குறளின் கதிர்களாய்…(259)

செண்பக ஜெகதீசன்
எதிரதாக் காக்கு மறிவினார்க் கில்லை
யதிர வருவதோர் நோய்.
-திருக்குறள் -429(அறிவுடைமை)
புதுக் கவிதையில்…
வரவிருக்கும் தீமையை
வருமுன்னே அறிந்து
அது
வராமல் தடுத்திடத் தெரிந்தவரே
அறிவுடையோர்..
உடலும் உள்ளமும்
நடுங்கும்படியான
கொடிய துன்பமெதுவும்
வருவதில்லை அவர்க்கே…!
குறும்பாவில்…
வரவிருக்கும் இடரறிந்து வராதவாறு காக்கவல்ல
அறிவுடையோர்க்கு வருவதில்லை வாழ்வில்
நடுங்கவைக்கும் கொடிய துன்பமே…!
மரபுக் கவிதையில்…
வாழ்வில் தீமை வரவறிந்ததன்
வரவைத் தடுத்துக் காக்கவல்ல
ஆழ்ந்த அறிவ துள்ளோர்கள்
அச்சப் படவே தேவையில்லை,
வாழ்வினி லவர்தம் உடலுள்ளம்
வருந்தி நடுங்க வைத்துவிடச்
சூழ்ந்திடும் கொடிய யிடரெதுவும்
சற்றும் அவரை நெருங்காதே…!
லிமரைக்கூ..
இடர்தடுப்பார் அதையறிந்து முன்னே,
வருந்தி நடுங்கவைக்கும் கொடுந்துன்பமெதுவும்
வருவதில்லை அறிவுடையிவர் பின்னே…!
கிராமிய பாணியில்…
அறிவுவேணும் அறிவுவேணும்
ஆராஞ்சறிஞ்சி செயல்படுற
அறிவுவேணும் அறிவுவேணும்..
வரப்போற தீமய
முன்கூட்டியே அறிஞ்சி,
அது
வராமத் தடுக்கத்தெரிஞ்ச
வெவரமானவனுக்கு,
வருந்தி நடுங்கவைக்கும்
பெரிய துன்பமே வராதே..
அதால
அறிவுவேணும் அறிவுவேணும்
ஆராஞ்சறிஞ்சி செயல்படுற
அறிவுவேணும் அறிவு வேணும்…!