நாகேஸ்வரி அண்ணாமலை

images (1)

மத்தியில் ஆட்சியைப் பிடித்ததோடு மற்ற மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கத் துடித்துக்கொண்டிருக்கிறது பா.ஜ.க. அதிலும் அரியானாவில் தனித்து ஆட்சி அமைத்திருப்பதும் மஹாராஷ்டிராவில் சிறுபான்மை அரசு அமைத்திருப்பதும் பா.ஜ.க.வுக்கு பெரிய தெம்பைக் கொடுத்திருக்கிறது. எப்படியாவது நாடு முழுவதும் ஆட்சியைப் பிடித்துவிடவேண்டும் என்று பல உத்திகளைக் கையாளுகிறது.

தேசியத் தலைவர்களான காந்திஜியையும் வல்லபாய் பட்டேலையும் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொண்டிருக்கிறது. தேசத் தந்தை காந்திஜி இல்லாமல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் சரித்திரமே இல்லை என்று புரிந்துகொண்டதால் அவரை ஓரம் கட்ட முடியாது. அதனால் அவரை மதிப்பதுபோல் மோதி காந்திஜியின் சிலைகளுக்கு மாலையிடுகிறார்; காந்திஜி பிறந்த நாளை இந்தியாவைத் தூய்மைப்படுத்தும் நாளாகக் கொண்டாடுகிறார். இப்படிக் காந்திஜியைப் போற்றுவது எல்லாம் அரசியல் ஆதாயத்திற்குத்தான். குஜராத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் இரத்தக் கறை தன் கைகளில் இல்லையென்று காட்டும் பாவனைதான். காந்திஜியை இப்படிக் கொண்டாடும்போது ஆர்.எஸ்.எஸ். மீது தனக்குள்ள பாசத்தையும் நன்றிக் கடனையும் விட முடியவில்லை. காந்திஜியைக் கொன்ற ஆ.எஸ்.எஸ்.காரர்களை அரசிலும் கட்சியிலும் முக்கிய பதவிகளில் அமர்த்தியிருக்கிறார்.

பட்டேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்தவர். சிறுபான்மையினருக்கு நாட்டில் சம உரிமையும் மரியாதையும் கொடுத்தவர். சிறுபான்மையினர் இரண்டாம்தரக் குடிமக்களாகத்தான் இருக்க முடியும் என்று ஆ.எஸ்.எஸ். சொல்கிறது. இதனுடைய சிறுபான்மை வெறுப்பு அரசியல்தான் காந்திஜியின் கொலையில் முடிந்தது. (ஆ.எஸ்.எஸ்ஸுக்கும் காந்திஜியைக் கொன்ற கோட்சேக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதைப் பட்டேலே ஒப்புக்கொள்ளவில்லை. இந்தப் பட்டேலைத் தங்கள் தலைவராகக் கொண்டாடி அவருக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் சிலை எழுப்பப் போகிறார்களாம்.

நாடு முழுவதையும் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தேசியத் தலைவர்கள் சிலரைத் தங்களுக்குச் சொந்தமாக்க முயலுகிறார்கள்.

இதற்குத் துணைபோக ஆள் சேர்க்கும்போது கொள்கை கணக்கில் இல்லை. வாக்குகள் வாங்கும் தகுதியே போதும். இதற்கு ஒரு உதாரணம் ரஜினி காந்தைப் பா.ஜ.க. தன் கட்சிக்குள் இழுக்க முயன்றது. ஏராளமான ரசிகர்களைத் தன் கைக்குள் வைத்திருக்கும் இந்த நடிகர் தன்னுடைய அரசியல் கொள்கையென்று இதுவரை எதையும் சொன்னதில்லை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பா.ஜ.க.விற்கு விலாசமே இல்லாமல் இருந்தது. இரண்டு திராவிடக் கட்சிகளும் மாறி மாறிப் பதவிக்கு வந்து மற்ற எந்தக் கட்சிகளையும் உள்ளே நுழையவிடவில்லை. இப்போது அ.தி.மு.க.வின் நிரந்தர தமிழக ‘மக்களின் முதல்வருக்கு’ (அ.தி.மு.க. தொண்டர்களுக்கு அவரை முதல்வர் பதவியிலிருந்து இறக்கவே பிடிக்கவில்லை. அதனால் அவருக்குப் புதுப் பட்டம் வழங்கியிருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை தமிழக முதல்வர் வேறு; தமிழக மக்கள் முதல்வர் வேறு.) ஏற்பட்டுள்ள இறங்குமுகத்தையும் தி.மு.க. செல்வாக்கு இழந்து நிற்பதையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறார்கள்.

தமிழுக்குப் புகழ் சேர்த்த திருக்குறள் எழுதிய திருவள்ளுவரைப் பற்றி நன்கு அறிந்த ஒரு பா.ஜ.க. உறுப்பினரைத் தமிழகத்திற்கு அனுப்பப் போகிறார்கள். இவர் திருவள்ளுவருடைய ‘இந்து மத’ச் சிந்தனைகளைப் பற்றிப் பேசுவார் என்று எதிர்பார்க்கலாம். தமிழ் கலாச்சாரத்தின் அடையாளமான திருக்குறள் இந்து மத நூலாக இனங்காட்டப்படலாம். ராஜராஜ சோழன் தமிழர்களின் பெருமையைத் தமிழகத்திற்கு வெளியே எடுத்துச் சென்றவன் என்று திராவிட அரசியல் கட்சிகள் புகழும். இவனுடைய மகன் கங்கைகொண்டசோழபுரத்தைக் கட்டியவன். கங்கையை வென்ற இந்தச் சோழ மன்னனை பா.ஜ.க தனதாக்கிக்கொள்ள முயலுகிறது. இவனுடைய ஆயிரம் ஆண்டு நிறைவை ஆர்.எஸ்.எஸ். கொண்டாடப் போகிறது. சோழ மன்னர்கள் தமிழ் கலாச்சாரத்தை தென்கிழக்காசியாவில் பரப்பினார்கள் என்பது தமிழர்கள் பெருமைப்படும் விஷயம். தாய்லாந்தில் திருவெம்பாவை இன்னமும் பாடப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். கொண்டாட்டத்தில் தமிழ் இலக்கியத்தைவிட இந்து மதம்தான் முன் நிறுத்தப்படும். வேதம் ஓதிய பிராமணர்களுக்கு வரி இல்லாத நிலம் கொடுத்த சோழர்களின் இந்து மத ஆதரவு கொண்டாடப்படும். இப்படித் தமிழ் அடையாளங்கள் எல்லாம் இந்து மத அடையாளங்களாக ஆக்கப்படலாம்.

இவை பா.ஜ.க.வின் சாணக்கியத்திற்கு சில உதாரணங்கள். இந்தியாவின் பெருமை அதன் பல கலாச்சாரங்கள். ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மை உண்டு; தனி வரலாறு உண்டு. எல்லாவற்றையும் மறைத்து இந்து மதக் கலாச்சாரத்திற்குக் கொண்டுவருவதே பா.ஜ.க.வின் நோக்கம். இதற்கு பல மொழிக் கலாச்சாரங்களின் பெருமையைக் கொண்டாடுவதுபோல் பாவனை செய்கிறது. இந்தத் திட்டத்திற்கு தமிழ்நாட்டுப் பா.ஜ.க. தலைவர்களே உடந்தை. சில தமிழர் கட்சிகள் பா.ஜ.க.வோடு அரசியல் ஆதாயத்திற்காகக் கூட்டுச் சேரலாம். இதில் தமிழ் மக்கள் ஏமாறுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பி. கு. இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளர் திருமதி. நாகேஸ்வரி அண்ணாமலை அவர்களின் சொந்த கருத்துகளே.  வல்லமை இதழுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஆசிரியர்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.