து சோத்தைப் போட்டுவிட்டு, கூடையில் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டாள்.

    ”செரி கண்ணூ. நான் பொடக்காளிக்குப் போயி பண்டங்கன்னுக்குத் தண்ணி காமிச்சிர்றேன். அப்படியே தோட்டத்துக்குப் போயி அப்பங்கூடவே உக்காந்து சோறுண்டுக்குறேன். நீ ஊட்டைப் பூட்டி தொறப்புக்குச்சியை எறவாரத்து மேப்படி மேல வெச்சிட்டு, மாடு கன்னுகளையும் ஓட்டிட்டு வந்துரு! செரியா?”

    லெட்சுமாபுரத்திலிருந்து குண்டலப்பட்டி எல்லையில் இருக்கும் ஏரித்தோட்டத்துக்கு ஒன்னரை மைல் தூரம். அந்த ஒன்பது ஏக்கர் ஏரித்தோட்டம்தான் எல்லுசாமி அம்மணி தம்பதியினருக்குக் கிடைத்த பூர்விகச் சொத்து.

    சும்மாட்டுத் தலையில் இருந்த கூடையில் காலைச்சோறு, மத்தியானச் சோறு எல்லாமும் இருந்தது. வலது கை கூடையைப் பிடித்திருக்க, இடது கையில் காப்பி இருந்த திருகணிச் சொம்பினைத் தொங்கவிட்டபடி புறப்பட்டுப் போனாள். ஊர் எல்லை தாண்டும் வரையிலும், மாறி மாறி யாராவது ஒருவர் எதிரில் வந்து கொண்டே இருந்தனர். அவர்களிடம் ஞாயம் பேசுவதும் நலம் விசாரிப்பதுமாகப் பேசிக்கொண்டே தன் வழியில் போய்க் கொண்டிருந்தாள்.

    தோட்டத்து இட்டேரிக்கு இவள் போனதுமே தோட்டத்து நாய் பேச்சி ஓடோடி வந்து இவளை முகர்ந்து பார்த்து நக்கியபடியே வளைய வந்தது.

    “அடியே பேச்சி, சும்மா போ! எதோ காணாதவளைக் கண்டவளாட்ட? என்ன நீயி?! உங்க அப்பன் உனக்கு சோறு ஊத்துனாரா, ஊத்தாமயே உட்டுட்டாரா? செரி வா, சாளைக்கு வந்ததும் நான் ஊத்தறேன்!”, வாஞ்சையாகத் தன் மகளைச் செல்லம் கொண்டாடினாள். அம்மணி வருவதைக் கவனித்த எல்லுசாமி கிணற்றடியில் இருந்து வேப்பங்குச்சிப் பல்துலக்கோடு சாளையை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    சாளைத் திண்ணையில் கூடையையும், திருகணிச்சொம்பினை சாளைக்குள் இருந்த மரப்பொட்டி ஒன்றின் மேலுமாகத் தன் சுமையை இறக்கி வைத்தாள்.

    “டே பேச்சி, வாடா கண்ணு!! கூழ் குடிப்பியாமா!!” எறவாரத்தில் தொங்கிக் கொண்டிருந்த தூக்குப் போசியில் இருந்த கூழை பேச்சியின் தட்டில் ஊற்றிவிட்டு, தண்ணித்தொட்டிக்குப் போய் தூக்குப் போசியைக் கழுவினாள். அது நிரம்ப தண்ணீர் கொண்டு வந்து எல்லுசாமியின் அருகே வைத்தாள். ஏற்கனவே கூடையை எல்லுசாமி இறக்கி வைத்திருந்தார். அதில் இருந்தவற்றை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள, காலை வேளைச் சாப்பாடு ஆனது.

    உண்ட மசமசப்பு தீரக் கையில் பீடியோடு உலாத்தப் போனார் எல்லுசாமி. தான் கொண்டு வந்திருந்த கொத்தினைக் கையில் எடுத்துக் கொண்டு, பருத்திக்காடு களையெடுக்கப் போனவள் மத்தியானம் ரெண்டுமணி நெகமத்து வண்டியின் சத்தம் கேட்டுத்தான் சாளைக்குத் திரும்பினாள். களையெடுப்பதில் மற்றவரை விட எப்போதும் ரெண்டு மூணு பாத்தி முன்னாடிதான் இருப்பாள். ஒரு களை தப்பாது; பயிருக்கும் சேதாரம் ஆகாது. பண்ணையத்து வேலைகளில் அம்மணியோடு போட்டியிடுவதற்கு சிஞ்சுவாடி கிராமத்தில் இருப்பவர் எவரும் யோசிக்கவே செய்வர்.

    சொல்லி வைத்தாற்போல பெரியவன் துரைசாமியும் மத்தியானச் சாப்பாட்டுக்கு வந்து சேர்ந்து கொண்டான். எல்லுசாமி மேவரத்துக்குழியில் இருந்த பட்டுப் போன மரமொன்றை வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்தார்.

    “ஏனுங்! உங்களைத்தானுங்.. வாங்க. உச்சி மேக்க சாஞ்சு வெகுநேரமாயிருச்சு பாருங்க. வாங்க, வந்து சோறுண்ட்டு பார்ப்பீங்களாமா!!”, தண்ணித்தொட்டி மேல் ஏறி நின்று குரல் கொடுத்தாள்.

    அருகே இருந்த வாழை மரத்தில் மூன்று கீற்று இலையைக் கொய்துவந்து, கடை பரப்பிச் சோறு பரிமாறினாள். தன் வாலைக் குழைத்தபடி பேச்சியும் அருகில் வந்து நின்று கொண்டது. அம்மணியின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தது அது. அதற்கும் வட்டல் கொண்டுவரப்பட்டு சோறு போடப்பட்டது. ஊர் நாயத்தோடு பண்ணையத்து நடப்பு வேலைகள் குறித்தும் பேசியபடி மத்தியான வேளை உண்டியை முடித்துக் கொண்டனர்.

    உண்ட மயக்கம் தொண்டனுக்கும்! இட்டேரியிலிருக்கும் பூவரச மரத்தின்கீழ் இருக்கும் வண்டியின் மீது ஏறிப்படுத்துக் கொண்டார் எல்லுசாமி. ஆனைமலைக் காற்று சில்லென்று அடிக்க, தென்னை மரத்தோப்பிலிருந்து செம்போத்தும் குயிலும் அதனதன் சுதியில் பாடிக் கொண்டிருந்தன. பெரியவன் பக்கத்துச் சாளையில் இருக்கும் சோடிக்காரப் பையன் தங்கவேலுவிடம் போனான். சோத்துப் போசியை கழுவிக் கமுத்திவிட்டு, சாளை முழுவதையும் கூட்டிப் பெருக்கினாள் அம்மணி.

    தெற்கே எரிசனம்பட்டி வரை போய்த் திரும்பிய நெகமத்து வண்டி, வடதிசையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. அதைக்கவனித்த அம்மணி, “ஏனுங், நாம்போயி மிச்சமிருக்குற கொஞ்சநஞ்ச பாத்திகளையும் செதுக்கிட்டு வந்துர்றேன்”. மறுபேச்சுக்குக் காத்திராமல் பருத்திக்காட்டுப் போய்த் தன் வேலையைத் தொடர்ந்தாள்.

    குண்டலப்பட்டியில் யாருக்கோ தெரட்டிச்சீர் போலிருக்கிறது. பாட்டுப்பொட்டி கொண்டு வந்து பாட்டெல்லாம் போட்டிருந்தார்கள். அதையும் மீறி எதோ சிலுசிலுவென்ற சத்தம் கேட்டது. தலையைத் தூக்கிப் பார்த்தால்  கஞ்சம்பட்டி மூலையிலிருந்து படைக்குருவிகள் ரெண்டு படைகளாக ஆகாயத்தில் வந்து கொண்டிருந்தன. படை ஒன்றுக்கு ரெண்டாயிரத்திலிருந்து ஐயாயிரம் குருவிகள் வரை கூட இருக்குமாம். பெரிய நாவற்பழம் போன்ற வடிவில் ஒரு படையும், ஆலிலை வடிவில் ஒரு படையும் தோற்றமளித்தது. இலாகவமாய் ஒரு சேர வளைந்து நெளிந்து பறக்கும் படைக்குருவிகளின் சாகசக் காட்சியைச் சொக்குண்டு பார்த்துச் சிரித்தாள் அம்மணி.

    பெரியவன் மாய்ந்து மாய்ந்து வேலை பார்க்கிறான். எப்போதும் நாலு வண்டி மண்ணடிப்பவன் இன்றைக்கு ஆறாவது நடை போய்க் கொண்டிருந்தான்.

    “செரி நீ கிளம்பு! பொழுது வுழுகுறதுக்கு முன்னாலயே ஊடு போய்ச்சேரு. சின்னவன் மேக்க இருந்து வந்தாலும் வருவான்!!”

    ஊரெல்லாம் நிழல் படர்ந்திருந்தது. நேராக புறக்கொல்லைக்குப் போய், எல்லாம் இருந்தது இருந்தபடி இருக்கிறதா எனச்சரி பார்த்ததும் அவளுக்கு மனம் நிறைந்தது. தண்ணித்தொட்டியில் இருந்து தண்ணீர் மொண்டு, கை கால் முகம் கழுவித் தன் முந்தானையாலேயே துடைத்துக் கொண்டாள்.

    அவ்வளவுதான், வீட்டுக்கு வந்தாயிற்று! பத்துப் பதினாறு கவனத்துடன் பல வேலைகளை ஒருசேர ஒருங்கே பார்க்கத் துவங்கினாள். துணிகளை அலசிப் போட்டாள். நல்லதண்ணிக் கிணத்துக்கு ஒரு நடை போய் தலையில் ஒரு குடம், இடுப்பில் ஒரு குடமாக இரண்டு குடந்தண்ணி கொண்டு வரப்பட்டது. கரியூட்டுச் சேந்து கிணத்திலிருந்து நாற்பது குடம் சப்பைத் தண்ணி கொண்டு வரப்பட்டு பண்டங்கன்னுகளுக்கெல்லாம் தண்ணி காண்பிக்கப்பட்டது. வீடெல்லாம் பெருக்கித் துப்புரவு செய்யப்பட்டது.

    முதலில் அம்மணி குளித்து முடித்தாள். அதே கையோடு வாசல் தெளிக்கப்பட்டு வீட்டில் விளக்கேற்றப்பட்டது. தோட்டத்தில் இருந்து வந்த எல்லுசாமியும் பெரியவனும் குளிக்கப் போகுமுன்னர், ஒருவர் பால் கறந்து கொடுக்க மற்றவர் வைக்கோற் போரிலிருந்து வக்கிப்புல் அரிந்து வந்தார்கள். கறந்த பாலில் மணக்க மணக்க காப்பி தரப்பட்டது. அம்மணியும் ஒரு லோட்டா குடித்துக் கொண்டாள்.

    விநாயகங்கோயில் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு ஊர்ப்பெரியவர்களும் எல்லுசாமியும் ஊர்ப்பழமை பேசிக் கொண்டிருந்தனர். பெரியவன் அவஞ்சோட்டுப் பையன்களோடு தலைவாசலில் நின்றுகொண்டு, கரட்டுமடம் சுகந்தி கொட்டாயில் என்ன படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது பற்றிப் பேசிக்கொண்டிருந்தான்.

    அரிசிபருப்புக் கூட்டாஞ்சோறு ஆக்கி ’பயித்தம்பயிறு அடை’யும் சுட்டு வைத்திருக்க, எல்லாருமாகச் சேர்ந்து சாப்பிட்டார்கள். திண்ணையில் மற்றவர்களோடு என்ன பேசிக்கொண்டிருந்தோம் என்பதை எல்லுசாமி சொல்லச் சொல்ல, அம்மணியும் கிணத்தடியில் தான் அறிய நேர்ந்தவற்றைப் பகிர்ந்து கொண்டாள். பேச்சு நெடுகிலும், பெரியவன் தன் அம்மாவைக் கிண்டலடித்துக் கொண்டே இருந்தான்.

    சாப்பாட்டு வேளை முடிந்ததும், எல்லுசாமி புறக்கொல்லைக்குப் போனார் பீடி இழுக்க. பழுதான மருந்துத் தெளிப்பானை நோண்டிக் கொண்டிருந்தான் பெரியவன் துரைசாமி.

    காற்று பதமாய் வீசியது. மதுரைவீரன் கோயில் பாட்டுச் சத்தம் விட்டுக் விட்டுக் கேட்டது. நான்கு வீடு தள்ளி இருக்கும் சுசீலா டீச்சர் வீட்டில் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாய் இருந்தது. யாரோ அவர்களுடைய உறவினர்கள் வந்திருக்கிறார்கள் போலத் தெரிகிறது. காரவாசலில் உட்கார்ந்து, அம்மணியும் பக்கத்து வீட்டு ருக்மணியும் புளியம்பழம் தட்டிக் கொட்டைகளைத் தனியாகவும் புளியைத்தனியாகவும் பிரித்தெடுத்துக் கொண்டே ஊர் ஞாயம் பேசிக் கொண்டிருந்தனர்.

    முதலில் எல்லுசாமி வந்து படுக்கையைப் போட்டார். சித்த நேரத்திலெல்லாம் பெரியவன் போய்ப் படுத்துக் கொண்டான். ருக்மணி அக்காவை அனுப்பி வைத்த கையோடு, பண்டங்கன்னுக்கெல்லாம் தீவனம் போட்டு வந்தாள் அம்மணி. முன்வாசக்கதவு, பின்வாசக்கதவு எல்லாம் நாதாங்கி பூட்டப்பட்டு இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொண்டாள்.

    கீழ்த்தாழ்வாரத்தில் எல்லுசாமி கட்டிலில் படுத்திருக்க, அதனருகே தரையில் பாயை விரித்து தலையணை இடப்பட்டது. கம்மாளபட்டி போர்வை ஒன்றும் தலையணை மேல் கிடத்தப்பட்டது.

    பித்தளைச் சொம்பு நிறையத் தண்ணீரும் அதை மூடிய வாக்கில் டம்ளர் ஒன்றுமாகக் குடிதண்ணீரைக் கட்டிலின் கீழ் கைக்கெட்டும் தூரத்தில் வைத்துக் கொண்டாளவள்.

    தூங்குவதாய் இருந்தாலும் அது ஒரு வேலையாக இருக்க வேண்டும். அல்லாவிடில் அம்மணிக்குத் தூக்கம் வராது. மின்விளக்கெல்லாம் அணைக்கப்பட்டு, ஒளிரும் குறுஞ்சிமினி விளக்கொன்றைத் தலைமாட்டில் வைத்துப் படுத்துக் கொண்டாள்.

    முதலாவது வேலையாகப் பெரியவன் எப்படி ஒன்பது ஏக்கர் நிலத்தை பதினெட்டு ஏக்கராக்கப் போகிறான் எனும் யோசனை; அடுத்து, சின்னவனை எப்படிப் படிக்க வைத்து வெளிநாட்டுக்கு அனுப்பலாமென்கிற யோசனை; குடிக்கத் தண்ணீர் கேட்பது போன்ற உதவிகளைத் தன் மணவாளன் கேட்டால் உடனே அதைச் செய்ய வேண்டும் என்கிற ஆவல்; புறக்கொல்லையில் மாடு கன்றுகள் இருக்குமிடத்திலிருந்து ஏதாவது சலசலப்புக் கேட்டால், உடனே போய் எட்டிப் பார்க்க வேண்டும் என்கிற எச்சரிக்கையுணர்வு. இப்படியான பலவற்றுடன்தான்  இரவு கழியப் போகிறது அவளுக்கு.

    தூக்கத்தில் திடீரென எதையோ நினைத்துத் தனக்குத்தானே பேசிச் சிரித்துக் கொண்டாள். சிரிப்பொலி கேட்ட எல்லுசாமி தன் தலையைச் சற்றுத் தூக்கித் தன்னருகே தரையில் படுத்திருக்கும் அம்மணியை ஏறிட,   இன்று பூத்த பூப்போலக்  கொள்ளை அழகாய் இருந்தாள் அவள்!

    Share
  • ஆதாமிண்டேமகன்அபு – மலையாளபடவிமர்சனம்

    மோகன் குமார்

    இயல்பான கதையும், இயற்கையான நடிப்பும்  சேர்ந்த படங்கள் மொழியையும் தாண்டி நம்முள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விடும். அத்தகைய ஒரு படம் தான் மலையாளத்தில் வெளியான -ஆதாமிண்டே மகன் அபு. 

    இரண்டு கோடிக்கும் குறைவான செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் 2010-ல் வெளியாகி விமர்சகர்களின் பெரும் ஆதரவை பெற்றது.

    கதை என்னவென்று பார்ப்போமா?

    அபு – ஐஷு என்கிற வயதான  தம்பதி  – கேரள கிராமத்தில் தனியே வசிக்கின்றனர். வெளிநாட்டில் குடும்பத்துடன் வசிக்கும் அவர்களின் மகன் இவர்களை வந்து பார்ப்பதோ இவர்களுடன் பேசுவதோ கூட இல்லை. இதில் பெற்றோர் இருவருக்கும் ஏகமாய் வேதனை.

    அத்தர் என்கிற வாசனை திரவியம் மற்றும் சில புத்தகங்கள் விற்று பிழைப்பு நடத்துகிறார் அபு. மனைவி வீட்டில் மாடுகள் வளர்த்து சற்று பணம் ஈட்டுகிறார். இருவருக்கும் இந்த தள்ளாத வயதில் ஒரே லட்சியம் – ஒரு முறையாவது ஹஜ் பயணம் செல்ல வேண்டும் என்பதே! ஹஜ் மானியம் பெற்று பயணம் செல்வது எந்த அளவு சாத்தியம் எனத் தெரியாததால் தனியார் டிராவல்ஸ் மூலம் பயணிக்க முடிவு செய்கிறார்கள்.

    அவர்கள் இத்தனை வருட சேமிப்பு பணம், மனைவியின்  நகைகள், மாட்டை விற்பது  என பணம் திரட்டுகிறார்கள். மீதமுள்ள பணத்துக்கு தங்கள் வீட்டில் உள்ள பலா மரத்தை விற்க முடிவு செய்து அதே ஊரில் உள்ள கலாபவன் மணியிடம் பேசுகிறார்கள். அவர் இவர்கள் ஹஜ் பயணத்துக்கு உதவும் எண்ணத்தில் அறுபதாயிரம் தர ஒப்புக்கொண்டு முன் பணமாக பத்தாயிரம் தருகிறார்.

    பாஸ்போர்ட் வாங்குவதில் துவங்கி எல்லா ஏற்பாடுகளும் செய்கிறார்கள். ஹஜ் பயணத்துக்கான தடுப்பூசி போடுவது, ஒவ்வொரு நண்பராய் சந்தித்து அவர்களிடம் பிரியா விடை பெறுவது என அனைத்தும் சரியே நடக்கும் நிலையில், ஒரு விஷயம் இடியாய் வந்து இறங்குகிறது.

    பலா மரத்துக்கு மீதம் பணமான ஐம்பதாயிரம் தரும் கலாபவன் மணி, அந்த மரம் பட்டு போய் விட்டது என்று கூறி விட்டு –  இருந்தாலும் நான் ஒப்பு கொண்ட படி  இந்த பணம் தருகிறேன் என்று சொல்ல, அபு அந்த பணத்தை வாங்க மறுத்து விடுகிறார்.

    ” நான் செல்வது நல்ல காரியத்துக்கு- கடனாகவோ, தவறான முறையிலோ பணம் ஈட்டி செல்ல கூடாது” என்று கூறி விடுகிறார்.

    வீட்டின் அருகில் இருக்கும் நண்பர் நெடுமுடி வேணு, டிராவல்ஸ் மேனேஜர் உள்ளிட்டோர் பணம் தர முன் வந்தாலும் “சொந்த ரத்த சம்பந்தத்தினர் மட்டுமே ஹஜ் பயணத்துக்கு உதவலாம்” என  மறுக்கிறார்.

    “மரம் வெட்டியது கூட அல்லாவிற்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம். அதுவும் ஒரு உயிர் தானே? அந்த மரத்தை நம்பி எத்தனை உயிர்கள் இருந்தன? அதனால் தான் ஹஜ் பயணம் வாய்க்க வில்லை;  அடுத்த முறை  நிச்சயம் செல்வோம்” என மனைவியிடம் கூறி விட்டு, பக்ரீத் அன்று  புதிதாய் ஒரு பலா மரம் நடுவதுடன் படம் நிறைவடைகிறது.

    சலீம் குமார் அபுவாக வாழ்ந்துள்ளார். சிறந்த நடிகருக்காக மத்திய அரசின் விருதும் கேரள அரசின் விருதும் பெற்றுத் தந்த நடிப்பு. அந்த பாத்திரத்தின் எதிர்பார்ப்பு, ஏக்கம், கோபம், இயலாமை எல்லாமே மிக சரியே பிரதிபலிக்கிறது இவர் நடிப்பில். இவர் மட்டுமல்லாது குடை ரிப்பேர் செய்பவர் உள்ளிட்ட ஒழிந்து வரும் பல சிறு தொழில்கள் குறித்த வேதனை படத்தின் ஊடே தெரிகிறது.

    கலாபவன் மணி, நெடுமுடி வேணு, முகேஷ் போன்ற பல பெரிய நடிகர்கள் முக்கியமான சிறு சிறு பாத்திரங்களில் நடித்துள்ளனர். அபுவின் மனைவியாக வருபவர் சலிமை விட நிச்சயம் மிக இளமையாக தெரிகிறார்.

    படம் மெதுவாக ஒரு ஆர்ட் பிலிம் போல துவங்கும் போது மிக போர் அடிக்குமோ என்று தோன்றுகிறது. போக போக அவர்களின் பயணத்தில் நாமும் இணைந்து விடுகிறோம். ” எப்படியாவது அவர் ஹஜ் சென்றால் நன்றாயிருக்கும்” என ஒரு பக்கம் நினைத்தாலும், மறு பக்கம் “இது மலையாள படம்; நிச்சயம் அப்படி முடிக்க மாட்டார்கள்” என்று தெளிவாகப் புரிகிறது.

    படத்தில் வில்லன் என்று யாரும் கிடையாது. வரும் அத்தனை பாத்திரங்களும் நல்லவர்களே. ஒரு விதத்தில் பார்த்தால் கதை முழுக்க முழுக்க அபுவின் பார்வையில் சொல்லப்படுகிறது. அவர் மற்றவர்களிடம் நல்ல விதமாய் நடந்து கொள்வதால், மற்றோரும் அப்படியே நடந்து கொள்கிறார்கள்.

    கடைசியில் எல்லாரும் அபுவிற்கு உதவத் தயாராய் இருந்தும் கூட, யார் உதவியையும் அவர் பெற்று கொள்ளாத போது படம் பார்க்கும் நமக்கு அவர் மீதுதான் கோபம் வருகிறது. ஒவ்வொருவர் உதவியையும் பெறாமல் இருக்க ஒவ்வொரு காரணம் சொல்கிறார் அபு. ” நல்லவனாய் இருக்கலாம். ரொம்ப நல்லவனாய் இருக்கவே கூடாது”  (Too good  is bad ) என்பார்கள், அது தான் நினைவிற்கு வந்தது.

    படத்தில் உஸ்தாத் என்று ஒரு ஞானி பாத்திரம். அவரிடம் அபு சென்று ” உங்களுக்கு தான் எல்லாம் தெரியுமே ! நாங்கள் இந்த முறை ஹஜ் செல்வோமா?” என்று கேட்க, அதற்கு உஸ்தாத்  ஆம் என்றோ இல்லை என்றோ சொல்லாமல் “முயற்சி செய், முயற்சி செய்”  என்றே மறுபடி மறுபடி சொல்கிறார். நமக்கு இங்கேயே கூட அவர்கள் ஹஜ் செல்ல போவதில்லை என உணர்த்தப்படுகிறது.

    உண்மையில் தங்களிடம் சிறு சிறு குறைகள் இருக்க, ஒவ்வொரு நியாயம் சொல்வார்கள் மனிதர்கள். ”  ஆண்டவன் நல்லவங்களை தான் சீக்கிரம் கூட்டிப்பான்” என்பது உதாரணத்துக்கு ஒன்று ! ஆனால் நல்லவனாய் இருப்பது சாதாரண விஷயமில்லை. அது முள் மேல் படுப்பது போன்ற ஒரு விஷயம். நல்லவர்களுக்கு தான் தொடர் சோதனைகள் வந்து கொண்டே இருக்கும். அவற்றை மீறி நல்லவனாய் தொடர்ந்து இருப்பது சாதாரண விஷயமில்லை.

    பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள், மத நல்லிணக்கம் (அபுவிற்கு உதவுவோர் இந்து அல்லது கிறித்துவர்கள்), சுற்று சூழல் பாதுகாப்பு (மரங்களை வெட்டாதீர்கள்) போன்ற பல விஷயங்களை பூடகமாய்ப் பேசிப் போகிறது படம். மத்திய அரசின் பல விருதுகளைத் தட்டிச் செல்ல இவையும் காரணங்களாய் இருந்திருக்கலாம்.

    மொத்தத்தில் மனதை கனக்கச் செய்யும் இந்த படம் – ஒரு வித்தியாசமான அனுபவம். நீங்களும் ஒரு முறை இந்த படம் பார்ப்பதன்  மூலம் இதனை அனுபவியுங்கள் !

    Share
  • ஒரு முடிவின் மறு பக்கம்

    ஸ்ரீஜா வெங்கடேஷ்

    நேற்றுவரை பிரபல கிரிமினல் வக்கீலாக இருந்த சத்தியமூர்த்தி இன்று நீதிபதி ஆகிவிட்டார். வாழ்த்துக்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. அவர் நீதிபதியானதில் அவருடைய பெற்றோருக்குத்தான் மிகவும் மகிழ்ச்சி. வருவோர் போவோரிடத்தில் எல்லாம் சொல்லிச் சொல்லிப் பெருமைப் பட்டனர். சத்திய மூர்த்திக்கு வயது ஐம்பத்து எட்டு. 65 வயது வரை நீதிபதி பதவியில் இருக்கலாம் என்பது சட்டம். அதனால் அவருக்கு இன்னும் ஏழு வருட சர்வீஸ் இருக்கிறது.

    சத்திய மூர்த்தியை நீதிபதியாக நியமித்ததை எதிர்த்து மற்றொரு வக்கீலான சங்கரன் கோர்ட்டில் ஸ்டே வாங்க முயற்சி செய்தார். கிடைக்கவில்லை. சத்தியமூர்த்தியின் பழைய ரெக்கார்டுகள் அப்பழுக்கில்லாமல் இருந்தன. அதனால் சங்கரனால்  ஒன்றும் செய்ய முடியவில்லை. இருந்தாலும் மனதுக்குள் கருவிக் கொண்டிருந்தார்.

    சத்திய மூர்த்தியின் குடும்பத்துக்கென்று ஒரு பெரிய பங்களா ஒதுக்கப் பட்டது. சென்னையில் அமைச்சர்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் இருந்த அந்த மாளிகை மிகவும் பெரியது. ஏழோ  எட்டோ அறைகள் இருந்தன. போதாததற்கு விசாலமான சாப்பாட்டுக் கூடம் அதற்கு அளவில் சற்றே குறைந்த சமையலறை மாடியில் வேறு அறைகள் என்று வீடு பிரம்மாண்டமாக இருந்தது. இது போதாதென்று தோட்டம் வேறு இருந்தது. மா  கொய்யா  மாதுளை போன்ற பழ மரங்கள் நிறைந்து ஒரு வனம் போலக் காட்சியளித்தது. இவற்றை எல்லாம் பராமரிக்க கூப்பிட்ட குரலுக்கு வேலையாட்கள் வேறு. கிட்டத்தட்ட ஒரு அரசனைப் போன்ற அந்தஸ்து. பின்னே நீதிபதி என்றால் சும்மாவா? நாட்டில் தூண்களில் ஒன்றல்லவா அவர்?

    சத்தியமூர்த்தியும்  அவர் மனைவியுமாக இரண்டே பேர் அத்தனை பெரிய வீட்டில் குடியேறினர். அவர்கள் மகன்கள் இருவரும் வெளி நாட்டில் இருந்ததால் அவர்கள் வரவில்லை. இது அனைவருக்கும் தெரியும். ஆனால் சத்திய மூர்த்தியின் தாய் தந்தையர் வராதது அனைவரின் கேள்விக்கும்  விமரிசனத்துக்கும் ஆளானது. இது குறித்து நேரிடையாக யாரும் நீதிபதியிடம் கேட்கவில்லை. கேட்கும் தைரியமும் இல்லை. சனி ஞாயிற்றுக் கிழமைகளில்  நீதிபதியும்  அவர் மனைவியும் அவர்களுடைய சொந்த வீட்டிற்குப் போய்விடுவார்கள். அந்த இரண்டு நாளும் சத்தியமூர்த்தி தான் ஒரு ஜட்ஜ் என்பதையே மறந்து சாதாரணமாகக்  காய் வாங்குவது  ஒட்டடை அடிப்பது  சோஃபா கவர் மாற்றுவது போன்ற வேலைகளைச் செய்வார். சாயங்காலம் ஆனால் பக்கத்தில் இருக்கும் பெசண்ட் நகர் பீச்சுக்கு பெற்றோர்களோடு போவார். ஞாயிறன்று முழு ஓய்வு. மீண்டும் திங்கட் கிழமை நீதிபதிகள் குடியிருப்புக்கு வந்துவிடுவார்கள்.ஒரு வாரம் கூட இந்த நியதி தவறியதில்லை.

    நீதிபதியின் மனைவியின் கை வண்ணத்தில் தோட்டம் அவர்கள் தோட்டம் மிளிர்ந்தது. வெற்றிலை  மிளகு போன்ற அபூர்வக்கொடிகள் இடம் பெற்றன. அதோடு பூசணி வெள்ளரி போன்றவையும் பயிரிடப் பட்டு  அவர்கள் தேவை போக வேலைக்காரர்கள் அவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். கத்தரி  வெண்டைச் செடிகளும் போடப்பட்டுக் காய்த்துக் குலுங்கின. அந்த அம்மையார் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால் தானே முன்னின்று தோட்ட வேலைகள் எல்லாவற்றையும் மேற்பார்வை பார்த்தார்.

    கொஞ்சம் கொஞ்சமாக ஜட்ஜ் தன்னுடைய தாய் தந்தையரை தன்னுடன் வைத்துக்கொள்ளவில்லை என்ற செய்தி பரவியது. அது வக்கீல் சங்கரன் காதிலும் விழுந்தது. இந்தச் செய்தியை அவர் தனக்கு சாதகமாக எப்படி உபயோகித்துக் கொள்ளலாம் என்று சிந்தித்ததில்  அவர் மனதில் ஒரு யோசனை உதித்தது. அதைச் செயலாக்க வேண்டி நீதிபதி சத்தியமூர்த்தியின் பழைய வீட்டைத் தேடி ஒரு செவ்வாய்க் கிழமை சென்றார்.

    சங்கரன் எதிர்பார்த்தபடியே வயாதான தம்பதிகள் தனியாக இருந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் சரியான படிக்காத கிராமத்து ஆட்கள் என்பது தெரிந்து போனது அவருக்கு. ‘இவர்களைத் தன் பெற்றோர் என்று சொல்லக் கூச்சப்பட்டுத்தான் சத்தியமூர்ததி அவர்ளை உடன் அழைத்துச் செல்ல வில்லை போலும்’ என்று நினைத்துக் கொண்டார் சங்கரன். தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தார். அவர்கள் வந்தவரை உபசரித்து  காபி கொடுத்தனர். சங்கரன் மெதுவாக அவர்கள் மன நிலையை அறிய சத்தியமூர்த்தியைப் பற்றிக் கேள்விகள் கேட்டுப் பார்த்தார். அவர்கள் பதில் ஒன்றும் திருப்தி அளிப்பதாக இல்லை. இருந்தும் முயற்சியைத் தளர விடாத வக்கீல் இ இப்படித் தனியாக வாழ்வதன் கொடுமையைப் பற்றி பேச ஆரம்பித்தார்.

    ‘இத்தனை வசதிகள் இருந்தும்  மகனோடு இருக்க முடியலியேன்னு உங்களுக்கு ஏக்கமா இருக்கும் இல்லேம்மா?’

    ‘ஆமாம்ப்பா! என்ன பண்ண? பல்லக் கடிச்சுப் பொறுத்துக்கத் தான் வேணும். மகன் பெரிய பதவியிலே இருக்காம்லா?’

    ‘ஏன் நீங்க கூடப் போயி இருந்தா என்ன?’

    ‘அது சரியா வராதுல்லா! எங்களுக்கு இங்ஙனக்குள்ள பழகிட்டு. அதான் நாங்க அங்கே போகல’ என்றார்கள்.

    ‘மகனை விட்டுக் கொடுக்கிறார்களா பார்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவர் மீண்டும் தொடர்ந்தார். ‘அம்மா! உங்களை மாதிரி வயசான பெத்தவங்களை பையன் கவனிக்கல்லேன்னா  மகனுக்குத் தண்டனை வாங்கிக் குடுக்கலாம்னு சட்டம் வந்துடுச்சு தெரியுமா? நீங்க ஒண்ணும் பண்ண வேணாம் ! நான் சொல்ற இடத்துல கையெழுத்து மட்டும் போட்டா போதும். மிச்சத்தை நான் பாத்துக்கறேன் ‘ என்றார்.

    ‘யாரு நீ? எதுக்கு எங்களை என் மகனுக்கு எதிராத் தூண்டி விடுதே? உனக்கு என்னலே வேணும்? ‘என்று பெரியவர் கேட்டார் என்றால்

    ‘வாரியலால சாத்துங்க சொல்லுதேன். என்ன தைரியம் இருந்தா நம்ம வீட்டுப் படியேறி வந்து இப்பிடிப் பேசுவான்? நாசமத்துப் போறவனே! போ வெளியே’ என்று கடுமையாகத் திட்டி சங்கரனை வீட்டை விட்டு விரட்டாத குறையாக வெளியேற்றினார்கள். வெளியில் யாருக்கும் இந்த அவமானம் தெரியாமல் மறைத்து விட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு அங்கிருந்து அசடு வழியத் திரும்பினார் சங்கரன்.

    இது நடந்து சில நாட்களுக்கெல்லாம் நீதிபதி சத்தியமூர்த்தி  சங்கரனைக் கூப்பிட்டு அனுப்பினார். அவருக்கு உள்ளூர உதறல். தான் செய்தது நீதிபதிக்குத் தெரிந்து விட்டதோவென்று கவலைப் பட்டார். அப்படித் தெரிந்தால் நீதிபதி என்ன செய்வார்? அவர் நினைத்தால் தன்னைப் பழி வாங்க வழியா இல்லை? ஐயையோ அவசரப்பட்டுத் தவறு செய்து விட்டோமேயென்று பயந்து கொண்டு இருந்தார் சங்கரன். கூப்பிட்டனுப்பியும் போகவில்லை என்றால் அது மரியாதை இல்லை என்று நினைத்து பலியாடு போல அவருடைய அறைக்குச் சென்றார்.

    சங்கரன் எதிர்பார்த்துச் சென்றது போல நீதிபதி அவ்வளவு கோபமாக இல்லை. சாதாரணமாகப் பேசி டீ கொடுத்து உபசரித்தார். சங்கரனுக்குத்தான் முள் மேல் உட்கார்ந்திருந்தது போல இருந்தது. சற்று நேரம் உலக விஷயங்கள் எல்லாம் பேசிய பிறகு விஷயத்துக்கு வந்தார் நீதிபதி.

    ‘ஏன் சங்கரன் நீங்க எங்க வீட்டுக்குப் போயிருந்தீங்களாமே? ‘

    ‘ஆமாம் சார்’

    ‘ஏன் சார் ? எங்க அம்மா அப்பாவை எனக்கு எதிராத் தூண்டி விட்டதாகக் கேள்விப்பட்டேனே உண்மையா அது?’

    இதற்கு சங்கரன் என்ன பதில் சொல்லுவார்? மௌனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டு தொடர்ந்தார் நீதிபதி. ‘உங்களுக்கு இந்தப் போஸ்ட் கிடைக்கல்லேன்னு நீங்க கோபத்துல ஸ்டே வாங்க முயற்சி பண்ணுனீங்க ! அது சரி. ஏன்னா அது நேரிடையான அணுகுமுறை. அதை விட்டுட்டு வீட்டுல வயசானவங்க கிட்ட போயி இல்லாத்தையும் பொல்லாததையும் சொல்றது சுத்தக் கோழைத்தனம் சார். அது ஏன் உங்களுக்குப் புரியல்லே?’

    இதற்கும் மௌனம் சாதித்தார் வக்கீல்.

    ‘நான் ஏன் எங்க அப்பா அம்மாவை கூட வெச்சுக்கல்லேங்கறதுக்கு உங்களுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இருந்தாலும் சொல்றேன் ஏன்னா மத்தவங்களும் நீங்க செஞ்ச மாதிரி முயற்சி செய்யக் கூடாது. எங்கப்பா அம்மாவை யாரும் தொந்தரவு பண்ணி அவங்களுக்கு மனசுக் கஷ்டம் குடுக்கக் கூடாது அதனால சொல்றேன்.’ என்றவர் ஒரு வாய்த் தண்ணீர் குடித்து விட்டுத் தொடர்ந்தார்.’ கவர்ன்மெண்ட் சார்பா எனக்குப் பெரிய வீடு  வேலைக்காரங்க எல்லாம் குடுத்திருக்காங்கன்னு நீங்க பொறாமைப் படறீங்க இல்லே! அது தான் காரணம் நான் என் பேரண்ஸை கூட வெச்சிக்காததுக்கு. ‘

    வக்கீல் விழித்தார்.

    ‘புரியும்படியாவே சொல்றேன். நான் வக்கீலா இருந்தப்போ என் சக்திக்குத் தகுந்த மாதிரி திருவான்மியூர் தாண்டி 900 சதுர அடியில ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கினேன். அங்க தான் நாங்க எல்லாரும் இருந்தோம். இப்போ புதுசா பெரிய வீடு  வேலை ஆளுங்கன்னு எல்லா வசதியும் இருக்கு. இதெல்லாம் அவங்களுக்குப் பழகிடுச்சுன்னா  நான் ஏழு வருஷம் கழிச்சு ரிடயர் ஆகும் போது திரும்ப அந்த சின்ன வீட்டுல அட்ஜஸ்ட் பண்ணிக்க ரொம்பக் கஷ்டப் படுவாங்க. அது மட்டுமில்லே  இத்தனை வேலை ஆட்களையும் அவங்களுக்கு என்னால குடுக்க முடியாது. அப்போ அவங்க மனசு ரொம்ப வருத்தப்படும். வயசான காலத்துல அவங்க மனசு அதையெல்லாம் நெனச்சு ஏக்கப் படக் கூடாதுன்னும் இ எங்களுக்கும் பழைய பழக்கம் விட்டுப் போகக் கூடாதுங்கறதாலயும் தான் நான் அவங்களை என் பழைய வீட்டுலேயே ஒரு குறையும் இல்லாமே வெச்சிருக்கேனே தவிர வேற எந்தக் காரணமும் இல்லை.’ என்று நீண்ட தன் பிரசங்கத்தை முடித்தார்.

    மிகவும் உயர்ந்து விட்ட அந்த நீதிபதியின் எதிரில் கூனிக் குறுகியபடி ஒன்றும் பேசாமல் வெளியேறினார் சங்கரன்.

     

    Share
  • தாசரி

    நாகை வை. ராமஸ்வாமி

    ‘ஹாய் ரியாஸ் ஹௌ ஆர் யூ? வாட்ஸ் குகிங்?’

    ‘ஹல்லோ சந்திரன் வாங்க குகிங் நதிங்?’

    ‘அட அந்த ரியல் குகிங் இல்லப்பா என்ன விசேஷம்னு கேட்டேன்?’

    ‘அது தெரியுமில்ல நானும் சும்மா தான் சொன்னேன் ஒண்ணும் விசேஷம் இல்ல. ஆமா இன்னிக்கு ஹாலிடே தானே ஜாலிடேயா கொண்டாடுவோமே?’

    ‘அந்த ஐடியாவோட தாம்ப்பா நான் வந்தேன் தனியா சமைச்சு சமைச்சு போரடிச்சு போச்சு வெளிலே சாப்பிடுவோமா?’

    ‘ஓ சாப்பிடலாமே ஒய் நாட் கால் தாமஸ் டூ?’

    ‘யா ஐ வாஸ் ஆல்ஸோ தின்கிங் அபவுட் ஹிம்’

    ‘ஓகே கால் ஹிம்’

    ‘ஹலோ தாமஸ் ரியாஸ் ஹியர்’

    ஹை ப்ரதர் சர்ப்ரைசிங் அட் திஸ் அவர் ஆஃப் ஹாலிடே சொல்லுங்க’

    ‘ஒண்ணுமில்ல ப்ரதர் நானும் சந்திரனும் சந்திச்சோம். இன்னக்கு ஹாலிடேயை ஜாலிடேயாக்கலாமுன்னு யோசிச்சோம். என்ன ரெடியா? வீ வில் எஞ்சாய் டுடே நாளைக்கு கட் அடிப்போம். தென் சாடர்டே ரூ சன்டே. ரெஸ்ட் அண்ட் வாஷிங் எட்செட்ரா.’

    ‘யா லவ்லி ஐடியா. எங்க வரணும் எப்ப வரணும் டெல் மீ வில் பீ தேர் பிஃபோர் யூ’

    இந்தியாவின் வெவ்வேறு மாநிலத்திலுள்ளவர்களானாலும் வேறு வேறு மதத்தவர்களானாலும் தாமஸ் சந்திரன் ரியாஸ் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். வெவ்வேறு கம்பெனிகளின் வேலை
    நிமித்தம் மும்பையிலிருந்து ஒரே நாளில் ஒரே விமானத்தில் அமெரிக்காவின் ‘சான் ஃப்ரான்ஸில்கோ’ விமான தளத்தில் இறங்கிய பின் மிக நெருங்கிய நண்பர்கள்.

    அமெரிக்காவில் ‘ஸான் ஹோஸே (ளுயn துழளந)’யில் வாசம். ஆறு மாதங்களே ஆனாலும் அடிக்கடி சந்திப்பு ஊர் சுற்றல் அரட்டை சாப்பாடு.

    மாதச் சம்பளம் இந்திய ரூபாய் மதிப்பில் ஐந்து லட்சம். இந்த ஆரம்ப நிலை வேலையே இந்தியாவிலிருந்தால் ரூபாய் ஒன்றிலிருந்து ஒன்றரை லட்சம். அமெரிக்காவில் மேக்டோனால்ட் போன்ற இடங்களில் ஒரு கப் காபி 300 ரூபாய். அதுவே இந்தியாவில் ஒரு சாதாராண ஹோட்டலில் முப்பது.

    அவர்கள் அப்பா காலத்தில் அமெரிக்காவில் காபி 150 ரூபாயும் இந்தியாவில் ஐந்தாகவும் இருந்தது. அதற்கேற்ற சம்பளம் விலைவாசி. எதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் மலைப்பாகத்தான் இருக்கும்.

    ஒரு டாக்சி பிடித்து ஒரு இந்திய ஹோட்டலைக் கண்டுபிடித்து மூவருக்கும் பொதுவான வட இந்திய பஞ்சாபி வெஜ் ரோடி சாப்பாடு ஒரு பிடி பிடித்தார்கள்.

    பிறகு அங்கிருந்து கோல்டன் கேட் ஃபிஷர்மேன் வார்ஃப் முதலிய இடங்களுக்குச் சென்றுவிட்டு அன்று இரவு எல்லோருமே சந்திரன் ரூமிற்குச் சென்றுவிட்டார்கள்.

    எல்லோரும் டயர்டாக இருந்தாலும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததால் தூக்கம் வரவில்லை.

    ‘என்ன தாமஸ் ஆறு மாதமாக பழகி வருகிறோம் இன்னும் நாம் ஒருவருக்கொருவர் முழுவதுமாக தெரிந்து கொள்ளவில்லையே?’ என்றான் ரியாஸ்.

    ஒவ்வொருவராக அவர்களைப்பற்றி சொல்லவேண்டியது என்று தீர்மானித்தார்கள்.

    ‘முதலில் நீங்க சொல்லுங்க சந்திரன். வேர் ஆர் யூ ஃப்ரம்இ அபவுட் யுர் ஃபமிலி’

    ‘என்னத்த….சொல்ல?’

    ‘நிறைய தமிழ் படம் பார்ப்பீர்களா? என்னத்த கன்னயா மாதிரி இழுக்கிறீங்க?’

    ‘நாட் லைக் தட். எப்படி பிகின் பண்ணறது?…..ம்?.. ஓகே. ஐ வில் ஸ்டார்ட். ஐ வாஸ் பார்ன் ரூ ப்ராட் அப் இன் மும்பை. மை ஃபாதர் வாஸ் ஆல்சோ எ ஸாஃப்ட்வேர் எஞ்ஜினீர் ஆஃப் தோஸ் டேஸ் அண்ட் வீ ஆர் ஆல் மிடில் க்ளாஸ். ரென்டல் அகாமொடேஷன் தான் சொந்த வீடு கிடையாது.’ கொஞ்சம் அப்செட் ஆனான் சந்திரன்.

    ‘கமான் டியர். நன் ஆஃப் அஸ் ஆர் ஃப்ரம் ஹெவன். ப்ளீஸ் கன்டின்யூ.’ என்றார்கள் மற்ற இருவரும்.

    ‘எங்க கிராண்ட் டாட் தான் முதலில் மும்பை வந்தார் சம்வேர் இன் 1960. அவங்க அப்பா மை கிரேட் கிராண்ட் டாட் எல்லாம் மதுரை பக்கம் ஒரு கிராமம்.’

    ‘ஈஸ் இட்?’

    ‘யெஸ். மை கிராண்ட் டாட் லைஃப்ல ரொம்ப ஃபேமிலிக்காக சேக்ரிஃபைஸ் பண்ணி ஸஃபர் பண்ணியிருக்காங்கன்னு மை டாட் யூஸ்டு டெல்.’

    ‘ஒய்?’

    ‘அவங்க ஃபேமிலி ரொம்ப பெரிசு வித் லெஸ் இன்கம். அதனால தான் கிராண்ட் டேட் மும்பைக்கு வந்தாராம். அந்த காலத்து எஸ்.எஸ்.எல்.சி. மட்டும் 10 டைப்ரைட்டிங் ரூ ஷார்ட்ஹேண்ட்’

    ‘வாட் ஈஸ் திஸ் ஷார்ட்ஹேண்ட்?’

    ‘எ மெதேட் ஆஃப் ரைடிங் ஸ்போகன் வேர்ட்ஸ் இன் ஷார்ட் சைன் ஃபார்ம். அப்போ அவங்களுக்கு நல்ல டிமாண்ட்..’

    ‘ஓ நல்ல சேலரி கிடைத்திருக்கும்?’

    ‘யூ வில் நாட் பிலீவ். ஸ்டார்ட்டிங் சேலரி ஜஸ்ட் ருபீஸ் 150.’

    ‘வாட்? பெர் டே?’

    ‘நோ யார் மந்த்லி. அண்ட் அவங்க சிலவு போக மாதம் ரூபாய் ஐம்பது ஊருக்கு அனுப்பிடுவாங்களாம்.’

    ‘கிரேட். தென்?’

    தென் ஹி காட் மேரீட் அண்ட் மை ஃபாதர் வாஸ் பார்ன். அவங்க எஞ்னீயிரிங் படித்து யுஎஸ்ல ஸேன்ஹோஸேயில் ஒன் அண்ட் ஹாஃப் யியர்ஸ் இருந்தாங்க. அப்பத்தான் அவங்க மேரேஜ் ஃபிக்ஸ் ஆச்சு. அதாவது இங்கே ட்வின் டவர்ஸ் தாக்கப்பட்டதே அப்போ.’

    ‘ஓ மை காட். வேர் வாஸ் ஹி அட் தட் டைம்.?

    ‘வெரி ஃபார். நோ ப்ராப்ளம். அதுக்கப்புறம் இந்தியாவுக்கு திரும்பிவிட்டார். அப்புறம் அவருக்கு கல்யாணம். பட் ஹீ குட் நாட் ரிடர்ன் டு யு எஸ்.’

    ‘தென் ஐ வாஸ் பார்ன் என்னை நல்லா படிக்க வச்சார். போஸ்ட் கிராஜுவேட் இன் கம்ப்யூட்டர் டெக்னாலஜி பிஸைட்ஸ் சம் அடிஷனல் க்வாலிபிகேஷன் இன் மேனேஜ்மெனட் அண்ட் ஹியர் ஐ ஆம் வித் யூ ஆல். மை அம்பிஷன் ஈஸ் டு மேக் மை பேரன்ட்ஸ் ஹேப்பி ஹெல்தி அண்ட் கம்ஃபர்டபிள். தட்ஸ் ஆல் அபவுட் மீ. நௌ ரியாஸ் யூ ஸ்டார்ட்.’

    ‘வொன்டர்ஃபுல் அண்ட் இன்டரஸ்டிங். தாமஸ் நீங்க சொல்லுங்க. தென் ஐ வில்.’

    ‘ஓகே.. கொஞ்சம் வாக் போய்விட்டு வரலாம். வெதர் நல்லா இருக்கே. தூக்கம் வரலே. நாளைக்கு எல்லோரும் ப்ரேக் அடிச்சிட்டு ரெஸ்ட் எடுப்போம்.’

    ‘தட்ஸ் நைஸ். இப்போ வாக் போய்க்கிட்டே பேசுவோமே. தாமஸ் சொல்லுங்க.’

    ‘யா நாங்க டெல்லியிலே இருக்கோம். எங்க மதர் கிரிஸ்டியன் பட் டாட் ஹிந்து ஃப்ரம் மும்பை. மை மாம் இன்ஸிஸ்டட் தட் மை டாட் ஆல்ஸோ ஷுட் பிகம் எ கிரிஸ்டியன் பிஃபோர் மேரேஜ்னு கண்டிஷன் போட்டாங்க. ஸோ ஹீ பிகேம் ஜார்ஜ் ஃப்ரம் ஜானகிராம்.’

    ‘அப்படியா?’

    ‘யா டெல்லி ஈஸ் லவ்லி நாட் லைக் தோஸ் டைம்ஸ். எல்லாம் இன்டர் நேஷனல் ஸ்டான்டர்டு. மை டாட் ஒரு ஸ்மால் பிசினஸ்மேன்.’

    ‘ஓ ஆண்டர்ப்ரனர்?’

    ‘யெஸ். அப்பர் மிடில் க்ளாஸ். நல்லா படிக்க வெச்சாங்க. எனக்குப் பிடித்த டெக்னாலஜி. வேலை கிடைச்சுது. வந்துட்டேன். அவ்ளோதான்.’

    ‘ஹேய் வாட் ஈஸ் திஸ்? ஸோ சிம்பிள். உங்களுக்கு எந்த ஊர்?’

    ‘ஓ மை டாட் டோல்டு மீ தட் ஹிஸ் டாட் வாஸ் ஃப்ரம் டமில்நாட்.’

    ‘விச் ப்ளேஸ் இன் டமில் நாட்?’

    ‘மதுரைன்னு தான் சொன்னாங்க.’

    ‘அட என்ன ஒற்றுமை? ரியாஸ் நீங்க கூட சொன்னீங்க இல்ல? ஒங்க கிராண்ட்ஃபாதர் வாஸ் ஃப்ரம் மதுரை?’

    ‘யெஸ். யூ நோ வீ ஆர் கன்வர்டட் முஸ்லிம்ஸ். எங்க மதர் ஹிந்து. பட் எங்க ஃபாதர் முஸ்லிம்.

    ‘அவங்களும் மும்பையிலிருந்துதான் வந்தாங்க. சண்டிகர்ல செட்டில் ஆகிட்டாங்க.’

    ‘ஃபாதர் என்ன செய்றாங்க?’

    ‘லாயர்.’

    ‘நிறைய நடந்துட்டோம். ரூமுக்குப் போவோமா? வீ வில் டேக் சம் ஸ்லீப். நாளைக்குத் தான் ப்ரேக் அடிக்கப் போறோமே. பாக்கி நாளைக்குப் பேசலாம்.’

    ‘தட்ஸ் பெட்டர். கொஞ்சம் டயர்டாகத்தான் இருக்கு.’

    அடுத்த நாள் அவர்கள் எல்லோரும் சூரியனைப் பார்க்கும்பொழுது சூரியன் உச்சிக்கு வந்தாகிவிட்டது.

    குளித்து காபி போட்டு குடித்துவிட்டு வெளியே சாப்பிடக் கிளம்பும் நேரம் சந்திரனுக்கு இந்தியாவிலிருந்து செல் ஃபோனில் அழைப்பு வந்தது.

    ‘ஹலோ சந்திராஇ கண்ணா எப்படிப்பா இருக்கே? நீ இல்லாம ரொம்ப லைஃப்லெஸ்ஸா இருக்குப்பா. நல்லா சாப்பிடுகிறாயா? உடம்பு நல்லா இருக்கா?’

    ‘அப்பா நீங்க எப்படி இருக்கீங்க? அம்மா எப்படி இருக்காங்க? ரெண்டு பேரும் ‘செக்கப்’ போனீங்களா?’

    ‘எக்சலன்ட். ஒன்லி திங் ஈஸ் வீ மிஸ் யூ டூ மச்.’

    ‘அப்பா ஒங்க ரெண்டு பேரையும் நான் த்ரீ மச் மிஸ் பண்றேன்.’

    ‘டேய் என்ன கடி ஜோக்கா? சரி ஃப்ரண்ட்ஸ் எல்லாம் பிடிச்சிட்டியா?’

    ‘யெஸ். அப்பா நானே சொல்லணும்னு இருந்தேன். எனக்கு பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ் ரெண்டு. ப்யூட்டி ஈஸ் அவங்க ஒருத்தர் தமிழ் கிரிஸ்டியன் இன்னொருத்தர் தமிழ் முஸ்லிம் பட் அவங்க கிராண்ட் பேரண்ட்ஸ் எல்லாம் மதுரை தான்.’

    ‘அப்படியா? இன்டரஸ்டிங்.’

    ‘அப்புறம் ஒரிஜினலி அவங்க ஹிந்துக்கள்.’

    ‘ஈஸ் இட்?. ஓகே ஜாக்கிரதையா இருப்பா. அம்மா தூங்கியாச்சு’

    ‘ஓகே. அம்மாவை எழுப்ப வேண்டாம். என்னுடைய வந்தனம் சொல்லிட்டு கவலைப்படாமல் இருக்கச் சொல்லுங்க. டேக் கேர்.’

    மற்ற இரு நண்பர்களும் அவர்கள் பெற்றோர்களுடன் பேசி நண்பர்கள் பற்றி சொன்னார்கள்.

    எல்லோருடைய பெற்றோர்களுக்கும் நண்பர்களின் தாத்தா பாட்டி மதுரை என்று கேள்விப்பட்டதும் அவர்களைப் பற்றி விபரம் சேகரிக்கச் சொன்னார்கள்.

    முதலில் ரியாஸ் அவன் அம்மாவிடம் பேசினான். ‘அமீ எப்படி இருக்கீங்க’

    ‘ரியாஸ் ரியாஸ்…’

    ‘அமீ ஏன் பேச மாட்டேங்கறீங்க? ரோத்தீ ஹை? (அழுகிறீர்களா?) நல்லா இருக்கீங்களா? வாப்பா எப்படி இருக்காங்க?’

    ‘நஹீ பேட்டா ஒன்ன நினைச்சு கண் கலங்கிட்டேன். இன் ஷா அல்லா நல்லா இருக்கோம். நீ எப்படி இருக்கே? சாப்பாடு கிடைக்குதா? வேலை பிடிச்சிருக்கா? நேத்து தானே பேசினே? உடம்பு சுகமில்லையா?’

    ‘நஹீ அமீ. ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும். இங்க எனக்கு பெஸ்ட் தோஸ்த் கிடைச்சிருக்காங்க. தமிழ்காரங்க அவங்க பேரண்ட்ஸ் கூட மும்பையிலிருந்தவங்க. ஆனால் அவங்க தாத்தா பாட்டி மதுரை பக்கம் ஏதோ குள்ளிப் பள்ளம்னு சொன்னாங்க. நம்ம தாத்தா ஊரும் மதுரை பக்கம்னு நீங்க சொல்லியிருக்கிங்களே?’

    ‘ஹாங் பேட்டா. அது குள்ளிப் பள்ளம் இல்ல முள்ளிப் பள்ளம். ஆமா. எதுக்கு இந்த கபர் (விஷயம்) எல்லாம் கேக்கிற? அதெல்லாம் வாணாம்ப்பா நானே மறந்துகிட்டிருக்கேன்.’

    ‘சும்மா சொல்லுங்க அமீ. எங்க தோஸ்த்துங்களுக்கு தெரிஞ்சிருக்கலாமில்ல?’

    ‘அவிங்களுக்கு எப்படிப்பா தெரியும்? தாத்தா பாட்டி இறந்து 35 40 வருஷம் ஆகிப்போச்சே?’

    ‘அவங்க அப்பா அம்மாவுக்குத் தெரிந்திருக்குமில்ல?’

    ‘டீக் ஹை டீக் ஹை. அவங்க பேர் சங்கரன் கௌரி.’

    ‘தேங்க் யூ அமீ. அப்புறம் எங்க மாமா பேரும் சொல்லுங்க.’

    ‘அதெல்லாம் வாணாம்ப்பா எங்க அண்ணன் ரெண்டு பேரும் என்னய மறந்துட்டாங்கப்பா’ என்ற போது அம்மாவின் துயரம் தெரிந்தது ரியாஸுக்கு.

    ‘நஹீ தோ சோட் தீஜியே அமீ (வேண்டாமென்றால் விட்டு விடுங்கள்). நீங்க வருத்தப் படாதீங்க.’

    ‘நஹீ பேட்டா பெரிய மாமா பேர் சுந்தரம் சிறியவர் ஜானகிராம்.’

    ‘பஹுத் அச்சா அமீ. இது போதும். நான் அப்புறம் பேசுகிறேன். வாப்பாகிட்ட சொல்லுங்க சப் டீக் சல்தா ஹை. குதா ஹாஃபிஸ்’

    ‘ஓகே பேட்டா நல்லா இரு ஜாக்கிரதையா இரு. குதா ஹாஃபிஸ்’

    இந்த விபரங்களைக் கேட்ட தாமசுக்கு ஏதோ பொறி தட்டினாற் போல் இருந்தது. ஏனென்றால் அவன் அப்பா கிறிஸ்தவராக மாறுவதற்கு முன் அவர் பெயர் ஜானகிராம்.

    உடனே அவன் அப்பாவுடன் தொடர்பு கொண்டு விபரங்களைச் சொன்னவுடன் அவருக்கு அதிர்ச்சியான மகிழ்ச்சி ஏற்பட்டது. ஏனெனில் அவரது தங்கை தான் ரியாஸின் அம்மா.

    சந்திரனும் அவன் அம்மாவிடம் பேசியதில் அவன் அப்பாதான் ரியாஸின் பெரிய மாமா சுந்தரம் என்பதும் தெரிந்தது.

    விபரங்கள் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்து பெற்றோர்களிடம் தெரிவித்ததும் தான் ஆச்சரியம் காத்திருந்தது. ஒரே தாத்தா பாட்டியின் பேரர்கள் தான் நண்பர்கள் மூவரும் என்று தெரிந்ததும் வியப்பும் மகிழ்ச்சியும் பொங்கின.

    சகோதர் இருவரும் சகோதரி ஒருவரும் திருமணத்திற்குப் பின் மதத்தால் வேறுபட்டதால் பேச்சு வார்த்தை அறுந்தது. உறவு முறிந்தது. இழந்த உறவு அவர்களின் குழந்தைகளால் ஒன்றாகியது.

    அதைக் கொண்டாட மூவரின் பெற்றோர்களும் அமெரிக்காவுக்கு வரவழைக்கப்பட்டனர். எல்லோருக்கும் உலகம் மிகச் சிறியது அதில் வாழும் காலமோ கொஞ்சமே அதை ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும் என்ற உணர்வு மேலோங்கியது

    இளமைப் பிராயத்தில் பிரிந்து சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின் முதுமையைத் தொடும் வயதில் சந்தித்த, அந்த ரத்த பாச பழுத்த இலைகள் (மலர்கள் என்று சொல்லலாம் என்றால் வயதானவர்களாயிற்றே) கண்கள் குளமாகி வார்த்தைகள் குளறி, நெஞ்சங்கள் விம்மின. பிரிந்தவர் கூடினால் பொங்கும் மகிழ்ச்சி வெள்ளம் அங்கும் பெருகியது.

    50 ஆண்டுகளுக்கு முன் அங்கொன்றும் இங்கொன்றுமாக பெற்றோர்களுக்குத் தெரிந்தும் தெரியாமலும் ஒப்புதலுடனும் ஒப்புதல் இல்லாமலும் காதல் கலப்புத் திருமணங்கள் நடக்கத்தொடங்கிய காலம்.

    காலப்போக்கின் கட்டாயத்தினாலும் சமூக நிர்பந்த்தத்தினாலும் சினிமா தொலைக்காட்சி ஊடகங்களின் தாக்கத்தினாலும் இம்மாதிரி நிகழ்வுகளை பல பெற்றோர்கள் சங்கடத்துடனும் சிலர் சந்தோஷத்துடனும் ஏற்றுக்கொள்ளும் கட்டாய நிலை உருவாகிவிட்டது.

    இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பின் இந்நிலை இன்னும் மாறுதல் அடையக் கூடும். சாதி மத அடையாளம் காட்ட முடியாத அளவுக்கு கலப்புத் திருமணங்கள் பெருகிவிடுமாதலால் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரே சாதி மத வகுப்பைச் சேர்ந்தவர்களுக்குள் (அப்படி எங்காவது இருந்தால்) திருமணங்கள் நடைபெற குறைந்த பக்ஷ வாய்ப்புக்கள் மட்டுமே இருக்கும்.

    கலப்பு காதல் திருமணங்கள் ஏறத்தாழ ஒவ்வொரு குடும்பத்திலும் ஏன் சாதி சம்பிரதாயத்தில் ஊறி வெளியே வர இயலாத குடும்பங்களிலும் கூட சகஜமாகி விடும்.

    ஆனால் இந்நிலை வருங்கால சந்ததியினரின் நன்மைக்கா இல்லையா என்பதை காலம் தான் சொல்லவேண்டும். மதச் சார்பில்லா மனிதத்தை நேசிப்பவர்கள் நன்மையே என்று தான் வாதாடுவார்கள்.

    Share