நீ நீதான்
பிச்சினிக்காடு இளங்கோ
பலமுறை
பல்வேறுவகையில்
பாராட்டியிருக்கிறேன்
செங்கல்லில்
பளிங்கில்
கிரானைட்டில்
எத்தனைஎத்தனை
கட்டடங்கள் மாளிகைகள்
எழுப்பினும்
அங்கே
. ஒவ்வொரு கதவைத்திறக்கும்போதும்
என் மனகதவுகள் திறக்கின்றன
உன்னில் ஆன
நாற்காலிகளில்
அமரும்போதெல்லாம்
என்மனத்தில்
நீ நாற்காலிபோட்டு
அமர்கிறாய்
மெத்தை விரிக்கும்
படுக்கையும் உன்மீதுதான்
படுத்தால் போதும்
படுத்துவிடுகிறது மனமும்
புத்தகங்கள் கோப்புகள்
உடைகள்
தங்கம்வெள்ளி அணிகலன்கள்
இன்னபிற எல்லாம்
இருக்குமிடம்
உன்னிலானது
அலுவலகம் என்றால்
அங்கே அழகுசேர்ப்பது
நீதான்
அவதாரங்கள்
அதிகம் எடுப்பது
ஆண்டவனல்ல
நீதான்
மனிதனுக்குத்தான் மரணம்
மரங்களுக்கில்லை
மனிதர்களின் மரணத்தில்
உடன்கட்டை ஏறுவது
மனைவியல்ல மரம்தான்
நீ
நின்றால் நிழல்
கைவிரித்தால்
காய் கனி
வீழ்ந்தால் அது
வீழ்ச்சியல்ல
நீ எடுப்பது எழுச்சி
அதுதான் விசுபரூபம்
எல்லாவகையிலும்
எல்லாநிலையிலும்
நீ எங்களுக்காகவே
வாழ்கிறாய்
ஒன்றுக்கும் உதவாதவர்கள்
உங்களில் ஒருவருமில்லை
எந்தக்கோணத்தில்
பார்த்தாலும்
ஒரு கோணலுமில்லாத
உன்னதம் நீ
நெருப்பு தீண்டாதவரை
நீ நீதான்
( தமிழ்வள்ளல் நாகை தங்கராசு அவர்களுடன் 04.10.2013 நாள் நிவன் சாலை பர்னிச்சர் கடையில் நுழையும்போது தோன்றியது)
படத்திற்கு நன்றி: