மறவன்புலவு க. சச்சிதானந்தன்

பேரா. ம. ரா. ப. குருசாமி அவர்கள் நேற்று 06.10.2012 கோயம்புத்தூரில் காலமானார் என்ற செய்தியால் உலுங்கினேன்.

1963இல் கலைக்கதிர் இதழுக்கு அறிவியல் கட்டுரைகளை நான் எழுதிய காலங்களில் பேராசிரியர் ம.ரா.போ.குருசாமி அவர்கள் பதிப்பாசிரியராக இருந்து என்னை ஊக்குவித்தாராயினும் நேரில் காணும் வாய்ப்புப் பெற்றிலேன்.

கோவைக் கம்பன் கழகம் பதிப்பித்த கம்பராமாயணம் தொகுதியை அச்சிடல் தயாரிக்கும் பணியை என்னிடம் தந்தனர். அப்பணி தொடங்கிய காலத்தில் பேரா. அ. ச. ஞா. அறிமுகம் செய்ய 1987இல் பேராசிரியர் ம.ரா.போ.குருசாமி அவர்களின் அன்புக்கு உரியவனானேன்.
 
சென்னைக்கு வருவார். பேரா. அ. ச. ஞா. இல்லத்தில் சந்திப்பேன். என்னிடம் வண்டி இருந்த காலங்களில் சென்னைத் தொடர்வண்டி நிலையத்திலிருந்து அழைத்துவரும் பேறும் பெற்றிருக்கிறேன்.  

1991-1993 ஆண்டுகளில் என் ஆண் மக்கள் கோவையில் கற்ற காலங்களில் அவரின் பாதுகாப்பு அவர்களுக்குக் கிடைத்தது.

அவரின் தாமு நகர் இல்லத்துக்குப் பலமுறை போயிருக்கிறேன்.

அந்தணர், அறவோர், செந்தண்மை பூண்டவர், செயல்வீரர் என்ற தகைமைகளைத் தேடுகையில் என் கண்முன் தோன்றுபவர்களுள் பேராசிரியர் ம.ரா.போ.குருசாமி அவர்களும் ஒருவர்.

தன்மானம் மிக்கவர். புலமைக்கு மதிப்பளித்தவர். எவரையும் செல்வந்தர் என்றோ, அரசியல்வாதி என்றோ, அதிகாரி என்றோ கருதி அளவுக்கு அதிகமாகப் பணிவுகாட்டார். அதில் அவருக்கும் பேரா. அ. ச. ஞா.வுக்கும் ஒற்றுமை அதிகம்.

என் மீது அளவற்ற பாசம் கொண்டிருந்தார். அவர் சொற்களுக்கு அச்சுப் பதிப்புச் செயல்வடிவம் தரும் ஆற்றல் எனக்குண்டு எனக் கருதியவர்.

1990களில் நான் அச்சிடத் தயாரித்த முருகன் பாடல் தொகுதி முழுவதையும் 2011இல் என்னிடம் கேட்டார், என்னிடம் இருந்த படிகளைக் கொடுத்தேன். கௌமார மடத்தாரிடம் சேர்த்தார்.

முருகன் பாடல் தொகுதி முழுவதையும் மீள அச்சிடவேண்டும் என்ற ஆர்வத்தை அருட்செல்வர் நா. மகாலிங்கத்துக்குப் பேரா. ம. ரா. பொ. குருசாமி அவர்கள் ஊட்டியதால் அந்தப் பணி இப்பொழுது முடுக்கிவிடப்பட்டுள்ளது.

அவரது அண்ணர் திரு. ம. ரா. போ. பாலகணபதி அவர்களைப் பிஜி நாட்டில் 1971இல் சந்தித்தேன். அப்பொழுது அவர் அங்குள்ள விவேகானந்த தமிழ்ப் பள்ளியின் தலைமை ஆசிரியர். ஓய்வுக் காலத்தில் நியுசீலாந்தில் வாழ்ந்தார். ஒருமுறை சென்னை வந்தார். கந்தரனுபூதி ஆங்கில மொழிபெயர்ப்பைப் பதிப்பிக்குமாறு என்னிடம் கேட்டார். பதிப்பித்தேன்.

2012 ஆனியில் பன்னிரு திருமுறைச் சொல்லடைவு தொடர்பாக அருட்செலவர் நா. மகாலிங்கம் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, பேராசிரியர் ம.ரா.போ.குருசாமி அவர்களின் வழிகாட்டலில் பேராசிரியர் பலருடன், கணிணி வல்லுநர் பலருடன், புலவர் மணியன் அவர்களுடன் மூன்று நாள்கள் கோவையில் தங்கிக் கலந்துரையாடினேன்.

1963 தொடக்கம் 2012 வரை ஏதோ ஒரு வழியில் தொடர்பாக இருந்தோம். தமிழ் அமைத்த பாலத்தால் இணைந்திருந்தோம்.

2012 ஆனியில் தாமு நகரில் அவர் இல்லம் சென்றிருந்தபொழுது பழுத்த பழமாக இருந்தார்.
அவர் நூல்களுக்கு நான் கூறும் கருத்துரைகளால் ஈர்க்கப்பட்டவர்.

காலனுக்கு ஏனிந்த அவசரம்?
தமிழ் மொழிக்கு ஏனிந்த அவலம்?
தமிழறிஞர் குழாமுக்கு ஏனிந்த இழப்பு?
அறவோர் அணிக்கு ஏனிந்தக் குறைவு?
அரற்றுவேனாயினேனுக்கு ஏனிந்த அழுகை?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *