அருங்காட்சியகம் ஓர் அறிவுக் அருவூலம் – 9

2

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் அருவூலம் – ஊட்ஸி அருங்காட்சியகம், போல்ஸானோ, இத்தாலி.

சுபாஷிணி ட்ரெம்மல்

1991ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ம் நாள். மதியம் 1.30 நற்பகல். ஜெர்மனியின் தென்கிழக்கு நகரான நுர்ன்பெர்க்கை சேர்ந்த எரிக்கா சிமோன், அவர் கணவர் ஹெல்முட் சிமோன் இருவரும் இத்தாலி நகரின் ஊட்ஸ் பள்ளத்தாக்குப் பகுதியில் தங்கள் மலையேறும் கருவிகளுடன் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் நடந்து கொண்டிருந்தனர். இவர்களது இப்பயணம் வரலாற்றில் முக்கியத்துவம் பெறப்போகும் ஒரு பயணமாக அமையப் போகிறது என அவர்கள் கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள். இவர்கள் இருவரும் சுற்றுலாவை முன்னிட்டு தங்கள் ஓய்வு நேரத்தை மலைப்பகுதியில் நடந்து ஆல்ப்ஸ் மலையின் அழகை ரசித்துக் கொண்டே இயற்கையை மேலும் அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டு இங்கு பயணித்தவர்கள். ஆல்ப்ஸ் மலையின் திசெஞ்ஞோ (Tisenjoch) மலையில், கடல் பரப்பிலிருந்து 3210 அடி உயரத்தில் அவர்கள் நடந்து கொண்டிருக்கும் போது அவர்கள் கண்களில் ஒரு பொருள் தென்பட்டது. பனிப்பாறைப் பகுதியான அங்கே ஒரு பகுதியில் பனி கறைந்து நீர் நிலை தென்பட அந்த சிறு குளம் போன்று தெரிந்த குழியில் இருந்த ஒரு பொருள் அவர்கள் கவனத்தை ஈர்த்தது. முதலில் குப்பை மூட்டையாக இருக்குமோ என நினைத்த அவர்கள் அருகில் சென்று பார்த்த போது அது ஒரு மனித சடலம் என்பதை அறிந்த போது அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

அச்சடலத்தின் பின்னுடல் பகுதி, தலைமுழுவதும் முதுகுப் பகுதி மட்டும் வெளியே தெரிய கீழ் பகுதி பனிப்பாறைக்குள் பாதி மூழ்கிய வண்ணம் இவர்கள் கண்களில் தென்பட்டது.

ஊட்ஸி - சிமோன் தம்பதியர் எடுத்த முதல் படம்
ஊட்ஸி – சிமோன் தம்பதியர் எடுத்த முதல் படம்

அங்கிருந்து செல்வதற்கு முன்னர் அவர்கள் அச்சடலத்தைப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மலையில் தங்களைப் போல நடக்க வந்த ஒரு இயற்கை விரும்பியோ சுற்றுப்பயணியோ இங்கு தவறி விழுந்து இறந்து போய் உறைந்து கிடக்கின்றாரோ என் அவர்கள் சிந்தனையில் எண்ணம் எழும்பியது. அப்போது கூட அவர்கள் இச்சடலம் சில வாரங்களில் உலகப்புகழ் பெறப்போகும் ஒன்று என்றோ தங்கள் பெயரை இந்தச் சடலத்தின் பெயரோடு மக்கள் நினைத்துப் பார்ப்பார்கள் என்றோ சிறிதும் நினைக்கவில்லை.

இச்சடலத்தைத் தாங்கள் பார்த்த செய்தியை அவர்கள் காவல்துறையிடம் தெரிவிக்க முதலில் ஒரு ஆஸ்திரிய மலையேறிகள் பாதுகாப்புக் குழு மறுநாள் 20ம் தேதி இப்பகுதிக்கு விரைந்தது. இத்தாலியின் போல்ஸானோ ஆஸ்திரியாவின் எல்லை நகரம். ஆக மலைப்பகுதி இருந்த இடம் ஆஸ்திரிய எல்லை என்பதால் முதலில் இப்பணியை இக்குழு தொடங்கியது. அன்றைய நாள் பனி அதிகமாகிவிட, இக்குழுவினரால் சடலத்தை நீரை உருக்கி வெளியே எடுக்க முடியவில்லை. இந்த முயற்சியில் சடலத்தின் இடுப்புப் பகுதியில் சேதம் ஏற்பட்டு விடவே முயற்சியை இவர்கள் கைவிட்டனர்.

மறு நாள் 21ம் தேதி இப்பகுதிக்குச் செல்ல ஹெலிகாப்டர்கள் கிடைக்கவில்லை. ஆனால் உலகப் புகழ்பெற்ற மலையேறும் பிரபலங்களான ஹான்ஸ் காமர்லாண்டரும் ரைன்ஹோல்ட் மெஸ்னரும் இப்பகுதிக்கு விரைந்து வந்து இந்த மனித சடலத்தின் மேல் ஆங்காங்கே தென்பட்ட உடை கருவிகள் ஆகியவற்றை கண்ணுற்றனர்.

ஹான்ஸ் காமர்லாண்டரும் ரைன்ஹோல்ட் மெஸ்னரும்
ஹான்ஸ் காமர்லாண்டரும் ரைன்ஹோல்ட் மெஸ்னரும்

மறு நாள் 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, பாதுகாப்பு அதிகாரி அலோஸ் பிர்ப்பாமர் தனது குழுவினருடன் இங்கு சென்று இச்சடலத்தை மீட்க முயற்சித்தார். பனி மிக இறுகிப் போயிருந்தமையால் சடலத்தை பனிக்குளத்திலிருந்து வெளியே எடுக்க முடியவில்லை. ஆக, இச்சடலத்தின் அருகில் கிடைத்த அனைத்து பொருட்களை மட்டும் ஒரு குப்பை எடுக்கும் ப்ளாஸ்டிக் பையில் நுழைத்து பத்திரப்படுத்தி தனது தோளில் தூக்கிக் கொண்டு ஹோட்டலுக்குச் சென்றார். மறு நாள் மீண்டும் இச்சடலத்தை எடுக்கும் பணி தொடர்ந்தது.

23ம் தேதி திங்கட்கிழமை வானிலையும் ஓரளவு சீதோஷ்ணமும் ஒத்துழைக்க பனியிலிருந்து இச்சடலம் மீட்கப்பட்டது. அன்று இன்ஸ்பூர்க் பல்கலைக்கழக மருத்துவத் துறையைச் சார்ந்த திரு.ரைனார் ஹென் அவர்களின் மேற்பார்வையில் இந்த சடலத்தை மலைப்பகுதியிலிருந்து மீட்டெடுத்தனர். இந்த மீட்புப் பணி முழுமையாக கேமராவில் பதிந்து வைக்கப்பட்டது. இந்த மீட்புப் பணியின் போது தொல்லியல் அறிஞர்கள் உடன்வரவில்லை. இதற்கு முக்கியக்காரணம் அதுவரை இம்மனிதன் யாரோ விழுந்து இறந்த சுற்றுப்பயணி என்ற சிந்தனையே அனைவர் எண்ணத்திலும் ஓடிக் கொண்டிருந்தது. பனியிலிருந்து இந்த மனித சடலத்தை வெளியே எடுத்தபோது அம்மனித உடலில் ஒட்டியிருந்த ஆடைகள் அவரோடிருந்த தோலினால் செய்யப்பட்ட கருவிகளின் பகுதிகள் அனைத்தும் சிதைந்தும் பாதியுமாகக் கிடைத்தன. இந்த மனித சடலத்தை எடுத்துக் கொண்டு ஆஸ்திரிய ஊட்ஸ் பள்ளத்தாக்குக்கு இந்தக் குழு விரைந்தது. சட்ட ஆலோசகரின் ஆணைப்படி இந்த மனித சடலமும் ஏனைய பொருட்களும் இன்ஸ்ப்ருக் பல்கலைக்கழக மருத்துவத்துறையில் ஆயவகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

இந்த சடலம் கண்டெடுக்கப்பட்ட ஆறு நாட்களுக்குள் இம்மனிதன் இந்த நூற்றாண்டைச் சேர்ந்தவரல்ல என்பது உறுதியாகிவிட இது பல்கலைக்கழக மருத்துவத்துறையினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பின்னர் இன்ஸ்ப்ரூக் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை ஆய்வு செய்வது தகும் என முடிவாக தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் கோன்ராட் ஸ்பிண்ட்லெர் இச்சடலத்தை ஆய்வு செய்யத் தொடங்கினார். அவரது ஆய்வு இச்சடலம் குறைந்தது 4000 ஆண்டுகள் பழமையானது என்று காட்டி ஆய்வுத்துறையினரை ஆச்சிரியத்தில் மூழ்கடித்தது. இந்த மனித சடலத்தைப் போல இதுவரை நன்கு உடையணிந்த, கருவிகளுடனான வேறெந்த சடலமும் இதுவரை உலகில் எங்கும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இச்சடலத்தை C-14 கார்பன் டேட்டிங் ஆய்வு முறைக்கு உட்படுத்தி இன்ஸ்ப்ருக் பல்கலைக்கழக தொல்லியல் ஆய்வகம் தவிர்த்து வெவ்வேறு நான்கு ஆய்வகங்கள் ஆய்வு செய்தன. இந்த ஆய்வுகளின் கணக்குப்படி இந்த மனிதன் கி.மு 3350 முதல் 3100 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்த மனிதன் என்பது, அதாவது இன்றைக்கு ஏறக்குறைய 5500 ஆண்டுகள் முன் வாழ்ந்த மனிதன் என்பது புலனாகியது. இச்செய்தி உலகம் முழுவதும் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது.

ஊட்ஸி என இம்மனித சடலத்திற்கு முதலில் பெயரிட்டவர் கார்ல் வெண்டி என்ற ஒரு செய்தியாளர். ஊட்ஸ் பள்ளத்தாக்குப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மனிதனாகையால் அப்பகுதிப்பெயரை தொடர்புபடுத்தி தனது செய்திகளில் இச்சடலத்தை ஊட்ஸி என பெயரிட்டு இவ்வாய்வுகள் தொடர்பான விஷயங்களை எழுதி வந்தார். இப்பகுதி ஊராட்சி மன்றத்தின் சட்டக்குறிப்புப்படி இச்சடலத்திற்கு முதலில் வழங்கப்பட்டதும் அதிகாரப்பூர்வமான பெயரும் “Der Mann aus dem Eis” – “L’Uomo venuto dal ghiaccio” அதாவது பனியிலிருந்து தோன்றிய மனிதன் என்பதாகும். அது வழக்கில் இன்று இல்லை. ஊட்ஸி என்ற பெயரே இவருக்கு நிலைத்து விட்டது.

ஊட்ஸி கண்டெடுக்கப்பட்ட இடம் - வரைபடத்தில்
ஊட்ஸி கண்டெடுக்கப்பட்ட இடம் – வரைபடத்தில்

ஆஸ்திரிய ஊட்ஸ் பள்ளத்தாக்குப் பகுதியில் தேடுதல் முயற்சிகள் தொடங்கி ஆஸ்திரிய இன்ஸ்ப்ரூக் பல்கலைக்கழகத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் எப்படி ஊட்ஸி இத்தாலியின் போல்ஸானோ பகுதிக்கு வந்து இத்தாலிக்குச் சொந்தமானார் என்பது ஒரு முக்கிய விஷயம். இந்த ஊட்ஸி மம்மி கண்டெடுக்கப்பட்ட சில நாட்களில் இச்செய்தி பரவ, இது இத்தாலிக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒன்று என அறிந்த பின் எல்லைக்கோட்டினை மீள்பார்வை செய்யும் முயற்சியில் இரண்டு நாடுகளுமே இறங்கின. 1919ம் ஆண்டு செய்து கொண்ட செயிண்ட் ஜெர்மானான் எல்லை ஒப்பந்தத்தின் படி (St. Germain-en-Laye) எல்லைக்கோடு இன்-எட்ச் (Inn-Etsch) பள்ளத்தாக்கு நீரெல்லை ஓரத்தினதாக அமைந்திருக்கின்றது. திசெஞ்ஞோ (Tisenjoch) மலைப்பகுதியிலோ எல்லைக்கோடு சரியாகத் குறிப்பிடும் வகையில் அமையவில்லை. ஆக, அக்டோபர் மாதம் 2ம் தேதி மீண்டும் ஒரு நில அளவைப் பணி இங்கு மேற்கொள்ளப்பட்டது. இதன்படி ஊட்ஸி கண்டெடுக்கப்பட்ட பகுதி ஆஸ்திரிய தெற்கு எல்லையிலிருந்து 92.56மீ தூரம் கீழே இத்தாலியில் இருப்பதால் ஊட்ஸி இத்தாலிக்குச் சொந்தம் என அதிகாரப்பூர்வமாக முடிவாகியது.

இத்தாலிக்கு ஊட்ஸி சொந்தமென்று ஆகிய பின்னரும் தொடர்ந்து ஆய்வுகள் அனைத்துமே இன்ஸ்ப்ரூக் பல்கலைக்கழகத்திலேயே தடைகளின்றி மேற்கொள்ளப்பட்டன. ஊட்ஸியின் உடல் முழுமையும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அவர் அணிந்திருந்த ஆடையின் பகுதிகளும் கருவிகளும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. ஆய்வு முடிவுகள் அனைத்தும் ஒவ்வொன்றாகக் கிடைக்க ஊட்ஸியையும் இவ்வாய்வினையும் பொதுமக்கள் காணும் பொருட்டு ஒரு அருங்காட்சியகம் தேவை என முடிவாக இத்தாலியின் போல்ஸானோ நகரில் ஊட்ஸிக்கு ஒரு அருங்காட்சியகம் அமைந்தது.

ஊட்ஸி தொல்லியல் அருங்காட்சியகம் (மே 2013)
ஊட்ஸி தொல்லியல் அருங்காட்சியகம் (மே 2013)

இவ்வாண்டு (2013) மேமாதம் நான் இந்த அருங்காட்சியகம் சென்றிருந்த போது நேரில் பார்த்து எழுதிக் கொண்டு வந்த குறிப்புகளைத் தொடர்ந்து அடுத்த பதிவில் வழங்குகிறேன். ஆக, ஊட்ஸியைப் பார்க்க அருங்காட்சியகத்தின் உள்ளே செல்வோமா?

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அருங்காட்சியகம் ஓர் அறிவுக் அருவூலம் – 9

  1. சபாஷ் நல்லதொரு தகவல் பரிமாற்றம். வியப்புக்குரிய செய்தி தொடருங்கள்.

  2. அருமை! ஊட்ஸியைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளும் ஆவல் மனதைத் தொற்றிக் கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.