முத்தான முத்தல்லவோ!…
கவிஞர் காவிரிமைந்தன்
முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்தமுத்தல்லவோ
அன்று மலர்ந்த பாடல்கள் அத்தனையும் மனித வாழ்க்கையோடு ஒன்றிக்கிடந்தவை. அதனால்தான் மனம் இன்னும் அப்பாடல்களை அசைபோட்டுக் கொண்டுள்ளது. பிறப்பு முதல் நடப்புகள் அத்தனையையும் தன்னுள் கொண்டு தளிர்நடை போடும் பாடல்கள் இன்பரசம் ஊட்டும் வகையில் இன்றும் இதயம் தொடுகின்றன. காற்றிலே மிதந்துவரும் அந்த கானங்களைக் கேட்க பிரியப்படுகிறோமே ஏன்?
ஓரு திரைப்படம் எடுக்கப்படுகின்ற தருணத்தில் பாடல்கள் அமைவது பல்வேறு சூழல்களை உள்ளடக்கிய விஷயம். கவிஞரின் கைவண்ணம் அந்தப் பாடல் காட்சிக்கேற்றவாறு.. கதைக்கருவை பிரதிபலிக்க வெளிப்படுவது சிறப்பு! இதோ.. இந்தப் பாடல்.. இன்று மதியம் வேண்டும் இரண்டு மணிக்கு என்று முன்பகல் 12மணியளவில் தெரிவிக்கப்பட்டது. மெல்லிசை மன்னர் கவிஞரை அழைத்து அவசரத்தை வலியுறுத்த.. அம்..என்னும் முன்னும் உம் என்னும் முன்னும் வார்த்தைகள் வந்து விழும் என்று சொல்லப்படும் இரட்டையர்கள்.. கண்ணதாசன் விஸ்வநாதன் கூட்டணியில் வந்துதிர்த்த முத்தான பாடலிது!
தன் வாழ்க்கையின் கடைசி நாட்களை கணக்கிட்டுக் கொண்டிருக்கும் சிறுவயது பெண்ணுக்கு .. பிறந்தநாள்! எல்லோரும் இணைந்து கொண்டாடும் அந்த மருத்துவமனையில்.. திரைப்படம் பார்ப்போர் மனதில் இழைந்தோடும் சோகத்திற்கு இடையே வருடும் தென்றலாய் வருகிறது இப்பாடல்!
வார்த்தைகள் கைமுளைத்து வண்ணம் காட்டுகின்றன! எழில்கொஞ்சும் மழலைமுகம் பால்சிந்துதோ.. பவளமல்லிகை நான் என்றே பவனிவந்ததோ! தாலாட்டுப் பாடல்களின் தாயானவன் .. கவிஞன்.. இதோ இந்த வசந்த ரோஜாவை வர்ணிக்கும் அழகில் கொஞ்சம் மயங்குங்கள்! விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்தளித்த இன்னொரு பொக்கிஷம் – நெஞ்சில் ஓர் ஆலயம் – அதில் மலர்ந்த பாடல் ..
முத்தான முத்தல்லவோ மிதந்து வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ
(முத்தான)
சின்னஞ்சிறு சிறகுகொண்ட சிங்காரச் சிட்டல்லவோ
செம்மாதுளை பிளந்து சிரித்து வரும் சிரிப்பல்லவோ
மாவடுக் கண்ணல்லவோ மைனாவின் மொழியல்லவோ
பூவின் மனமல்லவோ பொன் போன்ற குணமல்லவோ
(முத்தான)
வாழாத மனிதரையும் வாழவைக்கும் சேயல்லவோ
பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ
தாழம் குடை அல்லவோ தள்ளாடும் நடையல்லவோ
மாலைப் பொழுதல்லவோ வந்தாடும் செண்டல்லவோ
(முத்தான)
பாடல் : முத்தான முத்தல்லவோ
குரல் : P.சுசீலா
வரிகள் : கண்ணதாசன்
இசை : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
http://www.youtube.com/watch?v=7MOdsFe6_6c