ஜெயமோகன் மீது தாக்குதல்

அண்ணாகண்ணன்
எழுத்தாளர் ஜெயமோகன், நாகர்கோவில் அருகே பார்வதிபுரத்தில் வசிக்கிறார். அங்கே ஒரு கடையில் புளித்த தோசை மாவை விற்ற கடைக்காரரிடம் திருப்பிக் கொடுக்கச் சென்றபோது, நேற்று தாக்கப்பட்டுள்ளார். மேலும், ஜெயமோகன் வீட்டுக்குச் சென்ற கடைக்காரர் செல்வம், அங்குநின்று மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். தாக்குதலைத் தொடர்ந்து எழுத்தாளர் ஜெயமோகன், ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இதுகுறித்து ஜெயமோகன், நேசமணிநகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். தனது வலைத்தளத்திலும் எழுதியுள்ளார்.
ஜெயமோகன் தாக்கப்பட்டதை வல்லமை, வன்மையாகக் கண்டிக்கிறது.
தரம் குறைந்த பொருளை விற்பனை செய்ததற்காகவும் வாடிக்கையாளருக்கு உரிய மாற்றுப் பொருள் வழங்காததற்கும் தாக்கியதற்கும் வீட்டிற்கு வந்து மிரட்டியதற்கும் ஜெயமோகனுக்கு இழப்பீடு அளிக்கவேண்டும். நுகர்வோர் நீதிமன்றத்தில் ஜெயமோகன் இதற்காக வழக்குத் தொடுக்க வேண்டும். காவல் துறையினர், குற்றவியல் நடவடிக்கை எடுத்துக் கடைக்காரரைக் கைது செய்ய வேண்டும். உணவு வழங்கல் துறை, அந்தக் கடையில் உள்ள பொருள்களின் தரத்தினைப் பரிசோதிக்க வேண்டும். தொழில், வணிகத் துறையினர், அந்தக் கடையின் கணக்கு வழக்குகளை ஆராய வேண்டும்.
தூத்துக்குடி தொகுதியின் மக்களவை உறுப்பினர் கனிமொழி, மதுரை சு.வெங்கடேசன், கரூர் ஜோதிமணி, விழுப்புரம் ரவிக்குமார் ஆகியோர், ஜெயமோகனை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கலாம். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கேரள முதல்வர் பிணராயி விஜயன் உள்ளிட்டோர், தொலைபேசியில் நலம் விசாரிக்கலாம்.
நீ கதை எழுதுறவன்தானே எனக் கடைக்காரர் கேட்டாராம். ஜெயமோகன், நடைபெற உள்ள நாங்குநேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும்.
படத்துக்கு நன்றி: விக்கிப்பீடியா