-எம். ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா

சர்க்கரைநோய் நோயல்ல எனச்சாற்றும் உரைகேட்பார்
சந்தோஷக் கடல்மூழ்கிச் சர்க்கரையை நினைந்திடுவார்
சர்க்கரைநோய் விளைவுபற்றிச் சரியாக விளங்காமல்
தாம்விரும்பும் சர்க்கரையைத் தனியாகச் சுவைத்துநிற்பார்!

உரைகள் பலகேட்டாலும் உளமதனில் இருத்தாவிடின்
விளைவு பலவந்தெம்மை வீழ்த்திவிடும் எனுமெண்ணம்
பலர்மனதில் பதியாமல் பாதிவழி  நிற்பதுவே
நலனிழந்து போவதற்கு நற்சான்றாய் இருக்குதன்றோ !

நோய்க்கெல்லாம் தாயாகச் சர்க்கரைநோய் விளங்குதென
நாட்டிலுள்ள வைத்தியர்கள் நாளாந்தம் சொல்லுகிறார்
பேய்க்குணத்தால் இவையெதையும் எம்மனது ஏற்காமல்
வாய்க்கின்ற உணவையெல்லாம் வயிற்றுக்குள் அடைத்துவிடும்!

சமாதானம் பலசொல்லிச் சர்க்கரையை எடுத்திடுவார்
சலரோகம் அவரிடத்தில் சன்னதமே ஆடிநிற்கும்
சிலவேளை மருந்தெடுப்பார் பலவேளை அதைமறப்பார்
அதனாலே அவரின்பம் அத்தனையும் பறிகொடுப்பார்!

உடல்பருக்கும் உடல்மெலியும் உற்சாகம் குறைந்துவிடும்
நடைகூடத் தளர்ந்துவிடும் நடுக்கமும் வந்துநிற்கும்
இவையெல்லாம் இனிப்பென்னும் இம்சைதரும் விளைவாகும்
இன்சுலினை எடுத்தெடுத்து எல்லோரும் ஏங்கிநிற்பார்!

இனிப்புக் கண்டவிடமெல்லாம் இளித்துநிற்கக் கூடாது
தனித்துநின்று இனிப்பதனைச் சுவைத்துநிற்றல்  கூடாது
மனம்விரும்பும் உணவுகளை வாயில்போடக் கூடாது
மருந்தோடு உடற்பயிற்சி மறந்துவிடல் கூடாது !

நேரங்கெட்ட நேரத்தில் நிறையவுண்ணக் கூடாது
நாருள்ள  உணவுகளை நாம்மறக்கக் கூடாது  ஊர்விட்டுச் சென்றாலும் உணவுண்ணும்  முறையனைத்தும்
மாறாமல் இருப்பதற்கு மறந்துவிடக் கூடாது!

பச்சையாய்க் காய்கறிகள் பழவகைகள் எடுக்கவேணும்
இச்சையுடன் நாமவற்றை எப்பொழுதும் ஏற்கவேணும்
அச்சம்தரும் உணவுகளில் ஆசைகொள்ளல் தவிர்த்துவிட்டால்
அநேகம்பேர் நிம்மதியை அடைவதினைக் கண்டிடலாம்!

நாவிரும்பும் உணவுகளை நாமொதுக்க எண்ணிடுவோம்
நலன்விளைக்கும் உணவுகளை நாவேற்கச் செய்திடுவோம்
நோய்பற்றித் தெளிவுற்று நுடங்காது இருந்திடுவோம்
வாழ்நாளை மனமிருத்தி வாழ்ந்திடுவோம் நல்வழியில்!

மைசூர்பாகை மறந்துவிடு
மணக்குமல்வாவைத் தூக்கியெறி
கேசரிகிட்டவே போகாதே
கிறுகிறுப்புனக்கு வந்துவிடும்
எந்தலட்டையும் எடுக்காதே
வந்திடுமுனக்குச் சங்கடமே
இனிப்புமுறுக்கை எடுத்துவிடின்
தவித்துநிற்பாய் நோயாலே
சர்க்கரைப்பொங்கலை தவிர்த்துவிடு
சந்தோஷமுன்னைத் தேடிவரும்
இனிப்பைக்கண்டால் நாவூறும்
இவைகளனைத்தும் இடையூறே
இனிப்பைப்பற்றி நினையாமல்
இனிப்பாய்வாழ எண்ணிடுவோம்!

வருமுன்னர்க் காப்பதற்கு வழிகள்பல இருக்கிறது
வந்தபின்னர் எமைக்காக்கும் வழிகளுமே விரிகிறது
தினமும்நாம் நலன்பற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டால்
தினமுமே எம்வாழ்வு தித்திப்பாய் இருக்குமன்றோ!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *