இந்த வார வல்லமையாளர்!
நவம்பர் 17, 2014
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு சமூகசேவகி சீதாலட்சுமி அவர்கள்
சமூகநல சேவகியாக தமிழக அரசில் முப்பத்துநான்கு ஆண்டுகள் பணியாற்றி, துணை இயக்குனர் பதவியில் இருக்கும் பொழுது ஓய்வு பெற்றவர் இவ்வார வல்லமையாளராக வல்லமைக் குழுவினரால் பாராட்டப்படும் திருமதி சீதாலட்சுமி சுப்பிரமணியன் (Seethaalakshmi Subramanian) அவர்கள். அவரை அறிந்தவர்களால் சீதாம்மா என்று அன்புடன் அழைக்கப்படும் எண்பது வயதைக் கடந்த சீதாலட்சுமி அவர்களை வல்லமையாளர் விருதிற்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் அறிவியல் மற்றும் இலக்கிய எழுத்தாளரும் வாசகருமான திரு. ஜெயபாரதன் அவர்கள்.
முற்போக்கு சிந்தனைகளும் கொள்கைகளும் கொண்ட சீதாம்மா பெண்களின் உரிமைக்காகவும், குழந்தைகள் நலனுக்காகவும் சமூகப்பணியாற்றியவர். இவரது எழுத்துக்களும், பணிகளும் சமுதாய நலனில் அக்கறை கொண்டவையாக இருப்பதுடன் தன்னை சமூகசேவகி என்று அடையாளம் காணுவதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்பவர். சுவாமி சிவானந்த மகரிஷியின் வழிகாட்டுதலில் சமுதாயத்திற்கு சேவை செய்ய முடிவெடுத்த சீதம்மா அவர்கள் கலப்புத்திருமணம், காதல் திருமணம் போன்றவற்றின் நெடுநாள் ஆதரவாளர். குழந்தை கருவில் உருவாவது முதல் ஆறு வயது வரை அதன் வளர்ச்சிகள் பற்றிய சிறப்புக்கல்வியும் பயிற்சியும் பெற்றவரான சீதாம்மா, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சமூகசேவகியாகப் பணியாற்றி இருக்கிறார். நான்கு ஆண்டுகள் ஓர் பன்னாட்டு அமைப்பில் ஆசிய நாட்டுப் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார், சமூகப்பணியின் பொருட்டு உலகவங்கித் திட்டங்களில் பணியாற்றி இருக்கிறார்.
தமிழின் மீது கொண்ட தணியாத ஆர்வம் காரணமாக, வேலையில் ஊதியமில்லாமல் தற்காலிக விடுப்பெடுத்து அவரது நாற்பதாவது வயதிலும் கல்லூரியில் சேர்ந்து தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றவர். பணியிலும் எழுத்திலும் இவரது கவனம் சமுதாயத்தின் மேல் இருப்பதால் இவருடைய ஆய்வுகள், “பெண்” மற்றும் “சமுதாயம்” இவைகளைப் பற்றியதாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக “பாரதிகண்ட புதுமைப் பெண்” என்று மறைந்த பெண்ணிய எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனால் அன்புடன் அழைக்கப்பட்டவர்.
இந்தப் புதுமைப் பெண்ணும் பாரதி பிறந்த எட்டயபுரத்தில் பிறந்து, பாரதி படித்த பள்ளி அதே பள்ளியிலும் படித்து, பாரதி வாழ்ந்த வீட்டிலும் சிறிது காலம் வாழ்ந்தவர் என்பது ஒரு வியப்பைத் தரும் ஒற்றுமை. அக்காலச் சூழலில் பாரதி ஊரில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடித்த முதல் பெண்ணும், கல்லூரிப்பட்டம் பெற்ற முதல் பெண்ணும் சீதாம்மாவே.
எழுதப்படிக்கத் தெரிந்த நாள் முதலாய்ப் பத்திரிகைகள் புத்தகங்கள் படிப்பதுடன் நில்லாமல் அப்பொழுதே கதைகள், கவிதைகள் எழுதியுள்ளார். மரபுக் கவிதை எழுதக் கற்றுக் கொடுத்ததுடன் இவரை பத்திரிகை உலகுக்குச் செல்ல வைத்தவர் திரு. ருத்ர துளஸிதாஸ். மனிதன் தன் எண்ணங்களைப் பதியச் செய்யும் இடமான பத்திரிக்கையும் பதிப்பகமும் இவருக்கு மிகவும் பிடித்தமான உலகம். சீதாம்மா 1958 ல் எழுத ஆரம்பித்தவர், தொடர்ந்து பல வாரப் பத்திரிக்கைகள், மாதப் பத்திரிக்கைகளில் எழுதியுள்ளார். இவரது 63 சிறுகதைகள் வாரப் பத்திரிக்கைகளிலும், மாதப் பத்திரிக்கைகளும் வெளிவந்துள்ளன. இரு புத்தகங்கள் வெளியிட்டதுடன், ஒரு சிறு கதைத் தொகுப்பினை நா. பார்த்தசாரதி உள்ளிட்ட மதுரை எழுத்தாளர்களுடனும் சேர்ந்து வெளியிட்டுள்ளார். ஆனந்த விகடனில் இவரது முத்திரைக்கதை வெளி வந்திருக்கின்றது. சீதாலட்சுமி என்ற பெயரில் பெரும்பாலான கதைகளும், சிறுகதைத் தொகுப்பும், வைதேகி என்ற பெயரில் சில கதைகளும், மேழிச்செல்வி என்ற பெயரில் இவரது கவிதைப் புத்தகமும் வெளிவந்துள்ளன.
ஒரு வீட்டில் பெண்படித்திருந்தால் அந்த வீடே படிக்க ஆரம்பித்துவிடும். பெண்ணின் முன்னேற்றம் குடும்பத்தை, சமுதாயத்தைக் காக்கும்படியாக இருக்க வேண்டும். அவளையும் அழித்துக் கொண்டு குடும்பக் கோட்பாட்டையும் அழிப்பது பெண் விடுதலையல்ல. ஆணுக்குப் பெண் பினாமியாக இருக்கும் நிலையும் மாற வேண்டும். முதலில் பெண்ணுக்கு எதிரியாகப் பெண் வளர்வதும் சரியல்ல என்பது பெண்களின் உரிமையையும் முன்னேற்றதையும் பற்றி சீதாம்மா கொண்டிருக்கும் கொள்கை.
இக்கருத்தை விளக்கும் வகையில் பெண்ணை முதன்மைப் படுத்தி சீதாம்மாவே கதை, வசனம் எழுதி, அவரே நாயகியாகவும் நடித்த நாடகம் கலைவாணர் அரங்கத்தில் அரங்கேறிய பொழுது, நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த கலைஞர் கருணாநிதி, “இவர் ஏன் அரசாங்கத்தில் வேலை பார்க்கணும் சினிமாவிற்குச் சென்றிருக்கணும்” என்று வியந்து பாராட்டி இருக்கிறார். தமிழக திரைப்பட வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்திய “பராசக்தி” கதையை நாடகமாகவும், திரைப்படமாகவும் கதை வசனம் எழுதிய கலைஞர் இவர் நடிப்பைப் பார்த்து இவ்வாறு சொன்னது வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் கிடைப்பது போன்ற பெருமை தரும் பாராட்டு.
இன்றும் தொடர்ந்து இணையக் குழுமங்களிலும், திண்ணை போன்ற இணையப் பத்திரிக்கைகளிலும் எழுதி வருபவர் சீதாம்மா. மின்தமிழ்க் குழுமத்தில் எட்டயபுர வரலாறு, வரலாற்றுப் பயணம், சீதாம்மாவின் குறிப்பேடு, நினைவலைகள், எண்ணங்கள் ஊர்வலம், முத்தொள்ளாயிரம் – மலரும் நினைவுகள் என்று பல பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
காலங்கள் மாறுகின்றன
ரசனைகள் மாறுகின்றன
மனிதனின் வாழ்வு முறையும் மாறுகின்றன
மாற்றங்களில் நீச்சல் அடிக்கின்றோம்
சிலர் ஓட்டத்துடன் நீந்துகின்றனர்
சிலர் எதிர் நீச்சல் போடுகின்றனர்
மாறுதல்களைப் பார்த்து எழும் நெஞ்சக் கொதிப்பையும்
காலம் ஆற்றிவிடும்
இதுதான் வாழ்க்கை
என்று வாழ்வின் யதார்த்தத்தை அழகாகக் குறிப்பிடுகிறார் சீதாம்மா.
என் குணங்களில் “தேடல்“ உணர்வு அதிகம், அத்துடன் சமுதாயம் முதன்மையானது என்று கூறி ஓய்வு பெற்ற பிறகும் சமூக அக்கறையுடன் தனது எழுத்து மூலம் சமூகப்பணியைத் தொடர்ந்து அனைவருக்கும் முன்மாதிரியாக செயல்படும் சீதாம்மாவை வல்லமையாளராக பாராட்டி வாழ்த்துவதில் வல்லமைக் குழுவினர் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]
மதிப்புக்குரிய சீதாம்மாவை வல்லமையாளராய்த் தேர்ந்தெடுத்த தேமொழிக்கும், நீடித்த சமூக சேவை செய்த, எழுத்தாளர் சீதாம்மாவுக்கும் என் வாழ்த்துக்கள்; பாராட்டுகள்.
சி. ஜெயபாரதன்.
என் அன்பு சீதாம்மா அவர்கள் என்றுமே வல்லமையாளர் . இவர் பாரதி கண்ட புதுமைப்பெண் . இவரது மனோதிடம் ,வீரம் பல சாதனைகளை செய்ய உதவியது. தவிர சகலகலாவல்லியாகவே எனமுன் நிற்கிறார் . என் அன்பு தோழிக்கு இந்த உயர்ந்த இடம் கிடைத்ததில் நான் மிக மகிழ்ச்சியடைகிறேன் வாழ்த்துகள் சீதாம்மா