இலக்கியம்கவிதைகள்

காத தூரம்

 

 

சங்கர் சுப்பிரமணியன்

 

என் வீட்டிலிருந்து காத தூரம் நடந்தால்
வரும் காணிநிலம் அதில் கண்கள் விரிய பார்த்தால்
கொஞ்சும் அழகுப்பாவை ஒன்று அவளுடன்
எனக்கு ஒரு கனத்த கதையுண்டு

வண்ணக் கலவைகளை முகத்தினில் பூசி கொஞ்சும் தமிழ் பேசி
ஆசை வார்த்தைகள் ஆயிரங்களை அழகாக கோர்த்து
புரட்டு கதைகள் பல பேசி பொய்முகம்
போர்த்திக்கொண்டே பேதை அவளிடம் பழகினேன்

அவள் விழிக்கும் அதிகாலை நான் விழித்து அவளுக்கு
முன்னதாக அவள் எப்பொழுதும் விரும்பிச் செல்லும்
அந்த சிவனுக்கு முன்நின்று மந்திரங்கள் படித்து
கபட நாடகம் அரங்கேற்றியே அவள் அன்பைப் பெற்றேன்

 

என் வானத்து நிலவென்றென். நீ இல்லாத வாழ்வு இருளென்றேன்.

உன் உறவு என் உயிரென்றென். நீ இன்றி நான் உலர்ந்த சருகென்றேன்.

உள்ளமெல்லாம் அவள் நினைப்பில் கரைந்ததாக பொய்யுரைத்தே

அவள் உள்ளத்தில் நிறைந்தேன் அழகான வண்ணத்தில்

 

அத்தனையும் நம்பிய அந்த அறியாத பேதை என்னை அவள்
உயிராய் தீர்மானித்தாள் என் நினைவுகளை நெஞ்சத்தில்
சூடிக்கொண்ட நேசத்தில் அவள் நெகிழ்ந்திருந்த ஒரு கணத்தில்
கனன்று எரிந்த உணர்ச்சிகளில் நான் அவளை முழுவதுமாய் சுவைத்தேன்

 

நாடகத்தின் முடிவாக போட்ட என் வேஷம் கலைக்க
எக்காளமிட்ட சந்தோஷத்துடன் என் மனம் சந்தர்ப்பங்களை
எதிர்நோக்க கனவிலும் நான் எதிர்பாராத முடிவுரையை
கடவுள் அரங்கேற்றினான் என் கண் முன்னே

 

 

தேனுண்ட வண்டு போல் அவள் தனித்திருந்த
அந்த நள்ளிரவு அவள் வீடு தேடி நான் போனேன்
என் மெல்லிய சத்தத்திற்கு வெட்கத்துடன் அவள் கதவு திறக்க
வேட்கையுடன் நான் உள் நுழைந்தேன்

 

உணர்வுகளின் தழுவல்களில் உயிரோட்டங்களைத் தேடி
தனியாத மோகத்தில் நாங்கள் தவமாய் கூடிக்கொண்டிருக்க
பெருத்த சத்தம் கேட்டு பதறி கலைந்து சுற்றம் பார்த்தால்
எங்களை ஆவேசத்தடன் சுற்றியிருந்தது அந்த பெருந்தீ

கணமும் தாமதியாது எரியும் நெருப்பை அவள் போர்த்திக் கொண்டு வேகத்துடன்
என்னை வெளித்தள்ளினாள் என்ன செய்கிறேன் என்கிற உணர்வுகளற்று
என்னையும் நான் மாய்த்துகொள்ள வேகத்துடன் நெருப்புக்குள் ஓடமுயல
சுற்றியிருந்த ஊர் என்னை தடுத்து தனித்து நிறுத்தி விட்டது

கனநேரத்தில் நடந்தேறிய அந்த நாடகத்தின் கடைசித் தருணத்தில்

 என்னை காப்பாற்றி விட்ட பெருமித சந்தோசத்தில்

இதயம் நிரம்பிய புன்னகையுடன் என்னை பார்த்தபடியே

 அந்த நெருப்பினில் தன்னை தாரை வார்த்து கொண்டாள்

 

பாவிமகள் போகையில் என் நெஞ்சத்து ஆழத்திலே
அவள் உயிரை பதித்து என்னுயிரை கொன்று போனாளே
நீங்காத அவள் நேசத்தின் வாசமுடன் நிஜங்களை தொலைத்து

நான் முடிவுதேடும் இறப்பு நோக்கிய பயணத்தில் வாழ்கிறேன்

 

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க