சென்னையில் பள்ளிக் கல்வித் துறையின் தடையின்மைச் சான்று மற்றும் அங்கீகாரமின்றிச் செயல்படும் 331 பள்ளிகளின் பட்டியல் இங்கே:
Blog
-

(Peer Reviewed) பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் “நகை” என்னும் மெய்ப்பாடு
ஷா. முஹம்மது அஸ்ரின்,
முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு,
ஜமால் முகமது கல்லூரி,
திருச்சி-620020.பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் “நகை” என்னும் மெய்ப்பாடு
சங்க காலத்தில் தோன்றிய எட்டுத்தொகை நூல்களையும் பத்துப்பாட்டு நூல்களையும் “பதினெண் மேற்கணக்கு நூல்கள்” என அழைத்தனர். இவை காதலையும் வீரத்தையும் மட்டுமே எடுத்தியம்பின. மக்களுக்கு அறத்தையும் அறம் தவறுவதால் ஏற்படும் விளைவுகளையும் வலியுறுத்த எழுந்த 18 நூல்களைப் “பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்” என வழங்கினர். இதனை
“நாலடி நான்மணி நானாற் பதைந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு” 1என்ற வாய்மொழிப் பாடல் வழியாக அறிய முடிகிறது.
மெய்ப்பாடு:
’மெய்ப்பாடு’ என்னும் சொல்லுக்குப் ’பொருட்பாடு’, ’வெளிப்பாடு’, ’புலப்பாடு’ எனப் பல விளக்கங்கள் வழங்கப்படுகின்றன. மெய்ப்பாடு என்பது “உள்ளத்தில் உள்ள மகிழ்ச்சி, சோகம் போன்ற உணர்ச்சிகளின் உடல் வழியான வெளிப்பாடு” 2 . எனவே, மெய்ப்பாடு என்றால் உடலால் வெளிப்படுத்தும் உள்ளத்து உணர்ச்சிகள் என்பது தெளிவாகிறது. இதனை,
”நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பா லெட்டாம் மெய்ப்பா டென்ப”– (தொல்காப்பியம். 1194)
என்ற தொல்காப்பிய நூற்பா தெளிவாக உணர்த்துகிறது.
நகை:
’நகை’ என்னும் சொல்லுக்கு ‘சிரிப்பு’, ‘இகழ்ச்சி’, ’இன்பம்’ எனப் பல பொருள்களை அகராதி 3 தருகிறது. ’நகை’ என்பது ’இகழ்ச்சியிற் பிறப்பது’ என இளம்பூரணர் உரையில் காணப்படுகிறது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான சிறுபஞ்சமூலத்தில்,
”கல்லாதான் தான் காணும் நுட்பமும், காது இரண்டும்
இல்லாதாள் ஏக்கழுத்தும் செய்தலும், இல்லாதான்
ஒல்லாப் பொருள் இலார்க்கு ஈத்து அறியான் என்றலும்,
நல்லார்கள் கேட்பின் நகை.”– (சிறுபஞ்சமூலம். 04)
என்ற பாடல் கல்லாதவனின் அறிவும் காதுகளை இழந்தவனின் அழகும் தேவையற்ற பொருளை பிறருக்கு வழங்கும் குணமும் நல்லவர்களுக்கு சிரிப்பை உண்டாக்கும் என்கிறது. மேலும், நாணமில்லாதவனின் அமைதி, நன்னடையில்லாதவனின் நோன்பு, உண்பொருளில்லாதவனின் ஈகை, வலியில்லாதவனின் வீரம், தமிழ் தேர்ச்சியற்றவனின் கவி ஆகியனவும் நகைக்கு இடமாகும் என்பதனை இவ்வாறு எடுத்துரைக்கிறது.
“நாண் இலான் சால்பும், நடை இலான் நல் நோன்பும்,
ஊண் இலான் செய்யும் உதாரமும், ஏண் இலான்
சேவகமும், செந்தமிழ் தேற்றான் கவு செயலும்,
நாவகம் மேய் நாடின் நகை.”– (சிறுபஞ்சமூலம். 11)
செல்வர்களும் நல்லவர்களும் தங்களது பணத்தாலும் குணத்தாலும்
நகைக்காமல் வாழ வேண்டும் என்பதை,“…………… ……. ………. பல் பொருளால் பல்லார்
நகை கெட வாழ்வதும், நன்று.”– (சிறுபஞ்சமூலம். 15 அடி. 3-4)
எனப் பேசுகிறது.
கல்லாதவரும் கற்றவர் கூட்டத்தைச் சேராதவரும் நகைக்கத்தக்கவர்கள் என
சிறுபஞ்சமூலம் எடுத்தியம்புகிறது.”கல்லார், கற்றார் இனத்தார் அல்லார், பெறுபவே,
நல்லார் இனத்து நகை.”– (சிறுபஞ்சமூலம். 55 அடி. 3-4)
ஒருவன் இல்லாத நேரத்தில் அவனை இகழ்வதும் விளையாட்டின் போது
ஒருவனை இகழ்வதும் தீமையை உண்டாக்கும் என்பதை,“அறன்அழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறன்அழீஇப் பொய்த்து நகை.”– (திருக்குறள். 182)
“நகைஉள்ளும் இன்னாது இகழ்ச்சி …………”
– (திருக்குறள். 995)
போன்ற குறட்பா வாயிலாகத் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். சமண முனிவர்களால்
இயற்றப்பட்ட “நாலடி நானூறு” பொது மகளிரால் ஏழ்மை நிலையை அடையும்
செல்வந்தர் நகைக்கத்தக்கவர் எனக் கூறுகிறது. இக்கருத்து செல்வந்தனாக இருந்த
கோவலன், மாதவிபால் காமம் கொண்டு அனைத்தையும் இழந்த கதையை மையமாகக்
கொண்டுள்ளது.“ஆமாபோல் நக்கி, அவர் கைப்பொருள் கொண்டு
சேமாப்போல் குப்புறூஉம் சில்லைக்கண் அன்பினை
ஏமாந்து, எமது என்று இருந்தார் பெறுபவே,
தாமாம் பலரால் நகை.”– (நாலடியார். 377)
பிறரால் மணமுவந்து கொடுக்கப்படாத பொருளைப் பெற்று வாழ்பவன்
இகழ்ச்சிக்குரியவன் என்பதை,“…………………… ……………. ……………. ……………..; தெற்ற
நகை ஆகும், நண்ணார்முன் சேறல்; ….. ……”– (நான்மணிக்கடிகை. 60)
என்று குறுப்பிடுகிறது. மேலும் பிறரது திறனை அறியாது அவரை இகழ்ந்து பேசும்
மக்கள் நகைத்தக்கவர்கள் என்பதை,“மானமும் நாணும் அறியார், மதி மயங்கி,
ஞானம் அறிவார் இடைப்புக்கு, தாம் இருந்து,
ஞானம் வினாஅய் உரைக்கின், நகை ஆகும்.”– (பழமொழி. 298)
என பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நகை என்னும் மெய்ப்பாட்டைப் பல பாடல்கள்
வழியாக வளக்குகின்றன.நகையின் நிலைகள்:
நகை என்னும் மெய்ப்பாடு தனது பொருளைக் கொண்டு நான்கு நிலைகளில்
தோன்றுமென்பதை,“எள்ளல் இளமை பேதைமை மடனென்று
உள்ளப் பட்ட நகைநான் கென்ப.”– (தொல். 1195)
என்ற தொல்காப்பிய நூற்பா, நகை என்னும் மெய்ப்பாடு தோன்றும் நிலைகளை
விளக்குகிறது.1. எள்ளல்:
’எள்ளல்’ என்னும் சொல்லுக்கு ’இகழ்ச்சி’, ‘நிந்தை செய்தல்’, ‘நகைத்தல்’ என பல
பொருள்களைக் ”கழகத் தமிழ் அகராதி” தருகிறது. இதற்கு ‘ஒருவனுடைய
முட்டாள்தனத்தைப் பிறர் சிரிக்கும்படியாக சுட்டிக்காட்டும் பரிகாசமும் கேலியும்’ எனப் பொருள் கொள்ளலாம்.மேலும், எள்ளல் என்பதற்குப் “பழிச்சொல்” என்ற பொருளைத் திருவள்ளுவர்,
“எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்துஒன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.”– (திருக்குறள். 281)
என்ற குறளில் பிறரின் பொருளைக் கவரும் எண்ணமில்லாதவன் பழிச்சொல் கேட்காமல் வாழ்வான் எனக் குறிப்பிடுகிறார்.
2. இளமை:
’இளமை’ என்னும் சொல்லுக்குச் ’சிறுபருவம்’, ‘அறிவின்மை’, ‘முதிராமை’ எனப் பல பொருள்களைக் ”கழகத் தமிழ் அகராதி” தருகிறது. இதற்கு ’உடல் பலமும் தோற்றக் கவர்ச்சியும் பெற்ற முதிராத அறிவையுடைய பருவம்’ எனப் பொருள் கொள்ளலாம். இதனை,
”இழுக்கல் இயல்பிற்று இளமை;”
– (திரிகடுகம். 14)
என இளமைப் பருவமானது நகைத்தலுக்குரிய பருவமென்பதை உணர்த்துகிறது.
3. பேதைமை:
’பேதைமை’ என்னும் சொல்லுக்கு ’அறிவின்மை’, ‘மடமை’ எனப் பல பொருள்களைக் ”கழகத் தமிழ் அகராதி” தருகிறது. இதற்கு ’எந்த ஒரு செயலையும் பகுத்தறியத் தெரியாத தன்மை’ என்று பொருள் கொள்ளலாம். பேதைமையை திருவள்ளுவர் பின்வருமாறு விளக்கியுள்ளார்,
“பேதைமை என்பதுஒன்று யாதெனின் ஏதம்கொண்டு
ஊதியம் போக விடல்”– (திருக்குறள். 831)
பேதையாக விளங்கும் ஒருவனுக்கு அவனது செயலால் பிறரால் இகழப்பட்டு துன்பமடைவான் என்பதை,
”பிறன் மனையாள் பின் நோக்கும் பேதைமை இன்னா;”
– (இன்னா நாற்பது. 38)
என்ற பாடல் வழியாக விளக்குகிறது.
4. மடன்:
’மடன்’ என்னும் சொல்லுக்கு ’அறிவிலான்’ என்ற பொருளையே ”கழகத் தமிழ் அகராதி” தருகிறது. மேலும் சில அகராதிகள் ’மடமை’ என்றும் பொருள் தருகின்றன. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் மருத்துவ நூலாக விளங்கும் சிறுபஞ்சமூலத்தில் ‘அடக்கம்’ என்னும் பொருளில் ‘மடன்’ என்ற சொல் இடம்பெற்றுள்ளது.
“மக்கள் பெறுதல், மடன் உடைமை, மாது உடைமை,
ஒக்க உடன் உறைதல், ஊண் அமைவ-தொக்க
அலவலை அல்லாமை பெண் மகளிர்க்கு-ஐந்தும்
தலைமகனைத் தாழ்க்கும் மருந்து.”– (சிறுபஞ்சமூலம். 52)
என்ற பாடல் பெண்களுக்குரிய ஐந்து குணங்களுள் மடன் (அடக்கம்) இடம்பெறுகின்றது. இக்குணங்களுள் ஒன்று கெடுமானால், அவளது கணவனே அவளை இகழ்வான் எனக் குறிப்பிடுகிறது.
முடிவுரை:
மனிதனின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் எட்டு வகை மெய்ப்பாடுகளுள் “நகை” என்னும் மெய்ப்பாட்டை நான்கு நிலைகளாகப் பிரித்து முழுமையாக கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் கூறிய பல செய்திகள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பல பாடல்களில் இடம்பெற்று உணர்வுகளை வெளிப்படுத்துவதை தெளிவாக அறிய முடிகிறது.
அடிக்குறிப்புகள்:
1. பக்கம் 5, ந.மு. வேங்கடசாமி நாட்டார் முகவுரை, சங்க இலக்கியம்,
பதினெண்கீழ்க்கணக்கு, நானாற்பது உரையுடன், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1962.
2. Tamil Oxford Living Dictionary
3. தற்கால தமிழ்ச்சொல்லகராதி, திவான் பஹதூர் ச. பவானந்தம்பிள்ளை,
மாக்மில்லன் & கம்பெனி லிமிடெட், சென்னை.பயன்பட்ட நூல்கள்:
1. தொல்காப்பியம் தெளிவுரையுடன், புலியூர்க் கேசிகன், அருணா பப்ளிகேஷன்ஸ்.
2, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், ச. வே. சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.=====================================================================
ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):
சங்க இலக்கிய நூற்றொகுதிக்கு அடுத்துப் பெரும்தொகுதியாக இருப்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களாகும். இப்பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் இடம்பெற்றுள்ள மெய்ப்பாடுகளைத் தொல்காப்பிய இலக்கணத்தோடு இணைத்துப் பேச முயல்கின்றது இக்கட்டுரை. குறிப்பாக எண்வகை மெய்ப்பாடுகளை அறிமுகப்படுத்தி, நகை என்னும் மெய்ப்பாட்டின் நான்கு நிலைகளும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் இடம்பெறுவதைச் சில சான்றுகளோடு கட்டுரையாளர் பொருத்திக் காட்டுகின்றார். ஆய்வுக் கட்டுரை நிலையில் இக்கட்டுரை அமையாவிட்டாலும், கட்டுரையாளரின் முயற்சியைக் கருத்திற்கொண்டு இதனை இலக்கியக் கட்டுரையாக வெளியிடுகிறோம்.
=====================================================================
-

என்றும் இளமை!
நிர்மலா ராகவன், மலேசியா
நலம்…நலமறிய ஆவல்….(162)
இளமை எல்லோரது வாழ்விலும் இயற்கையாகவே இருப்பது. ஆனால், முதுமையிலும் இளமையாக இருக்க, சற்று முனைந்து செயல்பட வேண்டும். சிலருக்குத்தான் அது முடிகிறது.
இளமை என்பது எழில் தோற்றத்தில் மட்டுமல்ல, சில குணங்களிலும் கூடத்தான். மூன்று வயதான குழந்தை ஓயாமல் கேள்வி கேட்பான். எல்லாவற்றையும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவனை அப்படித் தூண்டும். சிலர் பொறுமையாக அவனுக்குப் புரியும் விதத்தில் விளக்குவார்கள்.
இது இளமையின் ரகசியம். எதையும் அறிய வேண்டும் என்ற ஆர்வத்தை எப்போதும் காத்தால், மனம் சோர்வு அடைய வாய்ப்பில்லை.
ஆனால், எல்லாத் தாய்மார்களும் தம் குழந்தையினுடைய ஆர்வத்துக்குத் தீனி போட இசையமாட்டார்கள். `தொணதொணப்பு’ என்று அடக்குவார்கள். சில முறை கேட்டுவிட்டு, பிறகு தானே அடங்கிவிடுவான்.
பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களும் அப்படியே நடப்பார்கள். பெரும்பாலான ஆசிரியர்கள், `நம்மை இவர்கள் கேள்வி கேட்பதா!’ என்று எரிச்சல் அடைந்து, பாடத்தை மட்டும் நடத்துவதற்குத்தான் சம்பளம் வாங்குகிறோம் என்பதுபோல் செயல்படுவார்கள். இதனால் மாணவர்கள் ஆர்வத்தை இழந்து, பள்ளிக்கூடம் என்றால் பிற மாணவர்களுடன் கலந்து பழகுவது, சண்டைபோட்டுப் பொழுதை `உல்லாசமாக’ப் போக்குவது என்று நினைக்கத் தலைப்படுகிறார்கள்.
கதை
நான் ஆசிரியப் பயிற்சியை மேற்கொண்டிருந்த போது, என் ஆற்றலை எடைபோட, பேராசிரியர் ஒருவர் வருவதாக இருந்தது.
முதல் நாளே, நான் மாணவிகளிடம், “எக்கச்சக்கமாக ஏதாவது கேட்டு, என்னை மாட்டிவிடாதீர்கள், ப்ளீஸ்!” என்று வேண்டுகோள் விடுத்தேன்.
“When we ask the questions, we don’t know if they are funny,” என்றாள் ஒரு பெண்.
தாம் கேட்கும் கேள்விகளால் ஆசிரியர்களைத் தடுமாற வைப்பது அவர்கள் நோக்கமல்ல. தமக்குத் தெரியாததைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். அவ்வளவுதான். இது புரிந்தால், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே உள்ள உறவு பலப்படும்.
`என்ன வேண்டுமானால் கேட்கலாம்,’ என்று சிறிது நேரத்தை ஒதுக்கினால், அவர்கள் மனப்போக்கு புரியும். களங்கமற்ற அவர்களுடைய உற்சாகம் ஆசிரியர்களையும் தொற்றிவிடும். எத்தனை வயதானாலும், ஆசிரியர்கள் சிலர் இளமைத் தோற்றத்துடன் இருக்கும் ரகசியம் இதுதான்.
இப்போதெல்லாம், தாய்மார்களுக்குச் சிறு குழந்தைகளுடன் என்ன பேசுவது என்று தெரிவதில்லை. இவர்கள் பேசாவிட்டால், மொழி வளம் எப்படி வரும்?
நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எதையாவது வேடிக்கை காட்டி விளக்கினாலே போதும். சுற்றுச்சூழலில் ஆர்வம் பிறக்கும். `ஒன்று, இரண்டு,’ என்று அவர்கள் விரல்களை மடக்கி எண்ணவும் சொல்லிக் கொடுக்கலாம்.
`நான் பேசினா இதுங்களுக்கு விளங்காதே!’ என்று அலுத்தபடி, தொலைக்காட்சியின் முன்னால் உட்கார வைத்துவிடுகிறார்கள், அல்லது தங்கள் கைத்தொலைபேசியை அவர்களிடம் கொடுத்துவிடுகிறார்கள், வங்கி, மருத்துவமனை, பேரங்காடி போன்ற இடங்களில். சிறு குழந்தைகளை அடக்க, கைத்தொலைபேசி ஒரு சுலபமான வழி.
சிறு வயதில் தம் வயதொத்தவர்களுடன் விளையாடி, தம் விளையாட்டுச் சாமான்களையோ, தின்பண்டங்களையோ பகிர்ந்துகொண்டால்தானே பிறருடன் பழகும் ஆற்றல் வரும்?
இப்போதோ, மனிதர்களின் இடத்தில் கைத்தொலைபேசி! இம்மாதிரியான குழந்தைகளுக்கு வயதுக்குரிய இளமைகூட வாய்ப்பதில்லை.
திரைகளில் காண்பதை வைத்துப் புதிய விஷயங்களைக் கற்கலாம் எனினும், தீமைகளே அதிகம்.
ஒரு சாதனத்தின் திரையையே வெறித்துக்கொண்டு இருந்தால், மூளையின் நடுப்பகுதி மட்டும்தான் வேலை செய்யும். பக்கவாட்டிலுள்ள இரு புறமும் அதிகமாக உபயோகிக்கப்படாது போக, பல பிரச்சினைகள் எழுகின்றன.
வலதுகைப் பழக்கம் உள்ளவர்கள் இடதுபுற மூளையை அதிகமாகப் பயன்படுத்துபவர்கள். மொழி, பேசுவது, புரிந்துகொள்வது எல்லாம் இது அளிக்கும் திறன்.
இன்னொரு புற மூளையானது இசை, மகிழ்ச்சி, படைப்பாற்றல், பிறர் பேசும்போது அவர் அடையும் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வது ஆகியவற்றில் ஈடுபடும். இடக்கைப் பழக்கம் உள்ளவர்கள் இயற்கையிலேயே இப்படித்தான்.
இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஓயாமல் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தைகளுக்கோ, இந்த இரு பகுதிகளுமே முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை. அப்புறம், காதால் கேட்பதைப் புரிந்துகொண்டு, பகுத்தறிவது ஏது! எதுவும் படம் அல்லது எழுத்து வடிவில் கண்முன் இருந்தால்தான் புரிகிறது.
போதாக்குறைக்கு, தொலைக்காட்சியில் தாம் பார்த்ததை எல்லாம் சிறுவர்கள் நம்புவார்கள். வன்முறை இருந்தால், அதையே தாமும் செய்து பார்க்கும் ஆவல் வந்துவிடும்.
ஐந்து வயதுச் சிறுவன் ஒருவனைத் தொலைக்காட்சியில் தமிழ்ப்படம் பார்க்க அவன் உறவினர் அழைத்தபோது, மறுத்தான்.
அவன் கூறிய காரணம்: “அப்புறம் நான் தம்பியை உதைப்பேன்!” அவன் செய்வது தவறு என்று புரிய வைத்திருந்தாள் தாய். அன்பு காட்ட வேண்டிய இடத்தில் வன்முறை எதற்கு?
“நம்மைச் சூழ்ந்திருக்கும் மனிதர்களின் அன்பு நம்மை இளமையாக வைத்திருக்கிறது,” என்று சொல்கிறார் சோபியா லாரென். அழகிற்கும் இளமைத் தோற்றத்திற்கும் இந்த நடிகை பெயர் போனவர். பல விருதுகளைப் பெற்றவர். இத்தாலி நாட்டைச் சேர்ந்த இவர், ஒரு சிறந்த பாடகியும்கூட.
அமைதியான மனம், மகிழ்ச்சி, தன்னம்பிக்கை, தைரியம் ஆகிய அனைத்துமே முதுமையிலும் நம்மை இளமையாகக் காட்டும். இவை நிலைத்திருக்க முக்கியமானவை ஆக்கப்பூர்வமான செயல்கள்.
உடற்பயிற்சியின் மகிமை பலருக்கும் தெரிவதில்லை. இங்குச் சில பள்ளிக்கூடங்களில், அதற்காகக் குறிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் கணக்கு, விஞ்ஞானம் போன்ற பாடங்களைக் கற்பிக்கிறார்கள். மாணவிகள் பெரிய பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் எடுத்து, பள்ளிக்கூடத்திற்கு நற்பெயர் ஈட்டித் தருவார்களே! ஆரம்பப் பள்ளியிலேயே இது நடக்கிறது.
கண்ணுக்கும், மூளைக்குமே வேலை கொடுத்துக்கொண்டிருந்தால் உற்சாகம் குன்றிவிடுமே!
கை, கால், தோள் ஆகிய மற்ற அவயவங்கள் அதிகப் பயிற்சி இல்லாது விரைவில் வலுவிழந்துவிடாதா?
படிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்ததால் கல்வியில் உயர்ந்து, பெரிய உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன இறுக்கம், வயிற்றுக் கோளாறு என்று பல்வித உபாதைகளால் பாதிக்கப்படுகிறார்கள்.
“என் மகன் பதின்ம வயதில் நான் எவ்வளவு அழைத்தாலும் என்னுடன் உலவ வரமாட்டான். `எனக்கென்ன வியாதியா!’ என்றுவிடுவான். இப்போது, நாற்பது வயதுக்கு மேல் `ஜிம்’மிற்குப் போகிறான்!” என்று ஒரு முதியவள் என்னிடம் சொல்லிச் சிரித்தாள்.
இருபது வயதில் நாட்டியம், `ஸ்கிப்பிங்’ போன்ற ஏதாவது உடற்பயிற்சியிலோ, அல்லது விளையாட்டிலோ ஈடுபட்ட பெண்கள் திருமணமான பின், `எல்லாவற்றிற்கும் வயது இருக்கிறது!’ என்று அலட்சியப்படுத்திவிடுவார்கள்.
`வயதுக்கேற்றபடி இல்லாவிட்டால் பிற பெண்கள் பழிப்பார்களே!’ என்று பயம் வேறு! பிறருக்குப் பயந்து, நீங்கள் கஷ்டப்படப் போகிறீர்களா? `முன்போல் முடியவில்லை!’ என்ற சாக்கு எதற்கு? முடிந்தவரை செய்யலாமே! முதுமையுடன் ஆரோக்கியமின்மை தொடர, மனமும் சோர்ந்துவிடும்.
அறுபதைத் தாண்டிய லூசில் பால் (Lucille Ball) என்ற அமெரிக்கச் சிரிப்பு நடிகையைக் கேட்டார்கள், “நீங்கள் இவ்வளவு இளமையாக இருப்பதன் ரகசியத்தைப் பிறருக்கும் சொல்லுங்களேன்!”
பதில்: “நேர்மையாக நடந்து, மெதுவாகச் சாப்பிடுங்கள். அத்துடன், வயதையும் குறைத்துச் சொல்லவேண்டும்!”
வயதைக் குறைத்துச் சொல்வது நேர்மைதானா?!
=========================
Photo by Wikimedia Commons
-

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-54
நாங்குநேரி வாசஸ்ரீ
நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-54
54. பொச்சாவாமை
குறள் 531:
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வுரொம்ப சந்தோசமா இருக்குதப்போ அயத்துப் (மறதி) போவுதது கடுங்கோவத்தக்காட்டிலும் கொடும.
குறள் 532:
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்குதெனைக்கும் வாட்டுத ஏழ்ம, புத்திய மழுங்கடிக்கது கணக்கா அயத்துப் போவுத கொணம் புகழ அழிச்சுப்போடும்.
குறள் 533:
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்
தெப்பானூ லோர்க்குந் துணிவுஅயத்துப் போவுத கொணம் உள்ளவுகளுக்கு புகழ் இல்ல. இது எல்லாந்தெரிஞ்ச அறிவாளிங்களோட முடிவான கருத்து.
குறள் 534:
அச்ச முடையார்க் கரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்குமனசுல பயம் இருக்கவங்களுக்கு சுத்திவர பாதுகாப்பா மதில்சுவர் இருந்தாலும் ஒபயோகமில்ல. அதுகணக்கா ஒசந்த நெலையில இருந்தாலும் அயத்துப் போவுத கொணமிருந்தா அந்த நெலையால ஒரு பிரயோசனமுமில்ல.
குறள் 535:
முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழை
பின்னூ றிரங்கி விடும்வருத சங்கடங்கள முன்னமே தடுக்க அயத்துப் போனவன் சங்கடம் வந்த பொறவு தன் தப்ப நெனச்சி வெசனப்படுவான்.
குறள் 536:
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்ப தில்யார்கிட்டயும் எந்தக்காலத்திலயும் ஓர்ம கெட்டு அலையுத கொணம் (ஞாபக மறதி) இல்லாமப் போச்சுதுன்னா அதப்போல நன்ம வேற இல்ல.
குறள் 537:
அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக்
கருவியாற் போற்றிச் செயின்அயத்துப் போவாம ஓர்மையோட(ஞாபகமா) செய்யுதவனுக்கு செய்யமுடியாததுனு எதுவும் இல்லாமப் போவும்.
குறள் 538:
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா
திகழ்ந்தார்க் கெழுமையும் இல்படிச்ச பெரிய மனுசங்க சொல்லுதத விரும்பிச் செய்யணும். அப்டி செய்ய அயத்து அலுத்து இருக்கவங்களுக்கு ஏழு பொறப்புலயும் நன்ம கெடைக்காது.
குறள் 539:
இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்துஇறுமாப்போட பூரிச்சுப்போயி கடமையச் செய்ய அயத்து அலையுதவங்க, முன்ன இது கணக்கா அலஞ்சி அழிஞ்சவங்கள நெனச்சிப் பாத்துக்கிடணும்.
குறள் 540:
உள்ளிய தெய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளிய துள்ளப் பெறின்ஒருத்தன் தான் அடைய நெனக்குதத நாட்டத்தோட அசராம தொடர்ச்சியா நெனச்சிக்கிட்டே இருந்தாம்னா அவன் நெனச்சத சுளுவா அடஞ்சுக்கிடலாம்.
(அடுத்தாப்லயும் வரும்….)
-
என்னப்பா!
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா
விரதமெலாம் தானிருந்து
விரும்பியெனை இறைவனிடம்
வரமாகப் பெற்றவரே
வாய்மைநிறை என்னப்பா
விரல்பிடித்து அரிசியிலே
எழுதவைத்த என்னப்பா
உரமாக என்னுள்ளே
உணர்வோடு கலந்துவிட்டார்!தோள்மீது எனைத்தூக்கி
தான்மகிழ்ந்து நின்றிடுவார்
வாழ்நாளில் வீழாமல்
வளரவெண்ணிப் பலசெய்தார்
மெய்வருத்தம் பாராமல்
எனையெண்ணித் தானுழைத்தார்
கண்ணெனவே காத்துநின்றார்
கருணைநிறை என்னப்பா!பொட்டுவைத்த என்முகத்தை
கட்டிக்கட்டிக் கொஞ்சிடுவார்
பட்டுச்சட்டை வாங்கிவந்து
பரவசத்தில் மூழ்கிடுவார்
இஷ்டமுடன் தன்மார்பில்
எனையுறங்க வைத்திடுவார்
அஷ்ட ஐஸ்வரியமென்று
அனைவர்க்கும் சொல்லிடுவார்!நானுண்ட மிச்சமெலாம்
தானெடுத்துச் சுவைத்திடுவார்
அவர்பாதி நானென்று
அவருக்குள் எண்ணிடுவார்
உலகிலென்னை உயர்ந்தவனாய்
உருவாக்க உருவானார்
நிலவுலகில் என்னப்பா
நிகரில்லா தெய்வமன்றோ!பட்டம்பல நான்பெற்றேன்
பதவிகளும் வகித்துநின்றேன்
கஷ்டம்பல பெற்றாலும்
கைகொடுத்தார் என்னப்பா
விருதுகளோ எனையணுகி
விரும்பிவந்து சேர்ந்தனவே
விரும்பிநின்ற என்னப்பா
விண்ணுலகு சென்றுவிட்டார்!ஆளாக்கி விட்ட எந்தன்
அன்புநிறை அப்பாவை
அனுதினமும் எண்ணியெண்ணி
அலமந்து நிற்கின்றேன்
ஆண்டவனின் திருவுருவாய்
அப்பாவைக் காணுகிறேன்
அவர்நினைப்பை மனமிருத்தி
அவர்வாழ்த்தை வேண்டுகிறேன்! -

கருணையாலே வெலவேண்டும்!
மீ.விசுவநாதன்
வந்த பிறவிச் சுவடுக்கு – ஒரு
வகையில் நன்மை செயவேண்டும்
எந்த உயிர்க்கும் சுமையாக – நாம்
இல்லா திருக்க வரம்வேண்டும்பூவாய், காயாய்க் கனியாக – நம்
பூமி மகிழ வரவேண்டும்
நாவாய் போல அனைவர்க்கும் – துன்ப
நதியைக் கடக்கத் துணைவேண்டும்பறவை, விலங்கு, நீர்நிலைகள் – உயிர்
பந்த மென்ற உணர்வோடு
துறவைப் பெற்ற மனம்போலே – நம்
தூய பணியைச் செயவேண்டும்காக்கை, மைனா, குருவிகளின் -மனம்
கண்டு உணவு தரவேண்டும்
தீக்கை மாறிக் குளிராக – தொண்டு
தினமும் செய்யும் குணம்வேண்டும்இறைவன் படைத்த உலகத்தை – அன்பு
ஈர்ப்பி னாலே தொடவேண்டும்
நிறைவாம் செல்வம் ஆனந்தம் – “நான்”
நினைவை அழித்துக் கொளவேண்டும்முதியோர் இளையோர் குழந்தைகள் – ஒரு
கூட்டாய் வாழும் நிலைவேண்டும்
நிதியே அதுதான் என்கின்ற – உண்மை
நிலையை அறிய அருள்வேண்டும்.தர்மத் தராசு முள்ளாக – மனத்
தரமும் மேன்மை பெறவேண்டும்
கர்ம வினைகள் பூராவும் – நம்
கருணை யாலே வெலவேண்டும்! -
குறளின் கதிர்களாய்…(259)
செண்பக ஜெகதீசன்
எதிரதாக் காக்கு மறிவினார்க் கில்லை
யதிர வருவதோர் நோய்.-திருக்குறள் -429(அறிவுடைமை)
புதுக் கவிதையில்…
வரவிருக்கும் தீமையை
வருமுன்னே அறிந்து
அது
வராமல் தடுத்திடத் தெரிந்தவரே
அறிவுடையோர்..
உடலும் உள்ளமும்
நடுங்கும்படியான
கொடிய துன்பமெதுவும்
வருவதில்லை அவர்க்கே…!குறும்பாவில்…
வரவிருக்கும் இடரறிந்து வராதவாறு காக்கவல்ல
அறிவுடையோர்க்கு வருவதில்லை வாழ்வில்
நடுங்கவைக்கும் கொடிய துன்பமே…!மரபுக் கவிதையில்…
வாழ்வில் தீமை வரவறிந்ததன்
வரவைத் தடுத்துக் காக்கவல்ல
ஆழ்ந்த அறிவ துள்ளோர்கள்
அச்சப் படவே தேவையில்லை,
வாழ்வினி லவர்தம் உடலுள்ளம்
வருந்தி நடுங்க வைத்துவிடச்
சூழ்ந்திடும் கொடிய யிடரெதுவும்
சற்றும் அவரை நெருங்காதே…!லிமரைக்கூ..
இடர்தடுப்பார் அதையறிந்து முன்னே,
வருந்தி நடுங்கவைக்கும் கொடுந்துன்பமெதுவும்
வருவதில்லை அறிவுடையிவர் பின்னே…!கிராமிய பாணியில்…
அறிவுவேணும் அறிவுவேணும்
ஆராஞ்சறிஞ்சி செயல்படுற
அறிவுவேணும் அறிவுவேணும்..
வரப்போற தீமய
முன்கூட்டியே அறிஞ்சி,
அது
வராமத் தடுக்கத்தெரிஞ்ச
வெவரமானவனுக்கு,
வருந்தி நடுங்கவைக்கும்
பெரிய துன்பமே வராதே..
அதால
அறிவுவேணும் அறிவுவேணும்
ஆராஞ்சறிஞ்சி செயல்படுற
அறிவுவேணும் அறிவு வேணும்…! -

முனைவர் வா.செ.குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருது
முனைவர் வா.செ.குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுதொடர்பாக முனைவர் வா.செ.குழந்தைசாமி அறக்கட்டளையின் தலைவர் ப. தங்கராசு வெளியிட்டுள்ள அறிக்கை:
முனைவர் வா.செ.குழந்தை சாமி அறக்கட்டளை சார்பில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் முனைவர் வா.செ.குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
நிகழாண்டுக்கான விருதுக்குத் தொல்லியல், கல் வெட்டியல், நாணயவியல், அகழாய்வு, பலதொழில் துறைகளில் பயன்படுத்தியுள்ள, ஆனால் அகராதிகளில் இது வரை இடம்பெறாத புதிய சொற்களின் தொகுப்பு, மொழிச் சீர்திருத்தம், சமுதாயச் சீர்திருத்தம், முன்னேற்ற சிந்தனை கொண்ட முத்தமிழ் படைப்புகள் போன்ற பொருள்களில் ஒன்றைக் கொண்ட நூல்கள் வர வேற்கப்படுகின்றன.
தேர்ந்தெடுக்கப்படும் நூலின் படைப்பாளிக்கு, முனைவர் வா.செ.குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருதுடன் முதல் பரிசாக உரூ.30,000, இரண்டாம் பரிசாக உரூ.20,000, மூன்றாம் பரிசாக உரூ.10,000 வழங்கப்படும்.
நிபந்தனைகள் :
1)நூல் படைப்பு 2018 -ஆம் ஆண்டில் இருக்க வேண்டும்.
2) நூலின் இரு படிகளை அனுப்ப வேண்டும்.
3)நூலை அனுப்பி வைக்க வேண்டிய கடைசி நாள் : ஆனி 15, 2050 / சூன் 30, 2019.விருதும், பரிசுகளும் வழங்கும் நாள்: ஆடி 05, 2050 – சூலை 21, 2019.
நூலை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
ப. தங்கராசு,
தலைவர்,
முனைவர் வா.செ.குழந்தை சாமி கல்வி ஆய்வு அறக்கட்டளை தமிழ் மேம்பாட்டு விருது,
5/45, எல்.ஆர்.சி. நகர், ஆண்டாங்கோவில் கிழக்கு,
கரூர் – 639 008. -

Why there is a walking stick?
Dr.Annakannan
Most of the symbols, icons, cliparts for elders are with walking stick, which I feel irrelevant. This will discourage & demotivate elders to depend on sticks.
I see many elders without walking sticks; they will walk easily even after 70s & 80s. Elders age is starting at 60; but the need of stick may come to someone after 80 or 90, depends on their physical condition. Certain percentage of users only will use walking stick, I assume it will be around 20%. Keeping a symbol with stick for all elders will not suit.
Better we can think some other icon for elders, which should be with cheer & celebration. I suggest United Nations to conduct an icon contest at global level to decide by online voting.
-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 நிலையில் 6491 பணியிடங்களுக்கான அறிவிப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 நிலையில் 6491 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது . தேர்வுக்கு 14.07.2019க்குள் விண்ணப்பிக்கவும்.
-

மோகனக் கவிஞனுக்கு கவிதாஞ்சலி
சத்தியமணி
புன்னகை யிருக்க பூமிக்கு சிரிக்கவழிச்
சொன்னவன் சென்று விட்டான் …….1நகைப்பினில் மின்னல் தெறிப்பவர் கண்டு
திகைப்பது வைகுந்தமோ சொல்? ……..2சிரித்திட நேரத்தில் சிந்தனைக்கு விருந்தும்
இனித்தரப் போவது யாரோ ………3மோகனைக் கண்டதும் விரிந்திடும் இதழ்களில்
வேதனைச் சுமையால் வலி ………4கேசவன் வண்ணம் கிரேசியின் எண்ணமினி
வாசகன் ரசிக்க இல்லை ………5பைத்தியம் என்றுனைப் பட்டம் இட்டதற்கு
புத்திக்கு புரிந்ததே இன்று …….6வெண்பா விரித்து விளையாட்டு புரிந்தவனை
மண்பால் பிரித்தவர் யார் ………7வெண்பா விழைந்து அன்பால் மகிழ்ந்து
மண்பா வையினிடமுன் நட்பா ………8வல்லமைப் பக்கமாய் வந்ததனால் பழக்கம்
எல்லாமோ சிறிது காலம் ? ………9அத்தி வரதன் தத்தி வருமுன்னே
முந்தி நீயவன டியிலே ……..10ஆன்மா அமைதியுறுக.
-

ஜெயமோகன் மீது தாக்குதல்
அண்ணாகண்ணன்
எழுத்தாளர் ஜெயமோகன், நாகர்கோவில் அருகே பார்வதிபுரத்தில் வசிக்கிறார். அங்கே ஒரு கடையில் புளித்த தோசை மாவை விற்ற கடைக்காரரிடம் திருப்பிக் கொடுக்கச் சென்றபோது, நேற்று தாக்கப்பட்டுள்ளார். மேலும், ஜெயமோகன் வீட்டுக்குச் சென்ற கடைக்காரர் செல்வம், அங்குநின்று மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். தாக்குதலைத் தொடர்ந்து எழுத்தாளர் ஜெயமோகன், ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இதுகுறித்து ஜெயமோகன், நேசமணிநகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். தனது வலைத்தளத்திலும் எழுதியுள்ளார்.
ஜெயமோகன் தாக்கப்பட்டதை வல்லமை, வன்மையாகக் கண்டிக்கிறது.
தரம் குறைந்த பொருளை விற்பனை செய்ததற்காகவும் வாடிக்கையாளருக்கு உரிய மாற்றுப் பொருள் வழங்காததற்கும் தாக்கியதற்கும் வீட்டிற்கு வந்து மிரட்டியதற்கும் ஜெயமோகனுக்கு இழப்பீடு அளிக்கவேண்டும். நுகர்வோர் நீதிமன்றத்தில் ஜெயமோகன் இதற்காக வழக்குத் தொடுக்க வேண்டும். காவல் துறையினர், குற்றவியல் நடவடிக்கை எடுத்துக் கடைக்காரரைக் கைது செய்ய வேண்டும். உணவு வழங்கல் துறை, அந்தக் கடையில் உள்ள பொருள்களின் தரத்தினைப் பரிசோதிக்க வேண்டும். தொழில், வணிகத் துறையினர், அந்தக் கடையின் கணக்கு வழக்குகளை ஆராய வேண்டும்.
தூத்துக்குடி தொகுதியின் மக்களவை உறுப்பினர் கனிமொழி, மதுரை சு.வெங்கடேசன், கரூர் ஜோதிமணி, விழுப்புரம் ரவிக்குமார் ஆகியோர், ஜெயமோகனை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கலாம். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கேரள முதல்வர் பிணராயி விஜயன் உள்ளிட்டோர், தொலைபேசியில் நலம் விசாரிக்கலாம்.
நீ கதை எழுதுறவன்தானே எனக் கடைக்காரர் கேட்டாராம். ஜெயமோகன், நடைபெற உள்ள நாங்குநேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும்.
படத்துக்கு நன்றி: விக்கிப்பீடியா
-

விகடம் சொல்வார் யார் யாரோ!!
கிரேஸி மோகன், தன் இலக்கிய குரு என்று கொண்டாடியவர் அவரது நண்பர் ஓவியக் கவிஞர் சு.ரவி. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் வைத்து இலக்கியத்தையும் இலக்கணங்களையும் சொல்லிக் கொடுத்து, கிரேஸி மோகனுக்குள் இருந்த கவிஞரைக் கண்டறிந்தவர் சு.ரவி. இருவரும் ஓவியங்களைத் தேடி, பாரிமுனையில் கடைகடையாய் ஏறி இறங்கிய நிகழ்வுகள், கேட்பவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துவன.
கிரேஸி மோகனுக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப் பட்டதும், சு.ரவியைத் தொடர்புகொள்ள முயன்றோம். அவருடைய தொடர்பு அந்நாள் முழுக்கக் கிடைக்கவில்லை. இதற்கிடையில், அடுத்தநாள் அவர் இயக்கி வரும் ஒரு வாட்ஸாப் குழுவில் தழுதழுத்த குரலுடன் தன் ஆருயிர் நண்பனுக்கு இரங்கல் கவிதை எழுதி அதனை வாசித்தும் அனுப்பி இருக்கிறார். சு.ரவி போன்ற உணர்ச்சிக் கவிஞரின் வரிகளை, அதுவும் கிரேஸி மோகனோடு மிக நெருங்கிய உறவாய் இருந்தவர் வலிகளைப் படிக்க, கேட்க கண்ணீர் பூத்தது.
இதோ அவர் எழுதிய நண்பனுக்கான கவிதாஞ்சலி…
மோகன்
அழவு மியலா(து); அவன்நினைவாய் ஏதும்
எழுத முடியாது; நெஞ்சம்- முழுதும்
துயர்மரத்துப் போச்சே! விழிவெறிக்க லாச்சே!
அயர்ந்ததே அந்தராத் மா!கலகலக்க வைத்தே கவலை துரத்தி
உலகனைத்தும் உன்திறனால் வென்றோய்! – பலகலைகள்
தேர்ந்தவனே, தேகான்ம பாவம் தொலைத்தவனே
சோர்ந்து குலைந்ததென் நெஞ்சு!மயிலைக் கபாலியைக் கற்பகத்தை என்றும்
துயிலும் பொழுதும் மறவோய்- வியப்பால்
உனையுலகம் போற்ற, உனையென்றும் கர்வம்
தினையேனும் தீண்டியதில் லை!எனக்கிரங்கல் வெண்பா எழுதுவாய் என்றே
நினைத்திருந்தேன், ஏமாற்றி விட்டாய் – நினக்கிரங்கல்
நானெழுத நேர்ந்ததே நண்பனே, நீருக்குள்
மீனழுதாற் போலழுதேன் நான்!எங்கோ பிறந்தோம் எவர்மடியி லோவளர்ந்தோம்
இங்கேன் மனத்தால் இணைந்தோம்நாம்- கங்குகரை
இல்லாக் கடல்போல் இருள்கவிந்தென் நெஞ்சினில்
பொல்லாப் பிரிவுத் துயர்தரவோ-நல்லோய்
சிரிப்புக் கிறையாய் வலம்வந்த தேகம்
நெருப்புக் கிரையாவ தோ!நேற்றோ, நினைவில்லை உன்னுள் கவிதையெனும்
ஊற்றுக்கண் கண்டு திறந்துவிட்டேன்- ஆற்றலுடன்
காட்டாறு போலக் கவிபொழிந்தாய்! மீண்டுவர
மாட்டாயோ ஏங்கும் மனம்!என்னைக் ‘குரு’வென்(று) அழைப்பதுவோ? நண்பனே,
என்னைநீ விஞ்சிப்போய் எத்தனையோ நாளாச்சே!
இன்னமும் என்னை உயர்த்தி உரைக்குமுன்
அன்புக்(கு) அடிமையடா நான்!இன்னுமோர் நூறாண் டிருநண்பா எம்நெஞ்சில்
என்றும் பதினாறாய் ஏற்றமுற!- குன்றாக்
கவிதை, நகைச்சுவை, ஓவியத்தால் வாழும்
புவியினில் உன்றன் புகழ்!“எழுதிச் செல்லும் விதியின்கை
எழுதி எழுதி மேற்செல்லும்!
தொழுது போற்றி நின்றாலும்
சூழ்ச்சி பலவும் செய்தாவும்
வழுவிப் பின்னால் ஏகியொரு
வார்த்தை மாற்றம் செய்யாது
அழுத கண்ணீர் ஆறெல்லாம்
அதிலோர் எழுத்தை அழிக்காது”ஆம்; சற்றும் இரக்கம் காட்டாமல் விதியின் கரம் ஒரு முடிவுரையை எழுதிச் சென்றுவிட்டது. என் ஆருயிர் நண்பன் இப்போது நினைவுகளிலும், புகைப்படங்களில் மட்டுமே!
அவகாசம் அளிக்காமல் உடனே பிரிந்துசெல்ல அப்படியென்ன
அவசரமடா உனக்கு?
யாருன்னை அப்படி அழைத்தும் கொண்டது?
போதுமெனத் தீர்மானித்துப் புறப்பட்டுச் சென்றாயா?
நோயிற் படுத்திருந்தால் நோன்பிருந்து மீட்டிருப்போம்!
நாற்றிசையும் சுற்றி அமுதம் கொணர்ந்திருப்போம்!
வாய்ப்பே அளிக்காமல் வாய்க்கரிசி போடவைத்தாய்!
வெண்பா எழுதாமல் விண்ணுலகம் போகலாமா?
ஓவியங்கள் தீட்டாமல் விரல்கள் ஓயலாமா?
பெருமாள்மேல் நீபடைத்த வண்ண விருத்தங்கள்
அருமையிலும் அருமையடா! அவையெல்லாம் இசைவடிவில்
உலகெலாம் ஒலிக்க நீகேட்க வேண்டாமா?கே.பி.டி. சிரிப்புராஜ சோழனை மேடையிலே
நாடகம் ஆக்கித் தருகின்றேன் என்றெனக்கு
நீஅளித்த வாக்கை நிறைவேற்ற வேண்டாமா?
மலைமகளும், கலைமகளும், அலைமகளும், நீபடைத்த
வெண்பாவைப் புத்தகமாய் விஜய தசமியன்று
பார்க்கப் பொறுமையின்றி உனையங் கழைத்தாரோ!மாலையிலும், இரவினிலும் தொலைபேசி ஒலித்தாலே
நீயழைக்கிறாயென்று ஓடோடி நான்வருவேன்.
இனியந்த அழைப்பு வாராதே, என்செய்வேன்!காலை எழுந்தவுடன் கேசவ் ஓவியமும்
கண்ணன் வெண்பாவும் மின்னஞ்சல் கொண்டுவரும்!
இனியந்த வெண்பாக்கள் வாரா! வெறுமையடா!எல்லாம் மறக்க நினைத்தால், ஓய்வெடுக்கப்
புனா நகருக்குப் புறப்பட்டு வந்துவிடு.
ஷீரடியின் நாயகனைப் பண்டரியின் விட்டலனைச்
சேர்ந்துசென்று தரிசிப்போ மென்றழைத்தேன், சரியென்றாய்!
சனிக்கிழமை சரியென்றாய், திங்கள் சரிந்துவிட்டாய்!
வார்த்தை தவறுவது சரியோ, சம்மதமோ!சொல்ல முடியவில்லை; சொல்லில் அடங்கவில்லை;
சோகச் சுவடுகளைச் சுமக்க முடியவில்லை!
உன் ஓவியங்களையும், உன் கவிதை , உன்வசனம்
உன்னுயர்வு, உன்வளர்ச்சி, உன்பெருமை, சாதனைகள்
எல்லாமே என்னுடைய தென்றே இறுமாந்து
நெஞ்சு நிமிர்ந்திருந்தேன்- இன்று நிலைகுலைந்தேன்!இதுதான் வாழ்க்கை நியதியென்று விரக்தியுடன்
வேதாந்தம் பேசி வீடு திரும்பிவிட்டோம்!
ஆடிக் களைத்தாலும், அழுது களைத்தாலும்
அடுத்தநாள் வேலைகளைப் பார்க்கத் தொடங்குகிறோம்!ஆம்;
“இருந்து சென்ற முன்னோரின்
இடத்திலெல்லாம் நாம் இன்று
விருந்து செய்து வாழ்கின்றோம்
விகடம் சொல்லி மகிழ்கின்றோம்!
இருந்த இடம் விட்டு யாமும்இனி
எழுந்து சென்றால் இங்கிருந்து
விருந்து செய்வார் யார்,யாரோ!
விகடம் சொல்வார் யார் யாரோ!!”அமைதி கொள் நண்பா!
அஞ்சலியுடன்,
சு.ரவி -

(Peer Reviewed) இராஜகோபாலார்யனின் அகநானூற்றுப் பதிப்புகளும் சிக்கல்களும்
செ. சிலம்பு அரசி முனைவர் பட்ட ஆய்வாளர்
ப. வேல்முருகன் நெறியாளர்
தமிழ்த்துறை, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர் இராஜகோபாலார்யனின் அகநானூற்றுப் பதிப்புகளும் சிக்கல்களும்
முன்னுரை
படைப்புகளைப் சரியான முறையில் உரிய நெறிமுறைகளோடு பதிப்பித்து மக்களிடையே கொண்டு சேர்க்கும் அரும்பணி, பதிப்புப் பணி ஆகும். தொடக்க காலத்தில் சுவடிகளைப் பெயர்த்தெழுதிப் படியெடுத்துக் கொண்டனர். அப்பிரதிகள் அச்சியந்திரங்களின் வருகையினால் அச்சிடப்பட்டுப் பரவலாக்கப்பட்டன. பல்வேறு காலங்களில் வாழ்ந்த பல்வேறு புலவர்களால் பாடப்பட்ட பாடல்களைத் திணை, அடி, பாடுபொருள் ஆகியவற்றின் அடிப்படையில் தொகுத்தும் தொகுப்பித்தும் வந்துள்ளனர். சங்க இலக்கியத்திற்கு 1834–இல் திருமுருகாற்றுப்படையைப் பதிப்பித்த சரவணப் பெருமாள் ஐயர் தொடங்கி சி.வை. தாமோதரன் பிள்ளை, உ.வே. சாமிநாதையர், செளரிப்பெருமாளரங்கன், அ.பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், ராஜகோபாலார்யன், எஸ்.வையாபுரிப்பிள்ளை முதலான பலர் சங்க இலக்கியப் பதிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
வே. ராஜகோபாலார்யன் செய்த அகநானூற்றுப் பதிப்புகளை அறிமுகம் செய்வதும், பதிப்பாசிரியர்; பதிப்பாண்டுகளில் உள்ள சிக்கல்களை எடுத்துரைப்பதும் இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது. இவ்வாய்வுக்கு வே. ராஜகோபாலார்யன் பதிப்புகள் முதன்மையாதாரமாகவும், அகநானூறு குறித்த திறனாய்வு நூல்கள் துணைமையாதாரமாகவும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
அகநானூறு
கடைச்சங்க காலத்தில் இயற்றப்பெற்ற நூல்களுள் ஒன்று அகநானூறு என்பர். அகத்திணை ஒழுக்கத்தைப் பற்றிக் கூறும் 400 பாடல்கள் உள்ளன. இந்நூல் அகம், அகப்பாட்டு, நெடுந்தொகை, பெருந்தொகை நானூறு என்று வேறு பெயர்களையும் கொண்டுள்ளது. 13 அடி சிற்றெல்லையும் 31 அடி பேரெல்லையும் கொண்டு அடியளவில் பெரியது. பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்தைப் பாடியுள்ளார். அகநானூற்றுப் பாடல்களைப் பாடியவர் 145 பேர். மூன்று (114, 117, 165) பாடல்களுக்குப் புலவர் பெயர் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை உப்பூரிக்குடிக்கிழார் மகன் உருத்திரசன்மனார் தொகுத்தும், பாண்டியன் உக்கிரப் பெருவழுதி தொகுப்பித்தும் உள்ளனர்.
1 -120 களிற்றியானை நிரை, 121- 300 மணிமிடைப்பவளம், 301-400 நித்திலக் கோவை என 400 பாடல்களையும் முப்பிரிவாகப் பகுத்துப் பெயரிட்டுள்ளனர்.
பதிப்பு
ஓலைச் சுவடிகள், காகிதப்பிரதிகள் இவற்றை ஒப்பு நோக்கிப் பாட வேறுபாடுகள் சுட்டிக் காட்டிப் பதிப்புச் செய்வதே பதிப்பு என்பர்.
அகநானூற்றுப் பதிப்புகளை நோக்குகையில் பெரும்பாலும் பகுத்து வெளியிடப்பட்டுள்ளன. ‘அகநானூறு முதல் பதிப்பு 1918 தொடங்கி 2010 வரை வந்துள்ள பதிப்புகள், வெளியீடுகள் என்ற நிலையில் 47 நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் 13 நூல்களே பதிப்புகளாக அமைகின்றன’ என்று மா.பரமசிவன் (2010:39) அகநானூறு பதிப்பு வரலாறு (1918-2010) எனும் நூலில் குறிப்பிடுகிறார். 1918, 1920, 1923, 1926, 1933–இல் (இரு பதிப்பு) ஆறும் வே. இராஜகோபாலாரியனால் பதிப்பிக்கப்பட்டவை. 1940-இல் சைவ சித்தாந்த மகாசமாஜம், 1943-இல் களிற்றி யானைநிரை, 1944-இல் மணிமிடைபவளம், நித்திலக்கோவை மூன்றையும் பாகனேரி வெ.பெரி.பழ.மு. காசிவிசுவநாதச் செட்டியார், 1958-இல் மர்ரே.எஸ். இராஜம், 1990-இல் களிற்றியானைநிரை, மணிமிடைபவளம், நித்திலக்கோவை மூன்றையும் மயிலம் வே.சிவசுப்பிரமணியன், 2018-இல் களிற்றியானைநிரை மட்டும் ஏவா வில்தன் ஆகியோர் பதிப்பித்துள்ளனர்.
1918 முதல் 2018 வரை அகநானூற்றிற்குப் பதிப்புகளாக 14 நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் இராஜகோபாலார்யன் பதிப்புகளை ஆராயும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.
இராஜகோபாலார்யன் பதிப்பு
1918, 1920, 1923, 1926, 1933 (இரு பதிப்பு) ஆம் ஆண்டுப் பதிப்புகள் ஆறும் வே.இராஜகோபாலாரியனின் பதிப்புகளாகும்.
அகநானூற்றை முதலில் பதிப்பித்து வெளியிட்டவர், கம்பர் விலாசம் ராஜகோபாலார்யன் (வே. இராஜகோபாலையங்கார்). 1918–இல் தொடங்கி 1933 வரை சிற்சில மாற்றங்களோடு பதிப்பித்து வெளியிட்டுள்ளார். பதிப்பிக்கத் தூண்டியவர்கள், சுவடி கொடுத்தவர்கள், பொருள் உதவி செய்தவர்கள், சரிபார்த்துத் தந்தவர்கள் போன்றன கூறுவதைப் பதிப்பறங்களாகக் கடைப்பிடித்துள்ளார்.
1918 : முதல் பதிப்பு
முதல் பதிப்பு 1918-இல்
‘அகநானூறு மூலமும் உரையும், முதற்பகுதி, MADRAS, KAMBAR VILAS BOOK DEPOT, MYLAPORE, 1918 ’
என்று உள்ளது. இப்பதிப்பின் முகப்புப் பக்கத்தைத் தவிர வேறு எந்தப் பக்கமும் கிடைக்கவில்லை என்று இரா. ஜானகி ‘சங்க இலக்கியப் பதிப்புரைகள்’ (ப.38) எனும் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
முதல் பதிப்பாசிரியர் யார்?
அகநானூற்றின் முதல் பதிப்பாசிரியர் ரா. இராகவையங்கார் என்று சிலர் கருதுவதாக மா. பரமசிவன் (2010:2) தம் நூலில் கூறியுள்ளார். 1923ஆம் ஆண்டுப் பதிப்பின் முகப்பு அட்டையில் ‘ஸேதுஸமஸ்தான வித்துவான் ஸ்ரீ உ. வே. ரா. இராகவையங்கார் ஸ்வாமிகள் சோதித்துத் தந்தன’ என்று உள்ளதால் ரா. இராகவையங்கார் சோதித்துத் தர, ராஜகோபாலார்யன் பதிப்பித்திருக்க வேண்டும்.
1918–இல் வெளிவந்துள்ள பதிப்பில் KAMBAR VILAS BOOK DEPOT என்று பதிப்பகம் பெயர் மட்டும் இடம் பெற்றுள்ளது. கம்பர் விலாசப் பதிப்பகம், ராஜகோபாலார்யனால் நடத்தப்பட்டது என்பதை ராஜகோபாலார்யனின் 1933ஆம் ஆண்டுப் பதிப்பின், மறுபதிப்பில் இடம்பெற்றுள்ள வாழ்க்கை வரலாறு அகச் சான்றாக அமைந்து உறுதிப்படுத்துகிறது. இவற்றைக் கொண்டு ராஜகோபாலார்யனே முதல் பதிப்பாசிரியர் என்று கூறலாம்.
90 பாட்டா? 120 பாட்டா?
முதல் 90 பாடல்களுக்குப் பழைய உரை உள்ளது. அது யார் உரை என்று தெரியவில்லை. முகப்பட்டையில் ‘முதற்பகுதி’ என்று உள்ளதால். பழைய உரை கொண்ட 90 பாடல்கள் மட்டும் பதிப்பிக்கப்பட்டதா? அல்லது பழைய உரையுடன் 30 பாட்டுக்கு (91 முதல் 120வரை) மூலத்தைச் சேர்த்து களிற்றியானைநிரை (120) முழுவதும் பதிப்பிக்கப்பட்டதா? என்ற ஐயம் தோன்றுகிறது. இந்த ஐயத்திற்கு அவர் எழுதிய ஸ்ரீ பொன் ஆடு என்ற நூல் விடை கூறுகிறது. 1918–இல் களிற்றியானை நிரை மட்டும் வெளிவந்துள்ளது என்பதை
‘1927-இல் (பிரபவ) வெளிவந்துள்ள ராஜகோபாலார்யனின் ‘ஸ்ரீ: பொன் ஆடு’ எனும் நூல்வழி அறியமுடிகிறது. அந்நூலின் பின் அட்டையில் தம் அகநானூற்று நூலுக்குக் கிடைத்துள்ள நூலக ஆணை பற்றிய செய்தியை இராஜகோபாலார்யன் பதிவு செய்துள்ளார் (விவரம்: பின்னிணைப்பு – 4). அப்பதிவின் மையப்பகுதி வருமாறு:
“ A copy of the first part of “Ahananuru” containing 120 stanzas is a useful edition to the library and the Deputy Inspectors of School are permitted to purchase a copy of the same from the allotment placed at their disposal under“ Books and periodicals “in the current year’s budget” (1927: பின் அட்டை).” (மா.பரமசிவன் 2010:7) அறிய முடிகிறது.
1920 : இரண்டாம் பதிப்பு
1920-இல்
‘ஸ்ரீ: அகநானூறு மூலமும் உரையும், முதற்பகுதியும், இரண்டாம் பகுதியும்’ MADRAS, KAMBAR VILAS BOOK DEPOT, MYLAPORE, 1920, copyright], [price Rs. 9.’
என்ற பதிப்பு வெளிவந்துள்ளது. இப்பதிப்பிலும் பதிப்பாசிரியர் பெயர் இல்லை; பதிப்பகப் பெயர் உள்ளது. முகவுரை எதுவும் இல்லாமல் கடவுள் வாழ்த்துடன் தொடங்கி, 90ஆம் பாடல்வரை பழைய உரையுடனும் பிற பாடல்களின் மூலமும், இறுதியில் பாயிரமும், செய்யுள் முதற் குறிப்பகராதியும் உள்ளன.
1920-இல் இராஜகோபாலார்யன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் எவ்வித முன்னுரையும் இல்லாமல் 90 பாடல்களைப் பழைய உரையுடன் பதிப்பித்துள்ளார். இப்பதிப்பு, இராஜகோபாலார்யன் பதிப்பு என்பதை 1923-இல் பதிப்பித்துள்ள அகநானூற்று நூலின் ஒரு விஞ்ஞாபனம் என்னும் பகுதி உறுதிப்படுத்துகின்றது. அப்பகுதி வருமாறு:
பதிப்பாசிரியர் பெயர் இடம் பெறாதது ஏன்?
பதிப்பகத்தின் பெயர் இடம்பெற்று, பதிப்பாசிரியர் பெயர் இடம் பெறாதது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. அதாவது உள்ளதை மட்டும் பதிப்பித்துப் பதிப்பாசிரியர்க்குரிய பதிப்பறங்களை மேற்கொள்ளாத போது பதிப்பாசிரியர் பெயரை ஏன் சேர்க்க வேண்டும் என்று இராஜகோபாலார்யன் நினைத்திருக்கலாம். 1923-இன் பதிப்பில் பாடல்களைத் தவிர முகவுரை தொடங்கிப் பொருட்குறிப்பகராதி வரை, பதினைந்து தலைப்புகள் இடம்பெற்றுள்ளன. பதிப்பாசிரியர் இப்பதிப்புகளில் பதிப்பறங்களைச் சிறந்த முறையில் கடைப்பிடித்துள்ளதால் பதிப்பாசிரியர் பெயரைச் சேர்த்துள்ளார் என்று எண்ணத் தோன்றுகிறது. இதிலிருந்து வே. இராஜகோபாலார்யன் பதிப்பறங்களை மேற்கொண்டால் மட்டுமே பதிப்பாசிரியார் பெயர் இடம் பெறவேண்டும் இல்லையென்றால் பதிப்பாசிரியர் பெயர் இடம் பெறல் கூடாது என்ற கருத்துடையவராக இருந்துள்ளதை உணர முடிகின்றது. இதன் மூலம், அவர் சிறந்த பதிப்பாசிரியருக்குரிய இலக்கணத்தைக் கடைப்பிடித்துள்ளார் என்றே கூறலாம்.
1923 : மூன்றாம் பதிப்பு
1923-இல்
‘ஸ்ரீ: எட்டுத்தொகையுள் நெடுந்தொகை ஆகும் அகநானூறு மூலமும் பழைய உரையும், இவை ஸேது ஸம்ஸ்தான வித்துவான் ஸ்ரீ உ.வே.ரா. இராகவையங்கார் ஸ்வாமிகள் சோதித்துத் தந்தன, மயிலாப்பூர் கம்பர் விலாஸம் வே. இராஜகோபாலையங்கார் பதிப்பு, ருதிரோத்காரி ளு], [விலை ரூ.10.’
என்பது அவரின் மூன்றாம் பதிப்பாகும்.
1920–இல் குறைப் புத்தகமாக வெளியிட்ட ராஜகோபாலார்யன் உடல்நிலை சரியானபின் 1923–இல் இரா. இராகவையங்காரைப் பரிசோதிக்கச் செய்து தம் பதிப்பைச் செம்மை செய்துள்ளார்.
‘1923 இல் ரா.இராகவையங்காரைப் பரிசோதித்துத் தருமாறு வேண்டுகிறார்; அவரும் பரிசோதித்துத் தர இணங்கிப் பரிசோதித்து 69 பாடல்களைச் (விவர: பின்னிணைப்பு-8:அட்டவணையில் 1923ஆம் ஆண்டிற்குரிய பகுதி) செம்மை செய்கிறார்’ (2010:43)
1.முகவுரை – ரா. இராகவையங்கார், 2. ஒரு விஞ்ஞாபனம் – வே. இராஜகோபாலன், 3.சோதனைப் பத்திரம், 4.பாடினோர் வரலாறு, 5.தொகுத்தோர் வரலாறு, 6.தொகுப்பித்தோர் வரலாறு, 7.அரசர் முதலியோர் வரலாறு, 8.உரையாசிரியர் வரலாறு, 9.அகநானூற்று ஆராய்ச்சிக் குறிப்பு, 10.ஐந்திணைக்கு உரிய பாடல்கள், 11. இலக்கணக் குறிப்பு, 12.சுருக்கக் குறியீடு, 13.கடவுள் வாழ்த்து, 14.90 பாட்டுக்குப் பழைய உரை + (91-400) மூலம், 15.பாயிரம் 16.செய்யுள் முதற்குறிப்பு அகராதி, 17.அபிதான குறிப்பு அகராதி, 18.பொருட்குறிப்பு அகராதி ஆகியன இடம் பெற்றுள்ளன.
1926 : நான்காம் பதிப்பு
1926-இல்
‘ஸ்ரீ: எட்டுத்தொகையுள் நெடுந்தொகை ஆகும் அகநானூறு களிற்றியானைநிரை மூலமும் முதற்றொண்ணூறு பாட்டிற்குப் பழைய உரையும், இறுதி முப்பது பாட்டிற்கு ஸ்ரீ வத்ஸசக்ரவர்த்தி ராஜகோபாலார்யன் எழுதிய குறிப்புரையும்’ சென்னை, கம்பர் புஸ்தகாலயம், கம்பர் விலாஸம், மயிலாப்பூர், அக்ஷய ளு சித்திரை மீ, விலை ரூ. 4.’
என்னும் பதிப்பு வெளிவந்துள்ளது. அப்பதிப்பில், 1.முகவுரை – ராஜகோபாலார்யன், 2.அகநானூறு முகவுரை – இரா.இராகவையங்கார், 3.ஒரு விஞ்ஞாபனம் – வே.இராஜகோபாலன், 4.சோதனைப் பத்திரம் 5.கடவுள் வாழ்த்து, 6.120 பாட்டு, 7.அபிதானக் குறிப்பு முதலியன, 8. சோதனைப் பத்திரம், குறிப்புரை ஆகியன இடம் பெற்றுள்ளன.
முன்னர் மூலத்தை மட்டும் பதிப்பித்தவர், இப்பதிப்பிலிருந்து உரை எழுதத் தொடங்குகிறார். இதனை ‘இறுதி முப்பது பாட்டிற்கு ஸ்ரீ வத்ஸசக்ரவர்த்தி ராஜகோபாலார்யன் எழுதிய குறிப்புரையும்’ என்பதிலிருந்து அறிந்துகொள்ளலாம். மேலும், ஒரு முகவுரையையும் ராஜகோபாலார்யன் எழுதுகிறார். ஏனென்றால் உரை எழுத தூண்டுகோலாக இருந்தவர் பற்றியும், பின் கிடைத்த ஏட்டுப் பிரதிகளால் பல திருத்தங்களை மேற்கொண்டுள்ளதைப் பற்றியும் கூறுகிறார். இவற்றைப் பதிவு செய்தல் பதிப்பாசிரியர் கடமை என்பதை அறிந்தே மேலும் ஒரு முகவுரை அவர் எழுதியுள்ளார் எனக் கருதலாம்.
ராஜகோபாலார்யன், அ. பின்னத்தூர் நாராயணசாமியுடன் இருந்ததால் அவருக்கு உரை எழுதும் அனுபவம் கிடைத்தது. அதனால் உரை எழுத தொடங்கினேன் என்று கூறியுள்ளார். அம்முகவுரைப் பகுதியின் ஒரு பகுதி வருமாறு: அ. பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்
இப்பகுதியின் மூலம் பழைய உரையுடன் 30 பாட்டிற்கு ராஜகோபாலார்யன் குறிப்புரை என்று உரை எழுதியும், பின் கிடைத்த சில ஏட்டுப் பிரதிகளால் பல திருத்தங்கள் செய்தும் இப்பதிப்பைப் பதிப்பித்துள்ளார் என்பதை உணர முடிகின்றது.
1926 ஆண்டு பெயரில் இரு பதிப்பு நூல்கள் வேறுபட்டு கிடைக்கின்றன. இது மேலாய்வுக்குரியதாக அமைந்துள்ளது.
எ.கா. முதல் பாடலில் நவிரல் என்ற சொல்லுக்குப் பொருள் மாறுபட்டுக் காணப்படுதல்
- நவிரல் – சூதல் (1926 -அ)
- நவிரல் – குலைதல் (1926 -ஆ)
1933 : ஐந்தாம் பதிப்பு
‘ஸ்ரீ: எட்டுத்தொகையுள் நெடுந்தொகை ஆகும் அகநானூறு மூலமும் பழைய உரையும்’ இவை ‘ஸேது ஸமஸ்தான மகாவித்துவான் பாஷா கவிசேகரர் ஸ்ரீ உ.வே.ரா. இராகவையங்கார் ஸ்வாமிகள் பரிசோதித்துத் தந்தன,’ ஸ்ரீ வத்ஸசக்ரவர்த்தி ராஜகோபாலார்யன் பதிப்பு, கம்பர் புஸ்தகாலயம், கம்பர் விலாஸம் மயிலாப்பூர், ஸ்ரீ முகளு], [விலை ரூ. 7-8-0.’
என்பது இப்பதிப்பின் முகப்புப் பக்கம் ஆகும்.
இந்நூலில் 1. இரண்டாம் பதிப்பின் முகவுரை – ராஜகோபாலார்யன், 2. முகவுரை – இரா. இராகவையங்கார், 3. ஒரு விஞ்ஞாபனம் – வே. இராஜகோபாலார்யன், 4. செய்யுள் முதற்குறிப்பு அகராதி, 5. அபிதானக் குறிப்பு முதலியன, 6. இலக்கணக் குறிப்பு, 7. சுருக்கக் குறியீடு, 8. கடவுள் வாழ்த்து, 9.முதல் 90 பாட்டுக்குப் பழைய உரையும்+70 பாட்டுக்கு ராஜகோபாலார்யன் உரையும் மற்றவை மூலம் மட்டும் இடம்பெற்றுள்ளன. 10. பாயிரம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இப்பதிப்பு 91-160 பாட்டுக்கு ராஜகோபாலார்யன் உரையைக் கொண்டுள்ளது.
இரண்டாம் பதிப்பின் முகவுரையில் உள்ள,
பகுதியைக் கொண்டு,
- அகநானூற்று உரை மு. இராகவையங்கார் உரையா?
‘121-160 ஆம் பாடல்களின் உரை, மு. இராகவையங்கார் செய்ததாக இருக்கலாமோ என எண்ணத் தூண்டுகிறது என்பர்.
2.பதிப்பாண்டு எது?
1935 -இல் அவர் மரணம் அடைகிறார். அவர் இறந்த செய்தி 1933 நூலில் எப்படி இடம் பெற்றுள்ளது? மேற்பகுதி 1933 –இல் இடைச்செருகப்பட்டதா? அல்லது முன்னர் (1933-இல்) அச்சிடப்பட்ட பகுதிகள் 1935 பிறகே அச்சுடன் சேர்த்து நூலாக்கப்பட்டனவா?’என்ற இரண்டு வினாக்களை மா.பரமசிவன் எழுதிய அகநானூறு ராஜகோபாலார்யன் உரையும் உரைநெறியும் (2016) என்ற நூலின் அணிந்துரையில் ஆ.மணி எழுப்பியுள்ளார். முதல் கேள்வி, மேலாய்வுக்குரியதாக அமைந்துள்ளது.
1933-ஆம் ஆண்டு பதிப்பில் எவ்வித மாற்றமுமின்றி ராஜகோபாலார்யனின் இறந்த செய்தியுடன் கூடிய வாழ்க்கை வரலாற்றை இணைத்து 1935–இல் மறுபதிப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். 1935ஆம் ஆண்டுப் பதிப்பு, மறுபதிப்பு என்று பதிப்பாசிரியர் கூறாததன் விளைவே ஆய்வில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதைக் காண முடிகிறது.
1933 : ஆறாம் பதிப்பு
1933இல் நித்திலக் கோவையையும் பதிப்பிக்கிறார். ஸ்ரீ:எட்டுத்தொகையுள் நெடுந்தொகை ஆகும் அகநானூறு மூன்றாவது நித்திலக் கோவை மூலம், இது ‘ஸேது ஸமஸ்தான வித்துவான் ஸ்ரீ உ.வே.ரா.இராகவையங்கார் ஸ்வாமிகள் பரிசோதித்துத் தந்தது, கம்பர் விலாசம் ஸ்ரீ வத்ஸசக்ரவர்த்தி ராஜகோபாலார்யன் பதிப்பு, கம்பர் புஸ்தகாலயம், மயிலாப்பூர், சென்னை ஸ்ரீ முகளு – ஆவணி மீ.
- இரண்டாம் பதிப்பின் முகவுரை – ராஜகோபாலார்யன், 2. அகநானூறு -முகவுரை – ரா. இராகவையங்கார், 3. ஒரு விஞ்ஞாபனம் -வே. இராஜகோபாலன், 4.செய்யுள் முதற்குறிப்பு அகராதி, 5. அபிதானக் குறிப்பு முதலியன, 6. இலக்கணக் குறிப்பு, 7. இப்பதிப்பில் எடுத்துக் காட்டிய நூற்பெயர் முதலியவற்றின் முதற்குறிப்பு விளக்கம், 8. மூன்றாவது நித்திலக் கோவை (301-400), பாயிரம்.
தொகுப்புரை
1918, 1920, 1923, 1926, 1933(இரு பதிப்பு)ஆம் ஆண்டுப் பதிப்புகள் ஆறும் வே. ராஜகோபாலாரியனால் சிற்சில மாற்றங்களோடு பதிப்பிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் 1918ஆம் ஆண்டுப் பதிப்பு ‘அகநானூறு மூலமும் உரையும், முதற்பகுதி, MADRAS, KAMBAR VILAS BOOK DEPOT, MYLAPORE, 1918 ’ என்ற முகப்பு பக்கத்தைத் தவிர வேறு எந்தப் பக்கமும் கிடைக்கவில்லை. பதிப்பகத்தைக் கொண்டே முதல் பதிப்பாசிரியர் வே. ராஜகோபாலார்யன் என்றும், அவர் எழுதிய ‘ஸ்ரீ பொன் ஆடு’ என்ற நூல் வழி 120 பாடல்களைக் கொண்டது இப்பதிப்பு என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது.
1920ஆம் ஆண்டுப் பதிப்பு (90 பாட்டுக்கு பழைய உரை + மூலம்) எவ்வித முகவுரையும் இல்லாமல் வெளிவந்ததற்கு உடல்நலமே காரணம் என்று 1923ஆம் பதிப்பில் கூறுகிறார்.
1923ஆம் ஆண்டுப் பதிப்பு (90 பாட்டுக்கு பழைய உரை + மூலம்) 18 தலைப்புகள் கொண்டு ஒரு முழுமையான பதிப்பாக அமைகிறது.
1926ஆம் ஆண்டுப் பதிப்பு (90 பாட்டுக்கு பழைய உரை + 30 பாட்டுக்கு குறிப்புரை, களிற்றியானை நிரை மட்டும்) வே.ராஜகோபாலார்யனைப் பதிப்பாசிரியராகவும், 30 பாட்டுக்குக் குறிப்புரை எழுதியதால் உரையாசிரியராகவும் அறிமுகப்படுத்துகிறது.
1926 ஆம் ஆண்டினையுடைய இரு பதிப்பு நூல்கள் கிடைக்கின்றன. இந்நூல்கள், பல வேறுபாடுகளைக் கொண்டுள்ளதால் மேலாய்வுக்குரியதாக அமைந்துள்ளன.
1933ஆம் ஆண்டுப் பதிப்பு (90 பாட்டுக்கு பழைய உரை + 91 இலிருந்து 60 பாட்டுக்கு உரை + மூலம்) 10 தலைப்புகளைக் கொண்டுள்ளது. இப்பதிப்பின் முகவுரையைக் கொண்டு மு. ராகவையங்கார் உரை எழுதியிருக்கலாம் என்ற ஐயம் ஏற்படுகிறது. இது மேலாய்வுக்குரியது. இவ்வாண்டிலே நித்திலக்கோவையையும் பதிப்பித்துள்ளார்.
1933 ஆம் ஆண்டு பதிப்போடு ராஜகோபாலார்யன் வாழ்க்கை வரலாறு இடம் பெற்றதைத் தவிர்த்து, வேறு எவ்வித மாற்றமுமின்றி 1935–இல் மறுபதிப்பு வெளிவந்துள்ளதை அறிய முடிகிறது.
அடிக்குறிப்பு
இரண்டாவது கேள்வி குறித்து மா. பரமசிவன் அவர்களை நேரில் சந்தித்தபோது, என்னிடம் உள்ள ராஜகோபாலார்யன் பதிப்பு நூலில் வாழ்க்கை வரலாறு பகுதியே இல்லை. நீங்கள் எப்படி கொடுத்தீர்கள் என்று கேட்டேன். நான் உ.வே.சா. நூலகத்திலிருந்து பெற்ற நூலில் அச்செய்தி இடம் பெற்றுள்ளது என்று கூறி அவரிடமுள்ள அகநானூறு நூல்களைப் படியெடுத்து தந்துதவினார். நான் வைத்துள்ள அந்தப் படியை அவரிடம் காட்டினேன். இந்நூல் எனக்குக் கிடைக்கவில்லை என்று கூறிப் பின் என் கருத்து ஏற்கும் வகையில் உள்ளது என்றார்.
இது குறித்து ஆ. மணி அவர்களிடமும் தெரிவித்தேன். அப்போது, ஒரு படப்படியில் (pdf) உள்ள நூல் அவர் இறப்புக்குப் பின் இராஜகோபாலார்யன் புகைப்படத்துடன், அவர் வாழ்க்கைக் குறிப்பைத் தனியே அச்சிட்டு முன்பகுதியில் இணைத்து, 1935-இல் மறுபதிப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதே நீங்கள் எழுப்பிய வினாவுக்கு விடையாக இருக்கும் என்றும் கூறினேன். அதற்கு அவர் உன் கருத்து ஏற்கும் வகையில் இருந்தாலும், ராஜகோபாலார்யன் பதிப்புகளின் உண்மைப் படிகளைப் பார்த்த பிறகே உறுதி செய்ய முடியும் என்று கூறினார்.
துணைநூல் பட்டியல்
- ஸ்ரீ அகநானூறு மூலமும் உரையும், முதற்பகுதியும் இரண்டாம் பகுதியும், Madras: KAMBAR VILAS BOOK DE OT, Mylapore,1920.
- இராஜகோபாலார்யன் வே. (பதி.), எட்டுத்தொகை ஆகும் அகநானூறு மூலமும் உரையும், கம்பர் விலாஸம், மயிலாப்பூர், சென்னை, 1923.
- ராஜகோபாலார்யன் வே. (பதி.), ஸ்ரீஎட்டுத்தொகையுள் நெடுந்தொகை ஆகும் அகநானூறு முதலாவது களிற்றியானைநிரை மூலமும் முதற்றொண்ணூறு பாட்டிற்குப் பழைய உரையும் இறுதி முப்பது பாட்டிற்கு ஸ்ரீ வத்ஸசக்ரவர்த்தி ராஜகோபாலார்யன் எழுதிய குறிப்புரையும், கம்பர் புஸ்தகாலயம், கம்பர் விலாஸம், மயிலாப்பூர், சென்னை, 1926.
- ராஜகோபாலார்யன் வே. (பதி.), ஸ்ரீஎட்டுத்தொகையுள் நெடுந்தொகை ஆகும் அகநானூறு மூலமும் பழைய உரையும், கம்பர் புஸ்தகாலயம், கம்பர் விலாஸம், மயிலாப்பூர், சென்னை, 1933.
- பரமசிவன் மா., அகநானூறு ராஜகோபாலார்யன் உரையும் உரைநெறியும், காவ்யா கோடம்பாக்கம், சென்னை, 2016.
- பரமசிவன் மா., அகநானூறு பதிப்பு வரலாறு (1918 – 2010), காவ்யா கோடம்பாக்கம், சென்னை, 2010.
- பரமசிவன் மா., அகநானூற்றுப் பதிப்புப் பின்புலம், காவ்யா கோடம்பாக்கம், சென்னை, 2012.
- ஜானகி இரா., சங்க இலக்கிய பதிப்புரைகள், பாரதி புஸ்தகாலயம், தேனாம்பேட்டை, சென்னை, 2010.
- ஏவா வில்தன், களிற்றியானைநிரை, EFEO & IFP, புதுச்சேரி, 2018.
=========================================================
ஆய்வறிஞர் கருத்துரை [Peer Review]:
சங்க இலக்கியங்களில் நெடுந்தொகை நானூறு என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுவது அகநானூறு. 1918ஆம் ஆண்டு முதல் வே.இராஜகோபால ஐயங்கார் அவர்களால் அகநானூறு பதிப்பிக்கப்பட்டுள்ளது. கட்டுரையாளர் இராஜகோபால ஐயங்காரின் அகநானூற்றுப் பதிப்புகள் அமைந்துள்ள முறை, வெளியிடப்பட்டுள்ள ஆண்டுகள், பதிப்புகளின் அமைப்பு ஆகியன குறித்து அறிமுகப்படுத்துகின்றார். இவர் 1918 முதல் 1933 வரையில் வெளிவந்துள்ள வே.இராஜகோபால ஐயங்காரின் அகநானூற்று பதிப்புகளைத் தனித்தனியே விளக்கியுள்ளார். வே.இராஜகோபால ஐயங்காரின் பதிப்பாக்கப் பின்புலத்தில் ரா.இராகவையங்கார் செயல்பட்டுள்ளார் என்பதை இவரது பதிப்புகள் உறுதிப்படுத்துகின்றன.
– வே. ராஜகோபாலார்யன் செய்த அகநானூற்றுப் பதிப்புகளை அறிமுகம் செய்வதும், பதிப்பாசிரியர் – பதிப்பாண்டுகளில் உள்ள சிக்கல்களை எடுத்துரைப்பதும் இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
– 1926ஆம் ஆண்டுப் பெயரில் இரு பதிப்பு நூல்கள் வேறுபட்டுக் கிடைக்கின்றன. இது மேலாய்வுக்குரியதாக அமைந்துள்ளது.
– ‘121-160 ஆம் பாடல்களின் உரை, மு. இராகவையங்கார் செய்ததாக இருக்கலாமோ என எண்ணத் தூண்டுகிறது என்பர்.
– 1926 ஆம் ஆண்டினையுடைய இரு பதிப்பு நூல்கள் கிடைக்கின்றன. இந்நூல்கள் பல வேறுபாடுகளைக் கொண்டுள்ளதால் மேலாய்வுக்குரியதாக அமைந்துள்ளன.
ஆய்வாளர் மேற்கண்ட கேள்விகளையும் ஆய்வுச் சிக்கல்களையும் கட்டுரையில் நுட்பமாக முன்வைக்கின்றார். ஆனால் அவற்றிற்கான முழுத் தீர்வைக் கட்டுரையின் வாயிலாக வெளிப்படுத்தவில்லை.
இராஜகோபாலார்யனின் அகநானூற்றுப் பதிப்புகள்தோறும் முகவுரை பகுதியில் முன்வைக்கின்ற கருத்துகளை, தலைப்புகளின் அடிப்படையில் மட்டும் கட்டுரையாளர் தொகுத்துத் தருகின்றார். அத்தலைப்புகளுக்குள் முன்வைத்துள்ள கருத்துகள் குறித்த கட்டுரையாளரின் பார்வை, கட்டுரையில் வெளிப்படவில்லை
வே.இராஜகோபாலார்யனின் அகநானூற்றுப் பதிப்புகளை அறிமுகப்படுத்துவதாகவே கட்டுரை பெரிதும் அமைகின்ற காரணத்தினால் ஆய்வுக் கட்டுரையாக வெளியிட இயலாது. ஆயினும், ஆய்வாளரின் உழைப்பையும் ஈடுபாட்டையும் கருத்திற் கொண்டு இக்கட்டுரையினை இலக்கியக் கட்டுரைப் பகுதியில் வெளியிடுகிறோம்.
=========================================================












