வலியில்லா வகுப்பறைக்குள் சிறிது நேரம்…..

0
எஸ் வி வேணுகோபாலன் 

நேற்று பிற்பகல் தாம்பரத்திலிருந்து புறப்படுகையில் வெக்கையான தட்பவெப்பம். என் மேல் உட்காருவோயோ என்று கேட்டது பேருந்தின் இருக்கைச் சூடு. கொஞ்சம் கண் அசந்தேன் ஒரகடம் கடக்கையில்… ஆனாலுமென்ன, பல்லாண்டுகள் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய பாட்டனாரின் நினைவு அவர் வாழ்ந்த வாலாஜாபாத் வருகையில் உசுப்பி எழுப்பிவிட்டது. காஞ்சிபுரம் சேரவும், நண்பர் மோகன் காத்திருந்து, முகாம் நடக்கும் கீழம்பி கிராமத்திற்கு இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார். ஆஹா….இரு புறமும் அடர்ந்த மரங்கள் வரவேற்ற நெடுஞ்சாலையில் குளிர் காற்று இதப் படுத்தி கொடுத்தது உள்ளத்தையும் உடலையும். அத்தனை வெக்கை தேவைப்பட்டது, அந்தத் தண்மையைப் பாராட்டுவதற்கு….வாழ்க்கையின் சூட்சுமங்களில் இதுவுமொன்றோ என் எண்ணியவாறு AJS திருமண மண்டபத்தில் போய் இறங்கினோம்…

75 மாணவர்கள் முந்தைய வகுப்பு முடிந்த பின்புலத்தில் இளைப்பாறிக் கொண்டிருந்தனர். அவர்களுக்காக சுண்டலும், தேநீரும் உள்ளே பரபரத்துக் கொண்டிருந்தது. எட்டாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் சிறுவர், சிறுமியர் உற்சாகத்தோடு பரஸ்பரம் உரத்த குரலில் பரஸ்பரம் அன்பு பரிமாறிக் கொண்டிருந்த காட்சி, இராணுவ சட்ட திட்டங்களோடு அணிவகுப்பு போல முரட்டுத் தனமாக நடக்கும் பல வகுப்பறைகளை ஒப்பீடாகக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது. காற்றும் வெளிச்சமும் நமது வகுப்பறைகளுக்குள் எப்போது கிடைக்கும்…..

மாணவரும் சமுதாயக் கடமையும் என்ற பொருளில் அவர்களோடு கலந்துரையாட நான் அழைக்கப் பட்டிருந்தேன் என்றாலும், வேர்கள் அறக்கட்டளை அமைப்பின் தோழர் நளினி (வங்கி அதிகாரி, பெங்களூரு) மாணவர்களோடு அன்பாகக் கலந்து பழகி சில பரிமாற்றங்களைச் செய்யும் நோக்கிற்காகவே தொடர்ந்து அழைத்துக் கொண்டிருக்கிறார். என்ன பேச என்று அவரிடம் கேட்டபோது வழக்கம்போல் சிரித்துக் கொண்டார்….

முகாம் தொடர்பான வெளியீட்டைப் பார்த்தால், அவர்களது முயற்சியைப் புரிந்து கொள்ள இயலும். ஏற்கெனவே என்னென்ன வகுப்புகள், யார் யார் வந்து என்னென்ன நிகழ்த்திச் சென்றிருந்தனர் என்பதைக் கேட்டுக் கொண்டேன். அருமையான வாசிப்பு அமர்வு நேற்று காலையில் தொடங்கி இருக்கிறது. அறிவியல் இயக்கத் தோழர் பால சரவணன் அற்புதமான வாசிப்பு ஊக்குவிப்பாளர். அவர் பேசப் பேச விரிந்த விழிகளோடு கதைகளைக் கேட்டுக் கொண்ட பிறகு அவர்களாக குழுக்களாகப் பிரிந்து வாசித்த போது அந்தக் குழந்தைகள் அடைந்த இன்பம் விவரிப்பிற்கு அப்பாற்பட்டது என்பதை நளினி சொல்லச் சொல்லப் புரிந்து மகிழ்ந்தேன்….பின்னர் தங்களது வாசிப்பு அனுபவத்தைப் பேச்சாகவும், ஒரு குழு நாடகமாகவும் கூட வெளிப்படுத்திய திறம், சாதாரண ஏழைத் தொழிலாளர் குடும்பத்துப் பிள்ளைகளின் படைப்புத் திறனையும், பேரார்வத்தையும், நம்பிக்கையையும் ஊட்டியது. கல்வியின் அரசியல் என்ற பொருளில் பேசுகையில், புதுவை கல்வியாளர் தோழர் ஜே கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டதை நான் நளினிக்குச் சொன்னபோது, இந்த முகாம் செயல் திட்ட உருவாக்கத்தில் ஜே கே பங்கு அளப்பரியது என்று அவர் மறுமொழி அளித்தார்.

அரங்கிற்கு வெளியே காற்றோட்டமான வெளியில் எங்கள் வகுப்பை அமைத்துக் கொண்டோம். மணி ஐந்தரை. ஏழு வரை நடத்த அனுமதிக்கப் பட்டிருந்தேன். ஆறரைக்கு ஒரு கட்டத்தில் நிறைவாக அமைகையில் முடித்துக் கொண்டது எனக்கும் பிடித்திருந்தது. மாணவர்களுக்கும் அத்தனை வரவேற்போடு சொந்தமாக்கிக் கொள்ள முடிந்தது கூடுதல் மகிழ்ச்சி.

என்னை அறிமுகப்படுத்திவிட்டு சுந்தர் என்ற அன்பர், வகுப்பை எப்படி கேட்க வேண்டும் என்ற கேள்வி போட்டார்….ஒரே குரலில் எல்லோரும் அமைதியாக என்றனர். இது போதாதா, எனது உரையாடலை அங்கிருந்து தொடங்கினேன். உள்ளபடியே அமைதியாக, கட்டுச் செட்டாக, இங்கே அங்கே பார்க்காமல் வகுப்பைக் கேட்க நினைப்பவர்கள் மட்டும் கை உயர்த்தக் கேட்ட போது, ஒரே ஒரு மாணவர் தவிர மற்றவர்கள் கை உயர்த்தினர். உண்மை பேசிய அந்த ஒரே ஒரு மாணவரது பெயரைச் சொல்லக் கேட்டு அவரை மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொன்னேன். வகுப்பறையின் அமைதி என்றால் என்ன புரிந்து கொள்கிறோம் என்ற இடத்திலிருந்து வகுப்பு சற்று நகர்ந்து, காலை வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள யாராவது முன்வரக் கேட்டுக் கொண்டேன். ஒரு மாணவி தனக்குப் பிடித்த நூல் குறித்துச் சுருக்கமாகச் சொன்னார். நாம் யாரையும் ஏமாற்றக் கூடாது என்ற கருத்து. அவரை வகுப்பு பாராட்டியது.

நாம் யார் யாரை ஏமாற்றுகிறோம், நம்மை யார் யாரெல்லாம் ஏமாற்றுகின்றனர் என்று அடுத்த கட்டத்திற்குள் வகுப்பு நுழைந்தது. நம்மைச் சிதறி இருக்கிற எல்லாரும் ஏமாத்தறாங்க சார் என்றார் ஒருவர். அப்பா அம்மா கூடத் தான் ஏமாத்தறாங்க என்றது ஒரு குரல். பொய் சொல்றாங்க சார். ஞானக் கூத்தனின் அம்மாவின் பொய்கள் கவிதையிலிருந்து ஒரு வரியை நினைவு கூர்ந்தேன்:

ஒரு முறத் தவிட்டுக்காக வாங்கினேன் உன்னை என்றாய்…
எத்தனை பொய்கள் அம்மா, எத்தனை பொய்கள் சொன்னாய்..;

அம்மா அப்பா பொய்களின் பின்னணியில் கொஞ்சம் நீந்தினோம். எந்தப் பருவத்தில் எதைச் சொல்வது, எப்படி சொல்வது என்ற விஷயங்கள் மீதான பரப்பில் சிறிது நடந்தோம். அன்பும், கரிசனமும், இயலாமையும், சூழ்நிலையும் உருவாக்கும் பொய்களுக்கும், ஏமாற்றுத் தனத்திற்கும் இடையே இருந்த பள்ளத்தை மேலிருந்து உற்றுப் பார்க்க இலேசாக பழகிக் கொண்டது வகுப்பு.

அப்புறம் சமுதாயக் கடமைக்கு அங்கிருந்து ஒரே எட்டில் நகரும் பாலம் அதில் தட்டுப்படவே, தனி நபர் பொறுப்புகளுக்கும், சமூக அக்கறைக்கும் ஒரே எடுத்துக்காட்டில் நின்று கொண்டோம். ரேஷன் கடையில் பொருள் வாங்க மாதாமாதம் போய் நிற்பவரும், அங்கே பொருள்கள் முறையாகவும், அளவு திருத்தமாகவும், சீராக எல்லோருக்குமாகவும் கிடைக்காவிட்டால் கேள்வி கேட்பவரும் ஒரே கியூவில் நிற்பதை நாங்கள் கண்டோம். முன்னவர் கிடைத்தால் வாங்குபவர். இல்லாவிட்டால் முணுமுணுப்போடு வெளியேறுபவர். பின்னவர் குரல் கொடுப்பவர். மக்களிடையே போய்ப் பேசித் திரட்டுபவர். பொருள்கைக் கிடைக்க வழி செய்பவர். முன்னவர் தலைவிதி மீது பழி போடுபவர். இரண்டாமவர் விதியை மாற்றும் சூத்திரம் தேடுபவர். விதியா, சதியா என்று விளக்குபவர்.

அப்புறம் ஏற்றத் தாழ்வுகளை அடையாளப் படுத்தும் பட்டியலில் குழந்தைகள் முதலில் சாதியைச் சொன்னார்கள். ஊர் ஒரே ஊர் தானா, ஊரும் சேரியும் இரண்டா என்ற கேள்வியில் சிக்கிக் கொண்டது வகுப்பு. வேறுபாடுகளின் அரசியலை பட்டவர்த்தனமாக இல்லாமல், ஆனால் பளீர் என்று வெளிப்படுமாறு பேசிக் கொண்டது வகுப்பு. அடுத்த இடத்தில் பாலின வேற்றுமையை முன் வைத்தோம்.

மிகச் சுருக்கமான விவரங்களை அடுக்கும்போதே ஒரு குரல் கண்டெடுத்து, மலாலா என்று உரக்கக் கூவியது. மலாலாவின் போராட்டத்திற்கு, வகுப்பு எழுந்து நின்று ஆரவாரக் கையொலி எழுப்பி சிறப்பு செய்தது. பெண் கல்விக்குக் குரல் கொடுப்பது சமுதாயக் கடமை என்ற அவரது எடுத்துக் காட்டு தவிர, வேறு சில நடைமுறை சாதனைகள் சொல்லவும், ஒரே ஒரு மாணவர் தவிர (சமத்துவம் என்பது எனக்குப் பிடிக்கல சார்…ஒத்துக்க முடியாது !) அனைவரும் பாலின சமத்துவம் குறித்த முடிவுக்கு வந்தனர். உண்மையை மனம் திறந்து சொன்ன அவரையும் வகுப்பு பாராட்டியது. அவரிடம் தொடர்ந்து பேசுவோம் என்று சொன்னேன்.

மாணவர்களால் என்ன சமுதாயக் கடமை ஆற்ற முடியும் என்பதற்கு ஒரு நாவலைத் துணைக்கழைத்துக் கொண்டோம்….அதற்கு வகுப்பறை தான் படியமைத்தது….அவர்கள் தான், என் எஸ் சி .சேரலாம்..என் எஸ் எஸ் சேரலாம் என்றனர். ஏன் சாரணர் வகுப்பை விட்டீர்கள் என்று கேட்டபோது, ஆயிஷா நடராசன் அவர்களது வித்தியாசமான நாவல் “நாகா” பற்றிப் பேச வாய்ப்பு அமைந்தது. சாரணர் பயிற்சியின் வேர்கள் குறித்தும், அதன் பன்முகச் சிறப்பையும், கடலூர் வரலாற்றோடு பிணைத்து, சுனாமி வந்த பின்புலத்தில் சாரணர் இயக்க செயல்வீரர் – மாணவர் நாகா உயிர் காக்கும் உன்னதப் பணியில் இறங்கியதைப் பேசும் அந்த புனைவு நூலை வாசிக்கப் பரிந்துரை செய்யப்பட்டது.

கல்வி உரிமைக்குப் போனது விவாதம். வினோத் ரெயினா குறித்த மிகச் சுருக்க அறிமுகம், கல்வி உரிமைச் சட்டம் கொண்டுவர அவர் ஏற்படுத்திய நிர்ப்பந்தம், நாடாளுமன்ற முற்றுகை விவரங்கள். அவருக்கு உள்ளார்ந்த நன்றி பாராட்டுதலை மிக உரக்கச் செய்தது வகுப்பு.

ஆனால் நடைமுறையில் எத்தனை பாராத் தன்மை. நிதி இல்லை என்ற சாக்கு. அங்கே ஒரு சின்ன கணக்கு போட்டுப் பார்த்தது மாணவர் உள்ளங்கள். தோழர் சீத்தாராம் யெச்சூரி கூட்டங்களில் சொல்லும் கணக்கு அது. எல்லோர்க்கும் கல்வி தர என்னென்ன தேவை என்ற பட்டியலை மாணவர் குறுக்கும் நெடுக்குமாய் சொன்னதைத் தொகுத்தோம். (சார் முதலில் பள்ளிக்கூடக் கட்டிடம் வேணும் சார்….). பள்ளிக்கூடம், ஆசிரியர்கள், கரும்பலகை, சாக்குக்கட்டிகள், தண்ணீர், இருக்கைகள்….என்று வளர்ந்த தேவைகளுக்கு ஆகும் செலவு குறித்த புள்ளி விவரங்கள் தொகுப்பாகச் சொல்லப்பட்டது. கையில் காசு இல்லை என்கிற அரசு, ஐந்தாண்டுகளுக்கு ஆகும் செலவினத்திற்கான அளவு ஊழல்களை (கோப்புகளே காணோம், என்ன வழக்கு அது? சார் நிலக்கரி ஊழல் சார்….என்றது ஒரு குரல்) நடத்தும் பேர்வழிகள் நமக்கு கல்வி மறுக்கின்றனர் என்பதைப் புரிந்து கொண்டது வகுப்பு. ஊழல்களை யார் தட்டிக் கேட்கிறார்களோ, அவர்கள் நமக்கான கல்வி மறுக்கப்பட்டதற்குக் குரல் கொடுக்கின்றனர். சாலை கேட்கின்றனர். விளக்குகள் எங்கே என்று கேட்கின்றனர்.

அப்புறம் அம்மா வாட்டர் பத்து ரூபாய் என்று ஒரு குரல் கேட்டது. கொடுக்க வேண்டியவர்கள் காசுக்குத் தண்ணீர் விற்று எப்படி அம்மா புண்ணியவதி என்ற பெயர் எடுக்க முடிகிறது….ஏனென்றால் வெளியே தண்ணீர் இருபது ரூபாய்க்கு விற்கிறது. தண்ணீர் இனி இலவசம் கிடையாது என்று பேசுகிறார். செங்கல்பட்டு பாலூர் அருகே பல்லாயிரம் அடி ஆழ்துளை போட்டு லிட்டர் தண்ணீர் நாலணா கணக்கில் தண்ணீர் எடுக்கும் பன்னாட்டுக் கம்பெனிகள் கொள்ளைக் காசுக்குத் தண்ணீர் விற்கின்றன. சத்தீஷ்கரில் ஆற்றையே விலை பேசி விகிறது ஓர் அரசு.

மறைந்த கவிஞர் வாலியின், கொடுத்தெல்லாம் கொடுத்தான், அவன், யாருக்காகக் கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான் என்ற வகுப்பு முழுக்கப் பாடியது. பஞ்ச பூதங்களை, அதைவிடப் பெரிய பூதங்கள் எப்படி கட்டி ஆளப் பார்க்கின்றன என்பதை வேடிக்கையாகவும், வேதனையோடும் அசை போட்டது வகுப்பு. சமுதாய நலன் என்ன என்பதன் முகவரிகள் அங்கும் நிறைய தட்டுப் பட்டன.

நம்மை எல்லோரும் ஏமாற்றுகின்றனர், சுற்றி முற்றி நிறைய பொய்கள் என்று ஒலித்த முதல் குரலுக்கு மெல்லத் திரும்பியது வகுப்பு. இப்போது மூட நம்பிக்கைகள், போலி சாமியார், மத உணர்விலிருந்து செலுத்தப்படும் ஆதிக்கம், அதன் மேல் கட்டுமானமாகிய அடக்குமுறை,ஒடுக்குமுறை இவற்றைக் கொஞ்சம் வேகமாகத் தான் கடந்தது வகுப்பு. ஆனால் ஆழ்ந்த கவனத்தோடு.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தெரியுமா என்ற கேள்விக்கு ஒன்றோடு பலவாய் உற்சாகமாக மோதிய ,குரல்களில் ஒன்று, வேப்ப மர உச்சியில் பாட்டைக் கூடவே இசைத்தது. பின்னர் அந்த மாணவர் எழுந்து நின்று அந்த வரிகளை அவராக பாடவும் .செய்தார்..

வேப்பமர உச்சியின் நிண்ணு
பேயொண்ணு ஆடுதுண்ணு
வெளையாடப் போகும்போது
சொல்லி வெப்பாங்க – உன்
வீரத்தைக் கொழுந்திலேயே
கிள்ளி வெப்பாங்க

வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே – நீ
வீட்டுக்குளே பயந்து கிடந்து
வெம்பி விடாதே…நீ வெம்பி விடாதே

அது மட்டுமல்ல…..மூட நம்பிக்கையை எதிர்த்த இயக்கத்தில் அண்மையில் ஓர் அருமையான மனிதரை என்ன செய்தார்கள் தெரியுமா என்று கேட்டபோது, அந்த மிக எளிய சிறுவர்கள் வகுப்பு ஆசிரியருக்கு உன்னதமான அதிர்ச்சியை ஏற்படுத்திய இடம் அது. ஆமாம்….டாக்டர் நரேந்திர தபோல்கர் படுகொலை குறித்து அவர்களுக்குத் தெரிந்திருந்தது. (எங்கள் எளிய தோழனே, சமூக வீரனே, உனது மேலான பணியும், உயிர் தியாகமும் வீணாகவில்லை தபோல்கர் அய்யா !). அவரது அற்புதமான வாழ்க்கைப் போராட்டத்திற்கு உணர்ச்சிகர கரவொலி பரிசாக்கப்பட்டது. மூட நம்பிக்கையை ஒழிக்கக் குரல் கொடுப்பது, பகுத்தறிவு பரப்புவது, மேலாதிக்கத்தைக் கேள்விக்கு உட்படுத்துவது எல்லாமே சமுதாயக் கடமை என்று வகுப்பு ஆமோதித்தது.

சாதி, இன, மொழி, இருப்பவர், இல்லாதவர்…உள்ளிட்ட வேறுபாடுகள், முரண்பாடுகள், மறுப்புகள், இவற்றை மாற்றி எல்லோருக்குமான அன்பு தழைக்கும் உலகை நோக்கிய சிந்தனை, அதற்கான வாசிப்பு, அதை நோக்கிய சில எளிய செயல்பாடுகள், அப்படியானவர்கள் போராட்டங்களைப் புரிந்து கொள்ளுதல் இவை குறித்த தொகுப்பு சொற்களோடு வகுப்பு நிறைவை எட்டியது, ஒரு கோரிக்கையோடு. ஒரு நினைவுகூரலுக்கானது

நரேந்திர தபோல்கர் – வினோத் ரெயினா இருவருக்காகவும் நாங்கள் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தினோம்.

பின்னர், முகாம் தொடர்பான வெளியீட்டை என் கைகள் மூலம் மாணவர்களுக்குச் சேர்த்தனர் அறக்கட்டளை அன்பர்கள். எனக்கு ஓர் இனிய பரிசு காத்திருந்தது. யாருடைய வகுப்பறை என்ற அற்புதமான நூல். நடராசன் எழுதிய அந்த நூலை வாசித்தீர்களா என்று முந்தைய நாள் தான் சிவசெந்தில்நாதன் கேட்டார்….அது என் கைகளுக்கு வந்து சேர்ந்தது எத்தனை சுவையான தருணம்.

மூன்று நான்கு பேர் தங்களது கையேட்டில் எனது கையெழுத்து போடச் சொல்லிக் கேட்டதும் நான் எச்சரிக்கை கொண்டு தனியே அழைத்துப் போட்டுக் கொடுத்துவிட்டு வேறு யாருக்கும் கலகம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்.

ஆனால் ஒரு மாணவரிடமிருந்து தப்ப முடியவில்லை. அவர் தான் வகுப்பு நெடுக சுவாரசிய குறும்புகளை இடை விடாது செய்து கொண்டிருந்தவர். அனாயாசமாக கேள்விகளுக்குத் தனது இஷ்டப் போக்கில் பதிலாக்கி மகிழ்ந்தவர். (சும்மா கில்லி மாதிரி அடிக்கணும் சார் என்பது அவரது பதில்களில் ஒன்று. அதற்கும் கைத் தட்டல் பரிசளித்திருந்தது வகுப்பு). உங்களுக்கு ஒரு சிறப்பு வணக்கம் போட்டுக்கிறேன் சார் என்று, சிலம்பாட்டக்காரர்கள் பாணியில் உடலை நெளித்து இடது கையால் அவர் வைத்த வணக்கம் என்னை மேலும் இளக்கியது.

அவரும் கையெழுத்து கேட்டு நீட்டினார்….எந்தப் புத்தகமும் அற்ற தனது உள்ளங்கையை !

அதில் தான் எனது கையெழுத்தை ஒரு முத்தம் போடுவது போன்ற பரவசத்தோடு போட்டுவிட்டு விடைபெற்றேன்……பிரியாவிடையாக !

*************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *