யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

Sanathkumarகிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மிகவும் சிறிய கிராமம் காக்கங்கரை,  தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ளது.  கல்வி வசதிகள் ஏதுமற்ற இந்தக் கிராமத்தில் இப்போது மிக அற்புதமான கல்விப் புரட்சி ஒன்று நடைபெற்று வருகிறது.  மாணவர்களை மதிப்பெண்களை நோக்கி விரட்டும் பந்தயக் குதிரைகளாக மாற்றாமல் அவர்களுடைய உண்மையான திறமைகளைக் கண்டறிந்து அவர்களை நல்ல தன்மையுள்ள மானிடர்களாக மாற்றும் கல்வித் திட்டம் முயற்சிக்கப்படுகிறது.  ஓரளவு வெற்றியும் கிடைத்து வருகிறது.

நம்முடைய இளைய தலைமுறை, வேளாண்மை பற்றி கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் கிளைத்து, ஓரிரு ஏக்கர் நிலங்கள் ஒதுக்கி அங்கு வேளாண்மை குறித்த பல அடிப்படை ஞானம் மாணவர்களுக்குப் போதிக்கப்பட்டு வருகிறது.  வேளாண்மை இப்போது பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தத் தொலைநோக்குடை பணியை, சனத்குமார் இந்த வாரத்தில் தொடங்கியுள்ளார்.

தேசிய அளவில் சிறந்த பள்ளிகளில் ஒன்று என்று மதிப்பிடத் தகுந்த அளவில் இந்த கேட்பிரிட்ஜ் பள்ளி இன்று முன்னேறி வருகிறது.

இந்தச் சாதனைகளை தன்னுடைய சக்கர நாற்காலியின் வேகமான சுழற்சியினால் சாத்தியப்படுத்தி வருகிறார் திரு.சி.டி.சனத் குமார்.

சிறு வயதில் தவறான சிகிச்சையால் போலியோ நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பள்ளிக் கல்வி மறுக்கப்பட்டு,  சொந்த ஆர்வத்திலும் உழைப்பிலும் வீட்டிலேயே படித்துத் தேறியிருக்கிறார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பேரஷன் அளிக்கும் பெட்ரோல் வழங்கும் நிலையம் இவருக்கு சில ஆண்டுகள் முன்பு அளிக்கப்பட்டது.  சிறிது காலம் அதனை நடத்தி விட்டு, ஒரு பள்ளியைத் துவங்குவது என்னுடைய கனவு. அதற்காக இந்த பெட்ரோல் நிலையத்தைத் திருப்பித் தர முடியுமா என்று கேட்டு, அதில் கிடைத்த தொகையை வைத்து, கிருஷ்ணகிரியில் கேம்பிரிட்ஜ் பள்ளியைத் துவக்கினார்.  பல சாதனைகளைப் படைத்தது கேம்பிரிட்ஜ் பள்ளி.  அதனைத் தொடர்ந்து இப்போது காக்கங்ரையில் உள்ள பள்ளி.  மதிப்பெண்களை வற்புறுத்துவது இல்லை இப்பள்ளி.  மாணவர்களின் தனித்த ஆளுமையைக் கண்டறிந்து அவர்களுக்கு ஊக்கம் அளிக்கிறது.  கல்வி மட்டும் அல்லாது, மாணவர்களின் உடல்நலம் குறித்தும் அக்கறை கொண்டு அன்றாடம் பல வகையான முறைகளைக் கையாளுகிறது.  கட்டாய யோகப் பயிற்சி மற்றும் தியானப் பயிற்சி அவற்றில் ஒன்று.  அனைத்து  மாணவர்களும் ஏதாவது ஒரு பழம் கண்டிப்பாக மதிய உணவுக்குக் கொண்டு வர வேண்டும்.  இது ஆசிரிய ஆசிரியைககளால் அன்றாடம் கண்காணிக்கப்படுகிறது.  செய்தித்தாள்களில் வரும் முக்கியமான செய்திகள் பற்றிய குறிப்புக்களைப் பள்ளியில் ஆசிரிய ஆசிரியைகள் முன்பு மாணவ மாணவியர் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

இவையெல்லாம் இந்தப் பள்ளி கடைப்பிடிக்கும் ஒழுக்கங்களில் ஓரிரண்டு உதாரணங்கள்.

டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் அன்புக்குப் பாத்திரமானவர்.  மொரீஷியஸ் அரசு இவரை அழைத்துப் பாராட்டியிருக்கிறது.   பல கல்வி நிறுவனங்களில், கல்வி அமைப்பில் இன்று தேவைப்படும் மாற்றங்கள் குறித்து தொடர்ச்சியாகப் பேசி வருகிறார்.  வடக்கு வாசல் இதழில் இவர் தொடர்ந்து எழுதிய கல்வித் தொடர் ஒவ்வொன்றும் ஆழ்ந்த அக்கறைகளைக் கொண்டு பல அடிப்படையான கேள்விகளை எழுப்பின.  வேர்களாகும் விருட்சங்கள் என்னும் பெயரில் வடக்கு வாசல் வெளியீடாக வந்த அந்த நூலை டாக்டர் அப்துல் கலாம் டெல்லியில் வெளியிட்டார்.

இப்போது ‘வித்யா தான்’ என்னும் புதிய ஆக்கபூர்வமான கல்வித் திட்டத்தை வடிவமைத்து வருகிறார்.

சீரிய கல்வித் தொண்டினை நோக்கி இவருடைய சக்கர நாற்காலி அல்லும் பகலும் சுழன்றுகொண்டிருக்கிறது.

கல்வியாளர் சி.டி.சனத் குமார் அவர்களை இந்த வார வல்லமையாளராக அடையாளம் காணுவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

இன்றைய கல்வியில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்து இவருடன் உரையாடலாம். சனத் குமாரின் மின்னஞ்சல் – sanathkumar5252@gmail.com | தொலைபேசி- 9443207061 | வலைப்பூ- http://sanathkumarkrish.blogspot.in/

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “இந்த வார வல்லமையாளர்

  1. திரு.சி.டி.சனத் குமார் அவர்கட்கு வாழ்த்தும் வணக்கமும்!!

  2. கல்வித்தந்தை என்று இங்கு எல்லோரும் தன்னைத்தானே பீற்றிக்கொள்ள சத்தமின்றி ஓரு யுத்தம் செய்த மாற்றுத்திறனாளியைக்கண்டு இனியாவது தங்களின் அந்த தந்தை எனும் அடைமொழியை நீக்கிகிகொள்வார்களா?.

    ///மதிப்பெண்களை நோக்கி விரட்டும் பந்தயக் குதிரைகளாக மாற்றாமல் அவர்களுடைய உண்மையான திறமைகளைக் கண்டறிந்து /// அரசாங்கமே படித்துணர வேண்டிய வரிகள்.

    வல்லமையாளருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். தொண்டுகள் மேன்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்.

  3. இவ்வார வல்லமையாளர், கல்வித்துறையில் சாதனைகளை நிகழ்த்தி  வரும்  திரு.சி.டி.சனத் குமார் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

    அன்புடன் 
    ….. தேமொழி 

  4. திரு.சி.டி.சனத் குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுதல்களும் வணக்கங்களும். அவரது மக்கட்பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.