காவிரி புரக்கும் நாடு – 5
-மேகலா இராமமூர்த்தி
காவிரி வெள்ளத்தில் அத்தி அடித்துச்செல்லப்பட்டதைக் கண்டவர் அனைவரும் செயலற்று உறைந்திருக்க, ஆதிமந்தியோ அலறிக்கொண்டே சென்றாள் காவிரிக்கரையோரமாய். காவிரி, கடலில் கலக்கும் இடத்தருகே வந்தவள், “கல்போன்ற வலியதோளையுடைய என்னுயிர்க் காதலனே! நீ எங்கே சென்றாய்?” என்று கதறிக்கொண்டு கடலைப் பார்த்தபடியே கண்ணீர்வழிய நின்றிருந்தாள். திடீரென்று கடலின் மத்தியிலிருந்து ஒருபெண் தோன்றினாள்; மயக்கநிலையிலிருந்த அத்தியைத் தன் மலர்க்கரங்களில் ஏந்தியிருந்த அந்த ஏந்திழை, கரையை நோக்கி விரைந்துவந்தாள். அங்கே அலமந்து நின்றிருந்த ஆதிமந்தியிடம் அத்தியை ஒப்படைத்துவிட்டுச் சரேலென்று திரும்பியவள் கடலுக்குள் மூழ்கிமறைந்தாள்!
இந்த அதிசயத்தைக் கண்ட ஆதிமந்தி, தன் கண்களையே நம்பமுடியாது திகைத்தாள். பின்னர், திகைப்பு நீங்கி மயக்கத்திலிருந்துவிடுபட்ட தன் கணவனை அன்போடு அணைத்துக்கொண்டு புகார்நகர் நோக்கி மெல்ல நடந்தாள். அத்தியைக் கடலிலிருந்து காத்து, பின்னர்க் கடலுள் மூழ்கிமறைந்த (உயிர்நீத்த) அவ்வீரமங்கையின் பெயர் ’மருதி’ என்று பரணரால் குறிக்கப்பட்டிருக்கின்றது. அத்தி உயிர்பிழைத்ததில் மகிழும் நம் உள்ளம் மங்கைநல்லாள் மருதியின் மரணத்தால் வருத்தமடைகின்றது!
…முழவுமுகம் புலராக் கலிகொள் ஆங்கண்
கழாஅர்ப் பெருந்துறை விழவின் ஆடும்
ஈட்டெழில் பொலிந்த ஏந்துகுவவு மொய்ம்பின்
ஆட்டன் அத்தி நலன்நயந்து உரைஇத்
தாழிருங் கதுப்பின் காவிரி வவ்வலின்
மாதிரம் துழைஇ மதிமருண்டு அலந்த
ஆதி மந்தி காதலற் காட்டிப்
படுகடல் புக்க பாடல்சால் சிறப்பின்
மருதி அன்ன மாண்புகழ் பெறீஇயர்
சென்மோ வாழி தோழி… (அகம்: 222 – பரணர்)
தோழி தலைவியிடம் சொல்லுகின்ற பாங்கில் படைக்கப்பட்டுள்ள அகப்பாடல் இது!
தலைவியைச் சந்திக்கத் நாள்தவறாது வந்துகொண்டிருந்த தலைவனின் வரவு சிலநாட்களாய்த் தடைப்பட்டுப்போனது. அவன் எங்குப் போனான்? என்ன ஆனான்? எனும் கவலையில் ஆழ்ந்திருந்தனர் தலைவியும் அவள் ஆருயிர்த்தோழியும். அப்போது, ஆதிமந்தியின் கதையைத் தலைவிக்கு நினைவூட்டும் தோழி, “கலங்காதே கண்மணி! நாமும் தலைவனைத் தேடிப் புறப்படுவோம்! அவனைக் காணமாட்டாது உயிர்துறப்போமாயினும் தன் காதற்கணவனைத் தேடித்திரிந்த ஆதிமந்திக்கு அவள் காதலனைக் காட்டி மறைந்த மருதிபோல நாமும் மாண்புகழ் பெறலாம்!” என்று ஆறுதல் கூறுகின்றாள். (தலைவியும் தோழியும் பேசிக்கொண்டிருக்கும் இச்செய்திகளையெல்லாம் இவர்கள் ’காணவில்லை’ என்று தேடிக்கொண்டிருக்கும் தலைவனும் மறைந்திருந்து கேட்டுக்கொண்டுதான் இருக்கிறான் என்பதையும் அறிக!)
காவிரியின் கடும்புனல் வெள்ளமானது மணமலர்களை மட்டும் அள்ளிக்கொண்டு வருவதில்லை; சற்றே கவனக்குறைவாக இருந்தால் தன் தண்புனலில் நீராடுவோரையும் அள்ளிக்கொண்டு சென்றுவிடும் அபாயமுடைத்து என்பதே ஆட்டனத்தி குறித்த பாடல்களால் நாம் அறியும் செய்தி! காவிரி நீத்தத்தில் நீராடுவது ஆபத்தோடு கூடிய இன்பமாகத்தான் இருக்கும் போலிருக்கின்றது!
ஆட்டனத்தி ஆதிமந்தி வரலாற்றைப் பாவேந்தர் பாரதிதாசன் ’சேரதாண்டவம்’ என்ற பெயரில் நாடகமாக்கியுள்ளதும், கவியரசு கண்ணதாசன் ’ஆட்டனத்தி ஆதிமந்தி’ எனும் பெயரில் காவியமாய்ப் படைத்துள்ளதும் இக்க்கதையின்பால் நம் கவிஞர்களுக்குள்ள ஈர்ப்பைப் புலப்படுத்துகின்றது.
இதோ… புகார்நகர வீதியில் ஆணழகன் ஒருவனும், ஆரணங்கு ஒருத்தியும் சிரித்துப் பேசிக்கொண்டே செல்வதைப் பார்க்கிறோம். இவர்கள் யாரென்று அறிந்துகொண்டு வருவோம் வாருங்கள்!
ஓ…தெரிந்துவிட்டது! இளங்கோவின் காப்பியத் தலைவனான கோவலனும் அவன் அருமைக்காதலி மாதவியும் அல்லவா இவர்கள்! இந்த மருள்மாலை வேளையில் மனமகிழ்ச்சியோடு எங்கோ சென்றுகொண்டிருக்கிறார்களே இருவரும்! எங்கே? புரிந்துவிட்டது! புகார்நகரில் சீரும் சிறப்புமாய்க் கொண்டாடப்படும் இந்திரவிழாவின் இறுதிநாள் இன்று! அதனால்தான் இவர்கள் இருவரும் கடற்கரைக்குச் சென்று இன்பமாய்ப் பொழுதைக்கழிக்கப் போய்க்கொண்டிருக்கிறார்கள் போலும்!
நாமும் ஓசைப்படாமல் அவர்களைப் பின்தொடர்வோம்!
கடற்கரைக்கு அருகிலுள்ள சோலையில்வந்து அமர்ந்துவிட்டனர் இருவரும். (இப்பகுதியை நெய்தலங்கானல் என்பர்). சற்றுத்தூரத்தில் துள்ளிச் சென்றுகொண்டிருந்த காவிரியாற்றைத் தன் கண்களால் பருகினான் கோவலன். விரைந்துசெல்லும் புனல்வெள்ளம் அவனுள் கற்பனைஊற்றைத் திறந்துவிட, காவிரிமங்கையைப் புகழ்ந்து கவிவெள்ளத்தைப் பாய்ச்சத் தொடங்கினான்!
திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அதுஒச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி.
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.
மங்கை மாதர் பெருங்கற்புஎன்று
அறிந்தேன் வாழி காவேரி (சிலப்: கானல்வரி: ஆற்றுவரி – 2)
சிலம்பிலுள்ள கேட்கத் தெவிட்டாதக் கானல்வரிப் பாடல்களில் ஒன்று இது. (காவிரியாற்றின் புகழைச்சாற்றுவதால் இது ஆற்றுவரி எனப்படும்.)
பாடலின் பொருளறிந்து சுவைத்தால் இன்னும் இன்பம் கூடுமன்றோ?
”திங்களைப் போன்ற வெண்கொற்றக்குடையுடன் செங்கோலாட்சிசெய்யும் சோழமன்னன், கங்கையென்னும் வேறோர் பெண்ணைச் சேர்ந்தாலும் அதற்காக ஊடல்கொள்ளமாட்டாளாம் காவிரிப்பெண்ணாள்; அதுவே பெண்டிரின் பெருங்கற்பு(!) என அறிந்தேன்; அத்தகைய கற்புடைய காவிரியே நீ வாழி!” என்று காவிரியைத் தன் பாவில் வாழ்த்துகின்றான் கோவலன்.
கோவலனின் பாடல்வரிகளைக் கவனமாகக் கேட்டிருந்த மாதவி, ”இவர் பாடலுள் (விவகாரமான) வேறோர் குறிப்புத் தென்படுகின்றதே! கணவன் எப்படி இருந்தாலும் அவனை மன்னித்து மதித்து நடப்பதே மங்கைக்கு அழகு என்றல்லவா இதன் பொருள் அமைகின்றது! சரி, இருக்கட்டும்! என்முறை வந்ததும் இவர் பாடலுக்குத் தக்க பதிலடி தருகிறேன்” என்று தனக்குள் குறும்பாக எண்ணிக்கொண்டாள்.
தான் வேறோர் பெண்ணை நேசிப்பதைப் போன்ற பொருள்தொனிக்க மேலும் சில பாடல்களைக் கோவலன் பாடிமுடித்ததும் மாதவியின் முறை வந்தது. தன் காந்தள் மென்விரல்கள் யாழில் பாந்தமாய் விளையாட, பின்வரும் பாடலைப் பாடத் தொடங்கினாள் அவள்.
மருங்குவண்டு சிறந்தார்ப்ப மணிப்பூஆடை அதுபோர்த்துக்
கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தாய்வாழி காவேரி
கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தவெல்லாம் நின்கணவன்
திருந்துசெங்கோல் வளையாமை அறிந்தேன்வாழி காவேரி! (சிலப்: கானல்வரி: 144-147)
உன் கரைகளின் இருமருங்கிலும் வண்டுகள் கீதமிசைக்க, அழகிய பூவாடை போர்த்து, ஆற்றில்செல்லும் கரிய கயல்மீன்களையே கண்களாகக்கொண்டு விழித்துநோக்கி, ஒல்கி ஒசிந்து நடைபயிலும் காவிரிப் பெண்ணே…நீ வாழி!
நீ இவ்வாறு அழகுநடை பயிலக்காரணம் உன் கணவனாகிய சோழமன்னனின் வளையாத செங்கோலாட்சியே என்றறிந்தேன் என்கிறாள் மாதவி.
இங்கு அவள் குறிப்பால் உணர்த்துவது…”நேரிய ஆட்சிசெய்யும் உன் கணவனாகிய சோழமன்னன் சீரிய ஒழுக்கமுடையவனாகவும் இருப்பான்; அவன் அவ்வாறு ’நன்னடையோடு நடப்பதாலேயே அவன் மனைவியாகிய நீயும் பூரிப்போடு நளின நடை நடக்கின்றாய் என்பதே!”
இப்பாடலைத் தொடர்ந்து, (கோவலனுக்குப் போட்டியாக) தானும் வேறொருவனை நேசிப்பதுபோன்ற கருத்தமைந்த காதற்பாடல்களை மாதவி பாட, விதி தன் வேலையைக் காட்டத் தொடங்கியது! உண்மையாகவே மாதவி வேறொருவனை மனத்தில்வைத்தே இப்பாடல்களைப் பாடுகின்றாள் என்று தவறாக எண்ணிக்கொண்ட கோவலன் கடுங்கோபம் கொண்டவனாய் அவளிடம் சொல்லிக்கொள்ளாமலே அவ்விடம் விட்டு அகன்றான். அந்தப்பிரிவு நிரந்தரப் பிரிவாகவே அவர்கள் வாழ்வில் அமைந்துவிட்டது.
இதைத்தான், ’யாழிசைமேல் வைத்து ஊழ்வினை உருத்தது’ என்று வேதனையோடு விளம்புவார் இளங்கோ.
கோவலனும் மாதவியும் யாழிசைத்துப் பாடுகின்ற இப்பாடல்களைக் கானல்வரிப்பாடல்கள் என்று சொல்வதினும் தித்திக்கும் கன்னல்வரிப் பாடல்கள் என்று சொல்வதே சாலப்பொருத்தம். ஓசைநயமும் தாளக்கட்டுமுடைய இசைத்தமிழ்ப் பாடல்கள் இவை. புரியாத மொழிகளில் எதை எதையோ பாடிக் கேட்போரைச் சங்கடத்தில் ஆழ்த்தும் நம் செந்தமிழ்நாட்டு இசைவாணர்களும் வாணிகளும் இதுபோன்ற இன்றமிழ்ப் பாடல்களையும் இடைஇடையே அரங்கில்பாடினால் தமிழிசை மீண்டும் தழைக்காதோ?
சங்க இலக்கியப் புறப்பாடல்களும், அகப்பாடல்களும், நெஞ்சையள்ளும் சிலம்பும் போட்டிபோட்டுக்கொண்டு காவிரியின் வளத்தையும் நலத்தையும் பாடிப் பரவியிருக்கின்றன. அவற்றில் சிலவற்றையே இங்குநான் தொட்டுக் காட்டியுள்ளேன்.
சங்ககாலத் தமிழகத்தைத் தன் தண்புனலால் செழிக்கவைத்த காவிரிப் பேராறு பிற்காலச்சோழர்கள் காலந்தொட்டே பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க ஆரம்பித்ததை வரலாறு நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.
அவைகுறித்து அடுத்த பகுதியில் அலசுவோம்!
(தொடரும்)