Blog

  • Georgian Bay, Ontario, Canada

    R.S. Mani

    Watercolor 10.5″H x 14″W

    Georgian Bay - watercolor

    Georgian Bay is a large bay of Lake Huron, located entirely within Ontario, Canada.

    Years ago, I spent my vacation in the Bay area. The watercolor painting shown here was done at site.

    For those interested in learning watercolor painting, I would like to tell about “The Masking Fluid”.

    When you want to leave the paper white in places (instead of using white paint), draw the shapes with the masking fluid on the paper and paint on top of it. Later, using an eraser, you can remove the dried up fluid and expose the paper as the white shape. In this painting, I created the shapes of the white seagulls in the sky by this technique.

    The reason for introducing the topic of the Masking Fluid here is this:

    I started experimenting with it and took its usage to extreme. The result was unique textures which cannot be achieved by any other method. I shall post a sample of that kind of work next week in Vallamai.

    anbudan,
    R.S.Mani
    (Cambridge, Ontario, Canada)

    Share
  • நீ நீதான்

     

    பிச்சினிக்காடு இளங்கோ 

     

    மரமே உன்னைrq518f9998

    பலமுறை

    பல்வேறுவகையில்

    பாராட்டியிருக்கிறேன்

     

    செங்கல்லில்

    பளிங்கில்

    கிரானைட்டில்

    எத்தனைஎத்தனை

    கட்டடங்கள் மாளிகைகள்

    எழுப்பினும்

    அங்கே

    . ஒவ்வொரு கதவைத்திறக்கும்போதும்

    என் மனகதவுகள் திறக்கின்றன

     

    உன்னில் ஆன

    நாற்காலிகளில்

    அமரும்போதெல்லாம்

    என்மனத்தில்

    நீ நாற்காலிபோட்டு

    அமர்கிறாய்

     

    மெத்தை விரிக்கும்

    படுக்கையும் உன்மீதுதான்

     

    படுத்தால் போதும்

    படுத்துவிடுகிறது மனமும்

     

    புத்தகங்கள் கோப்புகள்

    உடைகள்

    தங்கம்வெள்ளி அணிகலன்கள்

    இன்னபிற எல்லாம்

    இருக்குமிடம்

    உன்னிலானது

     

    அலுவலகம் என்றால்

    அங்கே அழகுசேர்ப்பது

    நீதான்

     

    அவதாரங்கள்

    அதிகம் எடுப்பது

    ஆண்டவனல்ல

    நீதான்

     

    மனிதனுக்குத்தான் மரணம்

    மரங்களுக்கில்லை

     

    மனிதர்களின் மரணத்தில்

    உடன்கட்டை ஏறுவது

    மனைவியல்ல மரம்தான்

     

    நீ

    நின்றால் நிழல்

    கைவிரித்தால்

    காய் கனி

    வீழ்ந்தால் அது

    வீழ்ச்சியல்ல

    நீ எடுப்பது எழுச்சி

    அதுதான் விசுபரூபம்

     

    எல்லாவகையிலும்

    எல்லாநிலையிலும்

    நீ எங்களுக்காகவே

    வாழ்கிறாய்

     

    ஒன்றுக்கும் உதவாதவர்கள்

    உங்களில் ஒருவருமில்லை

     

    எந்தக்கோணத்தில்

    பார்த்தாலும்

    ஒரு கோணலுமில்லாத

    உன்னதம் நீ

     

    நெருப்பு தீண்டாதவரை

    நீ நீதான்
    ( தமிழ்வள்ளல் நாகை தங்கராசு அவர்களுடன் 04.10.2013 நாள் நிவன் சாலை பர்னிச்சர் கடையில் நுழையும்போது தோன்றியது)

    படத்திற்கு நன்றி:

    http://www.google.com/imgres?imgurl=http://files.abovetopsecret.com/files/img/rq518f9998.jpg&imgrefurl=http://www.abovetopsecret.com/forum/thread946684/pg1&h=1138&w=1000&sz=84&tbnid=M09LXKfwVeaLBM:&tbnh=127&tbnw=112&zoom=1&usg=__9U51mNU__1rqkSmZGc7DvZ8r27I=&docid=vRw-myTab_LJrM&sa=X&ei=T_NPUsmAA8uHrgfM7oGQDw&ved=0CDIQ9QEwAw

     

    Share
  • இப்படியும் சில மனிதர்கள்! – 5

    தஞ்​சை ​வெ. ​கோபாலன்

    சாமிநாதன் மகள் திருமணம் முடிந்து ஓரிரு மாதங்கள் ஆகியிருக்கும். சென்னை அண்ணா சாலையிலிருந்த எனது அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். காலை மணி 11 இருக்கும். அப்போது எனக்கு ஒரு டெலிபோன் கால் வந்தது. எடுத்துப் பேசினேன். யாரோ ஒரு பெரியவர் தன்னை மாம்பலத்தில் ‘தில்’ வீட்டுக்கு அருகில் வசிப்பவர் என்றும், இங்கு வந்து தில்லும் திவானாவும் மருமகளை, அதாவது சாமிநாதனின் மகளைப் படுத்தும் பாட்டை வந்து பார்த்துவிட்டுப் போகும்படியும் சொன்னார். சார், நீங்க சாமிநாதனையே வரச் சொல்லியிருக்கலாமே என்றேன். அவர் சொன்னார், இதையெல்லாம் பார்த்தா அவர் தாங்க மாட்டார். மூன்றாவது மனிதர்களாகிய நாங்களே மனம் நொந்து உங்களுக்குப் போன் செய்கிறோம் என்றால், மகளைப் பெற்றவர் மனம் என்ன பாடுபடும் என்றார். ஆம், அதுவும் உண்மைதான் என்று எண்ணிக்கொண்டு, என் மேலதிகாரியிடம் போய் ஒரு அவசர காரியமாக வெளியில் போக வேண்டியிருக்கிறது இன்று நான் லீவ் எழுதிக் கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன். அங்கு நான் மட்டும் போவது நல்லதா என்ற எண்ணம் ஏற்பட்டது. உடனே என் நண்பன் ராஜாவின் நினைவு வந்தது. அவன் என்னைவிட தடாலடியாக நடந்து கொள்வான், பயம் என்பதே தெரியாதவன், அவனைக் கூப்பிட்டுக் கொண்டு உடனே மாம்பலம் விரைந்தோம்.

    அங்கு தில் வீட்டு வாசலில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு நாங்கள் இருவரும் உள்ளே நுழைந்தோம். திவானாதான் எதிர் கொண்டு வந்தாள். வழக்கம் போல சாய்ந்து சாய்ந்து தேர் அசைவதைப் போல வந்து நின்றுகொண்டு, வாங்கோ, சம்பந்தி மாமாவோட ஃபிரண்டா, என்ன சங்கதி? என்றாள். ஒண்ணுமில்லை சாமிநாதன் பெண்ணைப் பார்த்துட்டுப் போக வந்தோம், அவ எங்கே என்றேன்.

    “அவ பைஷ்டை, தூரமணாள் உள்ள இருக்கா, அவளைப் பார்க்க முடியாதே” என்றாள் திவானா.

    “ஏன்? நாங்க எட்ட இருந்தபடியே பார்த்துப் பேசிட்டுப் போயிடறோம். இது என் ஃபிரண்ட் ராஜா. இவன் தங்கைக்கு சீமந்தம். அவ உங்க மாட்டுப்பெண்ணுக்கு நெருங்கின தோழி. அவ நேரிலே போய் அழைச்சுட்டு வரச் சொல்லியிருக்கா, அதனால அவகிட்டே பேசிட்டுப் போயிடறோம். கூப்பிடுங்கோ” என்றேன்.

    “அதான் சொன்னேனே. அவ கொல்லைல இருக்கா, அவளை இன்னும் ரெண்டு நாளைக்குப் பார்க்க முடியாது” என்றாள்.

    “சரி, மாமா எங்கே” என்றேன்.

    “அவர் கே.கே.நகர் வரையில் போயிருக்கார், எப்போ வருவார்னு தெரியாது” என்றாள்.

    சரி, மயிலே மயிலே என்றால் இறகு போடாது என்று கோபத்தோடு நான் வேகமாகக் கொல்லைப் புறம் போகத் தொடங்கினேன். திவானா குறுக்கே வந்து கையை நீட்டிக் கொண்டு நின்றாள். “நான் போகக்கூடாதுன்னு சொல்றேன், நீங்க பாட்டுக்குப் போறேளே, மாமாவும் ஆத்திலே இல்லை, நீங்க போயிட்டு அப்புறமா வாங்கோ, இப்போ நீங்க அவளைப் பார்க்க முடியாது” என்றாள்.

    நான் வரும் வேகத்தைப் பார்த்துவிட்டு அந்த அம்மாள் கையை விலக்கிக் கொண்டாள். இல்லாவிட்டால் என் கை அவள் மீது பட்டு அவள் மடி கெட்டுவிடும் என்ற பயம் அவளுக்கு. நான் கொல்லைப் புறம் போனேன், கொல்லை வாயில்படி தாண்டினவுடன் ஐந்துக்கு நான்கு ஒரு குளியல் அறை, அதையடுத்து ஐந்துக்கு மூன்றில் கழிவறை இருந்தது. குளியல் அறைக் கதவு ஒருக்களித்து சாத்தப்பட்டிருந்தது. நான் வந்த காலடி ஓசை கேட்டு சாமிநாதனின் பெண் கதவைத் திறந்து என்னைப் பார்த்தாள். அவள் முகம் வெளிறி இருந்தது. மாமா! என்றாள் என்னைப் பார்த்ததும் தீனமான குரலில். எனக்கு நெஞ்சை அடைத்தது, கண்கள் கண்ணீரால் நிரம்பி பார்வை மங்கியது.

    “என்னடா கண்ணு, ஏன் இங்கே வந்து உட்கார்ந்திருக்கே, வீட்டுக்குள் உனக்கு இடம் கிடையாதா?” என்றேன்.

    அதற்குள் திவானா அங்கு வந்து சேர்ந்தாள். இது என்ன அக்கிரமமா இருக்கு. நீங்கபாட்டுக்குச் சொல்லச் சொல்ல கேட்காம இங்கே வந்து அவகிட்டே பேசிண்டு நிக்கறேள். நான் மாமாவுக்குப் போன் போட்டு வரச்சொல்றேன். இதை சும்மா விடமாட்டேன் என்று மிரட்டினாள்.

    சரி மாமி, அவரையும் கூப்பிடுங்கோ. நானும் போலீசைக் கூப்பிடறேன். மருமகளை இப்படிக் கொடுமை செஞ்சா மூணு வருஷம் உள்ளே போகணும், தெரியுமா உங்களுக்கு என்றேன். திவானாவின் சுரத்து குறைந்தது. அதுக்கு இல்லை, தூரமணா இருக்கற இடத்துல வந்து ஆம்பிளைங்க பேசறது கூடாது. சாஸ்திரம் சம்பிரதாயம்னு ஒண்ணு இருக்கோன்னோ என்றாள் பணிவாக.

    ஒரு சாஸ்திரத்தையும் நான் மீறல்ல. ஒழுங்கா முறையா எங்க குழந்தையை சுகம் விசாரிச்சுட்டுப் போகத்தான் போறோம். என்று சொல்லிக்கொண்டே, நீ வெளியே வாம்மா நான் இருக்கேன் என்றேன்.

    சாயம் போன ஒரு பழம் புடவை, தலை விரிந்த கோலம், பாழ் நெற்றி இந்த தோற்றத்தில் அவள் வெளியே வந்தாள். சின்னஞ்சிறு குழந்தையாக இருந்தபோது அவளை தூக்கிக் கொண்டு கடைத்தெரு, கோயில் என்றெல்லாம் சுற்றியிருக்கிறேன். எப்போதும் சிரிப்பும், கலகலப்புமாக இருக்கும் அந்தக் குழந்தையா இது? இன்று பழைய பஞ்சாங்கத்திடம் மாட்டிக்கொண்டு திண்டாடுகிறதே என்ற நினைவு என் வயிற்றைப் பிசைந்தது.

    “என்னடா, சாப்பிட்டியா, ஏன் இப்படி ஒரேயடியா கண் குழிவிழுந்து கிடக்கறே?” என்றேன். திவானா உள்ளே போய்விட்டாள். இந்தப் பெண்ணைப் பார்த்தால் தீட்டாம்.

    பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொள்ள முயன்றும் அவளால் முடியவில்லை. ஓவென்று கதறி அழுதாள். முன்பின் பழக்கமில்லாத முறையில் இவளை ஒரு கொல்லைப்புற குளியலறையில் அடைத்து வைத்திருப்பதை மூன்றாம் மனிதனான என்னாலேயே தாங்கிக் கொள்ள முடியாதபோது அந்தக் குழந்தை என்ன செய்யும். அங்கு தான் படும் பாட்டையெல்லாம் தைரியமாக என்னிடம் சொன்னாள்.

    காலையில் ஒரு டம்ளர் காப்பியை வெளியில் வைத்து எடுத்துக் கொள் என்று சொல்லிவிட்டு திவானா உள்ளே போய் கதவை தாளிட்டுவிடுவாளாம். பகல் 12 மணிக்கு ஒரு தட்டில் சோறும் அதில் மோர் ஊற்றி வெளியில் வைத்துவிட்டு, திவானா உள்ளே போய் கதவை அடைத்துக் கொண்ட பிறகு இவள் வெளியே வந்து தட்டை எடுத்துக் கொண்டு போய் சாப்பிட வேண்டுமாம். யார் கண்ணிலும் படும்படி வெளியே வரக்கூடாதாம். யாரிடமும் பேசக்கூடாதாம். இப்படி நடப்பது யாருக்கும் தெரியக்கூடாதாம்.

    குளியல் அறைக்கு வெளியே வந்தால் அடுத்த கட்டடத்திலுள்ள ஒரு ஃபிளாட்டின் வராந்தா பகுதி. அங்கு இருக்கும் ஒரு பெரியவர் திவானா வீட்டில் இல்லாத சமயம், என்ன இப்படியெல்லாம் நடக்கிறதே, நீ உன் அப்பாவுக்குச் சொல்லி அனுப்பக்கூடாதா, இல்லையென்றால் அவர் டெலிபோன் நம்பரைக் கொடு நான் போன் செய்து சொல்கிறேன் என்றாராம். வேண்டாம் அப்பா தாங்கமாட்டார் என்று என் நம்பரைக் கொடுத்தாளாம்.

    எனக்கு கோபம் தலைக்கேறியிருந்தது. ராஜாவைப் பார்த்தேன். அவன் கோபத்தில் ஆடிப்போயிருந்தான். இந்த திவானா பேயை இப்போதே அடித்துப் போட்டுவிடலாமா என்றான். வேண்டாம் பொறு என்றேன். பெண்ணை நீ வாயில்புறம் வா என்றேன், அவள் வேண்டாம் மாமியார் திட்டுவாள் என்று பயந்தாள். நீ வா, நான் இருக்கிறேன் என்று அவளை வீட்டையொட்டி இருக்கும் பாதை வழியாக வாயிற்புறம் வரச்சொன்னேன். வாசல் வராந்தாவில் அவளை உட்காரச் சொன்னேன். பயந்துகொண்டே அவள் வந்து உட்கார்ந்தாள். திவானா டெலிபோனில் யாரோடோ பேசினாள். பிறகு கோபத்தில் உள்ளே கூண்டுப்புலி போல சுற்றிச்சுற்றி வந்தாள்.

    திவானாவை மாமி இங்கே வாங்கோ என்று அழைத்தேன். வேண்டா வெறுப்பாக வந்து என்ன என்றாள். குழந்தையை நான் சாமிநாதன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போகிறேன். அவள் குளித்த பிறகு இரண்டு நாட்கள் கழித்துக் கொண்டு விடச் சொல்லுகிறேன். இதுபோல சாக்கடை வாயிலில் பழைய சோறு சாப்பிட்டு, கொசுக்கடியில் அவதிப்பட அவளுக்குப் பழக்கமில்லை என்றேன்.

    ஏன் நாங்கள் அப்படித்தான் இருந்தோம். என் மாமியார் அந்த மூணு நாளும் அவா கண்ணுல படாம பாத் ரூமிலதான் இருக்கச் சொல்லுவா, நாங்கல்லாம் இருக்கலியா, இவ மட்டும் என்ன ஒசத்தி என்றாள்.

    உங்க காலம் வேற. நீங்க படிக்கல, பள்ளிக்கூடம்கூட போகல. இவ அப்படியா? இவ ஒரு போஸ்ட் கிராஜுவேட். உங்களுக்கு சமையல் சாப்பாடு இதைத்தவிர ஒண்ணும் தெரியாது. குழந்தை வீணை வாசிப்பா, வாய்ப்பாட்டு கச்சேரி செய்யற அளவுக்கு திறமை இருக்கு, கம்ப்யூட்டர் திறமை இருக்கு, காலேஜில இவ வாங்கியிருக்கிற பரிசையெல்லாம் இங்கே கொண்டு வந்தா உங்க வீட்டிலே இடமே இருக்காது, அவ்வளவு இருக்கு. அவளைப் போயி, வீணையைக் கொண்டு போய் குப்பையிலே எறியறமாதிரி செஞ்சிருக்கேளே, இது அநியாயமா படல. உங்க பெண்ணுன்னா இப்படிப் பண்ணுவேளா என்றேன்.

    என் பெண்ணையும் மூணு நாள் ஒதுங்கிதான் இருக்கச் சொல்லுவோம் என்றாள்.

    எங்கே பாத் ரூமிலேயா? என்றேன். திவானா பதில் சொல்லவில்லை. அப்போது அடுத்த வீட்டு ஃபிளாட்டில் இருக்கும் பெரியவர் அங்கு வந்தார். சார், இவா குடும்பப்பிரச்சினையிலே நான் தலையிடறதுக்கு மன்னிச்சுடுங்கோ. இங்க நடக்கறத நான் மாடியில இருக்கற என் வீட்டிலிருந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கேன். இதுபோல அக்கிரமம் எங்கேயும் நடக்காது சார். குழந்தை சாப்பிட்டு ரெண்டு நாள் ஆறது. அது வாயைத் திறந்து ஒரு வார்த்தை சொல்லல. எனக்குச் சாப்பிட உட்கார்ந்த நெஞ்சைப் பிழியறது. இப்படி ஒரு குழந்தை இங்கே பட்டினி போட்டுட்டு, நாம் சாப்பிடறதான்னு என் நெஞ்சுல தண்ணிகூட இறங்கல. இப்பவே இவளை அழைச்சுண்டு போயிடுங்கோ, இல்லைன்னா நானே போலீசுக்குத் தகவல் கொடுப்பேன். இவா பொண்ணை வாசல் ரூமில் சாதாரணமா இருக்கச் சொல்லுவா. இதைப் போல பாத் ரூமிலே இல்லை என்றார். அவர் துணிச்சல் எனக்கு பிடித்திருந்தது.

    திவானா ஒண்ணும் சொல்ல முடியாமல் விழித்தாள். நான் திடமாகச் சொன்னேன். மாமி, இனி ஒரு நிமிஷம்கூட இவளை இங்கே விட்டு வைக்க மாட்டேன். இப்பவே சாமிநாதனை இங்கே வரவழைத்து, அவன் பெண்ணை அவன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போகச் சொல்றேன். உங்க பிள்ளைக்கு ஒரு விஷயமும் நீங்க சொல்றதில்ல. அவரும் நீங்க நாட்டுப்பெண்ணை நன்னா நடத்தறதா நினைச்சுண்டு வேலைக்குப் போறார். உண்மை ஒரு நாள் வெளிவந்தே தீரும். இன்னமும் பத்தாம் பசலித்தனமா பெண்களைக் கொடுமைப் படுத்தறதை நிறுத்தலைன்னா நீங்க ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருக்கும். இவ வீட்டுக்குப் போயிட்டுத் திரும்ப வந்ததும், இவகிட்டே வம்பு செஞ்சீங்கன்னு தெரிஞ்சா பிரச்சினை போலீஸ் ஸ்டேஷன்லதான் தீர்வுக்கு வரும். உங்க புருஷன் வந்தா சொல்லிடுங்க.

    சாமிநாதனுக்கு போன் செய்தேன். அவன் அவசரமாக பதறிக்கொண்டு ஓடிவந்தான். விஷயத்தை சாங்கோபாங்கமாகச் சொல்லி புரியவைத்து அவனுடன் அவன் பெண்ணை அனுப்பி வைத்தேன். நானும் ராஜாவும் எங்கள் ஸ்கூட்டரை எடுக்கப் போனபோது, அவர்கள் வீட்டு வாயிற்கதவு சாத்தி மூடப்பட்டிருந்தது. திவானாவின் முகம் மட்டும் ஒரு ஜன்னலுக்குப் பின்புறமாக நிழலாடியது.

    (​தொடரும்)

    Share
  • அந்த உண்மை…

    செண்பக ஜெகதீசன்

    Oak_tree_by_attila0427மரத்தினிலே கிளையை வைத்து

    கிளையதிலே இலையை வைத்து

    இலையிலே பச்சை வைத்து

    இயற்கைக்கு அழகு வைத்து

    இதையே பழுக்க வைத்து

    இடம்பெயர்ந்து விழவே வைத்து

    சுடுமணலில் காயவைத்து

    சருகெனவே ஆகவைத்து

    தெருத்தெருவாய்ப் பறக்க வைத்து

    பனிமழையில் நனைய வைத்து

    உரமாக மக்கவைத்து,

    மரம்வளர ஊக்குவிக்கும்

    உண்மைதான்-

    இறைவன்…!

     

    படத்திற்கு நன்றி: http://www.gameinformer.com/blogs/members/b/rfxrage_blog/archive/2013/06/12/my-top-10-favorite-skill-tree-characters.aspx

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 92

    மலர் சபா

    p31

    புகார்க் காண்டம் – 10.

    நாடுகாண் காதை

    “கோவலனும் கண்ணகியும் வீட்டின் நெடு வாயிலைக் கடந்து செல்லுதல்”

    உலகின் சிறந்த கண்ணாகிய

    கதிரவன் ​தோன்றிடாத

    அந்த

    ​வைக​றை யாமப் ​பொழுததனில்

    விண்மீன்கள் மின்னிடும் வானிலிருந்து

    ​வெண்மதி நீங்கிLடும் ​பொழுததனில்

    கரிய இUருள் இறுதி வ​ரை வியாபித்திருக்கும்

    இராப் ​பொழுததனில்…

    முன்னர் ​செய்த தீவி​னையானது

    உண்ணம் தன்​னைத் துரத்திச் ​செலுத்த

     

    ஆட்டுக் கிடாயும் கவரிமானும்

    தூயசிறகு​டைய அன்னமும்

    இ​வைதாம் ஓரினம் இல்​லை​யென்றாலும்

    ஓர் இனம்​போல ஒன்றுகூடித் திரியும்

    அடிவ​ரை கு​டைந்த ​வே​லைப்பாட​மைந்த

    ​பெரு​மையான சிறப்பி​னையு​டைய

     

    நீண்ட ​நெடிய கதவு​டைய

    இ​டைக்கழி​யை அ​டைந்து

    அ​​தைக் கடந்து

    அப்​பொழு​தே

     

    “மணிவண்ணன் ​கோயி​லை வலம்​செய்து ​போதல்”

    அழகு​ பொருந்திய பாம்ப​ணையின்மீது

    பள்ளி ​கொண்ட

    நீலமணி ​போன்ற நிறமு​டைய

    திருமாலின் ​கோயில்

    வலம் வந்து அ​தை விட்டு நீங்கினர்

    ​கோவலனும் கண்ணகியும்…

     

    அடிப்ப​டையாய் அ​மைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்​கே: 01-10

    http://www.chennailibrary.com/iyumperumkappiangal/silapathikaram5.html

     

    படத்திற்கு நன்றி: http://nagapattinam.nic.in/thestory.html

     

     

    Share
  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 3ம் பகுதி

    தஞ்​சை ​வெ.​கோபாலன்

    திருத்தில்லை

    சோறிடு நாடு, துணி தரும் குப்பை, தொண்டு அன்பரைக் கண்டு
    ஏறிடும் கைகள், இறங்கிடும் தீவினை எப்பொழுதும்
    நீறிடும் மேனியர் சிற்றம்பலவர் நிருத்தம் கண்டால்
    ஊறிடும் கண்கள், உருகிடும் நெஞ்சம் என் உள்ளமுமே. 1.

    திருநீறு பூசிய உடலோடு பொன்னம்பலத்தில் நடனமிடும் நடராஜப் பெருமானின் ஆனந்த நடனத்தைக் கண்டால் கண்கள் பனிக்கும், நெஞ்சும் உள்ளமும் உருகும், நாடு வளம் கொழித்து பஞ்சமின்றி சோறிடும், குப்பைகூட உடுக்க துணி தரும், அடியார்களைக் கண்டால் கரங்கள் இரண்டும் தலைமேல் சென்று கும்பிடும், தீவினைகள் எப்போதும் நம்மைவிட்டு நீங்கிவிடும்.

    அழலுக்குள் வெண்ணெய் யெனவே உருகிப் பொன்னம்பலத்தார்
    நிழலுக்குள் நின்று தவம் முஞற்றாமல் நிட்டூரமின்னார்
    குழலுக்கு இசைந்த வகை மாலை கொண்டு குற்றேவல் செய்து
    விழலுக்கு முத்துலை இட்டிறைத்தேன் என் விதிவசமே. 2.

    பொன்னம்பலத்தான் நடராஜப் பெருமானின் சன்னிதியில் நின்று தீயிலிட்ட வெண்ணெய் போல மனம் உருகி தவம் புரியாமல், எதிலும் குறை கண்டு வருந்திப் பழிபேசும் பொதுமைப் பெண்களின் கூந்தலில் சூட்டுதற்கென்று வகைவகையாய் மலர்மாலைகளைக் கொண்டு வந்து கொடுத்து, அவர்களுக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்துகொண்டு, நற்பயிருக்கன்றி, சுற்றிலும் முளைத்துள்ள பயனற்ற காளான்களுக்கு நீர்பாய்ச்சி வீணானென், இதனை விதிவசம் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல வல்லேன்.

    ஓடாமல், பாழுக்கு உழையாமல், ஓரம் உரைப்பவர் பால்
    கூடாமல், வல்லவர் கூட்டம் விடாமல், வெங்கோப நெஞ்சில்
    நாடாமல், நன்மை வழுவாமல், இன்றைக்கு நாளைக்கு என்று
    தேடாமல், செல்வம் தருவாய் சிதம்பர தேசிகனே. 3.

    சிதம்பரத்தில் சிற்சபையில் ஆடும் நடராஜப் பெருமானே! வயிற்றுப்பாட்டுக்காகவும், பிழைப்புக்காகவும் அங்குமிங்குமாய் ஓடி அலையாமல், பலன் எதுவும் கிட்டாத பாழுக்கு உழைக்காமல், இடத்துக்குத் தகுந்தாற்பொல சுய நலத்தோடு மாற்றி மாற்றி பேசுபவர்களோடு கூடியிருக்காமல், நல்லதே நினைக்கும் உத்தமர்கள் கூட்டத்தை விட்டு அகலாமல், கொடுமைதரும் கோபத்தை நெஞ்சில் சுமப்பாறோடு கூடாமல், சத்திய வழியில் உறுதியோடு நிற்பவர்களை விட்டு நீங்காமல், இன்றைக்கெனவும் நாளைக்கெனவும் தேடித்தேடி பொருள் சேர்க்காமலும், உன்னுடைய அருள் செல்வத்தை எனக்கு அள்ளி அள்ளித் தரவேண்டும் ஐயா சிதம்பரநாத தேசிகனே.

    பாராமல் ஏற்பவர்க்கு இல்லை எனாமல், பழுது சொல்லி
    வாராமல் பாவங்கள் வந்து அணுகாமல் மனம் அயர்ந்து
    பேராமல் சேவை பிரியாமல் அன்பு பெறாதவரைச்
    சேராமல் செல்வம் தருவாய் சிதம்பர தேசிகனே. 4.

    குற்றம் குறைகள் கண்டுபிடித்து ஏற்றத் தாழ்வு பாராமல், ஈயென்று இரப்போர்க்கு சாக்கு போக்கு சொல்லி இல்லை என்று சொல்லாமல் தானம் கொடுத்து, அப்படி குறைகள் காண்பதால் உண்டாகும் பாவங்கள் வந்து சேராமல், நன்மை தீமை இவைகளைக் கண்டு மனம் சோர்ந்து போகாமல், பிறர்க்கு உதவும் சேவை உள்ளத்தை மறந்து கைவிடாமல், பரமேஸ்வரா! உன்னிடம் அன்பு வைத்து வணங்காதவர்களைச் சென்றடைந்து உறவு பூணாமல், இறைவா உன் பேரருள் எனும் செல்வத்தை எனக்குத் தந்திடுவாய் சிதம்பனாத தேசிகனே.

    கொல்லாமல், கொன்றதைத் தின்னாமல், குத்திரம் கோள் களவு
    கல்லாமல், கைதவரோடு இணங்காமல், கனவிலும் பொய்
    சொல்லாமல், சொற்களைக் கேளாமல், தோகையர் மாயையிலே
    செல்லாமல் செல்வம் தருவாய் சிதம்பர தேசிகனே. 5.

    உயிர்களைப் பலியிட்டுக் கொல்லாமல், அப்படிக் கொன்ற அந்த ஜீவங்களின் உடல் மாமிசத்தை உண்ணாமல், பிறரை வஞ்சிப்பது, மற்றவர்களைப் பற்றி கோள் சொல்வது, பிறர் பொருளைக் கவர்ந்து கொள்வது இவைகளைக் கற்றுக் கொள்ளாமல், சூதாடுவோரோடு கலந்து உறவாடாமல், பிறர் உரைக்கும் பொய் வார்த்தைகளைப் பொருட்படுத்திக் கேட்காமல், தோகைவிரித்தாடும் மயில் போன்ற அழகுடைய மாதரோடு மயங்கிப் பின் செல்லாமல், சிதம்பரத்து தேசிகனே எனக்கு அப்படிப்பட்ட அருட் செல்வத்தை அளித்திடுவாய் ஐயனே.

    முடிசார்ந்த மன்னரும், மற்றுமுள்ளோரும் முடிவில் ஒரு
    பிடிசாம்பராய் வெந்து மண்ணாவதும் கண்டு பின்னும் இந்தப்
    படிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னின் அம்பலவர்
    அடிசார்ந்து நாம் உய்ய வேண்டுமென்றே அறிவார் இல்லையே. 6.

    பூவுலகை ஓகோவென ஆண்டு கொண்டிருந்த மன்னர்களும், அவரோடு இணைந்து செல்வச் செறுக்கில் கிடந்து மகிழ்ந்தோரும் முடிவில் மான்டு போய், எரியூட்டப்பட்டு ஒரு பிடி சாம்பராக ஆன செய்தியை நம் கண்ணாரக் கண்டபின்னரும், நாம் இந்த பூமியில் கிடைக்கும் இன்பமெல்லாம் வேண்டி சகல செல்வங்களோடும் வாழ விரும்புவதல்லால், பொன்னம்பலத்தில் வீற்றிருக்கும் அந்த சிற்சபேசனின் திருவடிகளைப் பற்றிக் கொண்டு நல்வழிக்கு உய்ய வேண்டுமென்று அறிபவர் யாரும் இங்கு இல்லையே, என் செய்வேன்?

    காலை உபாதி மலம் சலமாம் அன்றிக் கட்டுச்சியில்
    சாலவும் பாதி பசி தாகமாம் உன் சஞ்சிதமாம்
    மாலை உபாதி துயில் காமமாம் இவை மாற்றி விட்டே
    ஆல முகம் தருள் அம்பலவா! என்னை ஆண்டருளே. 7.

    பாற்கடலைக் கடைந்தபோது எழுந்த ஆலகால விஷத்தை யுண்டு கண்டத்துள் வைத்த நீலகண்டனே! காலையில் எழுந்ததும் மலஜலம் கழித்தல் எனும் கடமை, உச்சி நேரத்தில் பசியும் தாகமும் வாட்டுகின்ற நேரம், மாலை நேரம் ஆனதும் உறக்கமும், காமம் தீர்த்தலுமாம் என்று இப்படி மாறி மாறி தொழில் செய்து மாளும் என்னைக் காத்து இரட்சிக்க வேண்டும் ஐயா!

    ஆயும் புகழ்த் தில்லை அம்பலவாணர் அருகில் சென்றால்
    பாயும் இடபம், கடிக்கும் அரவம்; பின்பற்றிச் சென்றால்
    பேயும் கணமும் பெருந்தலைப் பூதமும் பின் தொடரும்
    போய் என் செய்வாய் மனமே பிணக்காடவர் போமிடமே. 8.

    பிறவி எனும் பெருங்கடலில் வீழ்ந்து நீந்தி அல்லல் பட்டு ஆற்றாது அழுதுருகும் ஏ மனமே! சர்வ லோகமும் போற்றிப் புகழும் அந்தத் தில்லை அம்பலவாணருக்கு அருகில் போவோம் என்று சென்றால், அவனைத் தாங்கி நிற்கும் ரிஷபம் இருக்கிறதே அது தன் கொம்புகளால் முட்ட வருகிறது; அவன் தலைமுடியில் படமெடுத்து ஆடுகின்ற நாகம் நம்மைக் கடிக்க வருகின்றது; அவனைப் பின்பற்றிச் செல்வோமென்றாலோ அவனைப் புடைசூழ நின்றிருக்கும் பூதகணங்களும், பேய் பிசாசுகளும் நம்மைத் துரத்திக் கொண்டு வருகின்றன. இவற்றையெல்லாம் மீறி நீ அவனைப் பின்பற்றிப் போய்த்தான் என்ன செய்யப் போகிறாய்? அவன் இருப்பிடமோ பிணங்களைச் சுட்டெரிக்கும் இடுகாடு.

    ஓடும் எடுத்து, அதளாடையும் சுற்றி, உலாவி மெள்ள
    வீடுகள் தோறும் பலிவாங்கியே, விதி அற்றவர் போல்
    ஆடும் அருள் கொண்டு இங்கு அம்பலத்தே நிற்கும் ஆண்டி தன்னை
    தேடும் கணக்கென்ன காண்! சிவகாம சுந்தரியே. 9.

    இடையில் துணியை அன்றோ எல்லோரும் அணிவர், ஆனால் உடுக்க துணியின்றி இடையில் புலித்தோலை அணிந்து கொண்டும், கையில் பிரம்ம கபாலத்தை பிட்சைப் பாத்திரமாக ஏந்திக் கொண்டு, வீடு வீடாகச் சென்று பிச்சை எடுத்து, உற்றார் உறவு என்று எவருமில்லை யெனும்படி காட்சி தந்து இந்தத் தில்லையம்பலத்தில் ஆடுகின்ற அந்த ஆண்டியைத் தேடுவதன் இரகசியம்தான் என்ன அம்மா, சிவகாமசுந்தரி!

    ஊட்டுவிப்பானும் உறங்குவிப்பானும் இங்கு ஒன்றோடொன்று
    மூட்டுவிப்பானும் முயங்குவிப்பானும், முயன்ற வினை
    காட்டுவிப்பானும் இருவினைப் பாசக் கயிற்றின் வழி
    ஆட்டுவிப்பானும் ஒருவன் உண்டே தில்லை அம்பலத்தே. 10.

    இப்பூவுலகில் படைக்கப்பட்ட உயிர்களுக்கெல்லாம் கல்லுக்குள் தேரைக்கும் கருப்பை உயிர்களுக்கும் உணவளித்து ஊட்டுவிப்பவனும், அவை களைத்துப் போய் ஓய்ந்து கிடக்கும் போது அவைகளை உறங்க வைப்பானும், ஒன்றோடு மற்றொன்றை இணைத்து வாழச்செய்பவனும், அவைகளை இவ்வுலகயியலில் இயங்கச் செய்பவனும், அப்படி அவை இயங்குவதால் உருவாகும் பலங்களை உலகுக்குக் காட்டுபவனும், இரு வினைகளால் ஆகிய பாசக் கயிற்றால் அவற்றை இயங்க வைப்பவனும் ஆகிய ஒருவன் உண்டு. அவன் தான் தில்லை பொன்னம்பலத்தே ஆடுகின்ற எம்பெருமான் நடராசப் பெருமான்!

    (இன்னும் உண்டு)

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் அருவூலம் – 9

    அருங்காட்சியகம் ஓர் அறிவுக் அருவூலம் – ஊட்ஸி அருங்காட்சியகம், போல்ஸானோ, இத்தாலி.

    சுபாஷிணி ட்ரெம்மல்

    1991ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ம் நாள். மதியம் 1.30 நற்பகல். ஜெர்மனியின் தென்கிழக்கு நகரான நுர்ன்பெர்க்கை சேர்ந்த எரிக்கா சிமோன், அவர் கணவர் ஹெல்முட் சிமோன் இருவரும் இத்தாலி நகரின் ஊட்ஸ் பள்ளத்தாக்குப் பகுதியில் தங்கள் மலையேறும் கருவிகளுடன் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் நடந்து கொண்டிருந்தனர். இவர்களது இப்பயணம் வரலாற்றில் முக்கியத்துவம் பெறப்போகும் ஒரு பயணமாக அமையப் போகிறது என அவர்கள் கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள். இவர்கள் இருவரும் சுற்றுலாவை முன்னிட்டு தங்கள் ஓய்வு நேரத்தை மலைப்பகுதியில் நடந்து ஆல்ப்ஸ் மலையின் அழகை ரசித்துக் கொண்டே இயற்கையை மேலும் அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டு இங்கு பயணித்தவர்கள். ஆல்ப்ஸ் மலையின் திசெஞ்ஞோ (Tisenjoch) மலையில், கடல் பரப்பிலிருந்து 3210 அடி உயரத்தில் அவர்கள் நடந்து கொண்டிருக்கும் போது அவர்கள் கண்களில் ஒரு பொருள் தென்பட்டது. பனிப்பாறைப் பகுதியான அங்கே ஒரு பகுதியில் பனி கறைந்து நீர் நிலை தென்பட அந்த சிறு குளம் போன்று தெரிந்த குழியில் இருந்த ஒரு பொருள் அவர்கள் கவனத்தை ஈர்த்தது. முதலில் குப்பை மூட்டையாக இருக்குமோ என நினைத்த அவர்கள் அருகில் சென்று பார்த்த போது அது ஒரு மனித சடலம் என்பதை அறிந்த போது அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

    அச்சடலத்தின் பின்னுடல் பகுதி, தலைமுழுவதும் முதுகுப் பகுதி மட்டும் வெளியே தெரிய கீழ் பகுதி பனிப்பாறைக்குள் பாதி மூழ்கிய வண்ணம் இவர்கள் கண்களில் தென்பட்டது.

    ஊட்ஸி - சிமோன் தம்பதியர் எடுத்த முதல் படம்
    ஊட்ஸி – சிமோன் தம்பதியர் எடுத்த முதல் படம்

    அங்கிருந்து செல்வதற்கு முன்னர் அவர்கள் அச்சடலத்தைப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மலையில் தங்களைப் போல நடக்க வந்த ஒரு இயற்கை விரும்பியோ சுற்றுப்பயணியோ இங்கு தவறி விழுந்து இறந்து போய் உறைந்து கிடக்கின்றாரோ என் அவர்கள் சிந்தனையில் எண்ணம் எழும்பியது. அப்போது கூட அவர்கள் இச்சடலம் சில வாரங்களில் உலகப்புகழ் பெறப்போகும் ஒன்று என்றோ தங்கள் பெயரை இந்தச் சடலத்தின் பெயரோடு மக்கள் நினைத்துப் பார்ப்பார்கள் என்றோ சிறிதும் நினைக்கவில்லை.

    இச்சடலத்தைத் தாங்கள் பார்த்த செய்தியை அவர்கள் காவல்துறையிடம் தெரிவிக்க முதலில் ஒரு ஆஸ்திரிய மலையேறிகள் பாதுகாப்புக் குழு மறுநாள் 20ம் தேதி இப்பகுதிக்கு விரைந்தது. இத்தாலியின் போல்ஸானோ ஆஸ்திரியாவின் எல்லை நகரம். ஆக மலைப்பகுதி இருந்த இடம் ஆஸ்திரிய எல்லை என்பதால் முதலில் இப்பணியை இக்குழு தொடங்கியது. அன்றைய நாள் பனி அதிகமாகிவிட, இக்குழுவினரால் சடலத்தை நீரை உருக்கி வெளியே எடுக்க முடியவில்லை. இந்த முயற்சியில் சடலத்தின் இடுப்புப் பகுதியில் சேதம் ஏற்பட்டு விடவே முயற்சியை இவர்கள் கைவிட்டனர்.

    மறு நாள் 21ம் தேதி இப்பகுதிக்குச் செல்ல ஹெலிகாப்டர்கள் கிடைக்கவில்லை. ஆனால் உலகப் புகழ்பெற்ற மலையேறும் பிரபலங்களான ஹான்ஸ் காமர்லாண்டரும் ரைன்ஹோல்ட் மெஸ்னரும் இப்பகுதிக்கு விரைந்து வந்து இந்த மனித சடலத்தின் மேல் ஆங்காங்கே தென்பட்ட உடை கருவிகள் ஆகியவற்றை கண்ணுற்றனர்.

    ஹான்ஸ் காமர்லாண்டரும் ரைன்ஹோல்ட் மெஸ்னரும்
    ஹான்ஸ் காமர்லாண்டரும் ரைன்ஹோல்ட் மெஸ்னரும்

    மறு நாள் 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, பாதுகாப்பு அதிகாரி அலோஸ் பிர்ப்பாமர் தனது குழுவினருடன் இங்கு சென்று இச்சடலத்தை மீட்க முயற்சித்தார். பனி மிக இறுகிப் போயிருந்தமையால் சடலத்தை பனிக்குளத்திலிருந்து வெளியே எடுக்க முடியவில்லை. ஆக, இச்சடலத்தின் அருகில் கிடைத்த அனைத்து பொருட்களை மட்டும் ஒரு குப்பை எடுக்கும் ப்ளாஸ்டிக் பையில் நுழைத்து பத்திரப்படுத்தி தனது தோளில் தூக்கிக் கொண்டு ஹோட்டலுக்குச் சென்றார். மறு நாள் மீண்டும் இச்சடலத்தை எடுக்கும் பணி தொடர்ந்தது.

    23ம் தேதி திங்கட்கிழமை வானிலையும் ஓரளவு சீதோஷ்ணமும் ஒத்துழைக்க பனியிலிருந்து இச்சடலம் மீட்கப்பட்டது. அன்று இன்ஸ்பூர்க் பல்கலைக்கழக மருத்துவத் துறையைச் சார்ந்த திரு.ரைனார் ஹென் அவர்களின் மேற்பார்வையில் இந்த சடலத்தை மலைப்பகுதியிலிருந்து மீட்டெடுத்தனர். இந்த மீட்புப் பணி முழுமையாக கேமராவில் பதிந்து வைக்கப்பட்டது. இந்த மீட்புப் பணியின் போது தொல்லியல் அறிஞர்கள் உடன்வரவில்லை. இதற்கு முக்கியக்காரணம் அதுவரை இம்மனிதன் யாரோ விழுந்து இறந்த சுற்றுப்பயணி என்ற சிந்தனையே அனைவர் எண்ணத்திலும் ஓடிக் கொண்டிருந்தது. பனியிலிருந்து இந்த மனித சடலத்தை வெளியே எடுத்தபோது அம்மனித உடலில் ஒட்டியிருந்த ஆடைகள் அவரோடிருந்த தோலினால் செய்யப்பட்ட கருவிகளின் பகுதிகள் அனைத்தும் சிதைந்தும் பாதியுமாகக் கிடைத்தன. இந்த மனித சடலத்தை எடுத்துக் கொண்டு ஆஸ்திரிய ஊட்ஸ் பள்ளத்தாக்குக்கு இந்தக் குழு விரைந்தது. சட்ட ஆலோசகரின் ஆணைப்படி இந்த மனித சடலமும் ஏனைய பொருட்களும் இன்ஸ்ப்ருக் பல்கலைக்கழக மருத்துவத்துறையில் ஆயவகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

    இந்த சடலம் கண்டெடுக்கப்பட்ட ஆறு நாட்களுக்குள் இம்மனிதன் இந்த நூற்றாண்டைச் சேர்ந்தவரல்ல என்பது உறுதியாகிவிட இது பல்கலைக்கழக மருத்துவத்துறையினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பின்னர் இன்ஸ்ப்ரூக் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை ஆய்வு செய்வது தகும் என முடிவாக தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் கோன்ராட் ஸ்பிண்ட்லெர் இச்சடலத்தை ஆய்வு செய்யத் தொடங்கினார். அவரது ஆய்வு இச்சடலம் குறைந்தது 4000 ஆண்டுகள் பழமையானது என்று காட்டி ஆய்வுத்துறையினரை ஆச்சிரியத்தில் மூழ்கடித்தது. இந்த மனித சடலத்தைப் போல இதுவரை நன்கு உடையணிந்த, கருவிகளுடனான வேறெந்த சடலமும் இதுவரை உலகில் எங்கும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

    இச்சடலத்தை C-14 கார்பன் டேட்டிங் ஆய்வு முறைக்கு உட்படுத்தி இன்ஸ்ப்ருக் பல்கலைக்கழக தொல்லியல் ஆய்வகம் தவிர்த்து வெவ்வேறு நான்கு ஆய்வகங்கள் ஆய்வு செய்தன. இந்த ஆய்வுகளின் கணக்குப்படி இந்த மனிதன் கி.மு 3350 முதல் 3100 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்த மனிதன் என்பது, அதாவது இன்றைக்கு ஏறக்குறைய 5500 ஆண்டுகள் முன் வாழ்ந்த மனிதன் என்பது புலனாகியது. இச்செய்தி உலகம் முழுவதும் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது.

    ஊட்ஸி என இம்மனித சடலத்திற்கு முதலில் பெயரிட்டவர் கார்ல் வெண்டி என்ற ஒரு செய்தியாளர். ஊட்ஸ் பள்ளத்தாக்குப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மனிதனாகையால் அப்பகுதிப்பெயரை தொடர்புபடுத்தி தனது செய்திகளில் இச்சடலத்தை ஊட்ஸி என பெயரிட்டு இவ்வாய்வுகள் தொடர்பான விஷயங்களை எழுதி வந்தார். இப்பகுதி ஊராட்சி மன்றத்தின் சட்டக்குறிப்புப்படி இச்சடலத்திற்கு முதலில் வழங்கப்பட்டதும் அதிகாரப்பூர்வமான பெயரும் “Der Mann aus dem Eis” – “L’Uomo venuto dal ghiaccio” அதாவது பனியிலிருந்து தோன்றிய மனிதன் என்பதாகும். அது வழக்கில் இன்று இல்லை. ஊட்ஸி என்ற பெயரே இவருக்கு நிலைத்து விட்டது.

    ஊட்ஸி கண்டெடுக்கப்பட்ட இடம் - வரைபடத்தில்
    ஊட்ஸி கண்டெடுக்கப்பட்ட இடம் – வரைபடத்தில்

    ஆஸ்திரிய ஊட்ஸ் பள்ளத்தாக்குப் பகுதியில் தேடுதல் முயற்சிகள் தொடங்கி ஆஸ்திரிய இன்ஸ்ப்ரூக் பல்கலைக்கழகத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் எப்படி ஊட்ஸி இத்தாலியின் போல்ஸானோ பகுதிக்கு வந்து இத்தாலிக்குச் சொந்தமானார் என்பது ஒரு முக்கிய விஷயம். இந்த ஊட்ஸி மம்மி கண்டெடுக்கப்பட்ட சில நாட்களில் இச்செய்தி பரவ, இது இத்தாலிக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒன்று என அறிந்த பின் எல்லைக்கோட்டினை மீள்பார்வை செய்யும் முயற்சியில் இரண்டு நாடுகளுமே இறங்கின. 1919ம் ஆண்டு செய்து கொண்ட செயிண்ட் ஜெர்மானான் எல்லை ஒப்பந்தத்தின் படி (St. Germain-en-Laye) எல்லைக்கோடு இன்-எட்ச் (Inn-Etsch) பள்ளத்தாக்கு நீரெல்லை ஓரத்தினதாக அமைந்திருக்கின்றது. திசெஞ்ஞோ (Tisenjoch) மலைப்பகுதியிலோ எல்லைக்கோடு சரியாகத் குறிப்பிடும் வகையில் அமையவில்லை. ஆக, அக்டோபர் மாதம் 2ம் தேதி மீண்டும் ஒரு நில அளவைப் பணி இங்கு மேற்கொள்ளப்பட்டது. இதன்படி ஊட்ஸி கண்டெடுக்கப்பட்ட பகுதி ஆஸ்திரிய தெற்கு எல்லையிலிருந்து 92.56மீ தூரம் கீழே இத்தாலியில் இருப்பதால் ஊட்ஸி இத்தாலிக்குச் சொந்தம் என அதிகாரப்பூர்வமாக முடிவாகியது.

    இத்தாலிக்கு ஊட்ஸி சொந்தமென்று ஆகிய பின்னரும் தொடர்ந்து ஆய்வுகள் அனைத்துமே இன்ஸ்ப்ரூக் பல்கலைக்கழகத்திலேயே தடைகளின்றி மேற்கொள்ளப்பட்டன. ஊட்ஸியின் உடல் முழுமையும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அவர் அணிந்திருந்த ஆடையின் பகுதிகளும் கருவிகளும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. ஆய்வு முடிவுகள் அனைத்தும் ஒவ்வொன்றாகக் கிடைக்க ஊட்ஸியையும் இவ்வாய்வினையும் பொதுமக்கள் காணும் பொருட்டு ஒரு அருங்காட்சியகம் தேவை என முடிவாக இத்தாலியின் போல்ஸானோ நகரில் ஊட்ஸிக்கு ஒரு அருங்காட்சியகம் அமைந்தது.

    ஊட்ஸி தொல்லியல் அருங்காட்சியகம் (மே 2013)
    ஊட்ஸி தொல்லியல் அருங்காட்சியகம் (மே 2013)

    இவ்வாண்டு (2013) மேமாதம் நான் இந்த அருங்காட்சியகம் சென்றிருந்த போது நேரில் பார்த்து எழுதிக் கொண்டு வந்த குறிப்புகளைத் தொடர்ந்து அடுத்த பதிவில் வழங்குகிறேன். ஆக, ஊட்ஸியைப் பார்க்க அருங்காட்சியகத்தின் உள்ளே செல்வோமா?

    தொடரும்

    Share
  • வலியில்லா வகுப்பறைக்குள் சிறிது நேரம்…..

    எஸ் வி வேணுகோபாலன் 

    நேற்று பிற்பகல் தாம்பரத்திலிருந்து புறப்படுகையில் வெக்கையான தட்பவெப்பம். என் மேல் உட்காருவோயோ என்று கேட்டது பேருந்தின் இருக்கைச் சூடு. கொஞ்சம் கண் அசந்தேன் ஒரகடம் கடக்கையில்… ஆனாலுமென்ன, பல்லாண்டுகள் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய பாட்டனாரின் நினைவு அவர் வாழ்ந்த வாலாஜாபாத் வருகையில் உசுப்பி எழுப்பிவிட்டது. காஞ்சிபுரம் சேரவும், நண்பர் மோகன் காத்திருந்து, முகாம் நடக்கும் கீழம்பி கிராமத்திற்கு இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார். ஆஹா….இரு புறமும் அடர்ந்த மரங்கள் வரவேற்ற நெடுஞ்சாலையில் குளிர் காற்று இதப் படுத்தி கொடுத்தது உள்ளத்தையும் உடலையும். அத்தனை வெக்கை தேவைப்பட்டது, அந்தத் தண்மையைப் பாராட்டுவதற்கு….வாழ்க்கையின் சூட்சுமங்களில் இதுவுமொன்றோ என் எண்ணியவாறு AJS திருமண மண்டபத்தில் போய் இறங்கினோம்…

    75 மாணவர்கள் முந்தைய வகுப்பு முடிந்த பின்புலத்தில் இளைப்பாறிக் கொண்டிருந்தனர். அவர்களுக்காக சுண்டலும், தேநீரும் உள்ளே பரபரத்துக் கொண்டிருந்தது. எட்டாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் சிறுவர், சிறுமியர் உற்சாகத்தோடு பரஸ்பரம் உரத்த குரலில் பரஸ்பரம் அன்பு பரிமாறிக் கொண்டிருந்த காட்சி, இராணுவ சட்ட திட்டங்களோடு அணிவகுப்பு போல முரட்டுத் தனமாக நடக்கும் பல வகுப்பறைகளை ஒப்பீடாகக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது. காற்றும் வெளிச்சமும் நமது வகுப்பறைகளுக்குள் எப்போது கிடைக்கும்…..

    மாணவரும் சமுதாயக் கடமையும் என்ற பொருளில் அவர்களோடு கலந்துரையாட நான் அழைக்கப் பட்டிருந்தேன் என்றாலும், வேர்கள் அறக்கட்டளை அமைப்பின் தோழர் நளினி (வங்கி அதிகாரி, பெங்களூரு) மாணவர்களோடு அன்பாகக் கலந்து பழகி சில பரிமாற்றங்களைச் செய்யும் நோக்கிற்காகவே தொடர்ந்து அழைத்துக் கொண்டிருக்கிறார். என்ன பேச என்று அவரிடம் கேட்டபோது வழக்கம்போல் சிரித்துக் கொண்டார்….

    முகாம் தொடர்பான வெளியீட்டைப் பார்த்தால், அவர்களது முயற்சியைப் புரிந்து கொள்ள இயலும். ஏற்கெனவே என்னென்ன வகுப்புகள், யார் யார் வந்து என்னென்ன நிகழ்த்திச் சென்றிருந்தனர் என்பதைக் கேட்டுக் கொண்டேன். அருமையான வாசிப்பு அமர்வு நேற்று காலையில் தொடங்கி இருக்கிறது. அறிவியல் இயக்கத் தோழர் பால சரவணன் அற்புதமான வாசிப்பு ஊக்குவிப்பாளர். அவர் பேசப் பேச விரிந்த விழிகளோடு கதைகளைக் கேட்டுக் கொண்ட பிறகு அவர்களாக குழுக்களாகப் பிரிந்து வாசித்த போது அந்தக் குழந்தைகள் அடைந்த இன்பம் விவரிப்பிற்கு அப்பாற்பட்டது என்பதை நளினி சொல்லச் சொல்லப் புரிந்து மகிழ்ந்தேன்….பின்னர் தங்களது வாசிப்பு அனுபவத்தைப் பேச்சாகவும், ஒரு குழு நாடகமாகவும் கூட வெளிப்படுத்திய திறம், சாதாரண ஏழைத் தொழிலாளர் குடும்பத்துப் பிள்ளைகளின் படைப்புத் திறனையும், பேரார்வத்தையும், நம்பிக்கையையும் ஊட்டியது. கல்வியின் அரசியல் என்ற பொருளில் பேசுகையில், புதுவை கல்வியாளர் தோழர் ஜே கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டதை நான் நளினிக்குச் சொன்னபோது, இந்த முகாம் செயல் திட்ட உருவாக்கத்தில் ஜே கே பங்கு அளப்பரியது என்று அவர் மறுமொழி அளித்தார்.

    அரங்கிற்கு வெளியே காற்றோட்டமான வெளியில் எங்கள் வகுப்பை அமைத்துக் கொண்டோம். மணி ஐந்தரை. ஏழு வரை நடத்த அனுமதிக்கப் பட்டிருந்தேன். ஆறரைக்கு ஒரு கட்டத்தில் நிறைவாக அமைகையில் முடித்துக் கொண்டது எனக்கும் பிடித்திருந்தது. மாணவர்களுக்கும் அத்தனை வரவேற்போடு சொந்தமாக்கிக் கொள்ள முடிந்தது கூடுதல் மகிழ்ச்சி.

    என்னை அறிமுகப்படுத்திவிட்டு சுந்தர் என்ற அன்பர், வகுப்பை எப்படி கேட்க வேண்டும் என்ற கேள்வி போட்டார்….ஒரே குரலில் எல்லோரும் அமைதியாக என்றனர். இது போதாதா, எனது உரையாடலை அங்கிருந்து தொடங்கினேன். உள்ளபடியே அமைதியாக, கட்டுச் செட்டாக, இங்கே அங்கே பார்க்காமல் வகுப்பைக் கேட்க நினைப்பவர்கள் மட்டும் கை உயர்த்தக் கேட்ட போது, ஒரே ஒரு மாணவர் தவிர மற்றவர்கள் கை உயர்த்தினர். உண்மை பேசிய அந்த ஒரே ஒரு மாணவரது பெயரைச் சொல்லக் கேட்டு அவரை மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொன்னேன். வகுப்பறையின் அமைதி என்றால் என்ன புரிந்து கொள்கிறோம் என்ற இடத்திலிருந்து வகுப்பு சற்று நகர்ந்து, காலை வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள யாராவது முன்வரக் கேட்டுக் கொண்டேன். ஒரு மாணவி தனக்குப் பிடித்த நூல் குறித்துச் சுருக்கமாகச் சொன்னார். நாம் யாரையும் ஏமாற்றக் கூடாது என்ற கருத்து. அவரை வகுப்பு பாராட்டியது.

    நாம் யார் யாரை ஏமாற்றுகிறோம், நம்மை யார் யாரெல்லாம் ஏமாற்றுகின்றனர் என்று அடுத்த கட்டத்திற்குள் வகுப்பு நுழைந்தது. நம்மைச் சிதறி இருக்கிற எல்லாரும் ஏமாத்தறாங்க சார் என்றார் ஒருவர். அப்பா அம்மா கூடத் தான் ஏமாத்தறாங்க என்றது ஒரு குரல். பொய் சொல்றாங்க சார். ஞானக் கூத்தனின் அம்மாவின் பொய்கள் கவிதையிலிருந்து ஒரு வரியை நினைவு கூர்ந்தேன்:

    ஒரு முறத் தவிட்டுக்காக வாங்கினேன் உன்னை என்றாய்…
    எத்தனை பொய்கள் அம்மா, எத்தனை பொய்கள் சொன்னாய்..;

    அம்மா அப்பா பொய்களின் பின்னணியில் கொஞ்சம் நீந்தினோம். எந்தப் பருவத்தில் எதைச் சொல்வது, எப்படி சொல்வது என்ற விஷயங்கள் மீதான பரப்பில் சிறிது நடந்தோம். அன்பும், கரிசனமும், இயலாமையும், சூழ்நிலையும் உருவாக்கும் பொய்களுக்கும், ஏமாற்றுத் தனத்திற்கும் இடையே இருந்த பள்ளத்தை மேலிருந்து உற்றுப் பார்க்க இலேசாக பழகிக் கொண்டது வகுப்பு.

    அப்புறம் சமுதாயக் கடமைக்கு அங்கிருந்து ஒரே எட்டில் நகரும் பாலம் அதில் தட்டுப்படவே, தனி நபர் பொறுப்புகளுக்கும், சமூக அக்கறைக்கும் ஒரே எடுத்துக்காட்டில் நின்று கொண்டோம். ரேஷன் கடையில் பொருள் வாங்க மாதாமாதம் போய் நிற்பவரும், அங்கே பொருள்கள் முறையாகவும், அளவு திருத்தமாகவும், சீராக எல்லோருக்குமாகவும் கிடைக்காவிட்டால் கேள்வி கேட்பவரும் ஒரே கியூவில் நிற்பதை நாங்கள் கண்டோம். முன்னவர் கிடைத்தால் வாங்குபவர். இல்லாவிட்டால் முணுமுணுப்போடு வெளியேறுபவர். பின்னவர் குரல் கொடுப்பவர். மக்களிடையே போய்ப் பேசித் திரட்டுபவர். பொருள்கைக் கிடைக்க வழி செய்பவர். முன்னவர் தலைவிதி மீது பழி போடுபவர். இரண்டாமவர் விதியை மாற்றும் சூத்திரம் தேடுபவர். விதியா, சதியா என்று விளக்குபவர்.

    அப்புறம் ஏற்றத் தாழ்வுகளை அடையாளப் படுத்தும் பட்டியலில் குழந்தைகள் முதலில் சாதியைச் சொன்னார்கள். ஊர் ஒரே ஊர் தானா, ஊரும் சேரியும் இரண்டா என்ற கேள்வியில் சிக்கிக் கொண்டது வகுப்பு. வேறுபாடுகளின் அரசியலை பட்டவர்த்தனமாக இல்லாமல், ஆனால் பளீர் என்று வெளிப்படுமாறு பேசிக் கொண்டது வகுப்பு. அடுத்த இடத்தில் பாலின வேற்றுமையை முன் வைத்தோம்.

    மிகச் சுருக்கமான விவரங்களை அடுக்கும்போதே ஒரு குரல் கண்டெடுத்து, மலாலா என்று உரக்கக் கூவியது. மலாலாவின் போராட்டத்திற்கு, வகுப்பு எழுந்து நின்று ஆரவாரக் கையொலி எழுப்பி சிறப்பு செய்தது. பெண் கல்விக்குக் குரல் கொடுப்பது சமுதாயக் கடமை என்ற அவரது எடுத்துக் காட்டு தவிர, வேறு சில நடைமுறை சாதனைகள் சொல்லவும், ஒரே ஒரு மாணவர் தவிர (சமத்துவம் என்பது எனக்குப் பிடிக்கல சார்…ஒத்துக்க முடியாது !) அனைவரும் பாலின சமத்துவம் குறித்த முடிவுக்கு வந்தனர். உண்மையை மனம் திறந்து சொன்ன அவரையும் வகுப்பு பாராட்டியது. அவரிடம் தொடர்ந்து பேசுவோம் என்று சொன்னேன்.

    மாணவர்களால் என்ன சமுதாயக் கடமை ஆற்ற முடியும் என்பதற்கு ஒரு நாவலைத் துணைக்கழைத்துக் கொண்டோம்….அதற்கு வகுப்பறை தான் படியமைத்தது….அவர்கள் தான், என் எஸ் சி .சேரலாம்..என் எஸ் எஸ் சேரலாம் என்றனர். ஏன் சாரணர் வகுப்பை விட்டீர்கள் என்று கேட்டபோது, ஆயிஷா நடராசன் அவர்களது வித்தியாசமான நாவல் “நாகா” பற்றிப் பேச வாய்ப்பு அமைந்தது. சாரணர் பயிற்சியின் வேர்கள் குறித்தும், அதன் பன்முகச் சிறப்பையும், கடலூர் வரலாற்றோடு பிணைத்து, சுனாமி வந்த பின்புலத்தில் சாரணர் இயக்க செயல்வீரர் – மாணவர் நாகா உயிர் காக்கும் உன்னதப் பணியில் இறங்கியதைப் பேசும் அந்த புனைவு நூலை வாசிக்கப் பரிந்துரை செய்யப்பட்டது.

    கல்வி உரிமைக்குப் போனது விவாதம். வினோத் ரெயினா குறித்த மிகச் சுருக்க அறிமுகம், கல்வி உரிமைச் சட்டம் கொண்டுவர அவர் ஏற்படுத்திய நிர்ப்பந்தம், நாடாளுமன்ற முற்றுகை விவரங்கள். அவருக்கு உள்ளார்ந்த நன்றி பாராட்டுதலை மிக உரக்கச் செய்தது வகுப்பு.

    ஆனால் நடைமுறையில் எத்தனை பாராத் தன்மை. நிதி இல்லை என்ற சாக்கு. அங்கே ஒரு சின்ன கணக்கு போட்டுப் பார்த்தது மாணவர் உள்ளங்கள். தோழர் சீத்தாராம் யெச்சூரி கூட்டங்களில் சொல்லும் கணக்கு அது. எல்லோர்க்கும் கல்வி தர என்னென்ன தேவை என்ற பட்டியலை மாணவர் குறுக்கும் நெடுக்குமாய் சொன்னதைத் தொகுத்தோம். (சார் முதலில் பள்ளிக்கூடக் கட்டிடம் வேணும் சார்….). பள்ளிக்கூடம், ஆசிரியர்கள், கரும்பலகை, சாக்குக்கட்டிகள், தண்ணீர், இருக்கைகள்….என்று வளர்ந்த தேவைகளுக்கு ஆகும் செலவு குறித்த புள்ளி விவரங்கள் தொகுப்பாகச் சொல்லப்பட்டது. கையில் காசு இல்லை என்கிற அரசு, ஐந்தாண்டுகளுக்கு ஆகும் செலவினத்திற்கான அளவு ஊழல்களை (கோப்புகளே காணோம், என்ன வழக்கு அது? சார் நிலக்கரி ஊழல் சார்….என்றது ஒரு குரல்) நடத்தும் பேர்வழிகள் நமக்கு கல்வி மறுக்கின்றனர் என்பதைப் புரிந்து கொண்டது வகுப்பு. ஊழல்களை யார் தட்டிக் கேட்கிறார்களோ, அவர்கள் நமக்கான கல்வி மறுக்கப்பட்டதற்குக் குரல் கொடுக்கின்றனர். சாலை கேட்கின்றனர். விளக்குகள் எங்கே என்று கேட்கின்றனர்.

    அப்புறம் அம்மா வாட்டர் பத்து ரூபாய் என்று ஒரு குரல் கேட்டது. கொடுக்க வேண்டியவர்கள் காசுக்குத் தண்ணீர் விற்று எப்படி அம்மா புண்ணியவதி என்ற பெயர் எடுக்க முடிகிறது….ஏனென்றால் வெளியே தண்ணீர் இருபது ரூபாய்க்கு விற்கிறது. தண்ணீர் இனி இலவசம் கிடையாது என்று பேசுகிறார். செங்கல்பட்டு பாலூர் அருகே பல்லாயிரம் அடி ஆழ்துளை போட்டு லிட்டர் தண்ணீர் நாலணா கணக்கில் தண்ணீர் எடுக்கும் பன்னாட்டுக் கம்பெனிகள் கொள்ளைக் காசுக்குத் தண்ணீர் விற்கின்றன. சத்தீஷ்கரில் ஆற்றையே விலை பேசி விகிறது ஓர் அரசு.

    மறைந்த கவிஞர் வாலியின், கொடுத்தெல்லாம் கொடுத்தான், அவன், யாருக்காகக் கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான் என்ற வகுப்பு முழுக்கப் பாடியது. பஞ்ச பூதங்களை, அதைவிடப் பெரிய பூதங்கள் எப்படி கட்டி ஆளப் பார்க்கின்றன என்பதை வேடிக்கையாகவும், வேதனையோடும் அசை போட்டது வகுப்பு. சமுதாய நலன் என்ன என்பதன் முகவரிகள் அங்கும் நிறைய தட்டுப் பட்டன.

    நம்மை எல்லோரும் ஏமாற்றுகின்றனர், சுற்றி முற்றி நிறைய பொய்கள் என்று ஒலித்த முதல் குரலுக்கு மெல்லத் திரும்பியது வகுப்பு. இப்போது மூட நம்பிக்கைகள், போலி சாமியார், மத உணர்விலிருந்து செலுத்தப்படும் ஆதிக்கம், அதன் மேல் கட்டுமானமாகிய அடக்குமுறை,ஒடுக்குமுறை இவற்றைக் கொஞ்சம் வேகமாகத் தான் கடந்தது வகுப்பு. ஆனால் ஆழ்ந்த கவனத்தோடு.

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தெரியுமா என்ற கேள்விக்கு ஒன்றோடு பலவாய் உற்சாகமாக மோதிய ,குரல்களில் ஒன்று, வேப்ப மர உச்சியில் பாட்டைக் கூடவே இசைத்தது. பின்னர் அந்த மாணவர் எழுந்து நின்று அந்த வரிகளை அவராக பாடவும் .செய்தார்..

    வேப்பமர உச்சியின் நிண்ணு
    பேயொண்ணு ஆடுதுண்ணு
    வெளையாடப் போகும்போது
    சொல்லி வெப்பாங்க – உன்
    வீரத்தைக் கொழுந்திலேயே
    கிள்ளி வெப்பாங்க

    வேலையற்ற வீணர்களின்
    மூளையற்ற வார்த்தைகளை
    வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே – நீ
    வீட்டுக்குளே பயந்து கிடந்து
    வெம்பி விடாதே…நீ வெம்பி விடாதே

    அது மட்டுமல்ல…..மூட நம்பிக்கையை எதிர்த்த இயக்கத்தில் அண்மையில் ஓர் அருமையான மனிதரை என்ன செய்தார்கள் தெரியுமா என்று கேட்டபோது, அந்த மிக எளிய சிறுவர்கள் வகுப்பு ஆசிரியருக்கு உன்னதமான அதிர்ச்சியை ஏற்படுத்திய இடம் அது. ஆமாம்….டாக்டர் நரேந்திர தபோல்கர் படுகொலை குறித்து அவர்களுக்குத் தெரிந்திருந்தது. (எங்கள் எளிய தோழனே, சமூக வீரனே, உனது மேலான பணியும், உயிர் தியாகமும் வீணாகவில்லை தபோல்கர் அய்யா !). அவரது அற்புதமான வாழ்க்கைப் போராட்டத்திற்கு உணர்ச்சிகர கரவொலி பரிசாக்கப்பட்டது. மூட நம்பிக்கையை ஒழிக்கக் குரல் கொடுப்பது, பகுத்தறிவு பரப்புவது, மேலாதிக்கத்தைக் கேள்விக்கு உட்படுத்துவது எல்லாமே சமுதாயக் கடமை என்று வகுப்பு ஆமோதித்தது.

    சாதி, இன, மொழி, இருப்பவர், இல்லாதவர்…உள்ளிட்ட வேறுபாடுகள், முரண்பாடுகள், மறுப்புகள், இவற்றை மாற்றி எல்லோருக்குமான அன்பு தழைக்கும் உலகை நோக்கிய சிந்தனை, அதற்கான வாசிப்பு, அதை நோக்கிய சில எளிய செயல்பாடுகள், அப்படியானவர்கள் போராட்டங்களைப் புரிந்து கொள்ளுதல் இவை குறித்த தொகுப்பு சொற்களோடு வகுப்பு நிறைவை எட்டியது, ஒரு கோரிக்கையோடு. ஒரு நினைவுகூரலுக்கானது

    நரேந்திர தபோல்கர் – வினோத் ரெயினா இருவருக்காகவும் நாங்கள் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தினோம்.

    பின்னர், முகாம் தொடர்பான வெளியீட்டை என் கைகள் மூலம் மாணவர்களுக்குச் சேர்த்தனர் அறக்கட்டளை அன்பர்கள். எனக்கு ஓர் இனிய பரிசு காத்திருந்தது. யாருடைய வகுப்பறை என்ற அற்புதமான நூல். நடராசன் எழுதிய அந்த நூலை வாசித்தீர்களா என்று முந்தைய நாள் தான் சிவசெந்தில்நாதன் கேட்டார்….அது என் கைகளுக்கு வந்து சேர்ந்தது எத்தனை சுவையான தருணம்.

    மூன்று நான்கு பேர் தங்களது கையேட்டில் எனது கையெழுத்து போடச் சொல்லிக் கேட்டதும் நான் எச்சரிக்கை கொண்டு தனியே அழைத்துப் போட்டுக் கொடுத்துவிட்டு வேறு யாருக்கும் கலகம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்.

    ஆனால் ஒரு மாணவரிடமிருந்து தப்ப முடியவில்லை. அவர் தான் வகுப்பு நெடுக சுவாரசிய குறும்புகளை இடை விடாது செய்து கொண்டிருந்தவர். அனாயாசமாக கேள்விகளுக்குத் தனது இஷ்டப் போக்கில் பதிலாக்கி மகிழ்ந்தவர். (சும்மா கில்லி மாதிரி அடிக்கணும் சார் என்பது அவரது பதில்களில் ஒன்று. அதற்கும் கைத் தட்டல் பரிசளித்திருந்தது வகுப்பு). உங்களுக்கு ஒரு சிறப்பு வணக்கம் போட்டுக்கிறேன் சார் என்று, சிலம்பாட்டக்காரர்கள் பாணியில் உடலை நெளித்து இடது கையால் அவர் வைத்த வணக்கம் என்னை மேலும் இளக்கியது.

    அவரும் கையெழுத்து கேட்டு நீட்டினார்….எந்தப் புத்தகமும் அற்ற தனது உள்ளங்கையை !

    அதில் தான் எனது கையெழுத்தை ஒரு முத்தம் போடுவது போன்ற பரவசத்தோடு போட்டுவிட்டு விடைபெற்றேன்……பிரியாவிடையாக !

    *************

    Share
  • வரிவடிவங்கள்–’நெவர்தலெஸ்’ சீவாகன்

    வேணுகோபாலன்

    நடாத்தூர் சீனிவாச ராகவன்! முதல்முறையாக வந்த மின்னஞ்சலைப் பார்த்தபோதுதான், எல்லாரும் விதிவிலக்கின்றி ‘சீவாகன்’ என்று அழைத்து வந்தவரின் நிஜப்பெயர் தெரிய வந்தது. தன்னை எல்லாரிடமும் ‘சீவாகன்’ என்றுதான் அவரே அறிமுகம் செய்துகொள்வார். கேட்பதற்கு வினோதமாகவும், வித்தியாசமாகவும் இருக்கிறதே என்று முதலில் கேட்பவர்கள் புருவத்தை உயர்த்துவது வாடிக்கை!

    ”என்  நெஜப்பேரு கொஞ்சம் நீளம் ஜாஸ்தி! அப்பல்லாம் எல்லாருக்கும் நிறைய ஓய்வு இருந்திருக்கணும். இல்லாட்டா ஒரு சின்னக்குழந்தைக்கு இவ்வளவு பெரிசா பேரு வைச்சிருப்பாங்களா?” என்று அவரே, மற்றவர்களின் வியப்பைக் கண்டறிந்தவர்போல சொல்லிச் சிரிப்பார். சீவாகனின் சிரிப்பு வசீகரமாக இருக்கும். வெற்றிலை, புகையிலை புழங்கியிராத வாயென்பதால், பற்கள் விளம்பரத்தில் காண்பிக்கப்படுபவைபோல சுத்தமாக, பளிச்சென்றிருக்கும். உதடுகள் பெண்களைப் போன்று அடர்சிவப்பாக, அதிகம் வெடிப்புகளின்றிக் காணப்படும். பெரும்பாலும் கண்ணாடியை சட்டைப்பையிலேயே வைத்திருப்பார். தலை முற்றிலும் நரைத்திருந்தபோதிலும், பின்மண்டையில் அடர்த்தியாக, சீப்பின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு அடங்கிப் படிந்து காணப்படும்.

    நெற்றியின் பரப்பளவை செங்குத்தாகப் பிரிப்பதுபோல, சற்றே புருவமட்டத்துக்குக் கீழேயிருந்து தொடங்கி அவரது முன்வழுக்கை முடிந்து, மயிர்ப்பரப்பு தொடங்குமிடமிடம் வரைக்கும் துல்லியமாக ஒரு அடர்சிவப்புக்கோடு! சிரிக்கும்போது முகத்தில் தெரியும் சிற்சில சுருக்கங்களைக் கவனிக்காமல்விட்டால், அவர் ஒரு வங்கியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டு, ஏதோ ஒரு தனியார் நிறுவனத்தில் இன்னும் பணிபுரிந்து கொண்டிருப்பவர் என்று சொல்வது கடினம். உடம்புவாகு அத்தனை திடகாத்திரம்!

    ஆங்கிலத்தில் ஒன்றும், தமிழில் ஒன்றுமாக இரண்டு செய்தித்தாள்களுடன் பழவந்தாங்கலில் ரயில்பிடிப்பார். வலதுபக்க மூலையிலிருக்கும் ஜன்னலோர இருக்கையில்தான் பெரும்பாலும் அமர்வார். எவரேனும் ஏற்கனவே அமர்ந்திருந்தால், அதிருப்தியுடன் புருவத்தை நெறித்துவிட்டு, வேறேதேனும் ஜன்னலோர இருக்கை கிடைக்குமா என்று பார்த்துவிட்டு, கிடைக்காவிட்டால் எவ்வளவு இருக்கைகள் காலியாக இருந்தாலும், வலதுபக்க ஜன்னலோர இருக்கை காலியாகும்வரை நின்றுகொண்டே வருவார். ”உட்காருங்களேன் சார்!” என்று யாரேனும் சொன்னால்கூட, திரும்பிப்பார்த்து ’உங்கள் கரிசனத்துக்கு நன்றி!’ என்பதுபோல ஒரு அரைப்புன்னகையை அளித்துவிட்டு, ‘இருந்தால் ஜன்னலோரம்; இல்லாவிட்டால் நின்றேதான் பயணம்’ என்று சபதம் மேற்கொண்டவர்போல, பிடிவாதமாக நின்றுகொண்டே வருவார்.

    ’நெவர்தலெஸ்’ – இது சீவாகன் அடிக்கடி உபயோகப்படுத்துகிற ஒரு வார்த்தை. எதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தாலும், எப்படியாவது ஒரு பொருத்தமான இடத்தில் ‘நெவர்தலெஸ்’ என்ற வார்த்தையை, அபத்தமாக இல்லாமல் சொல்லி விடுவார். அதுதவிர, பெரும்பாலும் ஆங்கிலம் கலக்காமலே பேசுவார். சொல்லப்போனால், ஆங்கிலத்தை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மட்டம்தட்டிப் பேசுவதில் அவருக்கு அலாதியான மகிழ்ச்சி ஏற்படும். சபைநாகரீகம் கருதி சில விஷயங்கள் பேசுகிறபோது, அதை ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு, அதையே தமிழில் சொல்லியிருந்தால் எத்தனை அருவருப்பாக இருக்கும் என்று சிரித்துக்கொண்டே கேட்பார்.

    ”எல்லாத்துக்கும் ரொம்ப நாகரீகமா நாலு வார்த்தையைக் கண்டுபிடிச்சு வைச்சிருப்பானுங்க! என்னமோ நாள் முச்சூடும் அதை எல்லார்கிட்டேயும் சொல்லிட்டிருக்கப்போறா மாதிரி, அப்படியொரு பசப்பு! நேச்சர்ஸ் கால்னு சொல்லுவான்; மேக்கிங் லவ்னு சொல்லுவான்! உன்னைத் தவிர அடுத்தவனுக்குப் பத்து பைசா புரயோஜனம் இல்லாத சங்கதிக்கெல்லாம் தேடித்தேடி வார்த்தை கண்டுபிடிச்சு வைச்சிருப்பானுங்க! ஆனா, அவனைத்தான் ரொம்பவும் நாசூக்கானவன்னு நாமெல்லாம் சொல்லிட்டிருக்கோம்!”

    எல்லா ரயில் நிலையங்களில் ஏறுகிறவர்களிலும் ஓரிருவராவது சீவாகனுக்குப் பரிச்சயமானவர்களாக இருப்பார்கள். அதில் நிறைய பெண்மணிகளும் இருப்பதுண்டு. சட்டென்று சினேகிதம் பிடிப்பதில் கெட்டிக்காரர். பக்கத்திலோ எதிரிலோ எவரேனும் உறங்கிக்கொண்டு வருவதைப் பார்த்தால், அவர்களை உறங்கவிடாமல் எதையாவது யாருடனாவது உரக்கப் பேசி, அவர்கள் சட்டென்று கண்விழித்து மலங்க மலங்க விழிப்பதைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரிப்பார்.

    ”என் கணக்குப்படி ஒவ்வொரு டிரெயின்லேயும் குறைஞ்சது ரெண்டு மூணு பேராவது தூங்கிட்டு அடுத்த ஸ்டேஷன்லே கண்முழிக்கிறவங்க இருப்பாங்க!” என்று ஒரு முறை சொன்னார். “ரயில் பிரயாணத்துலேயே இப்படி அசட்டையா இருக்கிறவன், வாழ்க்கையிலே என்னத்தைக் கிழிச்சிடப்போறான்?”

    கடற்கரை ரயில் நிலையம் வரைக்கும், இரண்டு செய்தித்தாள்களும் மடக்கியது மடக்கியபடியே இருக்கும். ஒரு முறைகூட பயணத்தில் அவர் வாசித்துப் பார்த்ததாக ஞாபகமில்லை. யாராவது இரவல் கேட்டாலும் தர மாட்டார். யோசித்துப் பார்த்தால், அவரிடம் செய்தித்தாள் இரவல் கேட்டு, அவர் ‘முடியாது’ என்பதுபோலத் தலையசைத்துவிட்டு, அழிச்சாட்டியமாக ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்த அந்த நாள்தான் அவரை முதலில் கவனித்து மனதில் பதிந்துகொண்ட நாள் என்பது புரிகிறது. ஆனால், நாளாவட்டத்தில் தினசரி அவரைப் பார்க்கப் பார்க்க, எதிர்பாராமல் ஒரு ரயில் சினேகம் உருவானபிறகு, அன்றைக்கு அவர் அப்படி நடந்து கொண்டதற்கும் ஏதாவது காரணம் வைத்திருப்பார் என்று தோன்றியது. சொல்லப்போனால், அவருடன் பேச ஆரம்பித்த சில நாட்களில், அவரிடம் காணப்பட்ட பல சுவாரசியங்களை அறிந்தபின்னர், அந்தச் சம்பவத்தை மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்கவேண்டிய அவசியமேயில்லையோ என்றும் தோன்றாமல் இல்லை.

    சீவாகனிடமிருந்து கற்றுக்கொள்ள நிறையவே விஷயமிருந்தன. குறிப்பாக, எவரையும் அவரவர் வழியில் சென்று நட்புறவாடுகிற சாதுர்யம்.

    ”என்னம்மா, மெடிக்கல் ஸ்டூடண்டா?” இப்படித்தான் ஒரு நாள், எதிரே அமர்ந்திருந்த அந்த இளம்பெண்ணின் கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்து விசாரித்தார். அந்தப் பெண் திரும்பிப்பார்த்து, ‘ஆமாம்’ என்பதுபோலத் தலையாட்டிவிட்டு, அதற்குமேல் பேச விரும்பாதவள்போல முகம்திரும்பிக் கொண்டாள்.

    ”அனாடமி புஸ்தகத்தோட அப்துல் கலாம் புஸ்தகமும் படிக்கிறியாம்மா?” என்று அடுத்த கொக்கியைப் போட்டபோது, அந்தப் பெண் மீண்டும் திரும்பி, பதிலேதும் சொல்லாமல் புன்னகைத்தாள்.

    ”அப்துல் கலாம் டாக்டர்களுக்காக என்ன கண்டுபிடிச்சிருக்கார் தெரியுமோ?”

    இப்போது அந்தப் பெண்ணுக்கு மட்டுமல்ல, சீவாகனுக்குப் பக்கத்திலும் எதிரிலும் அமர்ந்திருந்த அனைவருக்கும் ஒரு திடீர் ஆர்வம் பொங்கியது. என்னவாக இருக்கும்?

    ”என்ன சார்?”  ‘தெரியாது’ என்று சொல்லவிரும்பாத அந்தப் பெண் வியப்புடன் கேட்டாள்.

    ”லாப்ரோஸ்கோபிக் சர்ஜரிக்குப் பயன்படுற ஒரு ‘கன்’ கண்டுபிடிச்சிருக்காரு தெரியுமா? அதுக்குப் பேரே கலாம் கன்!”

    ”இஸ் இட்?” அந்தப் பெண்ணின் பார்வையில் திடீரென்று மரியாதை அதிகரித்தது. தனக்குத் தெரிந்திராத ஒரு தகவல், இந்த ‘அங்கிளுக்கு’த் தெரிந்திருக்கிறதே என்ற வியப்பு.

    ’இதெல்லாம் உங்களுக்கு எப்படி சார் தெரியும்?’ என்று யாரோ கேட்க, ’இதெல்லாம் ஊருக்கே தெரிஞ்ச விஷயம். எனக்குத் தெரிஞ்சதுலே என்ன ஆச்சரியம்?’ என்று சொல்லி, ’இந்த மனிதர் பெரிய அறிவாளி போலிருக்கிறதே’ என்று மற்றவர்களுக்கு திடீரென்று ஏற்படும் பிரமிப்பை சட்டென்று அடக்கி, நானும் மற்றவர்களைப் போலத்தான் என்று சகபயணிகளோடு தன்னையும் சட்டென்று பிணைத்துக் கொண்டுவிடுவார். மறுமுறை, அந்தப் பெண் அதே நேரத்தில், அதே ரயிலில், அதே பெட்டியில் ஏறினால், வருஷக்கணக்காகப் பழகியவளைப் போல நேராக சீவாகனுக்குப் பக்கத்திலோ, எதிரிலோ அமர்ந்து அளவளாவ ஆரம்பித்து விடுவாள்.

    ”நேத்து புக் எக்ஸிபிஷன் போயிருந்தேன். மொத்தம் ஐநூறு ஸ்டால்னு சொல்றா.  நெவர்தலெஸ், அதுலே ஒரு ஸ்டால்லே இருக்கிற மொத்தப்புஸ்தகங்களையும் படிக்கிறதுக்கே இந்த ஆயுசு பத்தாது! இதுலே நான் நிறையப் படிச்சிட்டேன்; உனக்கு எதுவும் தெரியலேன்னு மனுசங்க பேசறதைவிடப் பெரிய கேலிக்கூத்து இருக்குமோ?”

    வயது, அந்தஸ்து எல்லாவற்றையும் தாண்டி, சீவாகனுக்கென்றே அந்த ரயில் பெட்டியில் நிறைய ரசிகர்கள். புதுக் கணினியோ, புது செல்போனோ, புதிய வாகனமோ எதுவாக இருந்தாலும் அவரிடம் வந்து சிலர் ஆலோசனை கேட்பார்கள். பெரும்பாலான விஷயங்களுக்கு உடனடியாக அவரிடம் ஆலோசனைகள் தயாராக இருக்கும். இல்லாவிட்டால் ‘உங்க ஈ-மெயில் ஐ.டி.சொல்லுங்க! நான் பார்த்துட்டு உங்களுக்கு விபரம் அனுப்பறேன்’ என்று சொல்லுவார். அனேகமாக அன்றிரவே அவரிடமிருந்து மின்னஞ்சல் சென்றுவிடும்.

    கோட்டையிலிருந்து கிளம்பியதுமே, இருக்கைகளிலிருந்து எழுந்துசென்று வாசல்பக்கமாகக் கம்பியைப் பிடித்து நிற்பவர்களைப் பார்த்துப் பரிகாசமாகச் சிரிப்பார் சீவாகன்.

    ”இது அவசரயுகம் அவசரயுகம்னு பயமுறுத்தறதுக்காகவே இப்படியெல்லாம் அனாவசியமா பதட்டப்படறா பாருங்க! இப்படித்தான் பஸ் ஸ்டாப்புலே, சினிமா தியேட்டர்லே, கோவில்லேன்னு எங்க பார்த்தாலும் தேவையில்லாம முண்டியடிக்கிறா! பீச் ஸ்டேஷன் வராமலா போயிடும்? இவங்கதான் இறங்காம இருக்கப்போறாங்களா? வேணும்னே டென்ஷன் ஆகி, நம்மளை நாமளே வருத்திண்டு, வாழ்க்கை இயந்திரமாயிடுச்சுன்னு பேசறதெல்லாம் எவ்வளவு பெரிய புரட்டு?”

    சீவாகன் கடற்கரை ரயில் நிலையத்தில் இறங்குவதுகூட அலாதியாக இருக்கும். ரயில் முழுதாக நின்றபிறகுதான், இருக்கையிலிருந்து எழுவார். எழுந்தபின்னர் கைகளை உயரத்தூக்கி சோம்பல்முறிப்பார்; நிதானமாக இறங்கி, பிளாட்பாரத்தில் இருக்கும் பெஞ்சுகளில் ஒன்றில் அமர்ந்து, பையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து இரண்டுமடக்குக் குடிப்பார். பிறகு, சட்டைப்பையிலிருந்து கண்ணாடியை எடுத்து, கைக்குட்டையால் துடைத்து மாட்டிக்கொள்வார். பிளாட்பாரத்தில் பயணிகளின் நடமாட்டப் பரபரப்பு குறையும்வரைக்கும் பிடித்துவைத்த பிள்ளையார்போல அப்படியே அமர்ந்திருப்பார். ஏறக்குறைய பிளாட்பாரம் காலியானதும், மெதுவாக எழுந்து இரண்டு பேண்ட் பாக்கெட்டுகளிலும் கையை நுழைத்துக்கொண்டு, ஓரடிக்கு அரையடியாக மெதுவாக நடந்து வெளியேறுவார்.

    இந்த மனிதருக்குப் பதட்டமே வராதா? எப்போதும் இப்படித்தானா?

    ஒரு நாள்!

    கிண்டி ரயில் நிலையத்தை நெருங்கிக்கொண்டிருந்த வண்டி திடீரென்று கிறீச்சிட்டு நின்றது. வாசலருகே நின்றுகொண்டிருந்தவர்கள் பதற்றத்துடன் பேசுவதிலிருந்து, தண்டவாளத்தைக் கடக்க முயன்ற யாரோ ஒருவர்மீது ரயில் மோதிவிட்டதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

    ’அடப்பாவமே!’ என்று உச்சுக்கொட்டியபடி, தற்செயலாக சீவாகனைப் பார்த்தபோது, அவர் முகத்தில் வியர்வை துளிர்த்திருந்தது. கண்கள் லேசாகச் செருகிக்கொள்ளத் தொடங்கியிருந்தன. என்னவென்று புரிந்துகொள்வதற்குள், சட்டென்று மூர்ச்சையாகிக் கீழே விழுந்தார் சீவாகன். தண்ணீர் தெளித்து அவரை சுயநினைவுக்குக் கொண்டுவந்தபோது, மெதுவாகக் கண்திறந்து அவர் கேட்ட முதல் கேள்வி:

    ”டிரெயின் கிளம்பிடுச்சா இல்லே அங்கேயேதான் நிக்குதா?”

    ”இன்னும் கிளம்பலை சார்! என்னாச்சு சார்? ஏன் மயங்கிட்டீங்க?”

    சீவாகன் பதில் சொல்லவில்லை. ஆனால், பின்னால் யாரோ ரகசியமாகப் பேசிக் கொண்டிருந்தது மட்டும் காதில் விழுந்தது.

    ”அவரோட சம்சாரம் ரயில்லே அடிபட்டுத்தான் இறந்தாங்களாம். பழவந்தாங்கல் ஸ்டேஷன்லே….!”

    *********

    Share
  • வார ராசி பலன்!…07-10-13 – 13-10-13

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    மேஷம்: கலைஞர்கள் பணியாளர்கள் முன் சொந்த விஷயங்களை அலசுவதை விட்டு விடுங்கள். வீண் வதந்திகள் வளராது. வாங்கிய கடன் ஓரளவு அடைவதால், பெண்கள் மகிழ்ச்சியுடன் திகழ்வார்கள். பிறர் உங்களை தூண்டிவிட்டாலும், மாணவர்கள் நேர்மையான வழியிலேயே சென்றால், உங்கள் நற்பெயர் என்றும் நிலைத்திருக்கும். பணியில் இருப்பவர்கள் உங்களின் சிரமங்களை, தகுந்த நேரத்தில் எடுத்துச் சொன்னால், தீர்வுகள் கிடைப்பது எளிதாக இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் ஆரோக்கிய பராமரிப்பிற்கு வேண்டிய மருந்துகளை தவறாது உண்டு வந்தால், பிறக்கின்ற குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

     ரிஷபம்: மாணவர்கள் தங்கள் திறமை மேல் நம்பிக்கை வைத்து செயலாற்றினால் வெற்றி என்னும் இலக்கை அடைவது என்பது உறுதியாகும். வியாபாரிகள் தொழிலுக்கு முன்னுரிமை தந்தாலும், குடும்பத்தை கவனிப்பதில் குறை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். மன நிம்மதியோடு வேலைகளில் ஈடுபடலாம். இல்லத்தில் இனிமை தவழ பெண்கள் தேவையில்லாத இடங்களிலும், நேரங்களிலும் உங்கள் விறுப்பு, வெறுப்புகளை வெளியே கொட்டாதீர்கள். இந்த வாரம் பூர்வீகச் சொத்து சம்பந்தமாகவும் மற்றும் வழக்குகள் தொடர்பாகவும் பணம் தண்ணீராய் செலவழிந்தாலும் கிடைக்கும் பலன் சொற்பமே.

    மிதுனம்: பணியில் இருப்பவர்கள் முக்கிய பொறுப்புள்ளவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்வதன் மூலம் அவர்களின் நன்மதிப்போடு வேண்டிய சலுகைகளையும் பெறலாம்.பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்களுக்கு உதவும் நல்ல இதயங்களை புண்படுத்தாமல் இதமாக நடப்பது புத்திசாலித் தனம். வியாபாரிகள் கணக்கு வழக்குகளை அலசிப் பார்த்து நிறை குறைகளை குறித்து, அதன்படி செயலாற்றினால், பணம் ,லாபம் இரண்டும் முடங்காமலிருக்கும். இந்த வாரம் தாய் வழி சொந்தங்களின் வழி ஆதரவால், தடைப்பட்ட காரியங்கள் தாமதமின்றி நல்ல விதமாக நடக்கும்.

    கடகம்: கலைஞர்களுக்கு இந்த வாரம் பயணங்கள் அதிகரிக்கும். வாய்ப்பிருப்பதால், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். பெண்கள் தினசரி வேலைகளைத் தள்ளிப் போடாமல் செயல்படுங்கள் . ஓய்வுக்கும் மகிழ்ச்சிக்கும் உரிய நேரத்தை ஒதுக்க முடியும். பணியில் இருப்பவர்கள் சச்சரவு கை ஓங்கும் நேரங்களில் மௌனத்தை மேற்கொண்டால், அல்லல்கள் அருகே வராது. பங்குச் சந்தை மற்றும் புதிய முதலீடுகளில் அகலக் கால் வைப்பதைத் தவிர்த்து விடும் வியாபாரிகளுக்கு லாபம் சீராக வந்து கொண்டிருக்கும். மாணவர்களும், கலைஞர்களும் பேச்சைக் குறைத்து, செயலில் தீவிரம் காட்டும் அளவிற்கு ஏற்ப முன்னேற்றம் இருக்கும்.

    சிம்மம்: பெற்றோர்கள் பிள்ளைகளின் பிரச்னைகளைக் கையாளும் போது பதற்றமின்றி செயல்பட்டால் பாதி பிரச்னைகள் குறையும். பெண்கள் எதிர்பார்த்ததை விட செலவுகள் சிலசமயம் கை மீறி செல்லும். வசதி வாய்ப்புகளுடன் உங்கள் கௌரவமும் உயருவதால், கலைஞர்கள் புத்துணர்ச்சியுடன் வலம் வருவார்கள். ஆரோக்கியம் பொலிவுடன் விளங்க, முதியவர்கள் உணவுக் கட்டுப்பாட்டைக் கடை பிடிப்பது நல்லது. இக்கட்டான சூழ்நிலைகளையும் தாண்டி முன்னேற முடியும் என்ற எண்ணமே பொது வாழ்வில் இருப்பவர்களை முன்னேற்றத்தை நோக்கி உந்தித் தள்ளும். மாணவர்கள் வதந்திகளை நம்பி முடிவெடுக்காதீர்கள்.

    கன்னி: மாணவர்கள் தெளிவான சிந்தனை, தீர்க்கமான செயல்பாடு-இரண்டையும் மேற்கொள்வதன் மூலம் உயர்வான நிலைக்கு செல்லலாம். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் அவசரப் போக்கிற்கு இடம் தராமல் இருந்தால், புதிய சிக்கல்கள் உருவாகா மலிருக்கும். இந்த வாரம் பணியாளர்களிடையே அதிருப்தியான சூழல் நிலவும். எனவே பொறுப்பில் இருப்பவர்கள் எதிலும் கவனமாய் இருப்பது அவசியம். சுய தொழில் புரிபவ ர்கள் கேட்டிருந்த கடன் உதவி, சிறிது மந்த கதியில் உங்கள் இடம் தேடி வரலாம். பெண்கள் கவனிக்காமல் விட்ட ஆரோக்கிய நலிவு, பணியில் சில தடைகளை ஏற்படு த்தக் கூடும்.

    துலாம்: சொந்த பந்தங்களின் வரவு மகிழ்ச்சிக்கு இந்த வாரம் அடித்தளமாய் அமையும். பொது வாழ்வில் இருப்பவர்கள் பேச்சில் கடுமை கூடாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.தள்ளிப் போடப்பட்டிருந்த காரியங்கள் உடன் முடியும். கலைஞர் களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புக்களை நல்லதை சிலர் தடுக்க முயல்வார்கள். எனவே திறமையோடு புத்திசாலித் தனத்தையும் இணைத்துக் கொள்வது நல்லது. பெண்கள் மூத்தவரிடம் இணக்கமாக நடந்து கொள்ளுங்கள். குடும்பப் பிரச்னைகளைத் தீர்க்க நீங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாய் இருப்பார்கள். வியாபாரிகளுக்கு லாபம் வரும் வழிகள் மேலும் உயரும்.

    விருச்சிகம்: இந்த வாரம் வியாபாரிகளின் முன்னேற்றத்தில் இருந்த தேக்க நிலை மாறி பரபரப்புடன் செயல்படுவார்கள்.உறவுகளின் மீது பெண்கள் வீண் சந்தேகங்களை வளர்த்துக் கொண்டு அவதிப் பட வேண்டாம். கலைஞர்கள் வேண்டிய உழைப்பை நல்கினால், இது வரை எட்டாக் கனியாய் இருந்தவாய்ப்புக்கள் உங்கள் கரங்களுக்கு வந்து சேரும். உபத்திரவம் தந்தவர்கள், விலகி விடுவதால் பொது வாழ்வில் இருப்பவர்களின் செயலாற்றல் மேலும் சிறப்பாக இருக்கும். பணி புரியும் இடங்களில் வீண் பகை வளராதிருக்க, உங்கள் கோபத்தை கட்டுக்குள் வைத்து உரையாடுங்கள்.

    தனுசு: பெண்கள் இந்த வாரம் செலவுக் கடிவாளத்தை சற்று இறுக்கினால், பணமுடை, மன உளைச்சல் இரண்டும் ஏற்படாது. எதிரிகள் வியாபாரிகளின் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டை போடும் வாய்ப்பு உண்டு.கூட்டாக செயல்படும் போது மாணவர்கள் காட்டும் சொல்சிக்கனம் பிரச்னைகளை பெரிதாகாமல் தடுக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் தவறான வழிகாட்டலுக்கு தலையசைக்காமல் இருந்தால், நிலையான நன்மைகள் உங்களை நெருங்கி வரும். முதியோர்களுக்கு பல் சம்பந்தமான உபாதைகள் தோன்றி மறையும். எனவே குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்ப்பது அவசியம்.

    மகரம்: சுய தொழில் புரிபவர்கள் ஏனோதானோவென்று செயல்படாமல், சீராகத் திட்டமிடுங்கள். காரிய பலிதம் கட்டாயம் உண்டு. வியாபாரிகள் ,சரக்கு போக்கு வரத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்தால், வீண் விரையத்தைத் தவிர்க்கலாம். சக கலைஞர்களிடையே, கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பிருப்பதால், பிறருக்கு ஆலோசனை வழங்குமுன் ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பது அவசியம். பெண்கள் பணம் செலவழிப்பதில் கணக்காய் இருப்பதன் மூலம் கடன் தொல்லை ஏறாமல் பார்த்துக் கொள்ளலாம். இனிமையான வாக்கு மூலம் மாணவர்கள் இரட்டிப்பான நன்மை பெறலாம்.

    கும்பம்: பெண்கள் பதற்றத்திற்கு இடம் தராமல், பணிவான முறையில் உரையாடினால், குடும்பத்தில் அமைதி நிலவும். கலைஞர்கள் தீய சகவாசம், வேளை தவறிய உணவு, வீண் செலவு, ஆகிய அனைத்தையும் தவிர்த்து சீரான வழியில் சென்றால், சிக்கல்கள் ஏதும் உருவாகாது. மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தால், நல்ல பெயரும்,நல்ல மதிப்பெண்ணும் கட்டாயம் கிடைக்கும்.வியாபாரிகள் மற்றவர்களை நம்பி வேலைகளை ஒப்படைத்து விட்டு அல்லல் படாதீர்கள். தன் கையே தனக்கு உதவி என்று பணி புரிந்தால், பணிகளும், வர வேண்டிய பண வரவும் தேங்காது.

    மீனம்:இது நாள் வரை உங்களோடு இருந்த பிள்ளைகள் படிப்பு, பணி போன்றவற்றிற்காக, வேறிடம் செல்ல நேரிடும். வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களை பெறவும், தக்கவைத்துக் கொள்ளவும், தீவிரமாக உழைப்பார்கள். நீண்ட நாள் நட்பில் இருந்த விரிசல் விலகுவதால் உங்கள் நட்பு வட்டத்தில் மீண்டும் மகிழ்ச்சி மலரும். இந்த வாரம் அநாவசிய செலவுகளுக்காக கடன் படும் நிலை வராதவாறு, மாணவர்கள் விழிப்புடனிருப்பது அவசியம். கலைஞர்கள் மற்றவர்களுடன் பழகும் போது விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கை கைக்கொண்டால், விரும்பியவளமான வாழ்க்கை உங்கள் வசமாகும்

     

    Share
  • சீதாயணம் தொடர்ப் படக் கதை -1

     

    தலைப்பு : சீதாயணம்

            தொடர்ப் படக்கதை -1

    நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

    வடிவமைப்பு : வையவன்

    ஓவியம் : ஓவித்தமிழ் ​

     

    அன்புள்ள நண்பர்களே,

    “சீதாயணம்” என்னும் எனது ஓரங்க நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். வால்மீகி முனிவருக்கு ஆசிரமத்தில் தன் முழுத் துன்பக் கதையைச் சொல்லி, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரைப் போக்கிக் கொண்ட சீதாவின் பரிதாபச் சம்பவம் இது.

    அன்புடன்,
    ஜெயபாரதன், கனடா

    Scene-0

    Padakkathai-first-page

     

     

    தொடரும்

    Share
  • குடகு நாட்டில் தசரா!…

    விசாலம்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                முன்பு ஒரு தடவை எனக்கு குடகு நாட்டின் முக்கிய இடமான “மடிக்கேரி” யில் ஒரு மாதம் தங்க வாய்ப்பு கிடைத்தது நான் தங்கியிருந்த  இடத்தின் தலைவி எனக்கு நல்ல தோழியானாள். அவளது நாட்டு கலாச்சாரம் ,பண்டிகைகள் எல்லாவற்றையும் பற்றி நான் கேட்க என்னிடம் பகிர்ந்து கொண்டாள். அதில் தசராவும் ஒன்று. மைசூர் தசரா உலகப்புகழ் பெற்றது.அது நடக்கும் நேரம் காலையிலிருந்து தொடங்கி பிற்பகல் வரை நிகழும்.ஆனால் மடிக்கேரி தசரா இரவில் தான் ஆரம்பிக்கும் .இரவு முழுவதும் நடக்கும் பலர் காலையில் மைசூர் தசராவைக் கண்டுக்களித்து பின் இரவில் மடிக்கேரிக்கு வந்து விடுவார்கள்.அங்கு அம்மன் கோயில் பல உள்ளன.அதில் முக்கியமான சவுத்தி மாரியம்மன், கோட்டை மாரியம்மன்,காஞ்சி காமாட்சியம்மன் தட்சிணமாரியம்மன். காவிரியம்மன் போன்ற கோயில்களில் தசரா மிகவும் பிரமாதமாக கொண்டாடப்படுகிறது இத்தனை அம்மன் கோயில்களைப்பிரதிஷ்டை செய்த தினம் நவராத்திரியின் கடைசி நாளான விஜயதசமி. இவைகளைப்பிரதிஷ்டை செய்த காரணம் என்ன ?

    முன்பு குடகு நாட்டை சிக்கவீரராஜேந்திரா என்ற மன்னர் ஆண்டு வந்தார்.சில காலமாக அவர் முகத்தில் கவலை ரேகை அப்பிக்கொள்ள நிம்மதி இழந்து தவித்தார். காரணம் என்னவென்றால் மடிக்கேரி மக்களை கடும் வியாதி பீடித்து இதனால் பலர் மிகவும் கஷ்டப்பட்டனர். இதனால் வைத்தியச்சிலவு செய்து பணமும் குறைந்து போயிற்று. எல்லோர் வீட்டிலும் வறுமை தாண்டவமாடியது. மக்கள் நலனின் மிகவும் அக்கரை கொண்ட மன்னன் மிகவும் வருந்தினார். பின் பல தடவை யோசித்து ஒரு நல்ல ஜோசியரை வரவழைத்து  விவரங்களைச்சொல்லி இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்று கேட்டார்.

    “மடிக்கேரி மக்களுக்கு மனதில் பயம் கவ்விக்கொண்டிருக்கிறது .அவர்களுக்கு மனதில் தைரியம் ஊட்ட இங்கு தேவியின் கோயில் இல்லை இதனால் சக்தி வாய்ந்த தெய்வங்களை இங்கு உடனே பிரதிஷ்டை செய்ய வேண்டும்” என்றார். மன்னரும் இதற்கு ஆக்ஞை பிறப்பித்தார் இதனால் கோட்டை மாரியம்மன் .காமாட்சியம்மன், என்று பல அம்மன்கள் வந்து அமர்ந்து அருளைப்பொழிந்தனர்.உடனடியாக நோய் அகன்றது. இதனால் வறுமையும் ஒழிந்தது இந்த நிகழ்வை மனதில் கொண்டு தசரா தினத்தை விழாவாக எடுத்து மிகசிற்ப்பாக நடத்துகின்றனர். மடிக்கேரியில் ஸ்ரீராம மந்திரா, கோட்டை மகாகணபதி, பேச்சுரு ராமசந்திரா சவுடேஸ்வரி .சரவாளே பகவதி, அனுமான் கோயில் போன்ற மேலும் சில கோயில்கள் இதனிடையே கட்டப்பட்டன.                                                                                                                                                                                                                                                                                                                                                                                   தசரா தினத்தன்று ஊர்வலம் சவுத்தி மாரியம்மன் கோயிலிருந்து புறப்படும்.நேராக கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு வரும் .அங்கு அந்த அம்மனும் பவனி வர ரெடியாக அலங்கார பூஷிதையாக அமர்ந்திருப்பாள்.பின் காஞ்சி காமாட்சியம்மன்  அவர்களுடன் சேர்ந்து கொள்வாள்.  தண்டு மாரியம்மன்  இவர்கள்  வரவை ஆவலாகப் பார்த்தபடி  காத்திருக்க  அவளும் ஊர்வலத்தில் கலந்து கொள்வாள் இத்துடன் மேலும் ஆறு கோயில்களிலிருந்து தெய்வங்கள் அவர்களுடன் சேர்ந்துகொள்ள இரவு முழுதும் விடிய விடிய ஊர் முழுவதும் ஊர்வலம் வருகின்றன. சில இடங்களில் நடுநடுவே  ஊர்வலம் நிற்கும் .நிற்கும் அவ்விடத்தில் விதவிதமான   செயறகை மண்டபங்கள் கட்டப்பட்டு பலவித விளக்குகளால் சுவர்க்கபூமி போல் இருக்கும். மண்டபங்களில் எது சிறந்து அழகாக விளங்குகிறதோ அதற்கு பரிசும் உண்டு. வழி முழுவதும் பலவிதமான நடனங்கள். ஆட்டங்கள், தாரை,தம்பட்டையுடன் முழங்க பல தேவிகள் உர்வலம் வருகின்றனர்.ஒவ்வொரு மண்டபத்தின் முன்னும் ஊர்வலம் நின்று அங்கு ஆராதனை நடக்கிறது.ஒவ்வொரு அம்மனுக்கும் அலங்கரித்த தேர்  ஒவ்வொரு விதமாக இருக்கிறது. அதே போல்அதற்கென்று தயாரிக்கப்படும் மண் பொம்மையும் அழகான அம்மன் உரு பெற்று தகுந்த வாகனம் மேல் அமர்ந்து   பவனி வருகிறது .இதற்கென்றே பல வழிநடை கடைகள் புதிதாக அமைக்கப்பெற்று வியாபாரம் சக்கைப்போடு போடுகிறது. தவிர ராட்டினம் கண்காட்சிகள் .என பல கேளிக்கைகளும் உண்டு. மக்கள்  இதை மிகவும் ஆனந்தமாக  செய்வதால் மடிக்கேரி தசராவும்  மிக அமர்க்களமாக நடக்கிறது.

    Share
  • புரட்டாசி சனிக்கிழமை-3

     

    சு.கோபாலன் 

     

    அருளின் உருவே கோவிந்தா!images

    ஆனந்த ரூபா கோவிந்தா!

    இன்னல் தீர்ப்பாய் கோவிந்தா!

    ஈர்ப்பாய் பக்தரை கோவிந்தா!

    உன்னருள் தருவாய் கோவிந்தா!

    ஊழ்வினை தீர்ப்பாய் கோவிந்தா!

    என்றும் துணையே கோவிந்தா!

    ஏழுமலை வாசா கோவிந்தா!

    ஐயனே! சரணம் கோவிந்தா!

    ஒருநாளும் மறவேன் கோவிந்தா!

    ஓதுவேன் உன் துதியே கோவிந்தா!

    அவ்வாறே என்னை வாழ்விப்பாய் கோவிந்தா!

    படத்திற்கு நன்றி:

    http://www.google.co.in/imgres?imgurl=http://www.starsai.com/wp-content/uploads/sri-venkateswara.jpg&imgrefurl=http://www.starsai.com/sri-venkateswara-tirumala-tirupati-darshan/&h=637&w=595&sz=99&tbnid=rhysG6ZF3vd7tM:&tbnh=133&tbnw=124&zoom=1&usg=__jwCpFW0cJX-GCJ7bVq7rbb32LH0=&docid=g6dp3788iMrcjM&sa=X&ei=JsNQUtOEAsaLrQetrYD4AQ&ved=0CDQQ9QEwAg

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 14

    தேமொழி

    மணமகள்

    bride

      
                                                                                                                                      வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 13 >>

     

     

     

     

    Share
  • வளம் தரும் நாயகியே! வருகவே!

    பவள சங்கரி

    Goddess_Adi_Parashakthi_at_Parashakthi_Temple

    பாற்கடல் நாயகி கற்பகவல்லி புறப்பட்டாள்!
    அற்புதங்கள் புரியவே அருள்மழை பொழியவே
    பொற்பதங்கள் பணிந்து கருத்தாய் வழிபடவே
    நற்கதியருளி ஆனந்தமழை பொழியவே
    பொற்சலங்கைகள் ஜல்ஜல்லென தாளமிட
    கற்சிலையாய் வீற்றிருந்தவள் கலகலவென புறப்பட்டாள்!

    நித்ய கல்யாணியே நிதம் வாருமம்மா
    சத்ய சொரூபமாய் சாந்தமாய் வாருமம்மா
    சிந்தை கலங்காமல் நின்பதம்பாட வாழ்த்தியருளுமம்மா
    முந்தைவினை தீண்டாமல் முத்தாய் பதமருளுமம்மா
    பந்தத்தில் கிடந்துழலாமல் பரிவாய் காத்தருளுமம்மா
    பைந்தமிழ்ப்பாமாலை பாடியுனைத் துதிக்கும் வரமருளுமம்மா

    அஞ்சி அஞ்சி நிற்பவருக்கு ஆறுதலாய் வாருமம்மா
    கெஞ்சி கெஞ்சி தவமிருப்போரை காத்தருளுமம்மா
    தஞ்சம் தஞ்சமென அலைந்தேனுக்கு அடைக்கலம் அருளுமம்மா
    நஞ்சையும் புஞ்சையும் செழித்து வளர வாருமம்மா
    பஞ்சமும் பசியும் பாரினில் அறவேஒழிய தயைதாருமம்மா
    வஞ்சம் தீண்டாமல் வஞ்சியே காத்தருளுமம்மா

    ரஞ்சனியே தாயே தயாபரயே ரட்சித்தருளுமம்மா!
    பிரதமை திதியில் பிரியமாய்வந்து காத்தருளுமம்மா!

    pbaba097_goddess_lakshmi_parvati_and_saraswati
    வேதம் படிப்பதால் கிடைக்கும் அத்தனை ஞானமும், நலனும், வளமும் விரதங்களால் கிடைக்கின்றன என்று புராணங்கள் கூறுகின்றன. ‘சிவனுக்கு ஒரு இராத்திரி சிவராத்திரி, அம்மனுக்கு ஒன்பது இராத்திரி, நவராத்திரி’ என்பார்கள். அன்னை பராசக்தியை புரட்டாசி மாதத்தில் ஒன்பது தினங்கள் முறையாக வழிபடும் அற்புத விரதம் நவராத்திரி விரதம். அன்னையின் விரதங்களுள் மிகச் சிறந்த ஒன்றாகும் இவ்விரதம். நலங்கள் யாவும் அள்ளித்தரும் நாயகியின் நவராத்திரி விரத மகிமையை கந்தபுராணமும் எடுத்துரைக்கிறது . நவராத்திரி வழிபாடு அன்னை சக்தியின் மகிமையை பார் புகழ விளங்கச்செய்யும். மனிதரின் வாழ்க்கை நலமான, கல்வி, செல்வம், வீரம் ஆகிய இம்மூன்றையும் வேண்டி அம்மனின் அவதாரங்களான சரசுவதி, இலக்குமி, துர்காதேவி என மூன்று சக்தி அம்சங்களையும் உளம் குளிர வழிபடுதலே இவ்விரதத்தின் நோக்கம். முதல் மூன்று நாட்களில் வீரத்தையும், தைரியத்தையும் வேண்டி அன்னை பராசக்தியை வழிபடுகிறோம். அடுத்த மூன்று நாட்கள் வாழ்வாதாரமான செல்வம் வேண்டி மகாலட்சுமியைத் துதிக்கிறோம். இறுதி மூன்று நாட்களும் கல்வி, ஞானம், சகல கலைகள் என அனைத்தும் வேண்டி சரசுவதி தேவியை வழிபடுகிறோம்.

    பதினென் கரங்களுடன் செவ்வாடை தரித்து ஞானத்தின் பிரதிபிம்பமாக, அழகின் இன்ப ஊற்றாக, அட்ட இலட்சுமியாகக் காட்சியளிப்பவள் அன்னை. 1. ஜபமாலை, 2. கோடரி, 3. தண்டாயுதம், 4. அம்பு, 5. மின்னல், 6. தாமரை, 7. வில், 8. கலசம், 9. வளைதண்டம், 10. ஈட்டி, 11. வாள், 12. கேடயம், 13. சங்கு, 14. மணி, 15. மதுக்கிண்ணம், 16. திரிசூலம், 17. பாசக்கயிறு, 18. சுதர்சன சக்கரம் ஆகியவற்றை 18 ஆயுதங்களையும் அன்னையின் 18 திருக்கரங்கள் தாங்கி நிற்கிறது. வெள்ளை ஆந்தையை வாகனமாகக் கொண்டவள். 1. ஆதி லட்சுமி, 2. தான்ய லட்சுமி, 3. தைர்ய லட்சுமி, 4. கஜ லட்சுமி, 5. சந்தான லட்சுமி, 6. விஜய லட்சுமி, 7. வித்யா லட்சுமி, 8. தனலட்சுமி என அட்ட சக்திகளாக அருள்பாலிப்பவள் அன்னை. அமைதியான, மகிழ்ச்சியான வாழ்வு அமைய வேண்டுமானால் அன்னையின் அருள் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். ஆயினும் இந்த அட்ட இலட்சுமிகளில் எந்த இலட்சுமியின் அருளை இழக்க நேர்ந்தாலும் உயிர் வாழ இயலும். ஆனால் தைர்ய இலட்சுமி என்பவளின் அருளை இழக்க நேர்ந்தால் நம் வாழ்வு என்ன ஆகும் என்று சொல்ல வேண்டியதில்லை. தன்னம்பிக்கையைக் கொடுத்து, எத்துனை துன்பம் வந்தாலும் அதைத் தாங்கி நின்று மீண்டு வரும் மாயம் செய்பவள் தைரிய இலக்குமி! தாமரையாள், அலைமகள், திருமகள், செந்திரு என பல்வேறு அழகான நாமங்கள் சூடியவள் அன்னை. நன்னடத்தை, நல்லதொரு குறிக்கோள், சோம்பலின்மை ஆகியவைகளை உடையவர்களுக்கும், தன்னையும் சுற்றுப் புறத்தையும் தூய்மையாக வைத்திருப்பவர்களுக்கும் தன்னுடைய பூரண அருளைப் பொழிபவள் அன்னை. தாமரைத் தண்டு திரியில் விளக்கேற்றி, கோபூசை செய்து அன்னையை வழிபட உள்ளம் குளிர்வாள். இந்துக்களிடம் ஆலய வழிபாடும், இலட்சுமி கடாட்சமும் செல்வம் தரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அனந்தபூர் மாவட்டத்தில் ஜீலம் நதிக்கரையின் ஓரத்தில் கிட்டத்தட்ட 1400 ஆண்டுகள் பழமையான இலட்சுமி தேவியின் சிலை ஒன்று கிடைத்துள்ளதாம். இதிலிருந்தே இலட்சுமி தேவியின் தொன்மை நன்று விளங்குகிறது.

    பெரியோரை மதிப்போருக்கும், எப்போதும் உண்மையே பேசுபவர்களுக்கும், தன்னையும், தம் இருப்பிடத்தையும் சுத்தமாக வைத்திருப்பவர்களுக்கும், இரக்கமுள்ளவர்கள், புறம்பேசாதவர்கள், மற்றவர்களுக்கு உதவுபவர்கள், குழந்தைகளைத் துன்புறுத்தாதவர்கள், போன்றவர்களுக்குத் தம் அருளாசியை அள்ளி வழங்குபவள் அன்னை. லட்சுமி என்றாலே அழகு என்று தான் பொருள். எல்லா அழகான இடங்களிலும் லட்சுமி வாசம் செய்கிறாள். சுத்தமான மாட்டுத் தொழுவம், நீர் நிறைந்த ஆறு, குளங்கள், நிறைந்து நிற்கும் நெல் வயல், மகிழ்ச்சியான இல்லம் என இயற்கை அழகு கொஞ்சும் சகல இடங்களும் அன்னை உறையும் இடங்கள்தான். அதனால் இயற்கையைப் பேணிப் பாதுகாத்து அன்னையின் அருளைப் பூரணமாகப் பெற்று இன்ப வாழ்வை எய்துவோம்.

    படத்திற்கு நன்றி:

    http://www.google.co.in/imgres?imgurl=http://upload.wikimedia.org/wikipedia/commons/6/64/Goddess_Adi_Parashakthi_at_Parashakthi_Temple.jpg&imgrefurl=http://en.wikipedia.org/wiki/Adi_Parashakti&h=841&w=1191&sz=485&tbnid=9dgCQrq9oUjtbM:&tbnh=125&tbnw=177&zoom=1&usg=__wzId2J8Iwb76I6LKY-gamnoSCac=&docid=7Lh10c5LPa9rjM&sa=X&ei=-yNOUq30FonyrQefhICoAQ&ved=0CDEQ9QEwAg

    Share