Blog

  • தேவாரத் தலங்கள் – மாந்துறை

     

    நூ த லோகசுந்தர முதலி

    மயிலை

    இக்குறுத் தொடரில் திருச்சி சமயபுரம் அருகு முதற்கண் பிடவூர் ஊற்றத்தூர் என இரு வைப்புத் தலங்களைக் கண்டோம். பின்பு திருச்சி மாநகருக்கு வடகிழக்கே காவிரி-கொள்ளிடம் (தோல்கேட்) கடந்து வடக்காக சமயபுரம் செல்லாமல் கிழக்காக லால்குடிக்கு பிறிந்து செல்லும பெருவழியில் 5 கி மீ சென்றால் காணும்  மாந்துறை எனும் ஞானசம்பந்தர் பதிகம் பெற்ற தலத்தினைக் காணலாம். இருந்தும் செலவுவழி பொருத்தமாக அமைய நேராக மேலும் 2 கிமீ கிழக்கு திருத்தவத்துறை என தேவாரம் குறிக்கும் லாலல்குடி வைப்புத் தலத்தினைக் வழிபட்டோம் பிறகு அதற்கு மேலும் 5 கிமீ கிழக்கமைந்த அன்பிலுளள்ள ஆலந்துறை எனும் பாடல் பெற்றத்தலத்தினையும் கண்டு இப்போது கடைசியாக திருச்சி திரும்பும் முன்பு இரண்டாம் திருமுறையில் திருஞானசம்பந்தரின் நட்டராகப் பண்ணமைந்த ஓர் பதிகம் உள்ள மாந்துறை திருத்தலத்தினைக் காண்போம்

    இதன் பதிகப் பாடல் ஒவ்வொன்றிலிலும் வடகரை என வேறு ஒரு மாந்துறையிலிருந்து வேறு படுத்திக் காட்டும் சிறப்புள்ளது. காவிரி வெள்ள நீரில் சுமந்து வரும் பல்வகைப் மலைவளப் பொருள்கள் நிரல்பெற குறிக்கப்படுவது மிக நன்றாக உள்ளது.

    வேங்கை ஞாழல் செருந்தி செண்பகம் மாதவி சுரபுன்னை குருந்தம் ஆரம் (சந்தனம்) விளா மூங்கில் குன்றி பூகம் (பாக்குவகை) இலவம் ஈஞ்சு (ஈச்சமரம்) இளமருது இலவங்கம் குரா கோங்கு செண்பகம் குருந்து பாதிரி சந்தனம் காரகில் நறவம் மல்லிகை முல்லை மௌவல் கழை(முங்கில்) நறவு வேலம் மா கதலி (வாழை) என நீளும் 32 பயிர்வகைகளும் ஆனைக்கொம்பு மயிற்பீலி மாணிக்கம் நீலமணி நித்திலம் என மிதந்து வரும் மாண்புடை பொருள்களும் மந்திகள் மாங்கனி மாந்தல் முதலிய இயற்கை வருணனைகள் முதலியவையும் இப்பதிகப்பாடலில் பேசப்பட்டுள்ளன.

    மேலும்
    திரையார்புனல் கெடில வீரட்டமும் திருவாரூர் தேவூர் திருநெல்லிக்கா
    உரையார் தொழநின்ற ஒற்றியூரும் ஓத்தூரும் மாற்பேறும் மாந்துறையும்
    வரையார் அருவிசூழ் மாநதியும் மாகாளம் கேதாரம் மாமேருவும்
    கரையார் புனல் ஒழுகு காவிரிசூழ் கடம்பந் துறை உறைவார் காப்புக்களே 6.7.4
    அப்பரடிகள் தேவாரம்-திருவீரட்டானம்-காப்புத்திருத்தாண்டகம்
    நிறைக்காட் டானே நெஞ்சத் தானே நின்றி யூரானே
    மிறைக்காட் டானே புனல்சேர் சடையாய் அனல்சேர் கையானே
    மறைக்காட் டானே திருமாந் துறையாய் மாகோ ணத்தானே
    இறைக்காட் டாயே எங்கட் குன்னை எம்மான் றம்மானே. 7.47.3

    சுந்தரர் தேவாரம் – ஊர்த்தொகை

    ஊரெலாம் துஞ்சி உலகெலாம் நள்ளென்று
    பாரெலாம் பாட இந்தப் பாய் இருள்கண்-சீருலாம்
    மாந்துறைவாய் ஈசன் மணிநீர் மறைகாட்டுப்
    பூந்துறைவாய் மேய்ந்(து) உறங்கா புள் 11.295

    சேரமான் பெருமான் பாசுரம்- திருவாரூர் மும்மணிக்கோவை 26

    என வரும் திருமுறைப்படல்களிலும் மாந்துறை / திருமாந்துறை என இரு தலங்கள் காட்டப்பட்டுள்ளன. இவைப்பற்றி வேறு துணைக் குறிப்புகள்/முன்அடை/பின்அடை ஏதும் காணாமையால் இவை வேறு வைப்புத் தலங்களாகவும் கொள்ளலாம்.

    நன்காய்ந்த பின்பே பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் பெருந்தகை ஞானசம்பந்தரின் வழிபாட்டுச் செலவு பற்றி விளக்குங்கால்
                   கஞ்சனூர் ஆண்ட தம்கோவைக் கண்உற்று இறைஞ்சி முன்போந்து  
                   மஞ்சணி மாமதில் சூழும் மாந்துறை வந்து வணங்கி
                  அஞ்சொல் தமிழ் மாலை சாத்தி அங்கு அகன்று அன்பர் முன்னாகச்
                 செஞ்சடை வேதியர் மன்னும் திருமங்கலக் குடி சேர்ந்தார் 6.1.293
    என கூறுகிறார்

    இங்கு ஒரு மாந்துறைதனை காட்டுவதன்றி அதற்கு பதிகம் பாடி உள்ளதாகவும்  கூறுகின்றார். “மஞ்சணி மதில் சூழ்ந்த” என்பதால் குறைந்தது சேக்கிழார் காலமாகிய 13 ம் நூற்றாண்டில் இருந்துள்ள ஓர் கோயில் பெறப்படுகின்றது. இஃது தற்காலத்தில் போற்றுதலுடன் விளங்கும் சூரியனார் கோயிலிலிருந்து சிறிது துரத்தே அமைந்துள்ளது என்கின்றனர். சம்பந்தர் பதிகப் பாடல்களில் காணும் விளக்கங்கள்படி அது ஓர் அகண்ட காவேரிக் கரையில்தான் இருக்க வேண்டும் அப்பண்பு இக்கஞ்சனூர் மங்கலக்குடி இடையுள்ளதற்கு சிறிதும் பொருந்தாது.சேக்கிழார் காலத்திருந்து பின் தொலைந்து பட்ட ஓர் பதிகமாவதற்கு வாய்ப் மிகக்குறைவே. ஆக இதனில் ஏதோ ஓர் கருத்து வைப்பினில் முரண்பாடுள்ளது.

    ஆனால், நம் வடகரை மாந்துறை பற்றி பேசுங்கால் சேக்கிழார் மிகச் சரியாகவே சம்பந்தர் பதிக 6வது பாடலில் குறிக்கப்பட்ட சூரிய சந்திரர் வழிபாட்டினை காட்டுவதால் பாடல்பெற்ற வடகரை மாந்துறை பற்றி யாதொரு ஐயமுமில்லை
         
    மேலும்
    திருமாந்துறை என ஓர்த்தலம் பெரம்பலுர் மாவட்டத்தில் தொழுதூர் அருகு ஓர் சீரிய ஆற்றங் கரையில் அமைந்துள்ளது. தற்காலம் திருச்சி சென்னை பெருஞ்சாலைவழியில் திருச்சிக்கு அடுத்து காணும் சாலை வரி தண்டும் TOLL PLAZA அமைந்த திருமாந்துறையிலும் பெரிய
    பழமையான கோயில் உள்ளது.

    எனவே குறிக்க மட்டும் காணும் இம் மாந்துறைகளை வைப்புத் தலங்களாகக் கொள்ளவது மரபு எனலாம்

    நம் வடகரை மாந்துறை இறைவர்=மாந்துறை நாதர் அம்மை=பாலாம்பிகை, தலப்பயிரினம்=மா. கோயில் சாலைக்கு மிக அருகேயே உள்ளது. சிறிய சீர்மிகு 3 நிலை 7 கலச பதுமைகள் நிறைந்த கோபுரம் தேவார திருப்புகழ்ப் பாடல்கள் பொளித்த கற்பலகைகள் சில நூற்றாண்டு பழமையான கல்வெட்டு ஒன்றும் அம்மை அப்பன் திருமுன்களை சூற்றிவர அகன்ற தூய்மையாக பராமரிக்கப்பட்டுள்ள திருச்சுற்றும் காணப்படுகின்ன.

    முன்பு குறித்தபடியே லால்குடி அன்பில் மாந்துறை என மூன்றினையும் ஓர் முற்பகலிலலேயே திருச்சியிலிருந்து நகரப்பேருந்து பிடித்தே சென்று ஆரவாரமற்ற தியான நிலையில் வழிபட்டு திரும்ப முடியும்.

    என் கருவி உட்கொண்ட சில காட்சிகளை இணைப்பினில் காண்க

    முறையான திட்டத்துடன் திருமுறைத் தலங்களை வழிபட நினைவோர் திருவானைக்கா பாச்சில் பைஞ்ஞீலி பாற்றுறை எனும் அணித்தே உள்ள ஏனைய காவிரி வடகரைத் தலங்களுடன் இணைந்தும் இவற்றை வழிபடலாம்.

    11 attachments — Download all attachments   View all images  
    1mAntuRairaja.jpg 1mAntuRairaja.jpg
    140K   View   Download  
    2talavaralARu-kal1.jpg 2talavaralARu-kal1.jpg
    95K   View   Download  
    3talavarlRu-kal2.jpg 3talavarlRu-kal2.jpg
    355K   View   Download  
    4mAntuRai-gnAnatEvAram.jpg 4mAntuRai-gnAnatEvAram.jpg
    208K   View   Download  
    5mAntuRai-gnAnatEvAram2.jpg 5mAntuRai-gnAnatEvAram2.jpg
    272K   View   Download  
    6mAntuRai-tEvAram-d-f.jpg 6mAntuRai-tEvAram-d-f.jpg
    552K   View   Download  
    6mAntuRai-tiruppukazh.jpg 6mAntuRai-tiruppukazh.jpg
    231K   View   Download  
    7mAntuRai_inscr.jpg 7mAntuRai_inscr.jpg
    445K   View   Download  
    7mAntuRaisuRRukkoyilkaL.JPG 7mAntuRaisuRRukkoyilkaL.JPG
    124K   View   Download  
    8mAntuRaimUlaSW.jpg 8mAntuRaimUlaSW.jpg
    417K   View   Download  
    9mAntuRaimUlaNW.jpg 9mAntuRaimUlaNW.jpg
    406K   View   Download  

     

    Share
  • மாணவர் தளம்: தமிழார்வம்

     

    இன்னம்பூரான்

    1.முகவுரை


    1.1. இன்று விஜயதசமி. வித்யாரம்பத்திற்கு உகந்த சுபதினம். துவஜாரோகணம். கொடியேற்றத்துடன் துவங்குவோமாக.

    1.2. மாணவர்கள் படிக்கும்போது குறிப்பு வைத்துக்கொள்வது நல்ல பழக்கம். அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வது அந்த நல்ல பழக்கத்தின் அடுத்த கட்டம். ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினால், இந்த பயிற்சி மேன்மை பெறும். அதற்கு எல்லை என்பது இல்லை. தொடுவானம், நெருங்க நெருங்க, எட்டக்கூடாமல் நகருவதைப் போல், கற்றுக்கொள்வதற்கு விண்மீன்களை போல கணக்கற்ற விஷயங்கள் உளன. கற்றது கைமண்ணளவு: கல்லாதது உலகளவு. வாழ்நாள் முழுதும் தொடரக்கூடியது, கல்வி ஒன்றே. ஏன்? அதற்கு பின்னும் கல்வியின் அரும்பணி தொடருகிறது. அதனால் தான் 2012ல் கம்பனுக்கு விழா எடுக்கிறார்கள். இந்த எல்லை கடந்த யாத்திரையை ‘தமிழார்வம்’ துவக்கி வைப்பது ஒரு நன்நிமித்தமே.  

    1.3. தமிழ் மொழி தொன்மையானது. அதனுடைய இலக்கியத்தின் எழிலும், இலக்கணத்தின் கட்டுக்கோப்பும், வழுவமைதியும், நீதி நூல்களின் நன்கொடையாகிய நன்னெறியும் நம் தாய்மொழியாகிய தமிழுக்கு ஒளி வட்டமாயின. காப்பியங்களின் விசால தளங்களும், இயல், இசை, நாடக கலைகளின் கவின் வசீகரமும், பக்தி இலக்கியத்தின் ஆழமும், அதற்குக் கட்டியம் கூறின. பரண்களில் தூங்கிய ஏட்டுச்சுவடி கருவூலங்களும், சி.வி.தாமோதரம் பிள்ளை, தமிழ்த்தாத்தா போன்ற சான்றோர்களின் திருப்பணியால், அச்சுக்கு வந்தன. தமிழார்வலர்களின் உழைப்பினால், இன்று பல நூல்கள் மின் கருவூலங்களில் சேகரிக்கப்படுகின்றன.

    1.4. நூறாண்டுகளுக்கு முன்னால், குடத்திலிட்ட தீபம் போல் ஆங்காங்கு தமிழ் மணம் பரப்பிய புலவர் பெருமக்கள் பலர். அவர்களின் தமிழ்த்தொண்டு, தமிழன்னைக்கு மாலை மரியாதை செய்து, வணங்கியது. குருகுலவாசமும், திண்ணைப்பள்ளிக்கூடங்களும், அணி வகுத்து, அவளை ஆராதித்தன. அதற்கு பின் வந்து நூதனமாக வந்த தமிழ் உரை நடை, நாளொரு மேனியாகவும், பொழுதொரு வண்ணமாகவும், விரைவாகவே வளர்ந்தது.

    1.5. செழித்து வளரும் தமிழுக்கு மெருகேற்றிய புதின/கட்டுரை/ சிறுகதை/மொழியாக்க/புதுக்கவிதைப் படைப்பாளர்களின் நுட்பமான அணுகுமுறையையும், கற்பனைத்திறனையும், படைப்பாற்றலையும், பிரதிபலிப்பு மென்மையையும் பாராட்டுவோமாக. எப்படி? நாம் அவற்றை திறனாய்வு செய்தது மிகக்குறைவு. க.நா. சுப்ரமண்யம், சி.சு. செல்லப்பா போன்ற விமர்சகர்கள் தற்காலம் தென்படுவதில்லை. தமிழுலகில் பல முன்னேற்றங்கள் இருந்தாலும், தமிழ் மொழி வளர்ச்சி/ அதன் மீது ஆர்வம்/ கல்வித்தரம்/ வரலாற்று பதிவுகள்/ இலக்கிய தாகம் ஆகியவை போதவே போதாது. தயங்கி, தயங்கி, இப்படி ஒரு அரில் அகற்ற நினைத்தபோது, எதிர்பாராமல், ஆதரவு வந்து சேர்ந்தது. அதை அனுபந்தமாக இணைத்திருக்கிறேன்.     நம்மால் இயன்றதை செய்வோம். வருங்காலத்தில் தமிழ் பிரகாசிக்கட்டும்.

     

    1.6. ‘மாணவர் தளத்தில்’ இயல்பாகவே குற்றம் குறைகள், தவறுகள் இருக்கலாம். திசை மாற்றாமல் அவற்றைக் களைந்தும், மேலதிக விவரங்களை அளித்தும், மேன்மை படுத்துவோர்க்கு என் நன்றி உரித்ததாகுக.

    1.6. அடுத்து வருவது, முதலாவதாக மூலிகைத்தமிழ்.

    (தொடரும்)

    இன்னம்பூரான்

    24 10 2012

    *

    அனுபந்தம் :மாணவர் தளம்: தமிழார்வம்

    புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் சமீபத்திய அறிவிப்பு ஒன்றிலிருந்து:

    ‘தமிழியல் ஆய்வானது இலக்கியம், இலக்கணம், மொழியியல், வரலாறு, தொல்லியல், மானுடவியல், நாட்டுப்புறவியல் உள்ளிட்ட பன்முகத்தன்மையைக் கொண்டதாக விளங்குகிறது. தமிழகப் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் தமிழியல் ஆய்வுகள் என்பவை இப்பன்முகத்தன்மையை வெளிக்கொணரும் வகையில் நடைபெறுகின்றபோதிலும், அவை தனித்தனி தீவுகளாகவே இருந்துவருகின்றன. ஒரு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஆய்வுகள் குறித்து வேறு பல்கலைக்கழக ஆய்வாளர்களில் பெரும்பான்மையினருக்குப் போதிய அறிமுகம் இருப்பதில்லை. சமகால ஆய்வுப் போக்குகள் குறித்து பரஸ்பர புரிதல் இல்லாத சூழலே இன்றளவும் தமிழியல் ஆய்வுலகில் நிலவிவருகிறது. அவ்வாறான புரிதலை வளர்த்தெடுப்பதற்கான அக்கறையும் அரிதாகவே காணப்படுகிறது.

    ஒரு பொருண்மை குறித்து முன்னர் நடைபெற்ற அல்லது சமகாலத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆய்வுகள், அவற்றில் பின்பற்றப்படும் ஆய்வு முறைமைகள், ஆய்வு முடிவுகள் என இவற்றைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளாத சூழலில் மேற்கொள்ளப்படும் ஆய்வு என்பது அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறாமல் ஒரே இடத்தில் தேங்கி நின்றுவிடுவதற்கான வாய்ப்புகளே அதிகம். மாறாகச் சமகால ஆய்வுப் போக்குகளை உள்வாங்கிக்கொண்டு மேற்கொள்ளப்படும் ஆய்வானது ஆய்வுப் பொருண்மை குறித்த புரிதலை மேம்பட்ட நிலைக்குக் கொண்டுசெல்வதாக அமையும்.

    பலதரப்பட்ட பொருண்மைகளில் தமிழியல் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ஆய்வாளர்கள் ஆய்வு தொடர்பான தங்களது கருத்துகளை, ஆய்வு முறைமைகளை, ஆய்வுலகில் சந்திக்கும் சிக்கல்களை இன்ன பிறவற்றைத் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் வெளியை உருவாக்குவது இன்றைய தமிழியல் ஆய்வுலகில் அவசியத் தேவையாக உள்ளது. இத்தகு வாய்ப்புகளை ஆய்வாளர்களுக்கு உருவாக்கித்தருவதன் மூலம் அவர்களது சிந்தனையையும் ஆய்வு தொடர்பான புரிதலையும் அடுத்த கட்டத்திற்கு உயர்த்த முடியும்.

    தமிழியல் ஆய்வுலகில் இருக்கும் ஆய்வாளர்கள் தங்களுக்குள் ஆய்வு தொடர்பான கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும், தமிழியலின் பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்ளவும் ஒரு களத்தை அமைத்துத்தருவதாகக் கருத்தரங்கங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அந்த வகையில் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனமும், பெர்க்கிலியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகமும் இணைந்து கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12, 13 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத் தமிழியல் ஆய்வாளர்களை ஒருங்கிணைத்து ஒரு கருத்தரங்கை முன்னெடுத்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்தக் கருத்தரங்கமும் ஒருங்கிணைக்கப்படுகிறது.’

    Retrieved with thanks,on October 24, 2012 and acknowledging their copyright, from

    http://www.ifpindia.org/Research-in-Tamil-Studies-A-Platform-for-Dialogue.html

    சித்திரத்திற்கு நன்றி: http://img129.imageshack.us/img129/7631/tamil3qe.gif

    ===================================================================

     

     

    Share
  • நவராத்திரி மகிமை

     

    தமிழ்த்தேனீ

    மகாராஜா சுரதா,  ராஜ குரு சுமதாஅவர்கள் கூறிய  ஆலோசனையின்படி  “பஞ்சபூதங்களில்  ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை  பூஜிப்போருக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்…’ என்று, தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளபடி,  மகாராஜா சுரதா தூய்மையான ஆற்றுக் களிமண்ணைக் கொண்டு, காளி ரூபத்தைச் செய்து, அதை ஆவாஹனம் செய்து, உண்ணாவிரதம் இருந்து, காளி தேவியை வேண்டினார். அந்த வேண்டுதலின் பயனாக அந்த மகாராஜா தன் பகைவர்களை அழித்து,  அவர்களின் இன்னல்களிலிருந்து விடுதலை பெற்றார். எனவே, அம்பிகைக்கு பிடித்த பொம்மைகளைக் கொண்டு கொலு வைத்து வழிபாடு செய்வது, நவராத்திரியில், குறிப்பாக சரஸ்வதி பூஜை வழிபாட்டின் முக்கிய அங்கம் பெறுகிறது. மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. ஒன்பது படிகள் அமைப்பதுபொதுவான  மரபு.

    புரட்டாசி மாதம் 29ம் தேதி, அக்டோபர் 15ம் தேதி திங்கட்கிழமை சித்தயோகம், அமாவாசை அன்று நவராத்திரி விழா தொடங்குகிறது .இந்த நவராத்திரி விழாவை சிறப்பாகக் கொண்டாட அவரவர்கள் சக்திக்கும், இருக்கும் இடத்துக்கும் ஏற்ப  மூன்று படிகள். ஐந்து படிகள், ஏழு படிகள், ,ஒன்பது படிகள் என்று அமைத்து அந்தப் படிகளில் பலவிதமான தெய்வங்களின் உருவ பொம்மைகளை, மற்றும் நமக்கு மனதுக்கு உகந்த நடைமுறை வாழ்க்கையில் இருக்கும் மக்களில் நம்மைக் கவர்ந்த 12 ஆழ்வார்களின் பொம்மைகள், 63 நாயன்மார்களின் பொம்மைகள். மஹாத்மாகாந்தி, சுபாஷ் சந்திரபோஸ், வாஞ்சிநாதன், கப்பலோட்டிய தமிழன் வ.உ .சிதம்பரம்பிள்ளை, ஜவஹர்லால்நேரு, இந்திராகாந்தி, காமராசர், பாரதியார் ,பாரதிதாசன் ,வியாபாரச் செட்டியார் பொம்மை, குறவன் குறத்தி பொம்மைகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, போன்ற நம் தேசத்தில் நினைவு கூரவேண்டியவர்களின், தலைவர்களின் உருவ பொம்மைகள்  போன்றவற்றை வைக்கிறோம், அதையும் தவிர நாம் அன்றாடம் பார்க்கும் விலங்குகள் பசு ,ஏரில் பூட்டிய காளைகள், நிலத்தை உழும்  உழவன்,  போன்றவர்களின் பொம்மைகள் எல்லாவற்றையும் அவைகளை வைக்கவேண்டிய  தகுந்த இடங்களில் வைத்து மகிழ்வது நம் வழக்கம்.

    அதே போல் பக்கத்திலே  மண் கொட்டி பூங்கா அமைத்து, அதன் பக்கத்திலே கோயில் அமைத்து, அந்தக் கோயிலுக்கு எதிரே நம் வீட்டில் உள்ள தாம்பாளத்தில் படிக்கட்டுகள் அமைத்து நடுவிலே நீர் ஊற்றி குளம்போல் தோற்றம் ஏற்படுத்தி அதில் நீர்வாழ் மீன்கள், தவளை கொக்கு போன்ற பொம்மைகளை  வைத்து, அலங்கார விளக்குகள் அமைத்து அழகுக்கு அழகு சேர்த்து கலைநயத்துடன் நவராத்திரியைக் கொண்டாடுகிறோம்.

    இப்படி எல்லாப் பொம்மைகளையும் வைத்துவிட்டு, நம் சுற்றத்தார், அண்டை அயலார் என்கிற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் இந்த விழாவிலே கலந்துகொள்ள அவர்கள் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு  தாம்பாளத்தில் வெற்றிலைபாக்கு,மஞ்சள், குங்குமம், பலவிதமான பழங்கள் போன்றவைகளை வைத்து அழைத்துவிட்டு, தினமும் அன்றிலிருந்து தொடங்கி விசேஷமான பூஜைகள் செய்து  பலவிதமான  உகந்த தின்பண்டங்களை , சமைத்து  நிவேதனம் செய்து   அவைகளை வீட்டிற்கு வரும் அனைவருக்கும் பகிர்ந்தளித்து  மகிழும் பண்டிகை நவராத்திரி ஆகும். இந்த ஒன்பது நாட்களிலும் வீட்டிற்கு வரும் குழந்தைகள், மற்றும் பெரியவர்கள் அனைவரும் மகிழும்படி வரவேற்று , நம் இதிகாச, புராணங்களில் இருந்து நம் மனதைக் கவர்ந்த  ஶ்ரீராமன், ஶ்ரீ கிருஷ்ணன், ராதை, பக்த மீரா போன்ற பலவேடங்களை குழந்தைகளுக்கு  அணிவித்து எல்லோரும் மகிழும்படியாக ஆடிப் பாடி மகிழ்ந்து  ஒன்பதாம் நாள் நவமி அன்று  சரஸ்வதிக்கு பூஜை செய்து பத்தாம்   நாளாகிய தசமிஅன்று ஆயுத பூஜை என்றும்  விஜய தசமி என்றும் கொண்டாடுகிறோம்.  அன்று நாம் அன்றாடம் உபயோகிக்கும் நம் வாகனங்கள், ஆயுதங்கள், எல்லாவற்றிர்க்கும் முறையே குங்குமம் இட்டு பூஜைகள் செய்து கொண்டாடி  நிறைவு செய்வோம் நவராத்திரி விழாவை.

    ஆட்சி, அதிகாரம், நாடு உள்பட சகலமானதையும் இழந்த பாண்டவர்கள் 12 ஆண்டு வனவாசம், ஓராண்டு அக்ஞாத வாசம் முடிந்து, விஜயதசமியன்றே மீண்டும் அனைத்து ஆயுதங்களையும் தாங்கள் இழந்த பலம் ஆகியவற்றையும் பெற்றனர் .இந்த விஜயதசமி நன்நாளில்தான் துர்க்கா வெற்றி பெற்றாள் ,ஆகவே இந்த நாளில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்தால் சகலவிதமான வித்தைகளிலும் வெற்றி பெறுவார்கள் என்பது ஐதீகம்.

     

    வீரத்தின் தெய்வமான சிவப்பிரியையான, இச்சா சக்தியான  துர்க்கை  அல்லது காளி என்னும் சக்தியானவள் துர்க்கை. இந்த துர்க்காதேவி  மகிஷன் என்ற அசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டு  அவனை வதம் செய்தாள் அதாவது தீமை என்னும் அரக்கனை அழித்து  மக்களுக்கு  நன்மையாகிய வெற்றியை அருளினாள். அதனால் மகிஷசுரமர்த்தனி என்று பெயர்கொண்டாள்.    ” விஜய ” என்றால்   வெற்றி   . தசம் என்றால் பத்து வெற்றியை பெற்ற நாள்  பத்தாம் நாள். இப்படி மகிஷனை துர்க்கை வதம் செய்த பத்தாம் நாளே விஜயதசமி என்று அழைக்கப்பட்டது.

    இந்த துர்க்கா தேவி மகி‌ஷனுடன் போர் புரியத் தொடங்கிய நாளே நவராத்திரி விழாவின்  தொடக்க நாள்.  நவராத்திரி விரதம் புரட்டாசி  மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை  குறித்து நோற்கப்படும்  நோன்பாகும். இது தக்ஷிணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்திராயண காலம் தேவர்களுக்கு பகல் காலம் ஆகும்.  

    நவராத்திரி பூஜை புரட்டாசி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்ய வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றது ஆகவே புரட்டாசி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் கைக்கொள்ளப்படும் நோன்பு  சாரதா நவராத்திரி நோன்பாகும்.

    உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தக்ஷினாயண காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாசி மாதத்தில் நோற்கப்படும்  சாரதா நவராத்திரியையே நாம் எல்லோரும் கைக் கொள்ளுகின்றோம்.

    பிரளயம் என்னும் அழிவுக்  காலத்தின் முடிவில் இறைவன் மீண்டும் உலகத்தை உண்டாக்க விரும்புகின்றான் ஆகவே இறைவன் விரும்பத் தொடங்கும் அந்தக் கணமே   இச்சை என்ற சக்தி தோன்றுகின்றது. அந்த இச்சை சக்தியினால்  எவ்வாறு உலகை உண்டாக்குவது என்று இறைவன் அறிகின்றான். எவ்வாறு என்று யோசிக்கும் போதே ஞான சக்தி தோன்றுகிறது . அதன்பின் தன்னுடைய கிரியை என்னும் சக்தியினால் கிரியா சக்தியைத் தோற்றுவித்து  உலகைப் படைக்கின்றான்.
     
    நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.
     
    நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்
     
    இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான்
     
    சாந்தி துர்க்கை ,சபரிதுர்க்கை, ஶ்ரீ ஜ்வாலாதுர்க்கை, ஶ்ரீ ஜெயதுர்க்கை,ஶ்ரீ ஆசூரி துர்க்கை, ஶ்ரீ மூலதுர்க்கை, ஶ்ரீ வன துர்க்கை, ஶ்ரீ சூலினி துர்க்கை, ஶ்ரீஜாதவேதா துர்க்கை. ஆகியோர் நவதுர்க்கைகள்.

    முதல் நாளில் 2 வயதுக் குழந்தை – குமாரி அதாவது ஷைலபுத்ரி யாகவும்,
    இரண்டாம் நாள் 3 வயதுக் குழந்தை – திரிமூர்த்தி அதாவது பிரம்மசாரிணி யாகவும்,
    மூன்றாம் நாள் – 4 வயதுக் குழந்தை – கல்யாணி  அதாவது சந்தரகாந்தா ஆகவும்,
    நான்காம் நாள் – 5வயதுக் குழந்தை – ரோகிணி  அதாவது  கூஷ்மாண்டா ஆகவும்,
    ஐந்தாம் நாள் – 6 வயதுக் குழந்தை – காளிகா  அதாவது  ஸ்கந்த மாதா ஆகவும்,
    ஆறாம் நாள் – 7 வயதுக் குழந்தை – சண்டிகா  அதாவது காத்யாயனி  ஆகவும்,
    ஏழாம் நாள் – 8 வயதுக் குழந்தை – சாம்பவி  அதாவது  காலராத்ரி ஆகவும்,
    எட்டாம் நாள் – 9 வயதுக் குழந்தை – துர்க்கா   அதாவது மஹா கௌரி ஆகவும்,
    ஒன்பதாம் நாள் – 10 வயதுக் குழந்தை – சுபத்ரா  அதாவது  சித்திதாத்ரி ஆகவும்
    கொண்டாடுகிறோம்.
     
    அஷ்ட சரஸ்வதி: வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி ஒன்பது சக்திகள்: முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள் சிறப்பாக உள்ளன.
     
    துர்க்கை: 1. மகேசுவரி, 2. கெளமாரி , 3. வராகி. இலட்சுமி: 4. மகாலக்ஷ்மி 5. வைஷ்ணவி 6. இந்திராணி. 7. சரஸ்வதி
    8. நாரசிம்மி , 9. சாமுண்டி.
     
    நவராத்திரியின் போது இந்த ஒன்பது தேவியர்களையும் முறையாக வழிபடுகிறோம். ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும் கொள்ளவேண்டும். நவராத்திரியில் கன்னி வழிபாடு என்பது ஒரு வகை. நவராத்திரியின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னியை ஒவ்வொரு தேவியாக பாவனை செய்து வழிபடுவது ஒரு முறை.

     
    ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை வைக்க வேண்டும்.
     1வது படி – ஓரறிவு உயிரினம் (மரம், செடி, கொடி, மர பொம்மைகள்)
     2வது படி – இரண்டறிவு உயிரினம் (நத்தை, சங்கு, ஆமை பொம்மைகள்)
     3வது படி – மூன்றறிவு உயிரினம் (எறும்பு, கரையான் பொம்மைகள்)
     4வது படி – நான்கறிவு உயிரினம் (நண்டு, வண்டு, பறவை பொம்மைகள்)
     5வது படி – ஐந்தறிவு உயிரினம் (ஆடு, மாடு, சிங்கம், புலி, நாய் பொம்மைகள்)
     6வது படி – ஆறறிவு உயிரினம் (மனித பொம்மைகள்)
     7வது படி – மனிதனுக்கு அப்பாற்பட்ட மகரிஷிகள், முனிவர்கள்.
     8வது படி – தேவர்கள், நவக்கிரகங்கள், பஞ்சபூத தெய்வங்கள்.
     9வது படி – பிரம்மா, விஷ்ணு, சிவன், அம்மன், விநாயகக் கடவுளர்.
     இம்முறைப்படி கொலு வைத்து, முப்பெரும் தேவியரை வணங்கி வரும் போது கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றும் நம்மிடம் செழித்தோங்கும்.

    நவராத்திரியில் ஸ்ரீதேவியைத்(திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள் சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேறாகிய முக்தியையும் நல்குவாள் என்று காரணாகமம் கூறுவதாகச் சொல்லப்படுகின்றது.  கன்னி ராசிக்கு அதிபதியானவன் புதன். வித்யாகாரகன் எனப்படுபவன். கல்வி, புத்தி, தொழில் ஸ்தானம் சரியாக அமைய புதனின் பார்வை முக்கியமானது என்பார். இந்தக் காலத்தில் நவராத்திரி கொண்டாடுவது சாலச்சிறந்தது என்று கருதி வந்துள்ளனர்.
     
    நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்பதுதான் அர்த்தம். உலகம் அனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம். பராசக்தியே சர்வ வல்லமை படைத்தவர் ஆவார். அந்த அம்பிகையின் மகிமைகளை ‘தேவி பாகவதம்’ விரிவாகப் பேசுகிறது.  நவம் என்றால் ஒன்பது என்று ஒரு பொருள் உண்டு. நவம் என்றால் புதிய, புதுமை, என்றொரு பொருளும் உண்டு! சூரியன் கன்னி ராசியில் பிரவேசிக்கும் புரட்டாசி மாதம் வளர் பிறை பிரதமை முதல் 9 நாள் நவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது.

    இதில் முதல் 3 நாள் துர்க்கை அன்னையையும், அடுத்த மூன்று நாள் திருமகளையும், அதற்கு அடுத்த மூன்று நாள் கலைமகளையும் வழிபடுவார்கள்.  துர்க்கை என்ற பெயருக்கு கோட்டை என்ற பொருளும், துன்பத்தை அழிப்பவள் என்ற பொருளும் உண்டு. இந்தப் பெயரைச் சொன்னாலே மனிதன் தன்னைத் துன்பங்களை அணுக விடாமல் காத்துக்கொள்ள முடியும். அத்துடன் தீய சக்திகள் மற்றும் தீய எண்ணங்களையும் அழித்தால்தான் உலகில் நல்லவை நிலைபெறும். அதனால்தான் மனிதன் தன் வாழ்வில் சந்திக்கும் பல தீயவற்றை அழித்து நல்லவற்றை நிலை நிறுத்தி வெற்றி பெற உதவும் அன்னையை முதல் மூன்று நாள் வழிபடுகிறோம்.

    அடுத்த மூன்று நாள் செல்வ வளத்தை அளிக்கும் திருமகளை வழிபடுகிறோம். மனிதன் வாழ்வில் சிறப்பான நிலையை அடைய உதவுவது செல்வம்.  அடுத்த மூன்று நாள் கல்விச் செல்வத்தை அளிக்கும் கலைமகளுக்கு உரியவை. காலத்தால் அழியாத செல்வம் கல்வி. இந்தச் செல்வம் வேண்டி கலைமகளைத் துதிக்கிறோம். நவம் என்றால் புதிய என்று பார்த்தோம். துன்பங்கள் தீர்ந்து, பொருள் வளம், கல்வி வளம் இரண்டும் பெற்றால் மனிதனுக்கு வாழ்க்கை தினம் புதியதுதான்!

    அதுமட்டுமல்ல; இந்த மூன்றும் சேர்ந்தால் வெற்றிதான் என்பதைக் குறிக்கும் விதமாக பத்தாம் நாள் விஜயதசமியாகக் கொண்டாடப்படுகிறது. துன்பத்தை அழித்து நன்மையை நிலைநாட்டி, பொருள் செல்வம் மற்றும் அறிவுச் செல்வம் பெற உதவும் மூவரையும் நவராத்திரியில் முறைப்படி துதிப்போம். வளம் பெறுவோம்! வெற்றி பெறுவோம்!
     
    ஒரு மனிதனிற்கு உடல்வலிமை, பராக்கிரம், மனோதிடம், புத்திபலம், தீர்க்காயுள், ஞானம, தேவைகளிற்கு பணம் போன்ற அனைத்து அம்சமும் நிறைந்திருந்தால் தான் அவன் சிறந்த வெற்றியாளனாக திகழ முடியும். அதாவது வீரம், செல்வம், கல்வி ஆகியவை அனைத்தும் நிறைந்திருக்க வேண்டும். இவற்றை பெறுவதற்காகவே நவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வாழ்க்கையில் நமக்கு செல்வம் ,வீரம் ,ஞானம் மூன்றும் இருந்தால்தான் நாம் வெற்றி பெற முடியும்.  இதற்காக மகாலட்சுமி தேவியை,  துர்க்கா தேவியை வழிபடுகிறோம்.   சரசுவதிதேவியை வணங்குகிறோம்.

    ——————————————————————————————————————————————————————————————
     நவராத்திரி விழா காணும் ஆலயங்கள் :-

    ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோயில், திருவானைக்காவல் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனாய ஐம்புகேஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில்,நாகை நீலாயதாட்சி கோயில், கன்யாகுமரி ஸ்ரீ பகவதி அம்மன் கோயில், புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோயில்,திருவண்ணாமலை ஸ்ரீ உண்ணாமுலை உடனாய அண்ணாமலையார் கோயில், நெல்லை ஸ்ரீ காந்திமதி அம்மன் கோயில், திருவேற்காடு ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோயில்,மாங்காடு அம்மன் ஆலயம்,சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ கற்பகாம்பாள் கோயில்,காளிகாம்பாள் கோயில்,திருவையாறு அறம் வளர்த்த நாயகி கோயில்,திருமெய்யம் ஸ்ரீ வேணுவனேஸ்வரி அம்பாள் கோயில்,சமயபுரம், பண்ணாரி,பொள்ளாச்சி,திண்டுக்கல்,தஞ்சை,திருச்சி மாரியம்மன் கோயில்கள்,படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் கோயில்,மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில்,மேல் மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயில்,காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் கோயில், திருக்கடையூர் அபிராமி கோயில்  ஆகிய  ஆலயங்களில் நவராத்திரி விழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடுவார்கள்

    அம்பத்தூரை அடுத்த வட திருமுல்லை வாயிலில் வைஷ்ணவி ஆலயத்தில் ஒன்பது நாளும் ஒவ்வொரு அலங்காரம் செய்து  வைஷ்ணவியை வழிபடுவார்கள். மிகவும் விசேஷமாக  இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படும்

    படத்திற்கு நன்றி :

    http://www.desicomments.com/desi/kali-puja/

     

    Share
  • மனக்கனவுகள்

     

    திருமலைசோமு

    செடியில்லை கொடியில்லை
    செங்காத்து பூமியில் வேர் விட்டு
    மொட்டு விடவும் இல்லை
    ஆயினும் ஏனோ..
     
    இமைக்கும் இடைவெளியிலும்
    நொடிக்கொரு பொழுதுமென 
    பூத்து நிற்கிறதென் மனக்கனவுகள்
     
    நிறைவேறும் என காத்திருந்த
    நிமிடங்களில் கூட 
    நீரோட்ட்த்தில் புதையும்
    காகித கப்பலாய் 
    காணாமல் போயிருக்கிறது..
     
    கனப் பொழுதில் கரைந்தே போனாலும்
    விடிகாலை வானில் 
    புன்னகைக்கும் புது சூரியனாய்…
    மீண்டும் மீண்டும் எழுகிறது
    என் மனக்கனவுகள்…
     
    கதவுகள் அடைத்து துரத்தவோ…
    கடிவாளம் போட்டு இழுக்கவோ
    முடியாத என் மனக்கனவுகளுக்கு
    காலம் ஒரு நாள் கைகொடுக்கும்
     
    என் கனவுகளை 
    கொன்று தின்று கொக்கரித்தவர்களே..
    நினைவில் கொள்ளுங்கள்..
    காற்றும் கடவுளும் என்றும்
    ஒரு திசையில் நின்றதில்லை..!
     
    படத்துக்கு நன்றி

    http://abi-shameena.blogspot.in/2010/12/dream-in-islam.html

    Share
  • மரகதவல்லி மீனாட்சி !

     

     
    ராஜராஜேஸ்வரி ஜெகமணி


    யா தேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேண சம்ஸ்திதா:
    நமஸ் தஸ்மை! நமஸ் தஸ்மை! நமஸ் தஸ்மை! நமோ நம:                  

    அன்னையின் அன்பிற்கு ஈடாக ஏதும் இல்லை என்பதனாலேயே பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து இறைவன் அருள்வதாக இறைவனின் அடியார்கள் இறைவனைத் தாய்க்கு நிகராகக் கொண்டு வழிபட்டனர்.

    தாயின் வடிவில் அருள் புரியும் அன்னை பராசக்தி
    மதுரையில் மீனாட்சியாகஅருள் பாலிக்கிறாள்.

    அன்னை மீனாக்ஷி சின்னஞ்சிறு பெண்போல சிற்றாடை இடையுடுத்து பொற்றாமரைக்குளத்தருகில் கோவில் கொண்டு ஆட்சிபுரியும் மதுரையில் நவராத்ரி உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    பகல்- இரவு இரு வேளைகளிலும் ஒன்பது நாட்கள் பூஜை செய்வது நவராத்திரி விரதம் என்றும்; ஒன்பது இரவுகள் மட்டும் பூஜை செய்வது நவராத்திரி பூஜை என்றும்  அழைக்கிறோம்…

    முதல் மூன்று நாட்கள் அன்னை சக்தியையும்; அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியையும்; கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வீடுகளிலும் கோவில் களிலும் கொலுப்படி அமைத்து வழிபடுகிறோம்..பத்தாவது நாளான விஜயதசமியை வெற்றித் திருநாளாகக் கொண்டாடி வருகிறோம்.

    சக்தி, செல்வம், ஞானத்தைத் தருவதாக  நவராத்திரி பூஜை அமைந்துள்ளது.

    மதுரை வீதிகளில் நடந்தாலே முக்தி.காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையில் வாழ்ந்தால் முக்தி

    தடாதகை, கோமளவல்லி, அங்கயற்கண்ணி, பாண்டிய ராஜகுமாரி, மாணிக்க வல்லி, சுந்தர வல்லி  என்றெல்லாம் அழைக்கப்படும் அன்னை மீனாட்சியின் விகரகம் சுத்தமான மரகத்தால் செதுக்கியது தேவலோகச்சிற்பியான மயன் !.

    மரகதவல்லி என்றும் அருமையாய் அழைக்கப்படுகிறாள் அன்னை !

    அன்னை மீனாட்சி கருணையே வடிவானவள் என்பதை அவளது நிறம் உணர்த்துகிறது…

    பொற்றாமரைக்குளம்  இறைவன் சோமசுந்தரேஸ்வரரால்  உருவாக்கப்பட்டது…
    பொற்றாமரைக்குளத்தில் தினமும் மலர்ந்த தங்கத்தாமரைகளால் சப்த ரிஷிகளும் அன்னை மீனாட்சியை ஆராதித்து வந்தார்களாம்.

    சங்கப்பலகைகொண்டு தமிழ்ப்புலவர்களை சோதித்த இடம் !

    மீன் , புழு , பூச்சிகள் என்று எந்த உயிரினமும்  வாழமுடியாத வரம் பெற்ற குளம் !

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதாடிய தமிழ்ப்புலவர்  நக்கீரர் இறைவனின் நெற்றிக்கண் வெப்பம் தாளாமல் குதித்த குளம் !

    மந்திரமாவது நீறு என்று கூண்பாண்டியனின் தீராத வயிற்றுவலியை  கோவில் பிரசாதம் சமைக்கும் அடுப்பின் சாம்பல் தீர்த்துவைத்து  உணர்த்தியது !

    மற்றவர்களின் கண்கள் இமைக்க வாய்ப்புண்டு; ஆனால், மீனின் கண்கள் இமைப்பதில்லை.

    மீன் இமைக்காமல், தன் குஞ்சுகளைப் பாதுகாக்கும் தன்மையுடையது. அதுபோல், கயற்கண்ணியான மீனாட்சியும், தன் பக்தர்களை இரவும், பகலும் விழித்திருந்து பாதுகாக்கிறாள்.

    அவளது கண்கள் இமைப்பதில்லை என்பதால் தான், மதுரையும் தூங்கா நகராக விளங்குகிறது.

    மீன்தன் கண் பார்வையாலேயே தன் முட்டைகளை  போஷித்து  காத்து வளர்ப்பதைப்போல் தன் கண் இமையாமல் நம்மையையும் உ;லகத்து உயிர்களைப் பாதுகாத்து ரட்சிப்பதால் அன்னைக்கு மீனாட்சி என்று பெயர் …

    அன்னை மீனாக்ஷி தன் அருட்கண்களின் பார்வை பட்ட மாத்திரத்தில் அவளது சகல குழந்தைகளுமான புல்- பூண்டிலிருந்து ஆரம்பித்து பிரம்மாதி தேவர்கள்வரை எல்லோரையும் தனது கருணா கடாக்ஷத்தால் நனைத்து அறிவை, உயிரை வளர்த்து உய்வித்து விடுகிறாள்.

    .மதுரையில் மீனாக்ஷி தினமும் 8 விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுவது கண்கொள்ளாக்காட்சி.

     மீனாட்சி அம்மனின் அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக மீனாட்சி அம்மனுக்கு புதிதாக ஒரு வைர கிரீடம் தயாரிக்கப்பட்டுள்ளது. 11/2 கிலோ தங்கத்தால் செய்யப்பட்டு, 300 காரட் எடையுள்ள வைரக்கற்கள், 154 காரட் எடை கொண்ட மரகத, மாணிக்க, கற்கள் பதிக்கப்பட்டுள்ள வைரகீரிடம் அணிந்து அலங்காரமாய் காட்சி அளிக்கிறாள் அன்னை !

     

    Share
  • புதிய கலப்பைகள்

    முகில் தினகரன்

    மூட நம்பிக்கை
    முட்புதர்களுக்கு
    முடிவுரை எழுதிடுவோம்!
    முகத் தடாகத்தில்
    முல்லைச் சிரிப்பால்
    முன்னுரை வரைவோம்!

    பழமைப் பதர்களை
    புதிய சிந்தனையால்
    பளபளப் பாக்கிடுவோம்!
    புதுமைப் பூகோளத்தைப்
    புரவியேற்றி
    பூரித்துப் புடைப்போம்!

    வறுமை வியாதிக்கு
    வயல்வெளி மருந்திட்டு
    விரட்டி வீழ்த்திடுவோம்!
    வெறுமை வானத்தை
    வெண்புறா கூட்டத்திற்கு
    விலைபேசி விற்றிடுவோம்!

    தடுக்கும் தளைகளை
    தகிக்கும் விரல்களால்
    தெறிக்கச் செய்திடுவோம்!
    கெடுக்கும் கயமையை
    கருணைக் கோடாரியால்
    கிழித்துத் துடைப்போம்!

    உழைப்புக் களத்தில்
    உயர்வுக் குணத்தை
    உரமாய்த் தெளிப்போம்!
    கலப்பைக் கூரில்
    கையேந்து குணத்தை
    காணாது போக்கிடுவோம்!

     

    http://india.blogs.nytimes.com/2012/03/16/budget-2012-13-infrastructure-industry-and-agriculture/

    படத்துக்கு நன்றி

    Share
  • பிரக்ஞையே இல்லாத இரண்டு பாதகங்கள்!

     

    வெங்கட் சாமிநாதன்

    நினைவுகளின் சுவட்டில் பாகம் – II (பகுதி – 52)

    சினிமா பார்த்துவிட்டு ஹோடடலுக்குத் திரும்பி வந்தேன். பயப்படும்படி ஒன்றும் நேரவில்லை. ஹோட்டலும் ரூமும்  பத்திரமாகத்தான் இருந்தன. பூட்டு உடைக்கப்படவில்லை. உடைப்பதற்கு அறையில் ஏதும் இல்லை. முதல் தடவையாக தனியாக வந்துள்ள அனுபவமும் தான் சற்று பயப்பட வைத்துள்ளது என்று மனம் சமாதானம் சொன்னாலும் ஹோட்டல் ஒன்றும் அப்படி சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் சூழ்நிலையில் இல்லை. இருப்பினும் படுத்துக்கொண்டேன். இரவு முதலில் கொஞ்ச நேரம் மனம் அமைதியின்றி கழிந்தாலும் எப்படியோ தூக்கம் வந்து கவலையைத் தீர்த்தது. தூங்கினால் காட்டில் தனிமையில் இருந்தாலும் நகரச் சந்தடியில் கூட்டத்தோடு இருந்தாலும் தூக்கம் எல்லாவற்றையும் அழித்து விடுகிறது. சுய நினைவே இல்லையென்றால் எது எப்படி இருந்தால் என்ன?

    காலையில் எழுந்ததும் காசிக்குப் போனால் என்ன என்று தோன்றியது. இவ்வளவு தூரம் வந்து விட்டு காசிக்குப் போகவில்லையென்றால்…? பின், எப்போது இந்தப் பக்கம் காசிக்கு இவ்வளவு அருகில் வரும் சந்தர்ப்பம் ஏற்படுமோ? அதிலும் என் காசியாத்திரைக்காகும் செலவு அலஹாபாதிலிருந்து காசிக்குப் போய் வரும் செலவுதான். யார் யாரெல்லாமோ நிறைய பணம் வாழ்நாளெல்லாம் சேர்த்துக்கொண்டு, சொத்துக்களை நிர்வகிக்க ஏற்பாடு செய்து,  உயில் எழுதி வைத்து விட்டுப் போவார்களாம். எனக்கு அந்த கஷ்டம் இல்லையே. அதோடு அப்பா அம்மாவுக்கு காசியிலிருந்து கங்கை ஜலச் செம்பு வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தால் இன்னும் சந்தோஷப்படுவார்களே. அத்தோடு புள்ளையாண்டானுக்கு அபூர்வமா காசிக்குப் போகணும், கங்கை ஜலம் வாங்கிக் கொடுக்கணும்னு அக்கறையும் பக்தியும் வந்து விட்டது என்றால் சந்தோஷம்தானே. நான் சொன்னால் நம்ப மாட்டார்கள். ஆனால் கங்கைச் செம்பு சாட்சி சொல்லுமே.

    திரும்பி வரவேண்டும் அலஹாபாதுக்கு. இலவச பாஸ் அலஹாபாதிலிருந்து சம்பல்பூருக்கு. காசிக்கு டிக்கட் வாங்கி ரயிலில் உட்கார்ந்து கொண்டால், சுற்றி இருப்பவர்கள் ஒரு கூட்டம், ஐந்தாறு பேர், தமிழ் பேசுகிறவர்களாக இருந்ததில் ஒரு ஆச்சரியமும் சந்தோஷமும். எல்லாம் நாற்பது ஐம்பது வயசுக்காரர்கள். பெண்கள் யாரும் இல்லை. பேச்சுத் துணையாயிற்று. யார், எந்த ஊர், எங்கே வந்தீர்கள், எங்கே போகணும்? இத்யாதி விசாரிப்புகள் இல்லாதிருப்பது சாத்தியமில்லையே. பேசிக்கொண்டோம். அவர்களும் அதிசயமாக காசிக்குப் போகிறவர்கள்தான். அதுவும் நல்லதாயிற்று. என்னைப் பற்றித்தான் அவர்கள் துருவித் துருவி கேட்டார்களே ஒழிய, அவர்கள் பற்றி அவர்களாகச் சொன்னதைத் தவிர எனக்கு அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள எதுவும் கேட்கத் தோன்றவில்லை.

    மாலை வரைதான் உறவு. பின் பிரியப் போகிறோம். தெரிந்து என்ன ஆகப் போகிறது என்பதற்கு  மேல், அப்படி ஒரு சுபாவம் வளரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இருந்தாலும் அவர்களுடன் பேசிக்கொண்டே வந்ததில் பொழுது போயிற்று. சுவாரஸ்யமாகவும் இருந்தது. காசி வந்ததும் இறங்கினோம். அவர்களோடு சேர்ந்ததில் ஒரு லாபம். எல்லா விசாரிப்புகளையும் அவர்களே செய்தார்கள். ஒரு சத்திரமோ மடமோ சரியாக நினைவில் இல்லை. அங்கே தங்கினோம். இதுவும் இதை எழுதும் இச்சமயம் ஒரு சந்தேகம் தட்டுகிறது. தங்கின இடத்தின் முகப்பு, தூண்களும் தாழ்வாரமும் கொண்ட முகப்பு நினைவில் பதிந்திருக்கிறது. ஆனால் அது காசியிலா, இல்லை, பூரியிலா என்று நிச்சயமில்லாது ஒரு மங்கலான நினைவாக இருக்கிறது

    இதை இடையில் சொல்ல மறந்து விட்டேன். ஒரு சமயம் ஊருக்கு  விடுமுறையில் போக, கட்டக் வரை  பஸ்ஸிலும் பின்னர் அங்கிருந்து  கல்கத்தா மெயிலில் ஊருக்கும்  செல்லலாமே என்று தோன்றியது. இரவு பூராவும் பஸ்ஸில். அப்போது  என்னுடன் இன்னும் சிலர்  ஹிராகுட்வாசிகள் இருப்பது இடையில் தெரிந்து அவர்கள் நண்பர்களாகி, பூரி போய் ஜகந்நாதர் தரிசனம் செய்து விட்டு போகலாமே என்று பெல்லாரிக்காரர், தன் தங்கையுடன் வந்தவர் சொல்ல, சரி என்று எல்லோரும் பூரி சென்றோம். அங்கு தங்கியிருந்த ஒரு மடம், இலவசமாகக் கிடைத்த தங்கல். அது ஒரு மிகவும் மனதுக்கு சந்தோஷம் அளித்த அனுபவம். அதை எழுத எப்படி ஏன் மறந்தது என்று தெரியவில்லை.

    கூட வந்தவர்கள் சொல்லி, வழியில் ரோடில் பூரி சாப்பிட்டதும், அவ்வளவாக ரசிக்காத பூரி, நிழலாடுகிறது. ஆனால் இதெல்லாம் முக்கியமில்லை. குறுகி வளைந்த இருபுறமும் இர்ண்டு மூன்று அடுக்கு மாளிகை போன்ற பெரிய வீடுகள் கொண்ட நீண்ட தெருக்கள் வழி சென்றது ஒரு புதுமையான அனுபவம். இப்படிப்பட்ட குறுகிய, வளைந்து நீளும் சந்துகள் இருபுறமும் உயர்ந்த கட்டிடங்கள் என்பது இதுகாறும் காணாத ஒன்று. எத்தனை நூற்றாண்டு பழமையான, சரித்திரப் பிரசித்தி பெற்ற நகரம் இது.! அதன் குறுகிய சந்துகளின் ஊடே நடந்து செல்வதே பெருமையாக இருந்தது. தரையில் வெயில் படாத சந்துகளான தெருக்கள்.

    முதலில் கங்கைக்கரையை அடைந்தோம். எந்த படித்துறை என்பதெல்லாம் நினைவிலில்லை. நீண்ட விசாலமான படிகள். வெகுதூரம் படிகளில் இறங்கியே ஆழத்தில் கங்கை நதி பாயும் நீர்த்தடத்தை அடைய முடியும். படிகளின் இடையே ஒரு சமதளம். ஒரு பெரிய மரம் பின் மறுபடியும் படிகள். ஆற்றின் அருகே சென்றதும் எதிர்க்கரையைப் பார்த்தால் அது எங்கோ தூரத்தில். எவ்வளவு பிரம்மாண்ட ஆறு. இதற்கு முன் காவிரி எல்லாம் வெறும் வாய்க்கால் தான். எதிர்க்கரையிலும் பெரிய பெரிய மாளிகைகள். கண்ணுக்கெட்டிய தூரம் இரு புறமும், இரு கரைகளிலும் மாளிகைகள். கோயில்கள் போன்ற கோபுரங்கள். நீண்ட விஸ்தாரமான, ஆற்று நீரைத் தொட்டுக் கொண்டிருக்கும் படிகள்.

    பார்க்க ஆனந்தமாகத்தான் இருந்தது. இது நாள் வரை காணாத காட்சி. காணாத பிரம்மாண்டம். என்னுடன் வந்தவர்கள் இறங்கிக் குளித்துக்கொண்டிருந்தார்கள். எனக்கு ஆற்றில் இறங்குவதா, வேண்டாமா என்ற தயக்கம். ஆற்றையும் அதில் கண்ட இடமெல்லாம் மிதக்கும் பொருள்களையும் குப்பைகளையும் பார்க்க மிகக் கஷ்டமாக இருந்தது. மேலும் ஆற்று நீரின் கலங்கல் இறங்குமிடத்தில் காணும் சேறு என்னவோ மனத்தைப் புரட்டியது. காவிரி ஆற்றின் நீரும் கலங்கல்தான். ஆனால் அது இப்படி அசுத்தங்கள் மிதக்கும் ஆறு இல்லை. இத்தகைய சேறு நிறைந்த கரையும் அல்ல. உடையாளூரின் ஆற்றில் இறங்க படியில் கால் வைத்தால் படிகளை கலங்கலற்ற  நீரின் அடியில் பார்க்கலாம். மீன்கள் கால்களைக் கடிக்கும். இப்போது தான் ஆற்றில் நீரும் இல்லை. ஒரு வேளை மணலும் இல்லை என்று நினைக்கிறேன்.

    குளித்துக்கொண்டிருந்தவர்கள் “பயப்பட வேண்டாம் . நாங்கள்  இருக்கோம்.” என்று சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரு சின்னப் பெண் பாவாடை அணிந்த பத்து வயசுப் பெண், அவர்களைத் திட்டிக்கொண்டே கரையில் நின்று கொண்டிருந்தது. ரொம்ப சூட்டிக்கையான பெண். முகத்தைப் பார்த்தாலே அதோடு விளையாடத் தூண்டும் முகம். “அது ”ஐயோ” என்று இடையில் கத்தியது தமிழ்ப் பெண்ணோ என்ற எண்ணம் தோன்றவே அதன் பயம் நீக்கி அதோடு பேச்சுக் கொடுத்தால், அந்தக் குழந்தை அங்கு கங்கைக் கரையிலேயே வசிக்கும் ஒரு தமிழ்க் குடும்பத்தின் பெண் என்று தெரிந்தது. . இங்கு விளையாட வந்திருக்கிறது. கங்கைக் கரையில் குடியிருந்தால் குழந்தைகள் விளையாட கங்கைக் கரைக்கு வருவது பற்றி பெற்றோருக்கு பயம் இல்லை போலும். சகஜமாகியிருக்கும் வாழ்க்கை. சூழல். அப்பா அங்கேயே அருகில் ஏதோ கோயிலில் பூஜை செய்பவர். அதற்கு அதிக நேரம் என்னோடு பேசுவதில் இஷ்டம் இருக்க வில்லை. “ரொம்ப நாழியாயிடுத்துன்னு அம்மா கோவிச்சுப்பா” என்று சத்தம் போட்டு சொல்லிக்கொண்டே ஓடிவிட்டது.

    ”போறும் பேசினது. வாங்க குளிக்க” என்று அழைப்பு தொடர்ந்தது. வெகு தயக்கத்திற்குப் பிறகு இஷ்டமில்லாமல் அரை மனதோடு ஆற்றில் இறங்கினேன். இது நடந்தது 1956-ம் வருடம். அதன் பிறகு கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பிறகு ராஜீவ் காந்தி கங்கையைச் சுத்தம் செய்ய ஒரு பெரும் திட்டம் வகுத்து பல ஆயிரங்கோடிகள் செலவழித்த பிறகு, 1990 களில் நான் ஒரு முறை காசிக்கு நாடகக் கருத்தரங்குக்குப் போயிருந்தேன். கங்கையோ இன்னும் 45 வருட அசுத்தங்களைச் சுமந்து கொண்டு பிரவாஹித்துக்கொண்டு இருந்தது. நாங்கள் ஒரு படகில் கங்கையைக் கடந்து அக்கரைக்குச் சென்றோம். படகில் எங்களுடன் அமர்ந்திருந்த காசிவாசிகள், காசி பல்கலைக் கழக பேராசிரியர்கள் பேராசிரியைகள், மற்றும் பல நகரங்களிலிருந்து வந்திருந்த பேராசிரியர்கள், படகு நதியில் இறங்கியதும் கங்கை நீரைக் கையில் ஏந்திப் பருகினர். பக்தி பரவசத்தோடு தலையில் தெளித்துக் கொண்டனர். எனக்கு அந்த  நீரைத் தொடவே அருவருப்பாக இருந்தது. அன்று 1956-ல் ஆற்றில் குளிக்க இறங்கியவர்கள் வற்புறுத்தியது போல இவர்களும் வற்புறுத்துவார்களோ என்ற பயம் ஏற்பட அவர்களைப் பார்க்காது முகத்தைத் திருப்பிக் கொண்டேன். என்னில் பக்தி உணர்வும் புனிதம் பற்றிய சிந்தனையும் அறவே வற்றிவிட்டதோ என்னவோ, தெரிய வில்லை.

    எல்லோரும் பின் விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்றோம். அதைக்  கோயில் என்று சொல்வதா இல்லை ஒரு மடத்தின் அறையில் தரையில் ஒரு தொட்டியில் பதிக்கப்பட்டிருக்கும் லிங்கம் என்று சொல்வதா என்று கேட்கத் தோன்றும். ஒரு பாண்டா லிஙகத்தின் அருகில் உட்கார்ந்து கொண்டிருந்தான். வருபவர்களுக்கு புஷ்பங்கள் எடுத்துக் கொடுத்து ஆசீர்வதிப்பான். அவன் ஆசிர்வதிக்கிறானோ என்னவோ, அதை வாங்கிக்கொள்பவர்கள் மிகுந்த பக்தி பாவத்தோடு கைகளைச் சேர்த்துக் குவித்து வாங்கிக்கொண்டார்கள். நம் கோயில்களில் காணும் யாரும் அண்டாத கர்ப்பக்கிரஹம், தூர இருந்து சேவிப்பது, மந்திரங்கள் சொல்லி அர்ச்சிப்பது என்று ஏதும் இல்லை. ஜனங்கள் அதிகம் இல்லை. இல்லையென்று இல்லை. பத்திருபது பேர் வருவதும் போவதுமாக இருந்தார்கள். இது கோயிலாக, கர்ப்பக்கிரஹமாக, ஒரு புனித ஸ்தலமாக, இல்லை. விஸ்வநாதர் ஏதோ நீண்ட தூர பயணத்தில் தாற்காலிகமாக இங்கு ஒரு அறை எடுத்து விஸ்ராந்திக்காக, பயணக் களைப்பு போக தங்கியிருக்கிறார். இன்று மாலையோ நாளைக் காலையோ இந்த அறையை விட்டு தன் பயணத்தைத் தொடங்குவார் என்பது போலிருந்தது.

    அப்போது எனக்குத் தோன்றவும் இல்லை. அது பற்றிய விவரமோ பிரக்ஞையோ இருக்கவில்லை. இந்தக் கோயில் என்னும் அறை, ஒரு பெரிய மசூதியை ஒட்டி இருப்பது. ஒரு பெரிய மாளிகையை ஒட்டி ஒரு அவுட் ஹவுஸ் என்று ஒரு அறை கட்டியது போலத் தான் இந்த காசி விஸ்வநாதர் ஆலயம். தெற்குக் கோடியிலிருந்தும் ராமநாதபுரத்திலிருந்து இந்தியாவின் தூர எல்லைகளிலிருந்து நூற்றாண்டு காலங்களாக தம் ஆயுட்கால தவமாக பணம் சேர்த்து, இறுதிக்கால ஏற்பாடுகள் செய்து காசியாத்திரை வருவது விஸ்வநாதரைத் தரிசிக்க இந்த அறைக்குத்தான். ஒரு காலத்தில், பிருமாண்டமாக இருந்த ஆலயம் இது. எத்தனை முறை இது இடிக்கப்பட்டுக் கட்டப்பட்டதோ. இப்போது என் பூர்வீக இடத்தை விட்டு நான் போகமாட்டேன் என்று காசி விஸ்வநாதர் மசூதியின் பின் சுவரை ஒட்டி “தாரணா” வில் உட்கார்ந்திருப்பது போல பட்டது.

    கங்கையும் ஏமாற்றியது. காசி விஸ்வநாதரும் ஏமாற்றினார். ஒன்று, சரித்திரம் வாங்கிய பழி. இன்னொன்று நம்மை நாமே அழித்துக் கொண்டிருப்பது. இரண்டு பாதகங்கள் பற்றியும் நமக்கு பிரக்ஞை இல்லை. வழியில் ஒரு கடையில் கங்கை ஜலம் நிரப்பி பற்று வைத்து மூடிய செம்பு இரண்டு வாங்கிக் கொண்டேன். ஒன்று அப்பாவுக்கு. இன்னொன்று நிலக்கோட்டை மாமாவுக்கு. இரண்டும் அவரவர் பூஜை அறையில் இடம் கொள்ளும்.

    என்னோடு வந்தவர்கள் அங்கேயே தங்கினார்கள். அவர்களூக்கு இன்னும் சில நாட்கள் தங்கும் திட்டம் இருக்கும். நான் அலஹாபாதுக்குத் திரும்பினேன். வேறு எங்கும் போகும் எண்ணமில்லாததால் சம்பல்பூர் வந்து புர்லா போய்ச் சேர்ந்தேன்.

    திரும்பி வந்த பயணத்தின் நினைவு எதுவும் இல்லை.

    யாருக்குத் தெரியும்? நேர்காணலும்  தேர்வும் என்னவாகும் என்று?. ஏதும் வேலைக்கான உத்திரவு வரும் வரை, இது போல, தினம் பத்திரிக்கைகளில்  wanted column –ஐத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்க வேண்டியது தான். இதை எழுதிய வாக்கியத்தில் ஒரு அலுப்பும் சோர்வும் தட்டுவதாகத் தோன்றலாம். இல்லை. இப்படி மனுச் செய்து கொண்டே இருக்கலாம். நேர்காணலுக்கு அழைப்பு வந்து கொண்டே இருக்கும். நானும் புதுப்புது இடங்களை இலவசமாகப் பயணம் செய்து பார்க்கலாம் என்று ஒரு புதிய வாழ்க்கையும் அனுபவமும் கிட்டத் தொடங்கியிருப்பது நினைக்க எனக்கு உற்சாகமாகத் தான் இருந்தது.  

     படங்களுக்கு நன்றி :

    http://travel.wikinut.com/Varanasi-,also-known-as-Kashi-and-Banaras-is-the-worlds-oldest-city/1vpvjumm/

    Share
  • நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’:: தொடர்-19

    பெருவை பார்த்தசாரதி

     

    கடந்த 01-10-12 அன்று “முதியோர்களின் நிலை” என்ற தலைப்பில் வெளியான தனிக்கட்டுரையோடு (http://www.vallamai.com/literature/articles/26855/), இந்தத் தொடரையும் சேர்த்து வாசிக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தோடு இந்தத் தொடரை ஆரம்பிக்கிறேன். 

    ஏழை, பணக்காரன், விலங்குகள், பறவைகள் என்ற பேதமில்ல்லாமல், மண்ணுலகில் பிறவி எடுத்த அனைவருக்கும் ‘முதுமை’ என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி முதுமையில்  துன்பங்களையும் சேர்த்து விடுகிறது. பல குழந்தைகள் அல்லது ஒரே ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொண்ட பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஒழுக்கத்துடனும், கட்டுப்பாடு, நற்பண்புகள் கொண்டவனாக வளர்த்து விட்டால், அது முதுமையில் அனுபவிக்கும் பல இன்னல்களுக்குத் தீர்வாக அமைந்துவிடும். 

    எங்காவது நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் சந்தர்ப்பத்தில் நாமும், நம்மைச் சுற்றி இருப்பவர்களும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் விஷயங்களில் எத்தகைய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்?… ‘தான் பெற்ற குழந்தைகள், தாங்கள் சொல்லுவதைக் கேட்க மறுக்கிறார்கள்’ ‘இப்போது இருக்கும் குழந்தைகள் பெற்றோர்கள் விரும்புவதைச் செய்வதில்லை’, ‘இன்றய இளையதலைமுறையினர் தவறான பாதையில் செல்லுகின்றனர்’  போன்ற செய்திகளே அதிக அளவில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் செய்திகளில் இடம்பெறுகின்றன. பெற்றோர்களின் விருப்பத்திற்கு எதிராக நடந்து கொள்ளுகின்ற பிள்ளைகள், பெரியோர்களின் அறிவுரையை ஏற்க மறுக்கும் சந்ததிகள் இவர்கள் அனைவரையும் அவரவர் குடும்பத்திலேயே அடையாளம் கண்டுகொள்ளமுடியும். ஒரு குடும்பத்தில் ஒருவர் தவறாக நடந்துகொள்ளும்போது அதை அந்தக் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் திருத்த முயற்சித்து, குடும்பம் பிரிந்து விடுவதும் சகஜம். ஒரு பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமைகளை, சகோதரர்கள் ஒன்று கூடிச் செய்வதில்தான் பெரும்பாலும் சிக்கல்கள் தோன்றுகின்றன. குடும்பத்தை நல்வழியில் நடத்திச் சென்ற வயதான முதியவர்களை யார் வைத்துக் காப்பாற்றுவது?….என்ற தருணத்தில்தான், அவர்களுக்கு ஆலோசனையும், அறிவுரையையும் தேவைப்படுகிறது.  மதிப்பு மிகுந்த இத்தகய வழிகாட்டலுக்குச் செவிசாய்க்க மறுப்பவர்களுக்கு இதிகாச புராணங்களில் வரும் கதாபாத்திரங்கள் வழிகாட்டுகின்றன.          

    வளர்த்த பிள்ளைகளால் கைவிடப்பட்டு, அந்திமக் காலத்தில் உயிர் ஊசலாடும் போது, ஆறுதல் சொல்ல பெற்ற பிள்ளகளே வரவில்லை என்கிறபோது வேறு யார்?….வருவார்கள்.  முக்காலமும் உணரும் முனிவர் போல, இதையெல்லாம் முன்பே உணர்ந்ததுபோல் நமது கவியரசர், 1968ல் வெளிவந்த ‘எங்க ஊர் ராஜா’ என்ற படத்திற்காக எழுதிய

    ‘பெட்டியிலே பணமில்லே, பெத்தபுள்ளே சொந்தமில்லே,

    தென்னைய பெத்தா இளநீரு பிள்ளைய பெத்தா கண்ணீரு,

    பெத்தவன் மனமே பித்தம்மா பிள்ளையின் மனமே கல்லம்மா…….’ 

    என்ற பாடல் வரிகளின் முடிவில் 

    “சோதனையை பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே”

    என்று எழுதியிருப்பார். இம்மாதிரி பாடல்கள் வேண்டுமானால் முதியோரின் சங்கடங்களுக்குச் சற்று நேரத்திற்கு ஆறுதல் தரும்.         

    உயிரோடு இருக்கும் போது, பெற்றோர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்தாலும், இறந்த பின்னும் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் தொடருகிறது. தன்னைப் பெற்றெடுத்த தாய், தந்தையர் உயிரோடு இருக்கும்போது அவர்களைக் காப்பதும், காலமானபின் அவர்களுக்கு ‘திதிகளைச்’ செய்வதன் மூலம் தொடர்ந்து அவர்களுக்கு மரியாதை அளிப்பதாகக் கூறுகிறார் ‘ஆதிசங்கரர்’. கடமைகளிலேயே மிகச் சிறப்பான கடமை என்பது தனது பெற்றோருக்கு ஆற்ற வேண்டிய கடமைதான் என்பதை, புராண, இதிகாசங்கள் அவ்வப்போது நமக்கு வலியுறுத்தி உள்ளன. வேத நூல்கள், மனிதன் கடைபிடிக்கவேண்டிய  அறநெறிகள் பற்றிக் குறிப்பிடும்போது, உறவினர்கள் மேல் வைக்கும் பாசத்தையும், பரிவையும், பற்றிக் குறிப்பிடத் தவறுவதில்லை. 

    பன்னிரண்டு ஆண்டுகள் வனவாழ்வு, ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை என்ற துன்பங்களை அனுபவித்த போதும், உறவினர்களுடன் சேர்ந்து வாழ்வதையே விரும்பினார் தருமர். குடும்ப ஒற்றுமைக்காக, தருமரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தனர் தம்பியர் அனைவரும். ஒவ்வொரு முறையும் அதர்மத்துக்குத் துணைபோன உறவினர்களை அழிக்கக் கொதித்தெழுந்தனர் தம்பிமார்கள்.  “குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” அரசுரிமைக்காக ஒரே குடும்பத்தில் பிறந்த உறவினர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதை உலகமறிந்தால், நாம் எப்படி உலகத்தாரின் நலனுக்கு வழிகாட்டமுடியும்?….என்று சமாதானம் சொன்ன தருமரின் சொல்லுக்கு தம்பிமார்கள் அனைவரும் கட்டுப்பட்டது எதற்காக?….என்பதைச் சற்று சிந்தித்தித்துப் பார்த்தால் உண்மை விளங்கும். இன்று கூட கிராமப்புறங்களில் ஒரு குடும்பத்தில் முதலாவதாகப் பிறக்கும் ஆண்குழந்தை, அக்குடும்பத்துக்குக் குலவிலக்காய் இருந்து, குடும்ப நலத்திற்கும், தனது சகோதர, சகோதரிகளிக்கு உற்ற துணையாக இருந்து குடும்பத்தை நல்வழியில் நடத்திச் செல்வான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் “தருமன்” என்ற பெயரைச் சூட்டுவதை வழக்கத்தில் கொண்டிருக்கிறார்கள். 

    பிள்ளைகளின் குணநலன்கள் சிறப்பாக அமைந்துவிட்டால், அதைவிட தாய் தந்தையருக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்தி வேறு ஒன்றுமில்லை. இதற்கு சிறுவயது முதலே அவர்களுக்கு நீதிநெறிகளை எடுத்துச்சொல்லி, இளவயதிலேயே அவர்கள் மனதில் நற்சிந்தனைகளை விதைக்க வேண்டும் என்பதை நமது முன்னோர்கள் நமக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்கள். மராட்டிய மன்னன் சிவாஜியும், கவி தாகூரும், மஹாத்மாவும் இளமைக் காலத்திலேயே இத்தகைய பாக்கியத்தைப் பெற்றதால்தான், பின்னாளில் உலகம் போற்றும்படி வாழ்ந்தார்கள்.         

    வேதங்கள் காட்டுகின்ற வழிகள் தவிர, பதினெண் புராணங்களும், காப்பியங்களும், மனிதன் பின்பற்றவேண்டிய பல நன்னெறிக் கோட்பாடுகளையும், போதனைகளையும் அளவில்லாமல் அள்ளி வழங்கியிருக்கின்றன. மகாபாரதத்தில் தாய்தந்தையரின் மகிழ்ச்சியே தன்னுடைய மகிழ்சியாகக் கருதிய ஒரு உத்தமரின் வாழ்க்கை எவ்வாறு அமைந்தது?….தந்தைக்காக தன் வாழ்க்கை முழுவதும் துணையின்றியே வாழ்ந்தான். அரசனாக இருந்த அவனுடைய தந்தை, ஒரு பெண்ணை விரும்பியபொது, அப்பெண் ஒரு வாக்குறுதியை தனக்கு அளித்த பிறகே அவனை மணக்க முடியும் என்பதை வலியுறுத்தினாள்.  தனக்குப் பிறக்கும் வாரிசுக்கே அரசுரிமை அளிக்க வேண்டுமென்பதே அவளுடைய நோக்கம்.  இதனைக் கேள்வியுற்று செய்வதறியாது திகைத்தான் மன்னன். அவனுடைய மூத்த மகன், தந்தையின் விருப்பத்திற்காக, வாரிசுரிமையை விட்டுக்கொடுப்பதற்காக, தனது வாணாள் முழுவதும் மணமுடிக்காமலேயே வாழ்ந்து காட்டினான். குடும்ப நலம்தான் பெரிது என்று கருதியதால், குடும்ப ஒற்றுமைக்காக தம்முடைய தன்னுடைய வாக்குக்குக் கட்டுப்பட்டு, ஒருபோதும், ‘தனது உரிமை’ என்று எதையும் வாழ்நாள் முழுவதும் கோரவில்லை என்பதை இங்கே குறிப்பில் கொள்ளவேண்டும். பின்னாளில், உலகுக்கே நீதி நெறிகளை எடுத்துச் சொல்லும் “பிதாமகர்” என்று உலகத்தாரால் போற்றப்பட்டார் “வீடுமர்”. 

    பொருளாதார வசதியுடன், பணமும், உடலில் சக்தியும் இருக்கின்ற வரையில்தான் இவ்வுலகில் மதிப்பு இருக்கும் என்பதை அனைவரும் அறிவோம். ஒரு காலகட்டத்தில் “உன்னால் ஏதாவது பிரயோஜனம் உண்டா”?….என்ற கேள்விக்கான பதிலைப் பொருத்துத்தான் அவரவர்களின் வாழ்க்கை முறையும் அமையும். பெற்ற பிள்ளைகள் கூட தாய் தந்தையருக்குச் செய்கின்ற பணிவிடைகளை ஒரு சுமை!… என்று நினைக்கும் இன்றய சூழ்நிலையில்  பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை தவறாத கண்ணியனுக்கு, ஒரு உதாரணம் ஒன்றையும், இதிகாசங்களிருந்து எடுத்துக் கூற விரும்புகிறேன். 

    வயோதிக பருவத்தில், உடல் நலமின்றி, சக்தியற்று படுக்கையில் இருந்த தாய் தந்தையர்களை மிகவும் அன்போடும், மகிழ்ச்சியோடும் தெளிவான சிந்தனையோடும் ஒருவன் கனிவோடு, முகம் சுளிக்காமல் பொருப்பாகக் கவனித்து வருவதை அந்நாட்டு மன்னன் கேள்விப் பட்டு அவனைச் சந்திக்க அவன் இருப்பிடம் வருகிறான். 

    ‘நான் இந்நாட்டு மன்னன் உன்னைச் சந்திக்க வந்திருக்கிறேன்’……என்று வீட்டு வாசலில் நின்று கூக்குரலிடுகிறான். 

    அவனோ சிறிதும் சட்டை செய்யாமல் தனது பெற்றோர்களுக்கு பணிவிடை செய்வதில் கவனமாக இருக்கிறான். 

    மறுபடி திரும்பத் திரும்ப அவனை அழைக்கிறான் மன்னன். 

    நம் வீட்டிற்கு யாராவது விருந்தாளியாக வரும்போது, நாம் ஏதாவதொரு முக்கியமான வேலையில் ஈடுபட்டிருப்போம், அப்போது……. 

    சற்று பொருங்கள்!..இதோ வந்து விடுகிறேன்!…என்று சொல்வதைப் போல், அவனும் 

    சற்று பொறுமய்யா!…நீர் யாராக இருந்தாலும் சரி, நான் எனது பெற்றோர்களைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறேன், அதை முடித்துவிட்டு உம்மை சந்திக்கிறேன், அதுவரை இதோ இந்தக் கல்லில் உட்காரும், என்று சொல்லி ஒரு செங்கல்லைத் தூக்கி எறிகிறான் அந்தச் சிறுவன். 

    கடமையில் கண்ணாக, இப்படியும் ஒரு சிறுவனா!…இவனைப் பெற்றவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்!……வந்தவன்!……..வழிந்து ஓடுகிற அழுக்குத் தண்ணீரில் விழுந்த அந்தச் செங்கல்லின்மீது நின்ற படியே அவனுக்கு ஆசி வழங்குகிறான். 

    மன்னனாக வந்தவன் ‘பகவான் விட்டல் ஸ்ரீகிருஷ்ணன்’, அவரைச் சந்திக்காமலேயே அருள் பெற்ற நல்லவன் ‘புண்டரீகன்’ என்ற சிறுவன். 

    நற்குடும்பத்தில் பிறந்த சிறுவன் புண்டரீகனுக்கு மட்டுமல்ல, பெற்றோருக்குக் கடமை தவறாது பணிவிடை செய்கின்ற நல்லவர்கள் அனைவருக்குமே இன்றும் அதே செங்கல்லின் மீது நின்று கொண்டே “விட்டல் கிருஷ்ணனாக” பண்டரிபுரத்திலிருந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கிறான். மராத்தியில் ‘விட்’ என்ற சொல்லுக்கு செங்கல் என்ற பொருள் படும். 

    நற்குடும்பத்தில் பிறப்பதே அரிது என்பதை புராணங்கள் கூறுகின்றன. இதுகூட முற்பிறப்பில் செய்த புண்ணிய பலன்களின் வாயிலாகவே இத்தகைய நற்பிறப்பு சாத்தியமாகக் கூடும். ஆக நற்குடும்பம், நற்பிறப்பு என்பதெல்லாம் ஒருவனது நல்ஒழுக்கம், நற்பண்பு, கடமை தவறாமை போன்றவையே தீர்மானிக்கின்றன.  வாழ்க்கையில் மிக உன்னத நிலைக்குச் சென்ற பலரது வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப் பார்த்தோமானால், அவர்களது முன்னோர்களும் இவர்களைப் போலவே உயர்ந்த நிலையில் வாழ்ந்து இருந்ததை அறியமுடியும். இவர்கள் கூறும் அறிவுரைகளை ஒருகாலும் புறக்கணிக்கக் கூடாது என்பதற்கு, எளிய தமிழில் எல்லோரும் புரிந்து கொள்ளும்படி அமைந்த சித்தர் தத்துவப்பாடல் வரிகளில் ஒன்றிரண்டைக் காண்போம். 

    “நல்லவர் தம்மைத் தள்ளாதே – அறம்

    நாலெட்டிலொன்றை நாடித் தள்ளாதே

    பொல்லாங்கி லொன்றும் கொள்ளாதே – கெட்ட

    பொய் மொழிக் கோள்கள் பொருத்த விள்ளாதே”         

    நல்லவர்களின் வார்த்தைகள், சான்றோர்கள் சொன்ன அறங்கள் இவற்றைப் புறக்கணிக்கக்கூடாது. புறம் பேசாமல், பொல்லாத காரியங்களைச் செய்ய வேண்டாம் என்பதை இப்பாடல் விளக்குகிறது. நன்னெறிகளையும், அறநெறிகளையும், இலக்கியங்கள், காப்பியங்கள், இதிகாசங்கள் மூலமாக அறிந்துகொண்டாலும், வாழ்க்கைச் சிக்கலுக்குத் தீர்வு காணும் நல் ஆலோசனைகளை, வேறு எங்கும் தேடாமல் நம்மை வளர்த்து ஆளாக்கிய, நமது முன்னோர்களின் அனுபவங்களிலிருந்தே, எளிதாகப் பெற்று விட முடியும்!….அதை இன்றளவும் நாம் பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதில் ஐயமில்லை?……         

    தொடரும்…..

    Share
  • பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்

     

     பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் என்ற தொடரை ஆர்வத்துடன் படித்து வந்த வாசகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. அந்தத் தொடர் “பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்” என்ற பெயரில் புத்தகமாக ப்ளாக்ஹோல் மீடியா பப்ளிகேசன்ஸ் நிறுவனத்தால் வெளியிடப் பட்டு உள்ளது.

    இது வரை சுவாரசியமாக சொல்லப்பட்ட விஷயங்களான நள்ளிரவில் பிரமிடுக்குள் பால் ப்ரண்டனின் அனுபவங்கள்,  உடலைப் பிரிந்து சென்ற பயணம், மந்திரவாதங்கள், ஹிப்னாடிச சக்தியாளர்கள், நாள் கணக்கில் மண்ணில் புதையுண்டு கிடந்தவர், அது பற்றிய அறிவியல் விளக்கங்கள், ஓசிரிஸ் கோயில்களின் ரகசிய தீட்சை முறைகள் ஆகியவற்றை மிகுந்த வரவேற்புடன் படித்து இருக்கிறீர்கள்.  புத்தகம் வெளியானதால் இந்தத் தொடர் இந்த வலைப்பூவில் இத்துடன் நிறுத்தப்படுகிறது

    மேலும் அனேக சுவையான, சுவாரசியமான தகவல்களை இந்தப் புத்தகத்தில் எழுதி இருக்கிறேன். ஆவி, பூதங்களை ஆட்கொண்ட மனிதன், இறந்தவர்களின் புத்தகம், கர்னாக் கோயில்களில் இருந்த ரகசியக் குறிப்புகள், ரகசிய அறைகள்,  பிரமிடுக்குள் செய்தது போலவே கர்னாக் கோயிலில் நள்ளிரவில் செய்த தியானத்தின் சுவாரசிய அனுபவம், பாம்பு தேள்களை வசியம் செய்யும் கலை, அதன் சூட்சுமங்கள், அந்தக் கலையை பால் ப்ரண்டன் கற்றுத் தேர்ந்து செய்த ஆராய்ச்சிகள், எகிப்திய மலைப்பகுதியில் கண்ட அதிசய மனிதர், உடலை ரகசிய சமாதியில் ஒளித்து வைத்து விட்டு ஆவியுலகில் வசிக்கும் அபூர்வ மனிதர்கள் பற்றியெல்லாம் சுவையான தகவல்களைக் கூடுதலாக இந்த நூலில் படிக்கலாம்.

    நூலைப் பெற விரும்புவோர் admin@blackholemedia.in ,   blackholemedia@gmail.com  மின்னஞ்சல்கள் மூலமாகவோ,  செல்பேசி:   9600123146,  மூலமாகவோ பதிப்பகத்தாரைத் தொடர்பு கொள்ளலாம்.

    பதிப்பக இணைப்பையும் இங்கு தந்துள்ளேன்.
    http://blackholemedia.in/node/211

    இந்த நூல் ஆன்மிகம் மற்றும் அபூர்வ சக்திகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு பொக்கிஷமாக இருக்கும் என்று நம்புகிறேன். எனவே தங்கள் மேலான ஆதரவை இந்த நூலுக்கு அளிக்கும்படியும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

    அன்புடன்
    என்.கணேசன்

    Share
  • வீணையா (பாடல்)

     

    இசைக்கவி ரமணன்

    வீணையா – கேட்டு மகிழுங்கள்

    வீணையா? விதியினைச் சரிசெய்யும் இதயத்தின்
    ஆணையா?
    விரல்களா? விண்ணுக்கும் மண்ணுக்கும் வாழ்வுதரும்
    சுரங்களா? ஒரு
    வீணையை ஏந்திய திருமகள் என்
    விழியினில் வந்துநின்றாள் அவள்
    செந்தாமரையில் கலைமகள், புதுச்
    சிரிப்புடன் வந்துநின்றாள்
    அலைமகளும் கலைமகளும் வந்து குலவுகின்ற தருணம்
    மலைமகளும் இதைக்கண்டு தன் மனது குளிரும் தருணம்

    பார்க்கப் பார்க்கப் பரவசம் அம்மா பார்க்க முடியவில்லையே
    பால்மழையில் குழந்தையம்மா பருகத் தெரியவில்லையே
    சேர்த்துப் பிடித்த மணல்மேடெல்லாம் தேன்மழையில் கரைந்ததுவே!
    செல்லுமிடம் நானேயாகி சிலையாய் உயிர் நிலைத்ததுவே!
    நேரில் நின்ற சிறுமியின் கண்ணில் கோடிமின்னல் தெறித்ததுவே, அவள்
    நெஞ்சின் ஒளியில் நீண்ட நிழலில் அலையும் கலையும் தோன்றியதே
    கண்ணில் மறைந்து நெஞ்சில் நுழைந்து கமலமாக விரிந்ததுவே                     

    (வீணையா)

     

    நாணம்வந்து சிவந்ததிதயம் அதிலெழுந்தாள் திருமகளே
    நாள்:விடிந்து வெளுத்தபோது அங்குவந்தாள் கலைமகளே
    காணக்காண எங்கும்தோன்றிக் கலகலத்தாள் மலைமகளே
    கண்கள்கூச உயிரின் உள்ளே ஒன்றானாள் ஒருமகளே
    மாறிமாறித் தோன்றினாலும் மர்மமொன்றும் இல்லையே
    ஒளியும் இருளும் ஒன்றே என்றால் மாயமொன்றும் இல்லையே
    மாயம் மர்மம் தீர்ந்துவிட்டாலும் மலைப்பு தீரவில்லையே! (வீணையா)

    வீணையா – ஆம் கேட்டு மகிழுங்கள்!

     படத்திற்கு நன்றி :

    http://www.brass-handicrafts.com/saraswati-statue.html

     

    Share
  • நட்ட நடுவில் (பாடல்)

     

    இசைகவி ரமணன்

    நட்டநடுவில் – சுவைத்து மகிழுங்கள்

    நட்ட நடுவில் பொட்டுவைத்து
    நட்சத்திரங்களை நட்டுவைத்து
    கோள்களினைச் சுழலவைத்து கோளங்களை அலையவைத்து
    வெள்ளம்வடிந்து நாணல்புல்லை நிமிரவைத்தவள்! அந்த
    வானத்திலே முகம்துடைத்துச் சுருட்டி எறிந்தவள்!
     அவள்தான் என்னையும் படைத்தவள்!
     எனக்குள் தன்னையும் அடைத்தவள்!!
    தர்மங்களும் நியாயங்களும் அவள் மனத்தின் இட்டம், நம்
    தர்க்கமெல்லாம் தாழ்வாரத்தில் குழந்தை அடிக்கும் கொட்டம்!
    மர்மமாக இருப்பதிலும் அவளுக்கில்லை திட்டம்
    மனம்தொறந்தா மல்லிகைஉதிர்ந்து மணக்குமவள் கொற்றம்!

    தக்கைபோல மெதந்திடாமல்
    தாயை அறிய முடிந்திடுமா?
    கட்டிப்பிடிக்கவும் முடியாது விட்டுவிலகவும் வழியேது?
    தொட்டுப் பார்க்க முடியாத தொலைவில் ராணி, என்னைத்
    தொட்டுத் தொட்டு வார்த்தைசெல்லும் தோழமை வாணி
     அவள்தான் தொலைவில் ராணி
     அவளே தோழமை வாணி

     
    சாதனையும் வேதனையும் கானலிலே நீரு, அவ
    சோதனையே வைப்பதில்லே தேறுவது யாரு?
    இன்பம் பதநி துன்பம் கள்ளு இப்படிப் பாருநீ
    சரியும் தவறும் அவள்வீணையில் சரிகமபதநி

    பேரைச் சொல்லி அழைத்தாலும்
    பேந்தப் பேந்த முழித்தாலும்
    ஊரைக்கூட்டித் தொழுதாலும் உருண்டு புரண்டு விழுந்தாலும்
    ஒண்ணும்லாபம் இல்லேநானும் சொல்வதைக் கேளு, அவளை
    உயிர்க்குயிரா அம்மான்னு ஒரு தரம் கூவு
     உண்மையைச் சொல்லுறேன் கேளு
     அம்மான்னு ஒருதரம் கூவு

    படத்திற்கு நன்றி :

    https://ramanan50.wordpress.com/2012/09/01/for-childless-couplethirukkarukaavoor-details/

    நட்டநடுவில் – செவி குளிர!

     

    Share
  • அம்பிகையின் அழகு

     

    இசைக்கவி ரமணன்

    அம்பிகையின் அழகைக் கேட்டு மகிழுங்கள்!

    ஜூலை 1976. பாரதி கலைக்கழக அன்பர்கள் ஒரு திருக்கோயிலில் ”தெய்வக் கவியரங்கம்” என்று ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். அது எந்தக் கோயில் என்பது இப்போது நினைவில் இல்லை. ஐந்தாறு கவிஞர்கள் – இளையவன், மதிவண்ணன் போன்றோர், ஆளுக்கொரு தெய்வத்தைப் பாடவேண்டும் என்பதாக ஏற்பாடு.

    “நீ அம்பிகையின் அழகு என்ற தலைப்பில் பாட முடியுமா?” என்று கேட்டார்கள். நான் மிக அலட்சியமாகவும் ஆணவத்தோடும், அது ரொம்ப சுலபம் என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தேன்.
     
    அந்தக் கணத்திலிருந்து என்னில் கவிதையைக் காண இயலவில்லை…நான் சொல்வது உங்களுக்கு நம்புவதற்குக் கடினமாக இருக்கலாம். இருந்தாலும் சொல்கிறேன். ஒரு வார்த்தை கூட எனக்கு வரவில்லை! பேசிக்கொண்டே இருந்தவன் தீடீரென்று நட்ட நடு அவையில் ஊமையாகிப்போனால் எப்படி இருக்கும்? அப்படி, எனக்குத் தமிழே மறந்துவிட்டதுபோல் மனது சூனியமாகி விட்டது.

    யாரிடமும் இதைப் பகிர்ந்துகொள்ள முடியாத அளவுக்கு துக்கமாகவும் அவமானமாகவும் இருந்தது. ஒருநாள் பகற்பொழுது முழுவதும் எனக்குத் தமிழே மறந்ததுபோல், சொல்லே இல்லாமல் துடித்தேன்.

    விளக்கேற்றி வைத்து, பராசக்தியிடம் மன்னிப்புக் கேட்டேன். ஜீவித்திருக்கும் உயிர்களுக்கு எப்படி அடுத்த மூச்சு நிச்சயம் இல்லையோ, அதுபோல் அடுத்த சொல்லுக்கான உத்தரவாதம் இல்லாத கவிஞன்தான் நான்; அவளிட்ட பிச்சையே தவிர என் திறமை என்று ஏதுமில்லை; என்று புரிந்துகொண்டேன்.

     
    பிறகு வந்தன வார்த்தைகள். அதுதான் “அம்பிகையின் அழகு” என்னும் கவிதை. அதை என் குரலில் ஒலிப்பதிவு செய்து இத்துடன் இணைத்துள்ளேன். இதில் இலக்கியம், கவிதை நயம் எதுவும் கிடையாது. ஆனால், எனக்கு இது அம்பிகையுடனான அந்தரங்க அனுபவம். 36 ஆண்டுகளுக்குப் பிறகு இதை ஏன் பொதுவில் கொண்டு வருகிறேன்?

    அவளைத்தான் கேட்கவேண்டும்!

    அம்பிகையின் அழகை செவியாலும் பருகலாம்!

    படத்திற்கு நன்றி :

    http://www.starsai.com/garbarakshambigai-photos/

    Share
  • கலைதரும் தலைவி…

               

     செண்பக ஜெகதீசன்

    குறையிலாக் கல்விக் குருகுலமே

         குமர குருபரர் கலாவல்லியே,

    உறைவது வெள்ளைத் தாமரையிலே

         உரைத்திடும் பாவலர் நாவினிலே,

    நிறைவுடன் புகழது தருபவளே

         நினைத்ததும் அருள்தர வருபவளே,

    மறைகளில் நிறைந்திடும் தலைமகளே

         மனதுடன் பணிந்தோம் கலைமகளே…!

     

     http://srilalithatripurasundari.wordpress.com/lalita-sahasranama/impact-of-chanting-lalitha-sahasranama/sri-lalitha-tripura-sundari-an-overview/meanings-of-lalitha-sahasranamam/nitya-buddha/         

    Share
  • கோபம்.

    ராஜ்பிரியன்

    பரபரப்பாக இருந்த அந்த கல்யாண மண்டபத்துக்கு முக்கிய பிரமுகர்கள் எல்லாம் வந்தபடியே இருந்தார்கள். வந்தவர்களை வாசலில் நின்று வரவேற்றுக்கொண்டு இருந்தார்கள் அலுமேலுவும், அவரது கணவர் தங்கச்சாமியும். தங்கச்சாமி பொள்ளாச்சியில் ஹோட்டல், நகைக்கடை, துணிக்கடை, 500 ஏக்கர் நிலமென வசதிக்கு குறைவில்லாதவர். சுற்றுவட்டார பகுதியில் செல்வாக்கானவர், அமைதியானவர். அவரது பெண் சுவாதிக்கு தான் திருமணம்.

    அவரது செல்வாக்குக்கு குறைவான இடத்திலேயே மாப்பிள்ளையை பார்த்திருந்தார். காரணம் அவரது மகள் அவருக்கு செல்லம். ஓரே பெண் என்பதால் சின்ன வயதில் இருந்தே ஏகப்பட்ட பாசத்தை பொழித்து வளர்த்திருந்தார். இதனால் சுவாதிக்கு எதிலும் கர்வம். தான் நினைத்தது நடக்க வேண்டும். விருப்பத்துக்கு எதிராகவோ, அவள் சொல்வதை மறுத்தாலோ சடாரென கோபம் வந்துவிடும். குடும்பத்தாரிடம் கோபம் வந்தால் இரண்டு நாளைக்கு சாப்பிடமாட்டாள். வெளியாட்களாக இருந்தால் திட்டிவிடுவாள்.

    இப்படித்தான் ஒருநாள் காலை பதினோரு மணிக்கு டிபன் சாப்பிட அமர்ந்தவளுக்கு அவளது அண்ணி கீதா, சுடாக டிபன் தரவில்லையென தட்டையெடுத்து கீதா மீது அடித்துவிட வீட்டில் ஒரே களோபரம். அவள் செய்தது தப்பு என எல்லோருக்கும் தெரியும். ஏதாவது கேட்டால் அவளுக்கு கோபம் வரும் என்பதால் யாரும் வாயை திறக்கவில்லை. இதனால் கீதா அம்மா வீட்டுக்கு போய்விட்டாள். சமாதானம் பேசிய மாமியாரிடம் அவளை மன்னிப்பு கேட்கச்சொல்லுங்க அப்பத்தான் வருவன்.

    உங்கண்ணன் வாழ்க்கைடீ ஸாரி கேளு என அலமேலு மகளிடம் கேட்டபோது அவன் வாழ்க்கை எப்படி போனாலும் எனக்கு கவலையில்ல அவக்கிட்ட நான் மன்னிப்பு கேட்கமாட்டன் என உறுதியாக இருந்துவிட குமரன் தான் திண்டாடிபோனான். மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வர அவனுக்கு ஆறுமாதமானது.

    நான்கு மாதத்துக்கு முன்பு உனக்கு கல்யாணம் பண்ணலாம்ன்னு இருக்கம்மா எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேணும்ன்ன சொல்லும்மா என தங்கச்சாமி கேட்டதும், அடக்கமானவரா, அழகானவரா, படிச்சவரா, எதிர்த்து பேசாதவரா இருக்கனும் என அடுக்கினாள். இதை கேட்டுக்கொண்டுயிருந்த அலமேலு அப்படின்னா நீ சன்னியாசியா தான் போகனும் என்றார்.

    அதை கேட்டு கோபமான தங்கச்சாமி, வாய மூடுடீ என அதட்டினார்.

    அப்படி போனாலும் போவன் ஒருத்தன்கிட்ட அடிமையா இருக்கமாட்டன் என்றாள் கோபமாக.

    அவ கிடக்கறா விடும்மா. நீ சொல்றமாதிரியே பாக்கறன்ம்மா என்றார் பாசமாக அவள் தலையை தடவியபடி. கல்யாண புரோக்கரை அழைத்து வசதி குறைவா இருந்தாலும் பரவாயில்ல. பையன் நல்லவனா, படிச்சவனா, அழகா இருக்கனும் என்றார். புரோக்கரும் கோவையில் சின்னதாக ஒரு பேக்டரி வைத்திருக்கும் விநோதன் ஜாதகத்தை தந்து நல்லப்பையன், குடும்பத்துக்கு அடக்கமானவன், கோபப்பட்டே பார்க்க முடியாது என்றார்.

    விசாரித்தபோது புரோக்கர் சொன்னது உண்மையென அறிந்துக்கொண்டவர், அதன்பின்பே பெயர் பொருத்தங்களை பார்த்தார். “பையன் பொண்டாட்டிக்கு அடங்கனவனா இருப்பான்” எனச்சொல்ல மனம் குதுகலித்தது. உடனே புரோக்கர் மூலம் அந்த குடும்பாத்தரை சந்தித்து பேசினார். பெரிய இடம் தங்கச்சாமியை பற்றி அறிந்தவர்கள் அவரது மகள் பற்றி அறியாமல் சம்மதம் தெரிவித்தனர். சுவாதியும் விநோதனை பிடித்திருப்பதாக சொல்ல கல்யாண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன. தங்கச்சாமி பொள்ளாச்சியிலேயே நடத்தினார்.

    இரவு வரவேற்பு நடந்தது. சுவாதி தேர்வு செய்திருந்த ஆடையையே விநோதன் அணிந்தான். அவன் கையில் வைத்திருக்கும் கைக்குட்டை வரை சுவாதியின் தேர்வாகவே இருந்தது. சுவாதியின் நடவடிக்கையை நிச்சயம் நடந்தது முதல் பார்த்தும் அனுபவித்து தான் வந்தான். அவள் ஒருமுறை செல்போனில் அழைக்க பேக்டரி சத்தத்தில் எடுக்காமல் விட்டுவிட்டான். கோபத்தில் ஒருநாள் முழுக்க அவனுடன் பேசவில்லை. ரிசப்ஷன் முடிந்து சாப்பிட அமர்ந்த போது விநோதனுக்கு பிடித்த பால் பாயாசம் டம்ளரில் இருந்தது. அதை குடித்தவன் இரண்டாவதாக வாங்கலாம் என நினைத்து பரிமாறுபவரை அழைத்து பால்பாயாசம் கேட்டான்.

    அதல சக்கரை அதிகமாயிருக்கும் சாப்பிடாதிங்க என தடைபோட்டாள். அப்போது விநோதன் முகம் சுருங்கியதை அலமேலு கவனித்து நொந்துப்போனார். காலை முகூர்த்தத்துக்கு வந்தவர்களை அலுமேலு தன் கணவருடன் சேர்ந்து வரவேற்ற போது அவளுக்கு மகளின் செயல்கள் மனதில் படமாக ஓடியது.

    தாலி கட்டி முடித்ததும் மைக் முன் வந்த முக்கியஸ்தர்கள் சிலர் மணமக்களை வாழ்த்தினர். அலமேலுவை பேசச்சொல்ல, “இரண்டு பேரும் விட்டுக்கொடுத்து வாழனும். என் பொண்ணு கோபப்பட்டா, மாப்பிள்ளை தான் பொறுத்துக்கனும்”, என கண்ணீருடன் சொல்லிவிட்டு இறங்கினார். அடுத்து மைக் முன் வந்த குமரன், “என் தங்கச்சிக்கு தப்பு பண்ணா கோபம் வரும். மச்சான் பொறுத்துக்கனும்” என சொல்லிவிட்டு இறங்க, அடுத்து வந்த சுவாதியின் சித்தப்பா ரங்கன், “பொண்ணு கோபப்பட்டாலும் மாப்பிள்ளை விட்டுக்கொடுத்து போகனும்.” இதை கேட்டுக்கொண்டுயிருந்த விநோதன் மைக்கை வாங்கி “எல்லாரும் பொண்ணு கோபப்பட்டா பொறுத்துக்கிட்டு போகனம்ன்னு எனக்கு அறிவுரை சொல்றிங்க. ஆனா யாரும் பொண்ணு கோபப்படகூடாதுன்னு சொல்ல மாட்டேன்கிறிங்களே. அறிவுரை சொல்றவங்க முதல்ல கோபப்படக்கூடாதுன்னு சொல்லுங்க” என்றார். இதை கேட்டுக்கொண்டுயிருந்த தங்கச்சாமியின் முகத்தில் திகிலடித்தது. சுவாதி தன் அப்பாவை பார்க்க, “பாத்துக்கலாம்மா ” என்றார் கண்களாலேயே.

    மண்டபத்தை விட்டு வீட்டுக்கு போயும் சுவாதி விநோதனுடன் சரியாக பேசவில்லை. முதலிரவு அறைக்கு அனுப்பும்போது பாத்து நடந்துக்க என கிண்டலாக சொல்லி அனுப்பினார்கள் உறவினர்கள்.

    அறைக்குள் சென்ற சுவாதி கட்டிலில் உட்கார்ந்திருந்த விநோதனை பார்த்து, “எதுக்கு மண்டபத்தல அப்படி பேசனிங்க ” என்றாள் கோபத்துடன். அவள் பக்கம் திரும்பிய விநோதன், “இப்படி உட்காரு” என கட்டிலை காட்டினான். உட்கார்ந்தவள் பக்கம் திரும்பி, “இங்கப்பாரு சுவாதி, உனக்கு அதிகமா கோபம் வரும். நீ சொல்றதத்தான் மத்தவங்க கேட்கனும் அப்படின்னு நினைக்கறத முதல்ல விடு. உன் குணத்தப்பத்தி மண்டபத்தலயிருந்து வந்ததுமே உங்கம்மா எங்கிட்ட சொன்னாங்க. நீ நினைக்கற மாதிரி என்னால வாழ முடியாது. உன் சுதந்திரத்த நான் கணவன்ங்கற அதிகாரத்தை வச்சி தடுக்க மாட்டன். அத நீ தப்பா பயன்படுத்தாதன்னு சொல்றன். பணத்துக்காக உன்ன நான் கல்யாணம் செய்துக்கல. முதல்ல உங்க வசதிய நினைச்சி யோசிச்சோம். புரோக்கர் தான் நல்ல குடும்பம்ன்னு சொன்னாரு. அதனால தான் சரின்னு சொன்னோம். உனக்குயிருக்கற மாதிரி மத்தவங்களுக்கும் மனசு, அவுங்களுக்குன்னு ஒரு கருத்துயிருக்கும் அதுக்கும் மதிப்பு தரனும். சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்பட்டா அதுக்கு மரியாதையில்லாம போயிடும். உன் மேல வருத்தம் தான் வரும். குடும்ப வாழ்க்கைன்னா கணவன் மனைவிக்குள்ள விட்டுக்கொடுக்கறது இருக்கனும். இந்த கட்டில்லயிருந்து சின்ன சின்ன ஆசைகள் வரை ஒவ்வொருத்தரும் புரிஞ்சிக்கிட்டு, கலந்து பேசி வாழ்ந்தா எந்த பிரச்சனையும்மில்ல. கோபமும் வரப்போறதில்ல.

    நம்ம இரண்டு பேருக்குள்ள இந்த பணம் வந்து குடும்பம் நடத்தப்போறதில்ல. மனிதர்களான நாம தான் குடும்பம் நடத்தப்போறோம். அதனால ஆதிக்கம் செலுத்தறத, கோபப்பட்டறத விட்டுட்டு விட்டுக்கொடுத்து வாழ பழகிக்க. அதான் நமக்குள்ள நல்ல வாழ்க்கையை தரும். உனக்கு அட்வைஸ் பண்றத்து புடிக்காதுன்னு உங்கம்மா சொன்னாங்க. இருந்தாலும் நான் மண்டபத்தல அப்படி பேசனதால நீ என் மேல கோபமா இருக்கறது தெரியும். நான் அந்த இடத்தல உன்ன விட்டுக்கொடுத்துயிருக்ககூடாது. ஆனா ஒரு பிரச்சனையை முளையிலயே கிள்ளிடனும் இல்லன்ன பெருசாகிடும். அதனால தான் அங்க பேசனன். இப்பவும் சொல்றன். அங்க உன்ன விட்டுக்கொடுத்ததுக்கு ஸாரி ” என பேசி முடித்தான்.

    இவ்வளவு நேரம் விநோதன் பேசியதை கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து கேட்டுக்கொண்டுயிருந்தாள்.

    “நானே தான் பேசிக்கிட்டுயிருக்கன் உன் கருத்து என்னன்னு சொல்லு”, என கேட்டான்.

    பதிலேதும் சொல்லாமல் தலையை திருப்பிக்கொண்டாள். நீண்ட நேரம் பதிலேதும் வராததால் அமைதியாக அப்படியே கட்டிலில் ஓரமாக படுத்துக்கொண்டான். சுவாதியின் மனம் கொதிக்க தொடங்கியது. பூக்கள் வாடத் தொடங்கியது.

    காலையில் அறையை விட்டு வெளியே வந்த சுவாதியை பார்த்ததுமே அலமேலுவுக்கு புரிந்து போனது. இரவு எதுவும் நடக்கவில்லை என்று. மகளை கிச்சன்க்கு அழைத்து சென்றவர் என்ன நடந்துச்சி என கேட்டார். அமைதியாக இருந்தவளை பார்த்து “சண்டை போட்டுக்கிட்டா,  சமாதானமா போறயிடத்தலயே சண்டைன்னா உன்னயெல்லாம் என்ன சொல்றது”, என நொந்துக்கொள்ள மவுனமாகவே தரையை பார்த்தப்படி நிற்க தாய் பாசம் அவரை கண் கலங்க வைத்தது.

    அப்போது “வாங்க மாப்பிள்ள” என்ற குரல் கேட்டு இருவரும் வெளியே பார்த்தனர். சோபாவில் அமர்ந்து பேப்பர் படித்தபடியே ரூமை விட்டு வெளியே வந்த விநோதனை  அழைத்து எதிரில் “உட்காருங்க”, என்றார் தங்கச்சாமி.

    கிச்சன் பக்கம் திரும்பி “அலமேலு, மாப்பிள்ளைக்கு காபி எடுத்துவா” என குரல் கொடுத்தார்.

    விநோதன் பக்கம் திரும்பி, “வீடு புடிச்சியிருக்கா மாப்பிள்ள.?”

    “நல்லாயிருக்கு மாமா.”

    “சுவாதியோட அறை சின்னதா இருக்கும். மேல பெருசா ஒரு அறையிருக்கு. அதை எடுத்துக்குங்க.”

    “எதுக்கு மாமா இருக்கறதே கம்பர்டபிளா இருக்கு.”

    “என்ன வசதி வேணும்மோ செய்துக்குங்க”, என்றதும் ஓரளவு புரிஞ்சது விநோதனுக்கு. வீட்டோட இருக்கச்சொல்றாரு. அத சுத்தி வளைச்சி பேசறாரு.

    “வீட்டோட மாப்பிள்ளையா இருக்க எனக்கு சம்மதம்மில்ல மாமா”, எனச்சொல்லும் போதே அலமேலுவும், சுவாதியும் ஹாலுக்கு வந்திருந்தனர்.

    “இல்ல அப்படி சொல்ல வரல மாப்ள”, என தயங்க,

    “நீங்க உங்க பொண்ணு மேல ரொம்ப அதிகமாவே பாசம் வச்சியிருக்கறது தெரியும் மாமா. உங்க பொண்ண நீங்க பாத்துக்கறத விட நான் என் மனைவியை ரொம்ப நல்லாவே பாத்துக்குவன்.”

    “அதுக்கில்ல மாப்ள.”

    “இதப்பத்தி நானும் என் மனைவியும் பேசி எடுக்க வேண்டிய முடிவு. நான் பேசிட்டு சொல்றன் மாமா”, என்றபடியே எழுந்து மீண்டும் அறைக்குள் சென்றான்.

    சில நொடி தன் அப்பாவை பார்த்தவள் பின் அலமேலு கையில் இருந்த காபி டம்பளரை வாங்கிய சுவாதி விநோதன் பின்னாடியே அறைக்குள் நுழைந்தவள் கதவை லாக் செய்தாள்.

    காபி டம்பளரை தந்துவிட்டு அமைதியாக பார்த்தவளிடம், “உங்கப்பா வீட்டோட மாப்பிள்ளையா இருக்கனம்ன்னு நினைக்கறாரு. ஒரே பொண்ணுன்னு ரொம்ப பாசம் வச்சிட்டாரு. அதனால அப்படி நினைக்கறாரு. ஆனா ஆம்பளைக்கு அழகு அவன் சம்பாதியத்தல மனைவிய நல்லா பாத்துக்கறது தான். அதான் எனக்கும் மரியாதை. உனக்கும் மரியாதை. இதான் என் கருத்து. உன் கருத்து என்னன்னு சொல்லு.”

    “உன் வீட்டுக்காரர் என்ன பண்றாருன்னு கேட்டா, இந்த தொழில் பண்றாருன்னு சொல்றதுத்தான் எனக்கு மரியாதை. எங்கப்பாவோட ஆபிஸ்ல வேலை பாக்கறாருன்னு சொல்றதுயில்ல. அது உங்களுக்கும் அசிங்கம். உங்களுக்கு ஒரு அசிங்கம்ன்னா அது எனக்கும் தான். சடங்கு முடிஞ்சதும் நாம நம்ம வீட்டுக்கு போயிடலாம்.”

    ஆச்சர்யமான விநோதன், “இந்த மாற்றம் நைட்டே வந்துயிருந்தா, ஒரு நைட் வேஸ்ட்டாகியிருக்காது. இப்ப நைட் வரைக்கும் காத்திருக்கனும்மா” என ஏக்கத்தோடு கேட்டபோது, “காத்திருக்க தேவையில்ல” என புன்னகைத்தபடியே அவன் உதட்டோடு தன் உதடுகளை இணைத்திருந்தாள் சுவாதி. விநோதன் குடித்த காபியின் மனம் அவளின் உதடுகளில் மணத்தது.

    Share