P.L.செல்வமாணிக்கம்

தங்கராசுக்கு மனசுக்கு சந்தோசமாக இருந்தது. இருக்காதா பின்னே.

ரொம்ப நாளக்கிப் பிறகு, கூத்துக் கட்ட சந்தர்ப்பம் வந்திருக்கு. கண்டரமாணிக்கத்துல, மாணிக்க நாச்சியார் கோயில்ல சித்திரை திருவிழா நடக்குது. நாட்டார் மண்டகப்படிக்கு வள்ளி திருமணம் கூத்து வைக்கிறதா முடிவு செஞ்சு தங்கராசுக்கு அச்சாரம் கொடுத்திருக்காங்க. தங்கராசு மனசு இருபத்தி ஐந்து வருஷம் பின்னாடி போனது. அப்பவெல்லாம் சித்திரை, வைகாசி வந்திருச்சின்னா , ராஜபார்ட் தங்கராசு, கூத்து இல்லாத நாளே இருக்காது. முருகன் வேசங்கட்டி மேடையில வந்து பாட ஆரம்பிச்சா, ஊர்சனம் அசையாம பாக்கும். ராத்திரி பத்து மணிக்கு ஆரம்பிக்கிற கூத்து, அதிகாலை ஐஞ்சு மணிக்கு முடியும்.கூத்து முடியிற நேரம், வள்ளிய கல்யாணம் செய்ரப்ப, ஊரே எந்திருச்சு கையெடுத்து கும்புடும். தங்கராசும் கூத்து நடக்கிறப்ப சுத்த பத்தமாத்தான் இருப்பான். கவுச்சி பக்கமே போக மாட்டான்.

வரும்படியும் நல்லாத்தான் கிடைச்சுது. வீடும், நிலம், நீச்சுன்னு ஓரளவுக்கு சொத்தும் வாங்கிப்போட்டிருந்தான்.வாழ்க்கையும் நல்லாத்தான் போயிட்டு இருந்சுச்சு. கூத்த நம்பின அளவு, தங்கராசு ஜாதகத்தையும் நம்பினான்.முதல்ல ஒரு பொண்ணை ஜாதகம் பாத்து தான் கட்டுனானன், இந்தப் பொண்ணக் கட்டிக்கிட்டா, .ராஜ வாழ்க்கை கிடைக்குமுன்னு , ஜோசியக்காரன் சொன்னத நம்பி.

வரிசையா மூணு பொண்ணு பொறந்துச்சு.

கூத்துல ராஜபார்ட் வேசம் போட்டப்ப மட்டும் தான் ராஜ வாழ்க்கை கிடைச்சுது.

தங்கராசுக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. ஒன்னத் தவிர. அடிக்கடி ஜாதகம் பார்ப்பான். ஜோசியம் கேப்பான். அவனோட பெரிய கவலை ஒன்னே ஒன்னுதான். அவனுக்கப்பறம் கூத்துக்கட்ட வாரிசு இல்லைங்கிறதுதான். மறுபடியும் இரண்டாவது கல்யாணம் கட்டுனா ஆம்புளப்புள்ள பொறக்குமுன்னு, ஜோசியக்காரன் சொன்னத நம்பி ரெண்டாவது கல்யாணம் செஞ்சுகிட்டான். புதுசா கட்டுன பொண்டாட்டி பெத்ததும் ஒரு பொன்னு தான். மயான வைராக்கியம் பிரசவ வைராக்கியம், நமக்கு தெரிஞ்சது தானே. மறுபடியும் ரெண்டாவது பொண்டாட்டி மாசமா இருந்தா. கடவுளுக்கே நம்ம கதாநாயகனை பாக்க பரிதாபமா இருந்துச்சு போல. இந்த தடவை தங்கராசுக்கு மகன கொடுத்துட்டாரு. மதனராசுன்னு மகனுக்கு பேர் வைச்சான். சும்மா சொல்லக்கூடாது. மகனும் மன்மதன் மாதிரி தான் இருந்தான். மகனும் கூத்தில கொடிகட்டி பறப்பான்னு நம்பிக்கை வந்திருச்சு.
தங்கராசுக்கு கால் தரையிலே படல. ஊரையே கூப்புட்டு விருந்து வச்சான்.

ஐஞ்சு புள்ள பெத்தா அரசனே ஆண்டி அப்பிடின்னு சொல்லுவாங்க. தங்கராசு நிலமையை என்னன்னு சொல்றது. முன்னாடி மாதிரி கூத்துக்கு இருந்த வரவேற்பும் போச்சு. இளவட்டத்துக்கு கூத்தெல்லாம் புடிக்காம போயிருச்சு.

எட்டு மணி நேரமெல்லாம் யாரும் உக்காந்து கூத்து பாக்க தயாரா இல்ல. எல்லாருக்கும் இப்ப சினிமா பாட்டுக்கச்சேரியும், ஆட்டமும் தான் புடிக்குது.

இப்பவெல்லாம் வருசத்துக்கு நாலு ஐஞ்சு கூத்து நடக்கிறதே பெரிய விசயமா போச்சு. அரசாங்கம் கலை நிகழ்ச்சி நடத்திறப்ப கூத்தும் நடத்துவாங்க. வெளி நாட்டுக்காரங்கள கூப்பிட்டு அவுகளுக்கு, கரகம், பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம்,மயிலாட்டம், கூத்து எல்லாம் பெருமையா காமிப்பாங்க. கலைஞர்களுக்கு பொன்னாடை போத்தி, கொஞ்சம் காசும் கொடுப்பாங்க. தங்க ராசுவும்,அவுக ஆளுகளோட போய் கூத்து நடத்திட்டு வருவாப்புல. ஊர்ல நடத்திற மாதிரி எட்டு மணி நேரம் இல்லாம, மூணு மணி நேரம் கூத்து நடக்கும்.

தலைமை தாங்குற அமைச்சர் ஒரு மணி நேரம் இந்தக் கலைகளோட பாரம்பரியத்தப்பத்தி பேசுவாங்க. இந்தக் கலைகள் அழிஞ்சு போகாம காப்பத்திறதுக்கு ஒரு குழுவை அமைக்கிறதா சொல்லுவாங்க. ஒரு சில மாசத்துல  குழுவையும் அமைச்சிருவாங்க. குழுவில இருக்கிற உறுப்பினர்கள பாத்தா கோவம்தான் வரும். தமிழே தெரியாதவனும்.கூத்தையே இது வரைக்கும் பாக்காதவனும்தான் இதுல இருப்பானுக.

தங்கராசுக்கு கூத்தும் கொறஞ்சுகிட்டே வந்துச்சு. பிள்ளைகள் வளர வளர, தங்கராசுவின் சொத்தும் கரைஞ்சுகிட்டே  வந்தது. இருந்தும் தங்கராசுக்கு கூத்தின் மேலிருந்த பிரியம் ஒரு துளி கூட குறையவில்லை. சாப்பிடுவது, தூங்குவது போல, ஏதாவது கதையை ஆடிப் பாடி பயிற்சி செய்து கொண்டிருப்பான். இரும்பும், வித்தையும் இருக்கக் கெடும் அப்படீன்னு அவனுக்கு நல்லாவே தெரியும். பெண் பிள்ளைகள் அப்பாவைப்போல லெச்சணமாக இருந்ததால், ரொம்ப செலவில்லாமல் கட்டிக்கொடுத்து விட்டான். மகனுக்கு கூத்து சொல்லிக்கொடுக்க முற்பட்ட போதெல்லாம், அவனுடைய மனைவிமார்களே அதற்கு விடவில்லை. வழி,வழியாக பாட்டன், பூட்டன் காலத்திலிருந்து நடத்தி வந்த கூத்து தன்னோட காலத்தோடு முடிந்து விடப்போகிறது என்று தான் மிகவும் கவலைப்பட்டான்.தங்கராசு அப்பா அடிக்கடி சொல்லுவாராம், “நம்மள மாதிரி கலைஞர்கள் நடத்துற கலை நிகழ்ச்சிகள்,உழைச்சு களச்சுப் போயிருக்கிற மக்களுக்கு உயிர் கொடுக்கிற அமுது. எந்த காலத்திலையும் இதை நம்ம விடக்கூடாது”.

அப்பாவின் சொல்லை தங்கராசு இதுவரை மறக்கவில்லை. மகனை சின்ன வயசில இருந்தே பக்கத்தில கூப்புட்டு வச்சுகிட்டு புராண கதையெல்லாம் சொல்லுவான். பாட்டும் பாடிக் கான்பிப்பான். இதெல்லாம் இந்த மகனப் பெத்த,ரெண்டாவது பொண்டாட்டி இல்லாதப்பதான். தப்பித் தவறி அவ பாத்துப்புட்டா ருத்ரதாண்டவந்தான்.

“நீ கெட்டு, இந்த குடும்பத்தக்கெடுத்ததுமில்லாம,என் புள்ளையையும் கெடுக்கப்போறியா” அப்பிடின்னு கத்த ஆரம்பிச்சான்னா, அவ வாய மூடுறது, ரொம்ப சிரமம்.

மதனராசுக்கு அம்மா சொல்றது சரியா, அப்பா சொல்றது சரியான்னு புரியாத வயசு. ஒன்னு மட்டும் புரிஞ்சுது. இப்போதைக்கு சோறு போடுறது, அப்பாவோட கூத்து இல்லை, அம்மா, அங்க இங்க வேல பாத்து அதுல கிடைக்கிற காசுலதான் குடும்பம் நடக்குது என்பது. வயிறுக்கு அப்புறம்தானே அனைத்தும்.

மகனும், மற்றவர்களோடு சேர்ந்து கொண்டு, கூத்தையும் அப்பாவையும் வெறுக்க ஆரம்பித்தான். ஆனால் நன்றாகத்தான் படித்தான். ஒரு வழியாக பொறியியல் பட்டமும் பெற்றுவிட்டான். வழக்கம் போல. வேலையில்லா கூட்டத்தில் அவனும் சேர்ந்து விட்டான்.

தங்கராசுவுக்கு இப்போதெல்லாம் தனிமை தான் கூட்டாளி ஆகி விட்டது. ராஜ வாழ்க்கை கிடைக்கும் என்று சொன்ன ஜோசியரின் வார்த்தையை இன்னும் தங்கராசு நம்பிக்கொண்டுதான் இருக்கிறான்.

“என்ன ராஜபார்ட் எந்த கோட்டைய புடிக்கப்போறிங்க” என்ற அவன் சிறு வயது தோழன் ராமசாமியின் குரல் அவனை நிகழ் காலத்துக்கு கொண்டு வந்தது.

”ஒன்னுமில்ல பங்காளி , நாளக்கி கண்டரமாணிக்கத்துல போடப்போற கூத்தை நினெச்சுக்கிட்டிருந்தேன”.

“ரொம்ப வருசத்துக்கு பிறகு உன் கூத்து நடக்கப்போகுது. கட்டாயம் நான் என் பேரன், பேத்திகளோட கூத்து பாக்க வந்திடிறேன். நேத்து உன் மகன் மதனராசனை பாத்தேன். அழகு கொட்றான். உன்னைய சின்ன வயசில பாத்த மாதிரியே இருக்கு. அவனும ராஜபார்ட்டா கூத்தில வந்தா எப்புடி இருக்கும்“.

பேசிக்கொண்டே போன கூட்டாளியை வேதனையோடு பார்த்து சிரித்தான் தங்கராசு.

“அவன்கிட்ட இதைப்பத்தி எதையும் பேசிப்புடாத. உன்னைய எதாவது பேசிப்புடுவான். அவனே படிச்சு முடிச்சு, இன்னும் வேல கிடைக்கல அப்புடின்னு வருத்தத்துல கெடக்கான்”

“நல்லா வேலைக்கு போகட்டும். நேரம் கிடக்கிற போது கூத்து போடட்டும்.” என்ற தங்கராசை இடைமறித்த ராமசாமி, “சொல்ல மறந்திட்டேன். கண்டரமாணிக்கம் சேவுகன் செட்டியார் வீட்டு சாந்திக்கு, அமெரிக்கா காரங்க நாலஞ்சு பேர் வந்திருக்காக. நாளக்கி உன் கூத்து பாக்க வருவாகளாம்” என்றான்.

“நல்லா வரட்டும், நம்ம கூத்தை பாக்குறது, நம்ம கலைக்கு கிடைக்கிற மரியாதை, எல்லாம் அந்த மாணிக்கநாச்சி செயல், கூத்துக்கான வேலை நிறைய இருக்கு, வரட்டுமா” என்றவாறே தங்கராசு அங்கிருந்து நகர்ந்தான்.

வீட்டில் நுழைந்தவன் தன் மகனை கூப்பிட்டான்.

“ராசு,இங்க வா அய்யா“ என்றவனை எரிச்சலோடு பார்த்தான் மதனராசு என்கிற மதன்.

வளரும் வரை அப்பாவை தங்கள் கதாநாயகனாக பார்க்கும் பிள்ளைகள் வளர்ந்த பின் எதிரிகளாகத்தானே பார்க்கிறார்கள்.

முறைத்துக்கொண்டே அருகில் வந்த மகனைப்பாத்து, “மெலிஞ்சு போயிட்டியேப்பா, நல்லா சாப்புடு ராசா. நல்ல வேலை நிச்சயம் உனக்கு கிடைக்கும். இந்தா இதில ஐந்நூறு ரூபாய் இருக்கு. செலவுக்கு வச்சுக்க,அப்புறம் இன்னிக்கு வள்ளி திருமணம் கூத்து இருக்கு, முடிஞ்சா வா” என்றவனை, “இந்த கூத்தை கட்டிக்கிட்டு நீங்க அழுகிறது பத்தாதா, என்னக்கி இந்த கூத்த விடுறீகளோ, அன்னைக்கு தான் நம்ம குடும்பத்துக்கு விடிவு காலம் “ என்று சீறினான்.

”அதெல்லாம் மண்டை மண்ணுக்குள்ள போகுறப்பதான் உங்க அப்பாரு இந்த கூத்த விடுவாரு“ என்று மகனப்பெத்த மகராசியின் குரல் தங்கராசின் மனதில் இடியாக விழுந்தது.

அடுத்த நாள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முழுகி கூத்துக்காக பூசையும் போட்டான் தங்கராசு. மற்ற கலைஞர்களும் அவன் வீட்டிற்கு காலையிலே வந்து விட்டார்கள். மதனராசன் வேலைக்கான நேர்முகத் தேர்விற்காக மதுரைக்கு புறப்பட்டு கொண்டிருந்தான். அம்மா,பெரியம்மா எல்லோரிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்ட அவனுக்கு,அப்பாவிடம் சொல்லிவிட்டுப் போக வேண்டும் என்று தோன்றவில்லை.

மதுரையில் நேர்முகத் தேர்வுக்கு குறைந்தது நூறு பேராவது வந்திருப்பார்கள். அத்தனைப் பேரை பார்த்தவுடன் மதனராசுக்கு உலகமே சுற்றுவது போல இருந்தது. தேவை என்னவோ அந்த அலுவலகத்துக்கு இரண்டு பேர்தான். காலையில் ஒரு எழுத்துத் தேர்வு, மதியம் ஒரு எழுத்துத் தேர்வு. தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு நேர்காணல். மதனராசு இரண்டு தேர்விலும் தகுதி பெற்று, நேர்காணலுக்காக காத்துக் கொண்டிருந்தான். அவனோடு சேர்த்து நேர்காணலுக்கு இருபது பேர் தேர்வாகி இருந்தார்கள்.

இரவு மணி ஏழு ஆகி விட்டது. பொது மேலாளர் பார்த்து ஐந்து பேரை இறுதி நிலைக்கு தேர்வு செய்திருந்தார்.அதில் மதனராசுவும் ஒருவன். ஐந்து பேரையும் நிர்வாக இயக்குநர் பார்த்து இரண்டு பேரை தேர்வு செய்யவேண்டும். மதனராசுவின் எண்ணங்கள் வேறு விதமாக ஓடிக்கொண்டிருந்தது. இந்த வேலை கிடைத்தால் அம்மாவையும், பெரியம்மாவையும் தன்னோடு அழைத்து வந்துவிட வேண்டும். அப்பா கூத்தை விடுவதாக இருந்தால், பெத்தக் கடனுக்கு கூட்டிக்கொண்டு வந்து வைத்துக்கொள்ள வேண்டும். இல்ல கூத்துதான் வேனும்னா ஊரிலே இருக்கட்டும்.

“மதனராசன்” என்று அழைக்கும் குரல் கேட்டு நனவுலகுக்கு வந்தான்.

“உள்ள போய் இயக்குநரைப் பாருங்க “ என்று சொன்னார்.

கதவைத் தட்டி விட்டு உள்ளே சென்றான். எதிரே நின்றவனைப் பார்த்து “உக்காருங்க மதனராசன் “என்றவர், வழக்கமான கேள்விகளுக்கு பிறகு ஒரு கேள்வி கேட்டார்.

”ஒரு வேளை உங்களுக்கு இந்த வேலை உங்களுக்கு கிடைக்குது அப்படீன்னா அதுக்கு என்ன காரணமா இருக்கும்?”.

மதனராசு மெதுவாக பேச ஆரம்பித்தான். ”இந்த வேலை கிடைச்சுதுன்னா, அது என் படிப்புக்கும், இன்னக்கி எழுத்துத் தேர்வில தேர்வானதும், நேர்முகத் தேர்வில் தேர்வானதும்தான்” அப்படின்னு நினைக்கிறேன்.

இயக்குநர் இளங்கோ சிரித்துக்கொண்டே சொன்னார். ”நீங்க சொல்றபடி பாத்தா உங்க தரவரிசை நாலாவது தான். அப்புறம் ஏன் இந்த வேலையை உங்களுக்கு தரப்போறேன் தெரியுமா. உங்க அப்பா தான் முழுக்காரணம். நானும் உங்க ஊர்தான். நானும் உங்க அப்பாவும் பள்ளிக்கூடத்தில ஒன்னா படிச்சோம். பதினொன்னாம் வகுப்போட உங்க அப்பா நின்னுட்டாரு. முழு நேரமா கூத்தில நடிக்கப்போயிட்டாரு. சொல்லப் போனா எங்களை விட நல்லாப் படிப்பாரு. படிச்சிருந்தா எங்களையெல்லாம் விட வசதியோட இருந்திருக்கலாம். உங்க அப்பா என்ன சொன்னாரு தெரியுமா?”

“படிச்சு வேலைக்கி போக எத்தனையோ பேர் இருக்கீங்க. ஆனா கூத்தாட எங்களை மாதிரி ஒரு சில பேர் தான் இருக்கோம் அப்பிடின்னு சொல்லிட்டாரு. மூனு மாசம் முன்னாடி ஊருக்கு வந்திருந்தேன். உங்க அப்பாவை பாத்தேன். மனசுக்கு ரொம்ப வருத்தமா இருந்துச்சு. நீங்க யாரும் அவரை மதிக்கிறது இல்லைன்னு கேள்விப்பட்டேன். பண உதவி பன்றேன்னு சொன்னேன். வேண்டாமுன்னு சொல்லிட்டாரு. ஒன்னே ஒன்னு தான் கேட்டாரு. முடிஞ்சா என் மகனை ஒரு வேலையில சேத்துவிடு அப்பிடின்னு கேட்டாரு.”

இதைக்கேட்டவுடன் மதனராசு கண்களில் இருந்து கண்ணீர் அருவியாகக் கொட்ட ஆரம்பித்தது.

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “ராஜ வாழ்க்கை

  1. The story reveals the mentality of the young generation I feel. I liked it a lot. The way the story unfolded is good. Small small things in the story was very nice 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.