தேமொழி

 

முன்னுரை:

வல்லமையில் முன்பு வெளிவந்த கட்டுரையான “பிக்கோலிம் போர்” (https://www.vallamai.com/?p=30512/) பற்றி உங்களுக்கு நினைவிருக்கலாம். “பிக்கோலிம் போர்” (Bicholim conflict) பற்றி மிகச் சுருக்கமாக ஒரு அறிமுகம் …  இவ்வாறு ஒரு போரே நடந்தது இல்லை.  ஆனால் நடந்ததாக ஒரு மோசடி சமீபத்தில் விக்கிபீடியாவில் நிகழ்ந்திருக்கிறது. கோவா மாநிலத்தின் பிக்கோலிம் என்ற இடத்தில் இப்படி ஒரு போர்  நடந்ததாக ஒரு கட்டுக் கதை.  1640 இல் இருந்து 1641 வரை கோவாவை ஆட்சி புரிந்த போர்ச்சுகீசியர்களுக்கும் மராட்டியப் பேரரசுக்கும் இடையில் நடந்ததாக விக்கிபீடியாவில் ஜூலை 4, 2007 இல் ஒரு கட்டுரை எழுதப் பட்டிருந்திருக்கிறது.   இந்தக் கட்டுக் கதையின்படி, பிக்கோலிம் போரின் விளைவாக ஒரு சமாதன உடன்படிக்கை ஏற்பட்டு போர் நின்றது.  உடன்படிக்கையின் விளைவாக சுதந்திர கோவா மாநிலம் அமைக்கப் பட்டது.  இந்தக் கட்டுக் கதை 5 ஆண்டுகள், 5 மாதங்கள், 25 நாட்கள் விக்கிபீடியா வலைதளத்தில் இடம் பெற்ற பின்பு, அது மோசடி பதிவு என கண்டு கொள்ளப் பட்டு, சென்ற ஆண்டு 2012 டிசம்பர் 29 ஆம் தேதி நீக்கப் பட்டுவிட்டது. இந்தக் கட்டுரைக்கு ஆதாரமாகக் காட்டப் பட்ட சான்றுகள் அனைத்தும் பொய்யானவை.  தற்பொழுது விக்கிபீடியாவில் பதிவு செய்யப்பட்ட மோசடி செய்திகளின் வரிசையில் பிக்கோலிம் போர் இடம் பிடித்துள்ளது (பார்க்க: http://en.wikipedia.org/wiki/Wikipedia:List_of_hoaxes_on_Wikipedia மற்றும் http://en.wikipedia.org/wiki/Wikipedia:Articles_for_deletion/Bicholim_conflict மற்றும் http://en.wikipedia.org/wiki/Bicholim_conflict).

விக்கிபீடியா அதை நீக்கிவிட்டாலும், சிறந்த விக்கி கட்டுரைகளை நூலாக வெளியிடும் பதிப்பகம் ஒன்று, அதனை நூலாக வெளியிட்டு விற்பனை செய்கிறது (http://www.alibris.com/search/books/isbn/9785510567311). விக்கி கட்டுரைகளை  இதுபோல விற்பனை செய்வதை காப்புரிமை என்ற அடிப்படையில் விக்கி தடுப்பது இல்லை. கல்வி பரவவேண்டும் என்ற அடிப்படையில் அனுமதியும் அளிக்கிறது.  ஆர்வக் கோளாறின் காரணமாக, “பிக்கோலிம் போர்” கட்டுரையில் அப்படி என்னதான் இருந்தது எனத் தெரிந்து கொள்ளும் நோக்கில் அந்த புத்தகத்தை வாங்கிப் படிக்கும் ஆசை எழுந்தது. லென்நெக்ஸ் கார்ப் (LENNEX Corp) பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள 90 பக்கங்கள் உள்ள அந்த நூலில் ஒரு ஆறு பக்கம்  மட்டுமே “பிக்கோலிம் போர்” (Bicholim Conflict) பற்றி கட்டுரையில் விவரிக்கப் படுகிறது.  மற்ற பக்கங்களில் கோவா, பிக்கோலிம், மராட்டியர்கள், போர்ச்சுகீசியர்கள்  என்ற மற்ற பல விக்கி கட்டுரைகள் நூலை நிறைக்கிறது.  இக்கட்டுரை மொழி பெயர்க்கப்பட்டு “பிக்கோலிம் புளுகு” என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.  இனி விக்கிபீடியாவில் வெளியிடப்பட்ட கட்டுக்கதை(கட்டுரை) தொடர்கிறது.

பிக்கோலிம் புளுகு:

பிக்கோலிம் போர் என்பது  1640-1641 இல் கோவாவை ஆட்சி புரிந்த போர்ச்சுகீசியர்களுக்கும், சிவாஜி பான்ஸ்லே (Shivaji  Bhonsle) ஆட்சிக்குட்பட்ட மராட்டியப் பேரசிற்கும் இடையே நிகழ்ந்த ஆயுதம் தாங்கிய போராட்டம் ஆகும். இது நிகழ்ந்தது கோவாவின் வட பகுதியான பிக்கோலிம் என்ற இடத்தில். இப்போராட்டம் 1640 ஆம் ஆண்டின் மத்தியப் பகுதியில் இருந்து 1641 ஆம் ஆண்டின் ஆரம்ப நாட்கள் வரை நிகழ்ந்தது. பிறகு மராட்டியர்களுக்கும் போர்ச்சுகீசியர்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு,  முன்பிருந்த அரசுகளின் எல்லைகளையே இருதரப்பினரும் ஏற்றுக்கொள்வது என்ற ஒப்பந்தத்தின் பேரில் பிக்கோலிம் போர் முடிவிற்கு வந்தது [1]. எனினும், போர்ச்கீசியர்களுக்கும் மராத்திய அரசுக்கும் இடையே ஒரு பதட்டமான சூழ்நிலை கோவாவிலும் மராட்டியத்தின் அண்டைத் தீவுகளான டையு-டாமனிலும் (Diu, Daman) தொடர்ந்தது[2].  போராட்டம் பெரும்பாலும் கோவாவில் நிகழ்ந்தாலும் சில கால கட்டங்களில் போர்சுகீசியர்களுக்கு எதிரான கலகம் அருகிருந்த பேர்னம் மற்றும் பார்டெஸ்  (Pernem, Bardez) பகுதிகளிலும் நிகழ்ந்தது [3].

(தொடரும்)

______________________________________
References:
[1] Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996. p 207. ISBN 9783161784200
[2] Thompson op cit. p 208.
[3] Sakshena, R.N, Goa: Into the Mainstream. Abhinav Publications, 2003. ISBN 9788170170051

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “பிக்கோலிம் புளுகு – 1

  1. இது போன்ற செய்திகளை தேடி எடுத்து படிக்க கொடுக்கும் தேமொழிக்கு பாராட்டுகள்.

  2. இதுவரை கேள்விப்படாத புதிய தகவல். மேலும் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். நன்றி தேமொழி.

  3. தகவலைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, தேமொழி!

  4. பொய்யை தட்டித்தான் கேட்க வேண்டும். நன்றி. தேமொழி. அடுத்த படி பில்ட் டெளன் ஃபேக் பற்றி எழுதவும்.

  5. கட்டுரை தரும் தகவலில் ஆர்வம் காட்டுவோர் அனைவருக்கும் நன்றி.

    நீங்கள் குறிப்பிடும் பரிணாம வளர்ச்சி-பூசல் ஆராய்ச்சியையும் அடுத்து எழுதுகிறேன் இன்னம்பூரான் ஐயா, உங்கள் ஆலோசனைக்கு நன்றி.

    அன்புடன் 
    ….. தேமொழி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *