கருணையாலே வெலவேண்டும்!

மீ.விசுவநாதன்

வந்த பிறவிச் சுவடுக்கு – ஒரு
வகையில் நன்மை செயவேண்டும்
எந்த உயிர்க்கும் சுமையாக – நாம்
இல்லா திருக்க வரம்வேண்டும்

பூவாய், காயாய்க் கனியாக – நம்
பூமி மகிழ வரவேண்டும்
நாவாய் போல அனைவர்க்கும் – துன்ப
நதியைக் கடக்கத் துணைவேண்டும்

பறவை, விலங்கு, நீர்நிலைகள் – உயிர்
பந்த மென்ற உணர்வோடு
துறவைப் பெற்ற மனம்போலே – நம்
தூய பணியைச் செயவேண்டும்

காக்கை, மைனா, குருவிகளின் -மனம்
கண்டு உணவு தரவேண்டும்
தீக்கை மாறிக் குளிராக – தொண்டு
தினமும் செய்யும் குணம்வேண்டும்

இறைவன் படைத்த உலகத்தை – அன்பு
ஈர்ப்பி னாலே தொடவேண்டும்
நிறைவாம் செல்வம் ஆனந்தம் – “நான்”
நினைவை அழித்துக் கொளவேண்டும்

முதியோர் இளையோர் குழந்தைகள் – ஒரு
கூட்டாய் வாழும் நிலைவேண்டும்
நிதியே அதுதான் என்கின்ற – உண்மை
நிலையை அறிய அருள்வேண்டும்.

தர்மத் தராசு முள்ளாக – மனத்
தரமும் மேன்மை பெறவேண்டும்
கர்ம வினைகள் பூராவும் – நம்
கருணை யாலே வெலவேண்டும்!

About மீ. விசுவநாதன்

பணி : காட்பரி நிறுவனம் (ஓய்வு) தற்சமயத் தொழில் : கவிதை, சிறுகதை, குறுநாவல், கட்டுரைகள் எழுதுவது. இலக்கியம், ஆன்மீகச் சொற்பொழிவு. பள்ளி மாணவ, மாணவியர்களுக்குக் கதைகள் சொல்வது. சுபமங்களா, கணையாழி, தினமணிகதிர், தாமரை, அமுதசுரபி, கலைமகள், புதியபார்வை ஆகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகி இருக்கிறது. நூல்கள்: "இரவில் நனவில்" என்ற சிறுகதைத் தொகுதி, மனிதநேயம், "காலடி சங்கரரின் கவின்மிகு காவியம்" கவிதைத் தொகுதிகள். இரவில் நனவில் சிறுகதைக்கு கோயம்புத்தூர் "லில்லி தேவசிகாமணி" இலக்கிய விருது இரண்டாம் பரிசு கிடைத்தது.(வருடம் 1998): பாரதி கலைக்கழகம் 2003ம் ஆண்டு "கவிமாமணி" விருதளித்துக் கௌரவம் செய்தது.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க