Blog

  • காதல் நாற்பது – 4, எலிஸபெத் பிரௌனிங்

    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்unnamed

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன்

    உன்வசம் உள்ளது உன் பிறவிப்பணி !
    உனக்கு அழைப்பு வருகிறது
    சிற்சில செல்வ மாளிகை
    அரங்கத்திலே!
    உன்னதப் பாக்களை
    மிக்க நளினமாய்ப்
    பாடுவோனே !
    உன் கர்ப்ப உதடுகள் உதிர்ப்பதை
    மென்மேலும் கேட்டு,
    நடன மாடுவோர் கால்கள்
    இடறி முறிந்து போய் விடும்!
    உன் உன்னத கைகளால்
    கீழ்மை யான, இந்த
    ஏழ்மை மாது இல்லத்தின்
    தாழ்ப்பாளைத் திறப்பாயா ?
    உனக்குத் தெரியாமலே
    உன்னிசைக் கீதங்கள்
    பூரணப்
    பொன் அலைகளாக
    என்  இல்லத்தின் வாசல் முன்
    வருவது பற்றி
    என்ன நீ
    நினைக்கிறாய் ?
    ஏற்று அதைத்
    தாங்கி கொள்வாயா ?
    என் வீட்டுக் கூரைக் குள்ளே
    பறக்கின்றன,
    வௌவாலும் ஆந்தைகளும் !
    விட்டில் போன்ற
    என் கீச்சுக் குரல்
    உன் மகர யாழ் முன்னே
    எப்படிப் போட்டி இடும் ?
    மெதுவாக முணு முணுப்பேன்,
    மேலும்
    என்னை ஒதுக்கி விட்டு
    விலகுவது
    எதிரொலிக் கப்படுமா ?
    ஏகாந்தனாய்த்
    தனித்து நீ
    இனிதே பாட நேர்ந்தால்
    அழுதிடும் என் நெஞ்சுக்குள்
    எழுந்திடு மோர்
    அவலக் குரல் !

     
    Poem -4

    Sonnets from the Potuguese
    By: Elizabeth Browing
    Thou hast thy calling to some palace-floor,
    Most gracious singer of high poems! where
    The dancers will break footing, from the care
    Of watching up thy pregnant lips for more.
    And dost thou lift this house’s latch too poor
    For hand of thine? and canst thou think and bear
    To let thy music drop here unaware
    In folds of golden fullness at my door?
    Look up and see the casement broken in,
    The bats and owlets builders in the roof!
    My cricket chirps against thy mandolin.
    Hush, call no echo up in further proof
    Of desolation! there’s a voice within
    That weeps . . as thou must sing . . . alone, aloof.
    **********

     

     

     

    Share
  • சர்வாதிகாரி!…

    எஸ். கோதண்டராமன்

     

         சர்வாதிகாரி அவர். நாட்டுக்கு அல்ல, வீட்டுக்கு. இங்கு அவர் வைத்தது தான் சட்டம். இன்று என்ன உணவு சமைக்க வேண்டும் என்பதிலிருந்து யார் யார் என்ன உடை அணிய வேண்டும் என்பது வரை அவர் தீர்மானத்தைப் பொறுத்தது. இட்லி சாப்பிட வேண்டும் என்று அவர் நினைத்திருக்கும்போது, வேறு எதாவது கொடுத்தால் அவருக்கு வரும் கோபத்தைப் பார்க்க வேண்டுமே. வீட்டில் மாவு இல்லாவிட்டால் கடையிலோ, அங்கும் இல்லாவிட்டால், அக்கம் பக்கத்து வீடுகளில் யாசகம் வாங்கியோ செய்து போட்டால் தான் மற்றவர்கள் பிழைக்க முடியும். அவர் தூங்கும் போது தான் மற்றவர்கள் அவரவருக்குப் பிடித்தமான நிகழ்ச்சிகளைத் தொலைக் காட்சியில் காண முடியும். தொலைபேசி ஒலித்தால் அவர் தான் முதலில் எடுக்க வேண்டும். அவர் பேசி விட்டுக் கொடுத்த பிறகு தான் மற்றவர்கள் பேச முடியும். சில சமயம், தானே பதில் சொல்லிவிட்டுப் போனை வைத்து விடுவார். யாரிடமிருந்து ஃபோன் என்று கேட்டால் பதில் வராது. “உங்களுக்குச் சம்பந்தமில்லாத விஷயம். சொல்லித் தான் ஆகணுமோ?” என்பது போல முகத்தைத் திருப்பிக் கொள்வார். இவ்வளவு வல்லாட்சியாளராக இருந்தும், வீட்டிலுள்ள அனைவரும் அவருக்கு இன்முகத்துடன் அடங்கி நடப்பார்கள்.

         எந்த வல்லாட்சியும் நிலைத்ததாக வரலாறு இல்லை. ஆனானப்பட்ட சதாம் உசேனின் சர்வாதிகாரம், எண்ணைப் பணமும் ஏராளமான ஆயுதங்களும் இருந்தும், அமெரிக்கப் படை பலத்துக்கு முன் நிற்க முடியவில்லை. ராணுவ வலிமை மிகுந்த ஹோஸ்னி முபாரக்கோ தன் சொந்த நாட்டு மக்களின் ஜனநாயகப் போராட்டத்தில் பதவி இழந்தார். இந்நிலையில் இரண்டே முக்கால் வயதான இந்த சர்வாதிகாரி எத்தனை நாள் தாக்குப் பிடிக்க முடியும்? ஆம். நம் கதாநாயகன் பிறந்து இன்றோடு 1000 முறை சூரியன் உதித்திருக்கிறான்.

         வல்லாட்சிக்கு எதிரான போராட்டத்திற்கான விதை தூவப்பட்டது அவரது இரண்டாவது பிறந்த நாள் அன்று. கையில் சாக்லேட் டப்பாவைத் தூக்கிக் கொண்டு பக்கத்து பிளாட்காரர்களுக்கு ‘பாப்பாக்கு பத்தே (பர்த் டே)’ என்று சொல்லி அவர்களுடைய கொஞ்சுதல்களைப் பரிசாகப் பெற்றுக் கொண்டு வரும் போது உடன் சென்ற அவனது தாயிடம் ஒரு பெண்மணி கேட்டார், “அடுத்த வருஷம் ஸ்கூல்லே சேர்க்கிறதுக்கு ஏற்பாடு செஞ்சுட்டிங்களா?”

         “இப்பத் தானே ரெண்டு வயசு முடிஞ்சிருக்கு. ஜூனுக்கு இரண்டரை வயசு தான் ஆகும். மூணு வயசு முடிஞ்சாத் தானே எல்கேஜியிலே சேத்துப்பாங்க.”

         “உலகம் தெரியாம இருக்கீங்களே. நல்ல ஸ்கூல்லே எல்கேஜியிலே சேர்க்க மாட்டாங்க. ப்ரீகேஜியிலே தான் சேத்துப்பாங்க. நீங்க இப்பவே ட்ரை பண்ணினாத் தான் கெடைக்கும்.”

         உடனே தாயும் தந்தையும் எது நல்ல பள்ளி என்று தெரிந்து கொள்வதற்காக இணையதளத்தில் பெற்றோர் குழுமத்தின் உரையாடல்களை எல்லாம் அலசினார்கள். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு குறை. இருந்தாலும் பொது மக்கள் மத்தியில் எது பிரபலமானது என்று தீர்மானித்து அந்தப் ப…… பள்ளிக்கு போன் செய்தார்கள்.

         “ப்ரீகேஜி அட்மிஷனை நாங்க அப்பவே முடிச்சுட்டோமே.”

         “நான் அடுத்த வருஷத்துக்குக் கேக்கறேன். ஜூன் மாசம் ஆரம்பிக்கிற கிளாசுக்கு அட்மிஷன் வேணும்.”

         “அதைத் தான் நான் சொல்றேன். வர ஜூன் பேட்சுக்கு இந்த நவம்பரிலேயே நாங்க அட்மிஷனை முடிச்சுட்டோம். இடமில்லே. சாரி.”

         “சரி, அதுக்கு அடுத்த வருஷம் எல்கேஜியிலே சேர்க்கணும்னா எப்ப அப்ளை பண்ணணும்?”

         “நாங்க ப்ரீகேஜிலே மட்டும் தான் அட்மிஷன் பண்றது. மத்த கிளாசிலே புதுசா யாரையும் சேக்கறது இல்லே.”

         இப்படி ஒவ்வொரு பள்ளியாக விசாரித்து விசாரித்து எல்லாப் பள்ளிகளிலும் எதிர்மறை விடையே கிடைத்ததால் நமது குழந்தையின் எதிர்காலமே பாழாகி விடுமோ என்ற கவலை வந்து விட்டது.

         மீண்டும் தேடுதல் வேட்டை.

         எதிர்வீட்டுப் பெண்மணி சொன்னார், “பக்கத்திலேயே ஒரு ஸ்கூல் இருக்கு. சுமாரா இருக்கும். பரவாயில்லே. ஃபீசும் கம்மி தான். வேணுமானாப் பாருங்க.”

         அந்த சுமார் பள்ளிக்குப் போனார்கள். நல்ல வேளை சேர்க்கை இன்னும் துவங்கவில்லை.

         “அட்மிஷனுக்கும் வகுப்பு துவங்குவதற்கும் இடைவெளி மூன்று மாதங்களுக்கு மேல் இருக்கக் கூடாது என்பது அரசாங்க உத்தரவு. நாங்கள் மட்டும் தான் அதைக் கடைப்பிடிக்கிறோம்.

         உங்கள் குழந்தையைச் சேர்த்துக் கொள்கிறோம். ஸ்கூல் ஃபீஸ், அட்மிஷன் ஃபீஸ், ஸ்பெஷல் ஃபீஸ்,  புத்தகம் எல்லாம் சேர்த்து 16500 ரூபாய் கட்டிவிடுங்கள். இந்த விலாசத்தில் ஸ்கூல் யூனிஃபார்ம் வாங்குங்கள். ஜூன் முதல் தேதி குழந்தையை அழைத்துக் கொண்டு வாருங்கள்.”

         அப்பாடா, ப்ரீகேஜி பிரச்சனை தீர்ந்தது. அடுத்த வருஷம் எல்.கே.ஜி. இங்கே படிக்கக் கூடாது. வேறு நல்ல பள்ளியாக இப்பொழுதிலிருந்தே பார்க்க வேண்டும்.

         ஜூன் பிறப்பதற்கு ஒரு வாரம் முன்பிலிருந்தே குழந்தையை ஸ்கூலுக்குப் போகப் போகிறோம் என்று சொல்லிச் சொல்லித் தயார் செய்தாகி விட்டது. அந்த நாளும் வந்தது. புதுச் சீருடை போட்டுக் கொண்டு பக்கத்து வீடுகளில் எல்லாம் போய் “புதூ தத்தை, ஊனிஃபாம்” என்று காண்பித்து விட்டு வந்தான் குழந்தை.

         முதல் நாள். எல்லாக் குழந்தைகளும் தாய் தந்தையுடன் வந்திருந்தார்கள். பூஜைகள் நடந்தன. ஒரு மணி நேரத்தில் அவரவர் குழந்தையுடன் வீடு திரும்பினார்கள். நாளை முதல் முறையான வகுப்பு என்று சொன்னார்கள்.

         மறுநாள். குழந்தை உற்சாகத்துடன் சீருடை மாட்டிக் கொண்டு தாயுடன் பள்ளிக்குப் போனான். கேட் அருகில் போனவுடன் அங்கிருந்த ஒரு ஆயா தாயை வெளியிலேயே நிறுத்தி விட்டுக் குழந்தையை மட்டும் வெடுக்கென்று பிடுங்கி உள்ளே தூக்கிக் கொண்டு போனார். மிரட்சியில் அழுதது குழந்தை. சில விநாடிகளில் சத்தம் நின்று விட்டது.

         ஆபரேஷன் தியேட்டரிலும், நர்சரி வகுப்பறைகளிலும் என்ன நடக்கிறது என்பது வெளி உலகிற்குத் தெரியாது. முன்னதில் நோயாளி மயக்க நிலையில் இருப்பார். பின்னதில் குழந்தைகள் நடப்புகளை வாய் விட்டுச் சொல்லத் தெரியாதவர்கள். கண நேரம் கூடச் சும்மா இராமல் ஆட்டம் பாட்டம் துள்ளல் என்று இருக்கும் சக்தியே வடிவமான 30 குழந்தைகளை மூன்று மணி நேரம் எப்படிக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது என்பது இரண்டாவது தாயான அந்த ஆசிரியைக்கு மட்டும் தான் தெரியும். வெளியில் வரும்போது குழந்தைகள் உற்சாகமாக வருவார்கள். அந்த உற்சாகம் விடுதலை பெற்ற மகிழ்ச்சியா, இது தான் நம் தலையெழுத்து என்று குழந்தை தன்னைத் தானே உணர்ந்து கொண்ட ஞானப் பரிபக்குவமா, தெரியாது.

         நாட்கள் ஓடின. தினசரி, குழந்தையை அழ அழப் பள்ளியில் கொண்டு விடுவதும் திரும்பும்போது சிரிப்புடன் வருவதும் வழக்கமாகிவிட்டது. குழந்தை பள்ளியில் சொல்லிக் கொடுக்கப்படும் சிறார் பாடல்களைத் தன் மழலை மொழியில் உதிர்க்கும்போது பெற்றோர் அக மகிழ்ந்தனர். ஒரு நாள் பாடல்களின் நடுவே    அவன் சொன்ன ஒரு சொல் வித்தியாசமாக இருக்கவே, மறு நாள் தாய் ஆசிரியையிடம் கேட்டாள்.

         “மிஸ், தூக்கத்திலே குழந்தை டார்க் ரூம், டார்க் ரூம் னு அடிக்கடி சொல்றானே, அது எந்த ரைமிலே வருது?”

         “அதுவா, அது ஒண்ணுமில்லே. இன்னொரு பையன். மகா சேட்டை. அவனைக் கொஞ்சம் வழிக்குக் கொண்டு வருவதற்காக டார்க் ரூமிலே போட்டுப் பூட்டிடுவேன்னு சும்மா சொன்னது அது.”

         ஒரு நாள், பள்ளிக்குக் கிளம்பும் நேரத்தில் குழந்தை “ஊனிபாஃம் வாந்தாம்” என்று தகராறு செய்தான். “யூனிஃபார்ம் வேண்டாமென்றால் விட்டுவிடேன், சாதாரணச் சட்டையைப் போட்டு அழைத்துக் கொண்டு போ. இவன் என்ன ராணுவப் பயிற்சிக்கா போகிறான்? என்றான் அவளது கணவன். “இன்னிக்கு ஒரு நாளைக்கு இடம் கொடுத்தா இதுவே வழக்கமாயிடும்” என்று கூறித் தாய் அவனுக்கு வலுக்கட்டாயமாக அதை அணிவித்து அழ அழக் கூட்டிக் கொண்டு போனாள். மதியம் திரும்பும் போது வழக்கம்போல உற்சாகமாக இருந்தான். மாலையில் கணவன் வீடு திரும்பியதும், “பார்த்தீங்களா, காலையில் சற்று நேரம் அழுதானே தவிர சமாதானம் ஆகிவிட்டான். அவன் சொன்னதைக் கேட்டு நாம் அவனுக்கு யூனிஃபார்ம் அணிவிக்காமல் அழைத்துச் சென்றால் அதுவே அவனது ஒழுங்கீனத்துக்கு வழி வகுக்கும். இப்பொழுதிலிருந்தே பழக்கம் பண்ணினால் தான் படிப்பில் சிரத்தை வரும். உயர்ந்த நிலையை அடைய முடியும். அவன் நாசாவின் டைரக்டர் மாதிரி உலகளவில் பெரிய பதவிக்கு வரணும், குறைஞ்சது அப்துல் கலாம் போல ஒரு இஸ்ரோ டைரக்டராகவாவது வரணும் ” என்றாள்.

         நீ சொல்ற அந்த அப்துல் கலாம் ப்ரீகேஜியும் படிக்கல்லே, எல்கேஜியும் படிக்கல்லே. உயர்நிலைப் படிப்பு வரையில் சாதாரணப் பள்ளியில் தான் படித்தார் என்று அவன் நினைத்துக் கொண்டான். சொல்லவில்லை.

         அடுத்த நாள் சாப்பிட மாட்டேன் என்று சண்டித்தனம், அதற்கு அடுத்த நாள் குளிப்பதற்கே மறுப்பு, அடுத்த நாள் பல் துலக்கவே போராட்டம் என்று வர வர அவனுடைய ஆர்ப்பாட்டம் அதிகமாகி வந்தது. அதற்கு அடுத்த நாள் காலையில் எழுந்ததிலிருந்தே அழுகை. “கூல் வாந்தாம், கூல் வாந்தாம்” என்று சிணுங்கிக் கொண்டிருந்தான். கால ஓட்டத்தின் வேகத்துக்கு நம்மால் ஈடு கொடுக்க முடியாது என்பதை உணர்ந்து, அது வரை வாய் மூடி, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த வீட்டுப் பெரியவர்கள் இப்பொழுது வாய் திறந்தார்கள். “இது என்ன பெரிய கிளாசா, ஒரு நாளைக்கு கொஞ்சம் விட்டுப் பிடியேன். அழ விடாதே” என்றாள் குழந்தையின் பாட்டி.

         “அவங்க மிஸ் சரியாத் தான் சொன்னாங்க, வீட்டிலே பெரியவங்க இருந்தா செல்லம் குடுத்துக் குழந்தையைக் குட்டிச் சுவராக்கிடுவாங்கன்னு. உங்க காலம்னு நினைச்சீங்களா, இப்பல்லாம் 99 சதவீதம் வாங்கினாப் போதாது, ஒரு அரை மார்க் கால் மார்க் கூட வாங்கினவன் அடிச்சுகிட்டுப் போயிடுவான். நாள் தவறாம ஸ்கூலுக்குப் போனாத் தான் படிப்பிலே ஈடுபாடு வரும்.” இது தாய்.

         குழந்தையைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லத் தூக்கியபோது அவன் தன் முழு பலத்துடனும் திமிறிக் கொண்டு தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றான். சமாளிக்க முடியாத நிலையில் தாய் அவன் முதுகில் ஒரு தட்டு தட்டி விட்டாள். அது வரையில் பிறர் அடிக்கப்படுவதைக் கூடப் பார்த்திராத அந்தப் பி்ஞ்சு உடல் துடித்து விட்டது. சுற்றி நின்றவர்கள் கண்களில் நீர் ததும்பியது. அவனுடைய முரண்டல் நின்றது. அழுது கொண்டே சென்றவனைப் பள்ளியில் விட்டு வந்தாள் தாய். மதியம் அவனை அழைக்கப் போனபோது அவனுடைய ஆசிரியை சொன்னார், “குழந்தை அழுகிறான் என்பதற்காக பள்ளிக்கு அனுப்பாமல் இருந்து விடாதீர்கள். அதுவே வழக்கமாகிவிடும்.” குழந்தை அழவில்லை என்றாலும் அவனது முகத்தில் இருந்த மலர்ச்சியைக் காணவில்லை.

         மாலையில் உடல் கொதித்தது. காய்ச்சல் வந்துவிட்டது. மருத்துவரிடம் அழைத்துக் கொண்டு போய்க் காட்டி மருந்து வாங்கி வந்தாள். இரவு தூங்கும் போது இடை இடையே அவன் விசிக்கும் சத்தம் கேட்டது. அவ்வப்போது “தாக் ஊம் வாந்தாம்” என்று அவனது உதடுகள் முணுமுணுத்துக் கொண்டிருந்தன.

         தாய் தூங்கவில்லை. ஆத்திரப்பட்டுக் குழந்தையை அடித்து விட்டோமே என்று அழுது கொண்டிருந்தாள். இவனை எப்படி அழாமல் பள்ளிக்குப் போக வைப்பது என்று யோசித்துக் கொண்டும் இருந்தாள்.

         தந்தை தூங்கவில்லை. குழந்தைக்குப் பள்ளிச் சூழ்நிலையை ஏற்றுக் கொள்வதற்கான மன முதிர்ச்சி இன்னமும் வரவில்லை என்பதை அவன் அறிந்து கொண்டான். கட்டாயப்படுத்தாமல் தன் இயல்புப்படி விட்டாலே அவனுடைய அறிவு வளரும் என்பதைத் தன் மனைவிக்கு எப்படிப் புரிய வைப்பது என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தான்.

         பெரியவர்களும் தூங்கவில்லை. குழந்தைகளின் குதூகலத்தை, குறுகுறுப்பை, கற்பனையை, துள்ளலை, எதையும் வியப்புடன் பார்த்து மகிழும் பால் மனத்தை இந்தக் காலக் கல்வி அடக்கி ஒடுக்கிச் சிறைப்படுத்துகிறதே, இவர்கள் கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குகிறார்களே என்று மனத்துக்குள் புலம்பிக் கொண்டிருந்தனர்.

         இதோ பொழுது புலரப் போகிறது. சர்வாதிகாரத்துக்கு எதிரான போராட்டத்தின் அடுத்த கட்டம் துவங்க இருக்கிறது.

         அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, தாய் செய்யும் செயல்களைச் சர்வாதிகாரம் என்று சொல்ல முடியாது. தன் மகனைச் சான்றோன் ஆக்கி, ஈன்ற பொழுதிற் பெரிதுவக்க வேண்டும் என்ற ஆசை அது. அது என்றும் நிலைத்திருக்கும்.

    Share
  • முடிதிருத்தகமும் மனிதமும்..

    மாதவன் இளங்கோ

    பெல்கிய நாட்டின் லூவன் நகர பிரசல்ஸ் தெருவில் உள்ள ஒரு முடிதிருத்தகம். இப்போதுதான் அங்கிருந்து வருகிறேன்.

     சிறுவயதிலிருந்து இன்று வரை மாறாத பல பழக்கங்களில் ஒன்று – ‘முடிதிருத்தும் போது தூங்கிவிடுவது’. ஒரு குட்டித் தூக்கம் போட்டு முடிப்பதற்குள் வெட்டி முடித்து விட்டார் அந்தக் கலைஞர். அதோடு விடாமல், இன்னும் மூன்று வருடங்களில் உனக்கு அநேகமாக முடியனைத்தும் கொட்டிவிடும் போலிருக்கிறது என்று சிரித்துக்கொண்டே ஆரூடம் வேறு சொல்லி வழியனுப்பி வைத்தார். இந்த இரண்டு காரணங்களுக்காகவே நிறைய முடி வளர்ந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

     ‘உங்கள் ஆரூடம் ஒருவேளை பலித்துவிட்டால், நீங்கள் ஒரு வாடிக்கையாளரை இழக்க நேரிடும்! அதனால், எனக்கு நன்றாக முடி வளர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.’ என்று நானும் சிரித்துக் கொண்டே கூறிவிட்டுத் திரும்பினேன்.

     ஆங்கிலத்தில் முடிதிருத்துபவர்களை ‘Tonsorial Artist’ என்பார்கள். உண்மையாகவே அது ஒரு கலை என்பதில் எனக்குத் துளி ஐயமில்லை. ஏனென்றால், நீலாம்பரி ராகத்தில் தாலாட்டு பாடிக்கூட இத்தனை அழகாய் என்னைத் தூங்க வைக்க முடியாது. 😉

     இன்று நான் சென்று வந்தது, நான் வழக்கமாகச் செல்லும் பாகிஸ்தானியர் ஒருவரின் முடிதிருத்தகம். உள்ளூர்காரர்களிடம் சென்றால் சொத்தையே எழுதிக்கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால் அவர்களிடம் எப்போதுமே செல்வதில்லை. இந்த நகரத்துக்கு வந்த புதிதில், ஒரே ஒருமுறை தலைமுடி வெட்டிக்கொள்ளச் சென்று, மொட்டை அடித்துக்கொண்டு திரும்பியதோடு சரி. பிறகு அவர்கள் பக்கமே தலைவைத்துப் படுப்பதில்லை.

     சரி, அதை விடுங்கள். நான் கூற வந்தது இதுதான் –

     பதினைந்து மணித்துளிகள் ஒரு பாகிஸ்தானியரிடம் தலையைக் கொடுத்து, நிம்மதியாய் தூங்கிவிட்டு வந்திருக்கிறேன். தலையில் முடியிருக்கும் வரை, இந்த ஊரில் நான் இருக்கும் வரை, இன்னும் பலமுறை அவரிடம் செல்வேன் – அந்த பதினைந்து மணித்துளி உறக்கத்துக்காய்.. நிம்மதிக்காய்.. நிம்மதியான உறக்கத்துக்காய்..

     அரசியல்வாதிகளும், மதவாதிகளும் என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள் – மனிதர்களைப் பிரிக்க. நிஜத்தில் மனிதமே நிலைத்து நிற்கிறது. நிற்கும். வெல்லும்!

    Share
  • சீதாயணம் நாடகப் படக்கதை – 27

     

    சீதாயணம் படக்கதை -27​

    ​நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

    வடிவமைப்பு :  வையவன்

    ஓவியம் :  ஓவித்தமிழ்

     

    jay1

     

    jay2

    தகவல் :

     

    1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

    2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and          Picture Credit to Kishan Lal Verma

    3.  Mahabharatha By: Rosetta William [2000]

    4. The Wonder that was India By: A.L. Basham [1959]

    5. The Ramayana & The Mahabharata  By: Romesh C. Dutt  [1969]

    6.  Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma  [2004]

    7.   http://jayabarathan.wordpress.com/seethayanam/  [நெஞ்சின் அலைகள்]​

    8.  ​http://www.vallamai.com/?p=21424   [வல்லமை வலைப் பக்கம்]

    S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013) [R-2]

    http://jayabarathan.wordpress.com/

     

    Share
  • எளியோரைத் தாழ்த்தி!…

    கவிஞர் காவிரிமைந்தன்

     

    எளியோரைத் தாழ்த்தி.. வலியோரை வாழ்த்தும்….

    (கவிஞர். கு.ச.கிருஷ்ணமூர்த்தி)

    ஏழைச் சொல் அம்பலத்தில் ஏறாது என்பது பழமொழி.  இந்த உலகத்தில் குறிப்பாக மனித குலத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் – ஏழை – பணக்காரன் – ஜாதிப் பிரிவுகள் மேலோர் கீழோர் என்கிற வர்க்கபேதங்கள் வகுத்த வைத்த பாவிகள் சுயநலம்தேடி சமுதாயத்தில் உலவும் பேய்கள் – இவர்களால் ஏழை வர்க்கம் இன்னுமின்னும் இன்னல்களுக்கு ஆளாவதும் வசதியுள்ளவர்கள் மட்டுமே வாழத்தக்கதாய் இந்த உலகம் மாறிவருவதும் கொடுமையென கொதித்தெழும் கவிஞரின் நெஞ்சம் வடித்த பல்லவியைப் பாருங்கள்!

    வஞ்சம், சூது, களவு இவைகளால் ஆட்படும் இதயத்தல் பொங்கிவரும் உணர்வுகளை கவி வடிவம் தந்திருக்கிறார் கவிஞர். கு.ச.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.

    தடைகள்மீறி நடைபோட எண்ணும் எழுவததைக்கூட வரிகளில் பதிய வைத்துள்ள பாங்கு இதோ..

    டி.எம்.செளந்திரராஜன் அவர்களுடன் பாலசரஸ்வதி இணைந்து பாடிய பாடல்!  கே.வி.மகாதேவன் இசையமைப்பில் கவிஞர் கு.ச.கிருஷ்ணமூர்த்தியின் பொன்னெழுத்துக்கள் மின்னும் பல்லவியும் தொடரும் சரணங்களும் பாத்திரப்படைப்பாய் கவிஞன் கூடுவிட்டு கூடு பாய்ந்து எழுதியதை பறைசாற்றுகிறது!

    அர்த்தமுள்ள பாடல்கள் அன்றைக்கு எழுதப்பட்டவையாக இருந்தாலும் காலங்களைக் கடந்தும் ஏதோ கல்வெட்டுக்களாய் பொறிக்கத்தக்கதாய் முத்தான வரிகளைத் தாங்கியிருப்பதால்.. இப்பாடல்களின் ஆயுசு அதிகமென்பதில் ஆச்சரியமில்லை!

    மானுட தர்மம் என்ன சொல்கிறது என்று பார்க்கும்போது நிச்சயமாக ஏழையை அது கைவிடுவதில்லை.. மாறாக நீதியின் குரலாய் எழும்பி இந்த நித்திலம் முமுவதும் ஒலிக்கிறது!

    எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்

    உலகே உன் செயல்தான் மாறாதா

    !

    எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்

    உலகே உன் செயல்தான் மாறாதா

    எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்

    உலகே உன் செயல்தான் மாறாதா

    பரிதாபம் நெஞ்சில் சிறிதேனும் இல்லா

    படுபாவியால் வாழ்வுபறி போவதோ

    பரிதாபம் நெஞ்சில் சிறிதேனும் இல்லா

    படுபாவியால் வாழ்வு பறி போவதோ

    அறியாத நங்கை எனதாசை தங்கை

    கதிஏதும் காணாமல் மனம் நோவதோ

    அறியாத நங்கை எனதாசை தங்கை

    கதிஏதும் காணாமல் மனம் நோவதோ

    எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்

    உலகே உன் செயல்தான் மாறாதா

    சிறகே இல்லாத கிளிபோல ஏங்கி

    உனைக் காணவே என் உளம் நாடுதே

    சிறகே இல்லாத கிளி போல ஏங்கி

    உனைக் காணவே என் உளம் நாடுதே

    பறந்தோடி வந்துன் குறைதீர்க்க என்னை

    சிறைக்காவல் இங்கே தடை போடுதே

    பறந்தோடி வந்துன் குறைதீர்க்க என்னை

    சிறைக்காவல் இங்கே தடைபோடுதே

    எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்

    உலகே உன் செயல்தான் மாறாதா

    எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்

    உலகே உன் செயல்தான் மாறாதா

     

     

    Share
  • வாழ்க்கை நலம் – 54

    குன்றக்குடி அடிகள்

    54. எளிய வாழ்வியல் உண்மை!

    ஒருவர் நமக்குத் தீமை செய்தால் நாம் திரும்ப அவருக்குத் தீமை செய்தல் பழி வாங்குதல் ஆகும். இந்த பழிவாங்கும் உணர்வு இயல்பாகவே மாந்தரிடம் அமைந்துள்ளது. ஆயினும், நல்லொழுக்கம், பண்பாடு என்பது பழி வாங்காமையேயாகும். ஏனெனில், உணர்ச்சி வசப்படுதல் என்பது இயல்பு ஆயினும் பழிவாங்குதலிலும், பொறுத்துக் கொள்ளுதல் கடினமான காரியம்.

    பழிவாங்கும் நிகழ்வு சங்கிலித்தொடர் போலத் தொடரும். ஆனால் பொறுத்தாற்றும் பண்பு தீமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடும். அற்ப மனமுடையவர்கள் பழிவாங்குவர்.

    திருக்குறள் பழிவாங்குதலை வெறுக்கிறது; வெறுத்து ஒதுக்குகிறது. ஆயினும் உயர்ந்த பண்புகளை எளிதில் எடுத்துக் கொள்ளும் இயல்பறியா மாந்தரிடத்தில் பழிவாங்குதல் தீது என்ற அறிவு எளிதில் வராது. ஆதலால் திருவள்ளுவர் உளவியல் அறிவியல் நியதியில் பழிவாங்கும் உணர்ச்சிவசப்பட்டு நிற்கும் மனிதனை அணுகுகிறார்.

    ஆம்! எடுத்த எடுப்பில் யாரிடமும் அறிவுரைகள் – உபதேசங்கள் விலைபோகா. முதலில் அவருடைய நம்பிக்கையைப் பெறவேண்டும். உணர்ச்சி வெள்ளம் வடிவதற்குரிய காலம் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் உணர்ச்சியிலிருந்து விடுதலை பெற்றுச் சமநிலைக்கு வந்த பின்னரே எத்தகைய அறிவுரையையும் கூறவேண்டும். அப்போதுதான் அறிவுரைகள் எடுக்கும்.

    “இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்” (திருக்குறள் – 314) என்பது குறள்.

    பழிவாங்கும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நிற்பவன் ஞானம் இல்லாதவன்; அற்ப அறிவு உடையவன். ஆதலால் முதல் நிலையில் பழிவாங்கும் உணர்ச்சியின் உச்சியில் நிற்பவனுக்கு உடன்பட்டே பேசியாக வேண்டும். இல்லையெனில் திருவள்ளுவரையுமே அவன் மறுத்து விடுவான்.

    ஆதலால் திருவள்ளுவர் “இன்னா செய்தாரை ஒறுத்தல்” என்று தொடங்குகின்றார். தமக்குத் துன்பம் செய்தாருக்குத் தாம் ஒறுத்தல் செய்ய வேண்டும்; கட்டாயம் ஒறுத்தல் செய்ய வேண்டும். இந்த அறிவுரை தொடக்க நிலையிலேயே வெகுளியின் உச்சக்கட்டத்தில் நிற்பவனுக்கு ஆறுதலாக இருக்கிறது. அதனால் சினம் தணிகிறது; உணர்ச்சி வடிகிறது. மனிதன் மிருக நிலையிலிருந்து மனித நிலைக்கு இறங்கி வருகின்றான். தன்னுடைய கொள்கைக்கு உடன்பட்டு நிற்கும் அவனுக்கு திருவள்ளுவர் மீதும் நம்பிக்கை பிறக்கிறது.

    இந்தச் சூழ்நிலையைத் திருவள்ளுவர் பயன்படுத்திக்கொண்டு தம் நிலைக்கு அந்த மனிதனை அழைக்கின்றார்; உயர்த்துகின்றார். ஆம்! பழிவாங்க வேண்டும். ஆனால் எப்படி? “தவறு செய்தவன் வெட்கப்படும்படியாக நன்மை செய்துவிடு!” என்று வள்ளுவர் கூறுகின்றார்.

    “இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்” (திருக்குறள் – 314) என்பது திருக்குறள்.

    “இன்னா செய்தாரை ஒறுத்தல்” – என்ற சொற்றொடர் உடன்பாட்டுச் சொற்றொடர். “அவர் நாண நன்மை செய்துவிடல் என்பது” பொறுத்தாற்றும் நெறியில் ஆற்றுப்படுத்தலாகும். இந்தக் குறள் சிறந்த உளவியல் அறிவியலைச் சார்ந்த குறள்.

    “எவருடனும் முதல் நிலையில் உடன்பட்டு நில்; அவருடைய நம்பிக்கையைப் பெறு; பின் அவர்களை உன் நெறிக்கு அழைத்துக் கொள்”. இது எளிய வாழ்வியல் உண்மை.

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • காத தூரம்

     

     

    சங்கர் சுப்பிரமணியன்

     

    என் வீட்டிலிருந்து காத தூரம் நடந்தால்
    வரும் காணிநிலம் அதில் கண்கள் விரிய பார்த்தால்
    கொஞ்சும் அழகுப்பாவை ஒன்று அவளுடன்
    எனக்கு ஒரு கனத்த கதையுண்டு

    வண்ணக் கலவைகளை முகத்தினில் பூசி கொஞ்சும் தமிழ் பேசி
    ஆசை வார்த்தைகள் ஆயிரங்களை அழகாக கோர்த்து
    புரட்டு கதைகள் பல பேசி பொய்முகம்
    போர்த்திக்கொண்டே பேதை அவளிடம் பழகினேன்

    அவள் விழிக்கும் அதிகாலை நான் விழித்து அவளுக்கு
    முன்னதாக அவள் எப்பொழுதும் விரும்பிச் செல்லும்
    அந்த சிவனுக்கு முன்நின்று மந்திரங்கள் படித்து
    கபட நாடகம் அரங்கேற்றியே அவள் அன்பைப் பெற்றேன்

     

    என் வானத்து நிலவென்றென். நீ இல்லாத வாழ்வு இருளென்றேன்.

    உன் உறவு என் உயிரென்றென். நீ இன்றி நான் உலர்ந்த சருகென்றேன்.

    உள்ளமெல்லாம் அவள் நினைப்பில் கரைந்ததாக பொய்யுரைத்தே

    அவள் உள்ளத்தில் நிறைந்தேன் அழகான வண்ணத்தில்

     

    அத்தனையும் நம்பிய அந்த அறியாத பேதை என்னை அவள்
    உயிராய் தீர்மானித்தாள் என் நினைவுகளை நெஞ்சத்தில்
    சூடிக்கொண்ட நேசத்தில் அவள் நெகிழ்ந்திருந்த ஒரு கணத்தில்
    கனன்று எரிந்த உணர்ச்சிகளில் நான் அவளை முழுவதுமாய் சுவைத்தேன்

     

    நாடகத்தின் முடிவாக போட்ட என் வேஷம் கலைக்க
    எக்காளமிட்ட சந்தோஷத்துடன் என் மனம் சந்தர்ப்பங்களை
    எதிர்நோக்க கனவிலும் நான் எதிர்பாராத முடிவுரையை
    கடவுள் அரங்கேற்றினான் என் கண் முன்னே

     

     

    தேனுண்ட வண்டு போல் அவள் தனித்திருந்த
    அந்த நள்ளிரவு அவள் வீடு தேடி நான் போனேன்
    என் மெல்லிய சத்தத்திற்கு வெட்கத்துடன் அவள் கதவு திறக்க
    வேட்கையுடன் நான் உள் நுழைந்தேன்

     

    உணர்வுகளின் தழுவல்களில் உயிரோட்டங்களைத் தேடி
    தனியாத மோகத்தில் நாங்கள் தவமாய் கூடிக்கொண்டிருக்க
    பெருத்த சத்தம் கேட்டு பதறி கலைந்து சுற்றம் பார்த்தால்
    எங்களை ஆவேசத்தடன் சுற்றியிருந்தது அந்த பெருந்தீ

    கணமும் தாமதியாது எரியும் நெருப்பை அவள் போர்த்திக் கொண்டு வேகத்துடன்
    என்னை வெளித்தள்ளினாள் என்ன செய்கிறேன் என்கிற உணர்வுகளற்று
    என்னையும் நான் மாய்த்துகொள்ள வேகத்துடன் நெருப்புக்குள் ஓடமுயல
    சுற்றியிருந்த ஊர் என்னை தடுத்து தனித்து நிறுத்தி விட்டது

    கனநேரத்தில் நடந்தேறிய அந்த நாடகத்தின் கடைசித் தருணத்தில்

     என்னை காப்பாற்றி விட்ட பெருமித சந்தோசத்தில்

    இதயம் நிரம்பிய புன்னகையுடன் என்னை பார்த்தபடியே

     அந்த நெருப்பினில் தன்னை தாரை வார்த்து கொண்டாள்

     

    பாவிமகள் போகையில் என் நெஞ்சத்து ஆழத்திலே
    அவள் உயிரை பதித்து என்னுயிரை கொன்று போனாளே
    நீங்காத அவள் நேசத்தின் வாசமுடன் நிஜங்களை தொலைத்து

    நான் முடிவுதேடும் இறப்பு நோக்கிய பயணத்தில் வாழ்கிறேன்

     

     

    Share
  • முகக்களை

     
    செந்தில் குமார்

     

    சாவிற்கு முன் தெரியும் முகக்களையை தரிசித்திருக்கீற்களா?
    அப்போது தெரியும் வாழ்வின் மகத்துவம்.
    சாகும் முகத்தின் புன்சிரிப்பை பார்த்திருக்கிறீர்களா?
    அப்போது தெரியும் அன்பின் ஆழம்.
    சாகும் நொடியில் அந்த முகத்தில் தெரியும் புரிதலை கவனித்திருக்கிறீர்களா?
    அப்போது தெரியும் அறிவின் பிதற்றல்.
    சாவை உணர்ந்துகொண்ட சந்தோஷத்தை அனுபவித்திருக்கீற்களா?
    அப்போது புரியலாம்…..வாழ்க்கை.

    சாவை புரிந்து கொண்டதுபோல் தாத்தா முகம் இருந்தாலும்
    “இன்னும் கொஞ்சம் வாழ்விருக்காதா?” என்று
    தொக்கி நிற்கும் கேள்வி
    என்னை புலப்படுத்தியதற்கு
    நன்றி.

    Share
  • திருமால் திருப்புகழ் (45)

    கிரேசி மோகன்

    ஒருவனைப் புகழ்வதை விட அவனது BETTER-HALF மனைவியைப் புகழ்ந்தால் அவன் அருள் இன்னும் வேகமாகக் கிட்டும்….அந்த BETTER-HALF , BUTTER-HALFகண்ணனின் மனம் கவர்ந்த மனைவியாய் இருந்தால் ,கேட்கவே வேண்டாம் அருள் கொட்டும்….மேலும் இந்த BETTER-HALF, வில்லிபுதூர் பட்டர் பிரான் பெண் ஆண்டாள்….மாதங்களில் நான் மார்கழி என்று மாலை கீதையில் மார்தட்டிக் கொள்ள வைத்த, முப்பது(திருப்பாவை) செப்பிய மங்கை….ஆக இன்று ‘’ஏறு மயிலேறி விளையாடும் முகம் ஒன்று’’ அருணகிரி சந்தத்தில் ஆண்டாள் திருப்புகழ்….

     Tamil-Daily-News-Paper_52750360966

    “ஆடிவரும் பூரமதில் பூத்தமுகம் ஒன்றுAndal
    ஆசுகவி பட்டர்மகள் ஆனமுகம் ஒன்று
    காடுவன மாலிதனில் கண்டமுகம் ஒன்று
    மாடமதில் ரங்கனிடம் காதல்முகம் ஒன்று
    சூடும்மலர் மாலைதனை சூடும்முகம் ஒன்று
    ஸ்ரீவிலிபு தூரில்கவி செப்புமுகம் ஒன்று
    கூடலுடன் ஊடலையும் கூறுமுகம் ஒன்று
    கீதையுடன் பாசுரமி ணைத்ததமிழ் தாயே”

    Share
  • திருமால் திருப்புகழ் (44)

     

    கிரேசி மோகன்

    15032009072

    தானன தானன தானன தானன
    தானன தானன -தனதான….
    ———————————————————————————————————-

    Poothana_Moksh

    பாலினில், சேடனின் பாயினில், த்வாபர 969181_504980929606941_408884359_n
    வேளையில், பூபளு -நினைவாலே,
    காவலில், தேவகி பாலனில், ராவினில்,
    தாளெழு தாவலை -யமுனாவில்,

    சீலமும் சீர்வளர் ஆயர்தம் பாடியில்,
    யாதவ பூமியில், -வசுதேவர்
    போய்விட வேறொறு தாய்மடி தாவலில்,
    மாமனின் தேதிசொல், -நவகாளி,

    பாலளி பூதனை ப்ராணனில், காளியன்
    மேல்நட மாடிடும் -இருகாலில்,
    வேணுவின் ஓசையில், பேணிடும் கோவினில்,
    ராதையின் காதலில், -நடுவோனில்,(ஐவரில் நடுவோன் அர்ச்சுனர்)

    நூலினில் கீதையில், நாணினில், மாருதி
    தேரினில், பாரதம் -புரிவோனே.
    பாரினில் நாமதை காணவு லாவரு,
    ஷீரடி சாய்குரு -பெருமாளே….கிரேசி மோகன்….

    ————————————————————————————————————————

     

    பின்-குறிப்பு- பார்க்கும் யாவற்றிலும் பெருமாளை மட்டும் பார்த்தால் திவ்ய தேசம்….பார்க்கும் யாவற்றையும் பெருமாளாகவே பார்த்தால் பாரத தேசம்….அப்படிப் பார்த்தபோது, இன்றைய சந்தத்திற்கு உட்பட்டு எழுந்தருளினார் சத்குரு ஷீரடி சாயி பெருமாள்….இந்த உலக ‘’உள்ளே வெளியே’’ விளையாட்டில் நாம் ஜெயிக்க, உள்ளிருந்து உழைப்பவர் பெருமாள்….வெளியிலிருந்து வழங்குபவர் குருநாதர்….கடவுளும்-குருவும் ஒன்றே….இருவருக்கும் குறைந்த பட்ச வேற்றுமைகள் ஆறிருந்தாலே அதிகம்….

     

    Share
  • மக்கள் கேட்கும் கேள்விகள் (6)

    பவள சங்கரி

    தலையங்கம்

    மதிப்பிற்குரிய ஐயா அன்னாஅசாரே அவர்களே,

    நீங்கள் புவனேசுவரத்தில் ஆரம்பித்துள்ள இரண்டாவது சுதந்திரப் போரட்டம் மூலமாக 2024 இல் மிக அதிகமாக விவசாயிகளையே பாராளுமன்ற உறுப்பினர்களாக அனுப்பப்போவதாகக் கூறியுள்ளீர்கள். உங்களுடைய முதல் போராட்டத்தின் தற்போதைய நிலை என்ன? முடிவுற்றதா? வெற்றி பெற்றுவிட்டீர்களா? ஊழலுக்கு எதிரான உங்களுடைய போராட்டத்தின் இன்றைய நிலை ஆளும் கட்சியும் எதிர் கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு ஊழல்வாதிகளை தங்களுடைய வேட்பாளர்களாக அறிவித்துள்ளனரே. இந்த அரசியல்வாதிகளை நீங்கள் மன்னித்துவிட்டீர்களா? அன்றாடம் மக்கள் உங்களை மறக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவ்வப்போது இப்படி ஏதாவது புதிய போராட்டம் அறிவிக்கிறீர்களா?

    வாக்களிப்போம்!

    ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

    விலை போகாமல் வாக்களிப்போம்!!!

     

    Share
  • விலகல்

     

    எம். ரிஷான் 

    அடைமழை பெய்தோய்ந்தimages (2)
    நள்ளிரவுக்கு முன்னரான பொழுதின் வளி
    குளிரில் ஒடுங்கிக் கண்ணாடியில் தன்னைப் பார்க்கும்
    பனியை விரலிலேந்தி கடைசிப் பேருந்திலிருந்து இறங்கினாய்

    பகலை விடவும் இருளிடம் இருக்கின்றன
    பல்லாயிரம் விழிகள்
    அன்று ஒவ்வொரு விழியின் துளியுமிணைந்து
    தெருவெங்கும் குட்டைகளாய்த் தேங்கியிருந்ததை
    தாண்டித் தாண்டி நீ வந்த காட்சி
    இருளின் கறுப்புத் திரைக்குள் மறைந்தது

    பட்ட மரத்தின் அடிப்பாகத்தில்
    புற்றெழுப்பும் கரையான்களைக்
    கொத்த வரும் சாம்பல்குருவிகளை
    பொறி வைத்துப் பிடிக்க ஆவலெழும்
    வேட்டைக் கதைகளை நீ கொண்டிருந்தாய்

    நாம் கதைத்தபடியே நடந்து கடந்த
    எனது கிராமத்தின் ஒற்றையடிப் பாதை
    வழித்தடங்களிலெல்லாம் அக் கதைகள் சிந்தின
    விடிகாலையில்
    அக் கதைகளைப் பொறுக்கித் தின்ற சாம்பல்குருவிகள்
    தொலைதூர தேசமேகிப் பின்னர் வரவேயில்லை
    உன்னைப் போலவே
    _______________________________________________

     

    Share
  • அம்பத்தூர் கம்பன் கழகதின் 63 வது கூட்ட நிகழ்வு

     unnamed (1)

    29.03.2014 அன்று அம்பத்தூர் கம்பன் கழகதின் 63 வது கூடத்தில் கூடத்தில் சேலையூர் சியோன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பதினோராம் வகுப்பில் பயிலும் மாணவன் நா.நரேன் கெளதம் “இராம காதையின் அச்சாணி இலக்குவன்” என்ற தலைப்பில் அருமையாக உரையாற்றியது மிகவும் சிறப்பாக இருந்தது. இக்கால மாணவர்கள் தெளிவாக உள்ளார்கள். இவர்களை சரியாக வழி நடத்தும் பொறுப்பை நாம் சரியாக செய்யவில்லை என்று எண்ணுகிறேன்.
    வாழ்த்துக்கள் நரேன்.

    (படத்தில் அம்பத்தூர் கம்பன் கழக பொருளார் திரு.குருமூர்த்தி நினைவு பரிசை மாணவனுக்கு வழங்குகிறார். உடன் அம்பத்தூர் கம்பன் தலைவர் பள்ளத்தூர் பழ. பழனியப்பன்,ஆலோசனை குழு உறுப்பினர் மு.ராம.சிவலிங்கம் மற்றும் செயலாளர் திரு.வி.சுப்ரமணியன்)

    by சித்திரை சிங்கர், அம்பத்தூர்
    கைபேசி:9789778442

    Share
  • பூர்வீகக் கண்டங்களின் புலப்பெயர்ச்சி

    (Supercontinent Split & Drift)

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

     

     

     

    நாமிருக்கும் கண்டங்கள்,
    பூமி என்னும்
    நர்த்தகத் தடாகத்தில்
    ஆமைபோல் நகர்ந்து செல்லும்,
    தாமரை இலைகள்!
    சுளைகள் அடுக்காய்ச் சுற்றிய
    எலுமிச்சங் கனி!
    துகிலுரிக்க முடியா தோலுடுத்திய
    வெங்காயக் கோளம்!
    கடல் வயிற்றில் கனலை மூட்டி
    எரிமலை சமைக்கும்
    கரிச்சட்டி வடைகள் போல்
    உருவாகும் தீவுகள்!
    பூகம்பம் உடல் குலுக்கிப்
    பூதளம் பிரித்து
    தீக்குழம்பில் படகுகள் போல்
    தீவுகளைத்
    துடுப்பு நெம்பு கோல்
    முடுக்கித் தள்ளும்!

    ++++++++++++++

    unnamed

    “பூமியின் நிலப்பரப்புப் பகுதிகள் அனைத்தும் பல்லாண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த மாபெரும் ஒற்றைக் கண்டமாக இருந்தது!  பல மில்லியன் ஆண்டுகள் கழித்து, எப்படியோ அப்பெருங் கண்டம் உடைபட்டு, வெவ்வேறு பகுதிகளாகப் பிரிந்து மெதுவாக நகர்ந்து, தற்போதுள்ள இடங்களுக்கு அவை நிலப்பெயர்ச்சி ஆகியுள்ளன!”

    பூகோளத்தின் அடித்தட்டு [Crust] உட்கருக் கனல் குழம்பில் [Liquid Core] மெதுவாகப் பெயர்ச்சி அடைகிறது!  கண்டங்களின் நிலப்பெயர்ச்சி நியதிக்கும், அடித்தட்டுப் பிறழ்ச்சி நிகழ்ச்சிக்கும் [Continental Drift & Plate Tectonics] பூர்வப்படிவப் பதிவுகள் [Fossil Records] சான்றுகளும் உறுதியும் அளிக்கின்றன”.

    டாக்டர்ஆல்ஃபிரெட்வெஜினர், ஜெர்மன்பூதளவாதி [Dr. Alfred Wegener (1880-1930)]

    “பூகோளப் பிறழ்ச்சித் தட்டு நியதி [Thory of Plate Tectonics] என்பது வெறும் கோட்பாடாக மட்டும் குறிப்பிடப்படாது!  டார்வின் உயிர் மலர்ச்சிக் கோட்பாடு [Evolutionary Theory], ஐன்ஸ்டைன் ஒப்பியல் நியதி [Theory of Relativity] ஆகியவற்றைப் போல் விஞ்ஞான மகத்துவமும், முக்கியத்துவமும் பெற்றது!”

    டாக்டர்மௌரிஸ்யூவிங், அதிபர், அமெரிக்கன்கடற்தளவியல்கூடம் [Dr. Maurice Ewing, Dean of American Oceanographers (1906-1974)]

     


    “இதுவரைச் சுற்றி வந்துள்ள பூகோளம் இன்றும் ஓடிக் கொண்டு வருவதுடன், இனியும் தொடர்ந்து சுற்றப் போகும் ஒரு பூத யந்திரம்!  உலகக் கண்டங்கள் படிப்படியாக நில அரிப்பில் சரிக்கப்பட்டு, அவற்றின் கழிவுத் தளங்கள் நீரால் வழித்துக் கடலுள் தள்ளப்பட்டு, கடல்மடியில் அடுக்குப் புழுதியாய் படிகின்றன.  கழிவுப் புழுதிகள் கடினமாகி, பூமியின் உட்கரு வெப்பத்தால் அவை மீண்டும் உயர்த்தப்பட்டுப் பிறழ்கின்றன!  இம்மாதிரி பூமியில் நிலஅரிப்பும், நிலப்புடைப்பும் [Erosion & Uplift] மாறி மாறிச் மீள்சுற்றில் நிகழ்கின்றன”.

    ஜேம்ஸ்ஹட்டன், நவீனப்பூதளவியல்அமைப்பாளி, எடின்பரோ [The Founder of Modern Geology (1785)]

     


    “பூகோளத்தின் வெவ்வேறு ஆழத்திலிருந்தும், மேல் பரப்பிலிருந்தும் எடுக்கும் மாதிரிப் பாறைகளில் மிகச் சிறிதளவு காணப்படும் யுரேனியம், தோரியம் ஆகிய இயற்கை உலோகங்களின் மூலம், பூமியின் வயது காலத்தைக் கணக்கிட முடிகிறது!  சுயமாகத் தேயும் இந்த மூலகங்கள் முடிவில் நிலையாக மிஞ்சும் ஈயத்தின் எடையைக் கண்டு, அப்பாறை தோன்றிய காலத்தை அறிந்து கொள்ளலாம்.  சமீபத்தில் நுணுக்கமான முறைகளைக் கையாண்டு, பாறை மாதிரிகளில் எஞ்சிய ஈயத்தின் அளவைக் கணக்கிட்டு, நமக்குக் கிடைத்த பூர்வீகப் பாறையின் உச்சகாலத் தோற்றம் சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளாக அறியப்படுகிறது !”

    ரஷ்யஅமெரிக்கவிஞ்ஞானிஜார்ஜ்காமாவ் (1904-1968)


    பூகோளக் கண்டங்கள் புலப்பெயர்ச்சி அடைந்து வருபவை

    பிரபஞ்சத்தில் ஆடாமல், அசையால், ஓடாமல், நகராமல், சுழாமல் முடத்துவ நிலையில் உள்ள அண்டங்களோ அல்லது அகிலக் கோள்களோ எவையும் இருப்பதாகத் தெரியவில்லை.  பரிதியைச் சுற்றி வந்து, தன்னைத் தானே தன்னச்சில் சுழலும் நமது பூகோளத்தின் தளப்பரப்பு இயக்கமற்று நிலையாக இருப்பது போல் தோன்றுவது மெய்யான தோற்றமில்லை! 1950 இல் ஆக்கப்பட்ட பூகோள பிறழ்ச்சித் தட்டு நியதி [Global Plate Tectonics], பூமியின் தளப்பகுதி நிலையானது என்னும் பூர்வீகக் கொள்கைக்குச் சவால் விட்டு, விஞ்ஞான உலகில் ஒருபெரும் புரட்சியை உண்டாக்கி யிருக்கிறது!  பூதள வரலாற்றின் 4.6 பில்லியன் ஆண்டுகளில் ஊதுலை இசைக்கருவி ஏறி இறங்குவது போல் [Accordion] கடல்கள் திறந்து நிரம்புவதும், மூடி அடங்குவதும் தெரியப்பட்டன!  கொந்தளிக்கும் கடலில் மூழ்கிய படகைத் தள்ளுவதுபோல் கண்டங்கள் நகர்த்தப் பட்டன என்னும் புதிய கருத்துகள் நிலவ ஆரம்பித்தன!  உலகக் கண்டங்கள், கடல்கள், குன்றுகள், தீவுகள் எப்படி உண்டாயின?  எரிமலைகள், நில அதிர்வுகள் ஏன் ஏற்படுகின்றன?  கடலடியே மலர்ந்து வரும் பூர்வப் படிவங்கள் [Marine Fossils] எப்படி இமயமலைச் சிகரத்தில் காணப் படுகின்றன?  இவை போன்ற குழப்பமான, விடை தெரியாத புதிர் வினாக்களுக்குப் பதிலளிக்கப் புரட்சிகரமான கருத்துகளைப் பூதளத்தட்டு புதுநியதி விளக்குகிறது!

     

    பூதளவியல் விஞ்ஞானத்தில் புரட்சிகரமான கண்டுபிடிப்புகள்

    ஒருகாலத்தில் மாறாமல் நிலையாக இருப்பதாகக் கருதிய உலகக் கண்டங்கள் உண்மையில் மிக மெதுவாக நகர்கின்றன என்பது இருபதாம் நூற்றாண்டில் சமீபத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது!  பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே உலகம் உண்டான காலத்தில் ஒரு பெருங் கண்டமாக இருந்து, பல பில்லியன் ஆண்டுகளாக மிக மெதுவாகப் பெயர்ச்சி அடைந்து பல கண்டங்களாகப் பிரிந்து போயின என்னும் கோட்பாடை முதலில் விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்ளவில்லை!  கி.பி. 1620 இல் இங்கிலாந்தில் விஞ்ஞான ஆராய்ச்சி ஆர்வத்தை முதலில் தூண்டிய பிரிட்டிஷ் வேதாந்த ஞானி பிரான்சிஸ் பேகன் (1561-1626) ஆ·ப்பிரிக்கா வின் மேற்குக் கடற்கரைப் பகுதியும், தென் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியும் ஒன்றுடன் ஒன்று பொருந்தி அமையும் வடிவத்தில் உள்ளன வென்று கண்டறிந்தார்!  முன்னூறு ஆண்டுகளுக்குப் பிறகு, அக்கருத்தை வலியுறுத்தி 1912 இல் ஜெர்மன் பூதளவாதி ஆல்ஃபிரெட் வெஜினர் பூமி ஒரு காலத்தில் மாபெரும் ஒற்றைக் கண்டமாக இருந்தது என்பதற்குப் பூர்வப்படிவ ஆதாரங்கள் [Fossil Examples] காட்டி ஒரு புதுக் கோட்பாடை உருவாக்கி நிலைநாட்டினார்.

    சிறிய கண்டமாகத் தோன்றினாலும், ஆசியாவின் பரந்த தளப்பகுதியில் ஒரு கண்டமான இந்தியா தனித்துத் தலைதூக்கிய ஓர் பிறழ்ச்சித் தட்டாகக் [Tectonic Plate] கருதப்படுகிறது!  அத்தட்டு இந்திய-ஆஸ்திரேலியத் தட்டென்று பெயரிடப் பட்டது.  இந்திய ஆஸ்திரேலியத் தட்டின் முனை, யுரேசியத் தட்டை நெருக்கி, இரண்டு தட்டுகளின் இடைப்பட்ட அழுத்தம், பல மில்லியன் ஆண்டு களாகப் படிப்படியாக உலகச் சிகரத்தில் உயர்ந்ததைக் கொண்ட இமய மலைத் தொடரை வளர வைத்து இன்னும் பல மில்லியன் ஆண்டுகளுக்கு உயர்த்திக் கொண்டே போகும்!  பூகோளக் கண்டங்களின் நிலத்தட்டுகள் இடப்பெயர்ச்சி ஆவதைத் தற்போது அண்டவெளியில் சுற்றிவரும் விண்சிமிழ்கள் [Satellites] துல்லியமாகத் தொடர்ந்து கணக்கெடுத்து வருகின்றன! ஒரு கண்டத்தின் நிலத்தட்டு திருப்பி விடும் ஒளிக்கதிரின் காலத்துக்கும், அடுத்த கண்டத்தின் நிலத்தட்டு திருப்பி விடும் ஒளிக்கதிர் காலத்துக்கும் உள்ள வேறுபாடு ஒரு குறிப்பிட்ட கால வரையறையில் பதிவு செய்யப்படுகிறது!  அந்த கால வேறுபாடு மிகை யானாலும் அல்லது குறைந்து போனாலும், நிலப்பெயர்ச்சியின் அளவையும், வேகத்தைக் கணக்கிட முடியும்.

     

    பூகோளக் கண்டங்களின் பூர்வீக நிலப்பெயர்ச்சி

    1885 ஆம் ஆண்டில் ஆஸ்டிரியன் பூதளவாதி எட்வெர்டு சூயஸ் [Eduard Suess (1831-1914)] கூறிய மகத்தான கருத்து இதுதான்:  ஒரு காலத்தில் தென் கோளத்தின் கண்டங்களான தென் அமெரிக்கா, ஆ·ப்பிரிகா, இந்தியா, ஆஸ்திரேலியா, அன்டார்டிகா ஆகிய அனைத்தையும் இணைக்கும் நிலப்பாலம் ஒன்று இருந்திருக்க வேண்டும்.  அந்த நாடுகளில் எல்லாம் அவர் பொதுவாகக் கண்ட பூர்வப்படிவச் செடி [Fossil Fern Glossopteris (Plant)] ஒன்றின் உறுதிப்பாட்டில் அவ்விதம் கூறினார்.  அந்தப் பெருங் கண்டத்திற்கு “கோந்துவானா” [Gondwana, a district in India] என்று பெயரிட்டார்.  இந்தியாவில் கோந்துவானா என்னும் மாநிலத்தில் எட்வெர்டு சூயஸ் அந்த பூர்வச் செடியை முதலில் கண்டதால், அவை காணப்படும் அனைத்துக் கூட்டுக் கண்டங்களுக்கும் ஓர் இந்தியப் பெயரை இட்டார்.  தென்பகுதியான கோந்துவான கண்டமும் வடபகுதியான லௌரேசியா கண்டமும் [Lauresia] சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே ஒற்றைப் பெருங்கண்டமான பங்கயாவிலிருந்து [Pangaea] பிரிந்ததாகப் பின்னால் ஜெர்மன் விஞ்ஞானி ஆல்·பிரெட் வெஜினர் கூறினார்.  வட பகுதியான லௌரேசியா கண்டத்தில் வட அமெரிக்கா, யுரேசியா [ஐரோப்பா +ஆசியா  (இந்தியா தவிர)] இரண்டும் ஒன்றாக இருந்தன என்பது வெஜினர் கருத்து.  முதலில் தோன்றிய ஒற்றைப் பெருங் கண்டத்துக்கு “பங்கயா” என்று பெயரிட்டவர், ஆல்ஃபிரெட் வெஜினர்.  கிரேக்க மொழியில் பங்கயா என்றால் “எல்லாம் நிலம்” என்று அர்த்தம்.

     

    கண்டங்களின் பூர்வீக நிலப்பெயர்ச்சிக்குச் சான்றுகள்

    1912 இல் ஆல்·பிரெட் வெஜினர் ஒருகாலத்தில் கண்டங்கள் யாவும் மெய்யாகச் சேர்ந்திருந்தன என்னும் கோட்பாடைக் கூறினார்.  தென் அமெரிக்காவில் கிழக்கே பெருத்துள்ள பிரேஸில் பகுதியும், ஆ·ப்பிரிக்காவின் மேற்கில் உள்ள கினியா வளைகுடாவும் ஒத்த வயதையும், ஒரே வளைவைக் கொண்டதாகக் காணப் படுகின்றன என்று வெஜினர் சுட்டிக் காட்டினர்!  அவை இரண்டும் ஒரே பூதளவியல் துணியில் வெட்டப் பட்ட தளம் போலத் தோன்றுகின்றன.  ஒரே வித பூர்வப்படிவச் செடிகளும், குடிநீர் விலங்குகளும் [Fossil Plants & Fresh-Water Animals] தென் அமெரிக்கா, ஆ·ப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வெகு தூரத்தில் உள்ள இந்தியா ஆகிய அனைத்துக் கண்டங்களிலும் இருப்பதைக் காட்டினார்.  சேர்ந்திருந்த கண்டங்களில்தான் அந்த விலங்குகள் வாழ்ந்திருக்க முடியுமே தவிர, ஆயிரக்கணக்கான மைல் தூரம் கொந்தளிக்கும் உப்புக் கடலின் வழியே தப்பிப் பிழைத்துப் பயணம் செய்திருக்க முடியாது என்று காரணம் கூறினார்.  மெஸேசாரஸ் என்னும் ஊர்ந்து செல்லும் சிறிய விலங்கின் பூர்வப்படிவம் [Fossil of Reptile Mesosaurus] தென் அமெரிக்காவின் பிரேஸிலும், ஆ·ப்பிரிக்காவிலும் இருந்ததாக வெஜினர் சான்றுகள் காட்டினார்.

    வெஜினரின் இந்த கண்டிபிடிப்பை ஏற்றுக் கொள்ளாது விஞ்ஞானிகள் பலர் அவரை எள்ளி நகையாடினர்!  காரணம் அப்போது பிறழ்ச்சித் தட்டு நியதி [Theory of Plate Tectonics] எழுதப்பட வில்லை.  மாபெரும் கனத்த கண்டங்களை, கடற்தட்டு மீது எந்த வித பூத யந்திரசக்தி உந்த வைத்து நகர்த்திப் பிரிக்க முடியும் என்பது விஞ்ஞான முறைப்படி விளக்கப் படவில்லை.  அவ்விதம் நிலப்பெயர்ச்சி ஆகியிருந்தால், கடலடியில் நீண்ட முறிவுப் பகுதிகள் விடப் பட்டிருக்க வேண்டும். அவற்றை யாராவது கடலடியில் இதுவரைக் கண்டிருக்கிறார்களா?  1850 ஆம் ஆண்டில் தந்தி வடங்களை அட்லாண்டிக் கடலடியில் [Trans-Atlantic Telegraph Cables] அமைத்த போது, முதன்முதலில் கடல் நடுவே புதைந்துள்ள நீண்ட மலைகளைக் கண்டனர்.  அதற்குப் பிறகு பசிபிக் கடலரங்கிலும் அவ்வித நீளக் குன்றுகள் காணப்பட்டதும் அறியப்பட்டன.

    நூறாண்டுகளுக்குப் பிறகு 1950 இல் ஆழ்கடல் ஆராய்ச்சி நடத்தும் போது, கடலாய்வு நிபுணர்கள் [Oceanographers] டென்னிஸ் பந்தில் காணப்படும் வளைவு ஒட்டுபோல் தெரியும் 40,000 மைல் தூரம் நெளிந்து செல்லும் நீளச் சங்கிலி குன்றுத் தொடரைக் கண்டு பிடித்தார்கள்!  மலைப்பாம்பு போன்ற அந்த பூத மலைத்தொடர் நடுவே, ஆழமான குழிகளும், வெப்பமான குன்றுகளும், கசிந்து வெளிவரும் எரிமலைக் குழம்புகளும் [Lava] காணப்பட்டன!  எங்கே கடற்தளம் துண்டாக்கப் பட்டுப் பிளவுகள் காணப்பட்டனவோ அங்கே எரிமலைக் குழம்பு பீறிட்டு எழுந்து, கடினமாகிப் பிறகு புதுப் பீடபூமி உண்டானது தெரிந்தது!  விஞ்ஞானிகள் அந்த ஆதாரங்களைக் கண்டதும், கடற்தளம் குன்றுப் பகுதிகளை விட்டு ஊர்ந்து செல்லலாம் என்றும், அதனால் அடுத்து ஆழமான பெருங்குழியை நிலத்தட்டு முனையில் அகழி போல் ஆக்கி விடலாம் என்றும் ஊகித்தார்கள்!

     

    பூதளப் பிறழ்ச்சித் தட்டுகளின் நிலப்புரட்டு நியதி

    1950 இல் பூதளவாதிகள் “பிறழ்ச்சித் தட்டு நியதியை” [Theory of Plate Tectonics] விஞ்ஞான முறையில் விருத்தி செய்தார்கள்.  அந்த புதிய கோட்பாடு கண்டங்களின் நிலப்பெயர்ச்சி, கடல்-நிலத் தட்டுகளின் புணர்ச்சி, மலர்ச்சி, மலைத் தொடர்களின் வளர்ச்சி, எரிமலை களின் கிளர்ச்சி, நிலநடுக்கங்களின் எழுச்சி ஆகிய பூகோளப் புதிர்களுக்குத் தெளிவாக முதன்முதல் விளக்கங்கள் அளித்தது.  பிறழ்ச்சித் தட்டு நியதி மெய்யாக என்ன கூறுகிறது?  பூமியின் கடினமான மேலடுக்கு பனிரெண்டுக்கு மேற்பட்ட மாபெரும் தட்டரங்குகளையும், அதே எண்ணிக்கையில் உள்ள சிற்றரங்குகளையும் கொண்டது.  அவை கடற்தள மையப் பீடத்தொடராக நீண்டுள்ளன [Mid-Oceanic Ridges].  குவிந்திருக்கும் அந்த குன்றில் பாறைகள் மேலும் மேலும் கூடிச் சேர்கின்றன!  சேமித்த பாறைகள் பிறகு குன்றிலிருந்து பெயர்ச்சி யாகி விலகுகின்றன!  அவை மற்ற தட்டுகளை நெருங்கும் போது, கீழ்த்திணிப்பு விதிப்படி [Subduction Process] ஒரு தட்டு பூமிக்கடியே தள்ளப்படலாம். தட்டுகள் நெளிந்து மலைகள் உண்டாகலாம்.  பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இமயமலையும் அவ்விதம் சிறிது சிறிதாய் வளர்ந்து எழுந்ததாக விளக்கம் தரப்படுகிறது.  தட்டுகளின் புணர்ச்சியில் எச்சங்கள் பழுதுக் குழியில் சரிந்து போகலாம்.  காலி·போர்னியா மாநிலத்தின் நிலநடுக்கப் பகுதியில் உள்ள ஸான் ஆன்டிரியா பழுது [San Andrea Fault] இம்மாதிரி உண்டான ஒரு தட்டுப் பழுதே!

    மௌரிஸ்யூவிங்கூறியபூதளநகர்ச்சிவிளக்கங்கள்

    அமெரிக்க பூதளவியல் நிபுணர் டாக்டர் மௌரிஸ் யூவிங் ஆல்பிரெட் வெஜினர் ஒற்றைக் கண்ட நியதியைப் பல ஆதாரங்களுடன் மேலும் உறுதிப்படுத்தினார்.  அவர் கூறியவை பின்வருமாறு:

    1. பூதளவாதிகளின் பூர்வீக யூகத்தின்படி பூமியின் அடித்தட்டு கடினமான திடத்தட்டோ அல்லது தகர்க்க முடியாத வலுத்தட்டோ அன்று!  பூமிதளத்தின் கீழ்த்தட்டுப் பாறைகள் தனிப்பட்ட அளவுகளுடன் [(40-60) மைல் தடிப்பு] பல்வேறு உபப்பிரிவுகள் கொண்ட பத்து பெருந்தட்டுகளாக அவற்றின் அடியே கொந்தளிக்கும் கவசக் கனல் திரவத்தில் [Hot Viscous Mantle] மிதக்கின்றன!

    2. இந்த அடித்தட்டுகள் மீது அமர்ந்துள்ள உலகின் நிலப்பரப்புகள், கடற்தளங்கள் ஆகியவை எல்லாம் ஒருகாலத்தில் ஒன்றாய் பிணைக்கப்பட்டு ஒற்றைப் பெருங்கண்டமாய் இருந்தன.  சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அசுரக் கண்டம் பிளக்க ஆரம்பித்தது!  அதன் விளைவால்தான் நாம் வாழும் ஏழு சிறு கண்டங்களும் [வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆ·ப்பிரிகா, ஆஸ்திரேலியா, ஆசியா, ஐரோப்பா, அன்டார்டிகா] மற்ற பிற தீவுகளும் உருவாகின! அச்சிறு கண்டங்கள் பல மில்லியன் ஆண்டுகளாக மிக மெதுவாக நிலப்பெயர்ச்சியாகி தற்போதுள்ள நிலையத்தில் இருக்கை கொண்டுள்ளன!

    3. பூதள அடித்தட்டுகள் கடல் நடுவே ஆழப் பிளவுகளிலிருந்து [Deep Fissures in Mid-Ocean] பொங்கி எழும் திரவப் பாறைகளின் முனைப் பகுதிகளில் அமைக்கப் பட்டுள்ளன!  அதே சமயத்தில் பூமியின் உட்கருவில் பல திசைகளில் உண்டாகும் அசுர ஆற்றலில் ஆண்டுக்கு அரை அங்குலம் முதல் ஆறு அங்குலங்கள் வரை அடித்தட்டுகள் உந்தித் தள்ளப்படுகின்றன!

    4. இடநெருக்கடியில் ஒடுங்கிக் கொள்ள முறியும் அடுத்தட்டுகள் உந்தும் போது, கண்களுக்குப் புலப்படும் விந்தை விளைவுகள் நிகழ்கின்றன.

    a) கருங்கல் [Granite] படிந்த நிலத்தட்டுத் திணிவான, நீரில் மிதக்காத பஸால்ட் [Basalt] தாது கலந்த கடற்தட்டைச் சந்திக்கும் போது, நிலத்தட்டு கடற்தட்டு மீது பூதத்தகர்ப்பு யந்திரம் போல [Titanic Bulldozer] அமுக்கி ஏறுகிறது!  அப்போது கீழ்த்தட்டுப் பாறைகளைத் தேங்காய் திருகிபோல் சீவி, விழும் செதுக்குத் துணுக்குகள் நசுக்கப்பட்டுக் கடலடியில் பல மில்லியன் ஆண்டுகளாகச் சேமிப்பாகின்றன!  அந்த பாறைச் சீவல்கள், நிலத்தட்டு முனைகளில் குவிந்து, குவிந்து பின்னால் தொடர்மலையாக எழுகின்றன!


    b) கடற்தளத் தட்டு கடலடியே செங்குத்தாக ஊடுறுவி, நிலத்தட்டின் முனையில் நீண்டதோர் கடற்குழியை [Ocean-Floor Tench] உண்டாக்குகிறது!  கடற்தட்டு உராய்வு வெப்பத்தால் உருகி, பூமியின் உட்கருவில் வெந்நிறத் தீப்பிழம்புக் குட்டையாக மாறுகிறது.  உள்ளே சிக்கிக் கொண்ட இந்த தீக்குழம்பு [Lava] பூமியில் துளைகளை உண்டாக்கிப் பிறகு எரிமலையாகக் குமுறி வெளியாகிறது!

    c) நிலத்தட்டு, கடற்தட்டு ஆகிய இரண்டின் மோதல், கீழ்த்திணிப்பு, நேர் அறுப்பு, துண்டாக்கல் போன்ற [Collision, Subduction, Shearing, Separation] தட்டுப் பிறழ்ச்சிகள் பூகம்ப அதிர்வுகளை [Seismic Disturbances] உண்டு பண்ணும் வல்லமை படைத்தவை.

    (தொடரும்)

     

    தகவல்கள்:

    1. The Continental Mosaic -Reader’s Digest Atlas of the World [1987]

    2. Hutchinson Encyclopedia of the Earth By Peter Smith [1985]

    3. Earth’s Restless Crust -ABC’s of Nature, Reader’s Digest [1984]

    4. The Long Journey of Continents By: Ronald Schiller -The Marvels & Mysteries of The World Around US, Reader’s Digest Publication [1972]

    5. Continental Drift & Plate Tectonics [www.zephryus.co.uk/geography/home.html] (Mar 20, 2003)

    6. Pangaea, Gondwana, Laurasia, Plate Tectonics, Alfred Wegener From: Wikipedia Encyclopedia

    7. Theory of Continental Drift By: Jim Cornish, Newfoundland, Canada (Sep 2001)

    8. Continental Frift, Geology & Oceanography. [Several Internet Articles]

    9. Everyday Geography By: Kevin McKinney (1993)

    10 Eduard Suess, Austrian Scientist From: Wikipedia Encyclopedia

    11 Geology Today (1974)

    12 Physical Geology By : Brian Skinner & Stephen Porter (1987)

    13 Webster’s New World Dictionary of Science (1998)

    14 The Kingfisher Science Encyclopedia (2007)

    ********************

    S. Jayabarathan (jayabarat@tnt21.com) March 11, 2011

    Share
  • முத்தான முத்தல்லவோ!…

    கவிஞர் காவிரிமைந்தன்

    முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்தமுத்தல்லவோ

    அன்று மலர்ந்த பாடல்கள் அத்தனையும் மனித வாழ்க்கையோடு ஒன்றிக்கிடந்தவை.  அதனால்தான் மனம் இன்னும் அப்பாடல்களை அசைபோட்டுக் கொண்டுள்ளது.  பிறப்பு முதல் நடப்புகள் அத்தனையையும் தன்னுள் கொண்டு தளிர்நடை போடும் பாடல்கள் இன்பரசம் ஊட்டும் வகையில் இன்றும் இதயம் தொடுகின்றன.  காற்றிலே மிதந்துவரும் அந்த கானங்களைக் கேட்க பிரியப்படுகிறோமே ஏன்?

    ஓரு திரைப்படம் எடுக்கப்படுகின்ற தருணத்தில் பாடல்கள் அமைவது பல்வேறு சூழல்களை உள்ளடக்கிய விஷயம்.  கவிஞரின் கைவண்ணம் அந்தப் பாடல் காட்சிக்கேற்றவாறு.. கதைக்கருவை பிரதிபலிக்க வெளிப்படுவது சிறப்பு!  இதோ.. இந்தப் பாடல்..  இன்று மதியம் வேண்டும் இரண்டு மணிக்கு என்று முன்பகல் 12மணியளவில் தெரிவிக்கப்பட்டது.  மெல்லிசை மன்னர் கவிஞரை அழைத்து அவசரத்தை வலியுறுத்த.. அம்..என்னும் முன்னும் உம் என்னும் முன்னும் வார்த்தைகள் வந்து விழும் என்று சொல்லப்படும் இரட்டையர்கள்.. கண்ணதாசன் விஸ்வநாதன் கூட்டணியில் வந்துதிர்த்த முத்தான பாடலிது!

    தன் வாழ்க்கையின் கடைசி நாட்களை கணக்கிட்டுக் கொண்டிருக்கும் சிறுவயது பெண்ணுக்கு .. பிறந்தநாள்!  எல்லோரும் இணைந்து கொண்டாடும் அந்த மருத்துவமனையில்..  திரைப்படம் பார்ப்போர் மனதில் இழைந்தோடும் சோகத்திற்கு இடையே வருடும் தென்றலாய் வருகிறது இப்பாடல்!

    வார்த்தைகள் கைமுளைத்து வண்ணம் காட்டுகின்றன!  எழில்கொஞ்சும் மழலைமுகம் பால்சிந்துதோ.. பவளமல்லிகை நான் என்றே பவனிவந்ததோ!  தாலாட்டுப் பாடல்களின் தாயானவன் .. கவிஞன்.. இதோ இந்த வசந்த ரோஜாவை வர்ணிக்கும் அழகில் கொஞ்சம் மயங்குங்கள்!  விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்தளித்த இன்னொரு பொக்கிஷம்  – நெஞ்சில் ஓர் ஆலயம் – அதில் மலர்ந்த பாடல் ..

    முத்தான முத்தல்லவோ மிதந்து வந்த முத்தல்லவோ

    கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ

    (முத்தான)

    சின்னஞ்சிறு சிறகுகொண்ட சிங்காரச் சிட்டல்லவோ

    செம்மாதுளை பிளந்து சிரித்து வரும் சிரிப்பல்லவோ

    மாவடுக் கண்ணல்லவோ மைனாவின் மொழியல்லவோ

    பூவின் மனமல்லவோ பொன் போன்ற குணமல்லவோ

    (முத்தான)

    வாழாத மனிதரையும் வாழவைக்கும் சேயல்லவோ

    பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ

    தாழம் குடை அல்லவோ தள்ளாடும் நடையல்லவோ

    மாலைப் பொழுதல்லவோ வந்தாடும் செண்டல்லவோ

    (முத்தான)

    பாடல் : முத்தான முத்தல்லவோ

    குரல் : P.சுசீலா

    வரிகள் : கண்ணதாசன்

    இசை : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

    http://www.youtube.com/watch?v=7MOdsFe6_6c

    Share