Blog

  • இத்தாலியும் இன்பத்தமிழும்

    எம்.ஜெயராமசர்மா

    “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” எனப் பாரதியால் வியந்து பார்க்கப் பட்டது தமிழ்மொழியாகும். பாரதி இக்காலக்கவிஞன். அவன் பல மொழிகளை அறிந்தவன். அந்த மொழி அறிவின் துணையோடுதான் இவ்வாறு கூறும் துணிவு அவனுக்கு வந்திருக்கிறது. அவனது கூற்றை மறுத்துக் கூற எவரும் முன்வரவில்லை. எனவே தமிழ் மொழி மற்றைய மொழிகளை விட இனிமையானது என்பதை எண்ணி நாம் பூரிப்படைதல் வேண்டுமல்லவா? இப்படியான எமது இன்பத் தமிழை – பல மேலை நாட்டறிஞர் விருப்புடன் கற்றார்கள் என்பதை அறிகின்றோம். எமது மொழியின் பால் ஆராக் காதல் கொண்டு கற்றதோடு  நின்றுவிடாமல் – கற்றுத்தேர்ந்த கன்னித்தமிழுக்கு நன்றிக்கடனாகப் பலவற்றைச் செய்து தமது  காணிக்கை ஆக்கினார்கள்.அவர்களது இந்தத் தமிழ்த் தொண்டானது யாவராலும் ஏற்றிப் போற்றப் படுகின்றது.இந்த ரீதியில் மேலை நாடான இத்தாலியும் எமது தமிழ் வளர்ச்சிப்பாதையில் தன்னை  இணைத்து கொண்டதை நாம் காணமுடிகிறது.

    கிறீஸ்த்தவ மதப்பணியினை முன்னிட்டு 1710ல் தமிழ் நாட்டுக்கு வந்தவர்தான் பாதிரியார் பெஸ்க்கி அவர்கள். இவர் முப்பது வயதில் தமிழ் நாட்டுக்கு வந்து ஏறக்குறைய முப்பத்து  ஏழு வருடங்கள் மதப்பணியில் ஈடுபட்டார். இவர் தமிழை விருப்புடன் கற்றார். இதனால் இவருக்குத் தமிழில் ஆழ்ந்த புலமை ஏற்பட்டது. இத்தாலி, கிரேக்கம், எபிரேயம், ஆகிய மொழிகளிலும் இவர் பாண்டித்தியம் உடையவராக விளங்கினார். இவரது பன்மொழி ஆற்றல், தமிழ் மொழியில் இவரால் பல படைப்புகளைப் படைப்பதற்கு உறுதுணையாக இருந்தது எனலாம்.  தமிழ் மொழியைப் பொறுத்தவரை பல்வேறு வகைகளில் இவரது தொண்டுகள் அமைந்து காணப்படுகின்றன.

    1. தமிழ் எழுத்துத் திருத்தம்
    2. செய்யுள் நூல்கள் ஆக்கம்
    3. உரைநடை நூல்கள் ஆக்கம்
    4. மொழிபெயர்ப்புப் பணி
    5. இலக்கண நூல்கள் ஆக்கம்
    6. அகராதி நூல்கள் ஆக்கம்

    Veera mamunivarதமிழ் எழுத்துக்களைப் பண்டைக்காலத்தில் எழுதும் பொழுது அவற்றில் ஓசை குறைவாக வரும் இடங்களுக்கு அந்த எழுத்துக்களின் மேல் புள்ளி வைப்பது ஒரு வழக்கமாக இருந்தது. ” க ” என்னும் எழுத்துக்கு மாத்திரை ஒன்று.அதே எழுத்தின்மேல் புள்ளியை வைத்துவிட்டால் அந்த எழுத்து ” க் ” என மாறிவிடும். அதே வேளை உச்சரிப்பிலும் மாற்றம் ஏற்பட்டுவிடும். அது மட்டுமல்ல; ஒரு மாத்திரையாக இருந்தது புள்ளி வைத்த காரணத்தால் அரை மாத்திரை ஆனதோடு, ஒலியளவிலும் குறுகி ஒலிக்கும் நிலைக்கும் வந்துவிட்டதைக் காணமுடிகிறதல்லவா?

    இந்த வகையில்” எ”, ” ஒ” என்னும் இரண்டும் – புள்ளி பெற்றால் அவை குறிலாகவும்    புள்ளி பெறாத நிலையில் அவை நெடிலாகவுமே உச்சரிக்கும் வழக்கம் காணப்பட்டது. நாளடைவில் அவற்றுக்குப் புள்ளியிட்டு எழுதும் வழக்கம் மறந்துபோன நிலையில்   இவற்றினது குறில் – நெடில் வித்தியாசங்களை அடையாளம் காண்பது சிக்கலாகி விட்டது. இந்தச் சிக்கலுக்குத் தக்க பரிகாரம் காட்டினார் இத்தாலியப் பாதிரியார் பெஸ்க்கி அவர்கள். இவரால் அறிமுகப்படுத்தப்பட்டதே இன்று நாம் கைக்கொள்ளும் “ஏ” நாவும் “ஓ” வன்னாவும் ஆகும். அவரால்த்தான் “எ” கீழ் பகுதியில் ஒரு கோடும், “ஒ” வில் ஒரு சுழியும் வந்தது என்பதை எம்மில் பலர் அறியாமலும் இருக்கலாம்தானே! அதுமட்டுமல்ல, கெ, கொ, என்ற எழுத்துக்களில் காணப்படுகின்ற ஒற்றைக் கொம்புகளை மேலே சுழித்து இரட்டைக்கொம்புகளாக்கி கே, கோ, என்ற உச்சரிப்பு வரத்தக்கதாக — இன்றுவரை அந்த அமைப்பிலேயே நாங்கள் பின்பற்றக் கூடியதாக எழுத்துமுறையில் சீர்திருத்தம் செய்தவரும் இத்தாலிப் பாதிரியார் பெஸ்க்கியேதான் என்பதையும் மனதில் கொள்ளுதல் வேண்டும். இவரால் கொண்டுவரப்பட்ட எழுத்துச் சீர்திருத்தத்தை தமிழும் ஏற்றுக்கொண்டது. தமிழரும் ஏற்றுக்கொண்டனர். நல்லதை ஏற்பது தமிழின் பண்பாடு அல்லவா!

    தமிழ் எழுத்தில் திருத்தம் செய்த இப்பெரியார், தமிழ் இலக்கிய வரலாற்றில் – அதாவது காப்பிய இலக்கியத்திலும் தனது ஆற்றலைக் காட்ட விழைந்தார். இதன் பயனாக 3615 விருத்தப்பாக்களைக் கொண்ட “தேம்பாவணி” என்னும் காப்பியம் எழுந்தது. இது மூன்று காண்டங்களையும் முப்பத்தாறு படலங்களையும் கொண்டதாக அமைக்கப்பட்டது. திருக்குறளின் தெள்ளிய நயம், சிந்தாமணியின் செழுஞ்சுவை, கம்பராமாயாணத்தின் கவியின்பம், யாவும் இந்தத் “தேம்பாவணியில்” தேங்கிக் கிடக்கக் கூடியதாய் இந்த இத்தாலியப் பாதிரியார் படைத்தளித்தார். இந்தச் செழுமிய நூல் தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது. அவ்வேளை இவரது தமிழ் ஆற்றலை மெச்சிய புலவர்கள் இவருக்கு “வீரமாமுனிவர்” என்ற பட்டத்தைச் சூட்டி மகிழ்ந்தார்கள் என்று அறியமுடிகிறது. அது தொடக்கம் இவரை யாவரும் “வீரமாமுனிவர்” என்று அழைத்து வரலாயினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    இதைவிட 101 பாக்களால் ஆன “திருக்காவலூர் கலம்பகம்” “கித்தேரி அம்மானை”     “அடைக்கல நாயகி வெண்கலிப்பா’ போன்றவற்றையும் ஆக்கி அளித்தார். தேவாரப்             பதிகம் இத்தாலியம் பெருமகனைக் கொள்ளை கொண்டது. அதன் காரணத்தால் “கரணாம்பரப் பதிகம்” உருவானது. மேலும் இவரால் பல பாடல்கள் இலக்கிய நயம் கனியப் பாடப்பட்டன. “தமிழ்ச் செய்யுள்தொகை” என்ற தொகுப்பின் மூலமாக தமிழில் உள்ள பல நயமான நீதி நூல்களைத் தெரிந்து தொகுத்துக் காட்டினார். இது ஒரு சிறந்த வழிகாட்டலாக அமைகிறது என்பது அறிஞரின் கருத்தாகும்.

    செய்யுள் இயற்றிச் செந்தமிழுக்கு அணிசெய்த இவ்வறிஞர் உரைநடை இலக்கியத்தையும் விட்டு வைக்கவில்லை. முதன் முதலாகப் பாமரரும் விளங்கக்கூடியதாக இலகுவான வசனநடையில் “அங்கத” இலக்கியத்தைத் தோற்றுவித்த பெருமை இவரையே சாரும். “பரமார்த்த குருகதை” என்ற இந்த நூலைப் பண்டிதர்கள்கூட ஏற்றுக் கொண்டார்கள் என்றால் இவரின் ஆற்றலை வியக்காமல் இருக்கமுடியுமா? தாம் சார்ந்த கிறீஸ்த்தவம் சம்பந்தமாகப் பல உரைநடை நூல்களையும், துண்டுப்பிரசுரங்களையும் பரமார்த்த்குரு கதையைத் தொடர்ந்து வெளியிட்டார். இந்த வகையில் வேதியர் ஒழுக்கம், வேதவிளக்கம், பேத மறுத்தல், லூத்தர் இனத்தியல்பு என்பன குறிப்பிடத்தக்கனவாகும்.

    ஆக்க இலக்கியம் படைத்தை இப்பெருமகன் – மொழிபெயர்ப்புத் துறையிலும் முன்னின்று உழைத்தார். அந்தத் துறையில் அவரின் மொழி பெயர்ப்புக்கு இலக்காக அமைந்தது வள்ளுவரின் வான்மறையாகும். மேலை நாட்டவர் பலரும் வள்ளுவத்தின் பால் பெருவிருப்புக் கொண்டிருந்தனர் என்பது பொதுவான உண்மையாகும். குறளில் அமைந்திருந்த அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார். இம்முயற்சியானது குறளின் அருமையையும், பெருமையையும், மேனாட்டாரும் அறிந்து கொள்ள உதவியது எனலாம்.

    வீரமாமுனிவரின் பண்பட்ட உள்ளம் – தமிழ் அன்னைக்கு மேலும் ஏதாவது பயன் உள்ள பணியைச் செய்ய வேண்டுமென விளைந்தது. இதன் பயனாக தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தைப் பிரதிபலிக்கும் வகையில் “தொன்னூல் விளக்கம்” என்னும் இலக்கண நூல் உருப்பெற்றது. இதனைத் தமிழறிஞர் “குட்டித் தொல்காப்பியம்”  என ஏற்றுக் கொண்டாடினர். தமிழிலே உரையாடுவதும், எழுதுவதும், ஒரேமாதிரி இல்லாமல் இருப்பதை வீரமாமுனிவர் நன்கு கவனித்திருக்கின்றார். இதனால் இலக்கியத் தமிழுக்கும் பேச்சுத்தமிழுக்கும் உள்ள வேறுபாட்டை ஆராய்ந்து அவற்றுக்கு எனத் தனித்தனியே செந்தமிழிலக்கணமும், கொடுந்தமிழிலிலக்கணமும் எழுதினார்.

    இலக்கணத்தில் ஆர்வம் கொண்டு உழைத்த இவர் – மொழித் தொடர்புக்கான ஊடகம் என்ற முறையில் அகராதி ஆக்கத்திலும் தனது நுண்மாண் நுழைபுலத்தைக் காட்டினார். இந்தவகையில் தமிழில் இவரால் படைக்கப்பட்டதே “சதுர் அகராதி” ஆகும். பின்னாளில் எழுந்த அகராதிகளுக்கெல்லாம் வழிகாட்டியாகவும் முதல்நூலாகவும் அமைந்தது என்பது மனங்கொள்ளத் தக்கதாகும். இதைவிட “தமிழ் இலத்தீன் அகராதி”  “தமிழ் போர்த்துக்கீசிய அகராதி” ஆகியனவும் இவரது படைப்பாக வெளிவந்தன. 4400 சொற்களைக் கொண்டதாக ‘தமிழ் போர்த்துக்கீசீய’ அகராதி விளங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். தமிழ் லத்தீன் அகராதியில் 900 தமிழ்ச் சொற்களுக்கு இலத்தீன் மொழியில் பொருள் விளக்கம் எழுதப்பட்டது. இம்முயற்சி முதல் நடந்த முயற்சி ஆதலால் பலராலும் பாராட்டுக்கு உரியதாகி நிற்கின்றது எனலாம்.

    எங்கிருந்தோ வந்த ஒருவர் – எமது அன்னை மொழியாம் தமிழின் அருமை பெருமைகளை உணர்ந்து, அதனைப் பற்றோடும் பாசத்தோடும் படித்திருக்கிறார். படித்ததோடு மட்டும் நின்றுவிடவில்லை. தனது ஆராக் காதலால் நாட்டு வேற்றுமையை, கலாசார வேற்றுமையை, மறந்தார். தான் ஒரு இத்தாலியனாக இருந்தும், பெயராலும், பண்பாட்டாலும், தன்னை இன்பத்தமிழனாகவே ஆக்கிக் கொண்டார். இதனால் இத்தாலியும் இன்பத்தமிழும் இணைந்தன. பெஸ்க்கி என்ற பாதிரியார் தைரியநாதராகி வீரமாமுனிவராகி வளர்ந்த வரலாறு தமிழோடு கலந்த வாழ்வாகும். இப்பெருமகனால் மேலை நாடான இத்தாலியும் கீழைநாடான தமிழ் நாடும் இணைந்து கொண்டதை மறக்க முடியுமா அல்லது மறைக்கத்தான் முடியுமா?

    படத்திற்கு நன்றி: http://twicsy.com/i/Vf3EGb

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy
    ”வில்லங் கமாய்ப்போரை விட்டு விலகிடும்
    வில்அங்கம் பூண்ட விஜயனுக்கு, -உள்ளங்கை,
    நெல்லிக் கனியாய், நெடுமாலன் கீதையை,
    சொல்லிக் கொடுக்கும் சகா’’….கிரேசி மோகன்….

    Share
  • திருமால் திருப்புகழ்

    கிரேசி மோகன்

    290413E 026-1024

    images (1)

    Parthasarathy-swamy

    அருணாசலத்தை நினைத்தாலே முக்தி, அதுபோல் திருவல்லிக்கேணியை நினைத்தாலே பக்தி….பார்த்தசாரதி பெருமாளுக்கு முத்தங்கி சேவை, என்று அல்லிக்கேணி பக்தை சொன்னாள்….போக முடியவில்லை அட்லீஸ்ட் நினைத்துப் பார்க்கலாமே நீலமேகன் ஜொலிப்பதை….

    ”கத்துங் கடல்வண்ணன் , கீதை உரைத்தவன்
    பத்தங்கம் பூண்ட பரந்தாமன், -முத்தங்கி
    மேனி அணிந்தவன் மின்னும் திருவல்லிக்
    கேணி நினைப்போர்க்கும் காப்பு’’….கிரேசி மோகன்….

    பத்தங்கம் -பத்து அவதாரம்….

    Share
  • பா.ஜ.க.வின் சாணக்கியம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    images (1)

    மத்தியில் ஆட்சியைப் பிடித்ததோடு மற்ற மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கத் துடித்துக்கொண்டிருக்கிறது பா.ஜ.க. அதிலும் அரியானாவில் தனித்து ஆட்சி அமைத்திருப்பதும் மஹாராஷ்டிராவில் சிறுபான்மை அரசு அமைத்திருப்பதும் பா.ஜ.க.வுக்கு பெரிய தெம்பைக் கொடுத்திருக்கிறது. எப்படியாவது நாடு முழுவதும் ஆட்சியைப் பிடித்துவிடவேண்டும் என்று பல உத்திகளைக் கையாளுகிறது.

    தேசியத் தலைவர்களான காந்திஜியையும் வல்லபாய் பட்டேலையும் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொண்டிருக்கிறது. தேசத் தந்தை காந்திஜி இல்லாமல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் சரித்திரமே இல்லை என்று புரிந்துகொண்டதால் அவரை ஓரம் கட்ட முடியாது. அதனால் அவரை மதிப்பதுபோல் மோதி காந்திஜியின் சிலைகளுக்கு மாலையிடுகிறார்; காந்திஜி பிறந்த நாளை இந்தியாவைத் தூய்மைப்படுத்தும் நாளாகக் கொண்டாடுகிறார். இப்படிக் காந்திஜியைப் போற்றுவது எல்லாம் அரசியல் ஆதாயத்திற்குத்தான். குஜராத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் இரத்தக் கறை தன் கைகளில் இல்லையென்று காட்டும் பாவனைதான். காந்திஜியை இப்படிக் கொண்டாடும்போது ஆர்.எஸ்.எஸ். மீது தனக்குள்ள பாசத்தையும் நன்றிக் கடனையும் விட முடியவில்லை. காந்திஜியைக் கொன்ற ஆ.எஸ்.எஸ்.காரர்களை அரசிலும் கட்சியிலும் முக்கிய பதவிகளில் அமர்த்தியிருக்கிறார்.

    பட்டேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்தவர். சிறுபான்மையினருக்கு நாட்டில் சம உரிமையும் மரியாதையும் கொடுத்தவர். சிறுபான்மையினர் இரண்டாம்தரக் குடிமக்களாகத்தான் இருக்க முடியும் என்று ஆ.எஸ்.எஸ். சொல்கிறது. இதனுடைய சிறுபான்மை வெறுப்பு அரசியல்தான் காந்திஜியின் கொலையில் முடிந்தது. (ஆ.எஸ்.எஸ்ஸுக்கும் காந்திஜியைக் கொன்ற கோட்சேக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதைப் பட்டேலே ஒப்புக்கொள்ளவில்லை. இந்தப் பட்டேலைத் தங்கள் தலைவராகக் கொண்டாடி அவருக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் சிலை எழுப்பப் போகிறார்களாம்.

    நாடு முழுவதையும் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தேசியத் தலைவர்கள் சிலரைத் தங்களுக்குச் சொந்தமாக்க முயலுகிறார்கள்.

    இதற்குத் துணைபோக ஆள் சேர்க்கும்போது கொள்கை கணக்கில் இல்லை. வாக்குகள் வாங்கும் தகுதியே போதும். இதற்கு ஒரு உதாரணம் ரஜினி காந்தைப் பா.ஜ.க. தன் கட்சிக்குள் இழுக்க முயன்றது. ஏராளமான ரசிகர்களைத் தன் கைக்குள் வைத்திருக்கும் இந்த நடிகர் தன்னுடைய அரசியல் கொள்கையென்று இதுவரை எதையும் சொன்னதில்லை.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பா.ஜ.க.விற்கு விலாசமே இல்லாமல் இருந்தது. இரண்டு திராவிடக் கட்சிகளும் மாறி மாறிப் பதவிக்கு வந்து மற்ற எந்தக் கட்சிகளையும் உள்ளே நுழையவிடவில்லை. இப்போது அ.தி.மு.க.வின் நிரந்தர தமிழக ‘மக்களின் முதல்வருக்கு’ (அ.தி.மு.க. தொண்டர்களுக்கு அவரை முதல்வர் பதவியிலிருந்து இறக்கவே பிடிக்கவில்லை. அதனால் அவருக்குப் புதுப் பட்டம் வழங்கியிருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை தமிழக முதல்வர் வேறு; தமிழக மக்கள் முதல்வர் வேறு.) ஏற்பட்டுள்ள இறங்குமுகத்தையும் தி.மு.க. செல்வாக்கு இழந்து நிற்பதையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறார்கள்.

    தமிழுக்குப் புகழ் சேர்த்த திருக்குறள் எழுதிய திருவள்ளுவரைப் பற்றி நன்கு அறிந்த ஒரு பா.ஜ.க. உறுப்பினரைத் தமிழகத்திற்கு அனுப்பப் போகிறார்கள். இவர் திருவள்ளுவருடைய ‘இந்து மத’ச் சிந்தனைகளைப் பற்றிப் பேசுவார் என்று எதிர்பார்க்கலாம். தமிழ் கலாச்சாரத்தின் அடையாளமான திருக்குறள் இந்து மத நூலாக இனங்காட்டப்படலாம். ராஜராஜ சோழன் தமிழர்களின் பெருமையைத் தமிழகத்திற்கு வெளியே எடுத்துச் சென்றவன் என்று திராவிட அரசியல் கட்சிகள் புகழும். இவனுடைய மகன் கங்கைகொண்டசோழபுரத்தைக் கட்டியவன். கங்கையை வென்ற இந்தச் சோழ மன்னனை பா.ஜ.க தனதாக்கிக்கொள்ள முயலுகிறது. இவனுடைய ஆயிரம் ஆண்டு நிறைவை ஆர்.எஸ்.எஸ். கொண்டாடப் போகிறது. சோழ மன்னர்கள் தமிழ் கலாச்சாரத்தை தென்கிழக்காசியாவில் பரப்பினார்கள் என்பது தமிழர்கள் பெருமைப்படும் விஷயம். தாய்லாந்தில் திருவெம்பாவை இன்னமும் பாடப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். கொண்டாட்டத்தில் தமிழ் இலக்கியத்தைவிட இந்து மதம்தான் முன் நிறுத்தப்படும். வேதம் ஓதிய பிராமணர்களுக்கு வரி இல்லாத நிலம் கொடுத்த சோழர்களின் இந்து மத ஆதரவு கொண்டாடப்படும். இப்படித் தமிழ் அடையாளங்கள் எல்லாம் இந்து மத அடையாளங்களாக ஆக்கப்படலாம்.

    இவை பா.ஜ.க.வின் சாணக்கியத்திற்கு சில உதாரணங்கள். இந்தியாவின் பெருமை அதன் பல கலாச்சாரங்கள். ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மை உண்டு; தனி வரலாறு உண்டு. எல்லாவற்றையும் மறைத்து இந்து மதக் கலாச்சாரத்திற்குக் கொண்டுவருவதே பா.ஜ.க.வின் நோக்கம். இதற்கு பல மொழிக் கலாச்சாரங்களின் பெருமையைக் கொண்டாடுவதுபோல் பாவனை செய்கிறது. இந்தத் திட்டத்திற்கு தமிழ்நாட்டுப் பா.ஜ.க. தலைவர்களே உடந்தை. சில தமிழர் கட்சிகள் பா.ஜ.க.வோடு அரசியல் ஆதாயத்திற்காகக் கூட்டுச் சேரலாம். இதில் தமிழ் மக்கள் ஏமாறுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    பி. கு. இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளர் திருமதி. நாகேஸ்வரி அண்ணாமலை அவர்களின் சொந்த கருத்துகளே.  வல்லமை இதழுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    ஆசிரியர்

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    நவம்பர் 17, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு  சமூகசேவகி சீதாலட்சுமி அவர்கள் 

    DSC_0021

     

    சமூகநல சேவகியாக தமிழக அரசில் முப்பத்துநான்கு ஆண்டுகள் பணியாற்றி, துணை இயக்குனர் பதவியில் இருக்கும் பொழுது ஓய்வு பெற்றவர் இவ்வார வல்லமையாளராக வல்லமைக் குழுவினரால் பாராட்டப்படும் திருமதி சீதாலட்சுமி சுப்பிரமணியன் (Seethaalakshmi Subramanian) அவர்கள். அவரை அறிந்தவர்களால் சீதாம்மா என்று அன்புடன் அழைக்கப்படும் எண்பது வயதைக் கடந்த சீதாலட்சுமி அவர்களை வல்லமையாளர் விருதிற்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் அறிவியல் மற்றும் இலக்கிய எழுத்தாளரும் வாசகருமான திரு. ஜெயபாரதன் அவர்கள்.

    முற்போக்கு சிந்தனைகளும் கொள்கைகளும் கொண்ட சீதாம்மா பெண்களின் உரிமைக்காகவும், குழந்தைகள் நலனுக்காகவும் சமூகப்பணியாற்றியவர். இவரது எழுத்துக்களும், பணிகளும் சமுதாய நலனில் அக்கறை கொண்டவையாக இருப்பதுடன் தன்னை சமூகசேவகி என்று அடையாளம் காணுவதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்பவர். சுவாமி சிவானந்த மகரிஷியின் வழிகாட்டுதலில் சமுதாயத்திற்கு சேவை செய்ய முடிவெடுத்த சீதம்மா அவர்கள் கலப்புத்திருமணம், காதல் திருமணம் போன்றவற்றின் நெடுநாள் ஆதரவாளர். குழந்தை கருவில் உருவாவது முதல் ஆறு வயது வரை அதன் வளர்ச்சிகள் பற்றிய சிறப்புக்கல்வியும் பயிற்சியும் பெற்றவரான சீதாம்மா, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சமூகசேவகியாகப் பணியாற்றி இருக்கிறார். நான்கு ஆண்டுகள் ஓர் பன்னாட்டு அமைப்பில் ஆசிய நாட்டுப் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார், சமூகப்பணியின் பொருட்டு உலகவங்கித் திட்டங்களில் பணியாற்றி இருக்கிறார்.

    தமிழின் மீது கொண்ட தணியாத ஆர்வம் காரணமாக, வேலையில் ஊதியமில்லாமல் தற்காலிக விடுப்பெடுத்து அவரது நாற்பதாவது வயதிலும் கல்லூரியில் சேர்ந்து தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றவர். பணியிலும் எழுத்திலும் இவரது கவனம் சமுதாயத்தின் மேல் இருப்பதால் இவருடைய ஆய்வுகள், “பெண்” மற்றும் “சமுதாயம்” இவைகளைப் பற்றியதாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக “பாரதிகண்ட புதுமைப் பெண்” என்று மறைந்த பெண்ணிய எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனால் அன்புடன் அழைக்கப்பட்டவர்.

    இந்தப் புதுமைப் பெண்ணும் பாரதி பிறந்த எட்டயபுரத்தில் பிறந்து, பாரதி படித்த பள்ளி அதே பள்ளியிலும் படித்து, பாரதி வாழ்ந்த வீட்டிலும் சிறிது காலம் வாழ்ந்தவர் என்பது ஒரு வியப்பைத் தரும் ஒற்றுமை. அக்காலச் சூழலில் பாரதி ஊரில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடித்த முதல் பெண்ணும், கல்லூரிப்பட்டம் பெற்ற முதல் பெண்ணும் சீதாம்மாவே.

    எழுதப்படிக்கத் தெரிந்த நாள் முதலாய்ப் பத்திரிகைகள் புத்தகங்கள் படிப்பதுடன் நில்லாமல் அப்பொழுதே கதைகள், கவிதைகள் எழுதியுள்ளார். மரபுக் கவிதை எழுதக் கற்றுக் கொடுத்ததுடன் இவரை பத்திரிகை உலகுக்குச் செல்ல வைத்தவர் திரு. ருத்ர துளஸிதாஸ். மனிதன் தன் எண்ணங்களைப் பதியச் செய்யும் இடமான பத்திரிக்கையும் பதிப்பகமும் இவருக்கு மிகவும் பிடித்தமான உலகம். சீதாம்மா 1958 ல் எழுத ஆரம்பித்தவர், தொடர்ந்து பல வாரப் பத்திரிக்கைகள், மாதப் பத்திரிக்கைகளில் எழுதியுள்ளார். இவரது 63 சிறுகதைகள் வாரப் பத்திரிக்கைகளிலும், மாதப் பத்திரிக்கைகளும் வெளிவந்துள்ளன. இரு புத்தகங்கள் வெளியிட்டதுடன், ஒரு சிறு கதைத் தொகுப்பினை நா. பார்த்தசாரதி உள்ளிட்ட மதுரை எழுத்தாளர்களுடனும் சேர்ந்து வெளியிட்டுள்ளார். ஆனந்த விகடனில் இவரது முத்திரைக்கதை வெளி வந்திருக்கின்றது. சீதாலட்சுமி என்ற பெயரில் பெரும்பாலான கதைகளும், சிறுகதைத் தொகுப்பும், வைதேகி என்ற பெயரில் சில கதைகளும், மேழிச்செல்வி என்ற பெயரில் இவரது கவிதைப் புத்தகமும் வெளிவந்துள்ளன.

    ஒரு வீட்டில் பெண்படித்திருந்தால் அந்த வீடே படிக்க ஆரம்பித்துவிடும். பெண்ணின் முன்னேற்றம் குடும்பத்தை, சமுதாயத்தைக் காக்கும்படியாக இருக்க வேண்டும். அவளையும் அழித்துக் கொண்டு குடும்பக் கோட்பாட்டையும் அழிப்பது பெண் விடுதலையல்ல. ஆணுக்குப் பெண் பினாமியாக இருக்கும் நிலையும் மாற வேண்டும். முதலில் பெண்ணுக்கு எதிரியாகப் பெண் வளர்வதும் சரியல்ல என்பது பெண்களின் உரிமையையும் முன்னேற்றதையும் பற்றி சீதாம்மா கொண்டிருக்கும் கொள்கை.

    இக்கருத்தை விளக்கும் வகையில் பெண்ணை முதன்மைப் படுத்தி சீதாம்மாவே கதை, வசனம் எழுதி, அவரே நாயகியாகவும் நடித்த நாடகம் கலைவாணர் அரங்கத்தில் அரங்கேறிய பொழுது, நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த கலைஞர் கருணாநிதி, “இவர் ஏன் அரசாங்கத்தில் வேலை பார்க்கணும் சினிமாவிற்குச் சென்றிருக்கணும்” என்று வியந்து பாராட்டி இருக்கிறார். தமிழக திரைப்பட வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்திய “பராசக்தி” கதையை நாடகமாகவும், திரைப்படமாகவும் கதை வசனம் எழுதிய கலைஞர் இவர் நடிப்பைப் பார்த்து இவ்வாறு சொன்னது வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் கிடைப்பது போன்ற பெருமை தரும் பாராட்டு.

    drama-5drama-10

    இன்றும் தொடர்ந்து இணையக் குழுமங்களிலும், திண்ணை போன்ற இணையப் பத்திரிக்கைகளிலும் எழுதி வருபவர் சீதாம்மா. மின்தமிழ்க் குழுமத்தில் எட்டயபுர வரலாறு, வரலாற்றுப் பயணம், சீதாம்மாவின் குறிப்பேடு, நினைவலைகள், எண்ணங்கள் ஊர்வலம், முத்தொள்ளாயிரம் – மலரும் நினைவுகள் என்று பல பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

    காலங்கள் மாறுகின்றன
    ரசனைகள் மாறுகின்றன
    மனிதனின் வாழ்வு முறையும் மாறுகின்றன
    மாற்றங்களில் நீச்சல் அடிக்கின்றோம்
    சிலர் ஓட்டத்துடன் நீந்துகின்றனர்
    சிலர் எதிர் நீச்சல் போடுகின்றனர்
    மாறுதல்களைப் பார்த்து எழும் நெஞ்சக் கொதிப்பையும்
    காலம் ஆற்றிவிடும்
    இதுதான் வாழ்க்கை

    என்று வாழ்வின் யதார்த்தத்தை அழகாகக் குறிப்பிடுகிறார் சீதாம்மா.

    என் குணங்களில் “தேடல்“ உணர்வு அதிகம், அத்துடன் சமுதாயம் முதன்மையானது என்று கூறி ஓய்வு பெற்ற பிறகும் சமூக அக்கறையுடன் தனது எழுத்து மூலம் சமூகப்பணியைத் தொடர்ந்து அனைவருக்கும் முன்மாதிரியாக செயல்படும் சீதாம்மாவை வல்லமையாளராக பாராட்டி வாழ்த்துவதில் வல்லமைக் குழுவினர் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 144

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 03: புறஞ்சேரி இறுத்த காதை

    முந்தைய நாளில் போல, மூவரும் இரவில் வழிநடத்தல்

    கோவலனும் கண்ணகியும்
    முந்தைய நாட்களைப் போலவே
    கவுந்தியடிகளுடன்
    அன்றும் பகல் பொழுதை
    அந்தணர் வாழும் அப்பகுதியில் கழித்துவிட்டு
    இரவில் மீண்டும் புறப்பட்டனர்.

    வைகறைப்போதில் மதுரையின் பேரொலி கேட்டு வருத்தம் நீங்குதல்  

    அரிய தொழிலாகிய அழிக்கும் தொழிலை
    மேற்கொண்ட சிவபெருமான் கோயிலிலும்
    பெரும்புகழ் வாய்ந்த
    பாண்டியமன்னனின் அரண்மனையிலும்
                     Paraiyoli
    பல்வகைச் சிறப்புகளையும் உடைய முரசு
    சிறப்பாக ஒலித்தது.

    நான்குமறைகளையும் பயின்ற
    அந்தணர் ஓதுகின்ற ஒலியும்,
    மாதவ முனிவர்கள் ஓதும்
    மந்திரத்தின் ஒலியும்,
    வெற்றியிலிருந்து மீளாத
    அரசனின் சிறப்பினை வாழ்த்திப்பாடும்
    வாள்வீரர் அதிகாலையில் எடுத்து முழக்கிய
    முரசின் ஒலியும்,

    போரில் பகைவரை வென்று
    கவர்ந்து வந்த போர்யானை முழக்கமும்,
    காட்டில் பிடித்துக் கொண்டுவந்த
    காட்டு யானையின் முழக்கமும்,
    லாயங்களில் நிற்கும் குதிரைகளின்
    கனைப்பு ஒலியும்,
    வைகறையில் கிணைப்பறையுடன்
    மள்ளர் கொட்டுகின்ற பறையொலியும்
    அவர்கள் மன்னனை வாழ்த்திப்
    பாடும் பாடல்களின் ஒலியும் ஒலித்து நின்றன.

    மகிழ்ச்சி பொருந்திய மதுரைக்கண்
    ஒலித்த ஒலிகள்
    கருங்கடல் ஒலிகள் போலவே
    ஓங்கி ஒலித்ததால்
    இதைக் கேட்ட அவர்கள்
    தம் வருத்தமெல்லாம் நீங்கி
    வையை ஆற்றை அடைந்தனர்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 135 – 150
    http://ilakkiyam.com/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1135-purancheriyirthakathai–

    படத்துக்கு நன்றி:
    http://www.ourjaffna.com

    Share
  • நாளும் நீ பாடவேண்டும்!

    -எம். ஜெயராம சர்மாமெல்பேண்

    சுந்தரத் தெலுங்கரான
    சுசீலா அம்மாவெங்கள்
    செந்தமிழ் மொழியில்பாடி
    தீஞ்சுவை தந்துநின்றார்!

    நெஞ்சினில் பதியும்வண்ணம்                   suseela
    நிறைவுடன் பாடிநின்று
    விஞ்சியே வியந்துபோற்ற
    விதம்விதம் பாடல்தந்தார்!

    பின்னணி பாடினாலும்
    முன்னணி ஆகிநின்றார்
    எவ்வணி சேர்ந்திட்டாலும்
    இனியதே அளித்துநின்றார்!

    தன்னிலை மாறிடாமல்
    தரமுடன் பாடிநின்றார்
    இன்னமும் பாடுகின்றார்
    இன்னிசை சுசிலாஅம்மா!

    டிஎம்எஸ் ஸோடு சேர்ந்து
    திரையிசை மிளிரச்செய்தார்
    பாமரர் ரசிக்கும்வண்ணம்
    பலபாடல் பாடிநின்றார்!

    சங்கீத ரசிகர்க்கெல்லாம்
    சளைக்காமல் பாடிநின்றார்
    எங்குமே சுசீலாபாடல்
    ஏற்றமாய் ஒலிக்குதிப்போ!

    குரலிலே இனிமைகொண்டுக்
    குயிலெனப் பாடிநின்ற
    திரையிசை திலகம்தன்னைத்
    தினமுமே வாழ்த்திநிற்போம்!

    சுவைபடப் பாடியெம்மை
    சுமையெலாம் போகவைத்த
    திரையிசைக் குயிலேநாளும்
    திறலுடன் வாழ்கவாழ்க!

    திரையிசைத் திலகமாக
    தினமுமே வந்தாயம்மா
    நரைதிரை வந்திடாமல்
    நாளும்நீ பாடவேண்டும்!

    Share
  • ஒதுங்கிய ஊர்மிளை!

    ஒதுங்கிய ஊர்மிளை!
    (இலக்குவன் ஊர்மிளையைப் பிரியும் காட்சி)

     

    நகர் நீங்கு படலத்தில் மூவரும் நகரை நீங்குவதற்கு முன், இலக்குவனனுக்கும் அவன் மனைவி ஊர்மிளைக்கும் இடையே நடந்த உரையாடலாய் அமைந்தது இப்பாடல். கம்பனின் நகர் நீங்கு படலத்தில் இலக்குவன் மற்றும் ஊர்மிளை இருவரும் இத்தருணத்தில் பேசுவதாக எவ்விதக் குறிப்பும் இல்லை. இந்த பாடலின் முதல் அடி கம்பன் கொடுத்ததே. இக்காட்சியின் இடத்தைக் குறிக்கவே கம்பனின் அடியைக் கொண்டு ஆரம்பித்துள்ளேன். கம்பனின் அப்பாடலைத் தொடர்ந்து வரும் காட்சிகளாக என்னுடைய பாடல் வரிகளை எண்ண வேண்டுகிறேன்.

    சீரை சுற்றித் திருமகள் பின்செல
    ஊரும் சென்றது யிர்த்துணை நாயகன்
    மூரி விற்கை இளையவன் மாளிகைச்
    சேர வாயிலாய் ஆயினள் ஊர்மிளை

    தேடி வந்தவன் தேவியின் நெஞ்சடை
    பாட னைத்தையும் பார்வையில் வாங்கினன்
    ‘நாட னைத்தையும் நல்கிடும் அண்ணலின்
    பீட கற்றிடப் பிரிகுவம்’ என்றனன்

    ‘அன்னை என்றனம் அண்ணறன் தாயினை,
    ஒன்றென் றாகிடின் ஒன்றதே இன்னலும்;
    பின்னைச் செல்குவம் பேணுவம் தாயவள்
    என்னை ஈன்பயன் ஈதெனக் காண்குவம்’

    என்றி யம்பிட இயம்புவள் ஊர்மிளை
    ‘நன்று நும்நிலை நாமதற் கொப்பினும்
    ஒன்று வேண்டுவம் உம்மிடம் யாசகம்;
    பின்னர் யாம்வரும் பேறெமக் கருள்கவே’

    ‘மண்ணை நீக்கெனும் மன்னவன் ஆணையால்
    அண்ணல் நீங்கினன் அவ்வழி யாமுளோம்;
    பெண்ணைக் கானகப் பெருவழி சேர்த்திடும்
    எண்ணம் எமக்கிலை; எண்ணுக’ என்றனன்

    ‘அண்ணல் முன்னவர் ஆனதால் செல்கிறீர்!
    மண்பெண் சானகி எம்முறைச் சோதரி;
    பெண்ணென் றானதால் போனதோ சாத்திரம்?
    உண்மை சொல்க’வென் றுரைத்தனள் ஊர்மிளை.

    ‘முன்னை ஓர்நிலை, முற்றிலும் வேறினி;
    அன்னை மூவரை ஆரினிக் காப்பது?
    தன்னைப் பார்த்திடின் தாயினைப் பார்ப்பதார்?’
    என்று நின்றனன் இணைவிழி நீருடன்

    ஓங்கும் உணர்வுகள் ஒதுங்கும் போதினில்
    தாங்கும் தூணெனத் தானெழும் மாமதி;
    வீங்கு கண்களில் விரையும் நீருடன்
    ஏங்கும் ஏந்தலை இளையவள் ஏந்தினள்!

    உங்கள் கண்கள்நீர் உகுத்திடும் போதெலாம்,
    எங்கண் வற்றிடும் காரணம் அறிகிலோம்
    தங்கள் கண்களில் தங்குநீர் எம்மதோ?
    அங்ங ணமென்றிடின் அழுதிடா துளமினி!

    கானில் இருவரைக் காத்திடும் பணியுமக்
    கான தால்விழி அசைத்திடா திருந்தவை
    சேனை யாயல்பகல் சேர்ந்து காத்திட
    வானின் இறைவனை வணங்கி ஏத்துவம்

    அல்லும் பகலுமாய் அடர்ந்தநற் காட்டினுள்
    தொல்லை அறுத்திட தோள்வலி நாயக
    எல்லை யாகியே இருவரைக் காத்திடும்
    இல்லை துயிலினி எமக்குமாம் என்கவே

    நின்று பேசினள் நேரிழை ஊர்மிளை
    ‘நன்று நன்றெ’ன நாயகன் நோக்கவே
    ‘இன்று கண்களில் ஏந்திய உம்முரு
    என்றும் வாழ்ந்திடும் என்விழி’ என்றனள்

    சென்ற நாயகன் சென்றிடும் பாதையை
    ஒன்றி அவளுயிர் ஓடிடும்; ஊனுடல்
    மன்றம் நின்றிட நாயகன் இலக்குவன்
    தன்னைக் கண்களில் தாங்குவள் ஊர்மிளை

    Share
  • நிமிரும்..

    நாகினி

     

    மன்னன் தோள் சேரும்
    மணித்துளி இலாது காலம்
    மலையளவு கடந்தாச்சு
    மணமாலை வேறாச்சு..

    காலமே கதையாகி
    கானலாகிய வாழ்வில்
    கண்ணீரும் வற்றிடலாச்சு
    கவலைகள் விடாது சுற்றிடலாச்சு..

    வரும் வரும் நிம்மதியென்று
    தினம் தினம் எட்டுவைக்கும்
    மனம் மனம் நிமிரும் வரம்
    தரும் தரும் புதிர் காலம்..!!

    .. நாகினி

    Share
  • வால்மீனில் முதன்முதல் இறங்கிய ஈஸா ஐரோப்பிய விண்ணுளவி ரோஸெட்டாவின் தளவுளவி

    — சி. ஜெயபாரதன்.

    first-comet-image-from-philae

     

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=TwkliXod6Ns

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=nrwelZ7E4Y0

    http://www.esa.int/spaceinvideos/Videos/2014/11/Philae_landing_status_update_and_latest_science

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=E0tLcrty-PY

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=7Xm6y0LzlLo

    http://www.bbc.com/news/science-environment-30058176

    +++++++++++++++++++++++

    கியூப்பர் முகில் கூண்டைத் தாண்டி,
    பரிதி ஈர்ப்பு மண்டத்தில்
    திரிந்து வருபவை
    வால்மீன்கள்!
    வியாழக்கோள் வலையில்
    சிக்கிய
    வால்மீன் மீது கவண் வீசிக்,
    காயப் படுத்தி
    ஆய்வுகள் புரிந்தார் !
    வால் நெடுவே வெளியேறும்,
    வாயுத் தூள்களை
    வடிகட்டியில் பிடித்து
    வையகத்தில் சோதித்தார் !
    அண்ட கோள்களின்
    ஆதித் தோற்றம் அறியவும்,
    உயிரின மூலத்தை உளவிடவும்
    ஏவிய விண்சிமிழ்
    பூமிக்கு மீண்டது !
    வால்மீனில் இறங்கிக்
    கால் வைத்த தளவுளவி
    முதன்முதல் சேதி  அனுப்பி
    ஓய்வில் உள்ளது !

    +++++++++++++++

    “எமது பெரு வேட்கை ரோஸெட்டா குறிப்பணித் திட்டம் விண்வெளித் தேடல் வரலாற்று மைல் கல்லாய் ஓரிடத்தைப் பெற்றுள்ளது.  ஓடும் வால்மீனை முதன்முதல் நெருங்கிச் சுற்றியது மட்டுமின்றி, முதன்முதல் தளவுளவி ஒன்றை வால்மீனில் இறக்கிச் சோதனை செய்தது.  ரோஸெட்டா புவிக்கோளின் தோற்ற மூலத்தை அறியக் கதவைத் திறந்துள்ளது மகத்தான ஒரு சாதனை.”

    ஜான் ஜேக்கஸ் டோர்டயின்   [ESA Director General]  [November 12, 2014]

    “விண்வெளியில் பத்தாண்டுகள் [2004 – 2014] தொடர்ந்து பயணம் செய்து, ரோஸெட்டா சூரிய குடும்பத் தோற்றத்தின் பூர்வீக எச்சங்களில் ஒன்றான வால்மீனில் தளவுளவி ஒன்றை இறக்கி சிறந்த முறையில் விஞ்ஞானச் சோதனை செய்து வருகிறது.”

    அல்வாரோ கிமென்னிஷ்  [ESA  Director of Scince & Robotic Exploration]  [November 12, 2014]

    “வால்மீன்களைப் பற்றி ஏன் அறிந்து கொள்ள வேண்டும்?  வால்மீன்களை விண் வெளியில் ஏன் உளவு செய்ய வேண்டும்?  காரணம் இதுதான், பரிதி மண்டலத்தில் திரிந்து வரும் வால்மீன்களே பிரபஞ்சத்தின் பூர்வீகக் கோள்கள்!  அவற்றில் காணப்படும் பிண்டப் பொருட்களில்தான் அனைத்து அண்ட கோள்களும், பரிதியும் ஆக்கப் பட்டிருப்ப தாகக் கருதப் படுகிறது!  நாசாவின் ஆழ்மோதல் திட்டம் [Deep Impact] உயிரினத் தோற்றத்தின் ஆரம்பத் தோற்றத்தை ஆராய உதவும்.  இதுவரைச் செய்யாத, துணிச்சலான, புத்துணர்வு மூட்டும், ஒரு பரபரப்பான முதல் விஞ்ஞான முயற்சி அது!”

    ஆண்டிரூஸ் டான்ஸ்லர் [Acting Diretor, Solar System Division, NASA]

    Rosetta drops the Lander

    Mothership Rosetta  Drops Lander on the Comet

    முதன்முதல் வால்மீனில் இறங்கிய ஐரோப்பிய விண்கப்பல் தளவுளவி

    2014 நவம்பர் 12 ஆம் தேதி விண்வெளித் தேடல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் !  அன்றுதான் ஈசாவின் ரோஸெட்டா விண்கப்பல் [ESA -European Space Agency Spaceship Rosetta] முதன்முதல் ஒரு வால்மீனை நெருங்கிச் சுற்றி அதன் மீது தளவுளவி [Philae Lander] ஒன்றை இறக்கிச் சோதித்துத் தகவல் அனுப்பியது.  1969  ஆண்டில் முதன்முதல் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் தடம் வைத்தது போன்ற ஓர் மகத்தான சாதனையாக இந்நிகழ்ச்சி கருதப் படுகிறது.  2004 ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி ஏவப்பட்ட ஈசாவின் ரோஸெட்டா விண்கப்பல் 10 ஆண்டுகள் பயணம் செய்து,  6.4 பில்லியன் கி.மீ. தூரம் [3.8 பில்லியன் மைல்] கடந்து சென்று ஒரு வால்மீனை [Comet : 67P /Churyumov-Gerasimenko] 2014 ஆகஸ் 6 ஆம் தேதி நெருங்கி வட்டமிட்டு, துல்லிய மாகத் தளத்தில் இறங்கியது, சவாலான ஒருபெரும் விண்வெளிச் சாதனையாகும்.   ரோஸெட்டா விண்கப்பல் வால்மீனுக்கு 30 கி.மீ. தூரத்தில் சுற்றி, 34,000 mph [55,000 kmh]  வேகத்தில் வால்மீனைப் பின்பற்றி வந்தது.  சூரியன் அருகில் சென்று வால்மீன் சுற்றும் போது, ரோஸெட்டா விண்கப்பலும், ஃபிலேயும் பரிதியைச் சுற்றித் தகவல் அனுப்பும்.

    வரலாற்று முக்கிய அந்த வால்மீன் அப்போது பூமியிலிருந்து 510 மில்லியன் கி.மீ. [300 மில்லிய மைல்] தூரத்தில் சூரியனை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.   வால்மீனில் இறங்கிய ஃபிலே தளவுளதி தரையில் அமர்ந்ததும், அது தாய்க்கப்பல் ரோஸெட்டா மூலம் தகவல் தெரிவித்து வால்மீனின் படங்களையும் அனுப்பியது.   மூன்று கால் உடைய ஃபிலே தளவுளவி இறங்கிய வேகம் : விநாடிக்கு சுமார் 1 மீடர்.  “ரோஸெட்டா, ஃபிலேயின் தொடர்ந்த தொலைத் தொடர்வு இயக்கக் கட்டுப்பாடுகள் மிகச் சவாலான பொறியியல் சாதனையாகும்.   அதற்கு நுணுக்கமான பொறியியல் ஆக்க பூர்வத் திறனும், விண்வெளிப் பயணக் கட்டுப்பாடு அனுபவமும் தேவை,” என்று ஈசா ஆளுநர் [ESA Director of Human Spaceflight Operations] கூறினார்.  தற்போதைய வால்மீன் வேகம் : 18 kms [3600 mph].  பின்னால் சூரியனை நெருங்கும் போது வால்மீன் வேகம் பன்மடங்கு மிகையாகும்.  ரோஸெட்டா வால்மீன் குறிப்பணித்  திட்ட நிதி ஒதுக்கு : 1.6 பில்லியன் டாலர் [1.3 பில்லியன் ஈரோ]

    Philae touchdown -2

    வால்மீனில் இறங்கிய தளவுளவி  ஃபிலே

    தளவுளவி இறங்கிய முதல் மூன்று நாட்கள், மின்கலன் ஆற்றலில் இயங்கி வால்மீன் பற்றித் தகவல் அனுப்பியது.  மின்கலன் ஆற்றல் 60 மணி நேரம்தான் நீடிக்கும்.  வால்மீனின் ஒருநாள் பொழுது 12 மணி நேரமே ! துரதிர்ஷ்ட்மாக தளவுளவி தவறிப் போய் ஓர் இடுக்குக் குழியில் இறங்கி விட்டதால், திட்டப்படி எதிர்பார்த்த சூரிய ஆற்றல் மின்சக்தி சேமிக்க இயலவில்லை.  மூன்று நாட்கள் கழித்து தளவுளவி ஓய்ந்து போய் உறங்கி விட்டது.  சூரியனை    வேகத்தில் நெருங்கும் வால்மீனில் சூரியக் கதிர்கள் மிகையாக விழும் போது, மீண்டும் தளவுளவி இயங்கிடலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  ஃபிலே தளவுளவி 2015 மார்ச் மாதம் வரை பணிசெய்யும் என்று திட்டமிடப் பட்டது.  சூரியக் கதிர்கள் பட்டு மீண்டும் தளவுளவி எப்போது விழித்து வேலை செய்யும் என்பது ஊகிக்க முடியவில்லை.  அத்துடன் வால்மீன் இன்னும் 13 மாதங்களில் சூரியனை நெருங்கிச் சுற்றும் போது நேரும் மகத்தான நிகழ்ச்சிகளை விண்கப்பல் ரோஸெட்டாவும், தளவுளவி ஃபிலேயும் விளக்கமாகத் தகவல் அனுப்பப் போகின்றன.  அப்போது [டிசம்பர் 6, 2014] ரோஸெட்டா விண்கப்பல் வால்மீனை 20 கி.மீ. [12 மைல்] தூர வட்டவீதியில் சுற்றக் கட்டுப் படுத்தப் படும்.  மேலும் ரோஸெட்டா இயக்கமாகி வால்மீனை 8 கி.மீ. [5 மைல்] தூரத்தில் நெருங்கிச் சுற்ற வைத்து ஆய்வுகள் நடத்தப்படும். அச்சமயத்தில் [2015 ஆகஸ்டு 13] வால்மீன் பூமிக்கும் செவ்வாய்க் கோளுக்கும் இடையே பூமியிலிருந்து 185 மில்லியன் கி.மீ. [சுமார் 110 மில்லியன் மைல் ] தூரத்தில் பயணம் செய்யும்.

    ஈசாவின் ரோஸெட்டா வால்மீன் குறிப்பணி, நமது சூரிய மண்டலத் தோற்றத்தின் சில புதிர்களை விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  4.5 பில்லியன் ஆண்டுக்கு முன்பு தோன்றிய சூரிய குடும்பத்தின் பூர்வீக ஆரம்ப நிலை எப்படி இருந்தது, அதனில் எச்சப் படைப்புகளான வால்மீன்களின் பங்குகள் என்ன, வால்மீனின் உள்ளமைப்பு யாது போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கலாம் என்று வானியல் விஞ்ஞானிகள் கருதுகிறார்.

    Mothership & Lander

    2014 ஆண்டில் செவ்வாய்க் கோளுக்குப் போகும் முதற் பயண ஆரம்பத்துக்கு முன்பு அணுசக்தி ஆற்றலில் உந்தி மூவர் செல்லும் விண்வெளிக் கப்பல் “ஓரியான்” [Orion Spacecraft] வெண்ணிலவைத் தாண்டி 7 முதல் 14 நாட்கள் வரை ஒரு விண்கல்லைச் [Asteroid] சுற்றி வந்து ராயப் போவதாகத் திட்டமிடப் பட்டுள்ளது.  விண்கப்பல் விண்கல்லைச் சுற்றி வரும் போது விண்விமானிகள் விண்கல்லில் இறங்கி முதன் முதல் தடம் வைத்து மண் தளத்தில் ஆய்வுகள் செய்வார்கள்.  அதுவே விண்வெளி வரலாற்றில் நிலவுக்கு அப்பால் மனிதர் பயணம் செய்து முதன்முதலில் ஆராய்ச்சிகள் நடத்திய மாபெரும் சாதனையாகக் கருதப்படும்.”

    டாக்டர் பால் பெல், வானியல் நிபுணர் [Dr. Paul Abell, NASA Jonson Space Center, Houston]

    “டெம்பெல் வால்மீனுக்குக் கிடைத்த அடி ஒரு பேரடி மட்டுமன்று!  நாங்கள் நெடுங்காலமாய் வாதித்து வரும் ஆய்வுரைகளுக்கு ஓர் அரிய சோதனையாகவும் ஆயிற்று!  வால்மீன்கள் வெறும் குப்பைப் புழுதி கொண்டவை அல்ல!  அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் பனித்தளக் கட்டிகளின் களஞ்சியமும் அல்ல! கரித் தூள்கள் நிரம்பிய மேற்தட்டுக்கு அடியே துளைகளுள்ள ஆர்கானிக்ஸ் பிண்டமும் (Porous Organic Mass), உறைந்த பனித்தளமும் அமைந்திருப்பதை வால்மீனின் ஆழ்குழிச் சோதனை நிரூபித்துக் காட்டும்.”

    டாக்டர் சந்திரா விக்கிரமசிங், பேராசிரியர் கார்டி·ப் பல்கலைக் கழகம், இங்கிலாந்து

    Rosetta Mission

    ரோஸெட்டா விண்ணுளவிப் பயணத் திட்டத்தின் குறிக்கோள் என்ன?

    ஈசாவின் விண்ணுளவி ரோஸெட்டா பத்தாண்டுகள் பயணம் செய்து விண்வெளியில் பரிதியை நோக்கி விரையும் ஒரு வால்மீனைச் சுற்றி விந்தையாக முதன்முதல் தள உளவி ஒன்றை இறக்கி உட்கார வைத்து, ஆய்வுத் தகவலைப் பூமிக்கு அனுப்பப் போகிறது!  அந்த வெகு நீண்ட பயணத்துக்கு [1000 மில்லியன் கி.மீ] விண்ணுளவி மூன்று முறைப் பூகோளத்தையும், ஒருமுறைச் செவ்வாய்க் கோளையும், ஓரிரு முறை விண்கற்களையும் சுற்றிப் ஈர்ப்பியக்கக் கவண் சுழற்சியால் [Gravity Assist Swing] தனது சுற்றுப் பாதையின் நீள்வட்டத்தையும் வேகத்தையும் [Elliptical Path & Velocity] மிகையாக்கும். பரிதியை நோக்கிச் செல்லும் விண்ணுளவி வால்மீனின் ஈர்ப்பு மண்டலத்தில் பாய்ந்து பற்றிக் கொண்டு முதன்முதல் சாதனையாக அதைச் சுற்றி வரும்!  வால்மீனைச் சுற்றி வந்து தன் முதுகில் தாங்கிச் செல்லும் தள உளவியை வால்மீனில் இறக்கி விடும். தாய்க் கப்பல் எனப்படும் விண்ணுளவித் தளவுளவியைக் கண்காணிப்பதுடன் தளத்தில் நிகழும் ஆய்வுகளை ரேடியோ அலைகளில் பூமிக்குத் தொடர்ந்து அனுப்பி வைக்கும்!

    வால்மீனைச் சுற்றி வந்து தன் முதுகில் தாங்கிச் செல்லும் தள உளவியை வால்மீனில் இறக்கி விடும். தாய்க் கப்பல் எனப்படும் விண்ணுளவித் தள உளவியைக் கண்காணிப்ப துடன் தளத்தில் நிகழும் ஆய்வுகளை ரேடியோ அலைகளில் பூமிக்குத் தொடர்ந்து அனுப்பி வைக்கும்!  ரோஸெட்டா விண்ணுளவியின் உன்னத விஞ்ஞான ஆய்வுக் கருவிகள் வால்மீன் மூலத் தோற்றத்தை நேராக அறிய முற்படும்.  விண்கற்களுக்கும் [Asteroids] வால்மீன்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை நுட்பமாய்க் கண்டறியும்.  பரிதி மண்டலத் தோற்றத்திற்கு வால்மீன்களின் பங்களிப்புகள் உள்ளனவா?  மேற்கூறிய வினாக்களுக்கு விடை அளிக்கும் தகுதி பெற்ற கீழ்க்காணும் பொறியியற் கருவிகள் ரோஸெட்டாவில் அமைக்கப் பட்டுள்ளன.

    Philae Lander parts

    ரோஸெட்டா விண்ணுளவியில் உள்ள கருவிகள்

    ரோஸெட்டா விண்ணுளவித் திட்டத்தின் தொகைநிதி மதிப்பீடு: 1000 மில்லியன் ஈரோ [டாலர் நாணய மதிப்பு: 1.325 பில்லியன் டாலர்]  ரோஸெட்டா விண்ணுளவித் திட்டத்தைச் சிந்தித்து உருவாக்கிக் கண்காணித்து வரும் ஈரோப்பியன் விண்வெளி ணையகத்தின் [European Space Agency (ESA)] கூட்டியக்க உறுப்பினர்கள்: ஜெர்மெனி, பிரான்ஸ், பிரிட்டன், ஃபின்லாந்து, ஸ்டிரியா, அயர்லாந்து, இத்தாலி, ஹங்கேரி ஆகியவை.  அந்த கூட்டியக்கம் ஜெர்மெனி தலைமையில் ஜெர்மென் வாயுவெளி ஆய்வுக் கூடத்தின் [German Aerospace Research Institute (DLR)] கீழாக விண்வெளி ஆய்வுகளை நடத்தி வருகிறது.

    ரோஸெட்டா விண்கப்பலின் பரிமாணம் உளவிகளுடன் [3 மீடர் x 2 மீடர் x 2 மீடர்] நீளம், அலகம், உயரம் உள்ளது. ரோஸெட்டாவின் எடை: 100 கிலோ கிராம்.  மின்சக்தி தயாரிக்க இரண்டு 14 மீடர் பரிதித் தட்டுகள் [Solar Panels] விண்கப்பலின் இறக்கைகள் போல் பொருத்தப் பட்டிருக்கின்றன.  பரிதித் தட்டுகளின் மொத்தப் பரப்பு 64 சதுர மீடர். விண்ணுளவியின் ஒரு பக்கத்தில் 2.2 மீடர் விட்டமுள்ள ரேடியோ அலைத் தொலைத் தொடர்புத் தட்டு பிணைக்கப் பட்டுள்ளது. அடுத்த பக்கத்தில் தள உளவி பொருத்தப் பட்டிருக்கிறது.

    ESA Control Room -2

     

    விண்ணுளவியின் 11 விஞ்ஞான ஆய்வுக் கருவிகள்:

    1.  “அலிஸ்” புறவூதா படமெடுப்பு ஒளிப்பட்டை மானி [ALlCE: Ultraviolet Imaging Spectrameter]

    2. “கான்ஸெர்ட்” வால்மீன் உட்கரு உளவி [CONSERT: Comet Nucleus Sounding]

    3. “காஸிமா” வால்மீன் அடுத்த நிலை அயான் நிறை அளவி [COSIMA: Cometary Secondary Ion Mass Analyser]

    4. “ஜியாடியா” தூள் மோதல் ஆய்வு, தூள் நிரப்பி [GIADIA: Grain Impact Analyser & Dust Accumulator]

    5. “மைடாஸ்” நுட்பப் படமெடுப்பு ஆய்வு ஏற்பாடு [MIDAS: Micro-Imaging Analysing System]

    6. “மைக்ரோ” ரோஸெட்டா விண்சுற்றியின் நுட்பலைக் கருவி [MICRO: Microwave Instrument for Rosetta Orbiter]

    7. “ஓஸிரிஸ்” ரோஸெட்டா விண்சுற்றிப் படமெடுப்பு ஏற்பாடு [OSIRIS: Rosetta Orbiter Imaging System]

    ESA Control Room

    8. “ரோஸினா” அயான், நடுநிலை ஆய்வு செய்யும் ரோஸெட்டா விண்சுற்றி ஒளிப்பட்டை மானி [ROSINA: Rosetta Orbiter Spectrometer for Ion & Neutral Analysis]

    9. “ஆர்பிஸி” ரோஸெட்டா ஒளிப்பிழம்பு ஆய்வுக்குழுக் கருவி [RPC: Rosetta Plasma Consortium]

    10 “ஆரெஸை” வானலை விஞ்ஞான உளவுக் கருவி [RSI: Radio Science Investigation]

    11 “விர்டிஸ்” புலப்படும், உட்சிவப்புத் தள ஆய்வு ஒளிப்பட்டை மானி [VIRTIS: Visible & Infrared Mapping Spectrometer]

    வால்மீனில் கால்வைக்கும் தள உளவியின் கருவிகள்:

    தள உளவியில் உள்ள 9 விஞ்ஞானக் கருவிகள்:

    1. “அபெக்ஸ்” ஆல்ஃபா புரோட்டான் எக்ஸ்-ரே ஒளிப்பட்டை மானி [APXS: Alpha Proton X-Ray Spectrometer]

    2. “சிவா/ரோலிஸ்” ரோஸெட்டா தள உளவி படமெடுப்பு ஏற்பாடு [CIVA/ROLIS: Rosetta Lander Imaging System]

    3. “கான்ஸெர்ட்” வால்மீன் உட்கரு உளவி [CONSERT: Comet Nucleus Sounding]

    Philae Lander 

    4. “கோஸாக்” வால்மீன் மாதிரி உட்பொருள் ஆயும் சோதனை [COSAC: Cometary Sampling & Composition Experiment]

    5. “மாடுலஸ் டாலமி” வெளியேறும் வாயு உளவி [MODULUS PTOLEMY: Evolved Gas Analyser]

    6. “முபஸ்” மேற்தளக் கீழ்த்தள பல்வினை உணர்ச்சிக் கருவி [MUPUS: Multi-Purpose Sensor for Surface & Subsurface Science]

    7. “ரோமாப்” ரோலண்டு காந்தவியல், ஒளிப்பிழம்பு மானி [ROMAP: RoLand Magentometer & Plasma Monitor]

    8. “லெஸ்டி2” மாதிரி பரிமாறும் கருவி [SD2: Sample & Distribution Device]

    9. “ஸெஸமி” தள மின்னொலிச் சோதனை மானி, தூசி மோதல் நிரப்பி [SESAME: Surface Electrical & Acoustic Monitoring Experiment, Dust Impact Collector]

    விண்ணுளவி கட்டுப்பாடு நிலையம்: ஈரோப்பியன் விண்வெளி இயக்க மையம் [European Space Operation Centre (ESOC), Darmstadt, Germany]  கண்காணிப்பு நிலையம்: நியூ நார்ஸியா, பெர்த், ஸ்திரேலியா [New Norcia, Near Perth, Australia]

    Philae Lander components

    (தொடரும்)

    **********************
    தகவல்:

    1. Deep Impact Prepares for Comet Crash By: Declan McCullagh [www.news.com] July 2, 2005
    2. NASA Probe Could Reveal Comet Life, By UK Team Cardiff University, U.K. [July 5, 2005]
    3. Photo Credits NASA, JPL-Caltech, California [July 5, 2005] & Toronto Star Daily [July 5, 2005]
    4. Watch Deep Impact’s Comet Collision Via Webcast By: Tariq Malik [www.space.com July 1, 2005]
    5. NASA to Study Comet Collision www.PhysOrg.com [2005]
    6. The Stardust Mission, Silicone Chip Online-NASA Mission, To Catch a Comet [Jan 15, 2006] [www.siliconchip.com.au/cms]
    7. Stardust: How to Bring Home a Comet [http://stardust.jpl.nasa.gov/science/feature002.html] [Jan 15, 2006]
    8. Public to Look for Dust Grains in Stardust Detectors By: Robert Sanders [Jan 10, 2006] [www.berkeley.edu/news/media/releases/2006/01/10_dust.shtml]
    9. Stardust Comet Sample Program [www.astronautix.com/craft/stardust.htm]
    10 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40507071&format=html [Deep Impact: 1]
    11 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40507151&format=html [Deep Impact: 1]
    12 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40601202&format=html [Stardust Probe: 1]
    13 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40601272&format=html [Stardust Probe: 2]
    14 BBC News: Space Probe Performs Mars Fly-By [Feb 25, 2007]
    15 European Space Agency (ESA) Science & Technology -Rosetta Fact Sheet [Feb 19, 2007]
    16 Europe’s Space Probe Swings By Mars [Feb 25, 2007]
    17 Europe Comet Probe Makes Key Mars Flyby By: David McHugh (Associated Press) [Feb 24, 2007]
    18 Spaceflight Now: Comet-bound Probe Enjoys Close Encounter with Mars By: Stephan Clark [Feb 25, 2007].
    19 SkyNews: Was Hyakutake the Comet of the Century [July 1996] &
    SkyNews: Comet Hale-Bopp [April 1997]
    20 Sky & Telescope: Brightest Comet in 41 Years [April 2007]
    21 BBC News Houston: Asteroid Mission Concept Unveiled By: Paul Rincon [March 14, 2007]

    22. http://www.spacedaily.com/reports/Touchdown!_Rosettas_Philae_probe_lands_on_comet_999.html  [November 12, 2014]

    23.  http://www.spacedaily.com/reports/A_close_up_with_a_comet_999.html  [November 12, 2014]

    24. http://www.spacedaily.com/reports/European_probe_lands_on_comet_fails_to_anchor_999.html  [November 12, 2014]

    25.  http://www.bbc.com/news/science-environment-30034060  [November 13, 2014]

    26.  http://www.spacedaily.com/reports/Philae_to_attempt_comet_drill_mission_scientist_999.html  [November 14, 2014]

    27.  http://www.bbc.com/news/science-environment-30058176  [November 15, 2014]

    28.  http://en.wikipedia.org/wiki/Rosetta_(spacecraft)  [November 15, 2014]

    29.  http://fr.wikipedia.org/wiki/Rosetta_(sonde_spatiale)  [?November 15, 2014]

    30.  http://sci.esa.int/rosetta/14615-comet-67p/  [November 16, 2014]

    ********************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  (November 16, 2014)]

    Share
  • வடக்கு வளர்கிறது! தெற்கு தேய்கிறது! அணுமின் உலை எதிர்ப்பாளிகள்! அணு உலை அபாய எதிர்பார்ப்புகள்!

    — சி. ஜெயபாரதன்.

     

    picture-1

     

    Share