மணி ராமலிங்கம்

 

டிசம்பர் 27ந் தேதி. அந்த மேட்சில்தான் அம்பயர் – ரமணி சரியாக மாட்டிக்கொண்டு மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டான்.

ரயில்வே அணிக்கு எதிரான மேட்சு அது.

ஆறு அணிகள் விளையாடும் டோரணமெண்டில், இந்த மேட்சில் ஜெயித்தால் தான் அடுத்த கட்டம். எடுக்க வேண்டியது சொற்ப ரன்கள் என்றாலும் விக்கெட்டுகள் சரிந்தது பயத்தை ஏற்படுத்தியது. குமார் அன்று பந்தால் துவம்சம் செய்து கொண்டிருந்தான்.

இருக்கிற ஓரே நல்ல விக்கெட் சீனிவாசன் அண்ணா. அவர் நின்று விளையாட வேண்டும். போன ஓவரில் ரன்னராய் வந்த போது கிளவுசை கழட்டினார் அண்ணா. நிறைய வேர்த்திருந்தது. கொஞ்சம் கை நடுக்கமாய் இருந்தது. பயந்திருக்கிறார்.

பக்கத்து ரன்னரோடு பேசுவது போல சொன்னார் .. “ அடுத்த ஓவர் அவனுக்கு கடைசி பாத்துக்கடே.. நா வெளிய வந்து எல்லாத்தையும் கால்ல தான் வாஙக போறேன்.. நோ பால்ன்னு அழுத்திடுடே. “  ரமணிக்கு  மட்டும் கேட்குமாறு சொல்லிப் போனார்.

அவுட்டானவுடன் நோபால் கொடுப்பது அம்பயரின் பொறுப்பு. நல்ல பாலை நோபாலாக காட்ட வேண்டும். நோபால் – பேட்ஸீமேனுக்கு புனர்ஜென்மம். இரண்டாம் வாய்ப்பு. அநுபவங்கள் மிகுந்த இரண்டாம் வாய்ப்பு. அடுத்த வாழ்க்கை.

எதிர்முனையில் சுழலும் காலச்சக்கரம். உடலின் ஓவ்வொரு செல்லும், படிப்பினை கற்று கொண்டு விட்ட பின்பு, வரும் வாரணம் ஆயிரம் பலம்.  நோபால் அவுட்டில் தப்பிக்கிற பேட்ஸ்மேன், வாதம் வந்து பிழைத்த வயோதிகன் போல. அவ்வளவு எளிதாய் அடுத்த முறை சாவதில்லை. இறப்பை கடந்து வந்த முனிவன் மனநிலை.

முதல் இரண்டு பந்துகள் குமார் வெளியே ஸ்விங் செய்தான். சீனிவாசன் அண்ணா, அதை அப்படியே விட, மூன்றாவது பந்து மிகச் சரியாக உள்ளே திரும்பி வந்த போது அண்ணா அதை சமாளிக்க பிட்சில் இறங்கினான். பந்து கால்வழியாய் நுழைந்து குச்சியை கழட்டியது. அண்ணா இறங்கிய கணமே ரமணிக்குத் தெரிந்தது விக்கெட் வீழப்போகிறதென்று.

பந்து கால்வழியே நுழைந்த அந்த கணத்தில் கத்தினான்.

“ நோ-பால் “

கத்தினதெல்லாம் சரிதான். அந்த பதட்ட்த்தில் ’பொய்த்தடம்’ வைக்க மறந்ததுதான் துரதிர்ஸ்டம்.

மைதானத்தின் ஓரத்தில் பசியோடு காத்திருந்த சண்டை யட்சி காற்றாய் உள்ளே வந்தது. ரமணிக்கு தன் தவறு புரிந்தது.

“ யே உளத்துறாண்டா.. “ என்று கத்திய வார்த்தைக்கு பின்னான எதுவும் ரமணிக்கு செவி தாண்டவில்லை. அந்த காட்சிகள் வார்த்தையற்ற பிம்பமாய் கண் முன்னே ஓடிக்கொண்டிருந்தது. அடிவயிற்றில் எதுவோ சுரந்து சுரணையைத் தின்று கொண்டிருந்தது. ஒரு சிலந்தி உடம்பெல்லாம் தவழ்ந்து தனது பிரஞ்ஞையை உறிஞ்சிக்கொண்டிருந்தது போல தோன்றிற்று. தொண்டை கமிறி வரும் கண்ணீரை உள்ளே அனுப்ப வேண்டியிருந்தது. இருந்த இடத்திலே நின்று கொண்டு திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான்.

“நோ- பால்னா, நோ-பால்தான், சொல்லியாச்சுல்ல.. நோ-பால் தான்.. காட்டெல்லாம் முடியாது.. ஒன்ஸ் டோல்டு நோ-பால்.. தட் இஸ்.. நோ-பால்.. நா பாத்தது.. நான் சொன்னது.. சொன்னது தான்.“ அவன் சொல், மனம், சில இந்திரியங்கள் அவன் முழுக்கட்டுப்பாட்டிலில்லை.

செந்தில் உள்ளே குதித்து ஓடிவருவது சந்தோசமாய் இருந்தது. சண்டை ஒரு பத்து நிமிடங்கள் நீடித்தது. ரமணி அம்பயராக நிற்க கூடாது என்று சொல்லி வெளியேற்றி விடப்பட்டு அச்சுவை உள்ளே வர இருதரப்பினரும் சம்மதித்தனர்.

மைதானத்திலிருந்து விளிம்பு வரை நடந்து வந்த போது, உலகத்தின் எந்த சத்தங்களும் மொன்னையாக்கப்பட்டு பெரிய அமைதி நிலவியது. வெளி மட்டுமல்ல, உள்ளுக்குள்ளும் அந்த மாபெரும் அமைதி சத்தம்.

நோபால் – பிழைத்தலுக்கு பின், அதிகமான அநுபவத்தோடும், காற்றில்லாதவிட்த்தில் வைக்கப்பட்ட தீபம் போலவும் மனம் குவிய நம்பிக்கையோடு வருவதை எதிர்கொள்வது ஆயிரம் யானை பலம். நிகழ்கால அநுபவச் செறிவோடு இறந்தகால நிகழ்வுகளை எதிர்கொள்ளுதல், ஆபிஸில் வேலை பார்ப்பவனுக்கு ஐந்தாம் வகுப்பு தேர்வு போல்தானே.

சீனி அண்ணாவுக்கு இரண்டாவது வாழ்க்கை. வாரண பலத்தோடு விளையாடினான். சீனி அண்ணா தனி ஆளாய் நின்று விளையாடி அந்த மேட்சு ஜெயித்தான்.

இருட்டிய பின் வெளிச்சமற்ற அந்த தெருவில் வெற்றிவிழா. ஆட்டுக்கால் சூப்பு குடித்து அணி வெற்றியை கொண்டாடியது. ரமணிக்கு தனியாய் தனது ஈரமற்ற வெதுவெதுப்பான கைகோர்த்து அணைத்து நன்றி சொன்னான் சீனி அண்ணா.

“ஸ்டார்டிங் ட்ரபிள்மா.. கொஞசம் பதட்டமா இருந்த டயத்தில காப்பாத்தினம்மா.. அந்த நோபால் மட்டும் இல்லைன்னா நம்ம கவிந்துருப்போம். தேங்க்ஸ்ம்மா. ”

ரமணி அதற்குப் பின் அம்பயரிங்கிற்கும், மறைந்து குடிக்கும் ஆட்டுக்கால் சூப்பிற்கும் போவதேயில்லை. பொய்த்தடம் அவனிடமிருந்து குமாரின் கால்வழியே நுழைந்து கழன்ற குச்சி போல விழுந்து விட்டது.

*

ம்பயரிங் காலத்திற்கு முன்பான காலத்தில்,  சண்டையில்லாமல் முடியாத திருநெல்வேலி கல்யாணம் போல, மேட்சில் ஒரு சண்டையாவது  இருக்கும். தெருக் கிரிக்கெட்டுகள் கூட சண்டையோடுதான் நடந்திருக்கின்றன. அல்லது முடிந்திருக்கின்றன. சண்டைகள் அவசியம். கொஞ்சம் கிரிக்கெட். நிறைய சண்டை.

பின்பு சண்டைகள் குறைய, பெரிய மேட்சுகளில் பேட்டிங் டீமிலிருந்து ஒரு அம்பயர் என்ற வழக்கம். அந்த நபர் எதிர் டீமால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். சில நபர்களை அம்பயராக்குவதற்கு எந்த டீமும் ஓத்துக் கொள்ளாது.

அப்படிப்பட்ட ஒரு நபர்தான் எங்கள் அணியின் செந்தில்.

கிரிக்கெட் ஒரு ஜெண்டில்மேன் கேம் என்பதில் கொஞ்சம் கூட நம்பிக்கையில்லாதவன் செந்தில். எங்களூர் ரயில்வே கிரவுண்டு, மேட்டுப்பாளையம் கிரவுண்டு, எம்ஸ்பி திடல், மேலத்தெரு, வடக்கு மற்றும் தேர்த்தெரு, மொட்டை மாடி, பாப்பாத்தி மைதானம், ஆகியவற்றில் – விளையாடப்படும் கிரிக்கெட் ஜெண்டில்மேன் கேமாக இருக்க முடியாது என்று ஆழமாக எண்ணுபவன். கால்பந்தோ, பம்பரமோ, நொண்டிசிங்கியோ எதுவும் அவன் விளையாடாத வரைக்கும் அது ஜெண்டில்மேன் கேமாகா இருப்பதில் அவனுக்கு எந்தப் பிரச்சனையுமில்லை.

அம்பயர் பதவியின் பலத்தை அவன் உணர்ந்திருந்தான். உணரவைத்தான். அவனால் எத்தனையோ மேட்சுகளில் எங்களுக்கு ஜெயம்.

கொட்டை, கொட்டையாய் நடுக்குச்சி கழன்று விழும் எத்தனையோ பந்துகளை கூட அவன் நோபால் கொடுத்திருக்கிறான். எப்போதும் இந்த அழுகூணித்தனம் தேவையில்லை. சில பந்துவீச்சாளர்களிடமிருந்து, சில முக்கியமான விக்கெட்டுகளை மட்டும் காப்பாற்றிவிட்டால் போதும், ஆட்ட்த்தின் போக்கு மாறிவிடும்.

இடம், பொருள், ஏவல் அறிந்து தனது அம்பயர் அட்டூழியங்களை, சாம, தான பேதமின்றி, தண்டத்தோடு செய்து எங்களது வெற்றிக்கு அருள்பாலித்தான்.

அவனது கருத்த திருமேனியையும், வாயில் வரும் வண்டை வண்டையான திருவாய் மொழியையும் நம்பியே நாங்கள் நிறைய மேட்சில் ஜெயித்திருக்கிறோம். சில பெட்டிங் மேட்சிலும் பணம் சம்பாதித்திருக்கிறோம். ஆட்டுக்கால் சூப்பு, முட்டை போண்டா, சைவர்களுக்கு மசாலா தோசா, ஒரு படம் என மிக அதிகமான சம்பாத்தியத்தை எங்களுக்கு கொடுத்திருக்கிறது.

அவனது முடிவை எதிர்த்து கேட்க வருபவர்களிடம் ஒரு கட்டத்திற்கு மேல் செந்தில் சட்டை அவிழ்த்து விட்டான் என்றால் அவ்வளவுதான், எதிர்த்த டீம் நேச நாடுகளுக்கு தூது அனுப்பி தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டி வரும். அதற்கு மேலும் அதிகமாக பேசுபவர்களை நோக்கி கத்தியபடியே முதலில் ரன்னர் ஸ்டெம்பை பிடுங்குபவன் அவனாகத்தானிருக்கும். அவன் அழிச்சாட்டியத்திற்கு மெல்ல மெல்ல எதிர்ப்பு கிளம்பியது. அவனது அழுகுணி அம்பயரிங்கிற்கு எதிராக மெல்ல புகை கிளம்பியது. நிறைய புகார்கள் வந்தன.

மற்றவர்களை விட எங்கள் டீமே அவனை கண்டு பயப்பட ஆரம்பித்தது. அவனுக்கு எதிராக சில சமயம் நியாயம் சொல்லி எங்கள் அணியிலேயே நிறைய பேர் மூக்குடைப்பட்டார்கள். விரிவாக சொன்னால், இரண்டு பேருக்கு மூக்கும், ஒருவனுக்கு முதுகில் கீறலும், கபீருக்கு நகமும் பெயர்ந்தது, கொஞ்ச பேருக்கு பரம்பரை திட்டும் விழுந்தது.

யாராயிருந்தாலும் தன்னைப் பற்றி பேசியவர்களை செந்தில் மைதானத்திற்குள்ளாகவோ, வெளியிலோ – நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்கிக் கொண்டேயிருந்தான்.

இலட்சுமணன் மைதானத்தில் விளையாடும் போதும் முதல் ஸ்லிப்பிங்கில் நின்றபடி செந்தில் சொன்னது.  ’வெங்காயம் வாடையடிக்குதேடே.. வெங்காய சோப்பு போட்டு குளிப்பாங்களாடா..  வெங்காய நாற வாயோட குத்தம் வேற சொல்லறாங்கப்பா..’ –  இலட்சுமணன் அப்பா வெங்காய தரகு மண்டி வச்சிருந்தார். மறைமுகம்.

’என்னடே.. நீ பேர்ல மட்டும் குஞ்சா மணி இல்லடே.. பேருக்கு ஏத்த மாதிரி டாண்டான்னு வத்தி வைக்கேல்ல.. ஊரெல்லாம் போயி செந்தில் கள்ளன்னு மணியடிச்சிட்டு வந்திருக்கியேடே.. சரியான குஞசா மணிதாண்டே.. இன்னும் நிறைய ஆட்டுடே..’ – நேர்முகம். செந்திலுக்கு எதிராக எல்லா அணியிடமும் ஆதரவு திரட்டிக் கொண்டிருந்த குஞ்சா மணி டென்சானாகி அந்த மேட்சில் பதினாலு வொயிடு பால்கள் போட்டான்.

‘அறுத்த பயல்கிட்ட என்னடே பேச்சு’ என்று அழூகுணி அம்பயரிங்கின் போது வார்த்தை சொல்லிவிட கிட்டதட்ட மேலைத்தெரு முழுவதும் குவிந்து செந்திலை கும்மத் தயாராகின. மேலைத்தெரு பெரும்பாலும் இஸ்லாமிய நண்பர்கள். எப்படியோ எதோ சொல்லி ச்மாதானமாகி வெளிவந்தாலும் செந்தில் மன்னிப்பு கேட்கவேயில்லை. ’அறுத்த பயன்னு சொன்ன என்னடே தப்பு’ன்னு சண்டையின்போதே ஒரு இருபது தடவை சொல்லிவிட்டான்.

நிறைய முறை சொல்லிவிட்ட்தாலோ என்னவோ ஒரு கட்ட்த்திற்கு மேல், அவர்களது காதிற்கு அது பழகிப் போய்விட்ட்து. வார்த்தை அதன் அர்த்தம் அறுந்து போய் உருகிப் போயிற்று. ரொம்ப நாளைக்கு அது ’அறுத்த பயக’ டீமாகத்தானிருந்த்து.

இவ்வாறான நிறைய திருவிளையாடல்களுக்கு பிறகு, எங்களது அணியோடு எந்த அணியும், செந்தில் நடுவராயிருந்தால் விளையாடமாட்டோம் என்று சொல்லுமளவிற்கு வந்தது. எப்படியோ செந்திலை சமாதானம் செய்து அம்பயரிங்கிலிருந்து வெளியேற்றுவதற்குள் நாக்கு வெளியே வந்துவிட்ட்து.

சதா கொந்தளிப்பும், துடிப்பும் அதனடியில் ஓடும் ஒரு பதைபதைப்புமாய் அவன் உலவிக்கொண்டிருந்தது ஏதோ ஒரு மெகா கூண்டுக்குள் சுடப்பட்ட காயத்தோடு திரியும் கழுகு போலிருந்தது.

*

ப்படிப்பட்ட செந்திலின் காலியிடத்தை அச்சு பூர்த்தி செய்ததை இயற்கையின் வரப்பிரசாதமாகத்தான் எங்களின் கிரிக்கெட் புலம் நோக்கியது. மைக்கேல் சார் கொடுத்த வெங்கட்ராகவன் தொப்பியா, சரியாக வராத பேட்டிங்கா, போட்டியற்ற ஒரு நாற்காலியில் தான் பிணைந்ததால் வந்த அதிசயமா.. எதுவோ ஓன்று அவனை ஒரு சுயம்புவான அம்பயராய் பிரகாசிக்க செய்தது.

அம்பயர் என்பது அற வெளிப்பாடு. எப்போதும் நம்மை பார்க்க்கும் நீதி தேவதை போல. கண்ணைக் கட்டிக்கொண்டு தராசு சுமக்கும் தேவதைக்கும் அம்பயருக்கும் அதிக வித்தியாசமில்லை. ’என்னா சொன்னாலும் பெரிசு ஓழுங்காத்தான் சொல்லும்’ என்று நடந்து போகும் ஒரு பெரியவரின் வெளியை ஊர் எப்படி பார்க்கிறதோ அப்படியானது தான் அம்பயரிங்க். – அச்சு அப்படித்தான் இருந்தான்.

அச்சுவிடம் ஏதோ எழுத்தில் சொல்ல முடியாத அறம் இருந்தது போல. ஒரு சில நாட்களுக்குப்பின் அவன் தனக்கு இடப்பட்ட கட்டளையாய் அம்பயரிங்கை அரவணைத்துக் கொண்டான். ஏதாவது ஒரு தேவதையோ, யட்சியோ அவன் கனவில் வந்து காதில் சொல்லிவிட்டு போயிருக்கலாம். ‘ நீ அம்பயராக கடவது என்று ‘

சோதனை, விரிந்த கண், களத்திலிருந்தாலும் விழிப்புடன் இருத்தல், முடிவுகள் தன்னை தொடாத தூரத்தில் செயல், பிரபஞ்ச ஓழுங்கு. அவனே மைதானத்தின், பிரபஞ்சத்தின் மையம். அவனே ஆக்கமும் அழித்தலும்

அச்சு அவன் ஊரிலிருந்த இறுதி கால கட்டங்களில் ரொம்ப பிசியான அம்பயராகியிருந்தான். எப்போதும் ஹிண்டு பேப்பர் மற்றும் விளையாட்டு பத்திரிக்கைகளின் சில கட்டுரைகளோடு திரிந்தான். சில மேட்சுகளுக்கு முன்னால் இரண்டு டீமையும் கூப்பிட்டு புது ரூல் சொல்லி க்ளாஸ் எடுக்கும் அளவுக்கு அவனது மரியாதை வளர்ந்திருந்தது.

விடுமுறைக்கு சென்னைக்கு போகும்போதெல்லாம் சேப்பாக்கம் வளாகத்தை பார்த்த கதையை ஓவ்வொரு டீமுக்கும் சொல்லிவருவான். ஸ்கோர் கார்டு புதுமாதிரி என்ன வந்திருக்கிறது என்பதை அவன் தான் எங்களுக்கு எல்லாம் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தான்.

யானை, கடல், ரயில், கல்யாண மாமாவின் கர்ண மோட்சம் போல, அச்சுவின் கிரிக்கெட் கதையும் அலுப்பூட்டாதது. அடிவயிற்றில் அட்ரீனல் சுரக்க வைப்பது. எப்போதும் மனத்துள்ளல் அளிப்பது.  

*

ம்பயர் அச்சு அந்த ஊரிலிருந்து மாற்றாலாகி போனது எங்களூர் கிரிக்கெட் புலத்திற்கு ஈடுகட்ட் முடியாத இழப்பு.

அச்சு போன சில தினங்களுக்கு – கூட்டணி காலத்தில் இடைப்பட்ட பிரதமர்கள் போல கொஞ்ச நாள் அம்பயரிங் செய்தார் நாராயணன். டீம் பெரிசுகள் அண்ணா என்றும், சிறுசுகள் மாம என்றும் அவரை அழைத்தனர்.  அது அவருக்கு முற்பெயர், அதாவது முன்னே சொல்வது, பிற்பெயர் [ பின்னால் சொல்வது]  ’தொடை சொறிஞ்சி  நானா ‘

’தொடை சொறிஞ்சி நாராயணன்’ பதவிக்காலம் அவ்வளவு பெரியதாக இல்லை. காதில் மர்பி ட்ரான்ஸ்பார்மரொடு திரியும் நாராயணன், எங்களூர் திவ்ய செளந்திர்ராச பெருமாள் போல அலங்காரமும்,  திரிநேகஸ்வர சிவன்போல தனிவாழ்க்கையும் வாழ்பவர்.

தெருக்கடைசி திண்ணையில் உட்கார்ந்து வயதான கிழங்களோடு அவர்கள் கூட்ட்த்தில் இளைய பெருமாளாய் வீட்டிருந்து கிரிக்கெட் கேட்பதே (கிரிக்கெட் இல்லாத காலத்தில் ரேடியோ) நாராயணன் நம்பியின் முழுநேர வேலை.

அரசு ஓய்வுபெற்ற அம்மா, அப்பா. ஊட்டி வளர்த்த பிள்ளைக்கு எப்போதும் ஓய்வு. உட்கார்ந்து திங்க வீடு, இலையில் நிரம்ப விழுமளவிற்கு ஒத்திகை நிலம்.

வேலைக்கு போவது எவ்வளவு பெரிய பாபம், அதுவும் ஊர் தாண்டி வேலைக்கு போக்க் கூடாதென்று நிறைய சாஸ்திரங்களே சொல்லியிருக்கும்போது அதை உதாசீனப்படுத்துவது ஊருக்கே நல்லதல்ல என்கிற தத்துவத்தை சிரமேற்கொண்டு தன் கால அட்டவணையை தயார்படுத்திக் கொண்டவர்.

திருப்பள்ளி எழுச்சி, காலைக்கடன்கள் ( நேரமிருந்தால் மட்டும்), காலைச்சாப்பாடு, திண்ணையடைதல், மதியச்சாப்பாடு, திண்ணையடைதல், அங்கயே பொன்னாமாமி கேண்டினிலிருந்து வரும் பஞ்சி மற்றும் சுக்கு காபி, சாயரட்சை கோவில் தரிசனம் (மாமிகளிடம் பேச்சு, குறை தீர்க்கும் படலம்) வீட்டைதல், இரவுச்சாப்பாடு, ரேடியோ கேட்டபடி தூங்கல், வாரமிரு முறை எண்ணெய் தேய்த்து குளித்தல், அதற்கு முன் துரிய ஸ்கலிதம், மாதமிரு முறை சினிமா, எப்போதும் ரேடியோ, அவ்வப்போது ஹிண்டு பேப்பர், எப்போதும் பேசத்தயாராயிருக்கும் கிரிக்கெட்.

நேரத்தை கொல்வது எவ்வளவு பெரிய வேலை. அதை மிக இலகுவாய், எளிதாய் செய்து கொண்டிருந்த நாராயணன் நம்பியின் அம்ப்யர் காலம் – எங்களூர் கிரிக்கெட்டின் ஒரு கற்காலமாய் போனது துரதிருஸ்டம்தான்.

தூக்கிக்கட்டிய கைலியோடு, தொடை சொறிஞ்சுகொண்டே நாராயணன் நம்பி செய்யும் அம்பயரிங் ஏன் பிரபலமாகவில்லை என்பது ஆராய்ச்சிக்குரிய விடயம். அவரால் ஒரு முழு மேட்சுக்கு நிற்க முடியாது. அவர் திடீரென்று கிளம்பி விட்டால் இன்னொரு அம்பயர் அமையும் வரை மேட்சு நிற்க வேண்டும். அவரால் பேசாமலும் நிற்க முடியாது.

ரேடியோ கேட்டு கமெண்ட்ரி சொல்வது போல அவரே பேசிக்கொண்டிருப்பார்.

அவர் அம்பயரிங் செய்த்தை விட வர்ணனையாளராகவே வாழ்ந்தார். ரேடியோ போல ஏதோ குரல் அவருக்கு கேட்டுக்கொண்டேயிருக்க வேண்டும். இல்லை அவர் பேசிக்கொண்டேயிருக்க வேண்டும். மேட்சு முழுக்க குத்தல் பேச்சு, கமெண்ட்ரி என்று பேசிக்கொண்டேயிருப்பார் நானா.

’ஏ சரவணா இந்த ஸ்பீடு போடறதுக்கு ஏண்டா இவ்வளவு தூரம் ஓடி வர்ற.. என் பின்னாடி நின்னே போடேண்டா.. இன்னிக்கு ஆத்தில பொங்கலா.. தூங்கி வழியறயேடா.. ஒரு ஜமக்காளம் போடவா.. ‘

‘ ஏலே ரமணி மட்டை போடலாம்.. கட்டை போடலாம்.. டீமுக்கு மொட்டை போடதலா..’

‘ கிரிக்கெட் ஆடச் சொன்னா டேன்ஸ் ஆடறயேடா..’ 

அழகான ஓவல் வடிவத்தில் குவிந்து நல்ல கட்டாந்தரையும், சிலயிடங்களில் உட்கார்ந்து மக்கள் பார்க்கும் வசதியும் கொண்ட ரயில்வே மைதானத்தை லாட்ர்ஸ் மைதானம் என்பார். பச்சை பசேலென தென்னை மரங்களோடு கூடி எப்போதும் காற்று வீசிக் கொண்டிருக்கும் எம்ஸ்பி திடலை சிட்னி மைதானம் என்பார். தொலைக்காட்சிகளில் இப்போதெல்லாம் அதைப் பார்க்கும்போதே நாராயணன் நம்பியின் பெயர் பொருத்தம் மெய்சிலிரிக்க வைக்கிறது.

சின்ன பசங்களை கண்டால் அவர் பேசும் மொழியே வித்தியாசமடைந்து விடும். பச்சை, பச்சையாய் பேசுவது. ரன்னருக்கு நிற்கிற பையன்களின் அக்கா, தங்கை, அம்மாக்களின் குசலம் விசாரிப்பது, வெள்ளையாய் கொழுக் மொழுக்கென்று நிற்கிற எல்லா பையன்களையும், அளவுக்கதிகமாய் அரவணைத்து ஊக்குவிப்பது போன்ற செயல்களால் ரன்னர்கள் அம்பயரை தாண்டி பாதுகாப்பான தூரத்திலே நிற்க வேண்டியிருந்த்து.

எல்லாவற்றிற்கும் உச்சமாய் வில்லியம் விளையாட்டாய் கேட்ட கேள்வி வினையாய் முடிந்தது.

“ஏந் அண்ணாத்த, இப்படி சாரம் போட்டு அவஸ்தைப்படறதுக்கு ஒரு பேண்டு மாட்டலாம்ல.. “

“ ஆமாண்டே.. பேண்டுக்கு பதிலா ஒரு ஃபாதர் (பாதிரியார்) அங்கி வாங்கி கொடுத்திடுடே.. வாங்கி மாட்டிகிட்டா ஊரு உலகத்துக்கு தெரியுமா, அங்கிகுள்ள கைவிட்டு நோண்டிக்கலாம் பாரு.. இப்படி லோகமே பாக்கற மாதிரி தொடை தடவ வேண்டாம்ல.. “

ஏற்கனவே தோற்றுப் போகும் நிலையிலிருந்த மேட்டுப்பட்டி அன்பர்கள், இதை சாக்காய் வைத்து துள்ளிக் குதித்து கெட்ட வார்த்தைகள் சொல்லி நானாவின் பரம்பரையையே நாறடித்துவிட்டார்கள். நானாவின் தகப்பனார் விடும் தில தர்ப்பணத்தில் மூன்று தலைமுறைகளும் மூக்கை பிடித்திருக்கும்.

”ஏல. நானா.. தா??. “ என்று ஆரம்பிக்கும் அந்த ஸகஸ்ரநாம அர்ச்சனையோடு தொடை சொறிஞ்சு நானாவின் உன்னதமான அம்பயரிங் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

*

ல்லோராலும் நிராகரிக்கப்பட்ட செந்தில், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அச்சு, துரத்தப்பட்ட நானாவிற்கு பின்பு ரமணிக்கு அந்த மூட்கீரிடம் வந்த்து. ஸ்பின்னிற்கு பதிலாக வெயிடாகவும், இரண்டு ரன்களை கப்பையின் வழியே நாலாகவும் மாற்றிக்கொண்டிருந்த ரமணிக்கு அந்த பொறுப்பை கொடுத்து, ஊக்கம் கொடுத்து அவன் பின்னால் செயல்பட்டான் செந்தில்.

கழுகின் முகமாய் கோழி களத்தில்.

ரமணிக்கு செந்தில் நிறைய டிப்ஸீகளை சொல்லிக் கொடுத்தான். அம்பயரின் முக்கியமான வேலை –  நல்ல பாலை நோபாலாக்குவது. செந்தில் ரமணிக்கு அதில் குரு தீட்சை அளித்தான்.

ரயில்வே டீமில் குமார், ரமணன் பந்துகள் அதி பயங்கரமாய் சுழலும். அதை இறங்கி ஆடாவிட்டால் ரொம்ப ஆபத்து. இறங்கி ஆடினாலும் ஸ்டெம்பிங்கோ, எல்பிக்கோ கண்டிப்பான வாய்ப்புகள் உண்டு. மிக கவனமாய் ஆன் – டிரைவ் செய்ய வேண்டிய பந்துகள் அவை. அவன் பந்தின் வேகத்தையும், உயரத்தையும் மாற்றி மாற்றி போடுவான். பில்டர்களையும் லாவாகமாய் நிற்க வைத்து பேட்ஸ்மேன்களை பயமுறுத்தி விடுவான். புதுசாய் வந்த பேட்ஸ்மேன் ஒரு சில பந்துகளை தாக்கு பிடித்தபின்பு தான் ஓரளவு நிம்மதி பெருமூச்சு விடமுடியும்.

மேலத்தெரு மஜீத்தின் பந்துகள் வெளியே போவது மாதிரி தலை காட்டிவிட்டு, டுபுக்கென பின் காலால் பாயும் நாய் போல ஸ்டெம்பை நோக்கி திரும்பும். கடைசி நிமிட்த்தில் வேகமாய் திரும்பும் பந்துகளை பதட்ட்த்தோடு தொடும் பேட்ஸ்மேனின் ஆயுட்காலம் அங்கே நிற்கிற அப்துலால் முடித்து வைக்கப்படும். விழுந்து, விழுந்து எப்படியாவது கேட்ச் பிடித்து விடுகிற அவனை திட்டுக்கொண்டே வரும் பேட்ஸ்மேன்கள் சொல்வது .. “ சரியான ரப்பர் தா..டே.. அம்மை இவனை குரங்குக்கு பெத்தாளொ.. “

மேட்டுப்பட்டி கிற்ஸ்டோபரின் புல்டாஸ் பந்தை,  காற்றிலே சுழற்றி வீசப்படும் பந்தை, விக்கெட் கீப்பர் கைக்கு போகும் என்று நினைத்து பேட்ஸ்மேன் அதற்கு ஸ்டைலாய் வழிவிடும் போது, அது ஸ்டெம்பின் பைல்ஸை  கழற்றும். அந்த ஒரு நல்ல ப்ந்துக்காக அவன் நிறைய வொயிட் பால்கள் போடுவான். எந்த பந்து குச்சியை கழற்றும் என தெரியாது.

இப்படியான நல்ல, அபாயமான பந்தின் தருணங்களில் ’நோ-பால் என்று கத்தியபடி ஒரு தட்த்தை காட்ட வேண்டும். அந்த தட்த்தை அவன் கேட்கும் முன்னரே யாருக்கும் தெரியாமலோ அல்லது அவன் கேட்கும் போது போட்டுக்காட்டியோ உருவாக்கிவிட வேண்டும். சொன்னதை எதாவது சொல்லி சாதித்துவிட வேண்டும். இடம், பொருள், ஏவல் முக்கியம். அந்த ’பொய்த்தடம்’ பற்றி கேள்விகள் சூழ எதிரிகள் வந்தால் உள்ளே குதிப்பான் செந்தில், சூர சம்காரத்திற்காக.

ரமணியின் பொய்த்தடம் அந்த டிசம்பர் 7ம் தேதி மேட்சில் கழன்று விழுந்தது. அணிக்கு வெற்றிதான். அழிச்சாட்டியம் பண்ணி சாதித்த்திற்கு அணி நண்பர்கள் எல்லோரும் பாராட்ட்த்தான் செய்தார்கள். மதிப்பு கூட்த்தான் செய்த்து.

சடக்கென்று ஏதோ ஒரு பூதம் தன் மீது ஏறி உட்கார்ந்து அழுத்தியதாய் மனக்கிலேசம்.

எல்லோரும் தன்னை கையும், களவுமாய் பிடித்த்தால் வந்த அவமானமா. இது எல்லா அணிகளிலும் தெரிந்தே நடக்கிற உளத்தல்தான் எனினும், தன்னை ஏன் அதிகம் பாதித்த்து என்பதை பார்க்க, அதில் தனக்கு முன்பிருந்தே அந்த செயலில் அக ஓட்டுதல் இல்லை என்பது தெரிந்தது.

’நாம இல்லைன்னா இன்னொருத்தன் இருந்து இந்த நோபாலை கொடுத்திருப்பான், இதெல்லாம் சகஜம் ‘ என்று எத்தனையோ சாந்தி யஞ்ஞங்கள் செய்தாலும்  – ஓயாத மன அலையின் பேரிரைச்சல்.

‘ப்ச. செய்திருக்க வேண்டாம் தானே. வேறு யாரேனும் செய்யட்டுமே உனக்கென்ன.. வெற்றியை விட உனக்கு உன் அகம் முக்கியமல்லவா.. ’  அதே அலைவரிசையில் மனக்குரல் சலிக்காமல் அர்ச்சனை செய்து கொண்டிருந்தது.

பொய்த்தடம் விழுந்த இட்த்தில் ஒரு பெரிய ஆலமரத்தின் குழி போல தனக்குள் அமைதி ஏற்பட்டிருந்தது. புயலின் மையத்தின் அமைதி போல, பொய்யின் மையத்தில் சுழலில் சுருண்டுவிடுவதுண்டு. ரமணியால் அந்த நோபாலுக்கு பிறகு எங்குமே பொய் சொல்ல முடியவில்லை.

*

சீனி அண்ணாவிற்கு நிறைய முடி கொட்டிருந்தது. எந்த உணர்ச்சியையும் மிகைப்படுத்தாத அண்ணா, என்னை சந்தித்ததில் ரொம்பவே மகிழ்ச்சியாகவேயிருந்தான். சொந்த ஊரிலே வாழ்க்கை அமைத்துக் கொண்ட பாக்கியவான்களில் அவனும் ஓருவன்.

அதுவும் ரயில்வே கிரிக்கெட் மைதானத்திலே. ஆமாம். இப்போது அந்த மைதானத்தின் பெரும்பகுதியில் கான்கீரீட் கட்டிடங்கள் எழுந்து நிற்கின்றன. மெட்ரோ போல் இல்லாமல் வெறும் இரண்டு அடுக்கு கட்டிடங்களாகவே நின்றது கொஞ்சம் ஆசுவாசம். மைதானத்திற்கு பக்கத்திலிருந்த சுடுகாடும் இப்போது ரொம்பவே தள்ளிப்போயிருந்தது. மனித வாழ்க்கை பெருக்கும்போது பிணங்கள் எரிக்கும் நிலங்களின் மதிப்பும் கூட்த்தானே செய்யும்.

அண்ணாவிற்கு ஏதோ அரசாங்க உத்தியோகம். ஒரு டூவீலர். சூ தேவையில்லாது  செருப்பு மட்டுமே கொண்டு நடத்தி முடித்துவிடுகிற ஒரு சிறு நகர வாழ்க்கை. ஆச்சிக்கு நிறையவே கூன் விழுந்திருந்தது.

“ என்னது.. ரமாக்குட்டி பிள்ளையா.. பாத்து பல நாளாச்சுதேப்பா.. அம்மை நல்லாயிருக்காளா..“ ஆச்சி கேட்டுக்கொண்டே போனாள். நான் சொல்கிற பதில்கள் எதுவும் தேவையற்ற உலகத்தில் அவளிருந்தாள். அண்ணா அவளுக்கு மிசின் எடுத்து கொடுத்து காதில் வைத்துக் கொள்ள சைகையால் சொன்னான்.

மறுபடியும் கேட்ட கேள்விகளையே கேட்டு பதில் வாங்கிக்கொண்டாள்.

“ கல்யாணத்துக்கு கூட பத்திரிக்கை அனுப்பாம பண்ணிட்டேகளேப்பா.. “ குறை பட்டுக்கொண்டாள்.

” ஆச்சி.. சொல்ற நிலமையிலே கல்யாணமாகல பாத்துக்க.. வடக்கு பொண்ணு.. அம்மைக்கு முழுசா சம்மதிமில்லைல்லா.. சுருக்கமா.. பண்ணவேண்டி.. அண்ணமாருங்க செஞ்சு வைச்சது.. “

”என்னயிருந்தா.. என்னப்பா.. மனுசாளுக்குத்தானப்பா வாக்கபடுதோம்.. சீக்கிரம் குழந்தை ஓண்ண பெத்துக் கொடுப்பா.. உங்கம்மை பாவம்பா.. அதுக்கு பீ, மூத்திரமள்ள முத ஆளா நிப்பாப்பா.. கூறுகெட்ட குப்பச்சி.. வாய்தான் அதுக்கு பெரிசு.. குழந்தையை மடில எறிஞ்சா  சிரிச்சிட்டேல்ல நாங்க அழுவோம்.. “

அதை சொல்லியபடியே ஆச்சி தனக்குள்ளே அழ் ஆரம்பித்தாள். சத்தம் வராத அழுகை. தாரை தாரையாய் கண்ணீர் வர ஆரம்பித்தது. சீனி அண்ணாவிற்கு ரொம்ப சங்கடமாயிருந்திருக்க வேண்டும்.

“ யே.. அம்மா.. ரொம்ப நாள் கழிச்சு வந்தவண்ட்டயும் ஒப்பாரி ஆரம்பிசிட்டயா.. “ அவன் இயல்பை மீறிய சத்தம். கத்தல். பதட்டம். இயலாமை.. இருவருக்கும் ரொம்ப நாள் தொடர்ந்து கொண்டிருக்கிற ஆதங்கத்தில், உரையாடலின் தொடர்ச்சியான குரல்.

சண்டை  யட்சி வீட்டிக்குள்ளே மூலையில் உட்கார்ந்திருப்பது போலயிருந்தது.

ஆச்சியிடம் சொல்லிவிட்டு வெளியே வந்த போது, அண்ணா மனைவியின் குரல் மேல்மாடியிலிருந்து கேட்டுக்கொண்டிருந்தது. அண்ணா மனைவி மல்லிகா அக்கா டீச்சர். அரசாங்க பள்ளியில் டீச்சர். பெருத்த சரீரம். டியுசன் வகுப்பில் மட்டும் பெருத்த சாரீரம். கண்டிப்பான டீச்சர். இருபது வருட தாம்பத்தியம். மழலை சொல் கேளாத இல்லம். ஆச்சியின் கண்ணீராய்.

“அண்ணே, அக்காகிட்ட சொல்லியிருங்க.. நான் இன்னிக்கு ராவே கிளம்பறேன்.. சென்னைல செந்தில, அச்சுவா பாத்துட்டு போலாம்னு ஒரு ஐடியா.. இருக்கு.. “

அண்ணா பேசாமல் கூடவே நடந்து வந்தான். எல்லாயிடமும் கட்டிடங்களான அந்த பகுதியின் நடுவிலும் சின்னதாய் ஒரு கிரவுண்டு இருந்தது. சிறுவர்கள் சைக்கிள் ஓட்டிக்கொண்டு, சின்னதான கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தனர்.

அண்ணா அந்த மைதானத்தின் நடுவில் நின்று மறுபடியும் சுத்தி பார்த்தான். அவன் தன்னை பின் நோக்கி சுழற்றிக் கொள்கிறானா, காலச்சக்கிரத்தில். அந்த இடம் பழைய மைதானத்தின் எந்த இடமாக இருந்திருக்கும் என்று என்னால் கணிக்க முடியவில்லை. அண்ணாவிற்கு அது தெரிந்திருக்கலாம்.

ரமணியை பார்த்து சிரித்தான். ரமணியும் அவனைப் பார்த்து சிரித்தான். அந்தக் கேள்வி அவனுக்குள்ளே குதித்துக் கொண்டெயிருந்தது. கேட்கலாமா ? கூடாதா ? அவனை அறியாமலே கேள்வி ஒரு இன் – சுவிங்கர் பெளன்சர் போல எழும்பி வந்தது .

“ ஏண்ணே, என்னன்னே பிரச்சனை ? “

அண்ணாவிற்கு புரிந்தது. பதில் சொல்ல விருப்பமின்றி தன்னை காலச்சக்கரத்திற்குள் புகுத்திக் கொண்டான் போல. நான் கேட்டிருக்க கூடாதோ ?

ஒரு சில தப்படிகள் மெளனமாக நகர்ந்தபின், தலையை உயர்த்தி அண்ணா சொன்னான்..

“  நோ-பால் கொடுக்கறதுக்கு யாருமேயில்லடா.. “

சொல்லிவிட்டு என் கைகளை இறுக்கி அணைத்து கொண்டார். நான் எதிர்பார்க்காத சிரிப்பை, அவனே இதுவரை சிரிக்காத சிரிப்பை சத்தமிட்டான்.

கிளவுசில்லாமலே அவன் கை நிறைய வேர்த்திருந்தது.

புகைப்படத்துக்கு நன்றி:

 http://www.leadersquest.org/cms/wp-content/uploads/Ruralvisit3.jpg#.UG1mHphhwqw

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “நோ-பால் – No Ball

  1. நல்லதொரு வித்தியாசமான நடை.  எனக்கு இந்த் சிறுகதை மிகவும் பிடித்தது.

  2. சிறந்த கதை பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.