பாஸ்கர் சேஷாத்ரி

அவரின் மீசையைப் பார்த்தவுடன் அவளுக்குப் பயமாகிவிட்டது .

“என்ன, உம்பேரு என்ன?”

“செல்வி.”

உடம்பு கொஞ்சம் நடுங்கியது

“வேலையை பத்தி சுந்தரி சொன்னாளா?”

“சொன்னாங்க சார்.”

“காலைல எட்டரைக்கு வந்துடணும் .
ஒம்போது மணிக்கு டீ கொடுப்ப்போம் .
நாலு பிஸ்கட் கூட பொறையும் உண்டு .
வேலைல கௌரவம் பாக்க கூடாது .
முதல்ல இரண்டு கல்ல தூக்கணும் .
அப்புறம் ஒரு வாரம் கழிச்சு நாலு கல்லு.
மொத்தம் மூணு மாடி .
முதல்ல தலைல.
ஷோக்கெல்லாம் பாக்க கூடாது
செல்போன்ல பாட்டெல்லாம் கேட்க கூடாது.”

“எங்கிட்ட போனே இல்ல…..”

“சிம்மோடு கட்டி விடுவாங்க .
தலை கட்டு. துணில
முதல்ல நடு மண்டை வலிக்காது.
ஈர துணியோட ரெண்டு நாள் இருக்க பழகு .
ரப்பர் செருப்பு தான் போடணும் .
புடவை மேல ஒரு சட்டை போடணும்.”

“சரிங்க சார்.”

“அய்யான்னு கூப்பிடு – சுந்தரி”

“சரிங்க அய்யா.”

“நீ என்ன நடுல …
உம் பேரு விலாசமெல்லாம் எழுதி
அந்த வாட்சமேன்ட்ட கொடு.
என்ன பண்றான் உன் அப்பன்?
சம்பளம் பணத்தை சனிக்கிழமை சாயந்தரம் கொடுப்போம் .
எந்த பொருளையும் நீ இங்கேந்து கொண்டு போக கூடாது.”

“சரிங்க சார்.”

“மணி என்ன ஒம்போது தானே.”

“வாட்ச் இல்ல சார்.”

“சரி சரி ராகு காலத்துக்கு முன்னாடி சேர்ந்துக்கோ.”

“அய்யா. நான் நாளைலேந்து வரேன்யா.”

“ஏன் …நாளைக்கு மட்டும் என்ன முஹூர்த்தம்?”

“இன்னிக்கு பன்னெண்டு மணிக்கு பத்தாம் கிளாஸ் ரிசல்ட்யா.”

மேஸ்திரி எழுந்துவிட்டார்!! .

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *