ஒதுங்கிய ஊர்மிளை!
ஒதுங்கிய ஊர்மிளை!
(இலக்குவன் ஊர்மிளையைப் பிரியும் காட்சி)
நகர் நீங்கு படலத்தில் மூவரும் நகரை நீங்குவதற்கு முன், இலக்குவனனுக்கும் அவன் மனைவி ஊர்மிளைக்கும் இடையே நடந்த உரையாடலாய் அமைந்தது இப்பாடல். கம்பனின் நகர் நீங்கு படலத்தில் இலக்குவன் மற்றும் ஊர்மிளை இருவரும் இத்தருணத்தில் பேசுவதாக எவ்விதக் குறிப்பும் இல்லை. இந்த பாடலின் முதல் அடி கம்பன் கொடுத்ததே. இக்காட்சியின் இடத்தைக் குறிக்கவே கம்பனின் அடியைக் கொண்டு ஆரம்பித்துள்ளேன். கம்பனின் அப்பாடலைத் தொடர்ந்து வரும் காட்சிகளாக என்னுடைய பாடல் வரிகளை எண்ண வேண்டுகிறேன்.
சீரை சுற்றித் திருமகள் பின்செல
ஊரும் சென்றது யிர்த்துணை நாயகன்
மூரி விற்கை இளையவன் மாளிகைச்
சேர வாயிலாய் ஆயினள் ஊர்மிளை
தேடி வந்தவன் தேவியின் நெஞ்சடை
பாட னைத்தையும் பார்வையில் வாங்கினன்
‘நாட னைத்தையும் நல்கிடும் அண்ணலின்
பீட கற்றிடப் பிரிகுவம்’ என்றனன்
‘அன்னை என்றனம் அண்ணறன் தாயினை,
ஒன்றென் றாகிடின் ஒன்றதே இன்னலும்;
பின்னைச் செல்குவம் பேணுவம் தாயவள்
என்னை ஈன்பயன் ஈதெனக் காண்குவம்’
என்றி யம்பிட இயம்புவள் ஊர்மிளை
‘நன்று நும்நிலை நாமதற் கொப்பினும்
ஒன்று வேண்டுவம் உம்மிடம் யாசகம்;
பின்னர் யாம்வரும் பேறெமக் கருள்கவே’
‘மண்ணை நீக்கெனும் மன்னவன் ஆணையால்
அண்ணல் நீங்கினன் அவ்வழி யாமுளோம்;
பெண்ணைக் கானகப் பெருவழி சேர்த்திடும்
எண்ணம் எமக்கிலை; எண்ணுக’ என்றனன்
‘அண்ணல் முன்னவர் ஆனதால் செல்கிறீர்!
மண்பெண் சானகி எம்முறைச் சோதரி;
பெண்ணென் றானதால் போனதோ சாத்திரம்?
உண்மை சொல்க’வென் றுரைத்தனள் ஊர்மிளை.
‘முன்னை ஓர்நிலை, முற்றிலும் வேறினி;
அன்னை மூவரை ஆரினிக் காப்பது?
தன்னைப் பார்த்திடின் தாயினைப் பார்ப்பதார்?’
என்று நின்றனன் இணைவிழி நீருடன்
ஓங்கும் உணர்வுகள் ஒதுங்கும் போதினில்
தாங்கும் தூணெனத் தானெழும் மாமதி;
வீங்கு கண்களில் விரையும் நீருடன்
ஏங்கும் ஏந்தலை இளையவள் ஏந்தினள்!
உங்கள் கண்கள்நீர் உகுத்திடும் போதெலாம்,
எங்கண் வற்றிடும் காரணம் அறிகிலோம்
தங்கள் கண்களில் தங்குநீர் எம்மதோ?
அங்ங ணமென்றிடின் அழுதிடா துளமினி!
கானில் இருவரைக் காத்திடும் பணியுமக்
கான தால்விழி அசைத்திடா திருந்தவை
சேனை யாயல்பகல் சேர்ந்து காத்திட
வானின் இறைவனை வணங்கி ஏத்துவம்
அல்லும் பகலுமாய் அடர்ந்தநற் காட்டினுள்
தொல்லை அறுத்திட தோள்வலி நாயக
எல்லை யாகியே இருவரைக் காத்திடும்
இல்லை துயிலினி எமக்குமாம் என்கவே
நின்று பேசினள் நேரிழை ஊர்மிளை
‘நன்று நன்றெ’ன நாயகன் நோக்கவே
‘இன்று கண்களில் ஏந்திய உம்முரு
என்றும் வாழ்ந்திடும் என்விழி’ என்றனள்
சென்ற நாயகன் சென்றிடும் பாதையை
ஒன்றி அவளுயிர் ஓடிடும்; ஊனுடல்
மன்றம் நின்றிட நாயகன் இலக்குவன்
தன்னைக் கண்களில் தாங்குவள் ஊர்மிளை