Blog
-
அன்பே அழகானது. – பகுதி 6.
– ராஜ்ப்ரியன்
ஏண்டா ஐஸ்கிரிம் வாங்க போறவன் கூட யாரையாவது அழைச்சி போகலாம்மில்ல.
இல்ல டாடி.
நீ வர வர ரொம்ப மோசமா நடந்துக்கற ரஞ்சித் என கோபமாக சொன்னதும் அமைதியாக வந்தான்.
பாஸ் தப்பு ரேவதி மேல. நீங்க ஏன் குட்டி பையனை திட்டறிங்க.
ரேவதிக்கிட்ட ஒப்படைச்சிட்டு போனா நீங்க யாரும் அவனை பாத்துக்கமாட்டிங்களா என கேட்டதும் அதில்ல சார் என ஸ்ரீதர் தலை குனிந்தான். மஞ்சு சோகமாக அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.
கிடைச்சிட்டான்யில்ல விடுடா என்ற பிரபு, ரஞ்சித்தை அழைத்து புதுயிடத்துக்கு வந்தா தனியா போக கூடாது. யாராவது பெரியவங்க ஒருத்தர் துணையோடத்தான் போகனும். இங்கயெல்லாம் நீ தொலைஞ்சி போய்ட்டின்னா உன்ன கண்டு பிடிக்கவே முடியாது. அதனால ஜாக்கிரதையா இருக்கனும் சரியா என்றான்.
சரி அங்கிள்.
ஆமாம் ஐஸ்கிரிம் வாங்க உனக்கேது காசு என நான் கேட்டதும்
அமைதியாக இருந்தான்
கேட்கரன்யில்ல பதில் சொல்லு என கோபமாக கேட்டதும் ட்ரஸ் எடுக்க போனப்ப ஐஸ்கிரிம் வாங்க பணம் தந்திங்களேப்பா அதல மீதி காசு எங்கிட்ட இருந்துச்சி அதலதான் வாங்கனன்.
உனக்கு காசு தர்றது தப்பா போச்சி.
சின்னப்பையன் சொன்னா புரிஞ்சிக்கபோறான். அதவிட்டுட்டு திட்டிக்கிட்டே இருக்கற என பிரபு மீண்டும் சொல்ல அமைதியாக வந்தேன். இரவு 8 மணியளவில் அனைவரும் ஊர் வந்து சேர்ந்தோம்.
வீட்டுக்கு வந்து உள் நுழைந்ததும் என்னடா கோபமா என கேட்டேன்.
அமைதியாக இருந்த ரஞ்சித் எதுவும் சொல்லமால் நி;ன்றான். இந்த வயசுல உங்க பையன் பிர்லியன்டா இருக்கான்னு மத்தவங்க சொல்லும் போது சந்தோஷமா இருக்கு. ஆனா நீ பண்ற வாலு தனத்த தான் பொருத்துக்க முடியல என்றதும். அதற்கும் அமைதியாக இருந்தான். சரி ட்ரஸ் மாத்திக்க டிபன் செய்யறன் சாப்பிடலாம் என்றதும் அமைதியாக பெட்ரூம்குள் நுழைந்தான். நானும் சென்று உடை மாற்றிக்கொண்டு டிபன் செய்ய தொடங்கினேன். தோசை ஊத்தி சட்னி வைத்து தந்ததும் சாப்பிட்டுவிட்டு ரூம்குள் சென்றுவிட்டான். நான் பெட்ரூம்குள் நுழைந்த போது அவன் தூங்கியிருந்தான். அவன் தலையை தடவி தந்தபடி நானும் தூங்கியிருந்தேன்.
காலையில் எழுந்தவன் அவனே குளிக்க சென்றான். என்ன சார் இன்னும் கோபம் போகலயா ?
அதெல்லாம் ஒன்னும்மில்ல.
உன் முகத்த பாரு குரங்கு மாதிரியிருக்கு.
உன் மூஞ்சிதான் எங்கிட்டயிருக்கு என பதில் சொல்ல அவனை முறைப்பது போல பார்த்ததும் பாத்ரூம்குள் ஓடிவிட்டான். குளித்துவிட்டு வெளியே வந்து பள்ளிக்கு கிளம்பியவனின் கழுத்தில் டை கட்டியபடி மெல்லிய குரலில் நீ அவுங்க கூட இல்லன்னதும் நான் எப்படி துடிச்சன் தெரியுமா. அந்த கோபத்தல திட்டிட்டன்டா ஸாரி.
நீங்க சென்னை அழைச்சிம் போகும்போது என்ன சொன்னிங்க.
என்ன சொன்னன்.
பொம்மையெல்லாம் வாங்கி தர்றன்னு சொன்னீங்க. எதுவும் வாங்கி தரல.
மஞ்சுக்கிட்ட நான் தான் வாங்கி தரச்சொன்னனே.
எதுவும் வாங்கி தரலப்பா.
நானும் டென்ஷன்ல மறந்துட்டன். அடுத்தமுறை போறப்ப நிறைய வாங்கி தர்றன்.
ஓ.கே டாடி என தலையாட்டியவன் சந்தோஷத்தில் கன்னத்தில் ஒரு முத்தம் தந்தான். தட்டில் போட்டு வைத்திருந்த மூன்று இட்லியை சாப்பிட்டபோது வெளியே வீட்டு வாசலில் வந்து நின்று ஹாரன் அடித்தது ஆட்டோ. இரு ரஞ்சித் உன்ன நான் ட்ராப் பண்றன்.
வேணாம் டாடி. நான் ஆட்டோவுல போறன். மதியம் லஞ்ச் டாடி. மறந்துட்டன் இரு என சமையல் அறைக்கு சென்று அவனுக்காக வைத்திருந்த டிபன் பாக்ஸ் எடுத்து வந்து தந்தபடி ஐந்து இட்லி வச்சியிருக்கன். மிச்சம் வைக்காம சாப்பிடு என டிபன் பாக்ஸ், வாட்டர் பாட்டிலை தந்ததும் வாங்கிக்கொண்டு வெளியே நின்ற ஆட்டோவில் ஏறிக்கொண்டு சிரித்தபடி டாடா காட்டினான்.
நானும் குளித்துவிட்டு முடித்து சாப்பிட்டுவிட்டு அலுவலம் சென்ற போது வேலைகள் நடந்துக்கொண்டு இருந்தன. ஒரு கம்ப்யூட்டரில் அமர்ந்து பிரபு டிசைன் செய்துக்கொண்டு இருந்தவனை உள்ள வாடா என்றதும் வந்தவன் வீட்ல போயும் அவனை திட்டனியா ?.
இல்லடா. காலையில வரைக்கும் கோபமா இருந்தான். ஸ்கூல் போகும்போது தான் கொஞ்சம் சிரிச்சான்.
அவனுக்கு அம்மா பாசமும், அரவணைப்பும் தேவைடா. ஒரு அப்பா எவ்ளோ பாசத்த காட்டனாலும், அம்மா மாதிரி வராது. அதனால கோபப்படாம நாங்க சொல்றத கொஞ்சம் கேளுடா என்னும் போதே ஃபோன் மணி அடித்தது. மதன் ஃபோனை எடுத்து ஹலோ என்றான்.
எதிர் தரப்பு குரலை கேட்டதும் வணக்கம் சார். நல்லாயிருக்கிங்களா ?
நல்லாயிருக்கனப்பா. நீ எப்படியிருக்கற ?.
நான் நல்லாயிருக்கன் சார்.
செல்போன்க்கு கூப்பிட்டன் எடுக்கல.
பைக்ல ஆபிஸ் வந்துக்கிட்டு இருந்தன் சத்தத்தல கேட்கல சார்.
தலைவர் அடுத்த மாசம் இங்க வர்றாரு.
என்ன சார் திடீர்ன்னு.
மாவட்ட தலைவர் பையன்க்கு கல்யாணம். அதுக்காக வர்றாரு. நாம நல்லா விளம்பரம் செய்யனும்.
செய்துடலாம் சார்.
வாசகம் சொல்றன் குறிச்சிக்கப்பா.
சொல்லுங்க சார் என ஒரு பேப்பர் பேனாவை எடுத்து அவர் சொன்னதை குறிக்க தொடங்கினான். பத்து நிமிடம்மானது. டிசைன் பண்ணி நாளைக்கு ஆபிஸ்க்கு 11 மணிக்கு தந்து அனுப்பறன் சார். கரெக்ஷன் ஏதாவது இருந்து சொன்னிங்கன்னா மாத்தி நாளைக்கு ஈவ்னிங் பைனல் பண்ணிடலாம் சார் என முடித்து ஃபோனை வைக்க 15 நிமிடமானது.
பிரபுவிடம் எல்லாரையும் உள்ள வரச்சொல்லு.
எதுக்கு.
வரச்சொல்லு சொல்றன்.
கண்ணாடி டோரை திறந்த பிரபு, ஆல் ஆபிசர்ஸ் ப்ளீஸ் கம் என்றதும் அடுத்த இரண்டு நிமிடத்தில் எல்லோரும் மதன் முன் அமர்ந்திருந்தனர்.
அடுத்த மாசம் மக்கள் முன்னேற்ற முன்னணி கட்சியோட தலைவர் முக்கிய கட்சிக்காரர் வீட்டு கல்யாணத்துக்கு இங்க வர்றாறாம். இப்பத்தான் டேட் கன்பார்ம்மாச்சாம். அந்த கட்சி மா.செவாயிருக்கற வேலாயுதம் எம்.எல்.ஏ இப்பத்தான் போன் பண்ணி சொன்னாரு. நியூஷ் பேப்பர், பேனர், போஸ்டர்க்கு டிசைன் கேட்டுயிருக்காரு. ரொம்ப நல்லாயிருக்கன்னு தலைவர் நின்னு ரசிக்கற மாதிரி இருக்கனம்ன்னு சொல்றாரு.
செய்து தந்துடலாம் சார் என்றான் பாண்டியன்.
ஆனா நாளைக்கே வேணும்ன்னு கேட்கறாரு.
நாளைக்கா என ரேவதி அதிர்ச்சியாக.
ஆமாம்.
ஸ்கூல், காலேஜ் அட்மிஷன் டைம் சார். வாராவாரம் புது டிசைன்ங்க தந்துக்கிட்டே இருக்கனம்ன்னு சொல்லியிருக்காங்க. நம்மோட ரெகுலர் கஸ்டமர்களோடதே நிறைய பென்டிங் இருக்கு. அதனால இத நாளைக்கே செய்து தர முடியாது சார் இரண்டு நாளாவது ஆகும் சார் என்றாள் ரேவதி.
இவரும் நம்ம ரெகுலர் கஸ்டமர் தான் ரேவதி என்ற நான் கொஞ்சம் யோசித்துவிட்டு
எம்.எல்.ஏவத பாண்டியனும், ரேவதியும் செய்யட்டும். காலேஜ், ஸ்கூல் ஓர்க்குகள பிரபு செய்யட்டும். மஞ்சு நீ கொஞ்சம் அப்படியே இந்த வேலைகளையும் கவனி.
சரியென தலையாட்டிய மஞ்சு. சார் அந்த எம்.எல்.ஏ போனமுறையே ஐந்தாயிரம் பென்டிங் வச்சியிருக்காரு என்றாள் மஞ்சு.
இந்தமுறை வாங்கிடலாம் மஞ்சு. ஸ்ரீதர் எங்க?.
இன்னும் வரல சார்.
பேங்க்ல ஏதாவது ஓர்க் இருக்கா.
செக்குங்க இருக்கு சார் அத அக்கவுண்ட்ல போடனும்.
அத எங்கிட்ட குடு நான் பாத்துக்கறன். ஸ்ரீதர் வந்ததும் எம்.எல்.ஏ விளம்பரத்த டிசைன் பண்ணச்சொல்லு.
சரி சார்.
பாண்டியன் வேலைய பிரிச்சி பாருங்க. நீங்க பேனர் வேலைகள பாருங்க, ரேவதி பேப்பர் விளம்பரத்த டிசைன் பண்ணட்டும், போஸ்டர் விளம்பரத்த ஸ்ரீதர்க்கிட்ட தந்துவிடுங்க. தேதியும், வாசகமும் சொல்லியிருக்காரு. எல்லாத்தலயும் அவர் படமும், கட்சி தலைவர் படமும் தான் போடனுமாம். தம்பதிங்க படத்த தந்துவிட்டுயிருக்காறாம். அதுக்கு இடத்த விட்டுட்டு டிசைன் பண்ணுங்க. சி.டி வந்ததும் படத்த எடுத்து வச்சி ஃபில் பண்ணுங்க.
சரி சார்.
சரி எல்லோரும் போய் வேலைய பாருங்க என்றதும் அனைவரும் எழுந்து சென்றனர்.
பிரபு எனக்கொரு ஐடியா, நாம இதுவரைக்கும் டிசைன் மட்டும் தான் செய்து தந்துக்கிட்டு இருந்தோம். இந்தமுறை அதை பிரிண்ட் செய்து தர ஆர்டரை எடுத்த எப்படியிருக்கும் ?.
என்னடாயிது புதுசா.
ஆமாம் புதுசு தான். வளருனும்டா. எத்தனை வருஷத்துக்கு தான் அப்படியே இருக்கறது. கொஞ்சம் வளருவோம்;டா. நீ ஒருவேளை செய். நல்லா பிரிண்ட் போடறவங்க எங்க எங்க இருக்காங்கன்னு பாரு. ரேட் எவ்ளோன்னு விசாரி நான் இதோ வந்துடறன்.
ஏத்தனை வேலைடா நான் செய்யறது.
சார் நீங்க மேனேஜர் மட்டும்மில்ல பாட்னரும்கிறத ஞாபகத்த வச்சிக்கிட்டு வேலையப்பாரு. நான் வரும் போது பட்டியல் ரெடியா இருக்கட்டும்.
ம்.
ஃபைக் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான் மதன்.
மதியம் 2 மணிக்கு திரும்பி வரும்போது ரிஷப்சனில் அமர்ந்து அனைவரும் அரட்டையடித்துக்கொண்டு இருந்தனர்.
ஏய் என்னப்பாயிது, நிறைய ஓர்க் பென்டிங் இருக்குன்னு காலையில தான் சொன்னிங்க. இப்ப என்னடான்னா எல்லாரும் உக்காந்து கதையடிச்சிக்கிட்டு இருக்கிங்க.
கரண்ட் இல்ல சார்.
நாம தான் யூ.பி.எஸ் போட்டுயிருக்கோம்மே?.
நாம போட்ட யூ.பி.எஸ் நாலு மணி நேரம் தான் வருது. காலையில 9 மணிக்கு போன கரண்ட் இப்பவரை வரல. மதியம்மே பேக்கப் காலியாகி ஒரே ஒரு சிஸ்டம் தான் ஒர்க்காகுது. அதலத்தான் பாண்டியன் சார் வேலை பாத்துக்கிட்டு இருக்காரு என்றான் ஸ்ரீதர்.
காலையில நீ எங்க போன ?
ஓர்க் பாஸ்.
என்ன வேலை பாத்த.
ஃபில் வராம சிலது இருந்தது அத வாங்கிவர போனன் பாஸ்.
வாங்கிட்டியா
நாளைக்கு வரச்சொல்லிட்டாங்க.
ஊர் சுத்த நிறைய காரணத்த வச்சியிருக்க
இல்ல பாஸ்.
பிரபு எங்க ?.
லஞ்ச்க்கு போயிருக்கார் சார்.
அவனை மொபைல் லைனில் பிடித்து சாப்பிட்டியா ?.
ம் என்றவனிடம் வேலை முடிஞ்சதா.
உன் லேப்டாப்ல ஸ்டோர் பண்ணி வச்சியிருக்கன் பாரு.
சரி சீக்கிரம் வா எனச்சொல்லிவிட்டு மதன் தன் அறைக்குள் சென்றான். லேப்டாப்பை ஆன் செய்து பிரபு ஸ்டோர் செய்த ஃபைலை ஓப்பன் செய்து பார்த்தபோது விதவிதமான ரேட்களில் பிரிண்ட் போடப்படுவது தெரிந்தது. தன்னிடம்மிருந்த சில குறிப்புகளை பார்த்தான் அவன் சொன்னதை விட விலை கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது. பிரபு உள்ளே நுழைந்தவன் கரண்ட் வந்துடுச்சிடா என சொன்னபடி ஃபேனை சுழல விட்டவன் பாத்துட்டியா ?
பாத்துக்கிட்டு தான் இருக்கன். இத நீயும் பாரு என நான் குறித்து வந்திருந்த சில தகவல்களை அவனிடம் தந்தேன். கொஞ்சம் நேரம் பார்த்தவன் எனக்கு குழப்பமாயிருக்கு என்ன பண்றதா ஐடியா என கேட்டான்.
விதவிதமான ரேட்களா இருக்கு. இதல கொஞ்சம் டீப்பா போனாதான் குவாலிட்டி தர முடியும், நாமளும் லாபம் பாக்க முடியும் அதனால இப்போதைக்கு பெருசா வேணாம். இத படிப்படியா செய்வோம். அவசரப்பட்டு இறங்கி சிக்கிட்டோம் இருக்கறதும் போயிடும்.
இந்த கம்பெனி ஆரம்பிச்ச இந்த எட்டு வருஷத்தல இப்பத்தாண்டா ஒழுங்க யோசிச்சியிருக்கற என்றான் பிரபு.
பாஸ் என அழைத்தபடி வேகவேகமாக அறைக்குள் வந்த ஸ்ரீதர், பாஸ் ஆல் இன்டியா முழுக்க பிராஞ்ச் வச்சியிருக்கற தேவ் கம்பெனியோட பெங்களுரூ பிராஞ்ச் மேனேஜர் பேசனாரு. அவுங்களோட கிளையண்ட் ஒருத்தர் நம்மவூர்ல பெரிய ஜிவல்லரி திறக்கறாறாம். அதை மக்கள்க்கிட்ட புரமோட் பண்ணனுமாம், ஜிவல்லரி ஓனர் பிரஸ்ச மீட் பண்ணனும்மாம் அரேஞ்ச் பண்ணி தர முடியுமான்னு கேட்கறாரு.
ஓ.கே சொல்லு. அவுங்க நம்மள ஓவர் லுக் பண்ணக்கூடாது. பிடி நம்மக்கிட்ட இருக்கட்டும் ஸ்ரீதர்.
நீங்க பேசறிங்களா பாஸ்.
இல்ல மேனேஜர் பேசுவாருன்னு சொல்லு.
ஓ.கே பாஸ் என்றபடி வெளியே சென்றான்.
ஓபி அடிச்சாலும் நல்ல கான்டக்ட் வச்சியிருக்கனேடா.
அவன் கேடி. ஒரு நாள் நமக்கு அல்வா தரப்போறான் பாரு என்றவனிடம்
தரும்போது பாத்துக்கலாம். இங்க அந்த கம்பெனி எது பண்றதாயிருந்தாலும் அது நம்ம ஏஜென்சி வழியாத்தான் பண்ணனும் அந்தளவுக்கு பேசி அவனை நம்ம கண்ட்ரோல்ல வச்சிக்க. நமக்கு தர்ற ரேட் விஷயத்தல தயங்குவாங்க. எங்க ரேட் இதுதான்னு கட்டன்ரைட்ட பேசிடு.
பெரிய கம்பெனிடா விட்டு பிடிப்பமே ?.
ஒன்னும் வேணாம். நம்மக்கிட்ட வர்றது அந்த ஜிவல்லரி கிடையாது. ஜிவல்லரி நியமிச்சியிருக்கற அட்வர்டைசிங் கம்பெனி. நியூஸ் பேப்பர், மீடியா விளம்பரத்த அவுங்களே தயாரிப்பாங்க. வெளியிடப்போறதும் அந்த கம்பெனி தான். இங்க லோக்கல்ல தெருவுல, வினையல் போர்டு, பிட் நோட்டீஸ் தர்ற சின்ன சின்ன விஷயத்துக்கு தான் நம்மள பயன்படுத்துவாங்க. அவனால அவ்வளவா வருமானம் கிடையாது. அதனால அவன் சொல்ற வேலைய கேட்டுக்க செஞ்சிட்டு அதுக்கு ஏத்தமாதிரி பில் போட்டு அனுப்பிடு.
நாம ஏன் அந்த ஜிவல்லரி ஓனரை அப்ரோச் பண்ணி இங்கத்தி அட்வர்டைசிங்க நாங்க பாத்துக்கறன்னு கேட்டா பிரபுவை முறைத்தேன்.
தொடரும்……………
-
வாழ்விலே…
செண்பக ஜெகதீசன்
உறக்கம்-
ஓய்வின் மொழி,
உய்வின் வழி..
கனவின் களம்,
கனிந்திடும் உளம்..
வாழ்வின் பகுதி,
வாழ்வே அதுவல்ல..
அதுவானால்,
இல்லை வாழ்வே…!
-
என் இல்லாள்.
தனுசு
என் இல்லாளிடம் சொன்னேன்
சிக்கனமாய் இருக்க
மறுக்கிறாள்
அதை எக்கணமும் கேட்க.பெண்ணுக்குப் பகை
ஊதாரித்தனம்.
அது இந்த மண்ணுக்கும் தெரியும்
எடுத்து சொன்னால் கேட்பதில்லை
எதிர்த்து நிற்க முடியவில்லை.சிறுகச் சிறுக சேர்த்தால்
சேமிப்பு.
அது பெருகப் பெருக
தரும் பூரிப்பு.இவள்
பெரிது பெரிதாய்
செலவாக்கி
வீட்டை நிறைக்கும்
பைத்தியக்காரி.
இந்தக் குணத்தை
தாய்வீட்டுச் சீதனமாய்
தன்னோடு கொண்டு வந்த
கொடுமைக்காரி.மிச்சம் பிடித்து
வாழ்வது
மெச்சத்தகுந்த வாழ்க்கை
அதை
துச்சமாய் நினைப்பது
இவளின் வாடிக்கை.கொஞ்சம் கொஞ்சமாய்
கொடுப்பது
குடும்பத்துக்கு அழகு
கொட்டிக்கொடுப்பது
என்ன வழக்கு?அள்ளிக்கொடுக்கும்
இந்த
அன்னபூரணியை
தள்ளிவைக்க முடியவில்லை
சொல்லிதர வாருங்கள்
சொந்தமுள்ள அண்ணன்மாரே அக்காமாரே….
குறைக்கச் சொல்லி கூறுங்கள்
அவளின்
அன்பில் தேவை சிக்கனம்!
யாரையும்
அரவணைப்பதிலும்
தேவை சிக்கனம்! -
நான் அறிந்த சிலம்பு – 79 (08.07.13)
மலர் சபா
மாதவி கோவலனுக்குத் திருமுகம் வரைந்து வசந்த மாலையிடம் கொடுத்து அனுப்புதல்“உலகில் உள்ள நிலைபெற்ற
உயிர்கள் எல்லாம்
தம் மனதை மகிழ்விக்கும் துணையோடு
புணர வைக்க வல்லவன் மன்மதன்.இனிய இளவேனில் இளவரசன் என்பதனால்
அரசன் போல் எதையும்
நெறிப்படச் செய்வான் அல்லன்.அந்த இளவலுக்குத் துணையாய்
மாலையாம் பொழுததனில்
யானையின் பிடரியில் ஏறி வருகின்ற
திங்கள் செல்வனும்
நடுநிலைமை உடையவன் அல்லன்.புணர்ந்து மகிழ்ந்த காதலர் ஊடல் கொண்டு
சற்றே தம்முள் இடைவெளி கொண்டிருப்பினும்,
தகுந்த காரணம் கொண்டு
பிரிந்து சென்ற காதலர்
தம் துணைதான் மறந்து வாராதிருப்பினும்,
நறும்பூக்களால் செய்த அம்புகள் கொண்டு
தனித்து வாழ்பவரைத் தாக்கி நிற்பது
மன்மதனுக்கு வாடிக்கையான செயலேயன்றிப்
புதுமையான செயல் ஆகாது.
இதனைத் தாங்கள் அறிந்து
எமக்கு அருள்வீரே” என்றேதான் எழுதினள் மாதவி.அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 56 – 63
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram24.htmlபடத்துக்கு நன்றி
http://tamilarivom.blogspot.in/
-
இந்த வார வல்லமையாளர்
யதார்த்தா கி.பென்னேஸ்வரன்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மிகவும் சிறிய கிராமம் காக்கங்கரை, தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ளது. கல்வி வசதிகள் ஏதுமற்ற இந்தக் கிராமத்தில் இப்போது மிக அற்புதமான கல்விப் புரட்சி ஒன்று நடைபெற்று வருகிறது. மாணவர்களை மதிப்பெண்களை நோக்கி விரட்டும் பந்தயக் குதிரைகளாக மாற்றாமல் அவர்களுடைய உண்மையான திறமைகளைக் கண்டறிந்து அவர்களை நல்ல தன்மையுள்ள மானிடர்களாக மாற்றும் கல்வித் திட்டம் முயற்சிக்கப்படுகிறது. ஓரளவு வெற்றியும் கிடைத்து வருகிறது.நம்முடைய இளைய தலைமுறை, வேளாண்மை பற்றி கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் கிளைத்து, ஓரிரு ஏக்கர் நிலங்கள் ஒதுக்கி அங்கு வேளாண்மை குறித்த பல அடிப்படை ஞானம் மாணவர்களுக்குப் போதிக்கப்பட்டு வருகிறது. வேளாண்மை இப்போது பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தத் தொலைநோக்குடை பணியை, சனத்குமார் இந்த வாரத்தில் தொடங்கியுள்ளார்.
தேசிய அளவில் சிறந்த பள்ளிகளில் ஒன்று என்று மதிப்பிடத் தகுந்த அளவில் இந்த கேட்பிரிட்ஜ் பள்ளி இன்று முன்னேறி வருகிறது.
இந்தச் சாதனைகளை தன்னுடைய சக்கர நாற்காலியின் வேகமான சுழற்சியினால் சாத்தியப்படுத்தி வருகிறார் திரு.சி.டி.சனத் குமார்.
சிறு வயதில் தவறான சிகிச்சையால் போலியோ நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பள்ளிக் கல்வி மறுக்கப்பட்டு, சொந்த ஆர்வத்திலும் உழைப்பிலும் வீட்டிலேயே படித்துத் தேறியிருக்கிறார்.
மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பேரஷன் அளிக்கும் பெட்ரோல் வழங்கும் நிலையம் இவருக்கு சில ஆண்டுகள் முன்பு அளிக்கப்பட்டது. சிறிது காலம் அதனை நடத்தி விட்டு, ஒரு பள்ளியைத் துவங்குவது என்னுடைய கனவு. அதற்காக இந்த பெட்ரோல் நிலையத்தைத் திருப்பித் தர முடியுமா என்று கேட்டு, அதில் கிடைத்த தொகையை வைத்து, கிருஷ்ணகிரியில் கேம்பிரிட்ஜ் பள்ளியைத் துவக்கினார். பல சாதனைகளைப் படைத்தது கேம்பிரிட்ஜ் பள்ளி. அதனைத் தொடர்ந்து இப்போது காக்கங்ரையில் உள்ள பள்ளி. மதிப்பெண்களை வற்புறுத்துவது இல்லை இப்பள்ளி. மாணவர்களின் தனித்த ஆளுமையைக் கண்டறிந்து அவர்களுக்கு ஊக்கம் அளிக்கிறது. கல்வி மட்டும் அல்லாது, மாணவர்களின் உடல்நலம் குறித்தும் அக்கறை கொண்டு அன்றாடம் பல வகையான முறைகளைக் கையாளுகிறது. கட்டாய யோகப் பயிற்சி மற்றும் தியானப் பயிற்சி அவற்றில் ஒன்று. அனைத்து மாணவர்களும் ஏதாவது ஒரு பழம் கண்டிப்பாக மதிய உணவுக்குக் கொண்டு வர வேண்டும். இது ஆசிரிய ஆசிரியைககளால் அன்றாடம் கண்காணிக்கப்படுகிறது. செய்தித்தாள்களில் வரும் முக்கியமான செய்திகள் பற்றிய குறிப்புக்களைப் பள்ளியில் ஆசிரிய ஆசிரியைகள் முன்பு மாணவ மாணவியர் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
இவையெல்லாம் இந்தப் பள்ளி கடைப்பிடிக்கும் ஒழுக்கங்களில் ஓரிரண்டு உதாரணங்கள்.
டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் அன்புக்குப் பாத்திரமானவர். மொரீஷியஸ் அரசு இவரை அழைத்துப் பாராட்டியிருக்கிறது. பல கல்வி நிறுவனங்களில், கல்வி அமைப்பில் இன்று தேவைப்படும் மாற்றங்கள் குறித்து தொடர்ச்சியாகப் பேசி வருகிறார். வடக்கு வாசல் இதழில் இவர் தொடர்ந்து எழுதிய கல்வித் தொடர் ஒவ்வொன்றும் ஆழ்ந்த அக்கறைகளைக் கொண்டு பல அடிப்படையான கேள்விகளை எழுப்பின. வேர்களாகும் விருட்சங்கள் என்னும் பெயரில் வடக்கு வாசல் வெளியீடாக வந்த அந்த நூலை டாக்டர் அப்துல் கலாம் டெல்லியில் வெளியிட்டார்.
இப்போது ‘வித்யா தான்’ என்னும் புதிய ஆக்கபூர்வமான கல்வித் திட்டத்தை வடிவமைத்து வருகிறார்.
சீரிய கல்வித் தொண்டினை நோக்கி இவருடைய சக்கர நாற்காலி அல்லும் பகலும் சுழன்றுகொண்டிருக்கிறது.
கல்வியாளர் சி.டி.சனத் குமார் அவர்களை இந்த வார வல்லமையாளராக அடையாளம் காணுவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.
இன்றைய கல்வியில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்து இவருடன் உரையாடலாம். சனத் குமாரின் மின்னஞ்சல் – sanathkumar5252@gmail.com | தொலைபேசி- 9443207061 | வலைப்பூ- http://sanathkumarkrish.blogspot.in/
-
மலை பெய்கிறது!
அண்ணாகண்ணன்

மலை பெய்கிறது என்றாய்.
வெளியே எட்டிப் பார்த்தேன்.
மேலே கருமலையென நின்றிருந்தது மேகம்.
சிறு சிறு கற்களென
மலை பெய்துகொண்டிருந்தது.
அந்த அடியிலிருந்து தப்பிக்க,
ஓடி ஒளிகிறார்கள் மக்கள்.=================================
படத்திற்கு நன்றி: http://wallpaperdreams.com
-
வார ராசி பலன்: 08.07.2013 – 14.07.2013
காயத்ரி பாலசுப்ரமணியன்
மேஷம்: அவ்வப்போது சிறிது ஆரோக்கிய நலிவு ஏற்பட்டாலும், பெண்கள் நினைத்த காரியத்தை முடித்து மகிழ்வார்கள். கலைஞர்கள் எதிலும் அளவாக இருந்தால், வெளி வட்டாரத் தொடர்பு லாபகரமாக இருக்கும். வியாபாரிகள் மேற்கொள்ளும் பிரயாணங்களில் சற்று கவனமாய் இருத்தல் நலம். வீண் செலவைக் குறைத்தால், பெண்கள் வேண்டிய காரியங்களுக்கு பணம் ஒதுக்கலாம். ஆர்வத்துடன் பாடம் பயிலும் மனோ பாவம் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் பெற உதவியாய்த் திகழும். மேலும் வாகனப் பயணத்தில் வேகம் வேண்டாம். பெற்றோர்கள் பிள்ளைகளின் குறைகளை இதமாகச் சுட்டிக் காட்டினால், தவறுகளை அவர்களே திருத்திக் கொள்வார்கள்.
ரிஷபம்: பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அதிக பணம் தருவதைக் குறைத்துக்கொண்டால், அவர்கள் வழி தவறாமல் இருப்பார்கள். மாணவர்கள் உங்கள் சக்தியை அதிகரிக்க, சத்தான உணவு வகைகளை உண்டு வாருங்கள். சோர்வின்றிக் கல்வி பயில முடியும். பணியில் இருக்கும் பெண்கள் உங்கள் பிரச்சினைகளை நம்பிக்கையானவர்களுடன் ஆலோசனை செய்து தீர்வு காண்பது நல்லது. கலைஞர்கள் பூர்வீகச் சொத்தையும், குடியிருக்கும் வீட்டையும் மாற்றியமைப்பதற்காக அதிகத் தொகை செலவு செய்ய வேண்டியிருக்கும். வியாபாரிகள் குடும்பத்தினரின் ஆலோசனைக்குப் பின் புதிய முயற்சிகளில் இறங்குவது நல்லது. ஆசிரியர்கள் தரும் ஊக்கம், மாணவர்களுக்கு புதிய உத்வேகத்தை அளிப்பதால், ஆர்வத்துடன் பாடங்களைப் பயில்வர். குடும்பத்தில் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே பெண்கள் கோப தாபங்களைக் குறைத்துப் பொறுமையாய் இருங்கள். பணியில் இருப்பவர்கள் ஏனோதானோவென்று பணிகளைச் செய்யாமல், தகுந்த திட்டப்படி செய்தால், வீண் குழப்பங்களைத் தவிர்த்து விடலாம். வியாபாரிகள், வழக்குகள் தொடர்பாக அலைச்சல், மன உளைச்சல் ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நெருக்கமான நட்பில் சிறு விரிசல்கள் ஏற்படுவதைத் தவிர்க்க, கலைஞர்கள் இதமாக நடப்பது நல்லது.
மிதுனம்: நம்பிக்கைக்கு உரியவர்களின் வழிகாட்டுதலால், பெண்கள் சிக்கலான பிரச்சினைக்குத் தீர்வு காண்பர். பணியில் இருப்பவர்களின் அமைதியைத் தேவையற்ற இடமாற்றம் கெடுக்கலாம். மாணவர்கள் தங்களின் நட்பு கெடாமலிருக்க, நண்பர்களுக்கு, பணம் தருவதில் கவனமாய் இருங்கள். ஏற்ற இறக்கமான பொருளாதாரம் இருந்தாலும் கடும் முயற்சியால் வியாபாரிகள் நிலைமையைச் சமாளித்து விடுவர். சுய தொழில் புரிபவர்கள் முக்கியமான வேலையில் உங்கள் முழு கவனம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுதல் அவசியம். கலைஞர்கள் புதிய முயற்சிகளுக்கு ஆதரவான கால நேரம் வரும் வரை பொறுமையாய் இருப்பது நல்லது.
கடகம்: பொது வாழ்வில் இருப்பவர்கள், தங்கள் நம்பிக்கைக்கு மேல் மற்றவரின் சந்தேகப் பார்வை விழாமல் பார்த்துக்கொண்டால், எந்தப் பணியும் சுமையாய்த் தோன்றாது.வியாபாரிகள் பண இருப்புக்கேற்றவாறு சரக்குகளை வாங்கிக்கொள்ளுதல் அவசியம். மாணவர்கள் குறுக்கு வழிகளில் சிந்தனையை அலைய விடாதிருந்தால், நாடி வரும் நன்மைகளைத் தக்க வைத்துக்கொள்ள இயலும். பெண்கள் உடல் நலத்தை நன்றாகப் பராமரித்தால், உற்சாகம் குறையாமல் பணிகளில் ஈடுபட முடியும். மற்றவர்களால் ஏமாற்றப்படும் வாய்ப்பிருப்பதால், பணியில் இருப்பவர்கள் பணம் கொடுக்கல் வாங்கலில் விழிப்புணர்ச்சியோடு இருப்பது அவசியம்.
சிம்மம்: மாணவர்கள் உடனிருந்து தொல்லை தருபவர்களிடம், எச்சரிக்கையாய் நடந் துகொண்டால், எந்தத் தொந்தரவும் புதிதாய் முளைக்காமல் பார்த்துக் கொள்ளலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் அமைதியாக தங்கள் பணிகளை செய்து வந்தால், அனைத்தும் சீராகவே நடக்கும். நினைவாற்றல் பெருகுவதால், மாணவர்களுக்கு தங்கள் வேலைகளை முடிப்பது சுலபமாக இருக்கும். பெண்கள் தேவையில்லாமல் அக்கம்பக்கம் பக்கத்தாரின் விவகாரங்களில் தலையிட வேண்டாம். கலைஞர்கள் தீயவ ரை ஒதுக்கினால்,வளமான வாழ்க்கை அமையும். சக பணியாளர்களிடமிருந்து வேண்டிய ஒத்துழைப்பை பெற இணக்கமாக நடந்து கொள்ளுங்கள்.
கன்னி: முன்கோபம், பதற்றம் ஆகியவற்றிற்கு இடம் தராமல், நிதானமாகச் செயலாற்றி வந்தால், உறவுகள் உங்கள் அருகிலேயே இருக்கும். கல்வி தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றிகரமாய் அமைவதால், மாணவர்கள் சுறுசுறுப்புடன் பாடங்களைப் பயில்வார்கள். வாகனத்தை ஓட்டிச் செல்லும் பெண்கள் வாகனம், தொடர்பான ஆவணங்களைக் கையிலேயே வைத்திருந்தால், வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். வியாபாரிகள் அவ்வப்போது தோன்றும் சிறிய நெருக்கடிகளைத் தெளிவுடனும் திறமையுடனும் கையாள்வீர்கள். இந்த வாரம் சொத்துப் பிரச்சினைகளைச் சற்று ஆறப் போடுங்கள். உங்களுக்குச் சாதகமான நிலை மலரும்.
துலாம்: வேலை செய்யும் இடத்தில் சில குழப்பங்கள் உருவாகும் சூழல் இருப்பதால், தகுந்த ஆலோசனையுடன் செயல்பட்டு வாருங்கள். வியாபாரிகள், வேலையாட்களை அரவணைத்துச் சென்றால், எடுத்துக்கொண்ட பணிகள் முழுமையாக நிறைவடையும். தொழில் ரீதியாகச் சில சங்கடங்களைச் சந்திக்க நேர்ந்தாலும், கலைஞர்கள் தங்கள் உழைப்பால் வெற்றி பெற்று, தங்கள் பெயரைத் தக்க வைத்துக் கொள்வர். மாணவர்கள் புதிய இடங்களில், அறிமுகமில்லாத நபர்களிடம் எச்சரிக்கையாய்ப் பழகவும். பெண்களின் விடா முயற்சியாலும், பொறுமையாலும், உறவுகளிடையே இருந்த பிணக்கும் சண்டையும் விலகி, சமரசம் மலரும்.
விருச்சிகம்: பெண்கள் , பொருளாதார ரீதியாக, வாக்குறுதிகளை அளிக்கும் முன் யோசனை செய்வது நல்லது. ஒவ்வாமை தோன்றும் வாய்ப்பிருப்பதால், வயதானவர்கள் உணவு மற்றும் மருந்து விஷயங்களில் எச்சரிக்கையாய் இருப்பது அவசியம். அலுவலகத்தில் எவ்வளவுதான் பாடுபட்டாலும், சில நேரம் உங்களுக்கு வரும் நல்ல பெயரை மற்றவர் தட்டிக்கொண்டு போவார். வியாபாரிகள் இந்த வாரம் புதிய செலவுகளையும் முதலீடுகளையும் சற்று தள்ளிப் போடுதல் நல்லது. கலைஞர்கள் வங்கிக்கான கடன் தொகைகளை, குறித்த கெடுவுக்குள் செலுத்திவிட்டால், அபராதம் கட்டுதல், வீண் மன உளைச்சல் ஆகிய இரண்டிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.
தனுசு: இந்த வாரம் உறவுகளால் ஏற்படும் சிக்கல்களை பெண்கள் சாமர்த்தியமாகக் கையாள வேண்டிய சூழல் இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு பழைய வழக்கு விவகாரங்கள் மீண்டும் தலை தூக்கும் வாய்ப்பு உள்ளதால், அமைதியாய் உங்கள் பணியில் கவனம் செலுத்தி வருவது புத்திசாலித்தனம். கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளும், அதற்கேற்ற வரவுகளும் தாராளமாக இருக்கும். வியாபாரிகள் வெளியூர்ப் பிரயாணங்களில், உணவு விஷயத்தில் மிதமாக இருப்பது நல்லது. மாணவர்கள் கண்களைப் பராமரிப்பதில் தனிக் கவனம் செலுத்தி வாருங்கள். தேர்வு நேரங்களில் படிப்பதில் எந்தச் சுணக்கமும் ஏற்படாது.
மகரம்: மாணவர்கள் எந்தச் சூழலிலும், கோபமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை என்பதில் உறுதியாக இருந்தால், அடுத்தவரின் சகாயம் குறையாமலிருக்கும். பணியில் இருப்பவர்கள் உங்கள் விருப்பு, வெறுப்புக்களைத் தேவையற்ற இடங்களில் வெளிப்படுத்துவதைத் தவிர்த்து விடவும். விடாமுயற்சி மூலமே விரும்பியதை அடைய முடியும் என்பதை நினைவில் கொள்ளும் கலைஞர்களுக்கு வெற்றியோடு, வாய்ப்புகளும் பல வந்து சேரும். இந்த வாரம் பெண்கள் முழங்கால் வலி, பல் உபாதைகளுக்காக மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடும். எனவே அதிக அலைச்சல், குளிர்ச்சியான பொருட்களை உண்ணுதல்- இரண்டையும் குறைத்துக் கொள்ளுங்கள்.
கும்பம்: பெண்கள் உறவுகளிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ளாமல் அளவாகப் பழகுவது பல பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும். வியாபாரிகள் பணப் பரிமாற்றம், ஒப்பந்தங்கள் ஆகிவற்றில் எவரையும் எளிதில் நம்பிவிட வேண்டாம். தனியார் துறையில் பணி புரிபவர்கள் நல்ல பெயரைப் பெறுவதற்கு கூடுதல் கவனமும், கூடுதல் உழைப்பும் தேவை. பிள்ளைகளின் விஷயத்தில் அதிகாரத்தை விட அன்பான வழிகாட்டல் அவர்களை நல்வழிப்படுத்த உதவும். பங்குகளை வாங்கி விற்பவர்கள் அதிக ஆசைப்பட்டால், பங்குச் சந்தையில் அதிகப் பணம் முடங்கி விடும். பயணங்களில் அறிமுகம் இல்லாதவரிடம் உங்கள் சொந்த விஷயங்களைப் பரிமாற வேண்டாம் .
மீனம்: உங்கள் செல்லப் பிராணிகளால் அக்கம் பக்கத்தாருக்கு சில தொல்லைகள் உண்டாகலாம். வேலைக்குச் செல்லும் பெண்கள் உழைப்புக்குத் தரும் முக்கியத்துவத்தை ஓய்வுக்கும் தந்தால், ஆரோக்கியம் பொலிவுடன் விளங்கும். மாணவர்கள் பதற்றம், மறதி – இரண்டையும் தவிர்த்துவிட்டால், படிப்புல் உங்கள் மனத்தை ஒருமுகப்படுத்தி வெற்றி பெற முடியும். பெண்கள் இல்லத்தில் தோன்றும் சிறிய உரசல்களை பொருட்படுத்தாமல் பெருந்தன்மையாய் நடந்துகொண்டால், அனைவரும் உங்கள் பக்கமே! கலைஞர்கள் தரமறிந்து நண்பர்களைத் தேர்வு செய்யுங்கள். தொல்லை ஏதும் தோன்றாது. பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் உங்கள் அக்கறை அவசியம்.
-
மக்கள் நலமும் பணமும் வீணாகாமல் காக்கப்படுமா…?
சித்திரை சிங்கர்
தமிழக மின்வாரியம் இப்போது ஒழுங்காக தங்கள் வாடிக்கையாளர்களின் (மக்கள்) நலனில் அக்கறையுடன் செயல் படுகிறதா என்றால் இல்லை என்ற குரல்தான் தமிழகம் எங்கும் ஒலிக்கும்..! கடந்த திடீரென இத்தனை வருடங்கள் அரசியல்வாதிகள் தங்களின் ஒட்டு வங்கி குறையகூடாது என்பதற்காக இதுவரையில் உயர்த்தப்படாத மின்கட்டணங்களை ஒரேயடியாக உயர்த்தி தங்கள் வாடிக்கையாளர்களை வேதனைபடுத்தி மின்வாரியம் தனது வசூலை மேம்படுத்தியது. அனால் அடிக்கடி பவர் கட் ஆவதற்க்கு மின் உற்பத்தி முறையாக மேம்படுத்தப்படவில்லை என்பது ஒரு பக்கம் என்றாலும் ஒவ்வொரு ட்ரான்ஸ்பார்மர்களையும் சரிவர பராமரிக்கதேவையான மாற்று உபகரணங்ககளும் இல்லை. புதிய இணைப்புக்களுக்கு தகுந்தவாறு இப்போதுள்ள ட்ரான்ஸ்பார்மர்களை மேம்படுத்தும் அக்கறை மின்வாரிய நிர்வாகத்துக்கு இல்லை.வெளிநாட்டு அலுவலகங்கள் புதியதாக திறக்க வைத்து புதிய இணைப்புக்களை சத்தமில்லாமல் பல இடங்களில் சலுகை கட்டணத்தில் கொடுப்பது வேடிக்கையாக உள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு வீடுகளுக்கு உண்டான கட்டணங்கள் கூட சமீபத்தில் கூட தொலைக்காட்சி செய்தியில் மீண்டும் ஒரு யூனிட்டுக்கு 17 பைசா உயர்த்த போவதாக செய்தி வந்துள்ளது. விலைஉயர்வு தடுக்கப்பட முடியாது என்றாலும் இவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை ஒரேயடியாக முட்டாள்கள் ஆக்குவதுதான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மாதாமாதம் நாம் உபயோகிக்கும் மின்சாரத்துக்கு உரிய கட்டணத்தை அடுத்த மாதம் இரண்டாவது வாரம் அல்லது 15ந்தேதிக்குள் வசூலிக்கும் விதமாக செயல்படாமல் இரண்டு மாதத்துக்கு

ஒரு முறை வசூலிப்பதால் ஒவ்வொரு வாடிக்கையாளரும் அதிக கட்டணங்கள் செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை. கேட்டால் மாதாமாதம் ரீடிங் எடுக்க மின் வாரியத்தில் தேவையான பணியாளர்கள் இல்லை என்று சொல்கிறார்கள். இதற்க்கு பொதுமக்கள் பலியாவது எந்தவகையில் நியாயம் என்று தெரியவில்லை. மாத சம்பளம் வாங்கும் பொதுமக்கள் எப்படி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணங்களை செலுத்த முடியும்…? அதுவும் அவ்வப்போது “டெபொசிட் கட்டணம்” என்று ஒரு கணிசமான தொகையினை சேர்த்து கட்ட சொல்லுகிறார்கள்..ஏற்கெனவே கோடை வெயிலின் காரணமாக மின் உபயோகம் கொஞ்சம் அதிகமாக இருக்கும் நிலையில் இந்தமாதமும் அடுத்தமாதமும் சம்பளம் முழுவதையும் மின்கட்டன்மாக செலுத்தவேண்டிய நிலையில் பொதுமக்களில் பலர் உள்ளனர். இத்தகு நிலைமை மாற வேண்டும்….! இப்போதும், பக்கத்து மாநிலமான கர்நாடகத்தில் மாதாமாதம் மின் கட்டணங்களை வசூலிப்பது போல தமிழகத்திலும், முன்னம் வசூலித்தது போலவே மீண்டும் மாதாமாதம் மின் கட்டணங்களை வசூலிக்க மின்வாரியம் முன் வரவேண்டும். மாதாமாதம் சென்று மீட்டர் ரீடிங் எடுக்க தேவையான பணியாளர்கள் இல்லை என்றால் ரீடிங் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை என்றாலும் பொதுமக்கள் வீடுகளில் மாதமாதம் உபயோகிக்கும் மின்சாரத்துக்கே கணக்கீடு செய்து இரண்டு மாதத்துக்கு ஒருமுறை வசூலிக்க மின்வாரியம் தக்க நடவடிக்கை எடுக்குமா…? இப்போது புதியதாக பொருத்தபடும் புதிய “டிஜிட்டல் மீட்டர்கள்” துல்லியமாக மின் அளவை கணக்கிடும் என்று பார்த்தால், அவைகள் முந்தய அளவில் வீடுகளில் மின்சாரத்தை உபயோகித்தாலும் இந்த புதிய
டிஜிட்டல் மீட்டர்கள் தனது கணக்கீடுகளை சுமார் 10 முதல் 20% அதிகமாகவே காட்டுகிறது. இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்களே….!பொதுமக்களின் நியாயமான உரிமைகளை மின்வாரியம் மதிக்க வேண்டும் அவர்கள் வசதிக்காக மக்களை “பலி கடா” ஆக்குவது நல்ல இல்லை….! மக்கள் நலமும் பணமும் வீணாகாமல் காக்கப்படுமா…?




