வல்லமையாளர்!
திவாகர்
நம் நாட்டில் ‘சிஸ்டம்’ சரியில்லை என்ற குற்றச்சாட்டு அடிக்கடி வருவதுண்டு. இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை ஏராளமாக உண்டு. இது மிகப் பெரிய குறைதான். பல மேலை நாடுகளில் ‘சிஸ்டம்’ சரிவரப் பயன்படுத்தப்படும்போது உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மட்டும் ஏன் இந்த ‘சிஸ்டம்’ சரிவரப் பயன்படுத்தப்படவில்லை என்றால் பொதுவான காரணமாக அரசியல்வாதிகளையும், ஆட்சி செய்யும் அதிகாரிகளையும் அவர்களை ஆதரித்து வ்ரும் சமூகக் கூட்டத்தையும் உதாரணமாகக் காட்டுவார்கள். நம்மால் இந்த ஒழுங்கான இந்த ‘வரைமுறைக்குள்’ செயல்படமுடியாதா என்ற பயம் அவ்வப்போது நடுநிலைப் பார்வையாளருக்கு எழத்தான் செய்யும்.
இந்த சிஸ்டம் என்கிற வரைமுறை இந்தியாவில் முழுவதுமாக செயலழிந்து போனால் நாசம்தான் ஏற்படும். ஆனால் ஆண்டவன் கருணையால் இந்த நாசம் நம்மை நாசமாக்கும்போதெல்லால், இந்தியாவின் நீதித் துறை விழிப்போடு செயல்பட்டு நம்மை மறுபடியும் சமநிலைக்குக் கொண்டு வருகின்றது. இதற்கு எத்தனையோ உதாரணங்களைக் காண்பிக்கலாம்
நீதிபதிகள் என வரும்போது சில கடமைகள் அவர்களைக் கட்டாயப்படுத்துகின்றன என்பதும் விருப்பு வெறுப்பு என்பது ஒவ்வாத விஷயம் என்பதும் நம் நாட்டு நீதிபதிகளுக்கு நன்றாகத் தெரியும். ஓ.. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.. நீதிபதிகள் எல்லோருமே ஒழுங்கானவர்கள்தானா என்ற கேள்விகள் கூட எழ்லாம். ஆனால் எங்கோ ஓரிரண்டு விஷயங்களை நாம் தவிர்த்துப் பார்க்கும்போதெல்லாம் நம் நாட்டு நீதிபதிகள் தங்கள் பணிக்ளைச் செவ்வனே செய்து வருகிறார்கள் என்றே சொல்லவேண்டும்.
ஒரு கால கட்டத்தில் பல கொள்ளை கொலை செய்தவர்களுக்கு வாதாடி இருக்கும் வக்கீல்கள் எல்லாம் கூட நீதிபதியாக வந்தவுடன் அந்த நியாயஸ்தானத்தில் அமரும்போது தான் நீதிக்கு மட்டுமே தலை வணங்க வேண்டியவர்கள் என்பதை அறிவார்கள். ஒரு சினிமாவில் வசனம் கூட வந்தது. கிரிமினல் குற்றவாளிகளின் வக்கீல் காலப்போக்கில் நீதிபதியாகிறார். அவர் வாதம் செய்துகொண்டிருந்த காலத்தில் ஒரு பொய்யான வழக்கில் கதாநாயகன் ஜோடிக்கப்பட்டு சாட்சியாதாரத்தினால் சிறைக்குச் சென்று வருகிறான். வெளியில் வந்த பிறகு அவன் எதேச்சையாகப் பார்க்கும்போது தன்னை எதிர்த்து அநியாயமாக வாதாடிய வக்கீல் நீதிபதியாக நியமனம் ஆகிறார். இது என்ன நியாயம் என்பது அவன் கேள்வி, ஏனெனில் அந்த இருவருக்குமே தெரியும் நாயகன் அப்பாவி என்பது. அதனால் தைரியமாகக் கேட்கிறான் – அநியாயத்துக்குத் துணை போனவனிடம் நியாயத்துக்கான நீதி கிடைக்குமா?, அதற்கு அந்தப் புதிய நீதிபதி அவனைக் கருண்யோடு பார்த்துச் சொல்வார் – ‘நண்பா.. நான் வக்கீலாக இருக்கும்போது வெறும் கல்லாக இருந்தேன்.. கல் யார் கையில் கிடைத்தாலும் என்னைக் கையாளலாம். அது கல்லான வக்கீலின் தர்ம்ம கூட, ஆனால் இப்போது கல்லால் செதுக்கப்பட்ட சிலையாக, நீதிக்கு நாயகனாக எல்லோரும் மதிக்கும்படியான நிலையில் இருக்கிறேன். என்னிடம் நியாயம் கேட்டு வரும் எல்லோருக்கும் நியாயமான முறையில் நீதி கிடைக்கச் செய்ய வேண்டியதுதான் என்னுடைய தர்மம், என்பார் – (படம் – ரிக்ஷாக்காரன், எம்ஜீயார், மேஜர் சுந்தர்ராஜன்)
உண்மைதான் தெய்வத்துக்கு சமானமாகத்தான் நீதிபதிகளை மக்களும் மதிக்கிறார்கள். இப்படிப்பட்ட நீதிபதியாக ஒருவரைத் தன் ‘முடிவின் மறுபக்கம்’எனும் கதையில் இந்த வாரம் கொண்டு வந்துள்ளார் ஸ்ரீமதி ஸ்ரீஜா வெங்கடேஷ். நீதிபதியானவர் எப்படி தன் வாழ்வை அமைத்துக் கொள்ளவேண்டும் என்றும் விளக்குகிறார். ஒரு ‘சிஸ்டம்’ வேலை செய்யாத இந்த ஜனநாயகத் திருநாட்டில் இப்படியெல்லாம் இந்தக் கால நீதிபதிகள் சிந்தனை செய்கிறார்களே என்ற ஒரு எண்ணமும், அந்தப் பாத்திரத்தைப் படைத்த ஸ்ரீஜா வெங்கடேஷ் அவர்களைப் பாராட்டியும் இந்த வார வல்லமை விருதினை அவர்களுக்கு வல்லமைக் குழு சார்பில் வழங்கப்படுகிறது. ஸ்ரீஜா அவர்களுக்கு நம் வாழ்த்துகள்.
கடைசி பாரா::ஹ்ரிகி அவர்களின் பாஞ்சாலி சபதம் உரை வல்லமையாக வலம் வந்து கொண்டிருக்கும் வேளை இது. நம் பாண்டியன் பாரதத்தில் வரும் கட்டத்தை பாண்டியதேசத்தில் பிறந்த பாரதி நெஞ்சை நிமிர்த்தி உரைக்கும் வரிகள்.
பொற்கொடி சேதியர் கோமகன் வந்துதொடுத்ததும்
உற்றதோர் தம்பிக்குத் தென்னவன் மார்பணி தந்ததும் –
சேதியர்கோன் (சேதிநாட்டு அரசன்) சிசுபாலன் கண்ணனுக்கு உறவு, தென்னவனோ நமக்கு உறவு,,
தொடர்ந்து பாரதியின் அமுதத் துளிகளை அள்ளி வழங்கி வரும் ஹரிகி அவர்களுக்கு நன்றி!!
நன்றி திரு திவாகர் அவர்களே. என் கதையின் ஆன்மாவை நன்கு புரிந்து கொண்டுள்ளீர்கள். அவரைப் போன்ற நீதிபதிகளும் இந்தத் திரு நாட்டில் இருக்கவே செய்கிறார்கள் என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கையில் பிறந்த கதை தான் அது. வல்லமையாளராக என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு மீண்டும் ஒரு முறை நன்றி.