“கொள்ளைபுண் ணாக்கை கொடுக்கின்றான், கீதையில்
முள்ளும் மலரான மாலவன் ;-எள்ளினுள்
எண்ணையாய் ஏளிடும், ஏகாந்த வாத்சல்ய,
கண்ணனை நெஞ்சே கருது “….கிரேசி மோகன்….!
Blog
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
இன்னம்பூரான் பக்கம் 5: 29: கனம் கோர்ட்டார் அவர்களே! 29:1
இழுபறிவைத்தியம்
இன்னம்பூரான்
14 11 2016
கலோனிய அரசு கெடுபிடிகள் பல காட்டினாலும், திலகரின், காந்திஜியின், பாரதியாரின் எழுத்துரிமையையும், பேச்சுரிமையையும் முச்சூடும் பறிக்கவில்லை. தடா போட்டுப் பார்த்ததுடன் சரி. காந்திஜியுடன் வைஸ்ராய் இர்வின் பிரபு பேச்சு வார்த்தை நடத்தினார். நீதித்துறை தன் பெருமையைக் காத்துக்கொள்வதில் கவனம் செலுத்தும் என்பார்கள். ஆனால், மதராஸ் ஹைகோர்ட்டில் ஒரு ஜட்ஜை வழக்கறிஞர் ஒருவர் நாய் என்று பொருள்பட நகைத்தார். சிரித்துக்கொண்டு விட்டு விட்டார்கள். ஏனெனில், அது பூடகமான நகைச்சுவையாக இருந்தது. சினம்பொங்க, ஒரு ஜட்ஜ் ‘நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள் என்று தெரியுமா?’ என்று வினவ, பழம் தின்னிக் கொட்டை போட்ட வக்கீல் ஐயா, ‘ஆஹா! தெரியுமே! ஒரு ஒல்லிப்பிச்சான் [puisne] ஜட்ஜிடம் பேசுகிறேன்.’ என்றார். எல்லாரும் கமுக்கமாகச் சிரித்துக்கொண்டார்கள், ஜட்ஜ் உள்பட.
அத்தகைய அலாதி உறவு எல்லாம், சுதந்திர இந்தியாவில் பறிபோகத் தொடங்கின, கொஞ்சம், கொஞ்சமாக.
எனக்கு ஒரு கெட்ட வழக்கம். இங்கிலாந்தில் படித்து வந்த காலகட்டத்தில் உயர் நீதிமன்ற (ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ்) தீர்ப்புகளைத் தினம்தோறும் படிப்பேன். கறாரில் மையக்கரு நகைச்சுவையிலும், அலட்டிக்கொண்ட தீர்ப்பில் தர்மமும் இருக்கும். எல்லாம் பாடமே. இந்திய அரசியல் சாஸனத்தில் நீதித்துறைக்கு மவுசு அதிகம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்பீல் என்ற சட்ட நடவடிக்கை இருப்பதே, நீதிபதிகள் தெய்வாம்சம் கொண்டவர்கள் அல்ல, ஒருவர் அளித்த தீர்ப்பை மேலா ரத்து செய்யலாம் என்பதால், தீர்ப்புகளை விமர்சனத்துக்கு உட்பட்டவை என்பதை குறிக்கிறது. அதே விமர்சனத்தை மக்களில் ஒருவர் செய்வது வரவேற்கபடுவதில்லை. அப்படிச் செய்தாலும், கவனமாக நீதிபதியைக் கொஞ்சம் வெளிப்படையாக விமர்சித்தால் கோர்ட்டை அவமதித்தாக எடுத்துக்கொண்டு, ஆறு மாதம் ஜெயிலில் போடலாம்.
அந்த நிலைப்பாட்டுக்கு அஸ்திவாரமே சற்றே தடுமாற்றம்தான். வில்மாட், வில்மாட் என்று ஒரு ஜட்ஜ் 1765இல் ‘கோர்ட்டை அவமதிப்பது குற்றமே’ என்று ஒரு நிருபர் மேல் எழுந்த வழக்கில் ஒரு தீர்ப்பில் எழுதி இருந்தாலும், டெக்னில் காரணங்களால். அது குறைப்பிரசவம் ஆனது; வில்மாட்டின் மைந்தர் காலம் சென்ற தந்தையின் படைப்புகளைப் பதிவு செய்தபோது, சட்டத்தை அணுகாத அந்தக் கருத்து ஒரு மரபு ஆகிவிட்டது. அப்புறம் என்ன? நீதி அரசர்கள், நீதி மன்னர்களானார்கள், சில இடங்களில் நீதி தேவர்களும் ஆனார்கள் – இந்தியாவில். இங்கிலாந்தில் மரபைப் பதிவுசெய்து விட்டு, காமன் சென்ஸ் படி நடந்து கொண்டார்கள். பொதுவாகச் சொன்னால், அங்கே நீதிபதிகள் அமரிக்கையாக இருந்தார்கள்.
மேல்நாட்டு ஊடகங்கள் எந்த உத்தமபுத்திரனையும் உச்சாணிக்கிளையில் அமர்த்தி மெய்கீர்த்தி பாடமாட்டார்கள். தடாலடியை எல்லாம் இறக்கி வைத்து வேப்பிலை அடிப்பார்கள். பல வருடங்களுக்கு முன்னால் [1985?] நீதிபதிகளின் தலைமை போன்ற டெம்பிள்டன் பிரபு, பிரபல வழக்கறிஞர்களும், நீதிபதிகளின்புடை சூழ, இந்தியா வந்திருந்தார். அப்போது, ‘ ஊடகங்களின் எழுத்துரிமை ‘கனம் கோர்ட்டாரை அவமதித்தால்..!?.’ என்ற பட்டிமன்றம் நடந்தது. அப்போது அவர் 1987இல் உலகெங்கும் பேசப்பட்ட ஸ்பைகேட்சர் புத்தகம் பற்றிய தீர்ப்பில், அந்நூலின் ஆசிரியர் பீட்டர் ரைட் வாக்கு மீறி அரசு ஒற்றர்களின் ரகசியங்களை (ஒரளவு லீக் ஆனவைதான்) பிரசுரம் செய்யக்கூடாது என்று தானும், இரு சக ஜட்ஜ்கள் மெஜாரிட்டி தீர்ப்புக் கொடுத்ததை ஊடகங்கள் பரிகசித்தன. மூவரின் படங்களை தலைகீழாக மாட்டி, ‘மூன்று முட்டாள்கள்’ என்ற தலைப்பை டைலி டெலிக்ராஃப் பிரசுரம் செய்தது. ஐயா அவர்கள் உடனே நடவடிக்கை எடுத்தார். என்ன? அதைத் தன் வரவேற்பு அறையில் அலங்காரமாக மாட்டிவிட்டு, தினம் அதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டார்.
[தொடரும்]
***
-
இனிப்பாய்வாழ எண்ணிடுவோம்!
-எம். ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா
சர்க்கரைநோய் நோயல்ல எனச்சாற்றும் உரைகேட்பார்
சந்தோஷக் கடல்மூழ்கிச் சர்க்கரையை நினைந்திடுவார்
சர்க்கரைநோய் விளைவுபற்றிச் சரியாக விளங்காமல்
தாம்விரும்பும் சர்க்கரையைத் தனியாகச் சுவைத்துநிற்பார்!உரைகள் பலகேட்டாலும் உளமதனில் இருத்தாவிடின்
விளைவு பலவந்தெம்மை வீழ்த்திவிடும் எனுமெண்ணம்
பலர்மனதில் பதியாமல் பாதிவழி நிற்பதுவே
நலனிழந்து போவதற்கு நற்சான்றாய் இருக்குதன்றோ !நோய்க்கெல்லாம் தாயாகச் சர்க்கரைநோய் விளங்குதென
நாட்டிலுள்ள வைத்தியர்கள் நாளாந்தம் சொல்லுகிறார்
பேய்க்குணத்தால் இவையெதையும் எம்மனது ஏற்காமல்
வாய்க்கின்ற உணவையெல்லாம் வயிற்றுக்குள் அடைத்துவிடும்!சமாதானம் பலசொல்லிச் சர்க்கரையை எடுத்திடுவார்
சலரோகம் அவரிடத்தில் சன்னதமே ஆடிநிற்கும்
சிலவேளை மருந்தெடுப்பார் பலவேளை அதைமறப்பார்
அதனாலே அவரின்பம் அத்தனையும் பறிகொடுப்பார்!உடல்பருக்கும் உடல்மெலியும் உற்சாகம் குறைந்துவிடும்
நடைகூடத் தளர்ந்துவிடும் நடுக்கமும் வந்துநிற்கும்
இவையெல்லாம் இனிப்பென்னும் இம்சைதரும் விளைவாகும்
இன்சுலினை எடுத்தெடுத்து எல்லோரும் ஏங்கிநிற்பார்!இனிப்புக் கண்டவிடமெல்லாம் இளித்துநிற்கக் கூடாது
தனித்துநின்று இனிப்பதனைச் சுவைத்துநிற்றல் கூடாது
மனம்விரும்பும் உணவுகளை வாயில்போடக் கூடாது
மருந்தோடு உடற்பயிற்சி மறந்துவிடல் கூடாது !நேரங்கெட்ட நேரத்தில் நிறையவுண்ணக் கூடாது
நாருள்ள உணவுகளை நாம்மறக்கக் கூடாது ஊர்விட்டுச் சென்றாலும் உணவுண்ணும் முறையனைத்தும்
மாறாமல் இருப்பதற்கு மறந்துவிடக் கூடாது!பச்சையாய்க் காய்கறிகள் பழவகைகள் எடுக்கவேணும்
இச்சையுடன் நாமவற்றை எப்பொழுதும் ஏற்கவேணும்
அச்சம்தரும் உணவுகளில் ஆசைகொள்ளல் தவிர்த்துவிட்டால்
அநேகம்பேர் நிம்மதியை அடைவதினைக் கண்டிடலாம்!நாவிரும்பும் உணவுகளை நாமொதுக்க எண்ணிடுவோம்
நலன்விளைக்கும் உணவுகளை நாவேற்கச் செய்திடுவோம்
நோய்பற்றித் தெளிவுற்று நுடங்காது இருந்திடுவோம்
வாழ்நாளை மனமிருத்தி வாழ்ந்திடுவோம் நல்வழியில்!மைசூர்பாகை மறந்துவிடு
மணக்குமல்வாவைத் தூக்கியெறி
கேசரிகிட்டவே போகாதே
கிறுகிறுப்புனக்கு வந்துவிடும்
எந்தலட்டையும் எடுக்காதே
வந்திடுமுனக்குச் சங்கடமே
இனிப்புமுறுக்கை எடுத்துவிடின்
தவித்துநிற்பாய் நோயாலே
சர்க்கரைப்பொங்கலை தவிர்த்துவிடு
சந்தோஷமுன்னைத் தேடிவரும்
இனிப்பைக்கண்டால் நாவூறும்
இவைகளனைத்தும் இடையூறே
இனிப்பைப்பற்றி நினையாமல்
இனிப்பாய்வாழ எண்ணிடுவோம்!வருமுன்னர்க் காப்பதற்கு வழிகள்பல இருக்கிறது
வந்தபின்னர் எமைக்காக்கும் வழிகளுமே விரிகிறது
தினமும்நாம் நலன்பற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டால்
தினமுமே எம்வாழ்வு தித்திப்பாய் இருக்குமன்றோ! -
Thenkasi, Kasi Viswanathar temple – தென்காசி, காசி விசுவநாதர் ஆலயம்
பவள சங்கரி
Thenkasi, Kasi Viswanathar temple- Tirunelveli disrict – Tamil Nadu


Tenkasi is a small town which is at a distance of 50 kms. from Tirunelveli and also has a railway station. The main deity Kasi Viswanathar , a huge Sivalingam which is wonderful and has exceptional grace. This is a swayambhu Lingam. At the background of the temple we could see the Podighai hills full of herbs and medicinal plants and picturesque view. Tenkasi is located at 8.97°N 77.3°E. It has an average elevation of 143 metres (469 ft) and it is surrounded by the western ghats in three sides. This temple has a magnificent tower that stands 180 feet tall . This temple is in Tiruvenlveli district of Tamilnadu and is 5 kms from Coutrallam This is the second highest gopuram in Tamil nadu. The Gopuram of the temple welcomes pilgrims with a pleasant cool breeze straight from the nearby Thirikooda Malai. Pandya kings were patrons of the temple. Each pillar of this temple is adorned with excellent sculptures of Gods and Godesses. Lord Siva’s consort is known as Ulgammal.திருநெல்வேலி மாவட்டத்தில், 50 கி.மீ தொலைவில், கேரள நாட்டிலிருந்து தமிழ் நாட்டுக்குள் வரும் நுழைவு வாயிலில் அமைந்துள்ளது தென்காசி, காசி விசுவநாதர் ஆலயம்.
சுமார் 4 ஏக்கர் பரப்பளவில், 700 ஆண்டுகளுக்கு முன்பு பராக்கிரம பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான ஆலயம் இது. 180 அடி உயரத்தில் அழகான கலை வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ள இதன் கோபுரம் தமிழ்நாட்டில் இரண்டாவது உயரமான கோபுரம். வடக்கே காசியிலுள்ள விசுவநாதரை தரிசித்த பலனை இங்குள்ள ஈசுவரனை தரிசிப்பதன் மூலம் பெறலாம் என்ற நம்பிக்கை பரவலாக உண்டு. இங்குள்ள அம்மனின் பெயர் உலகம்மன் . இத்திருத்தலத்தில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். இங்குள்ள சிற்பங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை . குறிப்பாக, இரட்டை சிற்பங்களாகிய வீரபத்திரன்-வீரபாகு, இரண்டு தாண்டவ மூர்த்திகள், இரண்டு தமிழ் அன்னைகள், ரதி- மன்மதன் , மஹாவிஷ்ணு, கம்பீரமான காளி தேவி போன்ற அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளைக் காணலாம். -
இலக்கியச்சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் – 30
மீனாட்சி பாலகணேஷ்
கானின் வாழைக்கனியும் மாவின் கனியும்!
பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் அழகியல் பார்வையில் பல தொன்மங்களையும், புராணக் கதைகளையும், கற்பனைக் கதைகளையும் கொண்டு திகழ்ந்தாலும் பல பாடல்கள் அவற்றினை இயற்றிய புலவோரின் திறமையில் அணிநயம், சந்தநயம் கொண்டு மிளிர்வதுஅவற்றினைப் பயில்வோருக்கு மிக்க இன்பம் பயப்பதாகும்.
அவ்விதத்தில் இன்று நாம் காணப்போவது புதுக்கோட்டை சமஸ்தானம் திருப்புல்வயலில் எழுந்தருளி இருக்கும் குமரக்கடவுள் மீது வீரபத்திரக்கவிராயர் அவர்கள் இயற்றியுள்ள குமரமலைப் பிள்ளைத்தமிழிலிருந்து இரு பாடல்கள் ஆகும். இவை சிறுபறைப் பருவத்திற்கானவை.
முற்றும் கற்றுணர்ந்த பெரியோர், சந்தநயம் தோன்றி விளங்கப் பாடுவதில் அருணகிரியாரை விஞ்சியவர் கிடையாதென்பர். அதற்கொப்ப இப்பாடல் ‘முத்தைத்தரு,’ என்ற திருப்புகழை நினைவு படுத்துகின்றது. இத்திருப்புகழில் தகப்பனாகிய சிவபிரானுக்கு முருகப்பெருமான் பிரணவ மந்திரத்தின் பொருளுரைத்த செய்தி கூறப்படுகிறது.

இப்பிள்ளைத்தமிழ்ப்பாடல், சந்தநயம் மட்டுமின்றி அருணகிரியாரின் திருப்புகழ் போன்றே அதே தொன்மத்தைப் பொதிந்து அமைந்துள்ளது மிக்க வியப்பைத் தருகின்றது. அருணகிரிநாதரின் திருப்புகழின் சந்தத் தாக்கத்தினை இப்பாடல்களில் உணரலாம். முதற்கண், முதல்பாடலை அதே சந்தநயத்திலேயே பாடிப்பார்த்துக் கொள்ளலாமே!முச்சுடர் முக்கண் முதற்கட வுட்கொர்
முதற்படு பிரணவ மா
முற்பொரு ளைத்தெரி வித்தகு ருக்கண்
முகத்தருள் விழியுடை யாய்
இச்சக மற்றுள வெச்சக முற்றினு
மிச்சக மொடுபுகழ் வோய்
இக்குவி லிக்குயர் மைத்துன செச்சை
யியக்குறு மழகளி றே
கச்சப மொத்த புறத்தடி மைக்குழல்
கட்கய லகலிகை யாய்க்
கற்சிலை யைச்செய் பதத்தர் மகிழ்ச்சி
கருத்தெழ வருசுதை யாங்
கொச்சை மொழிக்குயி லைப்புண ருத்தம
கொட்டுக சிறுபறை யே
கொற்றவ யிற்கும ரச்சிலை யுற்றவ
கொட்டுக சிறுபறை யே.(குமரமலைப்பிள்ளைத்தமிழ்- சிறுபறைப்பருவம்- வீரபத்திரக் கவிராயர்)
அருமையான சந்தநயம்! கருத்துச்செறிவு! பொருள்நயத்தையும் காணலாமா?
சூரியன், சந்திரன், நெருப்பு ஆகிய மூன்று சுடர்களும் மூன்று கண்களாக விளங்கும் முதற்கடவுள் சிவபிரான்! அவனுக்கு, அந்த முழுமுதற்பொருளுக்கு, பிரணவ மாமந்திரத்தின் பொருளை உணர்த்தியருளிய குருநாதன் குமரப்பெருமான்! இதனைத்தான் அருணகிரிநாதரும், ‘முக்கட்பரமற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித்து,’ எனப்பாடினார்.
தனது ஆறுமுகங்களிலும் இலங்கும் அருள்பொழியும் விழிகளை உடையவன் அக்குமரன். இந்த உலகம் (இச்சகம்) மற்றும் இருக்கின்ற எல்லா உலகங்களிலும் (எச்சகம்) இவனைக்காணும் அனைவரும் ஆசையுடன் (இச்சகம், இச்சை) புகழ்ந்து போற்றுகின்றனர். இடுக்கண் (இக்கு) வருங்காலத்து உடன்வந்து காப்பவன் அவனே! ‘மைத்துன!’ என்பதனை விளியாகக் கொள்ளலாம்.
செச்சை எனப்படும் சந்தனக்குழம்பினைப் பூசிய இளமையான யானைக்கன்று போன்றவன் இச்சிறுகுமரன்.

தனது திருவடி பட்டதனால் ஒரு கற்சிலையை (கருங்கல்லை) அகலிகையாய் உருக்கொள்ளச்செய்த ‘பதத்தவர்’ எனத் திருமாலை, இராமனைப் புலவர் போற்றுகிறார். அகலிகையை, ‘ஆமைபோலும் (கச்சபம் ஒத்த) புறங்கால்களைக் கொண்டவள், மைபோலும் கருங்குழலினள், கயல்விழியாள்,’ எனவெல்லாம் வருணிக்கிறார். அவள் செய்த தாழ்ந்த செயலுக்குப்பின்பும் இத்தகைய உயரிய வருணனைக்கு எவ்வாறு உரியவளாயினாள் எனும் வியப்பெழுகின்றது! தவறையுணர்ந்து அதன்பலனை கற்சிலையாய்க்கிடந்து அனுபவித்தவள்; இராமன் திருவடிபட்டுத் தன் சுய உருவான அகலிகையாய் மாறி அவனுடைய திருவருளுக்கும் உரிமையானவள்; ஆகவே இந்த வருணனைக்கும் அருகதை உடையவள் எனத் தெரிவிக்கிறார் போலும்!அவ்வாறு செய்த இராமனாகிய திருமாலின் மனம் மகிழுமாறு வள்ளிக்குறமகளை மணந்துகொண்டவன் இக்குமரன். அக்குறவள்ளியோ மழலைமொழி பேசும் குயில் போன்றவள்.
‘இத்தகு செயல்களைச் செய்த உத்தமனாகிய குமரனே, உனது சிறியபறையை முழக்குவாயாக! கொற்றவனே! வில்லேந்திய குமரனே! சிறுபறையை முழக்குவாயாக!’ எனப்புலவர் வேண்டுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. சிலை என்பதற்கு மலை எனவும் அகராதியில் ஒரு பொருள் உண்டு. ஆகவே, ‘கிரௌஞ்ச மலையைப்பொடி செய்த முருகனே,’ எனவும் பொருள் கொள்ளலாம். முருகனை நாம் வேலேந்திய வடிவத்தில் மட்டுமே அறிந்தவர்களாதலின் வில்லேந்திய வடிவம் சிறிது ஆச்சரியத்தினை விளைவிக்கும்!
(திருவையாற்றில் ஐயாறப்பர்- அறம் வளர்த்த நாயகி திருக்கோவிலில், முருகப்பெருமானின் ஒரு சிலைவடிவம் வில்லேந்திய நிலையில் காணப்படுகிறது.)
*****
காணப்போகும் அடுத்தபாடல் சந்தநயத்துடன் அருமையான சொல்நயமும் செறிந்தமைந்து படிப்போரைக் களிப்பெய்த வைக்கின்றது. முதல்பாடலைப் போலவே இதனையும் சிறிது பாடிப்பார்த்துவிட்டுப் பின் பொருளைக் காணலாம்.
கானின் வாழைக் கனியொடு மாவின்
கனியும்வி ருப்பமு றுங்
காமரு மேனிக் கோமள செல்வக்
கடவுளர் நாய கமே
மானின் மானக் கயல்விழி கூரும்
மடவியர் நட்புற மெய்
வாடியு நேடித் தீநர கெய்தும்
வகையற வேநினை யே
கோனென் பாரைப் பரகதி சேர்மின்
குறைக டவிர்ப்பி ரெனக்
கூரிய ஞானப் பேறருள் சைவக்
குலமொளிர் தீப கமே
தேனின் னீபப் புயசயி லேச
சிறுபறை கொட்டுக வே
திருவ மிகுத்திடு குமரம லைக்கிறை
சிறுபறை கொட்டு கவே.(குமரமலைப்பிள்ளைத்தமிழ்- சிறுபறைப்பருவம்- வீரபத்திரக் கவிராயர்)
‘கானகத்தில் விளையும் வாழைக்கனியொடு மாமரத்தின் கனியும் விருப்பமுறும் அழகான திருவடிவம் கொண்டு கடவுளர்கட்கெல்லாம் நாயகன் போலும் விளங்குபவனே!’ என விளிக்கிறார். புரியவில்லையே! சிறிது குழப்பம் தான் நமக்கு. புலவரின் சொல்லாடல் அத்துணை அழகான உட்பொருள்செறிந்தது!
இங்கு ‘கானின் வாழைக்கனி’ என அவர் குறிப்பிடுவது வள்ளிநாயகியைத்தான். (கானின் வாழ் ஐ கன்னி- வள்ளி). பிரமிப்பாக இல்லை? கானகத்தில் வாழும் அழகிய குறமகளான வள்ளி எனும் கன்னி! அடுத்து மா எனும் யானையின் மகளான கன்னி- தெய்வயானை எனும் தேவகுஞ்சரி! (மா இன் கன்னி- தேவகுஞ்சரி) கன்னி என்பது பாடலுக்காகக் கனி எனப்பட்டது. ஆகவே வள்ளியும் தேவகுஞ்சரியும் விரும்பும் திருமேனி அழகன் குமரன் என இப்போது தெளிகிறோம்.
‘மானினுடையதைப் போன்றதும், அழகான மகரமீனைப் போன்றதும், கயலைப்போன்றதுமான விழிகளால் தமது விருப்பத்தைத் தெரிவிக்கும் பெண்களின் நட்பைக்கொண்டு, உடல்மிக வாடிடும் வண்ணம் தேடிச்சென்று தீயாகிய பாழ்நரகத்தை எய்துகின்ற செயலை ஒழிக்க வழியின்றி, உன்னிடம் வந்துற்று, உன்னையே ‘அரசே, கோவே, காக்க,’ என வேண்டுபவர்களை மேலான பரகதிக்குச் செலுத்துபவன் நீ! குறைகளைப் போக்குபவன் நீ! உயர்ந்த ஞானப்பேற்றினையும் அருளுபவன் நீ! சைவநெறி தழைக்கவந்து ஒளிரும் தீபம் போன்றவனும் நீயே!
‘தேன் சொரியும் கடம்பமலர்மாலைகளை அணிந்த தோள்களை உடையவனே! மலைவாழ் முருகனே! சிறுபறை கொட்டுவாயாக! செல்வவளம் கொழிக்கும் குமரமலைக்கிறைவனே சிறுபறை முழக்குவாயாக!’ என வேண்டுகிறார்.
இப்பாடலின் கருத்தும் அருணகிரிநாதரின் பாடலில் காணும் கருத்துக்களைப்போலவே உள்ளது ஆச்சரியத்தை விளைவிக்கின்றது. ‘மங்கையரின் மையலில் மயங்கி உழலும் மானிடப்பிறவியாகிய என்னை மீட்டு உன் திருவடியில் சேர்த்துக்கொள்வாய்,’ என வேண்டும் பாங்கு அருணகிரிநாதரின் பாடல்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்கின்றது.
மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}********************************
-
அரும்புகள்
சித்ரப்ரியங்கா ராஜா
இறை அவன் கிருபையால்
சிறு மழலையாய் ஜனித்து
குலம் தான் தழைக்கவே
இல்லத்தின் தெய்வமாகி
தாய் தந்தை தாம் மகிழவே
பிள்ளைக்கலி தான் தீர்த்து
உற்றாரும் உளம் குளிரவே
நிலா என நித்தம் உலா வந்து
சின்னஞ் சிறு அரும்புகளாய்
குறும்புகள் பலவும் செய்து
சிரித்து உடன் விளையாடி
கனிமழலைக் கவிகள் பேசி
அகவை பல கடந்து வந்து
ஆற்றலால் சிறந்து நின்று
மெச்சி ஊரார் தானும் புகழ
பெற்றோர் தம் மேனி சிலிர்க்க
ஏற்படும் ஆனந்தம் என்னே
நாமும் மழலைகள் அவர் முன்னே!– சித்ரப்ரியங்கா ராஜா,
திருவண்ணாமலை.
14.11.16 -
அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 77
ஹெச்.சி.ஆண்டர்சன் அருங்காட்சியகம், ஓடன்சீ, டென்மார்க்
முனைவர்.சுபாஷிணி
பிளாட்டோவின் தி ரிப்பப்ளிக் நூலில், சாக்ரடிஸ் அடிமண்டிசுடன் நிகழ்த்தும் கருத்துரையாடலில் புராணக்கதைகள் பற்றிக் கூறும் போது ஒரு கருத்தை முன்வைப்பார். அதாவது புராணக்கதைகள் தரம் மிகுந்தவையாக அறிவுக்குப் பொருந்துவதாக அமைய வேண்டும். கற்பனைகள் அதில் நிறைந்திருந்தாலும் அழகியல் அதில் இருக்க வேண்டும். கீழான சிந்தனைகளோ, குழந்தைகளின் சிந்தனையைக்கெடுக்கும் கதைகளோ தவிர்க்கப்படவேண்டும். ஆக்கப்பூர்வமான நல்ல சிந்தனைகளே குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு உரமாக அமையும்.
கற்பனைகள் இல்லாத மனிதர்களைப்பார்ப்பது கடினம். மனித மனம் ஏதாகினும் ஒன்றினை கற்பனை செய்துப்பார்த்து அந்த கற்பனை தரும் சுகத்தில் லயிக்கும் தன்மை கொண்டது. எத்தகைய சிந்தனைகளை மனம் உள்வாங்க பழக்கப்பட்டுள்ளதோ, அத்தகைய சிந்தனைகளே கற்பனைகளுக்கும் அடித்தளமாக அமைகின்றன. அத்தகைய கற்பனைகள் நாளுக்கு நாள் மாறி வளர்ந்து புது வடிவம் பெறலாம். அல்லது கற்பனைகள் மறைந்தும் போகலாம். கற்பனைகளில் வாழும் நிலையை இன்று விர்ச்சுவல் ரியாலிட்டி எனும் தொழில்நுட்ப வளர்ச்சியோடு பொருந்தியும் பார்க்கலாம். விச்சுவல் ரியாலிட்டி தரும் வாய்ப்பினைக்கொண்டு புது அவதாரங்களை எடுத்துக் கொண்டு அந்த அவதாரங்களாக மனிதர்கள் கற்பனை உலகத்தில் சில மணிப்பொழுதுகளைக் கழிக்கலாம். உதாரணமாக, வானில் பறப்பது போன்ற அனுபவம், நிலவில் நடப்பது போன்ற அனுபவம், வானூர்தியைச் செலுத்துவது போன்ற அனுபவம், நீர்மூழ்கிக்கப்பலில் பயணித்தில், கடலின் ஆழ்கடலில் நீந்திச் சென்று ஆழ்கடல் உயிரினங்களைக் கண்டு ரசித்தல் என பலவகைப்படும் அனுபவங்களை விர்ச்சுவல் ரியாலிட்டி எனப்படும் கணினி சார்ந்த தொழில்நுட்பம் நமக்கு வழங்குகின்றது. இந்தக் கருவிகள் இல்லாமலும் மனமெனும் குதிரையில் ஏறி அமர்ந்தால் இந்தப் பேரண்டத்தையும் வலம் வரும் அனுபவத்தை நாம் பெறலாம். மனமிருந்தால்.
கற்பனையில் உதிக்கும் கதைகளை எழுதி வைத்து அவற்றைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்தோர் பலர். நம் வழக்கில் இருக்கும் நிலாவில் வாழும் பாட்டி வடைசுட்டுத்தர அதனைக்கவ்விச் சென்ற காகத்தின் கதையை யார் உருவாக்கினரோ.. இன்னமும் தமிழ்ச்சூழலில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளும் இந்தக் கதையைக்கேட்டே வளர்கின்றனர். மேற்கத்திய உலகில் சிறுவர் கதைகளுக்குப் புகழ்பெற்றவர் என்றால் ஹெச்.சி.அண்டர்சன் அவர்களைத்தான் குறிப்பிடவேண்டும். அவர் பிறந்த சிறு குடிசை இருந்த இடத்தில் எழுப்பப்பட்டுள்ள அவரது அருங்காட்சியகம் பற்றியதுதான் இன்றைய கட்டுரை.
ஹெச்.சி.அண்டர்சன் அவர்கள் 1805ஆம் ஆண்டு பிறந்தவர். தம் பெற்றோர்களுக்கு ஒரே குழந்தை இவர். நல்ல பொருளாதார நிலையில் இருந்து பின்னர் நொடித்துப்போன தந்தைக்கும் தாயாருக்கும் மகவாகப்பிறந்தவர். இளம் வயதிலேயே செருப்புத்தைக்கும் தொழிலுக்குத் தள்ளப்பட்ட தாயும் பின்னர் எளிய வேலைகள் செய்து பொருளீட்டிய தந்தைக்கும் பிறந்தவர் இவர். தந்தையாருக்கு தாம் பள்ளிக்கூடம் சென்று படிக்க முடியவில்லையே என்ற வருத்தம் மிக ஆழமாக இருந்தது. ஏதாகினும் சாதித்தே ஆகவேண்டும் என இருந்தவர் அவர். ஆனால் அவரால் எவ்வகையிலும் உயர்நிலைக்கு வரமுடியாதுப்போக பின்னர் காய்ச்சல் ஏற்பட்டு ஹெச்.சி.அண்டர்சன் இளம் சிறுவனாக இருந்தபோதே இறந்து விடுகின்றார்.
கற்பனைத்திறன் வாய்க்கப்பெற்றவர் ஹெச்.சி.அண்டர்சன். அவர் தமது இளம் வயதிலேயே தமது சூழலில் தாம் சந்திக்கும் மூதாட்டிகளிடம் தமது கற்பனைக்கதைகளைச் சொல்வது என்றும், கதாபாத்திரங்களை வடிவமைத்து அவற்றை வரைந்து உருவாக்குவது என்றும் கதாபாத்திரங்களை பொம்மைகளாக வடிவமைத்து உருவம் கொடுத்து அவற்றிற்கு ஆடைகள் தைத்து அணிவித்து கதையை நாடகமாக நடத்துவது எனத்தனது திறமைகளை படிப்படியாக வளர்த்துக் கொண்டார். அவரது பொருளாதார ஏழ்மை நிலை அவரது கற்பனைக்கு வறுமையைத் தந்துவிடவில்லை.
இளம் வயதிலேயே மனித உடற்கூறு பற்றி அறியாத நிலையிலேயே மனித உடலின் உறுப்புகளைப்பற்றிய ஈர்ப்பும் ஆர்வமும் இவருக்கு இருந்தது. ஏதும் புரியாத நிலையிலும் மனித உடல்கூற்றை விள்க்கும் ஒரு வரைபடத்தை ஒரு சுவரில் வரைந்து மனித உடலில் நுரையீரல், இதயம் என உறுப்புகளை வரைந்து தமது சூழலில் இருந்த மூதாட்டிகளிடம் காட்ட, இது அவர்கள் மத்தியில் ஹெச்.சி.அண்டர்சனுக்கு நன்மதிப்பை வழங்கியது. வரைந்ததோடு நின்றுவிடாமல் தனது படத்தை விளக்கி அந்தச் சிறுவயதிலேயே சொற்பொழிவும் ஆற்றியிருக்கின்றார். இதனைக்கேட்டு மகிழ்ந்த மூதாட்டிகள் இவருக்குப் பல கற்பனைக் கதைகளைச் சொல்ல ஆயிரத்து ஒரு இரவு கதைகள் போல் முடிவில்லாத கற்பனை உலகம் இவர் கண் முன்னே இளம் வயதிலேயே திறக்க ஆரம்பித்தது.
எதனை நோக்கினும் அதில் தனது கற்பனையை ஓடவிடுவார். அது புது உலகைப்படைக்கும். கதாப்பாத்திரங்கள் அப்புது உலகில் வலம் வருவார்கள். இவர் கண்களை மூடிக்கொண்டு கற்பனையிலேயே நீண்ட நேரம் இருப்பது வழக்கமாகியது இதனைப்பார்க்கும் ஏனையோர் இவருக்குக் கண்களில் ஏதேனும் கோளாறோ என நினைத்து கவலையுற்றனர். இவருக்குக் காணும் சக்தி அதிகரித்ததோடு மனக்கண்ணில் காணும் திறனும் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
இவரது கதைகளில் உலக மக்கள் அறிந்த சிறுவர் கதைகளில் மிகப்பிரபலமானவை என்றால் “The Little Mermaid”, “The Nightingale”, “The Snow Queen”, “The Ugly Duckling”, “Thumbelina”, போன்றவற்றைக்குறிப்பிடலாம்.
ஷேக்ஸ்பியரின் கதைகளைக் கேட்டு பின்னர் அக்கதைகளை தம் மனக்கண்ணில் தொடரச் செய்து கற்பனை செய்வார்.அதில் ஹாம்லட்டின் ஆவியைக்கண்டு கதையில் தன்னையும் ஒரு கதாப்பாத்திரமாக அமைத்துக் கொண்டு கற்பனைக்கதையை தொடர்ந்து பெரிதாக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். அந்த வேளையில் தான் தனது முதல் படைப்பையும் இவர் உருவாக்கினார். இவரது முதல் படைப்பு சோக முடிவைக் கொண்டது. நாடகம் உருவானதும் அவர் வசித்த தெருவிலிருந்த அனைவருக்கும் அதனை வாசித்துக் காட்டி அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கின்றார் ஹெச் .சி.அண்டர்சன் .
இவரது நூல்கள் உலகின் 125 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியிலும் இவரது கதைகள் வெளிவந்துள்ளன. டென்மார்க் வாழ் தமிழரான திரு.தர்மகுலசிங்கம் “அனசன் கதைகள்” என்ற பெயரில் தமிழில் இந்த நூலை மொழிபெயர்த்துள்ளார்.
ஹெச்.சி.அண்டர்சன் பற்றி குறிப்பிடுவதென்றால், அவர் வாழ்க்கையின் இரண்டு முக்கிய அம்சங்களாக அமைந்தவை எழுத்தும் அவர் செய்த பயணங்களும் தான். தன் கற்பனைகளையெல்லாம் எழுதி வைத்தார். வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் ஊர் ஊராக நாடு நாடாகச் சுற்றுப்பயணம் செய்தார். பரந்த உலக அறிவு அவரது கற்பனைக் களத்திற்கு உரமாக அமைந்தது.
தனது வாழ்க்கையில் .ஆரம்பம் முதலே வறுமையான சூழலில் இருந்தாலும், பல அசௌகரியங்களைச் சந்திக்க நேர்ந்தாலும் கூட, அவையனைத்தையும் பொருட்டாக எண்ணாமல், வருந்தித் தளர்ந்து வீழாமல், யாரையும் குறைகூறாமல், தொடர்ச்சியாகத் தனது கதைகளை உருவாக்குவதிலும், கதாப்பாத்திரங்களை வடிவமைப்பதிலும் அவரது ஆர்வமும் காலமும் சென்றன.
1875ம் ஆண்டு உடல் நலக்குறைவினால் ஹெச்.சி.அண்டர்சன் இறந்தார். இவரது சமாதி டென்மார்க் தலைநகரான கோப்பன்ஹாகனில் உள்ள அசிச்டெண்ட் கல்லறைப்பகுதியில் அமைந்திருக்கின்றது. ஹெச்.சி.அண்டர்சனின் சிலைகள் உலக நாடுகளில் வைக்கப்பட்டுள்ளன. அவரது பெயரில் டென்மார்க்கும் கசகிஸ்தானும் அஞ்சல் தலைகளை வெளியிட்டு அவரைச் சிறப்பித்தன.
ஹெச்.சி.அண்டர்சன் வாழ்ந்த இல்லம் இன்று அருங்காட்சியகமாக அமைந்திருக்கின்றது. இங்கே ஹெச்.சி.அண்டர்சன் அவர்கள் தாமே தயாரித்து உருவாக்கிய 111 காகித உருவங்கள், அவர் கைப்பட உருவாக்கிய ஓவியங்கள். அவரது சேகரித்த பழம் நூல்கள் ஆவணங்கள், அவரது பயணக்குறிப்புகள் என வளாகம் நிறைந்த பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தக்கட்டிடத்தின் முன்புற வாசலில் அழகிய பூந்தோட்டமும் சிறிய குளமும் அலங்கரிக்கின்றன. மிகுந்த எழில் கலையம்சம் கொண்ட வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
டென்மார்க் செல்பவர்கள் இந்த அருங்காட்சியகம் சென்று வரலாம். இந்த அருங்காட்சியகத்தின் முகவரி
Hans Christian Andersen Museum
Bangs Boder 29
5000 Odense Cஇந்த அருங்காட்சியகம் பற்றிய மேலதிகத் தகவல் பெற:
museum@odense.dk வலைப்பக்கத்திலோ அல்லது tel. +45 6551 4601 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.சிறுவர்களுக்குப் பல கதைகளை எழுதிய ஹெச்.சி.அண்டர்சன், தனது வாழ்க்கைக்குறிப்பினையும் எழுதியிருக்கின்றார். அதற்கு அவர் சூட்டிய பெயர், தமிழில் ” என் வாழ்க்கை – ஓர் அழகான கதை” என்பதாகும். தன் வாழ்க்கையை ரசித்தவர் அவர். அவரது கதைகள் வழி நம் வாழ்க்கையையும் மகிழ்ச்சிப்படுத்தியவர் அவர் என்பதில் மிகையில்லை.
-
Chitrasabha
Pavala sankari
Kuttralanatha Swamy temple, at Kuttralam, Tamil Nadu

Kuttralam is a popular tourist resort in Southern Tamilnadu known for its waterfalls, amidst picturesque surroundings – and is a source of inspiration of many a literary work.The Chitrasabha is a stand-alone structure that is located a few blocks away from the Kuttralanathar temple at Kuttralam in southern Tamilnadu.
Architecturally the Chitrasabha resembles that of the other Nataraja Sabhas elsewhere in Tamilnadu, and its interior is decked with hundreds of murals, depicting images from the Indian epics. The five dance halls of Shiva are Chidambaram, Madurai, Tiruvalankadu, Tirunelveli and Kuttralam.
Chitrasabha is a wooden structure, every inch of these walls are lined with murals depicting scenes from the epics. Nataraja along with Tripura Sundari and Shri Yantra and 16 forms of Ganapathi , episodes from the lives of 63 Saivite saints, Nayanmars, based on the Tamil work called “Periya Puranam” sung by Sekkizhar are also depicted in these paintings. The story of Madurai Meenakshi is one of the masterpieces depicted in these murals.
The 400-year old murals, belonging to the Nayaka period, are located in a mantapa called Chithra Sabhai, in the temple.
They were originally painted using plant pigments and natural dyes. Art historians allege that most of these murals have now been repainted between 2010 and 2013, using modern garish colours, violating conservation norms. Many murals had been repainted by introducing new colours and even 3-D techniques. The faded portions of some murals had been re-touched and chemical cleaning had been done.
Photographs are strictly prohibited inside Chithra Sabha.Paintings courtesy through internet.திருக்குற்றாலம்
நெல்லை மாவட்டத்தில் தென்காசிக்கும் செங்கோட்டைக்கும் இடையில் குற்றாலம் உள்ளது.
ஆடல்வல்லான், திருத்தாண்டவம் ஆடிய ஐந்து சபைகளில் சித்திர சபையும் சிறப்பான ஒன்று. சித்திர சபை குற்றாலநாதர் ஆலயத்திற்கு அருகே அமைந்துள்ளது. இதன் எதிரே தெப்பக்குளமும் , சுற்றிலும் மதில் இருக்க, நடுவே சித்திர சபை அழகாக அமைந்துள்ளது. மரத்தாலான அற்புதக் கலை வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த சித்திர சபையின் ஓவியங்கள் மிகப்பழமையானவை. 400 ஆண்டுகளுக்கு முன்பு நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மரக்கோவிலின் கூரை சிதம்பரத்துக் கோவிலின் கூரையை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. இந்த சித்திர சபையில் உள்ள இரண்டு மண்டபங்களில் ஒரு மண்டபத்தில் நிறைய சாளரங்கள் இருக்கின்றன. இக்கூடத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள சிறு மேடையில் திருவாதிரை நாளில் நடராசப் பெருமான் காட்சி தருகிறார். கூடத்தின் நான்கு பக்கங்களிலும் அற்புத ஓவியங்கள் அழகுடன் தீட்டப்பட்டிருக்கின்றன. இச்சித்திர சபையின் வெளிச்சுற்றில் ஊர்த்துவதாண்டவம், பத்திரகாளி, முருகன், சூரபத்மன், சிங்கமுகன், தாரகன், மன்மதன், ரதி ஆகிய உருவங்கள் வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளன. சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்கள், துர்க்கையின் பல்வேறு வடிவங்கள், வீரபத்திரர், கஜேந்திரமோட்சம், அறுபத்துமூவர் உருவங்கள், பத்மநாபரின் கிடந்தகோலம், இரணிய வதம், பைரவரின் பல்வேறு உருவங்கள், சனிபகாவன் ஆகியவை அழகுற வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. சித்திர சபை எதிரில் தெப்பக்குளமும், நடுவில் மணிமண்டபமும் அமைந்துள்ளன.
சபையின் உள்ளே நடராசர் திருவுருவம் அன்னை சிவகாமியுடன், தேவர்கள் தொழுமாறு அழகாக வண்ணச்சித்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்வதி கல்யாணச் சிற்பம், குற்றாலநாதர் அகத்தியருக்குக் காட்சி தந்தது, சுப்பிரமணியரின், விநாயகரின் பல்வகைச் சிற்பங்கள் முதலான ஏராளமான சிற்பங்கள் இச்சபையில் உள்ளன. இச்சித்திர சபையின் வெளிச்சுற்றில் ஊர்த்துவதாண்டவம், பத்திரகாளி, முருகன், சூரபத்மன், சிங்கமுகன், தாரகன், மன்மதன், ரதி ஆகிய உருவங்கள் அழகுற தீட்டப்பட்டுள்ளன.
சித்திர சபையின் ஓவியங்கள் புகைப்படம் எடுக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. இணையப்படங்களுக்கு நன்றி.
“உற்றாரையான் வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரையான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும்
குற்றாலத்தமர்ந்துறையும் கூத்தா உன் குரைகழற்கே
கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே”. (திருவாசகம்)“காலன் வருமுன்னே கண்பஞ்சடைமுன்னே
பாலுண் கடைவாய் படுமுன்னே – மேல் விழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தானையே கூறு”. (பட்டினத்தார்) -
காவிரி புரக்கும் நாடு – 5
-மேகலா இராமமூர்த்தி
காவிரி வெள்ளத்தில் அத்தி அடித்துச்செல்லப்பட்டதைக் கண்டவர் அனைவரும் செயலற்று உறைந்திருக்க, ஆதிமந்தியோ அலறிக்கொண்டே சென்றாள் காவிரிக்கரையோரமாய். காவிரி, கடலில் கலக்கும் இடத்தருகே வந்தவள், “கல்போன்ற வலியதோளையுடைய என்னுயிர்க் காதலனே! நீ எங்கே சென்றாய்?” என்று கதறிக்கொண்டு கடலைப் பார்த்தபடியே கண்ணீர்வழிய நின்றிருந்தாள். திடீரென்று கடலின் மத்தியிலிருந்து ஒருபெண் தோன்றினாள்; மயக்கநிலையிலிருந்த அத்தியைத் தன் மலர்க்கரங்களில் ஏந்தியிருந்த அந்த ஏந்திழை, கரையை நோக்கி விரைந்துவந்தாள். அங்கே அலமந்து நின்றிருந்த ஆதிமந்தியிடம் அத்தியை ஒப்படைத்துவிட்டுச் சரேலென்று திரும்பியவள் கடலுக்குள் மூழ்கிமறைந்தாள்!
இந்த அதிசயத்தைக் கண்ட ஆதிமந்தி, தன் கண்களையே நம்பமுடியாது திகைத்தாள். பின்னர், திகைப்பு நீங்கி மயக்கத்திலிருந்துவிடுபட்ட தன் கணவனை அன்போடு அணைத்துக்கொண்டு புகார்நகர் நோக்கி மெல்ல நடந்தாள். அத்தியைக் கடலிலிருந்து காத்து, பின்னர்க் கடலுள் மூழ்கிமறைந்த (உயிர்நீத்த) அவ்வீரமங்கையின் பெயர் ’மருதி’ என்று பரணரால் குறிக்கப்பட்டிருக்கின்றது. அத்தி உயிர்பிழைத்ததில் மகிழும் நம் உள்ளம் மங்கைநல்லாள் மருதியின் மரணத்தால் வருத்தமடைகின்றது!
…முழவுமுகம் புலராக் கலிகொள் ஆங்கண்
கழாஅர்ப் பெருந்துறை விழவின் ஆடும்
ஈட்டெழில் பொலிந்த ஏந்துகுவவு மொய்ம்பின்
ஆட்டன் அத்தி நலன்நயந்து உரைஇத்
தாழிருங் கதுப்பின் காவிரி வவ்வலின்
மாதிரம் துழைஇ மதிமருண்டு அலந்த
ஆதி மந்தி காதலற் காட்டிப்
படுகடல் புக்க பாடல்சால் சிறப்பின்
மருதி அன்ன மாண்புகழ் பெறீஇயர்
சென்மோ வாழி தோழி… (அகம்: 222 – பரணர்)தோழி தலைவியிடம் சொல்லுகின்ற பாங்கில் படைக்கப்பட்டுள்ள அகப்பாடல் இது!
தலைவியைச் சந்திக்கத் நாள்தவறாது வந்துகொண்டிருந்த தலைவனின் வரவு சிலநாட்களாய்த் தடைப்பட்டுப்போனது. அவன் எங்குப் போனான்? என்ன ஆனான்? எனும் கவலையில் ஆழ்ந்திருந்தனர் தலைவியும் அவள் ஆருயிர்த்தோழியும். அப்போது, ஆதிமந்தியின் கதையைத் தலைவிக்கு நினைவூட்டும் தோழி, “கலங்காதே கண்மணி! நாமும் தலைவனைத் தேடிப் புறப்படுவோம்! அவனைக் காணமாட்டாது உயிர்துறப்போமாயினும் தன் காதற்கணவனைத் தேடித்திரிந்த ஆதிமந்திக்கு அவள் காதலனைக் காட்டி மறைந்த மருதிபோல நாமும் மாண்புகழ் பெறலாம்!” என்று ஆறுதல் கூறுகின்றாள். (தலைவியும் தோழியும் பேசிக்கொண்டிருக்கும் இச்செய்திகளையெல்லாம் இவர்கள் ’காணவில்லை’ என்று தேடிக்கொண்டிருக்கும் தலைவனும் மறைந்திருந்து கேட்டுக்கொண்டுதான் இருக்கிறான் என்பதையும் அறிக!)
காவிரியின் கடும்புனல் வெள்ளமானது மணமலர்களை மட்டும் அள்ளிக்கொண்டு வருவதில்லை; சற்றே கவனக்குறைவாக இருந்தால் தன் தண்புனலில் நீராடுவோரையும் அள்ளிக்கொண்டு சென்றுவிடும் அபாயமுடைத்து என்பதே ஆட்டனத்தி குறித்த பாடல்களால் நாம் அறியும் செய்தி! காவிரி நீத்தத்தில் நீராடுவது ஆபத்தோடு கூடிய இன்பமாகத்தான் இருக்கும் போலிருக்கின்றது!
ஆட்டனத்தி ஆதிமந்தி வரலாற்றைப் பாவேந்தர் பாரதிதாசன் ’சேரதாண்டவம்’ என்ற பெயரில் நாடகமாக்கியுள்ளதும், கவியரசு கண்ணதாசன் ’ஆட்டனத்தி ஆதிமந்தி’ எனும் பெயரில் காவியமாய்ப் படைத்துள்ளதும் இக்க்கதையின்பால் நம் கவிஞர்களுக்குள்ள ஈர்ப்பைப் புலப்படுத்துகின்றது.
இதோ… புகார்நகர வீதியில் ஆணழகன் ஒருவனும், ஆரணங்கு ஒருத்தியும் சிரித்துப் பேசிக்கொண்டே செல்வதைப் பார்க்கிறோம். இவர்கள் யாரென்று அறிந்துகொண்டு வருவோம் வாருங்கள்!
ஓ…தெரிந்துவிட்டது! இளங்கோவின் காப்பியத் தலைவனான கோவலனும் அவன் அருமைக்காதலி மாதவியும் அல்லவா இவர்கள்! இந்த மருள்மாலை வேளையில் மனமகிழ்ச்சியோடு எங்கோ சென்றுகொண்டிருக்கிறார்களே இருவரும்! எங்கே? புரிந்துவிட்டது! புகார்நகரில் சீரும் சிறப்புமாய்க் கொண்டாடப்படும் இந்திரவிழாவின் இறுதிநாள் இன்று! அதனால்தான் இவர்கள் இருவரும் கடற்கரைக்குச் சென்று இன்பமாய்ப் பொழுதைக்கழிக்கப் போய்க்கொண்டிருக்கிறார்கள் போலும்!
நாமும் ஓசைப்படாமல் அவர்களைப் பின்தொடர்வோம்!
கடற்கரைக்கு அருகிலுள்ள சோலையில்வந்து அமர்ந்துவிட்டனர் இருவரும். (இப்பகுதியை நெய்தலங்கானல் என்பர்). சற்றுத்தூரத்தில் துள்ளிச் சென்றுகொண்டிருந்த காவிரியாற்றைத் தன் கண்களால் பருகினான் கோவலன். விரைந்துசெல்லும் புனல்வெள்ளம் அவனுள் கற்பனைஊற்றைத் திறந்துவிட, காவிரிமங்கையைப் புகழ்ந்து கவிவெள்ளத்தைப் பாய்ச்சத் தொடங்கினான்!திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அதுஒச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி.
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.
மங்கை மாதர் பெருங்கற்புஎன்று
அறிந்தேன் வாழி காவேரி (சிலப்: கானல்வரி: ஆற்றுவரி – 2)சிலம்பிலுள்ள கேட்கத் தெவிட்டாதக் கானல்வரிப் பாடல்களில் ஒன்று இது. (காவிரியாற்றின் புகழைச்சாற்றுவதால் இது ஆற்றுவரி எனப்படும்.)
பாடலின் பொருளறிந்து சுவைத்தால் இன்னும் இன்பம் கூடுமன்றோ?
”திங்களைப் போன்ற வெண்கொற்றக்குடையுடன் செங்கோலாட்சிசெய்யும் சோழமன்னன், கங்கையென்னும் வேறோர் பெண்ணைச் சேர்ந்தாலும் அதற்காக ஊடல்கொள்ளமாட்டாளாம் காவிரிப்பெண்ணாள்; அதுவே பெண்டிரின் பெருங்கற்பு(!) என அறிந்தேன்; அத்தகைய கற்புடைய காவிரியே நீ வாழி!” என்று காவிரியைத் தன் பாவில் வாழ்த்துகின்றான் கோவலன்.
கோவலனின் பாடல்வரிகளைக் கவனமாகக் கேட்டிருந்த மாதவி, ”இவர் பாடலுள் (விவகாரமான) வேறோர் குறிப்புத் தென்படுகின்றதே! கணவன் எப்படி இருந்தாலும் அவனை மன்னித்து மதித்து நடப்பதே மங்கைக்கு அழகு என்றல்லவா இதன் பொருள் அமைகின்றது! சரி, இருக்கட்டும்! என்முறை வந்ததும் இவர் பாடலுக்குத் தக்க பதிலடி தருகிறேன்” என்று தனக்குள் குறும்பாக எண்ணிக்கொண்டாள்.
தான் வேறோர் பெண்ணை நேசிப்பதைப் போன்ற பொருள்தொனிக்க மேலும் சில பாடல்களைக் கோவலன் பாடிமுடித்ததும் மாதவியின் முறை வந்தது. தன் காந்தள் மென்விரல்கள் யாழில் பாந்தமாய் விளையாட, பின்வரும் பாடலைப் பாடத் தொடங்கினாள் அவள்.
மருங்குவண்டு சிறந்தார்ப்ப மணிப்பூஆடை அதுபோர்த்துக்
கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தாய்வாழி காவேரி
கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தவெல்லாம் நின்கணவன்
திருந்துசெங்கோல் வளையாமை அறிந்தேன்வாழி காவேரி! (சிலப்: கானல்வரி: 144-147)உன் கரைகளின் இருமருங்கிலும் வண்டுகள் கீதமிசைக்க, அழகிய பூவாடை போர்த்து, ஆற்றில்செல்லும் கரிய கயல்மீன்களையே கண்களாகக்கொண்டு விழித்துநோக்கி, ஒல்கி ஒசிந்து நடைபயிலும் காவிரிப் பெண்ணே…நீ வாழி!
நீ இவ்வாறு அழகுநடை பயிலக்காரணம் உன் கணவனாகிய சோழமன்னனின் வளையாத செங்கோலாட்சியே என்றறிந்தேன் என்கிறாள் மாதவி.
இங்கு அவள் குறிப்பால் உணர்த்துவது…”நேரிய ஆட்சிசெய்யும் உன் கணவனாகிய சோழமன்னன் சீரிய ஒழுக்கமுடையவனாகவும் இருப்பான்; அவன் அவ்வாறு ’நன்னடையோடு நடப்பதாலேயே அவன் மனைவியாகிய நீயும் பூரிப்போடு நளின நடை நடக்கின்றாய் என்பதே!”
இப்பாடலைத் தொடர்ந்து, (கோவலனுக்குப் போட்டியாக) தானும் வேறொருவனை நேசிப்பதுபோன்ற கருத்தமைந்த காதற்பாடல்களை மாதவி பாட, விதி தன் வேலையைக் காட்டத் தொடங்கியது! உண்மையாகவே மாதவி வேறொருவனை மனத்தில்வைத்தே இப்பாடல்களைப் பாடுகின்றாள் என்று தவறாக எண்ணிக்கொண்ட கோவலன் கடுங்கோபம் கொண்டவனாய் அவளிடம் சொல்லிக்கொள்ளாமலே அவ்விடம் விட்டு அகன்றான். அந்தப்பிரிவு நிரந்தரப் பிரிவாகவே அவர்கள் வாழ்வில் அமைந்துவிட்டது.
இதைத்தான், ’யாழிசைமேல் வைத்து ஊழ்வினை உருத்தது’ என்று வேதனையோடு விளம்புவார் இளங்கோ.
கோவலனும் மாதவியும் யாழிசைத்துப் பாடுகின்ற இப்பாடல்களைக் கானல்வரிப்பாடல்கள் என்று சொல்வதினும் தித்திக்கும் கன்னல்வரிப் பாடல்கள் என்று சொல்வதே சாலப்பொருத்தம். ஓசைநயமும் தாளக்கட்டுமுடைய இசைத்தமிழ்ப் பாடல்கள் இவை. புரியாத மொழிகளில் எதை எதையோ பாடிக் கேட்போரைச் சங்கடத்தில் ஆழ்த்தும் நம் செந்தமிழ்நாட்டு இசைவாணர்களும் வாணிகளும் இதுபோன்ற இன்றமிழ்ப் பாடல்களையும் இடைஇடையே அரங்கில்பாடினால் தமிழிசை மீண்டும் தழைக்காதோ?
சங்க இலக்கியப் புறப்பாடல்களும், அகப்பாடல்களும், நெஞ்சையள்ளும் சிலம்பும் போட்டிபோட்டுக்கொண்டு காவிரியின் வளத்தையும் நலத்தையும் பாடிப் பரவியிருக்கின்றன. அவற்றில் சிலவற்றையே இங்குநான் தொட்டுக் காட்டியுள்ளேன்.
சங்ககாலத் தமிழகத்தைத் தன் தண்புனலால் செழிக்கவைத்த காவிரிப் பேராறு பிற்காலச்சோழர்கள் காலந்தொட்டே பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க ஆரம்பித்ததை வரலாறு நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.
அவைகுறித்து அடுத்த பகுதியில் அலசுவோம்!
(தொடரும்)
-
படக்கவிதைப் போட்டி 85-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான ஒளிப்படத்தை எடுத்தவரும், அதன் தேர்வாளரும் ஒருவரே; அவர்தான், நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியரான திருமதி. சாந்தி மாரியப்பன்! அவருக்கு நம் நன்றியை முதலில் பதிவுசெய்துவிடுவோம்!
மாடுகள் ஒன்றோடொன்று முட்டிக்கொள்ளும் இக்காட்சி, ”வடித்த சோற்றுக்கஞ்சி அகன்ற தெருவினில் ஆறாய் ஓட, அந்தக் கஞ்சியாற்றில் நின்றபடி இரு எருதுகள் பொருததாலே அது சேறாய் மாறியது” என்று புகார் நகரத்தின் சோற்றுவளம் பேசும் பட்டினப்பாலை வரிகளை எனக்கு நினைவூட்டுகின்றது.
….அகனட்டிற்
சோறுவாக்கிய கொழுங்கஞ்சி
யாறுபோலப் பரந்தொழுகி
ஏறுபொரச் சேறாகி… (பட்டினப்பாலை: 43-46)இக்காட்சி நம் கவிஞர்களுக்கு எத்தகைய நினைவுகளைக் கிளறியிருக்கின்றது என்பதை அறிந்துவருவோம் இனி!
***
ஆறாமறிவை அடையாத உயிர்களெல்லாம் சண்டையின்றிச் சமாதானமாய் வாழ்ந்திருக்க, ஆறறிவு படைத்த மனிதன்மட்டும் எப்போதும் சண்டையிட்டு மண்டையை உடைத்துக்கொள்கிறானே, ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு என்பதை உணர மறுக்கிறானே என்று வருந்துகின்றார் திரு. சி.ஜெயபாரதன்.
காளைச் சண்டைகள்,
கோழிச் சண்டைகள்,
யானைச் சண்டைகள்,
ரோமா புரியில்
மானிட விலங்குச் சண்டைகள்,
அனுதினம்
ஆண் பெண் சண்டைகள்,
ஆயுதப் போர்கள்,
அணுகுண்டு யுத்தம்,
உலகப் போர்கள்,
யுக யுகமாய் நேர்வதைத்
தவிர்த்தாயா ?
தடுக்க நீ முயன்றாயா ?
கலை உலகில்,
சண்டை இல்லாத
திரைப் படங்கள் குறைவு !
சண்டையில்
மண்டை உடைந்தாலும் மாந்தர்
மரணம் அடைந்தாலும்,
சண்டைகள் குறையா !
பிறவிக் குணமாய்ப்
பிறப்புரி மையாய்
பரம்பரை வழக்கமாய்
மரண கீதம் பாடுகிறோம் !
ஆறறிவு படைத்த மனிதா !
ஈரறிவுள்ள எறும்பினம்,
தேனீக்கள்
சேர்ந்து வாழ்வதைக் காணடா !
தேன் திரட்டும்
ஆக்க வினையைப் பாரடா !
ஊக்கமுடன், பொறுமையுடன்,
ஒன்று சேர்ந்து வாழடா !
மூடச் சண்டையில்
நிம்மதி ஏதடா ?
ஒற்றுமையே வேத மென்று
ஓதடா !***
இவ்வாரம் அதிகமான கவிதைகளைக் காண முடியாதது சற்று ஏமாற்றத்தையே அளிக்கின்றது.
இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதையை உங்கள் பார்வைக்குத் தருகிறேன்.
ஆறாவதாய்…
இனத்துடன்
இனம் மோதுவது
மனிதனின் க(வ)லை…இதை இப்போது
கற்றுக்கொண்டுவிட்டன
கால்நடைகளும்!
மனிதனைப் பார்த்து
மாடுகளுக்கும் வந்தது-
இந்த ஆறாம் அறிவு!”ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் ஆறாமறிவு பெற்ற மானுடனின் உயர்பண்புகளல்லவா! ஒற்றுமையை விரும்பும் மாடுகளே! நீங்கள் ஒருவரோடொருவர் பொருதழிவதைப் பார்த்தால் அந்த ஆறாமறிவு உங்களுக்கும் வந்துவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகின்றதே!” என்று வேதனையோடு வேடிக்கை செய்திருக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன். அவரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.
-
குழந்தைகள் தினம்
ரா.பார்த்தசாரதி
கள்ளமில்லாச் சிரிப்பும், தளிர் நடையுமே குழந்தையின் உருவமே
சிரிப்பினை கண்டு சிரித்து வெகுளிதனத்தை வெளிப்படுத்தும் முகமே
எந்த வித எதிர்பார்ப்பின்றி , நம்மை கண்டு ஓடி வரும் குழந்தைகளே
அன்பிற்கும், தாய் பாசத்திற்குமே கட்டுப்படும் பாசமுள்ள குழந்தைகளே!
குழந்தையின் மழலைச் சொல் யாழையும் குழலையும் விடச் சிறந்தது
மழலைச் சொல் கேளாதவர் பெருஞ்செல்வம் பெற்றிடினும் வீணே
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று எனக் கூறுவர் .
குற்றங்களை மறந்து, பகைமை கொள்ளாது ஒன்று சேர்ந்திடுமே !
இந்திய பிரதமர் நேருவிற்கு குழந்தைகள் என்றால் விருப்பம் அதிகம்
தன் பிறந்த நாளையே குழந்தைகள் தினமாக கொண்டாட விரும்பினார்
அன்று முதல் நேருவின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாயிற்றே
குழந்தைகள் தினம் என்றாலே நேருவின் பிறந்த நாளாயிற்றே !
-
இந்தியாவுக்குதவிடட்டும் !
எம். ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா
ஐஞ்ஞூறும் ஆயிரமும் ஆலாய்ப் பறக்கிறது
ஆரிடம் போவதென அங்கலாய்த்து நிற்கிறது
வங்கிகளோ நோட்டைமாற்ற மலைத்துமே நிற்கிறது
எங்கிருந்தோ நோட்டெல்லாம் எட்டியெட்டிப் பார்க்கிறது !
ஏழைகளோ உள்ளநோட்டை இரக்கமுடன் பார்க்கின்றார்
இருக்கின்றார் அவர்களுடம் எடுத்துவிட முயலுகிறார்
காவல்துறை இப்போது கண்விழித்துப் பார்க்காவிடின்
கள்ளரிடம் மறுபடியும் நோட்டுக்கற்றை குவிந்துவிடும் !
மோடியெனும் மூளையது முன்வைத்த திட்டமதை
ஆடிவிடச் செய்வதற்கு அநேகம்பேர் முயலுகிறார்
தாடிவைத்த மோடிஐயா தளர்வடைந்து போகாமல்
கோடிகளைப் பதுக்குவாரை கொண்டுவந்து நிறுத்துங்கள் !
கறுப்புப் பணமெல்லாமே கால்முளைத்து வெளியில்வர
எடுக்குமுங்கள் நடவடிக்கை இந்தியாவுக் குதவிடட்டும்
பணமுதலை பலவின்று பரிதவிக்கும் நிலைபார்த்து
பாரதத்தாய் மனம்மகிழப் பார்த்திடலாம் மோடிஐயா !
என்னதிட்டம் கொணர்ந்தாலும் எதிர்ப்புவந்து முன்னிற்கும்
சொன்னபடி நீங்கள்செய்தால் துட்டர்தமைத் துடைத்திடலாம்
நாணயத்தைக் காப்பாற்ற நல்லதிட்டம் கொண்டுவந்தீர்
நாணயமாய் நடக்குமுங்கள் நாநயத்தை மெச்சுகிறோம் !
-
நலம் .. நலமறிய ஆவல் – (30)
நிர்மலா ராகவன்
நீங்கள் கர்வியா, பயந்தாங்கொள்ளியா?

தானே தன்னைப்பற்றிக் குறைவாக ஏதாவது கூறினால், அது அடக்கத்தின் அறிகுறி என்று பலரும் நினைக்கிறார்கள்.“நான் ஒரு பயந்தாங்கொள்ளி!” என்று என் சக ஆசிரியை ஒருத்தி எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பாள்.
இதில் என்ன விபரீதம் என்றால், நாளடைவில், நாம் சொல்வதை நாமே நம்பிவிடுகிறோம். நம் உள்மனம் நாம் சொல்வதை ஆராயச் சக்தி இல்லாது, அப்படியே ஏற்று விடுவதால் வருவது இந்த அபாயம்.
குறை தம்மேல்தான் என்று உணராது, தம்மைப்போல் இல்லாது, வெற்றிப்பாதையில் பீடு நடைபோடும் பிறரைப் பார்த்து வயிற்றெரிச்சல் கொள்வதால் என்ன பலன்?எடுத்த எந்தக் காரியத்திலும் வெற்றி பெறும் துணிவு சிலருக்கு மட்டும் எப்படிப் பிறக்கிறது என்று ஆராய்வோமா?
இயற்கையாக அமையாவிட்டாலும், இது அமைத்துக்கொள்ள முடிவதுதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
என் மாணவி ஒருத்தி பெரிய பரீட்சை எழுதி, சுமாராகத் தேர்ச்சி பெற்றதும், “Well, I tried my best!” என்று தோள்களைக் குலுக்கிக்கொண்டாள்.
எனக்கு வேடிக்கையாக இருந்தது. அவள் படிப்பில் போதிய அக்கறை செலுத்தாது இருந்தது எனக்குத் தெரியும். அவளுடைய best என்னவென்று அவள் முயற்சிகூட செய்து பார்க்கவில்லை, பாவம்!
என் சீன மாணவிகள் என்னிடம் கேட்பார்கள், “இரவில் எத்தனை நேரம் தொலைகாட்சியில் திரைப்படங்கள் பார்த்தாலும் சலிப்பதில்லை. கண்விழித்துப் பார்க்க முடிகிறது. ஆனால், பாட புத்தகங்களை எடுத்தால் மட்டும் உடனே தூக்கம் வருகிறதே! ஏன், டீச்சர்?” என்று.
தெரியாமலா, தொலைகாட்சிக்கு `முட்டாள்களின் பெட்டி’ (IDIOT BOX) என்று பெயர் வைத்திருக்கிறார்கள்?
பார்ப்பவர்களுக்கு எது பிடிக்கும், எது நல்லது என்று யாரோ முடிவு செய்கிறார்கள். நாமும் அதிகம் யோசியாது, சோம்பேறித்தனமாக உட்கார்ந்து பார்க்கிறோம். பார்ப்பது எல்லாவற்றையும் புரிந்துகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. பரீட்சையா எழுதப்போகிறோம்! மூளைக்கு அதிக வேலை கொடுக்காததால், ரசிக்கும்படி இருக்கிறது என்றெல்லாம்தான் தோன்றிப்போகிறது ரசிகர்களுக்கு.
பாட புத்தகங்களானால், அதில் ரசிக்கும்படியாக எதுவும் இருக்காது. மூளைக்கு வேலை கொடுப்பதென்றாலே சிரமம்தான். உடனடியாக என்ன ஆதாயம் கிடைக்கிறது என்றும் யோசனை போகும்.ஒரு காரியத்தைச் செய்தால் உடனடியாக ஏதாவது நன்மையோ, இன்பமோ கிடைக்க வேண்டும் என்ற மனப்பான்மை இருந்தால் முன்னுக்கு வரமுடியாது.
குழந்தைகளுக்கு இது புரியாததால்தான் முதல் சில வருடங்கள் பள்ளிக்கூடத்திற்குப் போக அடம் பிடிக்கிறார்கள். விளையாட்டில்தான் அவர்கள் மனம் போகும்.
ஆனால் எப்போதுமே அப்படி இருக்க முடியுமா? எந்தத் துறையாக இருந்தாலும், பணமோ, புகழோ கிடைக்க பொறுமையும் நம்பிக்கையுமாகக் காத்திருக்கும் மனப்பான்மை அவசியம்.
கதை எழுதுவதை எடுத்துக்கொள்ளுங்கள்.
பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் ஒரு மொழியின் இலக்கணத்தைக் கற்றுக்கொடுத்தால் மட்டும் நன்றாக எழுதிவிட முடியாது. அம்மொழியில் பல ரகப் புத்தகங்களையும் படித்தால்தானே எழுதுவது செம்மையாக இருக்கும்? அதுபோல், நிறைய உபயோகமான விஷயங்களையும், நற்பெயர் வாங்கிய கதாசிரியர்களின் படைப்புகளையும் பிரயத்தனப்பட்டு படித்தால் தரம் உயர வாய்ப்பிருக்கிறது.
எழுதியதைப் பலமுறை திருத்தவும் தயாராக இருக்கவேண்டும். `ஐயோ! இவ்வளவு மட்டமாக எழுதிவிட்டேனே!’ என்று மனம் தளரக்கூடாது. நம் மனதில் தோன்றுவதையெல்லாம் எழுத்து வடிவில் கொண்டுவருவதற்குப் நீண்ட கால அனுபவம் தேவை.
என் சொந்தக் கதை (பொறுத்தருள்க!): எட்டு வயதில் ஒரு கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றதிலிருந்தே எழுத்தாளராக வேண்டும் என்ற பேராவல் எழுந்தது எனக்குள்.
பத்து வயதிலிருந்து எழுத ஆரம்பித்தேன். ஆனால், எனக்கே புரிந்தது நான் எழுதியது அப்படி ஒன்றும் சிறப்பாக இல்லை, எந்தப் பத்திரிகையும் ஏற்காது என்று.
`நன்றாக இல்லை என்றால் ஏன் எழுதுகிறாய்?’ என்று என் தாய் கேட்டார்.
`யோசிக்கிறபோது நன்றாக இருக்கிறது. எழுதியவுடன் ஏனோ அப்படி இல்லை!’ என்றேன் குழப்பத்துடன்.
இருந்தபோதும், மனம் தளராமல் எழுதினேன், `வேலையற்ற வேலை! இந்த எழுத்தா நாளைக்கு உனக்கு சோறு போடப் போகிறது?’ என்ற பிறரின் கேலியை அலட்சியம் செய்து.
யார் என்ன எதிர்ப்பு தெரிவித்தாலும் நாம் எடுத்துக்கொண்ட காரியத்தை முனைந்து செய்தால் வெற்றி கிடைப்பது உறுதி. சில எழுத்தாளர்களுக்கு நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர்கூட அங்கீகாரம் கிடைக்கலாம். அது அவர்களது விடாமுயற்சிக்குக் கிடைத்த பரிசு.
ஒரு பெரிய பெட்டி நிறைய நான் எழுதியவைகள் நிறைந்தன. `குப்பை’ என்று பிறர் கருதினார்கள். அது நான் அடைந்த பயிற்சி என்று பின்பு புரிந்தது.
பல வருடங்கள் கழித்து என் கதை ஒன்று பிரசுரமாகியது. அதன்பின், ஆங்கில நாவல்கள் நிறையப் படித்தேன். இன்னும் படிக்கிறேன். (`பெரியவர்கள் கதையைப் படிக்கக்கூடாது!’ என்று அம்மா கண்டித்துச் சொன்னதிலிருந்தே தமிழில் நிறையப் படிக்க ஆரம்பித்திருந்தேன்).
ஐந்தாண்டுகள் கழிந்ததும், சிறுகதை, நாடகப் போட்டிகளில் பரிசு!
நாற்பது வயதில், `ஆங்கிலத்திலும் எழுதிப் பார்க்கலாமே!’ என்ற யோசனை வந்தது. ஆனால் எழுதியது எனக்கே திருப்தி அளிக்கவில்லை. அடுத்த மூன்று ஆண்டுகள் இடைவிடாமல் ஆராய்ச்சி செய்தேன்.
பிறரது கதைகளில் வர்ணனையைப் படிக்க பொறுமையில்லாது, உரையாடலுக்கு தாவுகிறவள் நான். என் பாணி கரு, நாடகம் (PLOT AND DRAMA) என்று முடிவு செய்துகொண்டேன். எழுத முடிந்தது.நான் ஆங்கிலச் சிறுகதைப் போட்டிகளிலும் பரிசு பெற்றது கண்டு என் பெற்றோருக்குக் கொள்ளைப் பெருமை.
`நீ! ஆங்கிலத்தில் எழுதுகிறாயா! என்னால் நம்பவே முடியவில்லை. I CAN’T GET OVER IT!’ என்று பலமுறை கூறிய என் வயதொத்த உறவினர்களையும், உடன் வேலை பார்த்த ஆங்கில ஆசிரியைகளையும் அலட்சியம் செய்தேன்.
`எழுதுவதால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது?’
`நீங்கள் மத்திம வர்க்கத்தினரைப்பற்றியே நிறைய எழுதுகிறீர்கள். படிப்பவர்களுக்கு போரடித்துவிடும்!’
`ஒரு வேளை, நாம் எழுதுவதெல்லாம் குப்பைதானோ?’ என்ற சந்தேகத்தை என்னுள் புகுத்தப் பார்த்தவர்கள் பலர்.
என்னைப் பாதித்தவற்றை, தெரிந்தவற்றை, எனக்குப் பிடித்தவகையில் எழுதுகிறேன். அதை ஏற்று, பிரசுரம் செய்கிறார்கள். இது போதாதா என்று இப்படியெல்லாம் பேசுகிறவர்களை அலட்சியம் செய்துவிட்டேன். நாம் எழுதுவது எந்த வகையிலாவது பிறரைத் தாக்கினால், அதுவே நாம் அடையும் வெற்றிதான்.
நாம் எந்தக் காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கும்போதும், அதில் ஓரளவு வெற்றி பெற்றபின்னும், `என்ன கிழித்துவிட்டாள்!’ என்று புறம் பேசுகிறவர்கள் பொறாமையால் பேசுகிறவர்களாக இருப்பார்கள். அவர்களைப் போன்றவர்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்தால் தோல்வி அடைவது என்னவோ நாம்தான். நம்மைக் கவிழ்க்கப் பார்க்கிறவர்களை `நண்பர்கள்’ என்று கருதி ஏமாறாமல் இருப்பதுதான் நமக்கு நாமே செய்துகொள்ளும் நன்மை.
`நம்மை இவள் அலட்சியப்படுத்துகிறாளே!’ என்ற ஆத்திரத்தில், `கர்வி’ என்று பிறரிடம் அவதூறு பேசுவார்கள். பேசிவிட்டுப் போகட்டுமே, நமக்கென்ன நஷ்டம்!
தொடருவோம்






















