இலக்கியம்கவிதைகள்மரபுக் கவிதைகள்

என்னப்பா!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா

விரதமெலாம் தானிருந்து
விரும்பியெனை இறைவனிடம்
வரமாகப் பெற்றவரே
வாய்மைநிறை என்னப்பா
விரல்பிடித்து அரிசியிலே
எழுதவைத்த என்னப்பா
உரமாக என்னுள்ளே
உணர்வோடு கலந்துவிட்டார்!

தோள்மீது எனைத்தூக்கி
தான்மகிழ்ந்து நின்றிடுவார்
வாழ்நாளில் வீழாமல்
வளரவெண்ணிப் பலசெய்தார்
மெய்வருத்தம் பாராமல்
எனையெண்ணித் தானுழைத்தார்
கண்ணெனவே காத்துநின்றார்
கருணைநிறை என்னப்பா!

பொட்டுவைத்த என்முகத்தை
கட்டிக்கட்டிக் கொஞ்சிடுவார்
பட்டுச்சட்டை வாங்கிவந்து
பரவசத்தில் மூழ்கிடுவார்
இஷ்டமுடன் தன்மார்பில்
எனையுறங்க வைத்திடுவார்
அஷ்ட ஐஸ்வரியமென்று
அனைவர்க்கும் சொல்லிடுவார்!

நானுண்ட மிச்சமெலாம்
தானெடுத்துச் சுவைத்திடுவார்
அவர்பாதி நானென்று
அவருக்குள் எண்ணிடுவார்
உலகிலென்னை உயர்ந்தவனாய்
உருவாக்க உருவானார்
நிலவுலகில் என்னப்பா
நிகரில்லா தெய்வமன்றோ!

பட்டம்பல நான்பெற்றேன்
பதவிகளும் வகித்துநின்றேன்
கஷ்டம்பல பெற்றாலும்
கைகொடுத்தார் என்னப்பா
விருதுகளோ எனையணுகி
விரும்பிவந்து சேர்ந்தனவே
விரும்பிநின்ற என்னப்பா
விண்ணுலகு சென்றுவிட்டார்!

ஆளாக்கி விட்ட எந்தன்
அன்புநிறை அப்பாவை
அனுதினமும் எண்ணியெண்ணி
அலமந்து நிற்கின்றேன்
ஆண்டவனின் திருவுருவாய்
அப்பாவைக் காணுகிறேன்
அவர்நினைப்பை மனமிருத்தி
அவர்வாழ்த்தை வேண்டுகிறேன்!

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க