Blog

  • மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்!

    -மேகலா இராமமூர்த்தி


    இயற்கையின் படைப்பில் மனித இனம் மட்டுமே சிந்திக்கும் ஆற்றலைத் தன்னகத்தே கொண்டதாய் விளங்குகின்றது. ஏனைய உயிரினங்களுக்கு அத்தகைய வாய்ப்பு அமையவில்லை. தமிழின் தன்னேரில்லாத இலக்கண நூலான தொல்காப்பியத்தை இயற்றிய ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர்,

    ”ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
    இரண்டறி வதுவே அதனொடு நாவே
    மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
    நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
    ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
    ஆறறி வதுவே அவற்றொடு மனனே
    நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே. ”

    என்று ஓரறிவு முதல் ஆறறிவு வரை அமையப்பெற்ற உயிரினங்களை அவற்றின் புலன்கள் அடிப்படையில் (தொல்காப்பிய) பொருளதிகாரத்திலுள்ள ‘மரபியல்’ என்ற பகுதியில் அழகாக வகைப்படுத்தியுள்ளார். மெய், வாய், மூக்கு, கண், செவி என்று ஒவ்வொறு புலனுணர்வும் கூடிக்கொண்டே வந்து இறுதியில் மனத்தையும் தன்னகத்தே கொண்டதாக மனித இனம் தோன்றியது என்பதனை இந்நூற்பா தெளிவாக விளக்குகின்றது. இத்தகைய உன்னதமான மனித இனம் தோன்றப் பல மில்லியன் வருடங்கள் ஆயின என்று அறிவியல் கூறுகின்றது. இதனையே பரிணாமக் கொள்கை (The theory of evolution) என்று அறிவியலாளர்கள் அழைக்கின்றார்கள்.

    மனம் என்று அறியப்படுகின்ற, சிந்தனைக்கு வித்திடும் ஆறாமறிவால் மனித இனம் மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபட்டதாயும், தனித்தன்மை மிக்கதாயும் விளங்கிவருகின்றது. ’அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்று அவ்வையாரும் மனிதப் பிறவியின் சிறப்பைப் போற்றுகின்றார். ஆயினும், மனம் என்ற ஒன்று இருக்கின்ற காரணத்தினாலேயே மனிதர்கள் எல்லாருமே உயர்ந்தோர் என்றோ, உத்தமர் என்றோ நாம் ஓர் முடிவுக்கு வந்துவிட முடிகின்றதா?….இல்லையே!

    மனத்தை மனிதன் எவ்வாறு பண்படுத்துகின்றான், பயன்படுத்துகின்றான், அதில் முகிழ்க்கின்ற சிந்தனைகளும், செயற்பாடுகளும் அவனுக்கும் அவன் சார்ந்த சமூகத்திற்கும் எந்த அளவிற்கு நன்மை அல்லது தீமையைத் தருகின்றன என்பதன் அடிப்படையிலேயே நாம் மனிதனின் பண்பை, குணத்தை முடிவுசெய்ய இயலும். குறையற்ற மனிதன் என்று யாரேனும் உண்டா? என்ற வினா உடனேயே நம் உள்ளத்தில் எழும்; அதற்கு ‘இல்லை’ என்பதனைத்தான் நாம் விடையாகச் சொல்லமுடியும். அப்படியானால், ஓர் மனிதனை நல்லவன் என்றோ தீயவன் என்றோ எவ்வாறு முடிவெடுப்பது..? என்ற நம் ஐயத்தை உணர்ந்தவராய் அதனைத் தெளிவிக்க வருகின்றார் தெய்வப் புலவர் திருவள்ளுவர். ஒருவனிடமுள்ள குணம், குறை என்ற இரண்டையும் நிறுத்துப் பார்த்துத்தான் அவன் குணத்தை நாம் எடை போடமுடியும் என்று கூறும் அவர் அதனை,

    ”குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

    மிகைநாடி மிக்கக் கொளல்.” என்ற குறட்பா வாயிலாக விளக்கியுள்ளார்.

    இக்குறள் சொல்வது போலவேதான் நம் சமுதாயமும் மனிதரில் அதிக நற்குணங்கள் கொண்டவரை நல்லவர் என்றும், மாறாகத் தீய குணங்களையே உடன்பிறப்புக்களாகக் கொண்டோரைத் தீயவர் என்றும் முடிவெடுக்கின்றது.

    மண்ணில் பிறக்கும்போது அனைத்துக் குழந்தைகளும் நல்ல குழந்தைகளே. வளர்ப்பில் இருக்கும் வேறுபாட்டாலேயே அவர்கள் நல்லவர்களாகவும், தீயவர்களாகவும் மாறுகின்றனர் என்று கருத்து நம் மக்களால் பரவலாகச் சொல்லப்பட்டு வருகின்றது.

    “எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே

    பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே.” என்று ’கவிஞர் புலமைப்பித்தன்’ எழுதிய ஓர் பிரபலமான திரைப்படப் பாடல் உண்டு. (பாருங்கள்..! அதிலும் பிள்ளையை வளர்க்கும் முழுப் பொறுப்பும், அவன் நடை தவறினால் அதற்கான பழியும் அவன் தாய்க்கு மட்டும்தான்!!)

    ஆனால் பிறக்கும் குழந்தைகள் அனைத்துமே நல்ல குழந்தைகள்தாமா? என்பது குறித்த ஐயங்கள் தற்போது எழுந்துள்ளன. ஏனெனில் சமீபத்திய மனநோய்கள் குறித்த ஆராய்ச்சிகளில், மனநலத்தை பாதிக்கும் நோய்களையும், குறைபாடுகளையும் தீர்மானிப்பதில் மனிதனின் மரபணுக்கள் (genes) முக்கியப் பங்காற்றுகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே ஒரு மனிதனின் சமூக விரோத நடவடிக்கைகளையும், வக்கிர எண்ணங்களையும் தீர்மானிப்பதிலும் அவற்றின் பங்களிப்பு இருக்கவே செய்கின்றது என்று ஒரு சாராரும்; இல்லை, இல்லை சூழ்நிலையே ஒரு மனிதனின் போக்கையும், நடத்தையையும் பெரிதும் தீர்மானிக்கிறது என்று மற்றொரு சாராரும் தங்கள் வாதப் பிரதிவாதங்களை அறிவியல் பூர்வமாகவும், அனுபவங்கள் வாயிலாகவும் எடுத்து வைக்கின்றனர். இவ்விரு வாதங்களையும் கேட்டபின் ’ஒரு மனிதனின் மரபணுக்களும், அவன் வாழும் சமூகமும் சேர்ந்தே அவனை வடிவமைக்கின்றன, அவன் குணத்தைத் தீர்மானிக்கின்றன’ என்பதனையே நாம் தீர்ப்பாக எடுத்துக்கொள்வதில் தவறில்லை எனத் தோன்றுகின்றது.

    மனிதன் மனது வைத்தால் நல்ல கருத்துக்களையும், நற்சிந்தனைகளையும் தொடர்ந்து தன் உள்ளத்தில் செலுத்தி உள்ளே உறைந்திருக்கும், மறைந்திருக்கும் தீய எண்ணங்களையும், சிந்தனைகளையும் (மரபணுக்கள் வாயிலாக வந்திருந்தாலும் கூட) அகற்றிவிடலாம். ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’ என்ற கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகளை, நாம் மனது வைத்தால் நிஜ வாழ்விலும் சாத்தியமாக்கலாம். நம்மிடையே வாழ்ந்து மறைந்த ஞானியரும், அருளாளர்களும், தலைவர்களும் அதற்குச் சான்றுகளாய்த் திகழ்கின்றனர் எனலாம்.

    நல்ல எண்ணங்கள், நற்பண்புகள் என்று பொதுப்படையாகக் கூறுவதைவிட அவற்றில் சிலவற்றைச் சற்று விளக்கிக் காட்டுவதன் மூலம் அவை குறித்த சிந்தனையை மக்கள் மனத்தில் நாம் விதைக்கலாம் அல்லவா? ஆகவே, மனித மனத்தையும், வாழ்வையும் சீர்ப்படுத்தும், செம்மைப்படுத்தும் நற்பண்புகள் சிலவற்றை இங்கே காண்போம்.

    ”எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லால்

    வேறொன்றறியேன் பராபரமே.” என்றார் தாயுமானவர்.

    எல்லா மக்களும் குறைகள் ஏதுமின்றி இன்பமாயிருக்கவேண்டும் என்பதே தாயுமானவ சுவாமிகள் இறைவன்முன் சமர்ப்பிக்கும் வேண்டுகோளாய் உள்ளது. மனம் உயர்ந்ததாய் இருந்தால்தானே இத்தகைய உயரிய சிந்தனை முகிழ்க்கும்.

    சமரச சன்மார்க்கம் கண்ட வள்ளலாரோ இன்னும் ஒருபடி மேலேபோய்,

    ”வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்

    வாடினேன் பசியினால் இளைத்தே

    வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த

    வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்”

    என்று துன்பத்தைத் தாம் எவ்விடத்துக் கண்டாலும், அஃது ஓரறிவுள்ள பயிராகட்டும் அல்லது ஆறறிவுள்ள உயிராகட்டும், தம் மனம் வாடுகின்றது; பதைக்கின்றது என்கின்றார். இதுவல்லவோ உண்மையான உயிரிரக்கம் (ஜீவகாருண்யம்) என்பது! பிற உயிர்கள் படும் துன்பம் நம் மனத்தைப் பாதித்தாலே போதும் நாம் அவ்வுயிர்கட்கு ஊறு செய்ய அஞ்சுவோம். ’இரக்கம் அல்லது அருள்’ என்று கூறப்படும் உயர் பண்பும், அது பிறப்பதற்குக் காரணமாயிருக்கும் ’அன்பு’ என்ற தாய்ப்பண்பும் மனிதர்கள் அனைவரும் கைக்கொள்ள வேண்டிய உயர்ந்த பண்புகளாகும்.  தூய அன்பின் பிடியில் வசப்படாதார் யார்?

    ”அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே” என்றும், “அன்பே சிவம்” என்றும் நம் அருளாளர்கள் இறைவனையே தம்அன்பினால் கட்டிவைத்தனர் என்று திருமுறைகளும், இன்னபிறச் சமய நூல்களும் சான்றாதாரம் காட்டவில்லையா? அப்படியிருக்க மனித மனங்களை வசப்படுத்த, அவர்தம் மனத்தில் இடம்பிடிக்க அன்பைவிட உயர்ந்த சாதனம் வேறென்ன இருக்க முடியும்? அத்தகைய உயர்ந்த அன்பையும், அதன் இளவலான மனிதநேயத்தையும் சக மனிதர்கள்பால் செலுத்துவோம்.

    ”மனிதர் நோக மனிதர் பார்க்கும்

    வாழ்க்கை இனியுண்டோ?” என்ற மகாகவியின் வரிகளை உணர்ந்து கொள்வோம். கொலைவெறியும், வக்கிர எண்ணங்களும் நம்மைவிட்டு முற்றிலும் ஒழியட்டும். அன்பும், அருளும் நம் பார்வையில் நிரம்பி வழியட்டும்.

    அடுத்து நாம் பின்பற்ற வேண்டிய ஓர் உயர்ந்த குணம் அல்லது கொள்கை எனக் கூடச் சொல்லலாம் – அதன் பேர் எளிமை. காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல்லற்ற தன்மையும் உடைய ஓர் அரசனின் நாட்டை உலகமே புகழும் என்கின்றார் வள்ளுவப் பெருந்தகை.

    ”காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

    மீக்கூறும் மன்னன் நிலம்.” என்பது அவர் வாக்கு.

    மன்னனே இப்படியிருக்கவேண்டுமென்றால் அவனால் காக்கப்படும் மக்களும் அவ்வாரிருத்தல்தானே முறை. ஆகவே பகட்டும், படாடோபமும் அற்ற எளிமையை மனிதர்கள் கடைப்பிடிப்பது சிறந்தது. அத்தகு எளிமை நம்மிடம் குடிபுக ’அவா அற்ற தன்மை’ நம்மிடம் முதலில் வந்து சேரவேண்டும். ’ஆசையே துன்பத்திற்குக் காரணம்’ என்றார் புத்தர் பெருமான். துன்பத்திற்கு மட்டுமல்ல தேவையற்ற வீண் ஆடம்பரங்களுக்கும், வீண் செலவுகட்கும், போலி கௌரவத்திற்கும் கூட அளவுக்கு மீறிய ஆசைதானே அடித்தளம் அமைத்துக் கொடுக்கின்றது.

    ”ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
    ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
    ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பங்கள்
    ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.”  என்று ஈசனாரிடம் கூட ஆசையோ, பற்றோ கொள்ள வேண்டாம், ஆசையினால் துன்பங்களே நேரும்; அதனை விட விட ஆனந்தம் சேரும் என்று திருமூலரும் தன் திருமந்திரத்தில் புத்தரின் கருத்தையே வலியுறுத்திச் சொல்கின்றார்.

    நம் வான்புகழ் வள்ளுவரும் ஆசையை அறுப்பதன் அவசியத்தைத் தன் ”அவா அறுத்தல்” என்ற அதிகாரத்தில் விரித்துக் கூறி விளங்க வைக்கின்றார்.

    ”வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை

    யாண்டும் அஃதொப்பது இல்.” என்பது குறள்.

    செல்வத்திலேயே உயர்ந்த செல்வம் எது தெரியுமா? எதையும் வேண்டாத அவா அற்ற தன்மையே ஆகும். அதற்கீடான செல்வம் எங்குமே இல்லை என்கின்றார் அவர்.

    வள்ளுவரும், ஏனைய சான்றோரும் போற்றிக் கொண்டாடும் ஆசை ஒழிப்புக் கொள்கையானது சொல்லும் அளவிற்குச் சுலபமாகச் செயல்படுத்த முடியாத ஒன்றுதான் என்பதனை மறுப்பதற்கில்லை. அதுவும் போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில் வெல்வதற்கும், நம் அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கும் ஆசைகள் தேவையானவைதான் என்ற கருத்தும் நம்முன் வைக்கப்படுகின்றது. எனவே ஆசைகளை முற்றாக ஒழிப்பது என்ற கடுமையான கொள்கையைச் (rigid principle) சற்றே தளர்த்தி, முதலில் நம் ஆசைகளைப் பட்டியலிடுவோம். அத்தியாவசியமானது, அவசியமானது, ஆடம்பர வகையைச் சேர்ந்தது என்று அவ்வாசைகளைப் பிரித்து வைப்போம். முதல் வகையைச் சார்ந்த ஆசைகளை மட்டும் நம் கவனத்தில் கொண்டு அவற்றை அடைய முயலுவோம். வெற்றிகரமாக அவற்றை அடைந்துவிட்டால் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள ‘அவசியமானது’ வகையைச் சேர்ந்த ஆசைகளைப் பற்றி ஆய்வு செய்வோம். அவ்வாசைகள் நிறைவேறாவிட்டாலும் நமக்கொன்றும் (பெரிய) இழப்பு இல்லை என்பது உறுதியானால் அவற்றைக் கூட நாம் விட்டுவிடலாம். மூன்றாவதான ’ஆடம்பர வகை’யைச் சேர்ந்த ஆசைகளை நாம் நம் பட்டியலிலிருந்தே நீக்கிவிடலாம். அவற்றை அடையமுயல்வது நமக்குத் தேவையற்ற துன்பத்தைத் தருவதோடல்லாமல் நம்மைக் கடனாளியாகக் கூட ஆக்கிவிடக்கூடும். ஆகவே தேவையற்ற ஆசைகளை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டு நிம்மதியாக வாழ்வோம். வீண் ஆசைகளை ஒழித்து வருமானத்திற்குள் குடும்பம் நடத்தப் பழகிக்கொள்வதுதான் வாழ்வின் வெற்றிக்கும், பாதுகாப்பிற்கும் வழிவகுக்கும்.

    “ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லைப்

    போகாறு அகலாக் கடை.” என்பது எல்லாரும் நடைமுறையில் செயற்படுத்த வேண்டிய வள்ளுவரின் அனுபவ மொழி.

    அடுத்து, மனிதர்களை மனிதர்களாக வாழவைக்கும் மற்றுமோர் தலையாய பண்பு குறித்துச் சிந்திப்போம். பீடிகை எதற்கு…? ‘ஒழுக்கம்’ என்ற மந்திரச் சொல்லே அது.

    ஒழுக்கத்தின் இன்றியமையாமையை அறிய வள்ளுவத்தினும் உயர்ந்த சான்றை யாங்கணுமே காண இயலாது என்று உறுதிபடச் சொல்லலாம்.

    ஒழுக்கத்தை உயிரினும் மேலாய் மதித்துப் போற்றவேண்டும் என அறிவுறுத்தும் வள்ளுவர், அப்பண்பிலிருந்து தவறுதலால் பெரும்பழிதான் ஒருவனுக்கு ஏற்படும் என்று எச்சரிக்கவும் தவறவில்லை.

    “ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

    எய்துவர் எய்தாப் பழி.” என்கின்றார்.

    சமுதாயத்தில் தற்போது அதிக அளவில் நடைபெற்றுவரும் ஒழுக்கக்கேடான செயற்பாடுகளும், அதன் விளைவாய் ஒழுக்கம் தவறுவோர் அடைகின்ற துடைக்கவியலாப் பழியும், அவர்களால் பாதிக்கப்பட்டோரின் துன்பங்களும், சொல்லொணாத் துயரங்களும் ஒழுக்கத்தின் அவசியத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதாகவே உள்ளன.

    வாழ்வியல் நன்னெறிகளைப் போதிக்கும் உலகப் பொதுமறையாம் திருக்குறளையும், வீரத் துறவி விவேகானந்தரின் சிந்தனைகளையும் நம் இந்திய மாணாக்கர் அனைவரும் அறிந்து பின்பற்றும் வகையில் அகில இந்திய அளவில் அதனை மாணாக்கரின் பள்ளிப் பாடத்திட்டத்தில் வைப்பது அவர்தம் ஒழுக்கத்தையும், உயர் சிந்தனைகளையும் வளர்ப்பதில் பேருதவி புரியும் எனத் தோன்றுகிறது. ஒழுக்கம் என்பது ஏதோ இல்லறத்தைத் துறந்தார்க்கும், ஞானியர்க்கும் மட்டுமே வகுக்கப்பட்ட வாழ்க்கை முறை போலவும்; இளைஞர்களும், இல்லறத்தை மேற்கொள்வோரும் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றும் எண்ணுகின்ற மனநிலை முதலில் மாறவேண்டும். நல்லொழுக்கமும், நன்னெறிகளும், பெண்களைத் தாயாகவும், உடன்பிறப்பாகவும் எண்ணும் நற்பண்பும் சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு வீட்டிலும், கல்விக் கூடங்களிலும் கற்பிக்கப்பட வேண்டும். சமுதாய மாற்றத்திற்கு அவை உண்மையிலேயே பேருதவி புரியும்.

    மேலே கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள நற்பண்புகளில் ஏதேனும் ஒன்றிரண்டையேனும் நம் மக்கள் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து பின்பற்றத் தொடங்குவார்களேயானால் சமுதாயம் செம்மையுறும். தனிமனித விருப்பு, வெறுப்பு, தேவையற்ற போட்டி, பொறாமை, பேராசை ஆகியவை மறையும். நல்லெண்ணமும், மனிதநேயமும் மலர்ந்து மணம்வீசும். வீடும், நாடும் வளம் பெறும். மகாகவி கனவு கண்டதுபோல் எல்லாரும் அமரநிலை எய்தும் வழிமுறையை இந்தியா உண்மையிலேயே உலகிற்கு அளிக்கும்.

    படத்திற்கு நன்றி: http://www.tamilhindu.com/2008/07/specialfeatureanjal/

    Share
  • சாய்ந்து சாய்ந்து… அவள் பார்த்த போது …

    பிரவீண் குமார்

    இன்று… மதியம்… பெங்களூர் – சென்னை நெடுஞ்சாலை.

    இதுவரை அப்படி ஒரு விரக்தியை என் வாழ்க்கையில் நான் அனுபவித்ததில்லை. காரை வேகமாக ஓட்டிக்கொண்டு பெங்களூரில் இருந்து சென்னை செல்கிறேன். வேகம். வேகம்.. என்னால் முடிந்தவரை வேகமாக ஓட்டிக்கொண்டு இருக்கிறேன். ஸ்பீடா மீட்டரை பார்க்கவில்லை. பார்க்கவும் விரும்பவில்லை.  எனக்கு ஏன் இந்த நிலைமை. எங்கேயாவது போய் செத்துவிடலாமா என்று கூட இந்த மூன்று நாட்களில் தோன்றிவிட்டது.  எங்கே என் அனிதாவை நிஜமாகவே என்னை  விட்டு பிரித்து விடுவார்களோ என்று தூக்கம் கூட வரவில்லை. அவள் இல்லாமல் எப்படி என்னால் வாழ முடியும்? இன்னும் பத்து நாட்கள் தான் இருக்கிறது  எனக்கும் அவளுக்கும் திருமணம் நடைபெற.  அவள் தான் என் மனைவி என்று மனதளவில் முழுதாக நம்பிக்கொண்டு இருக்கிறேன். நண்பர்கள் அனைவரிடமும் அவளைப்பற்றியே பேசியபடி இருக்கிறேன். திருமணத்திற்கு  மண்டபம் கூட புக் பண்ணியாயிற்று. நகை, புடவை, எனக்கு வேட்டி சட்டை என்று அனைத்தும் எடுத்தாயிற்று.  சொல்லப்போனால் நானும் அவளும் ஒன்றாக கடைக்கு சென்றுதான் எங்களுக்கான உடைகளை வாங்கினோம்.  எல்லா உறவினர்களுக்கும் பத்திரிக்கை வைத்தாயிற்று. நண்பர்கள் மட்டும் தான் பாக்கி.

    இப்போ போய் ஜாதகம், தோஷம், மாங்கல்ய பலம்னு. ச்சே.. என்ன மயிருக்கு அந்த ஜோசியக்காரனை போய் பார்த்தாங்க? அந்த நாதேறி  மட்டும் என் கையில கெடைச்சான்.. கடைசி நேரத்துல அவள் குடும்பத்தினரையும் குழப்பி அவளையும் குழப்பி. அனிதா ஒன்றும் விவரம் இல்லாதவள் இல்லையே. எப்படி இதை நம்பினாள் என்று புரியவில்லை.  ம்ம்ம்… என்னை கல்யாணம் செய்தால் நான் இறந்துவிடுவேன் என்று சொன்னால் யார் தான் பயப்படமாட்டார்கள்? பாவம் என் அனிதா. மனதளவில் எவ்வளவு கஷ்டம் அவளுக்கும். எப்படி இந்த சூழ்நிலையில் என்னிடம் அவளால் பேச முடியும்.

    பிளாஷ் பேக்:

    அனிதா. என் வாழ்கையை புதுப்பிக்க வந்தவள். அவளை எனக்கு சிறுவயதில் இருந்தே தெரியும்.  கோயமுத்தூரில் உள்ள எங்கள் வீட்டிற்கு பக்கத்து தெரு தான் அவர்கள் குடும்பமும். அவள் அக்கா  ஜோதிக்கு என் வயதுதான். நாங்கள் வேறு பள்ளிகளில் படித்தாலும் எப்பொழுதாவது படிப்பில் சந்தேகம் இருந்தால் எங்கள் வீட்டிற்கு வந்து என்னிடம்  கேட்பாள். நானும் எனக்கு தெரிந்தவரை அவளுக்கு  உதவி இருக்கிறேன். . நான் படிப்பில் சூரப்புலி இல்லையென்றாலும் என்னை விட அவள் நிஜமாகவே மக்காக இருந்ததினால் அது சாத்தியமாயிற்று.

    ஒவ்வொரு முறை அவள் அக்கா என் வீட்டிற்கு வரும்போது அனிதாவையும் துணைக்கு தன்னுடன் அழைத்து வருவாள். அப்படிதான் அனிதா எனக்கு பரிட்சயம். அப்போ ரொம்ப குட்டி பெண் அவள். என்னைவிட ஐந்து வருடம் சிறியவள் அவள்.  அண்ணா, அண்ணா என்று மடியில் வந்து உட்கார்ந்து விளையாடுவாள். பிற்காலத்தில் அந்த அண்ணனை தான் அவள் கல்யாணம் செய்துகொள்ள போகிறாள் என்று அவளுக்கு அப்போது தெரியாது. தெரிந்திருந்தால் அண்ணா என்று அழைத்திருக்கமாட்டாள். கடைசியாக அவளிடம் பேசியபோது போது கூட இதை சொல்லி இருவரும் சிரித்துக்கொண்டோம்.

    சிறுவயதில் அவளை கொஞ்சி இருக்கிறேன். அவளிடம் விளையாடி இருக்கிறேன். அது ஒரு அழகிய நிலாக்காலம். நாட்கள் தான் ஜெட் வேகத்தில் ஓடுகிறதே. அதன் பிறகு இன்ஜினியரிங் சென்னையில் சேர்ந்தேன். ஆச்சரியத்தக்க வகையில் எனக்கு படிப்பில் ஈடுபாடு அதிகமானது.  ஒரு கேர்ல் ப்ரெண்டும் கூட எனக்கு  செட் ஆகாமல் போனது தான் அதற்கு முக்கிய காரணம். காதல் படத்தில் வரும் அந்த விரிச்சககாந்த் உருவத்தில் இருப்பவனுக்கு கூட அதே படத்தில் வரும் சந்தியா போன்ற பெண்களை கரெக்ட் செய்து பைக்கில் ஏற்றி செல்லும் திறமை கடைசிவரை எனக்கு கை கூடி வரவில்லை. ஆனால் ஒரு வகையில் எனக்கு நல்லது தான்.

    இன்னும் என்னுடன் படித்தவர்கள் பலர் வேலைக்கே திண்டாடிகொண்டு இருக்க எனக்கு படித்துமுடித்ததும்  பெங்களூரில் கூகிள் கம்பெனியில் வேலை..  என் கனவு வேலை அது.  பின்னே உலகின் தலை சிறந்த நிறுவனம் ஆயிற்றே  கை நிறைய சம்பளம் பிசியான வாழ்க்கை. கட கடவென வருடங்கள் ஓடியது. நமக்கும் வயசாகிறது என்று வீட்டில் கல்யாண பேச்சு வரும்போது தான் நம்மால் உணரமுடிகிறது. ஒரு விடுமுறை தினத்தில் கோயமுத்தூரில் வீட்டிற்கு சென்றபோதுதான் நானும் அதை உணர்ந்தேன்.

    “அதான் அந்த பாண்டியன் சின்ன மவ அனிதா இருக்காள்ள. இப்போதான் காலேக் படிச்சு முடிச்சி இருக்கா. பாக்க ரொம்ப லட்சணமா இருப்பா. ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட கோவில்ல அவங்க அம்மாவை பார்த்தேன். நம்ம அருணுக்கு அவளை குடுக்க அவங்களுக்கு விருப்பம் இருக்கு போல “ என்றார் அம்மா.

    “இவனுக்கும் வயசாச்சி. அந்த ஜாதகத்தை வாங்கியாந்து பாரு. நல்ல குடும்பம் தான். ஜாதகம் ஒத்து வந்தா சட்டுபுட்டுன்னு  கல்யாணத்த முடிச்சிடலாம்.” என்று அதற்கு ஆமோதித்தார் என் அப்பா.

    வீட்டில் என்னுடய அறையில் இருந்து இந்த உரையாடலை கேட்க்கும்போது எனக்குள் ஒரு புது வித உணர்வு.  அதுவரை தனியாக வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்த  எனக்கு துணை தேடுகிறார்கள் என்றதும் ஒரு இனம் புரியா சந்தோசம். அப்போ இனிமேல் என் உலகத்துக்குள்  என்னைத்தவிர இன்னொருவரும்  வரப்போகிறார். என்னை  முழுநேரம் கொஞ்சுவதற்கும் தேவைப்படும்போது திட்டுவதற்க்கும்  ஒருவர். அடடா.  என் தனிமை சுகத்தை பகிர்ந்துக்கொள்ள  வரப்போகும் அந்த பெண் யார்? “. அவள் பெயர் என்ன. அவள் எப்படி இருப்பாள்? ஆர்வம் தாங்காமல் அப்பா இல்லாத போது அம்மாவிடம்  கேட்டே விட்டேன்.

    நீ ஸ்கூல் படிக்கும்போது உன்னையும் ஒரு ஆளா மதிச்சி உன்கிட்ட படிப்ப பத்தி பேச நம்ம வீட்டுக்கு ஒரு பொண்ணு வருமே. . அதாண்டா நம்ம ஜோதி… பக்கத்துக்கு தெருவுல இருக்காங்களே.

    ஐயோ, அம்மா. .. அவளா?!! அது மொக்க பிகருமா. ஆறு மாசம் முன்னாடி கூட  குமாரு கல்யாணத்துல பார்த்தேன். அதுமட்டும் இல்லாம என்னோட அஞ்சாறு மாசம் அவ பெருசுனு கூட நினைக்கறேன்.

    டேய்..  ரொம்ப பேசாதடா.. அவளுக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம். ஆகுது. அன்னைக்கி அவ கூட  அவன் புருஷன் இருந்திருப்பான். அத கூட கவனிக்காம என்னத்த பார்த்தயோ.  நான் அப்பாகிட்ட பேசுனது  அவ தங்கச்சி அனிதவைடா:”

    ச்சீ போ..மா… உனக்கு வேற வேலையே இல்ல என்று சொல்லிவிட்டு வெட்கத்தோடு அங்கிருந்து நகர்ந்தேன். எனக்கு வெட்கப்படதெரியும் என்று எனக்கே அப்போது தான் தெரியும்.  ஆனால் அம்மா சொன்னது போல் நான் கனவில் தான் இருந்தேன். கனவில் மிதந்துக்கொண்டு இருந்தேன்.  அனிதா சிறுமியாக இருந்த உருவத்தை நினைத்து இப்போது எப்படி இருப்பாள் என்று கற்பனை செய்துப்பார்த்தேன். ம்ம்.ஹூம்.. அதே குழந்தை முகம் தான் ஞாபகம் வந்துப்போனது. இப்போ அவள் எப்படி இருப்பாள்? இன்னும் அதே மாதிரி துருதுருவென்று இருப்பாளோ? எப்படி அவளை பார்ப்பது?

    இன்னமும் என்னால் நம்பமுடியவில்லை. பக்கத்து தெருவில் இருந்த ஒரு வயசுப்பெண்ணை  இத்தனை நாளாக எப்படி பார்க்காமல் தவறவிட்டோம். நமக்கு தெரியாமல் நம்ம ஏரியாவில் ஒரு பிகரா? சரிதான். நான் சென்னையில் கல்லூரி படிக்க சென்று, பெங்களூரில் வேலைக்கு சென்ற அந்த சில வருடங்களில் தான் அவள் வயசுக்கே வந்திருப்பா. சின்ன பொண்ணு இப்போ வளந்துடுச்சு. இந்த அருணுக்குகாக இப்போ காத்து இருக்குது. உள்ளம் குதூகலித்தது.

    “டேய்.. இன்னும் பொண்ணு பார்க்கவில்லை,  வெறும் யோசனை தான் அது. அதனால கற்பனையில் மிதக்க வேண்டாம்டா “என்று அம்மா சொன்ன ஞாபகம் வந்துப்போனது. ஐம்புலன்களையும் அடக்கிக்கொண்டு மேற்கொண்டு புலன் விசாரணையில் இறங்காமல் மறுநாள் வேலைக்கு பெங்களூர் சென்றுவிட்டேன்.

    ரெண்டு நாள் தாக்குப்பிடித்தேன் முடியவில்லை. என் தெருவில் இருக்கும் ஒரு நண்பனுக்கு அதே வாரத்தில் போன் போட்டு விசாரித்தேன்.

    சூப்பரா இருப்பாள் மச்சா.. நான் கூட அவளை நெறையவாட்டி ரூட்டு விட்டு பார்த்தேன். ஆனா அவ மசியவே இல்ல. படிச்சிட்டு இப்போ வீட்ல தான் இருப்பா போல. எவனுக்கு அவல கட்டிக்கற பாக்கியமோ தெரியல. அதுசரி ஏன்டா கேட்கற?

    எனக்கு அவளை பொண்ணு பாக்கறாங்க!

    எதிர்முனை கப்சுப். அவன் பெயர் சுதாகர். சிறுவயதில் என்னுடன் ஸ்கூலில் படித்தான். எவ்வளோ தூரம் சொல்லியும் கல்லூரி சேராமல் அவங்க அப்பாவோட மளிகை வியாபாரம் பார்த்துக்கொண்டு இருக்கறான். அப்போ அப்போ எனக்கு மொக்கை ஜோக்கா எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கொண்டு இருப்பான். இப்பவும் ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது.

    “சோறின்றி வாழ்ந்தாலும் வாழ்வார் மனிதர்

    பிகரின்றி வாழ்வது அரிது.”

    என்று வள்ளூவர் அப்போவே சொல்லி இருக்காரு மச்சான். என்னை மன்னிச்சிடு. அனிதா எனக்கு இப்போ தங்கச்சி மாதிரி டா. “ என்று என்னை சமாதனம் செய்ய முயற்சித்தான்.

    ஆனால் எனக்கு அவன் மேல் சுத்தமாய் கோபமில்லை. அவளை பற்றி யாரிடம் கேட்பது என்று அலைந்த போது கிடைத்த ஒரு முக்கிய செய்தி இது. அவனிடம் பேசிய பிறகு இன்ஜினியர் இன்றி, கொத்தனார் இன்றி, மிகவும் பிரம்மாண்டமாய் எனக்குள் காதல் கோட்டை எழும்பிக்கொண்டு இருந்தது.

    அந்த முக்கியமான நாள் வந்தது. அனிதா வீட்டிற்கு அம்மா அன்று போவதாய் சொன்னார்கள். எனக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. பத்து நாள் ஆனாலும் நானாக அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இதுவரை போன் போட்டதில்லை. அவர்களாக எனக்கு போட்டால் தான் உண்டு. ஒவ்வொருமுறையும் “ஒரு போன் போட்டா என்னடா அருண் “ என்று தான் அம்மா ஆரமிக்கும்.

    “சாருக்கு இன்னைக்கு ரொம்ப பாசம் பொங்குது போல. காலைல இருந்து போன் மேல போன் போட்டுட்டு இருக்க.”

    இல்லம்மா. சும்மா தான். எங்க இருக்க?

    இப்போ தான் அனிதா வீட்டுல இருந்து வரேன்.

    வாவ்.. ஜாதகம் பாத்தியா? அவங்க வீட்ல என்ன சொன்னாங்க? அப்புறம்…. உன் மருமவ புள்ள பாக்க எப்படி இருக்கா? உன்னை மாதிரி அழகா இருக்காளா? போட்டா வாங்கினியா?

    அதான பார்த்தேன்… மொச புடிக்கிற நாய மூஞ்ச பார்த்தா தெரியும்டா.

    ஹி ஹீ. அது இல்லம்மா… எனக்காக இல்லைன்னாலும் உனக்கு ஒரு அழகான மருமவ அமைஞ்சா எனக்கு அது போதும்மா.

    ரொம்ப வழியுதடா

    ஐயோ அம்மா.. அங்க என்ன ஆச்சுன்னு சொல்லு.

    .

    .நமக்கு ஜாதக பொருத்தம் அருமையா இருக்கு. அவங்களுக்கும் நம்மக்கு கொடுப்பதில் விருப்பம். ஜாதகம் பார்த்துட்டு சொல்றதா சொல்லி இருக்காங்க. உன்னோட போட்டோ எதுனா இருந்தா அனுப்புடா. அவங்களுக்கு கொடுக்கணும். ஒழுங்கா லட்சணமா .மீசை இருக்கற போட்டோவா பாத்து அனுப்பு.

    சரி அனுப்பறேன். அனிதா இருந்தாளா?

    இருந்தாடா.. அப்படியே கைய புடிச்சு நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடலாம்னு தோணுச்சுடா அருண். எனக்கு அவளை அவ்வளோ புடிச்சிருக்கு டா.

    ஓ. அவ போட்டோ இருக்கா?

    போட்டோவ கேட்டேன். அவ லேப்டாப்ல தான் இருக்கு வேணும்னா மெயில் அனுப்பறேன்னு சொன்னா.

    ஐயோ.. என் மெயில் ஐடி கொடுக்க வேண்டியது தானா? நீ ஒரு மங்குணிமா. அத சொல்லி இருக்க மாட்டியே..

    டேய். வந்தனா பல்லை தட்டிடுவேன். நான் உன் அம்மாடா. உன்னை பத்தி எனக்கு தெரியாதா… கூடவே ஒக்காந்து உன்னோட ஈமெயிலுக்கு போட்டோ அனுப்பி வச்சிட்டுதான் வந்தேன். ஒரு அரைமணி நேரம் முன்னாடி தான் அனுப்பினோம்.. இப்போ தான் வீட்டுக்கு வந்தேன். பாத்துட்டு சொல்லுடா.

    சரி சரி போனை வை என்று கட் பண்ணிவிட்டு அவசர அவசரமாக மெயில் ஓபன் செய்து பார்த்தேன்.. அனிதா பாண்டியன் என்ற பெயரில் மெயில் வந்திருந்தது. கூடிய சீக்கிரம் அனிதா அருண் என்று மாத்திவிடுகிறேன் என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். எனது க்யுபிகலில் யாரும் இல்லை என்றாலும் சுத்தி முத்தி பார்த்துக்கொண்டேன். ஒரு மெயிலை திறப்பதற்கு நான் இத்தனை வித்தை செய்ததில்லை. கிளிக் செய்து பார்த்தால் அது ஒரு பிளான்க் மெயில். போட்டோவும் இல்லை ஒன்னும் இல்லை. ச்சை.. என்னை ஏமாற்றி விட்டாள்.

    எனக்குள்ளே சிரித்துக்கொண்டேன். இன்னமும் அனிதா கொஞ்சமும். மாறவில்லை. . போட்டோ அட்டாச்மென்ட் மிஸ்ஸிங் என்று அவளுக்கு மெயில் அனுப்பினேன். முதலில் உங்கபோட்டோவை அனுப்புங்க, அதுக்குள்ள என்னோட போட்டோவை கேட்டா எப்படி என்று உடனே அவளிடம் இருந்து பதில் மெயில் வந்தது. என்னிடம் இருப்பதிலேயே சிறந்த புகைப்படம் மூன்றை தேர்வு செய்து உடனே அனுப்பினேன். ஏதாவது ஒன்றிலாவது சுமாராக இருக்க மாட்டேனா என்ற நப்பாசை தான். ஆனால் இரண்டு மணிநேரமாகியும் அப்போதும் அவளிடம் இருந்து போட்டோ வரவில்லை.  நான் விடவில்லை.. இந்த காலத்தில்  மொக்க பிகர் கூட ஓவரா பண்ணுவாளுங்க. இவ ரேஞ்சுகு இது கூட பண்ணலேன்னா எப்படி என்று மனதை தேத்திக்கொண்டு மீண்டும் மெயில் அனுப்பினேன். ஒருவழியாக அவளை  சேட்டில் பிடித்தேன்.  நல்ல போட்டோ ஏதும் இப்போ இல்லை விரைவில் அனுப்புறேன் என்று மழுப்பினாள்.

    அடுத்து இரண்டு நாட்களும் சேட்டிலே பேசிக்கொண்டோம். சிநேகம் வளர்ந்தது. நம்பிக்கை பிறந்தது. அனிதா என்ற பிசாசு உடலெங்கும் முழுதாய் ஊடுருவிக்கொண்டு இருந்தது.  ஆபிசில் வேலை ஓடவில்லை. இரவில் சரியாக தூக்கமும் இல்லை. சோறும் இறங்கவில்லை. இதுவரை எந்த பெண்ணையும் பற்றி  இப்படி முழுநேர தொழிலாய் நான் சிந்தித்துக்கொண்டு இருந்ததில்லை. ஒரு பெண் உள்ளே வந்துவிட்டால்  எவ்வளோ கஷ்டம் என்று அப்போது தான் புரிந்தது. என இதயப்பூந்தோட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் நீர் ஊற்றி காதல் செடி வளர்த்தாள் அவள்.  மூன்றாவது நாள் அதற்கு பலன் கிடைத்தது. ஒருவழியாக அவள் போன் நம்பரை வாங்கிவிட்டேன். கடவுளின் விலாசம் கிடைத்த பக்தனாய் பரவசமடைந்தேன். போனை போட்டேன்.

    “ஹலோ.. “

    முதன் முறை அவள் குரலை கேட்க்கிறேன். ரெண்டு  பீரை பாட்டம் ஸிப்  அடிச்ச மாதிரி ஜிவ்வென்று இருந்தது..  “நான் அனிதா பேசறேன்… சாரி.. அருண் இருக்காங்களா?.. ஆஹ்…. நான் அருண் பேசறேன்.. ”.  முதல் பேச்சிலேயே பயங்கரமாய் சொதப்பினேன்.  அவள் சாதரணமாய் தான் பேசினாள். பரஸ்பரம் விசாரிப்புக்குப்பின் நான் நேரடியாக விஷயத்திற்கு வந்தேன்.

    “அனிதா, ஏன் உன்னோட போட்டோவை கடைசி வரை நீ அனுப்பவே இல்லை.”

    இப்போ எதுக்குங்க போட்டோ லாம்.

    “உன்னை சின்ன வயசுல பார்த்தது தான். இப்போ எப்படி இருப்பன்னு கூட தெரியல. என்னோட போட்டோ பாத்துட்டு கூட நீ ஏதும் சொல்லவில்லை? எங்க வீட்ல உன்ன பொண்ணு கேட்டிருக்காங்க உனக்கு தெரியுமில்ல. அப்புறம் என்ன பிரச்சனை.

    தெரியும்,,, ஆனா இப்போ வேணாம்க.

    சரி. வேணும்னா ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு அனுப்பு. நான் வெயிட் பண்றேன்.

    ஐயோ வெளயாடாதீங்க. ப்ளீஸ் பி சீரியஸ். எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்ங்க. சொன்னா புரிஞ்சிக்க ட்ரை பண்ணுங்க.

    அட கடவுளே.. … ஏன்..? என்னை புடிக்கலையா?

    அப்டி இல்ல. பட்.

    என்ன பட்.. உங்கவீட்ல இதுல சம்பந்தம் இல்லையா?

    அது இல்லைங்க…  நான் ஏற்கனவே ஒருத்தரை லவ் பண்ணிட்டு இருக்கேன். காலேஜுல என்னோட சீனியர் அவர். இப்போ சென்னையில் வேலை செஞ்சிட்டு இருக்கார். அடுத்த மாசம் எனக்கு டீ.சி.எஸ் கம்பெனியில் சாப்ட்வேர் வேலை. நானும் சென்னை போயிடுவேன். அங்க போனதும் ரெண்டு மாசத்துல கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கோம். இது தான் காரணம்.

    எனக்கு ஒரு நிமிடம் என்ன சொல்வது என்று தெரியவில்லை. தலையே சுத்த ஆரம்பிப்பது போல் ஆயிற்று. இதயம் படத்தில் முரளி பாடும் அந்த சோக பாடல் ஏதோ நினைவிற்க்குள் வந்து போனது. வார்த்தைகள் வரவில்லை. அமைதியானேன்.

    ஹலோ..  லைன்ல இருக்கீங்களா?

    ம்ம்ம். இருக்கேன்.” உடைந்து போயிருந்தேன்.

    அயம் சாரி.. உங்களை ஹர்ட் பண்ணி இருந்தா.

    தட்ஸ் ஓகே. தேங்க்ஸ் பார் லெட்டிங் மே நோ. இது உங்க அம்மாவுக்கு தெரியுமா?

    அம்மாவுக்கு மட்டும் தெரியும். அவங்களுக்கு இஷ்டம் இல்லை. பட் கன்வின்ஸ் பண்ணிட்டேன்.

    கோபத்தில் போனை வைத்தேன்.

    எஸ்.எம்.எஸ் அனுப்பினாள்.

    “சாரி.. உங்களை கஷ்டப்டுத்தி இருந்தால் மன்னிக்கவும்”.

    “கடைசி வரைக்கும் உங்களுக்கு நல்ல ப்ரெண்ட் ஆக இருப்பேன்”

    அவளுடைய எல்லா மெசேஜும் எனக்கு டெம்ப்ளேட் மெசேஜாக தான் தோன்றியது. அவளுக்கு ப்ரெண்ட் ஆகா மாறி அவளுடைய ரெஜிஸ்டர் மாரேஜிக்கு கையெழுத்து போட்டுவிட்டு “எங்கிருந்தாலும் வாழ்க” பாடிவிட்டு வரும் முட்டாளாக நான் இருக்க விரும்பவில்லை.

    அம்மாவுக்கு போனை போட்டேன்.. “லவ் பண்ணினா வீட்ல சொல்லி தொலைய வேண்டியது தான. வீட்ல மாப்பிள்ளை பார்க்க விடாமல் பண்ணி இருந்தால் எனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா? என் மனசுல ஆசை காட்டிவிட்டு ச்சே… கடவுள் என்னை மட்டும் ஏன் இப்படி சோதிக்கிறான்.” என் புலம்பல் அம்மாவுக்கு முதலில் புரியவில்லை. அப்புறம் அவங்களுக்கும் அது அதிர்ச்சி அளிதத்து.

    சரி விடுடா. உனக்கு என்ன குறைச்சல்.. உனக்கு ரதி மாதிரி ஒரு பொண்ணை பார்த்து அவளுக்கு முன்னாடி உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கறேன் என்று சொன்ன அம்மாவின் குரலில் சக்தியில்லை.

    என்னை விட அம்மாவிற்கு அனிதா ரொம்ப பிடிக்கும். நான் தான் அவளை பார்த்ததில்லையே தவிர அம்மா விற்கு அவள் பழக்கம் தான். அவங்க வீட்ல மாப்பிள்ளை கேட்டவுடன் அதிகம்  சந்தோசப்பட்டது அவங்கதான். ஜாதகம் பொருந்தி வந்தவுடன் என்னை விட அதிகம் கனவு கண்டதும் அவங்கதான்.

    அதன் பிறகு அனிதாவுடன்  பேசவில்லை. அவர்கள் வீட்டில் இருந்தும் தகவல் ஏதுமில்லை.  அவளிடம் இருந்து முற்றிலும் விலகி இருந்தாலும் கடல் அலைபோல் ஞாபகங்கள் சிலசமயம் வந்து நெஞ்சில் மோதிக்கொண்டு தான் இருந்தது. எனக்கே தெரியாமல் அவளை நான் காதலித்து இருந்தேன். இன்னும் கொஞ்சநாளில் சரி ஆகிவிடும் என்று அந்த வலிகளை பொறுத்துக்கொண்டேன்.   “எம்மா எம்மா காதல் பொன்னம்மா..”.. “அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல” போன்ற பாடல்களே எனக்கு மருந்தாயின.  மூன்று மாதம் நான் கோவை செல்லவே இல்லை. செல்லவும் மனம் வரவில்லை.

    ஒரு நாள் அம்மாவிடம் இருந்து போன் வந்தது. “அனிதாவோட அம்மா வீட்டுக்கு வந்தாங்க டா… “

    என்ன சொல்ற? அதான் எல்லாம் முடிஞ்சிடுச்சு இல்ல. இப்போ என்னவாம்?

    அவங்களுக்கு ஜாதகம் பொருந்தி வருதாம். மேற்கொண்டு பேசலாம்கற மாதிரி சொன்னாங்கடா. இவ்வளோ நாள் எதுமே பேசல.. இப்போ திடீர்னு… எனக்கு என்ன நடக்குதுனே புரியலடா.

    நம்மளை முட்டாள்னு நினைசிடாங்களா? எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அனிதாவை கண்டபடி திட்ட வேண்டும்  போல் இருந்தது. அவள் நம்பரை எப்போதோ மொபைலில் இருந்து அழித்திருந்தேன். அவள் அனுப்பிய இமெயிலில் அதை மீண்டும் தேடி பிடித்து போனை போட்டேன்.

    ஹலோ… அருண்?

    “எஸ்.. இன்னும் ஞாபகம் இருக்கா?” நான் யோசித்து வைத்திருந்த அத்தனை கேட்டவர்தைகளையும் சொல்லிவிட வாயை திறந்தேன்.

    எதிர் முனையில் அழுகை சப்தம்…

    ஹே…. அனிதா..

    ……..

    அழறியா?

    ம்ம்….

    என்ன ஆச்சு

    ஒரு ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடி நீ என்னை பாத்திருக்க கூடாதா? எனக்கு நீ  ப்ரோபோஸ் செய்து இருக்க கூடாதா?

    “கமான் அனிதா.. எனக்கு ஒன்னும் புரியல..”

    தேம்பித்தேம்பி அழுதாள். எனக்கு சங்கடமாக இருந்தது. மவுனமானேன். சில நொடிகளில் அவளே பேசத்தொடங்கினாள்.

    என்னோட லவ் பிரேக் அப் ஆயிடுச்சு அருண். எல்லாம் முடிஞ்சிடுச்சு.

    ரெண்டு பேருக்கும் ஒத்துவரலை. சண்டை போட்டு பிரிஞ்சாச்சு.

    எப்போ?

    இப்போ தான் ஒரு வாரம் ஆகுது.

    ஏன் சொல்லலை?

    நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ண போறோம்னு உங்ககிட்ட சந்தோசமா சொன்னேன். இப்போ இதை எப்படி சொல்றதுன்னு தான்…

    அவளை எப்படி தேற்றுவது என்று புரியவில்லை. அவள் மேல் ஆசை வைத்து சிறிது நாளிலேயே அவள்  இல்லையென்றதும் என்னாலேயே அது  தாங்கமுடியவில்லை. . இரண்டு வருடம் லவ் பண்ணி கல்யாணம் வரைக்கும் போய்விட்ட அவள் காதல் உண்மையிலேயே பெரிய ரணம் தான்.  அவள் மேல் இன்னும் எனக்கு காதல் இருந்திருக்கிறது.  இல்லையென்றால் அவளிடம் திரும்ப பேசி இருக்கவே மாட்டேன். என் காதலை அவளுக்கு தெரியப்படுத்தவும் இது சந்தர்ப்பம் இல்லை. காயப்பட்ட மனதிற்கு ஆறுதலாகவே இருக்க விரும்பினேன் தவிர அவளுடைய இந்த வீக்னசை பயன் படுத்திக்கொள்ள எனக்கு மனமில்லை. அதன் பிறகு கொஞ்சம் போனில் பேசிக்கொண்டு தான் இருந்தோம். அதுவும் சிறிது நாட்களே. அவள் காயம் ஆறி அவளிடம் தன்னம்பிக்கை வார்த்தைகளை கேட்க்கஆரம்பித்ததும் நானாக மெல்ல விலகிக்கொண்டேன். ஆனால் கடைசி வரை அவளுடைய கடந்த காலத்தை பற்றி நான் கிளறவில்லை.

    நாட்கள் நகர்ந்தது. அனிதாவின் அம்மா காரணமில்லாமல் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்துகொண்டுதான் இருப்பதாய் என் அம்மா சொன்னார்கள். அந்த கதை எனக்கு இன்னும் புரியவில்லை. இருந்தும் அனிதாவிடம் கேட்டதில்லை. அவளையும் மறக்க முடியவில்லை. ஒரு முறை வேலை நிமித்தமாய் சென்னை செல்ல வேண்டி இருந்தது. பெங்களூரில் இருந்து என்னுடய காரில் செல்கிறேன். அவளும்  இப்போது சென்னையில் தான் வேலையில் இருக்கிறாள். சனி ஞாயிறு விடுமுறை என்பதால் வாராவாரம் வெள்ளிக்கிழமை இரவு ரயிலில் கோவை சென்றுவிடுவதாக ஏற்கனவே என்னிடம் சொல்லி இருக்கிறாள். அன்று வெள்ளிக்கிழமை தான்.

    மெசேஜ் தட்டினேன்…. “ஐயம் கம்மிங் டூ சென்னை.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.  கேன் வீ மீட் பார் காபி இன் ஈவனிங்?”.  பதில் வராது என நினைத்தேன். இரவு  ரயிலில் கோவை புறப்படுவதாகவும். எட்டு மணிக்குள்  வந்தால் கிண்டியில்  நிச்சயம் மீட் பண்ணலாம் என்றும் அவளிடம் இருந்து எஸ்.எம்.எஸ் வந்தது. அவள் வேலை செய்யும் அலுவலகமும், தங்கியிருக்கும் ஹாஸ்டலும் கிண்டி தான். நான் புறப்பட்ட நேரத்திற்கு எட்டு மணிக்குள் கிண்டி போய்விட முடியும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. முடிந்தவரை வேகமாக ஓட்டினேன். எட்டு மணி இருக்கும் சென்னைக்கு மிக அருகில் இருந்தேன். கிண்டி பேருந்து நிலையத்தில் இருப்பதாகவும் சீக்கிரம் வருமாறு மெசேஜ் வந்தது. அடித்து பிடித்து சென்னைக்குள் நான் நுழைந்தபோது இரவு ஒன்பது மணி. எப்படியும் ஊருக்கு கிளம்பி இருப்பாள் என போன் செய்தேன். பஸ் நிலையம் அருகே நாதன் கபே  ஹோட்டல் வாசலில் காத்திருப்பதாய் சொன்னாள். கிட்ட தட்ட ஒருமணி நேரம் எனக்காக பஸ்நிலையத்தில் காத்திருந்தாள் என்பது கஷ்டமாக இருந்தாலும் “எனக்காக நின்றிருந்தாள்” என்பது சந்தோசமாகத்தான் இருந்தது. என்னை அவள் முக்கியமாக நினைத்திருக்கிறாள் என்று புரிந்தது.

    இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவேன். காபி சாப்பிடலாமா?

    இதை தான் ஒரு மணி நேரமா சொல்றீங்க பாஸ்… பட்… நான் டின்னரே சாப்பிட்டு விட்டேன்.

    என்னை விட்டுட்டா?

    சாரிங்க.. நீங்க ரொம்ப லேட். வேணும்னா  நீங்க சாப்பிடுங்க நான் உங்களுக்கு கம்பனி கொடுக்கிறேன். ஆனா மறுபடியும் அதே ஹோட்டல் போக வேணாம்.. என்னை சாப்பட்டு ராணினு முடிவு பண்ணிடுவாங்க.

    வேற வழி இல்லாமல் அவள் மொக்கை ஜோக்கிற்கு சிரித்து வைத்தேன். அழகான பெண்கள் பல சமயங்களில் அப்படித்தான் போலும்.

    சரி உங்களை நான் சென்ட்ரலில் ட்ராப் செய்து விடுகிறேன் போதுமா?

    ஹலோ பாஸ்.. ட்ரெயின் இந்நேரம் கெளம்பி இருக்கும். சோ இந்த வாரம் நான் கோவை போகவில்லை. வீட்டுல போன் பண்ணி வேலை இருக்குன்னு சொல்லிட்டேன். மொதல்ல நீங்க வந்து சேருங்க… உங்களுக்கு தான் வெயிட்டிங்

    மொதல்ல பாசுனு சொல்றத நிப்பாட்டுங்க. அருண்னு கூப்பிடுங்க.

    எனக்காக அவள் இந்த வாரம் ஊருக்கே போகவில்லை. மனம் சந்தோசத்தில் துள்ளியது. அவளுக்கு நான் ஸ்பெஷல் தான் என்று கன்பார்ம் ஆனது. அவள் சொன்ன இடத்திற்கு சென்று அவளை காரில் ஏற்றிக்கொண்டேன். கட் பண்ணினால் இ.சி. ஆர் ரோடு.

    மறக்க முடியாத இரவு அது. இ.சி. ஆர் ரோட்டில்  காரை நான் ஓட்டிக்கொண்டு செல்கிறேன். “சாய்ந்து சாய்ந்து… நீ பார்க்கும் போது” பாடல் மெல்லிய சப்தத்தில் இதயத்தை வருடிக்கொண்டு இருந்தது. உள்ளே நானும் அனிதாவும் மட்டும். முதல் முதலாய் அவளை பார்க்கிறேன்.  அவளுக்கு இவ்வளவு அருகில் நான் இருப்பேன் என்ற நினைத்துக்கூட பார்த்தது இல்லை.  வெள்ளை சுடிதாரில் தேவதை போல் இருந்தாள் அவள். அழகாய் இருக்கும் பெண்கள் எல்லாருமே தேவதை தான் என்றாலும். அவள் கொஞ்சம் ஸ்பெஷல் எனக்கு. அவ்வளவு பக்கத்தில் அவள் கண்களை  பார்க்கும் நேரிடும் போதெல்லாம் அது என்னை ஏதோ செய்தன. இந்த தருணத்திற்கு தான் இத்தனை நாளாக ஏங்கி இருக்கிறேன் என்று அந்த நொடி தான் எனக்கே தெரிந்தது. அவள் அழகை பார்த்து நான் பிரம்மித்ததை நான் அவளிடம் காட்டிக்கொள்ளவில்லை. நானே ஆரம்பித்தேன்.

    “அனிதா. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்னு போனில் சொன்னேன். நீ இதுவரைக்கும் என்னனு கூட கேட்கவே  இல்லை”

    “நீங்களே சொல்லுங்க” என்றாள் மெல்லிய புன்னகையுடன்.

    “எனக்கு எப்படி ஆரம்பிக்கிறது னு தெரியல. நேரடியா விஷயத்துக்கு வரேன்.  நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படறேன்.

    “…!!!!”

    அதுவரை மொபைலில் “ஆங்க்ரி பர்ட்ஸ்” கேமில் பிசியாக இருந்த அவள் சடாரென என்னை திரும்பி பார்த்தாள். அவள் பார்வையின் வீச்சை எதிர்நோக்க சக்தி இல்லாமல் ரோட்டை பார்த்தே காரை ஓட்டிக்கொண்டு இருந்தேன்.

    “நீங்க.. சீரியஸா தான் சொல்றீங்களா? உங்களுக்கு நடந்த விஷயம் எல்லாம் தெரியும் தானே அருண்”

    “சோ வாட்.. எல்லாம் தெரியும் அனிதா..  பட் ஐ கான்ட் மிஸ் யூ பார் தட் ரீசன். இட் ஆல் ஹாபன்ஸ்”

    “அப்புறம் எப்புடி?”

    நீ அதுக்காக கல்யாணம் பண்ணிகாமலா இருக்க போற? நீயும் யாரையோ கல்யாணம் பண்ணிக்க போற., நானும் யாரையோ கல்யாணம் பண்ணிக்கபோறேன். அதுக்கு நாம ரெண்டு பேரும் பண்ணிகிட்டா என்னா? அட் லீஸ்ட் என் லவ் ஆவது சக்சஸ் ஆகட்டும் அனிதா  ப்ளீஸ். ஐ லவ் யூ சோ மச்”  நங்கூரம் மாதிரி பிட் போட்டேன்.

    “நல்லா லாஜிக்கா பேசறீங்க அருண். பட் யோசிச்சு சொல்கிறேன்.”

    “ஏன் என்னை புடிக்கலையா?”

    “அப்டி எல்லாம் ஒன்னும் இல்லை. புடிக்காம உங்க கூட கார்ல வருவனா? எனக்கு கொஞ்சம் டயம் வேணும்” என்னை பிடித்திருந்தாலும்  உடனே பதில் சொல்ல பெண்மை அவளை தடுத்தது. கிண்டியில் உள்ள அவளது ஹாஸ்டலில் டிராப் செய்தேன்.

    இரவு நான் அன்று உண்ணவில்லை. மனது நிறைந்து இருந்தது. அடுத்த இரண்டு நாட்கள் அவளை ஸ்பென்சர், எக்ஸ்பிரஸ் அவன்யூ கூட்டிப்போனேன். சுடிதார், கிரீட்டிங் கார்டு  வாங்ககிக்கொடுத்தேன். ப்ளாக் கரண்ட் கேக் வேண்டும் என கேட்டாள். அவள் சாப்பட்டு ராணியே தான். எனக்கும் அவளுக்கும் கல்யாணம் ஆனால்  என் சம்பளத்துல பாதி அவளுக்கு திங்க வாங்கி கொடுக்கவே சரியாய் போய்விடும் ரூமில் இருக்கும் அவள் தோழிக்கும் சேர்த்தே ப்ளாக் கரண்ட் கேக் வாங்கி கொடுத்தேன். இரண்டு நாட்களும் அவளுக்காகவே இருந்தேன். அவளுக்காகவே வாழ்ந்தேன்.

    “ஒரு வேலை நமக்கு கல்யாணம் ஆனா நீங்களும் சென்னை வந்துடுவீங்களா? எனக்கு பெங்களூர் பிடிக்காது”

    “ம்ம்.. நிச்சயமா” என்னுடைய கனவு நிறுவனமான கூகிளில்  வேலையை உதறிவிட்டு அவளுக்காக சென்னை வருவதற்கும் நான் தயாராய் இருந்தேன்.

    “எனக்கே கொஞ்சம் உறுத்தலா இருக்கு. நான் ஏற்கனவே ஒருத்தரை லவ் பண்ணிட்டு உங்களை கல்யாணம் பண்றத  நினைத்தால்…”

    “ப்ளீஸ் அனிதா.  அது பாசிங் க்ளவுட்ஸ். மறந்துடு. அதை பத்தி எனக்கு கவலை இல்லை. இட் ஆல் ஹாபன்ஸ் இன் லைப். உன்னால பழசை மறந்துட்டு என்கூட சந்தோசமா இருக்க முடியும்னா. என்னை சந்தோஷமா பார்த்துக்க முடியும்னா மட்டும் சொல்லு. “

    அவளின் கண்கள் ஈரமாயின “நிச்சயமா அருண்.. என் வாழ்கையில் திரும்ப அவனுக்கு இடமில்லை . ரெண்டு வாட்டி நடுவுல என் கிட்ட பேச ட்ரை பண்ணினான். பட் நான் பேசலை.  ஆனா உங்ககிட்ட ஒன்னு கேட்கணும். உங்களை உங்க அம்மா நல்லா தான் வளர்த்து இருப்பாங்க. இருந்தாலும் கேட்கிறேன். என்னை கடைசி வரை நீங்க நல்லபடியா பார்த்துகுவீன்களா?” குழந்தை போல பேசினாள். அவளின் முந்தைய காயம் இப்படி அவளை பேச வைத்தது என எனக்கு புரிந்தது. தோளில் அப்படியே சாய்த்து தட்டி கொடுத்தேன்.

    பெங்களூர் கிளம்பும்போது எதையோ விட்டு செல்வது போல் ஒரு உணர்வு. காதலை ஏற்ப்பாளா? இல்லை நிராகரிப்பாளா?  என் வாழ்க்கைகாண விடை விரைவில் கிடைக்கும் என நம்பினேன். மறுநாள் அவளிடம் இருந்து ஒரு மெசேஜ். ஆவலுடன் பிரித்தேன். “ஐ டூ லவ் யூ அருண்.”  கடவுள் இருக்கான் குமாரு. ஆகாயத்தில் பறந்தேன். தலைகீழாய் நடந்தேன். அம்மாவிடம் விஷயத்தை சொன்னேன். அனிதாவும் அம்மாவிடம் பேசினாள். அம்மாவுக்கு இதில் விருப்பமோ இல்லையோ எனக்காக அவர்களுக்கும் இதில் விருப்பம். இருவீட்டாரும் பேசி நிச்சயம் நடந்தது. அவள் தான் என் மனைவி என முழுதாய் நம்பினேன். ஆசை பட்ட பொண்ணை மனைவியாக பார்க்கும் பாக்கியத்தை விட உலகில் வேறு என்ன சந்தோசம் இருந்துவிட முடியும். திருமண வைபோகம் நெருங்கிய நெருங்கியது. அதுவரை நல்லாத்தான் போய்க்கொண்டு இருந்தது. திடீரென கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய போனை எடுப்பதை தவிர்த்தாள். எப்போதாவது பேசினாலும் அவள் வார்த்தைகளில் காதல் இல்லை. அவள் பேச்சில் குழப்பம் வழிந்தோடியது.

    “உண்மையாவே நான் உங்களுக்கு தகுதியானவள்னு நினைக்கறீங்களா? “

    வாட் நான்சென்ஸ் அனிதா?  எனக்கு சத்தியமா உன்கிட்ட என்ன நடக்குதுன்னு புரியலை.. என்னை தயவு செஞ்சி கஷ்டபடுத்தாத உன் மேல உயிரையே வச்சி இருக்கேன்.

    இல்லை கஷ்டபடுத்த மாட்டேன் அருண். கல்யாணத்தை இன்னும் ஆறு மாதம் தள்ளி போடலாமா என்றாள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

    ஏன் என்று கேட்டால் அவளிடம் தெளிவான பதிலில்லை.  ஏதோ குழப்பத்தில் இருக்கிறாள் என்று மட்டும் புரிந்தது.

    அன்று கோவையில் நண்பர்களுக்கு பத்திரிக்கை கொடுக்க வீட்டில் இருந்து கிளம்பிக்கொண்டு இருந்தேன். கல்யாணத்திற்கு இன்னும் பத்து நாட்கள் தான் இருந்தது.  அனிதா வீட்டில் இருந்து அவள் அப்பாவும், அம்மாவும் வந்தார்கள். மிகவும்  தயங்கியபடி. அவர்கள்  ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டார்கள். இந்த கல்யாணம் வேண்டாம் என்றார்கள். மீறி நடந்தால் என் உயிருக்கு ஆபத்து என்று  ஒரு ஜோசியன் சொல்லுகிறான்  என்றார்கள். கல்யாணம் நடக்க போற நேரத்துல இப்படி அவர்கள் பேசியதால் என் அப்பா கோவத்தில் அவர்களிடம் சண்டை போட்டார்.

    “எந்த ஜோசியகாரன்னு சொல்லுயா நான் போய் பாக்குறேன்.”

    அவர்களிடம் மழுப்பலாய் பதில்வந்தது. சொன்னதையே திரும்பச்சொன்னார்கள்.  எவ்வளவோ எடுத்து சொல்லியும் பிடிவாதமாய் இருந்தார்கள். அவர்களின் பிள்ளை வாழ்க்கை முக்கியம் என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டார்கள். கல்யாணம் நிற்பது உறுதியானது.

    ஊர்ல இல்லாத பொண்ண பெத்துட்டானுங்க. பொண்ணு ஸ்ட்ராங்கா இருந்தா சொல்லு மாப்புள்ள நாம தூக்கிடலாம் என்று நண்பர்கள் வரிந்து கட்டினார்கள்.

    அந்த ஜோசியாகர பயபுள்ள யாருன்னு சொல்லு மச்சான் அவன ரெண்டு தட்டு தட்னா சரியாபோயிடும்.

    அம்மா அவர்கள் வீட்டிற்கு போய் எவ்வளவோ மன்றாடி பார்த்தார்கள். எனக்காக அம்மாவிற்கு ரொம்ப கஷ்டம். கோவில் கோவிலாய் போய் வேண்டிக்கொண்டார்கள். எனக்காக அம்மா அவர்களிடம் இறங்கிப்போவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் அம்மாவின் முகத்தையும் பார்க்க முடியவில்லை.  உடனே பெங்களூர் சென்று விட்டேன். ஆனால் வேலைக்கு போகவில்லை. என்னுடைய ரூமிலேயே முடங்கி இருந்தேன். நினைவெல்லாம் என்னுடைய அனிதா மட்டும் தான். இப்போ தான் புரிந்தது அனிதா என்னிடம் ஏன் சரியாக பேசாமல் போனால் என்று. அவளுக்கு இந்த விஷயம் தெரிந்து இருக்கிறது. நான் இறந்துவிடுவேன் என்று சொன்னதும் அவள் பயந்து இருக்கிறாள். என்னிடம் எப்படி சொல்லுவது என்று தவித்து இருக்கிறாள்.  அவளிடம் நான் பேசியே ஆக வேண்டும். அந்த பாழாய் போன ஜோசியத்தை நம்பவேண்டாம். எனக்கு ஒன்றும் ஆகாது என்று அந்த குழந்தைக்கு புரிய வைக்க வேண்டும்.

    இன்று… மாலை… சென்னை….

    இருட்டுவதற்க்குள் கிண்டி வந்தடைந்திருந்தேன். இன்று வெள்ளிக்கிழமை. எப்படியும் வழக்கம் போல் இரவு ரயிலில் சென்னை சென்ட்ரலில் இருந்து அனிதா கோயமுத்தூர் செல்வாள் என்று எனக்கு  யூகம். எப்படியாவது அவளை அதற்குள் சந்திக்க வேண்டும்.  என்னுடன் காரிலேயே அவளை கோவை அழைத்து செல்லவேண்டும். அப்போ எனக்கு அவளிடம் பேசுவதற்கு நிறைய நேரம் கிடைக்கும். மெல்லெ மெல்ல அவளுக்கு புரியவைத்து இந்த கல்யாணம் நிற்காமல் பார்க்கவேண்டும். இந்த சந்தர்ப்பத்தை விட்டால் அவளை இழக்க வேண்டியது தான். என்னுடைய எஸ்.எம்.எதற்கும் பதில் இல்லை. போன் செய்தால் எடுக்க மாட்டேன்கிறாள். அவள் மனதில் என்ன ஓடுகிறது என்றே எனக்கு தெரியவில்லை. அவள் ஹாஸ்டல் வாசலில் காரை நிப்பாட்டினேன். நீண்ட நேரம் காத்திருந்தேன். எப்படியும் அவள் இங்கிருந்து தான் புறப்படுவாள். மீண்டும் போன் செய்தேன். கால் வெயிட்டிங் போனது. ஹாஸ்டல் வாசலில் கும்பலின் நடுவே என் அனிதாவின் முகம் தென்பட்டது. பரவசமானேன்.  நான் கஷ்டப்பட்டது வீண் போகவில்லை அவளிடம் பேசலாம் என்று காரை விட்டு இறங்க நினைத்தேன். யாரிடமோ சிரித்து போனை பேசிக்கொண்டு  அவளே என் காரை நோக்கி வந்தாள். என் காரை அடையாளம் கண்டு கொண்டிருக்கிறாள் என நினைத்தேன். என் கார் அருகே வந்தவள் என்ன நினைத்தாளோ சட்டென விலகி எனக்கு முன்னால் நின்றுக்கொண்டிருந்த காருக்கு சென்றாள். என்னை அவள் பார்த்திருக்கவில்லை. அந்த காரின் முன்னிருக்கையில் கதவை திறந்து உள்ளே நுழைந்தாள். எனக்கு என்ன நடக்கிறதுயென்று சுத்தமாய் புரியவில்லை . அந்த காரை பின் தொடர்ந்தேன். எங்கு போய்கொண்டிருக்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை. அந்த காரை பின் தொடர்வதிலேயே என் கவனம் இருந்தது.

    அவர்களது கார் ஒரு ஷாபிங் மாலிற்குள் நுழைந்தது. அது எக்ஸ்பிரஸ் அவென்யு. . நான் சென்னை வரும்போதெல்லாம் அடிக்கடி அவளை இங்கு தான் அழைத்து வருவேன். இவள் யாருடன், எதற்கு இங்கு வருகிறாள்? குழப்பம் அதிகமானது.  அவர்களது காரில் இருந்து அவள் முதலில் இறங்கினாள். டிரைவர் சீட்டில் இருந்து ஒருவன் இறங்கினான். அவனை இதுவரை நான் பார்த்தது இல்லை? இருவரும் கைகோர்த்தபடி மாலிற்குள் நுழைந்தார்கள். அவர்களுடைய நெருக்கம் எனக்கு அதிர்ச்சி அளித்தது. என்னுடைய காரை நிறுத்திவிட்டு அவர்களது பின்னால் நடந்தேன் . கே.ஏப்.சி சிக்கனில் உணவு உணவருந்திவிட்டு அங்கிருந்த சத்யம் தியேட்டரில் “நீ தானே என் பொன்வசந்தம்” படத்திற்கு நுழைந்தார்கள்.  என் கண்களில் குளம் போல் கண்ணீர் பெருக்கெடுத்தது ஓடியது.  தொண்டை வறண்டு குரல் கம்மியது. கண்கள் இருட்டியது. முதல் முறை அழுகிறேன். விம்மி விம்மி அழுகிறேன். அருகில் இருந்தவர்கள் என்னை பைத்தியக்காரனை போல் பார்த்தார்கள்.  நான் முட்டாள் ஆகிவிட்டேனா? அல்லது முட்டாள் ஆக்கப்பட்டு விட்டேனா?அனிதாவுடன் இருந்த அவன் யார்? இவள் எதற்கு அவனுடன் வருகிறாள்?  கல்யாணம் நின்று போன அறிகுறி எதுவுமே அவள் முகத்தில் இல்லையே?  நான் இங்கே தவித்துக்கொண்டு இருக்கிறேன் என்று தெரிந்தும் எப்படி அவளால் சந்தோசமாக இருக்க முடிந்தது ? இப்படி பல கேள்விகளை மின்னல் வேகத்தில் என் மூளை அடுக்கிக்கொண்டே போனது..

    திடிரென எஸ்.எம்.எஸ் சப்தம். ஒருவேளை அனிதாவாக இருக்குமா? இருந்தால் நிச்சயம் நாக்கை பிடுங்கற மாதிரி நாலு வார்த்தை கேட்டிடலாம் என்று மொபைலை எடுத்தேன். ஆனால்  சுதாகரிடம் இருந்து வந்திருந்தது அந்த எஸ்.எம்.எஸ். பிரித்தது பார்த்தேன்.  “நாம் விரும்பும் பெண்ணைவிட நம்மை விரும்பும் ஒரு நாயை கூட கல்யாணம் பண்ணிக்கலாம். இப்படிக்கு உளுந்தூர் பேட்டை உலகானந்தா” என்று இருந்தது. அழுது கொண்டே சிரித்தேன். கண்ணீர் சொட்டு மொபைல் ஸ்க்ரீனில் விழுந்து தெறித்தது.  கண்களை துடைத்துக்கொண்டு வேகமாய் என் காரை நோக்கி நடந்தேன். என் பைத்தியம் தெளிந்திருந்தது.

    Share
  • குறிப்பறிந்து பொருளுணர்க

     

    வருணன்

     
    பொங்கி நுரைத்தபடி
    பெருங்கடல் அலை சீற்றம்
    அடையத் துடிக்கிறது கரையை

    எல்லைகள் கடந்து வேலிகள் உடைத்து
    புலம் பெயர்கின்றன
    பெயரறியா பறவைகள்

    முடிந்து விட்டதாய் மறந்து போன
    நிலம் முட்டி முளைக்கின்றதொரு
    சிறு தளிர்

    உடைமைகள் சிதைத்து
    உடையவர் உயிர் குடித்தடங்கும்
    புயலுக்குப் பின் வருகிறதோர் அமைதி

    இயற்கை தரும்
    வாழ்க்கை பாடங்கள்
    குறிப்பறிந்து பொருளுணர்க.

    படத்துக்கு நன்றி: http://beautifulcoolwallpapers.wordpress.com/category/beautiful-natural-scene/
    Share
  • ஜன்னல் முகங்கள்

    -விசாகை மனோகரன்

     

    வீட்டில், தெருவைப் பார்த்த ஒரு ஜன்னல்

    அதில் ரசித்துப் பார்த்த பல முகங்கள்

    ஆண்,  பெண், கருப்பு, வெளுப்பு,

    சிறுவயது, வயதிற்கு வந்தது, வயது போனது

    இப்படி எத்தனையோ!!

     

    எத்தனை முகங்கள் எத்தனை பாவங்கள்

    அதில்  மனதுள் பதிந்தன சிலமுகங்கள்

    கற்பனைக்கு மேனி தந்து

    மனதின் வேலி உடைத்து

    இரவு தூக்கத்தை கெடுத்து

    கனவுகளில் வந்தன சில முகங்கள்.

     

    ஜன்னல் வழியே பார்த்து

    மனக் கதவை உடைத்து

    உள்ளே வந்து குடியேற

    அனுமதி கேட்கும் சில முகங்கள்

    அனுமதி இல்லாமலே வந்தமர்ந்த சில முகங்கள்.

     

    குழாயடிச்சண்டை,

    தெரு நாய்களின் கூட்டம்

    நரிக் குறவர்களின் கூச்சல்,

    பிச்சைக்காரர்களில் கூவல்

    அனைத்துமே அந்த ஜன்னல் வழி பார்த்தவையே

    ஆனால் இவை எதுவும் பாதிக்காத என் மனதை

    அந்த சில முகங்கள் மட்டும் ஏன் பாதித்தன?

     

    நேரிலே பலமுகங்களைப்  பார்த்தாலும்

    அந்த ஜன்னல் முகங்கள் மட்டும் ஏன் வேறுபடுகின்றன

    அந்தப் பார்வையின் நோக்கில் மட்டும் ஏன் நெருடல்கள்

     

    புரியவில்லை, புரிந்தால் சொல்லுங்களேன் !!

     

    Share
  • இயற்கையே தெய்வம்!..

    விசாலம்

    இயற்கையே தெய்வம்!….

    இதையே பாரதியாரும் “இயற்கையென்றுனை உரைப்பார், சிலர் இணங்கும் ஐம்பூதங்களென்றிசைப்பார்” என்று இயற்கையை சிவசக்திக்கு ஒப்பிடுகிறார்  அத்துடன்  பஞ்ச பூதங்கள் என்றும்   சொல்கிறார்  இதிலே தான்  அப்பு வாயு  நீர் நிலம்  நெருப்பு என்பவை   பின்னப்பட்டிருக்கின்றன நாம் இயற்கைக்குக்கேடு செய்ய  அது நமக்கே கேடாக முடிகிறது  மரங்களை அழித்து வீடுகள் கட்டுகிறோம் காடுகளை அழிக்கிறோம்  இதனால் நமக்குத்தேவையான பிராணவாயு குறைந்து கரிமலவாயு அதிகமாகிறது இதனால் மழை குறைவாகிறது ,இதன் பலன் விளைச்சலும் குறைகிறது ,தண்ணீர்ப்பஞ்சம் ஏற்படுகிறது  ஓசோன் என்னும்  திரை குறைந்து கடும் வெப்பம் உண்டாகுகிறது.  நாம் இயற்கையை வணங்கி பிரார்த்தித்து காக்க வேண்டும்  முன் காலத்தில் அக்னிக்குத்தனி பூஜை நீருக்குத்தனி பூஜை  அரசமரம் வேப்பமரம் போன்ற்வைகளுக்கும்  பூஜை செய்வதை வழக்கமாகக்கொண்டிருந்தனர்

     ,நான் ஒரு எகிப்து நாட்டுக்கதையைப்படித்தேன்  அதில்    சூரியனின் முக்கியத்துவம் பற்றிக்கூறப்பட்டிருக்கிறது

    ‘எலோடஸ் என்பவர் இயறகையை மிகவும் ரசிப்பவர் .இயற்கைமேல் அதிக பற்றும் பக்தியும் வைத்திருந்தார் ,ஒவ்வொரு செட்யுடன் பேசுவார் நீரை வீணாக்க மாட்டார்

    காலையில் வெகு சீக்கிரம் எழுந்து குளித்துவிட்டு முற்றத்தில் வந்து நிற்பார் அழகான  செந்நிறமான சூரியனைக்கண்டு ரசிப்பார் பின் சூரிய நமஸ்காரம் செய்ய ஆரம்பித்து விடுவார்  தெருவில் போவோர் எல்லோரும்  இவரைக்கண்டு சிரித்தனர் கேலி செய்தனர் ஆனாலும் இவர் இதைப்பராட்டவில்லை

     “என்ன முட்டாள் மாதிரி சூரியவெளிசத்தை வணங்குகிறாயே ” என்று சிலர் கேட்க

    அதற்கு இவர் “உங்களுக்கு இயற்கையின் அருமை பெருமை  தெரிந்தால்தானே  உங்கள் அறியாமையால் இப்படி பேசுகிறீர்கள் ”  என்பார்

     தினமும் அந்தப்பக்கம் ஒரு கடலை வியாபாரி  வருவாள் எலோடஸைப்பார்த்து கேலி செய்வாள்

    ஆனல் எலிடோஸ் மிகப்பொறுமையாக கேட்டபடி இருப்பார்  அன்றைய தினமும்

    கடலைவியாபாரி வந்தாள் ,  “எல்லோரும் இந்தப்பைத்தியக்காரரைப்பாருங்கள் தினமும் சூரியனைக் கும்பிடுகிறார் சூரியன் அதன் கடமையைச்செய்கிறது

    வெளிச்சம் தருகிறது அது என்ன தெய்வமா? இந்தக்கும்பிடு கும்பிடறாரே  கஷ்டம்   கஷ்டம் என அலுத்தபடி சொன்னாள்

     இது நாள் வரை பொறுமையாக இருந்த எலிடோஸ்  ” கடலை வியாபாரியம்மா  என்னை

    நீங்கள் தினமும்   கிண்டல் செய்கிறீர்கள்! சூரியன் தான் முதன்மையான இயறகைக்கடவுள் இதை வழிபட   நம் வாழ்வும் மேன்மையடையும்  “

     “இது என்ன பைத்தியக்காரத்தனம்  தினமும் சூரியனைக்கும்பிடு   இயற்கை தெய்வம் என்றெல்லாம் பிதற்றுகிறீரே!”

     “சரி சூரியனின் அருமைத்தெரிய நான் ஒன்று சொல்கிறேன் கேட்பீர்களா? தைரியம் உண்டா ?”  “என்ன சொல்லுங்கள் கேட்கிறேன்”

     “ஒருநாள் முழுவதும் ஒரு இருட்டு அறையில் இருந்து கழிக்க வேண்டும்

    உங்களால் அப்படி இருக்க முடியுமா?

     “இதென்ன பிரமாதம் இருக்கலாமே என்னால் முடியும் ” என்று ஆணவத்துடன் பதிலளித்தாள்.

     எலிடோசும் தன் வீட்டின் பின் புறம் இருக்கும் ஒரு இருட்டறையில்  அவளைத்

    தங்க வைத்தார்,எல்லா கதவுகளும் மூடிவிட்டார்

     “உள்ளே சென்ற சில நிமிடங்களுக்குள்ளேயே அவளுக்கு மூச்சு அடைத்தது

    காற்று வரவில்லை  வெளிச்சம் வரவில்லை மனதுக்குள் ஒரு பயம் வந்தது

    மறுநாள் கதவைத்திறந்ததும் வெளியே ஓடோடி வந்தாள் கடலைக்காரி

    எலிடோசின் கையைபிடித்தாள்

    “என்னை மன்னித்துவிடுங்கள் ஒரு நாள் முழுவதும்  இருட்டில் இருப்பது எத்தனைக்கடினம் என்று  தெரிந்துக்கொண்டேன் சூரிய வெளிச்சம் உடலில் படும்

    போது தான் புத்துண்ர்ச்சிப்பெற்றேன்  சூரிய ஒளிக்கு ஒரு அபூர்வ

    சக்தி இருக்கிறது என்பதையும் உணர்ந்தேன்  இனி நான் கேலி செய்ய மாட்டேன்

    நானும் அந்தச்சுரியனை வணங்குவேன் “

    எலிடோஸ்  சிரித்தார்   ”  நாம் செயற்கைப்பொருட்களைக்கண்டுபிடிக்கிறோம்

    ஆனாலும் அதில்  எதாவது பிரச்சனை ஏற்படுகிறது  ஆனால் அந்தத்தெய்வம்

    போன்ற இயற்கைகளால் நம்க்கு நன்மையே ..அவைகள் இல்லாமல் நாம் வாழமுடியாது,,காற்று நீர் நெருப்பு சூரிய ஒளி இவைகள் எல்லாம் இல்லாமல் நம்மால் உயிர் வாழமுடியுமா ?’

    கடலைவியாபாரி இயறகையின் பெருமையை உணர்ந்தாள்.

    Share
  • ககனமார்க்கம்

    பழமைபேசி

    நீங்கள் நினைப்பது போல அதற்கும் எனக்கும் எந்த வாய்க்காவரப்பும் கிடையாது. அதனோடு தகராறு செய்வதால் எனக்கு என்ன கிடைத்து விடப்போகிறது? ஒன்றும் கிடைக்கப் போவதில்லை.

    ஞாயிற்றுக் கிழமை மாலை ஆகி விட்டால் போதும். நான் எதைச் செய்தாலும் இதைத்தான் காரணம் சொல்வார் என் மனைவி. விடிந்தால் திங்கட்கிழமை என்பதால் நீங்கள் எங்கள் மீது எரிச்சலைக் கொட்டுகிறீர்கள் என்று. உண்மையிலேயே அந்தத் திங்கட்கிழமையோடு எனக்கு எந்தத் தகராறும் இல்லை. வீட்டில் இருப்பவர்கள் மீதும் எந்தவிதமான எரிச்சலும் எனக்கு இல்லை.

    ஆனால் என்ன? அந்தப் பாடாவதி திங்கட்கிழமையன்று, நான்தான் வைகறையையே எழுப்ப வேண்டி இருக்கிறது. ஐந்து மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பி முதல் விமானத்தைப் பிடித்து ககனமேற வேண்டும். மேலாண்மைக் கலந்துரையாடலில் இருக்கிற முக்காலே மூணு வீச மணி நேரமும், தான் மட்டுமே பேசிச் சாவடிக்க வேண்டுமென்பதில் குறியாய் இருப்பான் டேவிட் பங்கி. இதுவும் அந்தக் கடூரமான திங்கட்கிழமையில்தான் நடக்கிறது. அதைத் தொடர்ந்துதான் செவ்வாய், புதன், வியாழன் போன்ற நாட்களும் வந்து தொலைக்கிறது. இந்தத் திங்கட்கிழமைக்கு என் போன்றவர்கள் மீது ஏன் இத்தனை வன்மம்? இதை உங்களிடம் சொல்லாமல் நான் வேறு யாரிடம் சொல்ல முடியும்??

    திங்கட்கிழமைத் திருட்டு யாமத்தில் எழுவதால் என்னைத் திருடன் என்று நானிருக்கும் காலியர்வில்லில் எத்தனை பேர் சொல்லிக் கொண்டு திரிகிறார்களோ தெரியவில்லை. காலை நான்கு மணிக்கு நாய்கள் மட்டுமல்ல, எந்நேரமும் கூகுள் கூட்டலில் இருக்கும் எங்களுடைய பாலா அண்ணன் கூட உறக்கம் கொள்ளும் நேரம். அப்படிப்பட்ட உறக்கத்தையே என்னிடமிருந்து திருடிவிடும் திங்கட்கிழமை திருட்டுத் திங்கட்கிழமைதான். மற்றபடி எனக்கும் திங்கட்கிழமைக்கும் வாய்க்காவரப்பெல்லாம் ஒன்றும் இல்லை.

    காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து கூகுள் பிளஸ்ஸில் யார் மண்டை உருளுகிறது, ஃபேசுபுக்கில் எந்தப் பெண்ணின் படத்துக்கு எத்தனை லைக் விழுந்திருக்கிறது, டுவிட்டரில் எவன் எவனை வம்புக்கு இழுத்திருக்கிறான் போன்றவற்றைப் பார்த்த கையோடு மின்னஞ்சல் மேய்ச்சல் செய்தானது. இழுத்துப் பிடித்துச் சமாளிக்க முடியவில்லை. குளிர்காலம் என்பதால் கூடுதலான அவசரம்.

    வண்டிக்கு அச்சு முறிந்து விட்டால் என்ன செய்வதென்று சேமஅச்சு ஒன்றினைக் கூடவே எடுத்துச் செல்வார்களாம் பண்டைக் காலத்தில். இப்போதும் ஸ்டெப்னி டயர்கள் எடுத்துச் சொல்வது வழக்கத்தில்தான் உள்ளது. அதைப் போல கூடுதலாக ஒரு சேமச்சிறுநீர் வைப்பறை ஒன்றை மனிதனுக்குள்ளும் வைத்திருக்கலாம். முட்டுகிற நேரத்தில் பாவிப்பதற்காய். அவசரத்தில் கதவை மூட மறந்து விட்டேன். குழந்தைகள் யாரும் எழுந்து அலறிவிடக் கூடாது. என்ன எழவு இது? எங்கள் அமுச்சி வீட்டுப் பெரியெருமை பெய்வதெல்லாம் நினைவுக்கு வருகிறது. இனிமேல் ஞாயிற்றுக்கிழமை இரவில் பீர் குடிக்கவே கூடாது.

    விமானம் சரியான நேரத்துக்குக் கிளம்புமா என்பதைச் சரி பார்த்தாகிவிட்டது. குழந்தைகளைப் பார்த்தால் பிரிவின் ஏக்கத்தில் அழுது விட்டால் என்ன செய்வது? பல் துலக்கி, தும்பிக் குளியல் முடித்து, உடுப்புக்கு மேல் உடுப்பு போட்டு வந்தாயிற்று. என்னாவொரு இன்பமடா? அமெரிக்காவின் காற்று நூற்றுக்கு நூறு வாங்கிவிடும். வசந்தத்தின் குழந்தைகள் செரிமரங்கள். செம்பூக்கள் பூத்து மணப்பெண் போலக் குலுங்கி நிற்கின்றன.

    மனையாளின் அணுக்கச் சூட்டினை வீட்டிலேயே வைத்து விட்டு பெருந்தெருவில் இந்நேரத்துக்கு ஏன் இத்தனை பேர் கார்களில் போய்க் கொண்டிருக்கிறார்கள்? என்னைப் போல அவர்களும் திங்கட்கிழமையால் சபிக்கப்பட்டவர்களோ? திருடர்கள் வேறு ஆங்காங்கே கன்னக்கோல் வைக்கிறார்களாம். இதைப் படுவாப் பயல் டேவிட் பங்கியிடம் சொன்னால், முந்தின நாள் இரவே வந்துவிடு என்று சொல்லி, ஞாயிற்றுக் கிழமைக்கும் எனக்குமிடையில் சதி செய்கிறான்.

    மெம்ஃபிசு விமான நிலையப் பணிப் பெண்கள் எறும்புகளின் தாவளத்தில் இருந்து வருகிறார்களா எனக் கேட்டறிய வேண்டும். இந்தக் குளிர்காலத்திலும் விடியலுக்கு முந்தைய யாமத்தில் என்ன சுறுசுறுப்புக் காண்பிக்கிறார்கள். முகமலர்ச்சிக்கென்றே தனிச்சம்பளம் தருவார்களாய் இருக்கும். முசுடுகளைப் பார்த்து விட்டுப் போய் விமானம் ஏறினால் நன்றாக இராது என்பது அவர்களுக்கும் தெரிந்திருக்கிறது.

    பரிசோதக ஆண்களுக்கு மட்டும் காண்டாமிருக வயிறு. பார்க்கப் பாவமாக இருக்கிறது. உள்ளே காற்றை அடைத்து வைத்திருக்கிறார்கள் போலும். அதனால்தான் நாள் முழுதும் அதைச் சுமந்தபடியே நின்று கொண்டிருக்க முடிகிறது அவர்களால். உள்ளே இருக்கும் காற்றைப் பிடுங்கி விட்டால் என்ன? கைவசம் குண்டூசி எதுவும் இல்லை. வேட்டியும் போச்சு. அதையிழுத்துப் புடிக்கிற அரைஞாண் கயிறும் போச்சு. அரைஞாண் கயிறு கட்டி இருந்தாலாவது அதிலொரு காப்பூசி தொங்கும். ஆனால் வீட்டில் நிறையக் காப்பூசி இருக்கின்றன. எதற்கு இவ்வளவு காப்பூசிகள் வைத்திருக்கிறாயெனக் கேட்டால், காப்பூசியென்றால் என்ன என்ற கேள்வி நம்மை அறைகிறது. பின்னூசி என்றதும், ஓ அதுவா? தமிழ்ல சொல்ல வேண்டியதுதானே எனும் ஏகடியம் வேறு. பின்னும் ஊசியும் கலந்து நடுசென்ட்டர் போல ஆகிவிட்டது.

    பரிசோதனையெல்லாம் முடிந்தது. இன்னுமந்த பேய்ப்பறவையின் வயிற்றுக்குள் போவதற்கு அரை மணி நேரம் இருக்கிறது. பெரிதாக எது இருந்தாலும் முன்னொட்டாக பேய் வரும். வலுவான காற்றுக்கு பேய்க் காற்று. பெரும்புடலைக்கு பேய்ப்புடலை. அதென்றா அமெரிக்காக்காரிகளுக்கு மட்டும் பேய்மொலைகளா இருக்குதூ என்பான் திர்றான் என்கிற திருமூர்த்தி. விகாரமாக விரிந்திருக்கும் பெரிய அளவிலான கிணறுக்கு பேய்க்கிணறு. அது வெள்ளந்தி மக்களின் மொழி.

    ஸ்டார்பாக்சு காப்பி குடிக்காமல் நாளைத் துவக்கினால் திருடிக் கொண்டு வந்த ஆட்டை புளியமரத்தடியில் எவனோ அடித்துப் புடிங்கிக் கொண்டு போய்விட்டதைப் போல மனசு சூம்பிக்கிடக்கும். அமெரிக்காவில் பலவிதமான அடிமைகள் உண்டு. அதில் வெகுமுக்கியமானது ஸ்டார்பாக்சு அடிமைகள். எனக்கு முன்னால் ஏற்கனவே ஆறேழு அடிமைகள் வந்து நின்று கொண்டிருக்கிறார்கள்.

    கடலைபொரி தின்று கொண்டு கூரைக்கொட்டாயில் சிலுக்கு டான்ஸும், ஈசல்பொரி தின்று கொண்டு அடைமழையை வேடிக்கை பார்ப்பதும் போலத்தான் ஸ்டார்பாக்சு காப்பியோடு அலைபேசியில் வலைமேய்வதும். இதுக்கு இது என்று எப்படியோ அமைந்துவிடுகின்றன. அவற்றால் வாழ்க்கையும் சுபீட்சமடைகின்றது.

    ககனமேறி விட்டால் வண்ணதாசனின் கவிதைகளையும், நாஞ்சில நாடனின் சிறுகதைகளையும் புசித்துக் கொண்டே போகலாம். வண்ணதாசனின் கவிதைகள் பதநீர், நாஞ்சில் நாடன் சிறுகதைகள் பனங்கற்கண்டு. இரண்டையும் மாறி மாறி உட்கொண்டால் விமான நெடியின் வீச்சில் இருந்து விமோசனம் கிட்டும்.

    ஒவ்வொருவராக உள்ளே நுழைந்து, தட்டுமுட்டு சாமான்களை கிடைத்த பொந்துகளில் திணித்து அமர்ந்தாயிற்று. கச்சைகளும் கட்டியாயிற்று. முதல் வகுப்பு இருக்கையில் அமர்வதில் எப்போதும் இது கைகூடும் நமக்கு. அடுத்து உள்ளே வரும் ககனமேறிகளைப் பார்த்து மனிதமொழி பேசிக் கொள்ளலாம்.

    என்ன ஒரு அழகு? நான்குமாதங்கள்தான் ஆயிற்றாம். கண்களைச் சிமிட்டிச் சிமிட்டிச் சிரிக்கிறான். என்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறதென்றே கவனித்திருக்கவில்லை நான். பார்வைகளால் ஒருவரையொரு நனைத்துக் கொண்டிருந்தோம். விமானம் முப்பத்து ஏழாயிரம் அடிகளைத் தொட்டுவிட்டதாம். நம்மைச் சுமந்து சொல்லும் விமானம் இன்னும் ஒரு மணி பத்து மணித்துளிகளில் சார்லட் நகர மண்ணை முத்தமிடும்  என்கிறாள் விமானப் பணியாளச் சீமாட்டி.

    முன்பக்க திசை நோக்கித் திருப்பி வைத்தாலும் அவன் என்னையே பார்க்கிறான். நான் அவனைப் பற்றி எழுதுவேனென்று அவனுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்குமோ? அல்லையில் நோக்கின் முகில்கள் பல்வேறு உருவங்களில் நடமாடிக் கொண்டிருக்கின்றன. அந்த உருக்களுக்கு இன்ன உருவம் பொருந்துமெனப் பார்த்துப் பொருத்துவது எனக்கு வாடிக்கை.

    ”ஐயா தாங்கள் என்ன குடிக்கிறீர்கள்?”, கேட்கிறாள் சீமாட்டி. ”கிரேன் பெரி ஜூஸ்!” என்றேன். உங்களுக்கு பணிவிடை செய்வதில் மகிழ்ச்சி என்கிறாள். இவள் நல்லவள். இனிமையாய்ப் பேசுகிறாள். நாளின் துவக்கம் என்பதால் புத்துணர்வோடு இருக்கிறாள். திடுமென வந்தது அறிவிப்பு.

    பொன்னமராவதி நடுகற்கள் வானப்பரணில் அணிவகுத்து அமர்ந்திருக்கின்றன. பணியாளச் சீமாட்டிகள் அங்குமிங்கும் ஓடி வந்து கொண்டிருக்கின்றனர். சொக்கறைப் பையன் கன்னத்தில் குழிவிழ என்னையே பார்க்கிறான். சிரிக்கிறான். அம்மாவின் தலை கவிழ்ந்திருந்தது. இறைவனை இறைஞ்சிக் கொண்டிருக்கிறாள்.

    மூன்றாவது வரிசையில் இருக்கும் நான் ஐந்தாவது வரிசையைத் திரும்பிப் பார்க்கிறேன். நான்கைந்து பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். அனைவருமே மருத்துவர்கள். ஒரு மலரை நோக்கி ஐந்தாறு வண்டுகள் வந்தன. சிறு இறகுகள் செல்லமாய்ப் படபடக்கக் கண்களாலேயே பேசிக் கொண்டன அவையாவும். மலரின் கட்டுப்பாட்டினை ஒன்று தனக்குள் கொண்டுவர, மற்றன எல்லாமும் தத்தம் திசையில் பறந்து மறைந்தன சுவடு தெரியாதபடிக்கு.

    பணியாளச் சீமாட்டியவள் ஓரடிப் பீர்க்கங்காய் போன்ற ஆக்சிஜன் கலத்தைக் கொணர்ந்து கொடுத்தாள். மற்றவள் ஓடிச்சென்று முதலுதவிப் பையினைத் தூக்கி வந்தாள். எஞ்சிய பயணியர் அனைவரும் தத்தம் தலை கவிழ்ந்திருக்க, ஆழ்ந்த தவத்தில் சயனித்திருந்தனர். கண்களால் கூடப் பேசிக் கொள்ளவில்லை யாரும். என்னையும் என்னைத் தொடர்ந்து கவனித்துச் சிரிக்கும் ஐந்து வயதுப் பையனையும் தவிர.

    நனைந்த துணியைக் கேட்டார் மருத்துவர். நெஞ்சினைத் தடவிக் கொடுத்துக் கொண்டே நெஞ்சுத்துடிப்பு, இரத்தழுத்தம் முதலானவற்றைக் கவனித்து குறித்துக் கொண்டிருந்தார். விமானம் மீண்டும் மெம்ஃபிசுக்கே திருப்பி விடப்பட்டிருப்பதாக விமானச்சாரதி அறிவிப்புச் செய்தார்.

    விமானத்தில் இருந்த நடுகற்கள் நடுகற்களாகவே இருந்தன. கிஞ்சித்தும் அசையவில்லை எதுவும். ஒவ்வொரு மனத்துள்ளும் ஒரே ஒரு வேண்டுதல்தான் ஓதப்பட்டுக் கொண்டிருந்தது. எல்லோரது முகமும் சிவந்து கொண்டிருந்தது தொடுவானத்துக் கதிரவன் போல.

    கீழே பார்க்கிறேன். தரை மார்க்கம் கண்களின் எல்லைக்குள் வந்து விட்டது. இது வரையிலும் எந்தவொரு சலனமுமின்றிச் சுற்றுமுற்றும் கவனித்துக் கொண்டிருந்த எனக்கு, இப்போது நெஞ்சு கனத்துப் படபடப்புக் கூடி வருகிறது. மீண்டும் ஐந்தாம் எண் வரிசையில் வலது புற இருக்கைகளைக் கவனிக்கிறேன். மருத்துவரின் கைகளுக்குள் மாந்தனா? மாந்தக் கூடா?? ஒன்றும் தெரியவில்லை.

    அந்தக் குழந்தைகூட அழாமல் ஆழ்ந்ததொரு அமைதியைத் தன்மேலும் பூசிக் கொண்டிருக்கிறது. கண்களை மூடி அமர்ந்திருக்கிறேன். விமானம் தரையைத் தொடுவதை உணர்கிறேன். கண்கள் விழித்து வெளியில் பார்க்கிறது என் உத்தரவுவெதும் இல்லாமலேயே.

    மூன்று தீயணைப்பு வண்டிகள்; நான்கைந்து மருத்துவ விரைவூர்திகள். சிவப்பு, மஞ்சள் ஒளிக்கீற்றுகளைப் பெருவாரியாக உமிழ்ந்து கொண்டிருக்கிறது. விமானம் படிப்படியான வேகக் குறைப்புடன் தரிப்பிடம் வந்து சேர்ந்து விட்டது. நடுகற்களாய் அமர்ந்திருக்கும் பயணியர் யாவரும், நடுகற்களாகவே தொடர்ந்து தம்மை இருத்திக் கொண்டிருக்கிறார்கள். நான் மட்டும் இங்குமங்கும் சிரமாடி விழிகளசைத்துக் கண்டு கொண்டிருக்கிறேன். கதவு திறக்கப்பட்டதுதான் தெரியும். திரும்பிப் பார்க்கிறேன் ஐந்தாம் எண் வரிசையில் யாருமே இல்லை. நடுகற்கள் உயிர் பெற்றுக் கொண்டிருந்தன. பணியாளச் சீமாட்டி முதன் முறையாகப் பேசினார். “கழிப்பறைக்குச் செல்வோர்; எழுந்து நிற்க விருப்பப்படுவோர் அவ்வண்ணமே செய்யலாம். நீங்கள் அனைவரும் மிகவும் உன்னதமானவர்கள். நன்றி!”, என்றார். நான்குமாதச் சிறுவன் என்னைப் பார்த்துச் சிரிக்கிறான்.

    பேணிய மருத்துவரும் மற்ற மருத்துவர்களும் அளவளாவுகிறார்கள். உயிர்பெற்ற நடுகற்கள் ஒன்றோடொன்று பேசிக்கொண்டன.

    ஒருவரை ஏற்றிச் செல்ல, எதற்காக மூன்று தீயணைப்பு வண்டிகள்? எதற்காக நான்கு மருத்துவ விரைவூர்திகள் வர வேண்டும்? ஆபத்துக்கான சமிக்கை ஒன்றுக்கு மேற்பட்ட முனையங்களுக்கு உடனே தெரிவிக்கப்படும். அந்த இடத்துக்கு அருகில் இருக்கிற இரண்டு அல்லது மூன்று இடங்களிலிருந்து இவ்வண்டிகள் உடனே அனுப்பப்படுவது வழக்கப்பாடு. ஏதாவது ஒரு வழியில் வந்து சேர வேண்டியது வரவில்லையென்றாலும் மற்றது வந்து சேர்ந்துவிடும் என்பதற்காக.

    நெஞ்சுத் துடிப்பை வைத்துப் பார்க்கும் போது தான் எந்த முடிவுக்கும் வர இயலாது எனச் சொல்லிவிட்டார் மருத்துவர். பணியாளச் சீமாட்டிக்கும் நம்பிக்கையானது முகக்குறிப்பில் இடம் பெறவில்லை.

    தத்தமது அடுத்த விமானங்களை யாரும் பிடித்துச் சென்று சேர்வதென்பது முடியாத காரியம். ஏற்கனவே இரண்டு மணி நேரம் காலத்தாழ்ச்சியாகி விட்டிருந்தது. எனினும் யாரும் ஏமாற்றத்தையோ, விரக்தியையோ காண்பித்துக் கொண்டிருக்கவில்லை. சோகம் அனைவரையும் உலுக்கி விட்டிருந்தது.

    மீண்டும் விமானம் புறப்பட்டு வானேறியது. எல்லோரது மனத்திலும் அந்த மனிதனுக்கு என்னாயிற்றோ எனும் கவலைதான். வழக்கமாக விமானத்துக்குள் இருக்கும் சூழலை, அந்த விமானம் அன்றைக்குத் துப்புரவாக இழந்திருந்தது. பதநீரும் கற்கண்டும் பதம் பார்க்கப்படாமல் வெறுமன கிடந்தது. ஐந்தாவது வரிசையில் இருக்கும்  5F இருக்கையை அண்டியிருப்பவர்கள் எல்லோரும் சபித்துச் சபித்துப் பார்த்ததில் ஆடை இழந்து அம்மணமாய்த் தெரிகிறது. ”நீயும் ஏன் என்னை அடிக்கடி திரும்பிப் பார்க்கிறாய்?” என்று கேட்டு அழுகிறது  சக பயணியின் வெற்றிடமான அந்த அம்மண இருக்கை.

    நூற்று ஐந்து பேருடைய பயணத்தில் காலதாமதம். அன்றைய அலுவல் பாதிப்பு. விமானத்தின் அடுத்தடுத்த வழித்தடங்கல்களிலும் இதனால் பாதிப்பு. கனெக்ட்டிங் பிளைட்டுகளையும் பாதிக்கும். எப்படிப் பார்த்தாலும் பாதிப்பின் மதிப்பு நூறாயிரம் டாலர்களுக்கும் அதிகமாகலாம். யாரும் அதைப் பற்றிச் சிந்திப்பதாகத் தெரியவில்லை.

    நான் உடனே இன்றைய எனது அலுவல் பாதிப்புக்குள்ளாகுமென எனது நிறுவனத்திற்கு அறிவுறுத்தினேன். “நீயும், உன்னை அண்டி இருப்பவர்களது பாதுகாப்புத்தான் முக்கியம். அதற்குத்தான் முன்னுரிமை!” எனும் மறுமொழி உடனே வந்து சேர்ந்தது.

    விமானம் சார்லட்டையும் வந்தடைந்து மண்ணைத் தொடப் போகிறது. விமானப் பணியாளச் சீமாட்டிகள், இழவு வீட்டுப் பணியாளர்கள் போல இருந்தார்கள்.  நாம் சார்லட் நகரை வந்தடையப் போகிறோம் என்று தொய்ந்த குரலில் அறிவிப்புச் செய்கிறாள் அவள்.

    விமானச் சக்கரங்களின் ’டடக்ச்’ ஒலி கேட்கிறது. யாரோ விசும்பி அழும் ஒலியினால் பின்னிருக்கைகளிலிருந்து சன்னமான சத்தம் வருகிறது. விமான ஓட்டி அறிவிப்புச் செய்கிறார், “ஐ காட் எ மெசேஜ் ஃபிரம் யு.எஸ் ஏர்வேஸ்; எதிர்பாராத விதமாக நமது பயணத்திலிருந்து பிரிந்து சென்று போனவரது உடல்நிலை கட்டுப்பாட்டுக்குள் வந்து, சீரான நிலையில் இருக்கிறார்!:.

    நடுகற்கள் யாவும் புத்துயிர் பெற்று ஒத்த குரலில் கூவின, “ஹே… யு காய்ஸ் ஆவ்சம்யா! சீயர்ஸ்!!”. முன்பக்கம் இருந்த பணியாளச்சீமாட்டி கூவுகிறாள், “யு மேட் மை டே. காட் ப்ளஸ் அமெரிக்கா!”. ஒருவருக்கொருவர் வாழ்த்துச் சொல்லிக் கொள்கிறார்கள். மருத்துவருக்குப் புளகாங்கிதம்.

    வெளியே வந்து விமான முனையத்தில் பார்த்தால் எங்கும் மக்கள் வெள்ளம். அங்குமிங்குமாக ஓடிச் சென்று தத்தமது அடுத்த விமானங்களுக்கு ஏகியபடி இருந்தனர். நாங்கள் வந்த விமானத்திலிருந்து வெளியேறியவர்களும் ஒவ்வொருவராகக் கூட்டத்தில் கரைந்து கொண்டிருக்கிறார்கள். “ஏதாகிலும் துயர் நேரிடின், இந்த தேசத்து மக்களின் உள்ளார்ந்த பேணுகை எனக்கும் உண்டல்லோ?”, வானுயர்ந்த நம்பிக்கைப் பேரொளியில் கரைந்து போகிறேன் நான்!!

     

    Share
  • பாரதியின் வேத முகம் – 5

     

    சு.கோதண்டராமன்

    சாதிகள் இல்லையடி பாப்பா

    இந்து சமயத்தைச் சாடுவோர் வேதத்தின் வர்ணாசிரம நெறி தான் சாதிப் பிரிவுகளை உண்டாக்கியது என்று கூறுவர். உண்மை அதுவல்ல. வேதம் சாதி பற்றி எதுவும் கூறவில்லை. வேத காலத்தில் சாதி இல்லை. வர்ணாசிரம முறை இருந்தது.

    வர்ணாசிரமம் என்பதில் வர்ணம் ஆசிரமம் என்ற இரு சொற்கள் அடங்கியுள்ளன. இதில் ஆசிரமம் என்பது ஒரு தனி மனித வாழ்வின் வெவ்வேறு கால கட்டங்கைளக் குறிக்கும் – மாணவப் பருவம், இல்லறப் பருவம், காடு வாழ் பருவம், துறவுப் பருவம். இந்த ஆசிரம முறை பற்றிப் பாரதி எதுவும் கூறவில்லை. இளம் பருவத்தில் துறவு பூணும் முறை புத்த மதத்திலிருந்து இந்து மதத்திற்கு வந்து சேர்ந்த ஒரு கேடு என்று மட்டும் கூறுகிறார்.

    ஆனால் வர்ண முறையைப் பாரதி பெரிதும் போற்றினார். வர்ணம் என்ற சொல் நிறம் என்ற பொருளுடையது. இது தொழில் அடிப்படையில் மனித சமூகத்தில் காணப்படும் பிரிவைக் காட்டுவது. ஒவ்வொரு சமூகத்திலும் நடைபெறும் தொழில்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். சிலர் அறிவுத் துறையில் (ஆசிரியர், ஆராய்ச்சியாளர்) ஈடுபடுகின்றனர். சிலர் நாட்டு மக்களைக் காக்கும் பணியிலும் (அரசு அதிகாரிகள், ராணுவத்தினர்), சிலர் வாணிபத்திலும், மற்றையோர் உற்பத்தித் தொழிலிலும் உள்ளனர். ஒரு சமூகம் சீராக இயங்க இந்த நான்கு குழுக்களும் தேவை. இவற்றில் எந்த ஒன்றும் உயர்ந்தது என்றோ தாழ்ந்தது என்றோ சொல்ல முடியாது. ஒரு யந்திரத்தின் நான்கு பாகங்கள் போல, இவை நன்கு பொருந்தி சீராக அமைந்தால் தான் சமூக யந்திரம் சிக்கலின்றி இயங்கும். இதைத் தான் பாரதி குறிப்பிடுகிறார்.

    வேதமறிந்தவன் பார்ப்பான் – பல

    வித்தை தெரிந்தவன் பார்ப்பான்

    நீதி நிலை தவறாமல் தண்ட

    நேமங்கள் செய்பவன் நாய்க்கன்

     

    பண்டங்கள் விற்பவன் செட்டி பிறர்

    பட்டினி தீர்ப்பவன் செட்டி

    தொண்டர் என்றோர் வகுப்பில்லை தொழில்

    சோம்பலைப் போல் இழிவில்லை

     

    நாலு வகுப்பும் இங்கொன்றே இந்த

    நான்கினில் ஒன்று குறைந்தால்

    வேலை தவறிச் சிதைந்தே செத்து

    வீழ்ந்திடும் மானிடச் சாதி.

    பகவத்கீதையில் நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப்பட்டன என்று கண்ணன் கூறுவதைப் பாரதி குறிப்பிடுகிறார்.

    நாலு குலங்கள் அமைத்தான் அதை

    நாசமுறப் புரிந்தனர் மூடர்

     

    பாரதியாரின் ஞானரதம் அவரது கருத்தை மேலும் தெளிவுபடுத்துகிறது.

    “பிறக்கும் போது மனிதர்கள் எல்லாம் மிருகங்களாகப் பிறக்கிறார்கள். பயிற்சியினாலும் குண கர்மங்களினாலும் வெவ்வேறு வர்ணத்தினராகிறார்கள். சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகச: (நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப்பட்டன) எனப் பகவான் சொல்லியிருக்கிறார்.

          “பாரத தேசத்தில் தான் வர்ணாசிரம பேதங்கள் இருப்பதாகச் சொல்வது பிழை. ஸகல தேசங்களிலும் உண்டு. ஆனால் பாரத தேசத்தில் தான் வர்ணாசிரம நெறி சீர் கெட்டுப் போயிருக்கிறது. பூர்வத்தில் பாரத தேசத்தில் வர்ணாசிரம நெறி நான் சொல்வது போலத் தான் இருந்தது. அதற்கு அந்நாட்டிலுள்ள வேதங்கள், உபநிஷத்துகள், புராணங்கள், இதிஹாஸங்கள் முதலிய ஸகல நூல்களும் ஸாக்ஷி. இப்பொழுது பாரதநாட்டைத் தவிர மற்றெல்லா நாடுகளிலும் பகவான் சொல்லிய முறை தான் நடைபெற்று வருகிறது. பாரத நாட்டில் அம்முறை தவறிவிட்டது. அது பற்றியே அந்நாட்டினர் வறுமை, நோய், அடிமைத் தனம் என்ற இழிவுகளிலே வீழ்ந்திருக்கிறார்கள்.”

    இப்படி, விரிவாக வர்ண முறையை ஆதரித்த பாரதி, வர்ணங்களுக்குள்ளே உயர்வு தாழ்வில்லை, எத்தொழில் செய்தாலும் அனைவரும் சமம் என்பதைப் பல இடங்களிலும் வலியுறுத்துகிறார்.

    சீலம் அறிவு தருமம் இவை

    சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்

    ‘ஒற்றைக் குடும்பம் தனிலே பொருள் ஓங்க வளர்ப்பவன் தந்தை, மற்றைக் கருமங்கள் செய்தே மனை வாழ்ந்திடச் செய்பவள் அன்னை, ஏவல்கள் செய்பவர் மக்கள்’ என்றிருப்பது போல, சமூகத்திலும் வெவ்வேறு தொழில் செய்வோர் ஒற்றுமையாக ஒரு குடும்பம் போல வாழ வேண்டும் என்பது அவர் கருத்து.

    பாரதியின் பூனைக் குட்டிகள் பாட்டு அனைவரும் அறிந்தது.

    வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள்

    வீட்டில் வளருது கண்டீர்

    பிள்ளைகள் பெற்றதப் பூனை அவை

    பேருக்கொரு நிறமாகும்

     

    சாம்பல் நிறமொரு குட்டி கருஞ்

    சாந்தின் நிறமொரு குட்டி

    பாம்பின் நிறமொரு குட்டி வெள்ளைப்

    பாலின் நிறமொரு குட்டி

     

    எந்த நிறமிருந்தாலும் அவை

    யாவும் ஒரே தரமன்றோ

    இந்த நிறம் சிறிதென்றும் இஃது

    ஏற்றமென்றும் சொல்லலாமோ

     

    வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் அதில்

    மானிடர் வேற்றுமை இல்லை

     

    சாதி போல் அல்லாமல் வர்ணம் மாற்றிக் கொள்ளக் கூடியது என்பதை அவர் வலியுறுத்துகிறார். அவரது ஞானரதத்தில் தர்ம லோகம் என்ற பகுதியில் கதாநாயகன் கூறுகிறான்:–

    “எனது பிதா க்ஷத்திரியர். நான் பிராமணன். என் மக்கள் பன்னிரண்டு பேர்களில் ஒருவனை மட்டுமே பிராமண காரியங்களுக்குத் தெரிந்தெடுத்திருக்கிறேன். மற்றவர்களை யெல்லாம் மற்ற மூன்று வர்ணங்களின் காரியங்களுக்கு அவரவர்களின் தகுதி, ஸ்வபாவம் முதலியவற்றைக் கருதி உரியவாறு பயிலுமாறு செய்திருக்கிறேன்.”

    வர்ண முறையைப் போற்றிய பாரதி சாதி முறையைத் தீவிரமாக எதிர்த்தார். வர்ணம் என்பதும் சாதி என்பதும் ஒன்றல்ல என்ற உண்மையைப் பலர் அறிவதில்லை.

    வர்ணம் பிறப்பை அடிப்படையாகக் கொண்டது அல்ல. ஆனால் ஜாதி என்பது பிறப்பால் வருவது. பிறப்பின் காரணமாக ஏற்படும் பிரிவுகளைப் பாரதி அடியோடு வெறுத்தார்.

                    சாதிகள் இல்லையடி பாப்பா குலத்

                    தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

     

    மேலவர் கீழவரென்றே வெறும்

    வேடத்தில் பிறப்பினில் விதிப்பனவாம்

    போலிச் சுவடியை எல்லாம் இன்று

    பொசுக்கி விட்டால் எவர்க்கும் நன்மை உண்டென்பான்

    சாதிப் பிரிவுகள் சொல்லி அதில்

    தாழ்வென்றும் மேலென்றும் சொல்வார்

    நீதிப் பிரிவுகள் செய்வார் அங்கு

    நித்தமும் சண்டைகள் செய்வார்

    சாதிக் கொடுமைகள் வேண்டா அன்பு

    தன்னில் செழித்திடும் வையம்.

     

    மானிடச் சாதி என்ற ஒன்றைத் தான் அவர் ஒப்புக் கொள்கிறார்.

                    கூட்டி மானிடச் சாதியை ஒன்றெனக்

                    கொண்டு வைய முழுதும் பயனுறப்

                    பாட்டிலே அறம் காட்டு என்னும் ஓர் தெய்வம்.

     

    ……………………………………….ஆயிரம் சாதி

    வகுப்பவர் வகுத்து மாய்க. நீரனைவரும்

    தருமம் கடவுள் சத்தியம் சுதந்திரம்

    என்பவை போற்ற எழுந்திடும் வீரச்

    சாதி ஒன்றையே சார்ந்தவராவீர்.

    மானிடர் அனைவரும் ஒரே சாதி என்ற நிலையிலிருந்து இன்னும் ஒரு படி மேலே போய்ப் பிற உயிரினங்களையும் உயிரற்றவைகளையும் கூட ஒரே சாதிக்குள் அடக்குகிறார்.

    “காக்கை குருவி எங்கள் சாதி

    காடும் மலையும் எங்கள் கூட்டம்”

    என்று அவர் பாடும்போது அத்வைத மாமேருவின் உச்சிக்கே போய் விடுகிறார்.

    கீதை முன்னுரையில் அவர், “கண்ணபிரான் ஜாதி வேற்றுமையும் அறிவு வேற்றுமையும் பார்க்கக் கூடாது என்பது மட்டுமே அன்றி எல்லா உயிர்களுக்குள்ளேயும் எவ்வித வேற்றுமையும் பாராது இருத்தலே ஞானிகளுக்கு லட்சணம்” என்கிறார்.

    “பாம்பும் நாராயணன், நரியும் நாராயணன், பார்ப்பானும் கடவுளின் ரூபம், பறையனும் கடவுளின் ரூபம். இப்படியிருக்க ஒரு ஜந்து மற்றொரு ஜந்துவை எக்காரணம் பற்றியும் தாழ்வாக நினைத்தல் அஞ்ஞானத்துக்கு லட்சணம். எல்லா வேற்றுமைகளும் நீங்கி நிற்பதே ஞானம்.”

    இவ்வாறு அவரது சமூகச் சமத்துவக் கொள்கையும் வேத அடிப்படையைக் கொண்டது என்பது தெரிகிறது.


     

    Share
  • நித்திலம் வேண்டினேன்!

    கவிஞர்.மகேந்திரன் பன்னீர்செல்வம்

    நித்தமும் நிறைமதி
    புத்தம்புது ஒளிபாய்ச்ச
    சத்தமின்றி வருகையில்
    சித்தம் வேண்டினேன்
    நித்திலம் வேண்டுமென!!

    சிந்தனையில் சிரித்து
    சந்தத்தில் சிந்து பாடும்
    சுந்தரத் தொன்மையின்
    செப்புத் தமிழினால்
    நித்திலம் வேண்டுமென!

    நஞ்செனும் சொற்களால்
    வஞ்சகரின் பேச்சில்
    மஞ்சு முகில் போல்
    நெஞ்சம் கனத்து
    தஞ்சம் அடைகையில்
    நித்திலம் வேண்டுமென!!

    நெறியுடை வாழ்வில்
    குறிப்பறிந்து செயலாற்றி – நெஞ்சை
    பறித்துச் செல்லும்
    செறிவுநிறை மாந்தருறையுள்
    அறிவுநிறை புவனத்தில்
    நித்திலம் வேண்டுமென!!

    நேர்மைத்திறம்  மாறா
    கூர்மை அறிவுடை
    தேர்வு நிலைதனில் – பிறர்
    பார்வை துச்சமாக்கி
    தேர்ச்சி அடைகையில்
    நித்திலம் வேண்டுமென!!

    அந்தம் நெருக்கையில்
    மந்தப் போக்கினில்
    பந்தமென்று இருந்த
    சொந்தங்கள் யாவுமே
    நிந்தனை செய்கையில்
    நித்திலம் வேண்டுமென!!

    சத்தியம் சொல்கிறேன்
    நித்திலம் வேண்டினேன்!
    முத்ததின் ஒளியுடை
    புத்தியின் திண்மையே
    நித்திலம் என்பதாம்!!

    சான்றோர் சபையினில்
    மாண்போர் நடுவில்!
    பண்புசார் சொற்களை
    அம்புபோல் பாய்த்திடவே
    அகிலம் ஆளும் இறைவா – எனை
    நித்திலம் ஆக்கிவிடு!!!

    Share
  • சிறுகதைகள் இலக்கியம்

     

    பவள சங்கரி

    இலக்கியங்கள் என்பது அந்தந்தக் காலங்களின் கலாச்சாரங்கள், பண்பாடு, நடைமுறை வாழ்க்கை, இன்னல்கள் என அனைத்தையும் துல்லியமாகப் பிரதிபலிக்கும் கண்ணாடி. நச்சென்று வார்த்தைகளால், பளிச்சென்று தம் கருத்தை முன் வைக்கும் கட்டுரைகள் ஒரு விதம் என்றால், அலங்கார வார்த்தைகள் என்ற ஒப்பனையுடன் அழகாகத் தாம் கண்டவற்றை, கேட்டவற்றை, சற்றே கற்பனை கலந்து சுவையான பண்டமாக வழங்கக்கூடியது சிறுகதை. ஆரம்பக் காலங்களில் சிறுகதைகளுக்கு பரவலான அங்கீகாரம் இருந்திருக்கவில்லை. ஆங்கில இலக்கியங்களுக்கு கிடைத்த வரவேற்பு மற்ற மொழி இலக்கியங்களுக்கு கிடைப்பது அரிதாக இருந்திருக்கிறது. ஷேக்ஸ்பியர் படைப்புகள் குறித்து அறிந்தவர்கள் மட்டுமே பெரும்பாலும் இலக்கியவாதிகளாக கருதப்பட்ட காலமும் இருந்திருக்கிறது. மேலை நாட்டவர்களின் பிரவேசத்தினால் நமக்குக் கிடைத்த புதிய இலக்கிய வடிவமே சிறுகதை என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது.

    இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற மாபெரும் காவியங்களில் பல சிறுகதைகள் கிளைக்கதைகளாக வேரூன்றியிருக்கும். நாயன்மார்களின் வரலாறுகள் இன்றளவிலும் இறை நம்பிக்கையை ஊக்குவிக்கக்கூடிய திறன் பெற்றவையாகவே விளங்குவது சிறப்பு. மாபெருங்காவியங்களான இவைகளின் தாக்கம் இன்றைய வாழ்வியலிலும் காண முடிகிறது.

    சிறுகதைகளின் முன்னோடி என்று எடுத்துக்கொண்டால் வீரமாமுனிவரைச் சொல்லலாம் எனினும், 18ம் நூற்றாண்டுகளில், தாண்டவராய முதலியார் என்பவரால் வடிக்கப்பட்ட சுவையான சிறுகதைகள் இன்றளவும் குழந்தைகளை உற்சாகப்படுத்துகிறது என்றால் அது மிகையில்லை. பாரதியாரின் சிறுகதைகள் 20ம் நூற்றாண்டுகளின் ஆரம்பத்தில் எழுதப்பட்டது. புதுமைப்பித்தன், கு.ப ராஜகோபாலன், வ.வே.சு. போன்றோரின் சிறுகதைகளும் பிரபலமாக இருந்தது.

    1809ம் ஆண்டில் (ஜனவரி 19) பிறந்த அமெரிக்க கவிஞர், எழுத்தாளர், திறனாய்வாளர் மற்றும் விமர்சகர் ஆலன்போவின் (Allan Poe) திகில் கதைகள் மிகப்பிரபலமானது. உலகம் முழுவதையும் தம்முடைய படைப்புத் திறனால் கட்டுக்குள் வைத்திருந்தார். ‘துப்பறியும் கதைகளின் தந்தை’ என்று பெரும் பெயரும் பெற்றிருந்தார்.அவர் சிறுகதைகளின் இலக்கணம் பற்றிக் கூறும்போது,அரை மணி முதல் ஒன்று அல்லது ஒன்றரை மணிக்குள் படித்து முடிக்கக்கூடிய உரைநடையாக இருக்க வேண்டும் என்கிறார்.

    ஹட்சன் என்ற பிரபல எழுத்தாளர், ஒரே மூச்சில் படித்து முடிக்கக்கூடியது நல்ல சிறுகதை என்கிறார். ஒரு சிறு அனுபவமோ, வாழ்க்கையில் நடக்கும் சுவையான நிகழ்ச்சிகளோ, கிடைத்த வெற்றிகள், அதனால் ஏற்படும் சிறு சிக்கல்கள், கவர்ச்சியான காட்சிக்ள் இப்படி எதுவும் நல்ல சிறுகதையின் அடிப்படையாகலாம் என்கிறார் மு. வரதராசனார். கல்கி காலத்தில் சிறுகதைகள் தனிப்பொலிவுடன் மிளிர்ந்தது. மணிக்கொடி போன்ற அச்சிதழ்களும் சிறுகதை வளர்ச்சிக்கான பெரும் பணியாற்றியுள்ளது. ரா. கி. ரங்கராஜன் அவர்களின் ‘எப்படிக் கதை எழுதுவது’ என்ற நூலும், அகிலனின் ‘கதைக்கலை’ என்ற நூலும், மகரம் என்பவரின் தொகுப்பான, ‘எழுதுவது எப்படி’ போன்ற நூல்கள் சிறுகதை எழுதும் கலையை பயிற்றுவித்திருக்கின்றது. வானொலியிலும் சிறுகதைகள் வாசிக்கப்பட்டு வருகின்றன. அமுதசுரபி, கல்கி போன்ற இதழ்கள் சிறுகதைப் போட்டிகள் நடத்தி நல்ல மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

    நல்ல சிறுகதைகள் என்பது, வாசித்து முடித்தவுடன், சிந்தனைக்கு தூண்டுகோலாக அமைய வேண்டும் என்கிறார் புதுமைப்பித்தன்.

    “கதையை வாசிப்பது, நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவிப்பதற்கு ஒரு தூண்டுகோல். கதை முடிவடையும்போது அதைப்பற்றிய சிந்தனை முடிவடைந்து விடாது. இப்படிப்பட்ட கதைகள் முடிந்த பிறகுதான் ஆரம்பமாகின்றன என்று சொன்னால் விசித்திரவாதமாகத் தோன்றும். ஆனால் அதுதான் உண்மை” என்பது புதுமைப்பித்தனின் வாதம்.

    மனக்குகை ஓவியங்கள், துன்பக்கேணி, மனித யந்திரம் போன்ற புதுமைப்பித்தனின் பல சிறுகதைகள் இது போன்று சிந்தனைக்குத் தூண்டுகோலாக இருப்பதைக் காணலாம்.

    நாட்டுப்புறக் கதைகள் மிகச் சுவையான கதைக்களங்கள் கொண்டவை. இன்று அவைகள் பெரும்பாலும் மறைந்து கொண்டுவருகின்றன எனலாம். விக்கிரமாதித்தன் கதைத் தொகுப்புகளும், பாட்டிமார்கள் சொன்ன பழங்கதைகளும் குழந்தைகளுக்கும் படிப்பினை ஏற்படுத்தக் கூடியவைகள்.

    சமகால எழுத்தாளர்களான, கல்கி கிருஷ்ணமூர்த்தி, தீபம் நா. பார்த்தசாரதி, புதுமைப்பித்தன் மு.வரதராசனார், ந.பிச்சமூர்த்தி, லா.ச.ராமாமிருதம், ராஜம் கிருஷ்ணன், ரமணிசந்திரன் , சு. சமுத்திரம், சாவி பனசை கண்ணபிரான், போன்றோர்கள் என்றும் மனதில் நிற்பவர்கள்.

    அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், கள்வனின் காதலி, பொய்மான் கரடு, மோகினித் தீவு போன்ற புதினங்கள் இன்றளவிலும் இளைஞர்களையும் கவர்ந்திழுக்கக்கூடியவைகளாவே உள்ளது குறிப்பிடத்தக்கது. 75க்கும் மேற்பட்ட சுவையான சிறுகதைகளும் எழுதியுள்ளார்.

    சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ள தீபம். நா. பார்த்தசாரதி அவர்களின் பிரபலமான புதினங்களான, பொன் விலங்கு மற்றும் குறிஞ்சி மலர், தொலைக்காட்சித் தொடர்களாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவருடைய கதை நாயகர்கள், சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் போராளிகளாகவே இருப்பார்கள். முறையாகத் தமிழ் பயின்றுள்ள இவரின் பயணக் கட்டுரைகளும் சுவாரசியமானது. பிரான்சு, செருமனி, இரசியா, இத்தாலி, எகிப்து, குவைத் போன்ற நாடுகளுக்குச் சென்று தன் பயண அனுபவங்களை பலருக்கும் பயன்படும் வகையில் எழுதியுள்ளார்.

    நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும், ஐம்பதிற்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புக் கதைகளும் எழுதியுள்ளார். அகல்யை என்ற சிறுகதையில், கௌதமர் என்ற பாத்திரத்தின் அங்க இலட்சணங்களை விளக்கிய விதம்  வித்தியாசமாக இருக்கும்.

    “ அவருக்கு வயது முப்பது. கறுத்து அடர்ந்த தாடி, அகன்று பிரகாசமான ஒளிவிடும் கண்கள், மெல்லிய உதடு, பரந்து விரிந்து திரண்ட மார்பு, ஒடுங்கிய வயிறு, எல்லாவற்றிலும் இயற்கையின் கனிவு பொங்கியது. மிருக அழகன்று – ஆளை மயக்காது, வசீகரிக்கும். அந்தக் கண்களில், அந்த உதடுகளில் ஒரு தெய்வீக ஒளி – தேஜஸ் – உள்ளத்தின் சாந்தியை எடுத்துக் காட்டிற்று.”

    அதைவிட அவருடைய மனைவியை வர்ணிக்கும் போது அந்தக்கால பண்பாடும், கலாச்சாரமும் தெளிவாக விளங்கும்படி விவரித்திருப்பார்.

    “அவர் மனைவி – அவள் தான் அகல்யை. அவர் ஆணுக்கு இலட்சியம் என்றால், இவள் பெண் குலத்திற்கு வெற்றி. மருண்ட பார்வை, அவரைக் காணுந்தோறும் காதல் பொங்கும் கண்கள். அவரைத் தனது உள்ளத்தில் மட்டும் வைத்துவிடவில்லை. அவளது ஒவ்வொரு செயலும் அவரது இன்பத்திற்காகவே. அதிலே அவளுக்கு ஓர் இன்பம்.”

    துளியும் விரசமில்லாமல் அத்துனை ஆழ்ந்த காதல் கதையை, அழகாக வடித்த பாங்கு ஆச்சரியமூட்டுபவை.

    மு. வரதராசனார் அவர்களுடைய ’அகல்விளக்கு’ என்ற புதினத்தின் அறிமுக உரையில்

         “என்ன உலகம் இது? பெண்கள் இருவர் பழகினால், உடம்பைக் கடந்து உள்ளத்தின் உறவு கொண்டு பழகவில்லையா? … ஆண்கள் இருவர் பழகும்போது அப்படி உள்ளத்தால் பழகவில்லையா? ஓர் ஆணும் பெண்ணும் பழகும் போது மட்டும் உள்ளம் இல்லையா? ஏன் இந்தத் தடுமாற்றம், ஏமாற்றம் எல்லாம்?” …. இமாவதியின் ஆழ்ந்த உள்ளத்திலிருந்து எழுந்த இந்தக் கேள்வியை ஒவ்வோர் ஆணும் பெண்ணும் எண்ணி எண்ணி விடை காண முடியுமானால், சமுதாயம் பண்பாடு மிக்கதாய் எளிதில் முன்னேற்றம் எய்தலாம்.

    என்ற கா.அ.ச. ரகுநாயகன் (திருப்பத்தூர் வ.ஆ) அவர்களின் கருத்து இன்றளவிலும் ஆழ்ந்து நோக்கத்தக்கதொன்றாகும்.

    அந்தக் காலத்தில் மு. வ அவர்களின் படைப்புகளை பலர் தம் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவே பயன்படுத்தியுள்ளனர். அத்தகைய முற்போக்குச் சிந்தனைகள் கொண்டவைகள் அவர்தம் படைப்புகள்.

    லா. சா. ராமாமிர்தம் அவர்கள், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 6 நாவல்களும் எழுதியுள்ளவர். 1989ம் ஆண்டில் சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்.

    திருமதி ராஜம் கிருஷ்ணன் தம் பல கட்டுரைகள் மட்டும் கதைகள் மூலம் பெண் விடுதைலைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். ஒரு புதினத்தை எழுதுவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட களங்களில் நேரிடையாகத் தங்கி ஆய்வு மேற்கொண்டு பின்னரே அதுபற்றி எழுதுவதே இவருடைய தனிச்சிறப்பு. ‘கரிப்பு மண்கள்’ என்ற இவருடைய புதினம், தூத்துக்குடியில் வாழும் மீனவர்களுடன் தங்கி, அவர்களுடைய வாழ்க்கை முறைகளையும், நிலைகளையும் உணர்ந்து எழுதிய ஒன்றாகும். அதேபோல் ‘முள்ளும் மலரும்’ என்ற புதினத்திற்காகத் தம் கணவருடன் சம்பல் பள்ளத்தாக்கிற்குச் சென்று கொள்ளைக்கூட்டத் தலைவன் டாகுமான்சி என்பவரையும், மான்சிங் என்ற 400க்கும் மேற்பட்ட கொலைகள் செய்தவரையும் சந்தித்து நான்கு மணிநேரம் உரையாடி, பின்னர் அந்தப் புதினத்தை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. ’வேருக்கு நீர்’ என்ற புதினத்திற்காக 1973ம் ஆண்டின் சாகித்ய அகாதமி விருதும் பெற்றுள்ளார்.

    ’அமுதமாகி வருக’ என்னும் புதினம் பைகாரா நீர் மின் திட்டம் செயல்பாடுகள் குறித்த கருப்பொருளுடன், கள ஆய்வு மேற்கொண்டு எழுதப்பட்டது என்பது சிறப்பு. 1952ல் அகில உலகச் சிறுகதைப் போட்டியில் தமிழ்ச் சிறுகதைக்காக இவருடைய ‘ஊசியும் உணர்வும்’ என்ற சிறுகதை தேர்ந்தெடுக்கப்படது குறிப்பிடத்தக்கது.

    இதுபோல சிறுகதைகள் மற்றும் நாவல்கள் எழுதுவதில் பெரும் புரட்சி ஏற்படுத்திய படைப்பாளிகள் பலர்.சுஜாதா அவர்களின் பல்வேறு விதமான படைப்புகளில், ‘மீண்டும் ஜினோ’ என்ற புதினம் என்றும் மனதை விட்டு அகலாதவை. இவர்களின் அனைத்து படைப்புகளையும் படிக்க வேண்டும் என்ற ஆவல் பூர்த்தியாக இறைவனை இறைஞ்சுகிறேன். ஒரு சிலவற்றையே இதுவரை வாசித்திருக்கிறேன்.

    மக்களின் நடைமுறை வாழ்க்கையும், நடை, உடை மற்றும் பாவனைகளும் காலத்திற்கு காலம் மாறிக்கொண்டே இருப்பதே இலக்கியங்களில் மாற்றங்கள் ஏற்படக் காரணமாகிறது.  இந்த மாற்றங்களே சிறுகதைகளின் வளர்ச்சிக்கு வித்தாகிறது என்பதும் நிதர்சனம்.சமீபத்தில் இந்து நாளிதழ் மும்பை வாழ்க்கையைச் சித்தரிக்கும் இரண்டு கதைகளுடன், மேலும் மூன்று சிறந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து பரிசு வழங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    தம்மைச் சுற்றியுள்ள மனிதர்களை நேசிக்கவும், அவர்தம் துன்பங்களை கருணைக் கண்களுடன் காணக் கூடியவர்களும், மற்றும் மக்கள் மனதில் தம் எழுத்துக்கள் நீங்காத இடம் பிடிக்க வேண்டும் என்ற வேட்கை உடையவர்களே சிறந்த படைப்புகளை அளிக்க வல்லவர்கள். மிகைப்படுத்தப்பட்ட கற்பனைக் காட்சிகள் தற்காலங்களில் அதிகமாக விரும்பப்படுவதில்லை. யதார்த்தமான சூழல்களில், மிக யதார்த்தமாக, சுருக்கமாக எழுதப்படும் சிறுகதைகளே பெரிதும் வரவேற்கப்படுகிறது. குறிப்பாக வட்டார வழக்குகளில்  எழுதப்படும் சிறுகதைகள் வாசகர்களை பெரிதும் கவருகிறது. தேசியச் சிந்தனைகள்,  சமுதாய சீர்திருத்தம், பெண்ணியம், தலித்தியம், கலாசாரம், பண்பாடு, மனிதத் தத்துவம், உளவியல், நவீனத்துவம், பின் நவீனத்துவம் என பல வடிவங்களில் சிறுகதைகள் எழுதப்படுகிறது.

    அச்சிதழ்கள் பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு சிறுகதைகளே வெளியிடுவதால் சிறுகதை எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை வெளிக்கொண்டு வருவதில் பெரும் சிரமத்திற்குள்ளாகிறார்கள். அந்த வகையில் பலவிதமான படைப்புகளை வெளியிடும் பல இணைய இதழ்கள் மற்றும் பல்வேறு இணைய தளங்கள் மூலமாக இன்றைய இலக்கியம் சிறந்த முறையில் வளர்ச்சியடைய வாய்ப்பாக அமைகிறது என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. நல்ல எண்ணங்களை ஊக்குவிக்கக்கூடியதான படைப்புகள் மட்டுமே காலத்திற்கும் அழியாமல் நிலைத்து நிற்கும் என்பதும் சத்தியம்.

    படத்திற்கு நன்றி:

    http://en.wikipedia.org/wiki/Edgar_Allan_Poe

    நன்றி : இன் & அவுட் சென்னை இதழில் வெளியானது.

     

     

    Share
  • அனுதினமும்…


        செண்பக ஜெகதீசன்

    வாரத்தில் ஒருநாள்

    விடுமுறை நாள்..

     

    மாதத்தில் ஒருநாள்

    சம்பள நாள்..

     

    வருடத்தில் ஒருநாள்

    பிறந்தநாள்..

     

    வாழ்க்கையில் ஒருநாள்

    இறந்திடும் நாள்..

     

    ஆனாலும்,

    அனுதினமும் மனிதர்பலர்

    அஞ்சியஞ்சி சாகிறாரே

    அது ஏன்…!

     படத்துக்கு நன்றி

    http://www.iappfind.com/app/411900526

    Share
  • “ நவீன ரோபோக்கள் “

    தமிழ்த்தேனீ

    பூம் பூம் பூம் பூம் ஐயாவுக்கு நல்ல காலம் பொறக்குது,நல்ல காலம் பொறக்குது  ,  ஐயா வீட்டுலே சுப காரியம் நடக்கப் போகுது, வூட்லே இருக்கறவங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கப் போறாங்க. என்று வாயிலில்  பூம்பூம் மாட்டுக்காரனின் குரல் கேட்டது.

    கதவைத் திறந்து எட்டிப் பார்த்தார்  சபேசன், இவரின் தலையைக் கண்டவுடன்  பூம்பூம் மாட்டுக்காரன் நம்பிக்கையுடன் , குரலில் இன்னும் உத்வேகத்துடன்  ராகத்தோடு முழங்கத் தொடங்கினான் ,ஐயா எட்டிப் பாக்கறாரு தலையை ஆட்டுடா ராசா , ஐயா பழைய துணி ,  காசு எல்லாம் குடுப்பாரு  என்று கூறிவிட்டு அவன் கையிலிருந்த  குட்டையான நாதஸ்வரத்தை  ஒலிக்கத் தொடங்கினான்.

    மாட்டுக்கு என்ன புரிந்ததோ  அந்த  நாதஸ்வரத்தின் ஓசைக்கு ஏற்ப தலையை அப்பிடியும் இப்படியுமாக ஆட்டிற்று.  எப்போதுமே   மனிதருக்கு   யானை, குரங்கு , புலி சிங்கம் போன்றவைகளை மீண்டும் மீண்டும் பார்க்க ஆர்வம் வரும், அதே போல் சபேசனும் அந்த மாட்டையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.    ஐயா பாக்கறாரு தலையை வேகமா ஆட்டுரா ராசா என்றான் பூம் பூம் மாட்டுக்காரன், மாடும் வேகமாய்த் தலையை ஆட்டத் தொடங்கியது.

    .ஏதோ ஒரு இரக்கம் தோன்றவே அவருடைய  பழைய வேட்டியை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தார்,  . பூம்பூம் மாட்டுக்காரன் ஐயாவுக்கு  நன்றி சொல்லுடா ராசா வேட்டி குடுத்தாரு மகராசன்  என்று கூறிக் கொண்டே அந்த வேட்டியை நிரந்தரமாக மாட்டுக்கே கொடுப்பது போன்ற பாவனையில் அந்த வேட்டியை மாட்டின் மேலேயே போட்டான்.

    அந்த மாட்டின் மேல் பலவிதமான  வண்ண ஆடைகள் போர்த்தப்பட்டு இருந்தன.  அனேகமாய் அந்த  வண்ணத் துணிகளை எடுத்துவிட்டால் அதன் எலும்புகள் தெரியும் என்று தோன்றியது சபேசனுக்கு,  கையோடு கொண்டு வந்த இரண்டு வாழைப்பழங்களை மாட்டுக்கு கொடுத்தார் சபேசன் , வாங்கிக்கோ ராசா ஐயா அன்போட குடுக்கறாரு என்றான் பூம்பூம் மாட்டுக்காரன்

    அவன் குரலுக்கு கட்டுப்பட்டு வாயைத் திறந்து தன்னுடைய  நாக்கை நீட்டி வாழைப்பழத்தை  கவ்விக்கொண்டு பூம்பூம்மாட்டுக்காரனிடமே  நீட்டியது பூம்பூம் மாடு.    ஆச்சரியமாய் இருந்தது சபேசனுக்கு , எப்படிக் கட்டுப் பாட்டோடு பழக்கி இருக்கிறான் இந்த மாட்டை என்று அதிசயித்துப் போனார் சபேசன்.

    அதன் வாயில் தொங்கிக் கொண்டிருந்த வாழைப் பழங்களிலிருந்து  ஒரு வாழைப் பழத்தை எடுத்து உரித்து அவன் உண்டு விட்டு இன்னொன்றை மாட்டுக்கு கொடுத்தான் . மாடும் அதை தோலோடு உண்ணத் தொடங்கிற்று

    அது சரி இயல்பாய் ஏதேனும் உண்ணக் கொடுத்தால் வாங்கி உண்ணுமே மாடுகள், இந்த மாடு  அவர் கொடுத்த வாழைப்பழத்தைக் கூட பூம்பூம் மாட்டுக்காரன் அனுமதித்த பிறகே  வாங்கி உண்கிறது, அப்படிப் பழக்கி இருக்கிறான் இந்த மாட்டுக்காரன்  என்று தோன்றியது.

    ஒரு நவீனவகை ரோபோ போல் பூம்பூம் மாட்டுக்காரன் இடும் கட்டளையை எல்லாம் நிறைவேற்றியது  மாடு.  இவன் தன் வயிறு நிரம்ப இந்த  வேலையைச் செய்கிறான், இவனுக்கு  மனோவசியம் தெரிந்திருக்கிறது, நல்ல சொற்களைக் கூறினால்  மனதில் நல்ல மகிழ்ச்சி உண்டாகும், அந்த மகிழ்ச்சி எப்படிப்பட்டவரையும்   ஏதேனும் கொடுக்கச் செய்துவிடும் என்று நன்றாகவே தெரிந்து கொண்டிருக்கிறான்.

    நம்மில் பலர்  நல்ல சொற்களை கூறக் கூட தயங்கிக் கொண்டேதானே இருக்கிறோம். அப்படிப்பட்டவர்களைக் காட்டிலும் ,ஏதோ ஒரு வகையில் இந்த பூம்பூம் மாட்டுக்காரன் சாதாரண மனிதர்களை விட  உயர்ந்தவன் என்று தோன்றியது சபேசனுக்கு.

    சபேசனுக்கு நன்றி கூறிவிட்டு  மேலும் மற்ற வீடுகளுக்கு சென்று தன்னுடைய தொழிலைத் தொடர, நாதஸ்வரத்தை வாசித்தபடியே நகரத் தொடங்கினான் பூம்பூம் மாட்டுக்காரன், தலையை ஆட்டியபடியே பின் தொடர்ந்தது பூம்பூம் மாடு. உள்ளிருந்து கனகா,  யாரு வாசல்லே  என்றாள், யாரும் இல்லே பூம்பூம் மாட்டுக் காரன் வந்தான், அவனுக்கு ஒரு பழைய வேட்டியைக் குடுத்து அனுப்பினேன்  என்றார் சபேசன்.

    அதெல்லாம் சரி காலம் கெட்டுக் கெடக்கு , வயசானவா நாம ரெண்டு பேரும் தனியா இருக்கோம், நீங்க பாட்டு தானம் தர்மம்னு கதவைத் திறந்து அவனுக்கு தானம் செய்யப் போறீங்க,   அவன் கையிலே வெச்சிருக்கற கொம்பாலே உங்களை அடிச்சுப் போட்டுட்டு  வீட்டிலே இருக்கறதை எல்லாம் எடுத்துண்டு போய்ட்டான்னா என்ன செய்யறது.

    என்னைக் கேக்காம கதவைத் திறக்காதீங்கன்னு எவ்ளோ தடவை உங்களுக்கு சொல்றது, இனிமே இப்பிடி கதவைத் திறக்காதீங்க என்றாள்.  சரி சரி என்று வேகமாய்த் தலையை ஆட்டினார் சபேசன்,

    பூம்பூம் மாட்டுக்காரன் வந்த வேலையை முடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தான், இவர்கள் வீட்டைத் தாண்டி செல்லும் போது  ஏனோ அந்த பூம் பூம் மாடு ஒரு முறை இவரை திரும்பிப் பார்த்துவிட்டு மேலே நடக்கத் தொடங்கியது.  ,

    அன்று மாலை ,கனகா கதவைத்  தாப்பாள் போட்டுக்கோ  ,காலார ஒரு நடை நடந்துட்டு , அப்பிடியே காய்கறி வாங்கிட்டு வரேன்  என்றபடி  வெளியே வந்தார்  சபேசன்,   சற்று தூரத்தில் அந்த மாடு படுத்துக் கொண்டிருந்தது, பூம்பூம் மாட்டுக்காரன்  அரசாங்க மதுக் கடையில் மதுபானம் வாங்கி அருந்திவிட்டு தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

    அவன் கண் விழித்து தனக்கு ஏதேனும் உண்ணக் கொடுப்பான் என்னும் நம்பிக்கையுடன்  பூம்பூம் மாடு அவனையே பார்த்துக் கொண்டிருந்தது.  அந்த மாட்டைக் கடந்து போகும்போது ஏனோ ஒரு முறை சபேசன் அந்த மாட்டைத் திரும்பிப் பார்த்தார். அதன் கண்களில் ஒரு இரக்கமும் , நன்றியும்  தெரிந்தது.

    Share
  • பிக்கோலிம் புளுகு – 1

     

    தேமொழி

     

    முன்னுரை:

    வல்லமையில் முன்பு வெளிவந்த கட்டுரையான “பிக்கோலிம் போர்” (http://www.vallamai.com/?p=30512/) பற்றி உங்களுக்கு நினைவிருக்கலாம். “பிக்கோலிம் போர்” (Bicholim conflict) பற்றி மிகச் சுருக்கமாக ஒரு அறிமுகம் …  இவ்வாறு ஒரு போரே நடந்தது இல்லை.  ஆனால் நடந்ததாக ஒரு மோசடி சமீபத்தில் விக்கிபீடியாவில் நிகழ்ந்திருக்கிறது. கோவா மாநிலத்தின் பிக்கோலிம் என்ற இடத்தில் இப்படி ஒரு போர்  நடந்ததாக ஒரு கட்டுக் கதை.  1640 இல் இருந்து 1641 வரை கோவாவை ஆட்சி புரிந்த போர்ச்சுகீசியர்களுக்கும் மராட்டியப் பேரரசுக்கும் இடையில் நடந்ததாக விக்கிபீடியாவில் ஜூலை 4, 2007 இல் ஒரு கட்டுரை எழுதப் பட்டிருந்திருக்கிறது.   இந்தக் கட்டுக் கதையின்படி, பிக்கோலிம் போரின் விளைவாக ஒரு சமாதன உடன்படிக்கை ஏற்பட்டு போர் நின்றது.  உடன்படிக்கையின் விளைவாக சுதந்திர கோவா மாநிலம் அமைக்கப் பட்டது.  இந்தக் கட்டுக் கதை 5 ஆண்டுகள், 5 மாதங்கள், 25 நாட்கள் விக்கிபீடியா வலைதளத்தில் இடம் பெற்ற பின்பு, அது மோசடி பதிவு என கண்டு கொள்ளப் பட்டு, சென்ற ஆண்டு 2012 டிசம்பர் 29 ஆம் தேதி நீக்கப் பட்டுவிட்டது. இந்தக் கட்டுரைக்கு ஆதாரமாகக் காட்டப் பட்ட சான்றுகள் அனைத்தும் பொய்யானவை.  தற்பொழுது விக்கிபீடியாவில் பதிவு செய்யப்பட்ட மோசடி செய்திகளின் வரிசையில் பிக்கோலிம் போர் இடம் பிடித்துள்ளது (பார்க்க: http://en.wikipedia.org/wiki/Wikipedia:List_of_hoaxes_on_Wikipedia மற்றும் http://en.wikipedia.org/wiki/Wikipedia:Articles_for_deletion/Bicholim_conflict மற்றும் http://en.wikipedia.org/wiki/Bicholim_conflict).

    விக்கிபீடியா அதை நீக்கிவிட்டாலும், சிறந்த விக்கி கட்டுரைகளை நூலாக வெளியிடும் பதிப்பகம் ஒன்று, அதனை நூலாக வெளியிட்டு விற்பனை செய்கிறது (http://www.alibris.com/search/books/isbn/9785510567311). விக்கி கட்டுரைகளை  இதுபோல விற்பனை செய்வதை காப்புரிமை என்ற அடிப்படையில் விக்கி தடுப்பது இல்லை. கல்வி பரவவேண்டும் என்ற அடிப்படையில் அனுமதியும் அளிக்கிறது.  ஆர்வக் கோளாறின் காரணமாக, “பிக்கோலிம் போர்” கட்டுரையில் அப்படி என்னதான் இருந்தது எனத் தெரிந்து கொள்ளும் நோக்கில் அந்த புத்தகத்தை வாங்கிப் படிக்கும் ஆசை எழுந்தது. லென்நெக்ஸ் கார்ப் (LENNEX Corp) பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள 90 பக்கங்கள் உள்ள அந்த நூலில் ஒரு ஆறு பக்கம்  மட்டுமே “பிக்கோலிம் போர்” (Bicholim Conflict) பற்றி கட்டுரையில் விவரிக்கப் படுகிறது.  மற்ற பக்கங்களில் கோவா, பிக்கோலிம், மராட்டியர்கள், போர்ச்சுகீசியர்கள்  என்ற மற்ற பல விக்கி கட்டுரைகள் நூலை நிறைக்கிறது.  இக்கட்டுரை மொழி பெயர்க்கப்பட்டு “பிக்கோலிம் புளுகு” என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.  இனி விக்கிபீடியாவில் வெளியிடப்பட்ட கட்டுக்கதை(கட்டுரை) தொடர்கிறது.

    பிக்கோலிம் புளுகு:

    பிக்கோலிம் போர் என்பது  1640-1641 இல் கோவாவை ஆட்சி புரிந்த போர்ச்சுகீசியர்களுக்கும், சிவாஜி பான்ஸ்லே (Shivaji  Bhonsle) ஆட்சிக்குட்பட்ட மராட்டியப் பேரசிற்கும் இடையே நிகழ்ந்த ஆயுதம் தாங்கிய போராட்டம் ஆகும். இது நிகழ்ந்தது கோவாவின் வட பகுதியான பிக்கோலிம் என்ற இடத்தில். இப்போராட்டம் 1640 ஆம் ஆண்டின் மத்தியப் பகுதியில் இருந்து 1641 ஆம் ஆண்டின் ஆரம்ப நாட்கள் வரை நிகழ்ந்தது. பிறகு மராட்டியர்களுக்கும் போர்ச்சுகீசியர்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு,  முன்பிருந்த அரசுகளின் எல்லைகளையே இருதரப்பினரும் ஏற்றுக்கொள்வது என்ற ஒப்பந்தத்தின் பேரில் பிக்கோலிம் போர் முடிவிற்கு வந்தது [1]. எனினும், போர்ச்கீசியர்களுக்கும் மராத்திய அரசுக்கும் இடையே ஒரு பதட்டமான சூழ்நிலை கோவாவிலும் மராட்டியத்தின் அண்டைத் தீவுகளான டையு-டாமனிலும் (Diu, Daman) தொடர்ந்தது[2].  போராட்டம் பெரும்பாலும் கோவாவில் நிகழ்ந்தாலும் சில கால கட்டங்களில் போர்சுகீசியர்களுக்கு எதிரான கலகம் அருகிருந்த பேர்னம் மற்றும் பார்டெஸ்  (Pernem, Bardez) பகுதிகளிலும் நிகழ்ந்தது [3].

    (தொடரும்)

    ______________________________________
    References:
    [1] Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996. p 207. ISBN 9783161784200
    [2] Thompson op cit. p 208.
    [3] Sakshena, R.N, Goa: Into the Mainstream. Abhinav Publications, 2003. ISBN 9788170170051

    Share
  • பஞ்சாட்சர கவசம் –

    சத்திய மணி

    நங்கையாம் மீனாளின் சொக்கனாய் ஆள்பவன்
    நம்பியாய்த் தருவாகி சதாசிவம் ஆனவன்
    நந்தியும் துதிபாட நடராசன் ஆட அவன்
    நகாரம் ஒலியாகி யெமைக்காக்க காக்க

    மந்தாகினி கங்கை சடைமீது தரித்தவன்
    மலைமகளை சரிபாதி தனதென்று வரித்தவன்
    மறையோரின் ஓதுகுழாம் புடைசூழக் களித்தவன்
    மகாரம் ஒலியாகி யெமைக்காக்க காக்க

    சிறக்கின்ற பிறைசூடி சிவமென்று நிலைத்தவன்
    சிரிக்கின்ற கயிலாயப் பனிப்பொழிய குளிர்ந்தவன்
    சிங்கார அரவுதனை அணியாக்கி மகிழ்ந்தவன்
    சிகாரம் ஒலியாகி யெமைக்காக்க காக்க

    வானோரின் தலைவனாகி மகாதேவ மிறையவன்
    வாசங்கள் வீசும்நல்ல திருநீற்றில் ஒளிர்பவன்
    வாக்கோடு கணபதி வடிவேலன் பெற்றவன்
    வாகாரம் ஒலியாகி யெமைக்காக்க காக்க

    யமபயம் அழித்துடனே மரணத்தையே அழித்தவன்
    யட்சரும் அரக்கருமே தவமியற்ற அருள்பவன்
    யமுனைக் கரைதனிலே தனைக்காட்சி கொடுத்தவன்
    யகாரம் ஒலியாகி யெமைக்காக்க காக்க

    நமசிவாயமென இசையொழுக பாடினேன்
    நமசிவாயமென மனமுருக ஓதினேன்
    நமசிவாயமென குருமுகமே நாடினேன்
    நமசிவாயமென அருளோச்சி காக்கவே!!

    Share
  • காதல் நாற்பது – எலிஸபெத் பிரௌனிங் – தமிழாக்கம் : சி. ஜெயபாரதன்

    எலிஸபெத் பிரௌனிங் (1806-1861)

    தமிழாக்கம் :   சி. ஜெயபாரதன், கனடா

    நானொரு கறுப்பி ! குள்ள மாது !
    சாஃப்போ கவிஞனைப் போல,
    சாகாவரம் வாங்கியவள் நான் !
    ஐந்தடி ஓரங்குலம் உயரம் !
    பரிதியொளி பளிங்கு பட்டையில்
    பிரிவதுபோல்
    வண்ணங்கள் உடையவை என்
    கண்களின் நிறங்கள் !
    கண்ணாடி முன்னின்று நோக்கினால்
    என் தோற்றம்
    அழுத்தப் பச்சைப் பழுப்பு !
    பச்சை வேலியில் மறையும் பச்சை !
    நாசி ஒன்றும் பிரமாத மில்லை,
    அது ஒருவித மாதிரி !
    அதை ஈடுசெய்ய அகண்ட வாய் !
    அந்தோ ! மிக மிகச்
    சின்னக் குரல் எனக்கு !

    +++++++++++++++

    கவிதை மேதை எலிஸபெத் பிரௌனிங்.

    இரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலிப் பாக்களைத் தமிழாக்கம் செய்த பிறகு, புதிதாக “காதல் நாற்பது” என்னும் தலைப்பில் பிரிட்டிஷ் கவிதை மேதை எலிஸபெத் பிரௌனிங்கின் கவிதை மலர்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு அளிக்க விழைகிறேன்.

    எலிஸபெத் பிரௌனிங் பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியா காலத்தில் (1819-1901) வெற்றிகரமாக வாழ்ந்து பெரும்புகழ் பெற்ற கவிதை மாது. ஆங்கிலக் கவிஞர் ராபர்ட் பிரௌனிங்கின் காதல் மனைவி. டென்னிஸன் நினைவுப் பரிசைப் பெற்ற எலிஸபெத் எழுதிய உன்னதக் காவியப் படைப்பு, 1850 இல் வெளியான “போர்ச்சுகீஸின் பதினான்கு வரிக் கவிதைகள்” (Sonnets from the Portuguese). ராபர்ட் “போர்ச்சுகீஸ்” என்ற செல்லப் பெயரால் தன் காதலி எலிஸபெத்தை அழைத்தார். நாற்பத்து நான்கு எண்ணிக்கையுள்ள அந்த கவிதைகள் யாவும் ராபர்ட்டைக் காதலித்த போது எலிஸபெத் தொடராக எழுதியவை. எலிஸபெத்தின் கூரிய ஞானமும், நளினக் கவி நடையும், முகக் கவர்ச்சியும் கார்லைல், ரஸ்கின், தாக்கரே, ரொஸ்ஸெட்டி, ஹாதொரோன் போன்ற கவிதா மேதைகளை ஈர்ந்தன.

    எலிஸபெத் 1806 இல் இங்கிலாந்தில் டுரம் நகர்க் கருகில் கோக்ஸொ ஹால் (Coxhoe Hall near Durham) என்னும் ஓர் இடத்தில் ஒரு செல்வத் தம்பதிகளுக்குப் பிறந்தார். சிறு வயதில் எலிஸபெத் தனிப் பயிற்சியாளர் மூலமாகக் கல்வி பயின்றுத் திறமையோடு ஆங்கிலம், ·பிரெஞ், லத்தீன், கிரீக் ஆகிய அன்னிய மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றார். பதினாங்கு வயதிலேயே எலிஸபெத் “மராத்தன் போர்” (The Battle of Marathon) என்னும் தன் முதல் கவிதைத் தொகுப்பைப் படைத்து வெளியிட்டார். அடுத்து வெளியான நூல்கள்: An Essay of mind (1826), Prometheus Bound (1833). The Serapim & Other Poems (1838), Sonnets of the Portuguese (1850). Last Poems (1862) எலிஸபெத் 1835 இல் லண்டனுக்கு வந்து தங்கிய போது பல வெளியீடுகளில் கவிதைகளை எழுதிப் பேரும், புகழும் பெற்றார். 1844 இல் அவரது கவிதைகள் வெளியாகிப் பலரது மனதைக் கவர்ந்து அமெரிக்கக் கவிஞர் எட்கர் அல்லன் போவின் பாராட்டைப் பெற்றார். எல்லா வற்றிலும் உயர்ந்த படைப்பாக எடை போடப்படுவது : போர்ச்சுகீஸின் பதினான்கு வரிக் கவிதைகள் (Sonnets from the Portuguese). போர்ச்சுகீஸ் என்பது ராபர்ட் எலிஸபெத்துக்கு வைத்த செல்லப் பெயர்.

    1820 இல் எலிஸபெத் ஓர் மர்ம நோயில் விழுந்து வயிற்று வலியில் மிகவும் வேதனைப் பட்டார். வலியைத் தாங்கிக் கொள்ள அந்தக் காலத்தில் அவருக்கு மருத்துவர் பயங்கர மார்·பின் மந்த மருந்தைக் கொடுத்து வந்தார்கள். மறுபடியும் 1838 இல் எலிஸபெத் இரத்தக் குழாய் ஒன்று அற்றுப் போய் கடும் நோயில் துன்பப்பட்டு மெலிந்து போனார். அதே சமயத்தில் அவரது சகோதரர் ஒருவர் நீரில் முழ்கி, அவருக்கு ஆறாத துயரை உண்டாக்கியது, அதற்குப் பிறகு எலிஸபெத் யாரையும் கண்டு கொள்ள விருப்பற்றுத் தனிமையில் கிடந்தார். அப்போது முழு நேரத்தையும் அவர் தன் அரியக் காவியப் படைப்புகளுக்கே அர்ப்பணித்தார்.

    தனது 39 ஆம் வயதில் (1845), தன்னை விட ஆறு வயது இளமையான கவிதா மேதை ராபர்ட் பிரௌனிங்குடன் கடிதத் தொடர்பு கொண்டு, ஆழ்ந்த காதல் வயப்பட்டார். அவர்களது அந்தரங்க ஆத்ம நட்பு பெற்றோருக்குத் தெரியாமல் மர்மமாகவே தொடர்ந்தது. காரணம் அவரது தந்தையார் தனது புதல்வர், புதல்வியர் திருமணமாவதைத் தடுத்துக் கொண்டு வந்தார். அடுத்த ஆண்டு எலிஸபெத் வீட்டை விட்டே வெளியே ஓடிவிட்டார். 1846 இல் ஒரு தேவாலயத்தில் பெற்றோர்க்குத் தெரியாமல் எலிஸபெத் ராபர்ட்டை மணந்து, ரோமுக்குச் சென்று, அங்கே ·பிளாரென்ஸில் குடியேறினார்கள். அவர்களுக்கு 1849 இல் ஓர் ஆண்மகவு பிறந்தது.

    இறுதிக் காலத்தில் திடீரென எலிஸபெத்துக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் பெருகிற்று. வட அமெரிக்காவில் கறுப்பு ஏழைகளைப் பிடித்து அடிமைகளாய் வணிகம் புரிந்து வருவதைக் கண்டித்தார். அக்கருத்தை மையமாக வைத்தொரு நூலும் எழுதினார். நோய் முற்றி ·பிளாரென்ஸில் 1861 ஆம் ஆண்டு கனிவுக் கணவரின் கையணைப்புக் கனலில், காதல் ராணி களிப்புடனே விண்ணுலகம் ஏகினாள். அவளது மரணத்துக்குப் பிறகு எழுத்தாள மேதை எட்வெர்டு பிட்ஸ்ஜெரால்டு துயரைக் காட்டாது தன் உன்னத இரங்கல் உரையில் கேலியாகக் குறிப்பிட்டார்: “மிஸிஸ் பிரௌனிங் மரணம் அடைந்ததில் எனக்கொரு பெரிய விடுவிப்பு ! “அரோரா லைஸ்” [Aurora Leigh: Collection of Poems by Elizabeth Browning] போன்ற மாபெரும் கவிதைத் தொகுப்புகள் இனிமேல் வெளிவாரா ! கடவுளுக்கு நன்றி ! அவள் ஓர் உயர்ந்த மேதை ! எனக்குத் தெரியும் அது. எல்லாவற்றுக்கும் முடிவாக நான் என்ன சொல்வது ? அவளும் அவளது பெண்பாலும் அடுப்பறையில் கிடந்து, குழந்தைப் பராமரிப்பைக் கவனித்திருக்க வேண்டும் ! ஏழையர் மீது வேண்டுமானால் இரக்கம் கொள்ளட்டடும் ! இப்படிக் குறுநாவல் எழுதுவது போன்ற பணிகளைச் சிறப்பாகப் படைக்கும் ஆடவர் கைவசம் விட்டு விட்டுத் தான் தலையிடுவதைத் தவிர்த்திருக்க வேண்டும் !”

    *******
    காதல் நாற்பது  (1)
    உன்னை நேசிப்பது எவ்விதம் ?

    எலிஸபெத் பிரௌனிங்

    (1806-1861)

    தமிழாக்கம் :   சி. ஜெயபாரதன், கனடா

    1.   Free Verse

    எவ்விதம் நேசிப்பது உன்னை ?
    எண்ண வேண்டும் நான்
    எத்தனை வழிகள் உள்ளன வென்று !
    ஆழமான காதல் உன்மீது !
    அகண்டது ! நீண்டது  !
    உணர்ச்சி மறைந்துள்ள போது,
    உயிரின முடிவாய்,
    ஒப்பிலா நளினத்தில்
    உன்னை எட்டித் தொடும் என் ஆத்மா.
    பரிதிப் பகல், மெழுகுவர்த்தி
    வெளிச்சத்தில்
    அவசியம் நேசிப்பேன் உன்னை
    அனுதின முடிவு வரை  !
    மனத் தடங்க லின்றி
    காதலிக்கிறேன்,
    மானிட உரிமைத் தேடலாய் !
    தூய மனதுடன் நேசிக்கிறேன்,
    என் புகழின் திருப்பமாய் !
    முந்தைத் துக்கங்க ளோடு
    குழந்தையின்
    பிடிவாத நம்பிக்கை யோடு
    பித்தானேன் உன் மீது !
    இழந்த புனிதரிடம்
    நழுவிய முந்தைக் காதல்
    நாடுகிறது உன்னை !
    பெருமூச்சு காட்டுகிறது
    என் காதலை !
    முறுவல் காட்டி விடும்
    என் காதலை !
    கண்ணீரும் காட்டி விடும்
    என் காதலை !
    வாழ்வு பூராவும் நேசிப்பேன்.
    முடிவிலே
    கடவுளின் விதி அதுவாயின்,
    அழுத்தமாய் இருக்கும்
    காதல் மட்டும்,
    உன்மேல்
    சாதலுக்குப் பிறகும் !

    +++++++

    2.    Sonnet Style

    எப்படி நேசிப்ப துன்னை ? எண்ண வேண்டும் வழிகளை
    என் காதல் ஆழ்ந்தது, அகண்டது, உயர்ந்தது, உன்மேல்
    எட்டித் தொடும் என் ஆத்மா பிரிவை உணரும் போது
    உயிரின வாழ்வின் முடிவாய், உன்னத நளின மதில்
    அனுதினம் இயலும் வரை நானுனை நேசிப்பேன்
    பரிதி வெளிச்சம், இரவு விளக்கில் அமைதிக் கவசியம்
    தடையிலா நேசம் மனித உரிமை முயற்சி போல்
    தூய தென் நேசம் பிறரது புகழின் திருப்பமாய்
    நேயம் உணர்ச்சி வசப்படும், பயன் படுத்தப் படும்
    பழைய துயரொடு, என் குழந்தை நினைப்பொடு
    இழந்த காதலை மீட்டு நேசிப்பேன் பாசமுடன்
    நழுவிய புனிதருடன் நேசிப்ப துன்னை, மூச்சுடன்
    கண்ணீர் முறுவல் ஆயுள் வரை கடவுள் விதியெனின்
    உனை மட்டும் நேசிப்பேன் மேலாய் சாதலுக்குப் பிறகும்.

    ++++++++++++

    ++++++++++++

    தகவல் :

    1. Sonnets from the Portuguese By: Elizabeth Barrett Browning (1967)

    2. The Selected Poetry of Browning (1966)

    3. The Works of Robert Browning By: The Wordsworth Lobrary (1994)

    4. Robert Browning Selected Works By: Johanna Brownell (2002)

    5. Elizabeth Barrett Browning’s Biography

    6.  http://en.wikipedia.org/wiki/Elizabeth_Barrett_Browning

    **************

    jayabarat@tnt21.com [S. Jayabarathan]   [May 30, 2012] R-2

    Share