நாளும் நீ பாடவேண்டும்!

-எம். ஜெயராம சர்மாமெல்பேண்

சுந்தரத் தெலுங்கரான
சுசீலா அம்மாவெங்கள்
செந்தமிழ் மொழியில்பாடி
தீஞ்சுவை தந்துநின்றார்!

நெஞ்சினில் பதியும்வண்ணம்                   suseela
நிறைவுடன் பாடிநின்று
விஞ்சியே வியந்துபோற்ற
விதம்விதம் பாடல்தந்தார்!

பின்னணி பாடினாலும்
முன்னணி ஆகிநின்றார்
எவ்வணி சேர்ந்திட்டாலும்
இனியதே அளித்துநின்றார்!

தன்னிலை மாறிடாமல்
தரமுடன் பாடிநின்றார்
இன்னமும் பாடுகின்றார்
இன்னிசை சுசிலாஅம்மா!

டிஎம்எஸ் ஸோடு சேர்ந்து
திரையிசை மிளிரச்செய்தார்
பாமரர் ரசிக்கும்வண்ணம்
பலபாடல் பாடிநின்றார்!

சங்கீத ரசிகர்க்கெல்லாம்
சளைக்காமல் பாடிநின்றார்
எங்குமே சுசீலாபாடல்
ஏற்றமாய் ஒலிக்குதிப்போ!

குரலிலே இனிமைகொண்டுக்
குயிலெனப் பாடிநின்ற
திரையிசை திலகம்தன்னைத்
தினமுமே வாழ்த்திநிற்போம்!

சுவைபடப் பாடியெம்மை
சுமையெலாம் போகவைத்த
திரையிசைக் குயிலேநாளும்
திறலுடன் வாழ்கவாழ்க!

திரையிசைத் திலகமாக
தினமுமே வந்தாயம்மா
நரைதிரை வந்திடாமல்
நாளும்நீ பாடவேண்டும்!

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *